Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

சிவநெறிச் சிந்தனை - 2
ஒளவை துரைசாமி




சிவநெறிச் சிந்தனை - 2


1. சிவநெறிச் சிந்தனை - 2
2. பதிப்புரை
3. வினையுணர்வும் ஞானசம்பந்தரும்
4. பட்டினத்துப் பிள்ளையார்
5. திருப்பாசுரப் பேருரை விளக்கம்
6. சேரமான் பெருமாள் பிரபந்தங்கள்
7. திருவானைக்காவில் சோழர்
8. குமரகுருபரர் நல்கும்
9. உமாபதி தேவரான ஞானசிவ தேவர்
10.சைவ முரசு
11.ஞானாமிர்த சாரம்
12.திருவாசகம் சிவபுராணம்
13.தூத்துக்குடி சைவசித்தாந்த சபையின் 65-ஆம் ஆண்டு நிறைவு விழாத் தலைமைப் பேருரை
14.சிவஞானபோதச் செம்பொருள்
15.நம்பியாண்டாரும் அப்பரும்
16.சீவக சிந்தாமணியும் சைவமும்
17.திருநணாவில் திருஞானசம்பந்தர்
18.சேக்கிழார் திருத்தொண்டர்புராணம்


சிவநெறிச் சிந்தனை - 2

 

ஒளவை துரைசாமி

நூற் குறிப்பு
  நூற்பெயர் : சிவநெறிச் சிந்தனை - 2 (கட்டுரைகள்)
  தொகுப்பு : உரைவேந்தர்தமிழ்த்தொகை - 28
  ஆசிரியர் : ஒளவை துரைசாமி
  பதிப்பாளர் : இ. தமிழமுது
  பதிப்பு : 2009
  தாள் : 16 கி வெள்ளைத்தாள்
  அளவு : 1/8 தெம்மி
  எழுத்து : 11 புள்ளி
  பக்கம் : 6 + 330 = 336
  நூல் கட்டமைப்பு: இயல்பு (சாதாரணம்)
  விலை : உருபா. 210/-
  படிகள் : 1000
  நூலாக்கம் : பாவாணர் கணினி
  தி.நகர், சென்னை - 17.
  அட்டை ஓவியம்: ஓவியர் மருது
  அட்டை வடிவமைப்பு: வ. மலர்
  அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா
  ஆப்செட் பிரிண்டர்சு
  இராயப்பேட்டை, சென்னை - 14.

பதிப்புரை


ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை
தமது ஓய்வறியா உழைப்பால் தமிழ் ஆய்வுக் களத்தில் உயர்ந்து நின்றவர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டிய தமிழ்ச் சான்றோர்களுள் முன் வரிசையில் நிற்பவர். நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூற் செல்வங்களுக்கு உரைவளம் கண்டவர். சைவ பெருங்கடலில் மூழ்கித் திளைத்தவர். உரைவேந்தர் என்று தமிழுலகம் போற்றிப் புகழப்பட்ட ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை 1903இல் பிறந்து 1981இல் மறைந்தார்.

வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 38. இதனை பொருள் வழிப் பிரித்து “உரைவேந்தர் தமிழ்த்தொகை” எனும் தலைப்பில் 28 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம்.

இல்லற ஏந்தலாகவும், உரைநயம் கண்ட உரவோராகவும் , நற்றமிழ் நாவலராகவும், சைவ சித்தாந்தச் செம்மலாகவும் , நிறைபுகழ் எய்திய உரைவேந்தராக வும், புலமையிலும் பெரும் புலமைபெற்றவராகவும் திகழ்ந்து விளங்கிய இப்பெருந்தமிழாசானின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இவருடைய நூல்களில் எம் கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்கள் 5. மற்றும் இவர் எழுதிய திருவருட்பா நூல்களும் இத் தொகுதிகளில் இடம் பெறவில்லை.

“ பல்வேறு காலத் தமிழ் இலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைப் பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை சு.துரைசாமி அவர்கள்” என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களாலும்,

“இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து
வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான்
தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே
முன்கடன் என்றுரைக்கும் ஏறு”

என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களாலும் போற்றிப் புகழப் பட்ட இப்பெருந்தகையின் நூல்களை அணிகலன்களாகக் கோர்த்து, முத்துமாலையாகக் கொடுத்துள்ளோம்.

அவர் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்களால் போற்றிப் புகழப் பட்டவர். சைவ உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர். இவர் எழுதிய அனைத்து நூல்கள் மற்றும் மலர்கள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையெல்லாம் தேடித் தேடி எடுத்து ஒரே வீச்சில் வெளியிடுகிறோம்.

இத்தொகுதிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வெளிவருவதற்கு முழுஒத்துழைப்பும் உதவியும் நல்கியவர்கள் அவருடைய திருமகன் ஒளவை து.நடராசன், மருகர் இரா.குமரவேலன், மகள் வயிற்றுப் பெயர்த்தி திருமதி வேனிலா ஸ்டாலின் ஆகியோர் ஆவர். இவர்கள் இத் தமிழ்த்தொகைக்கு தக்க மதிப்புரையும் அளித்து எங்களுக்குப் பெருமைச் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி

தன் மதிப்பு இயக்கத்தில் பேரீடுபாடு கொண்டு உழைத்த இவ்வருந்தமிழறிஞர் தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கொண்ட உயர் மனத்தினராக வாழ்ந்தவர் என்பதை நினைவில் கொண்டு இத் தொகை நூல்களை இப்பெருந்தமிழ் அறிஞரின்
107 ஆம் ஆண்டு நினைவாக உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். தமிழ் நூல் பதிப்பில் எங்களின் இந்த அரிய முயற்சிக்குத் தோள் தந்து உதவுங்கள்.
நன்றி
பதிப்பாளர்

வினையுணர்வும் ஞானசம்பந்தரும்


வினைத்தொடர்புள்ள சொற்கள் இந்நாளில் எல்லாருடைய பேச்சிலும் எல்லாக் காலத்தும் காணப்படுகின்றன. கற்றவர் கல்லாதவர், செல்வர் வறியர், இளையர் முதியர், ஆடவர் மகளிர் ஆகிய யாவரும் இன்பம் துன்பம் என்ற இருவகைக் காலத்திலும் இவ்வினையைப் பற்றிய பேச்சுக்களை வழங்குகின்றனர். இன்பம் துன்பம் என்ற இரண்டின் நுகர்ச்சிக்குக் காரணம் நுகர்வோரது வினையே என்ற உணர்வு நன்கு வேரூன்றியிருக்கிறது. துன்பமும் ஒருவனைக்கண்டு ஆறுதல் கூறும் வேறொருவனும் “இது முன்னை வினையின்பயன்” என்று மொழிவது இயல்பாக இருக்கிறது.

தமிழ் நூல்களிலும் இவ்விணையுணர்வு நன்கு விளங்கித் தோன்றுகிறது. மிகப் பழையதாகிய தொல்காப்பியம் முதல் இன்று தோன்றும் திரைப்பாட்டுவரையில் எல்லாப்பாட்டுக்களிலும், உரைகளிலும் வினைபற்றிய சொல்லும், சொற்றொடரும் பயின்று வருகின்றன. இந்நூல்களுள், வினைத்தொடர் பான மொழிகள், எல்லாவற்றிலும்விடத் தேவாரத்தில் மாத்திரம் மிகுதியாகவும், தேவாரப் பெருமக்களுள் ஞானசம்பந்தர் திருப்பாட்டுக்களில் மிகப்பெரிதும் இடம்பெற்றுள்ளன. ஞானசம்பந்தர் திருப்பாட்டுக்கள் சுமார் 4200 உள்ளன; அவற்றுள், சுமார் 3600 திருப்பாட்டுக்களில் இவ்வினையுணர்வு பயின்று வருகின்றது.

இங்ஙனம், இவரது திருப்பாட்டுமட்டில் வினைத்தொடர்பான சொற்கள் பெறுவானேன் இவர் போலும்பெரு மக்களின் அருட் பாடல்களில் அத்துணைப்பயில வழங்காமையின், இது பற்றிய பேச்சு, இவர்காலத்து ஓங்கிநின்றதாகல் வேண்டும் தேவாரத்துக்கு முன்னிருந்த நூல்களிலும், இத்துணைப் பெருவழக்குக் காணப்பட்டிலது. முன்னைய நூல்கள், இலக்கணம், இலக்கியம், சமயநூல் எனப் பகுக்கப்படும். இவற்றுள் இலக்கியங்களும் சமயநூல்களும் பிரிப்பின்றி ஒரு தன்மை யாகவே அமைந்திருக்கின்றன. நீதிநூல்களோ இடை இடையே சமயக் கருத்தும் கொண்டு நிலவுகின்றன.

இந்தியநாட்டு நூல்வரலாறு காண்பவர் வேதங்களே மிகப் பழைமை வாய்ந்தவை யென்கின்றனர். அவற்றில் மிகச் சிறிதாகவே வினையுணர்வு காணப் படுகிறது என்றும், வேத காலத்துக்கு பின்னர் தான், இவ்வுணர்வு நாட்டில் பயில வழங்கிவருகிறது என்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இவருட்சிலர், இவ்வுணர்வு வேதகாலத்துக்கு முற்பட்ட தென்றும் புத்த சமண சமயங்கள் நாட்டில் பரவத் தொடங்கிய பின்பே, இவ்வுணர்வு மிகுதியும் பயில்வ தாயிற்றென்றும் மொழிகின்றனர். நம்தண்டமிழ் நாட்டிலும், தொல்காப்பியம் முதல் தேவாரம் தோன்றிய காலம்வரையில், வினையுணர்வு மிக்க பயிற்சியின்றி யிருந்தது. ஞானசம்பந்தர் காலத்திற்றான் அஃதாவது இன்றைக்குச் சற்றேறக்குறைய 130 ஆண்டுகட்டுமுன்பு தான், வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் வினையுணர்வையே அடிப்படை யாகக் கொண்டு எழுந்தவையாதலின், அவற்றின் தொடர்புடைய நூல்களை விடுத்து, ஏனையவற்றை நோக்கின், அவை தொல்காப்பியமும் சங்க விலக்கியங்களும் எனக் காணப்படும்.

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று பாகுபாட்டதாகும். இதன்கண், எழுத்ததிகாரம், எழுத்தும். அது சொல்லின் கண் இடம்பெற்றுத் தொடர்புவுறுதலும் கூறுவது; அதனால், அதன்பால் வினையியல்பு கூறும் பான்மை இன்றாம். சொல்லதிகாரம் வினையியல்பைக் கூறுகிறது. இது, பொருளின் புடை பெயர்ச்சியாகவும் வினையென்றுசுட்டி, “வினை யெனப்படுவது வேற்றுமை கொள்ளாது,” “நினையுங் காலைக் காலமொடு தோன்றும்,” “காலந்தாமே முன்றெனமொழிப” என்பனவாய நூற்பாக்களால் விளக்கிக் கூறுகின்றது. பொருளதிகாரம், ஆண்மகன் ஒருவன், தன் ஆண்மை துணையாகக் கொண்டு செய்யும் பொருண் முயற்சியினை வினையென்று காட்டி, அச்செய்கை நிகழ்ச்சிகளையும் “வினை” யென்றே வழங்குகின்றது. “வினைவயிற் பிரிந்தோன் மீண்டுவருகாலை, இடைச்சுரமருங்கிற்றவிர்தல் இல்லை, உள்ளம்போலவுற்றுழியுதவும், புள்ளியற்கலிமா வுடைமை யான” எனவருதல் காணக். பிற்காலச் சமய நூல்கள் வழங்கும் பொருளிலும் ஆசிரியர் தொல்காப்பியனார், இவ் வினையென்னும் சொல்லை, “வினையின் நீங்கி விளங்கிய அறிவின், முனைவன் கண்டது முதனூலாகும்” என்ற நூற்பாவில் வழங்கியுள்ளார்.

சங்கவிலக்கியங்களுள், பதினெண் கீழ்க்கணக்கு களுள் தொகுக்கப்பட்ட சில வொழிய, ஏனையவும், தொகை நூல்களும் அகம், புறம் என இருவகை யாகும். அவற்றுட் புறப்பொருள் வழியாகிய புறநானூறு முதலியன வினையுணர்வைக் கூறுகின்றன. வினை, நல்வினையும் தீவினையும் என இருவகைத்தாய் முறையே இன்பமும் துன்பமும் பயக்குமென்பதனை வினையறிவு மிக்க புலவர் கூறுவர். ஆகவே, இன்பம் துன்பமும் பயக்குமென்ப தனை வினையறிவு மிக்க புலவர் கூறுவர் ஆகவே, இன்பம் பயக்கும் நல்வினையே மக்கள் விரும்பும் மாண்புடையதாகலின், அறிஞர், நல்வினையைச் செய்க என்று விதிப்பதும், தீவினையைச் செய்யற்க என விலக்குவதும் செய்வர். “கல்பொரு திரங்கு மல்லற் பேரியாற்று, நீர்வழிப் படுஉம் புணை போலாருயிர், முறைவழிப் படூஉ மென்பது திறவோர், காட்சியிற் றெளிந்தனம்” (புறம் 192) எனவும், “வாழச் செய்த நல்வினையல்லது, ஆழுங்காலைப் புணை பிறிதில்லை” (புறம் 367) எனவும் வருதல் காண்க. மேலும், இப்பெருமக்கள் பலரும் நலம் பயக்கும். நல்வினையையே விதந்து கூறியிருத்தலின், வினை யுணர்வு நல்லது செய்தற்கே சான்றோர்களால் பண்டைக் காலத்தில் மக்கட்கு வற்புறுத்தப் பட்டதென்பது தெரிகிறது. “நல்லது செய்த லாற்றீராயினும், அல்லது செய்தல் ஓம்புமின்” (புறம் 195) எனவும் நன்று பெரிது சிறக்க தீதில்லாகுக (ஐங் 9) எனவும் வருதல் காண்க. நல்வினைசெய்தவர் இம்மையிற் புகழும், மறுமையில் துறக்கவின்பமும் பெறுவர் என நல்வினையின் நலமே குறித்து. “பெரும்பெயர் நும்முன், ஈண்டிச்செய் நல்வினை யாண்டுச் சென்றுணீயர், உயர்ந்தோருலகத்துப் பெயர்ந்தனன்” (புறம் 174) என மாறோகத்து நப்பசலையாரும். “மயங்காது செய்தல் வேண்டுமால் நன்றே வானோர், அரும்பெற லுலகத்தான்றவர், விதுப்புறு விருப்பொடு விரிந்தெதிர் கொளற்கே” (புறம் 213) எனப் புல்லாற்றூர் எயிற்றியனாரும் பிறரும் அறிவுறுத்தி யிருக்கின்றனர். அகப்பொரு Qல்களும், இவ்வாறே, நல்வினை இம்மையில் இசையும் மறுமையில் துறக்கமும் பயக்குமெனக் கூறுகின்றன. “வினை விளையச் செல்வம் விளைவது போல்” (திணைமா 150 - 5) என வருவதும், பிறவும் காண்க.

இருமையும் பயக்கும் நல்வினை செய்தற்கு நல்லாற்றில் ஈட்டும் பொருளும், அதனைச் செய்தற் குரிய முயற்சியும் சிறந்து நிற்றலின், அவற்றைக் குறித்து ஆண்மக்கள் தம்வாழ்க்கைத் துணை வியரைப் பிரிந்தேகுதல் நலம் என்றும், அவர்செலவு வினை வயிற் செல்லும் செலவு என்றும் சான்றோர் விரியக் கூறியுள்ளனர். “வினையே ஆடவர்க் குயிரே” (குறுந் 135) “சேறும் நாம் எனச் சொல்லச் சேயிழை, நன்றெனப் புரிந்தோய் நன்று செய்தனையே, செய்லபடுமனத்தர் செய்பொருட்டு அகல்வராடவர் அதுவதன் பண்பே” (நற். 24) “ஈதலும் துய்த்தலும் இல்லோர்க் கில்லெனச், செய்வினை கைம்மிக எண்ணுதி அவ்வினைக்கு, அம்மா வரிவையும் வருமோ, எம்மை யுய்த்தியோ வுரைத்திசினெஞ்சே” (குறுந். 63) என வருவன இதற்குப் போதிய சான்றாகும்.

இனி, ஆசிரியர் காவட்டனார் என்பவர், “வசையும் நிற்கும் இசையும் நிற்கும்: அதனால், வசைநீக்கி யிசைவேண்டியும், நசைவேண்டாது நன்றுமொழிந்தும்” வாழ்தல்வேண்டும் (புறம் 359) என அந்துவன் கீரன் என்று தலைவற்கும், ஆசிரியர் குடபுலவி யனார், “செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும். ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி, ஒருநீ யாகல்வேண்டினும் சிறந்த, நல்லிசை நிறுத்தல் வேண்டினும் மற்றதன், தகுதி கேளினி மிகுதியாள” (புறம்.18) எனப் பாண்டியன் நெடுஞ்செழியற்கும் அறிவுறுத்தியனவும் பிறவும், “அந்தோ வினையே” என்று அழுங்கி மயங்காது செய்வி னையைச் சிறக்க அச்சமின்றிச் செய்யவேண்டும் என்பதையே வலியுறுத்தி விளக்குகின்றன. ஓரொருகால், “நன்றி விளைவும் தீதொடும் வரும்” (நற். 188) எனினும் அத்தீதுகண்டு அஞ்சாது வினைசெய்தல் வேண்டும்; ஒருவினையைச் செய்யுமிடத்து, இடும்பையும் இடுக்கணும் வந்து தீதுசெய்யுமாயினும், “வினையே யாடவர்க்குயிர்”, “வினைக் குறை தீர்ந்தாரிற் றீர்ந்தன்றுலகு”, “சுடச்சுடரும் பொன்போல் ஒளி விடும் துன்பம் சுடச்சுட நோற் கிற்பவற்கு” “ஊழையும் உப்பக்கம் காண்பர்” என்றெல்லாம் சான்றோர் கூறியபொருளுரைகள், அவற்றிற் கஞ்சுதலும், வினையில்மடங்குதலும் கூடா என்பதனையே வற்புறுத்துகின்றன.

இக்கூறியவாற்றால், வினையெனச் சான்றோர் எடுத்துக் கூறியது யாவரும் மடியின்றிச் செய்தற்குரிய இம்மையில் இசையும் மறுமையில் பேரின்பமும் பயக்கும் நல்வினையே யென்றும், அதனால், நலம் பயக்கும் நல்வினையே பண்டைச் சான்றோரால், நல்வினை, நன்று ஆள்வினை, வினையெனப் பல்லாற்றானும் விதந்து கூறப்பட்டதென்றும் அறிகின்றோம். “யாம்செய் தொல்
வினைக் கெவன்பேதுற்றனை” (நற். 88) என்றாற் போல்வன, வினை செய்யுமிடத்து, எதிர்பாராமல் வரும் இடர்கட்கு உள்ளம் உடையாமல் ஊக்கம் கோடற்கெழுந்தவை என்றும், ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்றாற்போல்வன, “இன்பமும் இடும்பையும் உணர்வும் பிரிவும், நண் பகலமையமும் இரவும்போல, வேறு
வேறியலவாகி மாறெதிர்ந், துளவென வுணர்ந்தனை” (அகம் 327) எனவுணர்ந்து, இவற்றைப் பொருள்செய்யாது, செய்வினையைக் கடைபோக ஆற்றுவது குறித்துப் பிறந்த அறவுரையென்றும், “துன்பத்திற்கு யாரே துணை யாவார் தாமுடைய நெஞ்சம் துணையில்வழி” என்றாற்போல்வன, உயிரின் வழி வினை நிகழ்தலுண்டேயன்றி, வினையின்வழி உயிர் இயங்குவ தில்லை என்றும் காட்டக் காண்கின்றோம். இதுவே தேவார காலத்திற்கு முன்னிருந்த சான்றோர் கொண்டிருந்த வினையுணர்வாகும்.

இதற்கிடையே, “காமஞ் சான்ற கடைக்கோட் காலை” மக்களொடு துவன்றிய கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் வேண்டும் என்ற பண்டைய முறை மாறி, “குழவியிடத்தே” துறவு விரும்பி, “இன்னா தம்மவுலகம், இனிய காண்க விதன் இயல்புணர்ந் தோரே” என்றும், “ஓடியுய்தலும் கூடுமன், ஒக்கல் வாழ்க்கை தட்குமாகாலே” என்றும் வந்த உரைகளால், உலக வாழ்வில் மக்கட்கு உவர்ப்பும், செய்யும் வினையாவும் துன்பமுடிவின என்ற முடிபும் மக்கள் கருத்தில் இடம் பெறத்தொடங்கின. முயற்சியுடை யார்க்குத் தேறுதல் சொல்லி, ஊக்கம் கொளுத்தும் கருத்தாற் பிறந்த வினையுணர்வுகள், வினைக்கண் மனம் மடிந்து சோம்பித்திரிவார்க்கு அரணாகத் தொடங்கின. வினையே உயிர்கட்கு முதல் என்றும், வினைவழியே உயிர் இயங்குதற்குரிய தென்றும் மக்கள் பேசத் தொடங்கினர். வினைவழிப் பிறக்கும் இன்பமும் துன்பத்திற்கே ஏதுவென்றும், துன்பமே உயிர் உடலொடு கூடிப்பெறக் கடவ பயன் என்றும் சில சான்றோர் தெருட்டத் தொடங்கினர். இந் நிலையில், தமிழ் நாட்டிற்குப் புதியவாய் வந்த சமண புத்த சமயங்களும் துணை செய்யத் தொடங்கின. யாவரும் எப்போதும், எச்செயலைச்செய்தற்கும், “அந்தோ வினையே” என்று அழுங்கி ஊக்கம் குன்றுவாராயினர்.

ஒருவன் தன் ஆண்மையால் முயன்று பெறக் கூடிய நல்லுண்டி, நல்லுடை, நல்லுறையுள் ஆகிய இவையாவும் முன்னை வினைப்பயனே; “பண்டு செய்வினையலால் பரவு தெய்வ மொன், றுண்டெனில் தான்பயன் உதவ வல்லதோ?” என்பன போன்ற கருத்துக்கள் எழுந்து, நாட்டில் ஆண்டவன் அருட்டிறத்தையும், அவனை வழிபடுவதன் நலத்தையும் அசட்டை செய்யுமாறு தூண்டின. இக்காலமே நம் ஞானசம்பந்தர் தோன்றிய காலமாகும்; தன் உயிரறிவுக் குள்ள சிற்றுரிமையை நெகிழ்த்து, வினைக்கு அடிமை யாக்கும் சிறுமைக் காலம்; நலமும் தீங்கும், இன்பமும் துன்பமும் உயிர் தன் உரிமை யறிவால் ஆண்டவன் திருவருளால் பெறுதல் கூடும் என்னும் உண்மை நெறியை மறைத்து நின்ற காலமாகும்.

ஆகவே, இக்காலம், நம் ஞானசம்பந்தர் தோன்றிய காலம், இற்றைக்குச் சுமார் சற்றேறக் குறைய 1300 யாண்டுகட்கு முற்பட்ட காலமாகும். இக்காலத்தில், வினையுணர்வுக்குத் தலைமையும், ஆண்டவன் திருவருட் சிறப்பிற்குக் கீழ்மையும் மக்கள் உள்ளத்தில் தோற்றுவிக்கும் புதுக் கொள்கை களும், புதுச் சமய நெறிகளும் கற்பித்து வந்தன. அதனால், நம் ஆளுடைய பிள்ளையார், வினை களையும், அவை பயக்கும் பயனையும், வினைத் தொடர்பைக் கெடுக்கும் பரமனது முதன்மையையும், பிறவற்றையும் விளக்கியருளும் கடன்மையுடையரானார். அவரது அருட்பாடல்கள் பலவும் வினையின் தொடர்பறும் முறைமையை யுணர்த்தும் நோக்கமே பெரிதும் உடையவாயின.

வினைகள்யாவும் பண்டைவினை, நிகழ்வினை (செய்வினை), எதிர்காலவினை யென மூவகையாகும். அவையாவும் பரமன் திருவருள்வழி நிற்பார்முன் வலியழிந்து, தொடர்பற்றுக்கெடும் என்பது ஆளுடையபிள்ளையார் மக்கட்கு அறிவுறுத்திய வினை யுணர்வாகும். “தொல்லை வல்வினை தீர்ப்பர் சுடலை வெண்
பொடி யணிசுவண்டர்” (திருத்தெங்கூர்), “மெய்த்தன்னுறும் வினைதீர் வகை தொழுமின்” (ஆலந்துறை), “வெய்யவினை நெறிகள் செலவந் தணையும் மெல்வினைகள் வீட்டலுறுவீர்” (மாகறல்) என்பன போலவரும் திருமொழிகள் வினைவகையினையும், அவற்றின் வலியின்மையையும் உணர்த்துவனவாகும்.

வினைகளே உயிர்கள் நுகரும் இன்பதுன்பங் கட்கு ஏது வாகலின், ஆண்டவன் வேண்டப்படான் என்று கூறிய சமயக் கணக்கர் பலர் அக்காலத் திருந்தனர் என முன்பே கூறினோம்; அவர்களைத் தெருட்டுவார் போலச் சிலபல வுரைகள் பிள்ளையார் அருளியுள்ளார்.

" நல்குரவும் இன்பமும் நலங்களவையாகி
வல்லினைகள் தீர்த்தருளும் மைந்தனிடமென்பர்,
மல்குமடி யார்கள் படியார விசைபாடிச்
செல்வமறை யோருறை திருப்புகலியாமே"

என்றும்,

" துன்பானைத் துன்பம்துடைத் தருளாக்கிய
இன்பானை யேழிசை யின்னிலை பேணுவார்
அன்பானை யணிபொழிற் காழிநகர் மேய
நம்பானை நண்ணவல்லார் வினை நாசமே"

என்றும், இவ்வாறு பலவும் வருவன உளவினைகள் அறிவில் பொருள்களாகலின், இவை தம்பயனைக் கொண்டு வினை முதலை நுகர்விக்கும் திறமுடைய அல்லவாகலின், அது செய்தற்குரிய அறிவுடைப் பொருள் ஆண்டவனேயென்றும், அதனால், அவனன்றி வினைமுதல் வினைப்பயனை நுகர்தல் கூடாமை கருதி, வினைப் பயன்கனைக் கூட்டலும் பிரித்தலும் வல்ல அவனையே நல்குரவும் செல்வமும், துன்பமும் இன்பமுமாக உபசரித்துக் கூறியும், அவனுக்கு முதன்மையும் வினைகட்குக் கீழ்மையும் காட்டியும் நம் ஆளுடைய பிள்ளையார் தெருட்டியருளுகின்றார்.

வினைகள் தம் பயனை வினைமுதல் நுகருமாறு கூட்டும் அறிவுடையவல்ல வாயினும், அவ் வினை முதலைப் பற்றி விடாது தொடர்ந்து நின்ற, அவ்வுயிர் எத்துணைப்பிறவி யெடுக்கினும், பிறப்புத்தோறும் அதன்கட் கிடந்து தொடர்தல் குறித்து அவைகளை “அருவினை” யென விசேடித்தல் நம் நாட்டுச் சமயக்கணக்கர் மரபு. நம் ஆளுடைய பிள்ளையாரும், வினைகளை “அருவினை”, யென்று விசேடிப்பாராயினும், அவற்றின் அருமையினைச் சிதர்க்கும், தலைமை ஆண்டவற்குண்டென வலியுறுத்துவதை விடுவதிலர்.

" பணிந்தவர் அருவினை பற்றுறுத் தருள்செயத்
துணிந்தவன் தோலொடுநூல் துதை மார்பினில்
பிணிந்தவன் அரவொடு பேரெழி லாமைகொண்
டணிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே"

என்பதும் பிறவுமாகிய திருப்பாட்டுக்கள் இவ்வுண்மையை நிலை நிறுவுகின்றன.

இனி, உயிர்களைப்பற்றிநிற்கும் வினைகளின் தொடர்பு கெடுதற்கு ஆண்டவனை வழிபடும் செய்கையே உரிய செய்கையாகும் என்பதைப் பல திருப்பாட்டுக்களில் வெளிப்படையாகவும், உள்ளு றுத்தும் ஞானசம்பந்தப் பிள்ளையார் தெருட்டி யருளுகின்றார். வெளிப்படையாகத் தெருட்டுதலைக் காட்டும் பாசுரங்கள் மிகவாய்ப் பல்கி யாவரும் காணக்கிடத்தலின், அவற்றை விலக்கி உள்ளுறுத் துரைக்கும் பாசுரங்கள் சிலவாய்ச் சிலரே காணத் தக்கவாய் இருத்தலின், அவற்றுள் ஒன்றைக் கூறுகின்றோம்.

நம் ஆளுடைய பிள்ளையார் சீகாழிக்கருகிலுள்ள திருக்கோ லக்கா என்னும் திருப்பதிக்குச் சென்று, தம் மெல்லிய கைகளால் தாளம் போட்டு “மடையில் வாளைபாய” என்ற திருப்பதிகத்தைப் பாடியருளிய செய்தி தமிழ்நாடு நன்கறிந்ததாகும். ஆயினும், இப்பதிகத்துள் உயிரறிவு ஆண்டவனைப் பாடிப் பரவுதலாம் கலங்கி அருண்மணங்கமழ்ந்து, வினைப் பிணிப்புத் தளர்ந்து, அறியாமை நீங்கிப் பேரின்ப நுகர்ச்சிக் குரிமையெய்தும் திறத்தை உள்ளுறுத்துரைக்கின்றார்.

" மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையும் சாம்பற் பூச்சும்கீள்
உடையும் கொண்ட உருவம் என்கொலோ"

என்பது முதற்பாசுரம். இதில், அடியார்கள் பரமனது அருள் நினைந்து பாடிப்பரவித் திளைத்தலால், அவர் தம் உயிரறிவு கலங்கி அருண் மணம் கமழுகின்றதென்பதனை, “மடையில் வாளைபாய, மாதரார் குடைதலால் நெய்யொடு குங்குமம் நிறைந்துநறுமணம் கமழும் பொய்கை” என்பதனால் குறித்தருளுகின்றனர்.

அருள் நினைந்து பரவிப்பாடியாடும் அடியார் உள்ளம் அவன் அருண்மணமே கமழ்தற்குரிய அவனது அருளை, அருள் நிலையை அடுத்த பாசுரத்தில்,

" பெண்டான் பாகமாகப் பிறைச் சென்னிக்
கொண்டான் கோலக்காவு கோயிலாக்
கண்டான் பாதம் கையாற் கூப்பவே
உண்டான் நஞ்சை யுலக முய்யவே"

என்று அருளுகின்றார். பெண்ணென்பது திருவருள், பெண்ணைப் பாகங்கொண்டதோடு பிறையைச் சென்னியிற் கொண்டதும் அருளே என்பதனைப் பிறிதோரிடத்தில், “முன்னுயிர்த் தோற்றமும் இறுதியுமாகி, முடியுடையமரர்கள் அடிபணிந்தேத்தப், பின்னிய சடைமிசைப் பிறைநிறைவித்த பேரருளாளனார் பேணிய கோயில்” என்றும், பெண்ணைப் பாகம் கொண்டதும் உயிர்கட்கு அருள்செய்
தற்கே என்பதை, “ஆணும் பெண்ணுமாய் அடியார்க் கருணல்கிச், சேணின்றவர்க் கின்னம் சிந்தை செயவல்லான், பேணி
வழிபாடு பிரியா தெழுந்தொண்டர் காணும்கடல்நாகைக் காரோணத்தானே” என்புழியும் விளக்கியருளுகின்றார்.
இத்தகைய அருள்வள்ளல், தன்னைவிரும்பிப் பாடியவழி, அடியார் வினைப்பிணிப்புப் பறையச் செய்யும் எளிமையுடையன் என்பதனை,

" பூணற் பொறிகொள் அரவப் புன்சடை
கோணற் பிறையன் குழகன் கோலக்கா
மாணப் பாடி மறை வல்லானையே
பேணப் பறையும் பிணிக ளானவே"

என்று கூறியருளுகின்றார். உயிர்களைப் பிணித்து நிற்றலின், வினை களை ஈண்டு, “பிணிகளானவே” என்கின்றார்.“பாடுவாரிசைப் பல்பொருட்பயன் உகந்தன்பால், கூடுவார் துணைக் கொண்டதம் பற்றறப் பற்றித், தேடுவார் பொருளானவன்” (தேவூர்) எனப் பிறிதோரிடத்து வெளிப்படையாகக் குறித்தருளுகின்றார்.

இங்ஙனம் பிணித்துத் கொண்டுநிற்கும் வினைகளைத் தகர்க்கும் முறையினை அடுத்த பாசுரத்தில் மிகவருமையாகக் குறிக்கின்றார். பரமன் கையில் ஏந்தும் மழுப்படையின் வெம்மையாலும், மறிமானின் முழக்கத்தாலும் உயிரறிவைத் தழுவிப் பிணித்து நிற்கும் வினைகட்கு முதற்கண் தளர்ச்சி யெய்துகின்றதென்பார்,

" தழுக்கொள் பாவம் தளர வேண்டுவீர்,
மழுக்கொள் செல்வன் மறிசேர் அங்கையான்
குழுக்கொள் பூதப் படையான் கோலக்கா
இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே"

என்று அருளுகின்றார். வினைப்பிணிப்பை விரைய நீக்கியவழியெய்தும் கேடுகருதி, பையநீக்குவராதலின், அதுகுறித்து, அவனை, “ஏத்தி வாழ்மின்” என அறிவுறுத்துகின்றார். பையநீக்குவதே அவரது பாண்மை யென்பதனைப் பிறிதோரிடத்தும், “செய்யமேனி வெளிய பொடிப்பூசுவர், சேரும் அடியார் மேல்,* மெய்ய நின்றபெருமான்” (புகலூர்) என மொழிந்தருளுகின்றார். ஏத்துமிடத்தும் இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மின் என்கின்றார். “துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி, மறக்குமா றிலாதவென்னைமையல் செய்து மண்ணின்மேல் பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படும் உடம்பு விட்டிறக்குமாறு காட்டினாய்க் கிழுக்குகின்ற தென்னையே” என்ற திருப்பாட்டிலும், இழுக்கிய வழி, பிறக்குமாறு காட்டுதலும், இழுக்காவழி, பிறப்புவிட்டு இறக்குமாறு காட்டுதலும், உண்மையின், ‘இழுக்குகின்றதென்னை’ என்று வற்புறுத்துதல் காண்க.

இவ்வாறு, தழுவிட்டுத் தளர்ச்சி யெய்திய வினை, நீங்கற்குரிய பாகம் பெறுவதற்கு உரிய முயற்சி, அவனைவிடாது பயிலும் பயிற்சியே யாகும் என்பார்.

“மயிலார் சாயம் மாதொர் பாகமா
எயிலார் சாய எரித்த எந்தை தான்
குயிலார் சோலைக் கோலக் காவையே
பயிலா நிற்கப் பாவம் பறையுமே”

என்று மொழிந்தருளுகின்றார். குயில்கூடிப்பாடி மகிழும்சோலை கூறவே, கோலக்காவில், அடியார் பலரும் சேரவிருந்து அவன் திருவருளைப் பாடுதல் பெற்றாம். அடியாரொடு பயிலுதல் வேண்டும். அல்லாதார் அஞ்ஞானத்தை யுணர்த்துவார் “உரை தளர்ந்துடலார் நடுங்காமுனம், நரை விடையுடை யானிடம் நல்லமே, பரவுமின் பணிமின் பணிவாரொடே, விரவுமின் விரவாரை விடுமினே” என நாவரசப்பெருமானும், “மறப்பித்துத் தம்மை மலங்களின் வீழ்விக்கும், சிறப்பிலார்தம் திறத்துச் சேர்வை - அறப்பித்துப், பத்த ரினத்தனாய்ப் பரன் நினைவினாலுணரும், மெய்த்தவரைமேவாவினை” எனமெய்கண்ட தேவநாயனாரும் தெருட்டி யருளுதலால் இவ்வுண்மையை அறிகின்றோம்.

இத்தகைய பயிற்சியால் நீங்குதற்குரிய பக்குவம் பெற்று வரும் வினைகள், பின்னர், அவன் திருவடி ஞானத்தால் வெடிபட்டு வீற்று வீற்றோடிவிடும்; ஆதலால், அத்திருவடியை அடைந்து வாழ்மின் என அடுத்தபாசுரத்தில், நீங்கற்குரியவாய் வரும் வினைகள் அறமே நீங்கும் முறையைத் தெரிவிக்கின்றார்.

" வெடிகொள் வினையா வீட்ட வேண்டுவீர்
கடிகொள் கொன்றை கலந்த சென்னியான்
கொடிகொள் விழவார் கோலக் காவுளெம்
அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே"

என்பதுபாசுரம். அதன்கண் வெடிகொளல் என்பது சிதர்த்தொழிதல்; " கடிகாவில் கால்துற்றெறிய வெடிபட்டு, வீற்று வீற்றோடும் இனமயில்போல், கேளிர் பிரிந்தர் அலறுபவே" (களவழி 40) என்பதனால் அறிக. மெல்ல நீங்கிவரும் வினைகள் மீட்டும் முன்னைப் பயிற்சிவயத்தால் மீளத் தோன்றா வண்ணம் கெடுக்க வேண்டியிருத் தலால், “வினையை வீட்டவேண்டுவீர்” எனவிளித்து, “அடிகள்பாதம் அடைந்து வாழ்மினே” என்று அருளுகின்றார். இக்கருத்தையே, திருமாகறற்பதிகத்திலும்,

" வெய்யவினை நெறிகள்செல வந்தணையும்
மேல்வினைகள் வீட்டலுறுவீர்,
மைகொள்விரி கானல்மது வார்கழனி
மாகறலுளான் எழிலதார்
கையகரி கால் அரையின் மேலதுரி
தோலுடைய மேனியழகார்
ஐயனடி சேர்பவரை யஞ்சியடையா
வினைகள் அகலுமிகவே,"

என்று அறிவுறுத்துகின்றார். மேல்வினைகளை வீட்டிய வழி, நின்ற வினையும் பற்றுக் கோடின்றிக் கெடும் என்றற்கு.

" நிழலார் சோலை நீல வண்டினம்
குழலார் பண்செய் கோலக் காவுளான்
கழலால் மொய்த்த பாதம் கைகளால்
தொழலார் பக்கல் துயர மில்லையே"

என்று பாடியருள்கின்றார். பாதம் நினைந்து தொழுமிடத்து, அதன் அழலொளி வினையிருள் எய்தாவகைக் கெடுத்தலின், அடியார்க்குத் துயர மில்லையென்பார், “பாதம் கைகளால் தொழலார் பக்கல் துயரமில்லையே” என்றார். அழகாய கழலான் அடிநாளும் கழலாதே விடலின்றித், தொழலாரவர் நாளும் துயரின்றித் தொழுவாரே (நெய்த்தானம்) எனப் பிறாண்டும் இதனையே தெருட்டுவர்.

நிழல் மிக்க சோலையின், வண்டினம் தேனுண்டு பண்பாடும் எனவே, அவன் திருவடி நீழலில் பெரும் போகம் துய்க்கும் மகிழ்வால், அடியார்கள் அவன் திருப்புகழ் பாடுதல் பெறப்படும். நாவரசரும், பரமன் திருவடி செந்தேன் பொழியும் என்பதனை, “சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன் முந்திப்பொழிவன” என்றே மொழிந்தருளுகின்றார்.

இவ்வாறு, வினையியல்பும், அது பரமன் வழிபாட்டால் நீங்குமாறும், நம் ஆளுடைய அடிகள் வெளிப்படையாகவும்., உள்ளுறுத்தும் தெரிவித் தருளிய போழ்தும், சிலர்பலர், அவ் வினையியல்பை யுணர்ந்தும் அயர்ந்திருந்தனர். அவர்க்கு நல்லறிவு கொளுத்துவார் திருநீலகண்டத் திருப்பதிகத்தில் அவர்தம் கொள்கை யை மறுத்துப் பரமனை வழிபாடு புரியுமாறு நன்கு தெருட்டுகின்றார்.

" அவ்வினைக் கிவ்வினையாம் என்று
சொல்லு மஃதறிவீர்,
உய்வினைநா டாதிருப்பதும் உந்தமக்
கூனமன்றே,
கைவினைசெய் தெம்பிரான் கழல்போற்றுதும்
நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறா
திருநீலகண்டம்"

என்பது அப்பாசுரம். இதன்கண், வினைமேற்பழி யேற்றி, தாம் நுகரும் பயன்யாவும் முன்வினையால் வந்தன என்பாரை நோக்கி, “அவ்வினைக் கிவ்வினையாம் என்று சொல்லும் அதனை மட்டில் அறிந்திருக்கின்றீர்களே, அவ்வறிவால், அவ்வினையைக் கெடுத்தற்குரிய நெறியும் காண்டல் கூடும் என்பதை அறியா திருப்பது உமக்குக்குற்ற மாகுமே” என்பார், “உய்வினை நாடா திருப்பதும் உந்தமக்கு ஊனமன்றே” யென்றார். கெடுத்தற்குரிய அந்நெறியும் வேறன்று; ஈதே என்றற்கு, “கைவினை செய்து எம்பிரான் கழல் ஏத்துதும்” என்றும், “அதுதவிர யாம் வேறு செய்தற்குரிய நெறியில்லோம்; ஏனெனில், நாம் அவ்வாண்டவனுக்கு அடிமை” என்பதனை வற்புறுத்த நினைத்து, “நாம் அடியோம்” என்றும், அச்செயலால் நாம் தூய சத்துப்பொருளாதலின், அசத்தாகும் செய்வினைகள் வந்து சேர்வது இல்லையாம் என்பார், “செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறா” என்றும், இதற்குச்சான்று “திருநீலகண்டமே” என்றும் தெருட்டியருளுகின்றார். “சார்புணர்ந்து சார்புகெட வொழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரும் நோய்” என வள்ளுவப் பெருந் தகையும் வழங்கியிருக்கின்றார்.

இதுகாறும் கூறியவாற்றல், வினையுணர்வின் பயன் பரமன் திருவடியைப் பரவித் தொழுவதே யன்றிப் பிறிதில்லை யெனத் திருஞானசம்பந்த சுவாமிகள் தெருட்டியருளுகின்றார் என்பதாம்.

" பிறவியெனும் பொல்லாப்பெருங்கடலை நீந்தத்
துறவியெனும் தோற்றோணி கண்டீர் - நிறையுலகின்
பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன்
தன்மாலை ஞானத் தமிழ்"

பட்டினத்துப் பிள்ளையார்


சைவத்திருமுறை பன்னிரண்டனுள் பதினோராந் திருமுறையிற் காணப்படும் நூலாசிரியன்மார்களான சான்றோர்களுள் பட்டினத்துப் பிள்ளையாரும் ஒருவராவர். இவர் பாடியனவாகக் கோயில் நான்மணிமாலை, திருவிடைமருதூர் மும்மணிக் கோவை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருவேகம்ப முடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபாவொருபது என ஐந்து நூல்கள் பதினோராந் திருமுறையில் உள்ளன.

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் காவிரிப்பூம் பட்டினத்தில் இவர் தோன்றி வளர்ந்து வாழ்ந்தவர்; இவர், பிற்காலத்தே துறவு பூண்டபின் சான்றோர்களால் பட்டினத்துப் பிள்ளையா ரென்று வழங்கப்படுவாராயினர் (திருவிடை. 30). இவர், காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த சைவ வணிகர் குடியில் கடல் வாணிகம் செய்து மிக்க செல்வம் பெற்ற செல்வரொருவருக்கு மகனாராவர். திருவெண்காடருடைய தந்தை பெயர் சிவநேசர் என்றும் தாய் பெயர் ஞானகலாம்பை என்றும் கூறுவர்.

திருவெண்காடர், உரிய காலத்தில் திருமணம் செய்து கொண்டு, கடல் வாணிகம் செய்து, பெருஞ் செல்வராய் விளங்கினார். அவர்க்கு மருதவாண னென்றொரு மகன் பிறந்து, பதினாறாண்டளவும் இருந்து, பின் இறந்து போனான். இதனால் கவலை மிகக் கொண்ட திருவெண்காடர், திருவிடை மருதூரிலிருந்து வறுமை மிக்கு வருந்திவந்த ஆதிசைவர் ஒருவருடைய ஆண்மகவை விலைக்கு வாங்கி மருதவாணனென்றே பெயரிட்டு வளர்த்து வந்தார். அவனும் அவருடைய உண்மை மகனாகவே வளர்ந்து, சிறந்து, கடல் வாணிகம் செய்து பெருஞ் செல்வம் ஈட்டித் தந்து, காதற்ற ஊசி யொன்றையும், ‘காதற்ற வூசியும் வாராது காணும் கடைவழிக்கே’ என்றெழுதிய ஓலை நறுக்கொன்றையும் கொடுத்து விட்டு வெளிச் சென்று மறைந்து போனான். அதுகண்ட திருவெண்காட ருள்ளத்தில் துறவு பிறந்தது. அந்நாளில் அவரிடம் தலைமைக் கணக்கராய்ச் சேந்தனார் என்னும் சான்றோ ரொருவர் இருந்தார். வெண்காடர் தமது பெருஞ் செல்வத்தைப் பொது மக்கட்கு வழங்கி விடுமாறு சேந்தனாரைப் பணித்துக் கையில் ஓடும் அரையில் கோவணமும் கொண்டு வெளியேறினார். மருதவாணன் பிரிந்த சின்னாட்களில் வெண்காடருடைய மனவியாரும் காலமாயினர். வெண்காடருடைய தாய்மட்டில் உயிரோடிருந்ததனால், அவர்க்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்துவிட்டு, சிவபெருமான் எழுந்தருளும் திருப்பதி கட்குச் சென்று பரவிவழிபடும் செயலை அவர் மேற்கொண்டார். வீடுதோறும் சென்று ஓட்டில் உணவிரந் துண்டனர். அவருடைய உறவினர், வேந்தனைக் கொண்டும் வேறு தக்கோரைக் கொண்டும் அவர் உள்ளத்தை மாற்ற முயன்றனர்; சேந்தனாரைச் சிறையிடுவித்தனர்; திருவெண்காடருக்கும் நஞ்சு கலந்த உணவளித்துக் கொல்ல முயன்றனர்; ஒன்றாலும் திருவெண் காடருடைய உள்ளம் மாறவேயில்லை.

திருவெண்காடர், திருவிடைமருதூரில் சின்னாள் தங்கி இடைமரு திறைவனை வழிபட்டுக் கொண்டு வந்தார். அந்நாளில் அவருடைய தாயார் இறந்தனர்; அவர்க்குரிய இறுதிக் கடன்களைச் செவ்வே ஆற்றிவிட்டு மீளவும் திருவிடைமருதூர் சென்று சேர்ந்தார். அங்கே யிருக்கும்போது அவர் திருவிடைமருதூர் மும்மணிக்கோ வையைப் பாடினார். பின்பு அவர் சீர்காழி, தில்லை, காஞ்சிமாநகர், காளத்தி முதலிய திருப்பதிகளை வணங்கிக் கொண்டு வடநாடு சென்றார்.

வடநாட்டில் பத்திராசலப் பகுதியில் மாகாளம் என்னுமோர் ஊரையடைந்து, ஒருநாள் இரவு அங்கேயிருந்த பாழ்கோயிலொன்றில் நிட்டை கூடியிருந்தார். அந்நாளில் அப்பகுதியைப் பத்திரகிரி யென்னும் குறுநில மன்னன் ஆண்டுவந்தான். அவனுடைய அரண்மனையில் களவு புரிந்தகள்வர் சிலர், திருவெண்காடரிருந்த கோயிலுக்கு வந்து, தாம் திருடிவந்த அணிகலன்களுள் பதக்க மொன்றை யெடுத்து, அங்கிருந்தவர் கழுத்திலிட்டுச் சென்றனர். கள்வரைத் தேடிவந்த காவலர் பட்டினத்துப்பிள்ளை யாரைக் கண்டு கள்வரெனக் கருதிக் கைக்கொண்டு சென்று கழுவேற்றத் துணிந்தனர். கழுமரத்தைப் பிள்ளையார் நோக்கினர். உடனே அஃது எரிந்து சாம்பராயிற்று. அதுகண்டு வியந்த காவலர் வேந்தனுக்குத் தெரிவித்ததும், பத்திரகிரி விரைந்தோடிவந்து பிள்ளையாரைக் கண்டு துறவு பூண்டு அவர்க்கு மாணவராய் அவர் நிழல்போல் தொடர்ந்து வரலானார். இருவரும் திருவிடை மருதூரடைந்து இறைவனை வழிபட்டு வந்தனர். வருகையில் பத்திரகிரியாரை நாயொன்று சுற்றிக் கொண்டு திரிந்தது.

திருவிடைமருதூரில், ஒருநாள், பசியுற்று வருந்திய ஒருவர் பட்டினத்துப்பிள்ளையாரைக் கண்டு உணவு வேண்டி நிற்க, அவர் பத்திரகிரி யாரைக் காட்டி, ‘அந்தச் சமுசாரியிடம் செல்க’ என்றார். அது கேட்டதும், பத்திரகிரியார், தம்பால் இருந்த ஓட்டையெடுத்து, ‘இதுவும் இந்த நாயுமன்றோ என்னைச் சமுசாரியாக்கின’ என்று வருந்தி நாய்மேல் எறிந்தார். அது நாயின் மண்டையில்படவே நாய் இறந்து போயிற்று. சின்னாட்குப் பின் பத்திரகிரியும் இறைவன் திருவடியடைந்தார்.

முடிவில், பட்டினத்து அடிகள் திருவொற்றியூர்க்குச் சென்று இறைவனை வழிபட்டு வந்தார். ஒரு நாள், கடற்கரையில் உள்ள நீர்நிலையில் ஆடை யொலிக்கும் ஏகாலிச்சிறுவர் விளையாடுவது கண்டார். அவரோடு தாமும் விளையாடலுற்று, அவர்கள் தம்மை ஓரிடத்தில் புதைத்தால் தாம் வேறோரிடத்தில் தோன்றிக் காட்சி யளித்து இன்புறுத்தினார். இவ்வகையில் அவர்கள் தம்மை ஆழத்தில் புதைக்குமாறு செய்து, இறுதியில் அவர் காட்சி வழங்காது சிவலிங்கமாக மாறினார் என்பர்.

பிள்ளையார் சீர்காழியில் தங்கியபோது திருக்கழுமல மும்மணிக்கோவையும், காஞ்சி மாநகரில் திருவேகம்பமுடையார் திருவந்தாதியும், திருவொற்றியூரில் திருவொற்றியூர் ஒருபாவொரு பதும், தில்லையில் கோயில் நான்மணி மாலையும் பாடியருளினார்.

பிற்காலத்தே சுமார் இருநூறு இருநூற்றைம்பது ஆண்டு கட்கு முன்பு தோன்றிய துறவியொருவர் பட்டினத்துப் பிள்ளையென்ற பெயரால் நிலவினர். அவரும் சில பாட்டுக்களைப் பாடினர். பிற்காலத்தார் அவரையும் திருவெண்காடான் பட்டினத்துப் பிள்ளையென்றே கொண்டு அவர் பாடல்களையும் பிள்ளையார் பாடலாகக் கருதிப் பேசலாயினர். உண்மை யாராய்ச்சி, இருவரையும் வேறாக்கி, இருவர் பாடல்களையும் வேறுபடுத்திக் காட்டிவிட்டது.

சிவனை வழிபடும் சைவர்களுக்கு வேதம், சிவாகமம், புராணம் முதலியன சமய நூல்களாகும். வேத நான்கும் இறைவன் திறமே மொழியும்; மொழியுங்கால் அவன் பெரியதிற் பெரியன் என்றும் சிறியதிற் சிறியன் என்றும் மொழியும்; (கோயில் 12) சிவாகமங்களுக்குச் சித்தாந்த மென்பதும் பெயராகலின் அவற்றை சைவசிந்தாந்தமென்றும் அவற்றை இறைவனே உபதேசித் தருளினன் என்றும் சைவர் கூறுவர்; இக் கருத்தையே பட்டினத்துப் பிள்ளையாரும், ‘கைவல நெல்லியங் கனியது போலச் சைவ சித்தாந்த தெய்வ ஆகமத்தை, வரன்முறை பகர்ந்த திருமலர்வாய’ (கழுமல, 13) என்றும், வேதம், மந்திரம், வேள்வி, இசை முதலியவற்றையும், ஞானசிவாகம வகைக் கலை களையும் ஒழுக்க நெறிகளையும், பத்தி நெறிகளையும் விளக்குவன (கழுமல. 22) என்றும் கூறினர்.

இத்தத்துவ ஆராய்ச்சி நெறியால் தன்னை யறிவதும், அதனால் தலைவனான சிவனையறிவதும் வேண்டும் என்பர்; “தன்னை யறியத் தலைப்படும் தலைமகன்” என்றும் சான்றோர் கூறுவர். அத்துறையில் சென்று தற்காண்டல் முயற்சியில் ஈடுபட்ட பிள்ளையார், உடலை, மயிர், தோல், புண், குருதி, எலும்பு, எலும்பிடையுள்ள மூளை, விழுது, அதனுள் ஒழுகும் வழும்பு, புழு, மலம், நரம்பு, பிணி எனப் பகுத்துக்கண்டு, “இன்னது யானென் றறியேன் என்னை, எங்குந்தேடினன் யாதிலும் காணேன்” (திருவடை. 13) என வுரைப்பர். உடற் கூற்றாராய்ச்சி யையும் தெரிந்து கொண்டு தெரியாதது காண்டல் வகையில் மயிர் தோல் முதலிய புறப் பொருளினின்றும் அகப்பொருளை நாடிக் காணும் முறை இவர் பால் அமைந்திருப்பதும், தசையைப் புண்ணெனத் திருவள்ளுவர் கூறியது கொண்டு, தாமும் புண்ணெனக் குறிப்பதும் குறிக்கத்தக்கனவாகும்.

இவ்வண்ணம் திருவருள் வாழ்வும் உலகியற் காட்சியும் இனிது பெற்று இறைவனைச் சிந்தையிற் கண்டு விளங்கும் பிள்ளையார், ஏனையோரைக் கண்டு மன மிரங்கி, ’எம்மனோர்கள் (இறைவனாகிய கனியை) இனிதின் அருந்திச் செம்மாந்திருப்பச் சிலர் இதின் வாராது, மனத்தைப் பாழாக்கி, பொய்யும் பாவமும் கொடுமையும் துன்பமும் பெருக்கி, “மரணம் பழுத்து நரகிடைவீழ்ந்து, தமக்கும் பிறர்க்கும் உதவாது, இமைப்பிற்கழியும் இயற்கையோ ராய்” (திருவிடை 10) உள்ளனர் என இரங்கிக் கூறுகின்றார்.

இனி, இவர்க்கு மாறாகக் கடுந்தவம் மேற்கொண்டு உடலை வருத்தும் பிறரையும் காண்கின்றார். அவர்கள் மனைவி மக்களைத் துறந்து காடு மலைகளையடைந்து மழையென்றும் வெயிலென்றும் பணியென்றும் பாராது நீர் பலகால் மூழ்கி, நிலத்திற் கிடந்து சடைபுனைந்து, உடை துறந்து, உண்ணா நோன்பு கொண்டும், காயும், கிழங்கும், காற்றுதிர் சருகும் உண்டு இயல்பாகவே தளர்தற்குரிய யாக்கையைத் தளர்வித்து “இம்மை முத்தியடைவதற் காகத், தம்மைத் தாமே சாலவும் ஒறுப்பர்” (திருவிடை 19) இவ்வாறன்றி, இல்லிருந்து நல்லன நுகர்ந்து, கொள்வன கொண்டு கொடுப்பன கொடுத்துப் பூசுவது பூசி, புனைவன புனைந்து “ஐந்து புலன்களும் ஆர ஆர்ந்து, மைந்தரும் ஒக்கலும் மகிழ மனமகிழ்ந்து. இவ்வகை” யிருந்தும், திருவைந்தெழுத்தை மறவாது சிந்தையைச் சிவன்பால் சேர்த்தியிருப்பார்க்கும் கடுந்தவம் செய்வோர் பெறும் பேரின்பம் இனிது எய்தும் என்று கூறி, இதனை விளக்குவாராய், “வல்லாவொருவன் கைம்முயன்றெறியினும், மாட்டா வொருவன் வாளா எறியினும், நிலத்தின் வழா அக்கல்லே போல, நலத்தின் வழார் நின் நாமம் நவின்றோரே” (திருவிடை 19) என்று கூறுவர். பிறிதோரிடத்தில், இவ்வுலகம் நின்னுடையது. இதன் கண் நிகழும் நன்மை தீமைகள் யாவும் நின்னுடையவே; ஆதலால், இதன் கண் வாழும் யான்.

" பத்தி யென்பதோர் பாடு மின்றிச்
சுத்தன் ஆயினும் தோன்றாக் கடையே, னின்னை
இறைஞ்சில னாயினும் ஏத்தில னாயினும்
வருந்தில னாயினும் வாழ்த்தில னாயினும்
கருதி யிருப்பன் கண்டாய்" (திருவிடை 28)

என்று கூறுவதும், தாம் இறைவன் திருவருள் வழி நிற்றலால், தம்செயல் யாவையும் இறைவன் தன் செயலாய் ஏன்றுக் கொள்ள வேண்டுமெனவும், தன்னை நினைத்தற்குரிய நெறியில் நினைக்குமாறு செய்ய வேண்டுமெனவும் வேண்டுவராய் ‘மனம் மருண்டு புன்மை யினினைத்துப் புலன் வழிப்படரினும் நின்வயின் நினைந்தே மாகுதல் நின்வயின். நினைக்குமோ நினைக்கப்பெறுதல் அனைத் தொன்றும் நீயே யருளல் வேண்டும்’ (கோயில். 32) என்று கூறுவதும் பிறவும் அவர் சீவன் முத்தராய் வாழ்ந்த குறிப்பைப் புலப்படுத்துகின்றன.

இத்தகைய இயல்பினையுடையார்க்கு இறைவன் தொண்டராய்த் தொண்டு படுவதில் பெருவிருப்பும் இயற்கையாக வந்து அமை வனவாம். பெருவிருப்பத்தை “நின் சீரடியார் தம் சீரடியார்க்கு, அடிமை பூண்டு நெடுநாட்பழகி முடலை யாக்கை யொடு புடைபட் டொழுகி அவர் கால் தலை யேவல் என் நாய்த்தலையேற்றுக் கண்டது காணினல்லது ஒன்று உண்டோ மற்றெனக்குள்ளது பிறிதே” (திருவிடை 7) என்பதனாலும், பெருமிதத்தை “அம்பலக் கூத்தனுக்கு அன்பு செய்யா மிண்டர் மிண்டித்திரிவார். எனக்கு என்இனி நான் அவன் தன், தொண்டர் தொண்டர்க்குத் தொழும் பாய்த் திரியத் தொடங்கினனே” (கோயில் 38) என்பதனாலும் வெளிப்படுத்துகின்றார்.

இப்பெற்றியோர்க்கு எதன்பாலும் விருப்பு வெறுப்புக் கிடையாது. அவர்கள் துறக்க வாழ்வும் நரக வாழ்வும், பிறர் கண்டு தம்மை நல்லரெனினும் தீயரெனினும், செல்வ வாழ்வும் வறுமை வாழ்வும் குன்றா இளமையே எய்தினும் இன்றே இறக்கலுறினும் எல்லாம் ஒன்றாய்க்கருதி, “வேண்டலு மிலனே வெறுத்தலுமிலனே” (கோயில் 36) என்று இருப்பர்; “பிறிதொன்றில் ஆசையின்றி இருந்தேன் இனிச் சென்றிரவேன் ஒருவரை யாதொன்றும்” (திருவிடை 3) என்ற துணிவுடனே ஒழுகுவர்.

திருவெண்காடரான பிள்ளையார் காவிரிப் பூம்பட்டினத்துக் கடல் வணிகர் குடி முதல்வராய் விளங்கினவர் என்றதற்கேற்ப, அவருள்ளம் கடலிற் கலம் அமைத்துச் செலுத்தும் துறையில் நன்கு பயின்றிருந்தது. அதனால் உடம்பைக்கலமாகவும், தீயொழுக்கம், பொய்ம்மை, பிணி, இடும்பை முதலிய வற்றைச் சரக்காகவும், வினையை மீகாமனாகவும், கருப்பையைக் கடற்றுறை நகராகவும், புலன்களைச் சுறா மீனாகவும், பிறவியைக் கடலாகவும், துயரத்தை அலையாகவும், குடும்பத்தை நங்குரக் கல்லாகவும், நிறையைக் கூம்பாகவும், உணர்வைப் பாயாகவும் உருவகம் செய்வதும் (கோயில் 16), பிறி தோரிடத்தில் உலகைக் கடலாகவும், உடம்பைக் கலமாகவும், தோலைப் பலகையாகவும், எலும்பை ஆணியாகவும், நரம்பைக் கயிறாகவும், முதுகெலும்பைக் கூம்பாகவும், காம முதலிய குற்றங்களை நிறையாகவும், நெடுநீர் என்னும் குற்றத்தை நங்குர நாணாகவும், மடியை நங்குரமாகவும், மனத்தைப் பாயாகவும், ஆசையைக் காற்றாகவும், தானமுதலிய குணங்களைத் தீவுகளாகவும் உரைப்பதும் (கழுமல 16); வேறோரிடத்தில், வளியும் பித்து முதலியவற்றைக் காற்றாகவும், நரையை நுரையாகவும், தோலைத் திரையாகவும், இருமலைக் கடல் முழக்காகவும், பசிவெகுளி முதலியவற்றைச் சுறா மீனாகவும், குடலைப் பாம்பாகவும், தசை யெலும்புகளைத் திடலாகவும், உடம்பைக் கடலாகவும், துப்புரவைச் சுழிகளாகவும், இறைவன் திருவருளை நாவாயாகவும், ஆர்வத்தைப் பாயாகவும், நிறையைக் கயிறாகவும், ஒருமை யுணர்வைக் கலத்தை யியக்கும் பொறியாகவும், காமத்தைப் பாராகவும், சுருங்கா வுணர்ச்சியைத் துடுப்பாகவும் (ஒற்றி 8) உரைப்பதும் இவர்பால் பெருகக் காணப்படுகின்றன.

இவர் காலத்தே கடலிற் செல்வோர் வடமீனைத் திசை விளக்காக மேற்கொண்டிருந்தமையை ‘தூமச் சோதிச்சுடர்க் குற நிறுத்தி’ (ஒற்றி 8) என்றும், பொறிகள் அமைத்து வங்கத்தைச் செலுத்தின மையை, ‘மன்னிய வொருமைப் பொறியினை முறுக்கி’ (ஒற்றி 8) என்றும், ‘இருளுறுபவ்வத் தெந்திரங்கடா அய், துன்று திரைப்பரப்பிற் குன்று பார்த் தியங்கியும்’ (கோயில் 20) என்றும் வருவன வற்புறுத்துகின்றன. அந்நாளில் மக்கட்குத் திருமணம் செய்யும் வகையில் பெற்றோரே முற்பட்டு நின்றனர். மகட்குத் தக்க மணமகனைத் தேர்ந்து மணஞ்செய்து வைப்பது மகனைப் பெற்றோர் கடனாகும்; இதனை “தன்னைத் தேறி முன்னையோர் கொடுத்த நன் மனைக் கிழத்தி” (இடைமரு 7) என்பதனாலறியலாம். அத்திருமணக் காலத்தில் வந்து கூடும் செல்வர் மணமக்கட்கு மொய் யெழுது வதாகிய வழக்கம் அடிகள் காலத்தே தோன்றி விட்டது. “திருமணம் புணர்ந்த ஞான்று… திருமணப் பந்தருள் அமரர் முன் புகுந்தறுகு சாத்தி நின், தமர் பெயரெழுதிய வரி நெடும் புத்தகத், தென்னையும் எழுத வேண்டுவல்” (கோயில் 4) என்பது அவ்வழக்கினை எடுத்துக் காட்டுகிறது. வருவாயுள் ஆறிலொன்று அரசர்க்கு இறுக்க வேண்டிய முறை அடிகள் காலத்து மாறிவிட்ட தென்பது, “அரசு கொள்கடமை யாறிலொன் றென்னும் புரைதீர் முறைமை புதுக்கினை” (கழுமல 25) என்ற அடிகள் காட்டுகின்றன.

பட்டினத்தார் காலத்தே அவர்க்கு முன்னோர் சிலருடைய வரலாறுகளும் பல இனிய பழமொழிகளும் மக்களிடை பயில வழங்கியிருந்தன. புத்தராகிய சாக்கிய நாயனார் கல்லெறிந்து சிவனை வழிபட்டதும் (இடைமரு 25), திருஞான சம்பந்தர் ஞானப் பாலுண்டு தோடுடைய செவிய னென்றும், பீடுடைய பெம்மான் என்றும் பாடியதும் (கழுமல 1) திருநாவுக்கரசரும் நம்பியாரூரரும் வித்தகப் பாடல் பாடியதும் (திருவிடை 28) பெருந்துறைப்பிள்ளை யாகிய திருவாதவூரரது பேரன்புநெறியும் (திருவிட 28) பெருஞ் செல்வத்தை அவமதித்துப் போந்த சிவவாக்கியர் சிறப்பும், வரகுண தேவரின் வான்புகழ் வரலாறும் பிறவும் பிள்ளையாரால் விதந்து கூறப்படுகின்றன. இவருள் ஞானசம்பந்தர் முதலிய மூவரையும் “வித்தகப் பாடல் முத்திறத்தடியர்” எனவும், திருவாதவூரரைத் “திருந்திய அன்பிற் பெருந்துறைப்பிள்ளை” எனவும், சிவவாக்கியரைச் ‘சித்தமார் சிவவாக்கிய தேவர்’ எனவும், வரகுணனை, ‘பெரிய அன்பின் வரகுணதேவர்’ எனவும் குறித்துரைப்பது வரலாற்றுண்மை பொதிந்த கட்டுரையாகும்.

அந்நாளில் கற்றுவல்ல புலவர்க்கு அறிவாராய்ச்சி வகையில் இன்பந்தந்தவை. ஏழிசைச்சூழல் போல் இனிய நுட்பம் பொருந்திய அகத்துறைப் பாட்டுக்களாகும். அத்துறையில் பிள்ளையார் பல பாட்டுக்களைப்பாடி வழங்கியுள்ளார். அவை நான்மணிமாலை மும்மணிக்கோவைகளில் உள்ள வற்றினும் மிகுதியாகத் திருவேகம் பமுடையார் திருவந்தாதியில் உள்ளன. அவற்றுள் “துணையொத்த கோவை” (73) எனவரும் பாட்டுத் திருக்கோவையார் கருத்தைத் தன்கட்கொண்டு விளங்குவது.

பிள்ளையாரால் இறைவனுக்குரிய மலைகளென, இமயம், கொல்லி, சிராமலை, விந்தம், மந்தரம், இந்திரம், நீலம், வெள்ளை, பரங்குன்றம், மகேந்திரம், வெண்குன்றம், செங்குன்றம், நெற்குன்றம், நெடுங்குன்றம், கழுக்குன்றம், முதுகுன்றம் (57…9) முதலியன குறிப்பிடுகின்றன. சிவனுக்குரிய ஊர்களென குற்றாலம், நெய்த்தானம், துருத்தி, அப்பர், வேள்விக் குடி, தோணிபுரம், பழனம், ஆரூர், இடைமருது, திருச்சோற்றுத்துறை, நியமம், புகலூர், புறம்பயம், பூவணம், திருவண்காடு, பாச்சில், அதிகை, ஆவடுதுறை, நல்லம், நல்லூர், கடம்பூர், கடம்பந்துறை, புன்கூர், பாராய்த்துறை, எதிர்கொள்பாடி, அண்ணாமலை, வல்லம், தமாற்பேறு, பாசூர், அழுந்தூர், பெரும்பேறு, ஒற்றியூர், கச்சியேகம்பம், திருவோத்தூர், திருவாமாத்தூர், புலிவலம், வில்வலம், திருப்பனங்காடு, கொச்சை, மாகறல், காவை, கச்சூர், திருக்காரிகரை, திருவான்மியூர், திருவூறல், திருப்போந்தை, முக்கோணம், திருவாலங்காடு முதலியன குறித்தோதப் படுகின்றன. இவற்றுள் சேரக் கூறற் பாலவாகிய தில்லையையும் காளத்தியையும் தனியே நிறுத்தி, “நடனம்பிரான் உகந் துய்யக் கொண்டா னென்று நன்மறையோர், உடன்வந்து மூவாயிரவரிறைஞ்சி நிறைந்த உண்மைக், கடனன்றி மற்றறியாத் தில்லையம்பலம் காளத்தியாம், இடம் எம்பிரான் கச்சியேகம்பமே” (4) என்று சிறப்பித்துக் கூறுகின்றார். கயிலை யெழுந்தருளுமிடமும் தில்லை நடம்புரியுமிடமுமாயினும் (கோயில் 32) தில்லையாத் தனித்தும், கயிலைமலை யெனப்படும் (a.r 160 of 1922) சிறப்புடைமையின் திருக்காளத்தியைத் தில்லை யொடு சார்த்தியும் கூறினார் போலும்.

இனி, அவர் வழங்கும் பழமொழிகளைக் காண்டல் வேண்டும். பொற்குன்றம் சேர்ந்த காக்கையும் பொன்னாம் என்பதும், இரத குளிகையால் செம்பும் பொன்னாம் என்பதும், கருடதியானிக்குக் கண்ணே மருந்து என்பதும், இரவி முன் இருள் நில்லாது என்பதும் பழமொழிகள்; இவற்றை “ஏர்தரும் பொற் கிரிசேர் கருங்கொடியும், பொன்னிறமா மெனச் சொன்ன தொன் மொழியும், ஏதமில் நிறைமதிச் சீதளநிலவால், ஆருமெய்யுருப்பும் தீருமென்பதும், மொழிதரு மிரதகுளிகைதற் சேர்ந்த காளிமச் சீருண நீளியற்கனக, மாமெனக் கூறும் தோமறுமொழியும், கருட தியானம் மருடபவந்தோர், நோக்கினில் தவிரும் தீக்கடுவென்றலும், ஆயிரங் கிரணத் தலர் கதிர் முன்னம் பாயிருள் கெடுமெனப் பகர் பழமொழியும், அங்கண்மா ஞாலத் தெங்கணு மொப்ப இயலும்” (கழுமல 19) என்பர். கற்பசுவைக் கறப்பவரில்லை, எட்டிக் கனிக்கு ஏணியிடார், அரிசிவேண்டி உமி குற்றுவாரில்லை, வெறுங்களருழுது விதை விதையார் (கழுமல 22) தானே விழுவார் மேல் பார மேற்றலாகாது (திருவிடை 5) முகம் பாகம் பண்டமும் பாகம் (திருவேகம்ப 15) என்பன முதலிய பழமொழிகளும் பிள்ளையார் பாட்டில் காணப் படுகின்றன.

பட்டினத்துப்பிள்ளையார் பெருஞ்செல்வத்தைத் துறந்த அருந்துறவியென்பதோடு முத்தமிழ்ப் புலமைபெற்ற வித்தகரென்பதை அவருடைய பாட்டுக்களே காட்டுகின்றன. மக்களுயிர் ஒவ்வொரு கணமும் இறக்கும்நிலையில் இருந்து கொண்டே சிற்றின்பம் விழைந்து நிற்கிறதென்பது கண்டு, “நஞ்சு சூழ்பகுவாய் வெஞ்சின மாசுணம், தன்முதன் முருக்க நென்முதற் சூழ்ந்த, நீர்ச்சிறுபாம்புதன் வாய்க்கெதிர் வந்த, தேரையை வவ்வியாங்கு யான்முன், கருவிடை வந்த வொருநாள் தொடங்கி மறவாமறலிமுன் பிறழ்பேழ்வாய். அயிற்றலையன்ன எயிற்றிடைக் கிடந்து” (கோயில் 8) வருந்துகிறேன் என்பது, மக்களைப்போலப் பிறந்திறந்துழலும் வானவர் முதலிய சிறு தெய்வவழிபாட்டை இகழ்ந்து விலக்கக் கருதிய பிள்ளையார் வழிபடும்மக்களை பார்த்து, “புறவார்பசும்புற் கறவாக்கற்பசு, வாயிடைச்செருகித் தூயநீருதவி, அருஞ்சு வைப்பால் கொளப் பெருஞ் சுரைவருடும் பேதையர்” (கழுமல 22) என்பது முதலிய உவமைகளை எடுத்தோதுவதும் பேரருட் பெருங்கடலாக இறைவன் இருப்ப, அவன் அருட்பேற்றுக்கிலக்காகாத மக்கள் செயலுக்கு இறைவன்பால் குற்றமில்லையென்பது விளக்க, “முறியாப்புழுக்கல் முப்பழங்கலந்த, அறுசுவை யடிசிலட்டினி திருப்பப், புசியாதொருவன் பசியால் வருந்துதல், அயினியின்குற்றமன்று; வெயிலில்வைத்து, ஆற்றிய தெண்ணீர் நாற்றமிட்டிருப்ப, மடா அவொருவன் விடாஅ வேட்கை, தெண்ணீர்க்குற்றமன்று; கண்ணகன்று, தேன்துளிசிதறிப் பூந்துணர்துறுமி, வாலுகங் கிடந்த சோலைகிடப்ப, வெள்ளிடவெயிலிற் புள்ளிவியர்பொடிப்ப, அடிபெயர்த்திடுவா னொருவன், நெடிது வருந்துதல் நிழல் தீங்கன்றே” (திருவிடை 16) என்பதும் பிறவும் அவரது புலமை வளத்தின் பொற்பை விளக்குவனவாம்.

சிவபெருமான் இன்னவுரு இன்ன நிறம் என்று அறியவாராத முழுமுதற் பொருள்! “குறி குணம் கடந்தவன், உறைபொருள் எங்கணும் நிறைபரி பூரணம், அந்தமாதி முந்தையே தவிர்த்த அனாதி முத்தன், அளவையின் அடங்காது ஒளிர் சுகம்” (கழுமல 28); சராசாரமனைத்தும் அவனிடையே தோன்றி அவனிடையே யடங்கும் (கோயில் 24), எல்லாம் தன்னிடைத் தோன்றித் தன்னிடையே ஒடுங்கினும், சிவபெருமான் தான் பிறிதொன்றில் தோன்றாது வேறாய் நிற்பன் (திருவிடை மும். 22; ஒற்றி. 4) வேறாய் இருப்பினும் “ஏழுலகாகி எண்வகை மூர்த்தியோடு ஊழிதோWது எண்ணிறந் தோங்கி” (ஒற்றி 1) எவ்வகைப் பொருளினும் ஒன்றாய் அவ்வப் பொருளாகவும் இருப்பன். ஒன்றாக இருப்பவன் வேறாய் நிற்பது, ஒன்றோடொன்றொவ்வாது வேறுபட்ட உயிர்கள் தத் தம் எல்லையில் இனிது ஒழுகப் பண்ணுதற்கு என்பாராய், “ஒவ்வாப் பன்மையுன் மற்றவர் ஒழுக்கம் மன்னிய…. விரவியும் வேறாய் நின்றனை” (ஒற்றி4) என்று விளக்குகின்றார். இப்பரம் பொருள் இங்ஙனம் உலகுயிர்களோடு ஒன்றாயும், வேறாயும் இருக்குமாயினும், மூலமும் நடுவும் முடிவும் இன்றிக் காலங் கடந்து நிற்கும் கடவுள் என்று எடுத்து,

“ உளக்கணுக் கல்லா தூன்கணுக் கொளித்துத்
துளக்கற நிமிர்ந்த சோதித் தணிச்சுடர்
எறுப்புத் துளையி னிருசெவிக் கெட்டா
துறப்பினின் றெழுதரு முள்ளத் தோசை
வைத்த நாவின் வழிமறித் தகத்தே
தித்தித் தூறுந் தெய்வத் தேறல்
துண்டத் துளையிற் பண்டைவழி யன்றி
அறிவி னாறும் நறிய நாற்றம்
ஏனைய தன்மையும் எய்தாது எவற்றையுந்
தானே யாகி நின்ற தத்துவன்” (இடை மருது. 22)

என்று உயிர்களின் அறிகருவிகட் கெட்டாமல் அகத்தே அவ்வப் புலப்பொருளாய்க் காட்சியளிக்கும் என விளங்கியுரைப்பர்.

இவ்வாறு உலக முழுதும் எல்லாம் தானேயாய் நிற்கும் கடவுளாகிய சிவபரம் பொருட்குச் சமயங்கள் பலவும் உரியன என்று கூறுவது சைவத்தின் தனிச் சிறப்பாகும். “அன்றென்றும் ஆ மென்றும் ஆறு சமயங்கள், ஒன்றோடொன் றொவ்வா துரைத்தாலும் என்றும், ஒரு தனையே நோக்குவார் உள்ளத் திருக்கும்” (இடைமருது. 17) எனவும், ‘திருவமர் மாலொடு திசைமுகனென்றும், உளனேயென்றும் இலனேயென்றும், தளரானென்றும் தளர்வோனென்றும், ஆதியென்றும் அசோகின னென்றும், போதியிற் பொலிந்த புராண னென்றும், இன்னவை முதலாத் தாமறி யளவையின், மன்னிய நூலின் பன்மையுள் மயங்கிப், பிணங்கு மாந்தர் பெற்றிமை நோக்கி, அணங்கிய அவ்வவர்க் கவ்வவையாகி யடையப் பற்றிய பளிங்கு போலும், ஒற்றி மாநகருடைய கோவே’ (ஒற்றி 2) எனவும் கூறிச் சமய வேற்றுமையைக் களைவதில் பிள்ளையார் சிறந்து நிற்பர். உடம்பை மரக்கலமாகவும், வினைகளைச் சரக்காகவும் உலக வாழ்வைக் கடலாகவும் உருவகம் செய்யும் பிறிதோரிடத்தே, அடிகள் பல் வகைச் சமயங்களையும் கடற்றுறைகளாக, எடுத்துக் கூறுவது (கழுமல 16) சமய வேற்றுமையில் ஒருமை காண முயலும் அடிகளது மனப்பான்மையைத் தெரிவிக்கிறது.

இனி, சைவ புராணங்கள் சிவபெருமான் மாதொரு பாகனாய்க் கங்கையும் திங்களும் தாங்கிய சடைமுடியும், நெற்றி விழியும் நீலகண்டமும் எடுத்த பாதமும் தடுத்த கங்கையும் புலி யதளாடையும், சூலப் படையும் மழுப்படையும், ஆனேற னூர்தியும் ஆனேற்றுக் கொடியும் பிறவு முடையனாய்த் தோன்றும் தோற்றத்தை எடுத்தோதி, புர மெரித்ததும், தக்கன் வேள்வி தகர்த்ததும், அயன் றலையைக் கொய்ததும், காமனைப் பொடித்ததும், காலனைக் காய்ந்ததும், பிறவும் விரித்துக் கூறுவனவாகும். இவற்றை யெல்லாம் பிள்ளையார் பல திருப்பாட்டுக்களில் விரித்தும் தொகுத்தும் அழகொழுகப் பாடியுள்ளார். மேலும், சிவபெருமான், திங்களைச் சூடுதல் ஆனேறு ஏறுதல் முதலிய செயல்களின்கருத்து இது வென்பாராய்.

“ தூமதி சடைமிசைக் சூடுதல் தூநெறி
யாமதி யானென வமைத்த வாறே
அறனுரு வாகிய ஆனே றேறுதல்
இறைவன் யானென இயற்று மாறே
அதுவவள் அவனென நின்றமை யார்க்கும்
பொதுநிலை யானென வுணர்த்திய பொருளே
முக்கண னென்பது முத்தீ வேள்வியில்
தொக்க தென்னிடை யென்பதோர் சுருக்கே
வேத மான்மறி யேந்துதல் மற்றதன்
நாதம் நானென நவிற்று மாறே
மூவிலை யொருதாட் சூல மேந்துதல்
மூவரும் யானென மொழிந்த வாறே
எண்வகை மூர்த்தி யென்பதிவ் வுலகினில்
உண்மை யானென வுணர்த்திய வாறே” (ஒற்றி 6)

என மொழிந்தருளுகின்றார்.

இனி, சிவநெறி பேணும் சைவர்களுக்குத் திருநீறும், திருவைந் தெழுத்தும், திருவக்கமணி மாலையும் சாதனங்களாகக் கூறுவர். இவற்றைப் பொருளெனக் கொள்ளாதார்க்குப் பிறவியினின்றும் வீடு பேறு கிடையா தென்பர். இதனை, பிறவி நோய், “மாறும்படிக்கு மருந்துளதோ சண்பை வாணர் கொண்ட, நீறும் திருவெழுத் தோரைந்தும் கண்டியும் நித்த நித்தம், தேறும் பொருளென் றுணராத மாயச் செருக்கினர்க்கே” (கழுமல 21) என்றும், பெருவேந்த ராயினும், ‘நன்னீறு நுதற் கிலரேல், என்றும் அரசும் முரசும் பொலியா இரு நிலத்தே’ (திருவேகம்ப திருவந். 30) என்றும், ‘காணீர் கதி யொன்றும் கல்லீ ரெழுத்தஞ்சும்’ (திருவிடை. 12) என்றும் சிறப்பித் தோதுகின்றார்.

இச் சாதனங்களைப் பொருளாகக் கொண்டவர் சிவபெருமானை அகத்தும் புறத்தும் வழிபடும் இயல்பினராவர். புற வழிபாடு திருக் கோயிலில் இருக்கும் இறைவன் திருவுருவைச் சிவனெனவே தேறி நிறைந்த அன்புடனே நீராட்டிப் பூவிட்டு அருச்சிப்ப தாகும். நெஞ்சத்தில் திருவைந் தெழுத்தை நினைந்து அதன் வாயிலாக உள்ளத்தாமரையில் சிவனைக் கண்டு இன்புறுவதாகும் (கழுமல 22).

புற வழிபாட்டை, ‘பத்தியாகிப் பணைத்த மெய்யன்பொடு, நொச்சியாயினும், கரந்தையாயினும் பச்சிலையிட்டுப் பரவுந் தொண்டர்’ (இடைமருது 19) என்றும், ‘போதும் பெறாவிடில் பச்சிலை யுண்டு, புனலுண்டெங்கும்; ஏதும் பெறாவிடில் நெஞ்சுண் டன்றே’ (கழுமல 12) என்றும் எடுத்தோதுவர். இவ்வழிபாட்டின் உறுப்பாக இறைவன் புகழ் கேட்பதும், காலை மாலைகளில் திருக்கோயில் வலம் வருவதும் திருக்கோயில் திருப்பணி செய்வதும் (கோயில் 24) கூறப்படுகின்றன. அகவழிபாட்டின் கண் காமம் வெகுளி முதலிய குற்றங்களைப் நோக்கி, ஐம் பொறிகளையும் ஒடுக்கி, அன்பும் அருளும் வாய்மையும் மேற்கொண்டு சிந்தைக்கண் சிவபெருமானை எழுந்தருள்வித்து வழிபடுவ தாகும். இதனைப் பாழறையைப் பள்ளியறை யாக்கும் செயல் மேல் வைத்தும் (கழுமல 4) பாற்கடல் கடைந்து அமுதம் பெறும் செயல் மேல் வைத்தும் (கழுமல 13) உருவகமணி நலம் திகழச் சொல்லோவியம் செய்து காட்டுகின்றார்.

உயிர்கள் ஞானம் பெற்று வீடு பேறடைதற்குரிய பக்குவ மெய்துங்கால் சிவபெருமான் குருவாய் வந்து அருள் ஞானம் வழங்குவனென்றும் ஞானத்தால் பீடு கைகூடு மென்றும் சித்தாந்த மாகிய சைவாகமங்கள் கூறும். அதனை நம் பட்டினத்தார், ‘மேற்படும் இதயப் பாற் கடல் நடுவுள், பரம்பரை தவறா வரம் பெறு குரவன், மருளற விரங்கி யருளிய குறி யெனும், நிந்தையில் கனக மந்தரம் நிறுவி, மாணறி வென்னும் தூணிடைப் பிணித்த, நேசமென்னும் வாசுகி கொளுவி, மதித்த லென்னும் மதித்தலை யுஞற்றிய, பேரா வின்பச் சீரானந்தப், பெறலரு மமுதம் திறனொடும் பெற்று, ஞானவாய் கொண்டு மோனமா யுண்டு, பிறப்பிறப்பென்னு மறப் பெரும் பயத்தால், பன்னாட்பட்ட வின்னாங்ககற்றி, என்னையுந் தன்னையும் மறந்திட், டின்ப மேலீ டெய்துதற் பொருட்டே’ (கழுமல 13) என்று கூறுகின்றார். இவ்வாறு திருவருள் ஞானத்தைக் குரவன் அருளப் பெற்ற வழி, மனத்திடைப் படிந்து கிடக்கும் இருள் நீங்கும்; உள்ளம் தெளிவுறும்; அத்தெளிவின்கண் இன்பம் பெருகும்; அது வழியே இதுகாறும் கண்டறியாத மகிழ்ச்சி மேலிடும்; இறைவன் பால் அயராத அன்பு தோன்றும் (கழுமல 6) என்று விளக்குகின்றார். மருள் எனவும் இருள் எனவும் இங்கே குறிக்கப் பெறுவன ஆணவம் கன்மம் மாயை என்று கூறப்படும்; அவற்றை, ‘பேரிகலாணவக் காரிருள்’ எனவும், ‘மின்றொடர் வல்வினை வன்றொடர்’ எனவும், ‘மாயைமா மாயையாய பேய்’ (கழுமல 13) எனவும் வகுத்துரைப்பர்.

இவ் வண்ணம் உணர்த்தப்படும் சிவ ஞானம் கைவரப் பெற்றவர், யாது குறித்தும் எவர்க்கும் அஞ்சுதலின்றி, மனைவி மக்கள் முதலிய சுற்றத் தொடர்பும் செல்வமும் பிறவும் பொருளென நினையாது திருவருளே நினைந்து இந்திரன் முதலிய இறையவர் பதங்களும் எண் வகைச் சித்தியும் தாமே வந்தபோதும் அவற்றை மறுத் தொதுக்கிக் கீளும் கோவணமும் உடுத்து ஓடொன்றைக் கையிலேந்தி இரந்துண்பதும், தரையிற் படுத்துறங்குவதும் சால்பு குன்றாராய், மன்னுயிரனைத்தையும் மகவெனக் கருதி ஒக்கப்பார்க்கும் உயர் நிலைத்தொண்டராய் விளங்குவர்; அவர் வாழ்வின் முன் உலகியலிற் பெருஞ் செல்வம் பெற்று வாழும் பெரு வாழ்வு ‘குளப்படி நீரும் அளப்பருந் தன்மைப் பிரளயச் சலதியும்’ (இடை மருது 7) போல ஒவ்வா இயல்பின தாம். இச் சான்றோர். தாம் பெற்று மகிழும் அருள் ஞானத்தால், தம்மை யுணர்ந்து, தம்மை யடிமை யாகவுடைய தலைவனாகிய சிவனை யுணர்ந்து ஏனை எல்லோரையும் இனி துணரும் சிவ ஞானச் செல்வராவர். ‘தெய்வத் திருவருள் கை வந்து கிடைத்தலின், மாயப் படலங் கீறித் தூய, ஞான நாட்டம் பெற்ற பின்யானும், நின் பெருந் தன்மையுங் கண்டேன் காண்டலும், என்னையுங் கண்டேன் பிறரையுங் கண்டேன், நின்னிலை யனைத் தையுங் கண்டேன்’ (திருவிடை 13) என்று தாமும் அச் சிவ ஞானக் காட்சி பெற்ற சிறப்பைப் பட்டினத்தார் எடுத்துரைக்கின்றார்.

பட்டினத்தார் திருவருள் நாட்டம் பெறு முன்பெல்லாம் இறைவனை வேண்டுமிடத்து, ‘பேதையேன் பாசத் தீவினை யகற்றித் திருவருட் செல்வம் பெருகுமா றுதவி அளித்தருள்’ (கழுமல 19) என வேண்டினர். அக் காலத்துக் ‘கல்லா மனத்துப் புல்லறிவு தொடர’ இல்லன உள்ளனவாயும் உள்ளது காணப்படாமலும் காட்சி யளித்தன; ‘திருவருள் நாட்டம் கருணையிற் பெறலும்’ யாவையும் பொய்யெனத் தோன்றின; சிவ பரம் பொருளே மெய்யெனத் தோன்றக் கண்டார். அதனை ‘ஓவியப் புலவன் சாயல் பெற எழுதிய, சிற்ப விகற்ப மெல்லாம் ஒன்றித், தவிராது தடவினர் தமக்குச், சுவராய்த் தோன்றும் துணிவு போன்றனவே’ (கழுமல 10) என்று விளக்குகின்றார்.

இறுதியில் அவர் ஞான நெறியில் முதிர்ந்து திருவருட் பெருஞ் செல்வராய்த் திகழ்ந்த காலையில், திருவொற்றியூர் இறைவனை நோக்கி, ‘சேர்விடம் இன்னதெனத் திறப்படநாடி யடைதற்கு அரியவனே, நாடற்குரிய வாயில் எல்லாவற்றாலும் நாடினேன்; இனிச் செய்வதொன்று மறியேன்’ என்று செயலற் றொழிகின்றார். அப்போது அவர், பெற்ற தாய் சேய்மையிலிருப்பினும் அழுத குழவி பாலுண்பது இயற்கை; அவ் வியல்பு தானும் அறியாது ‘எண்ணில் ஊழி பிறவியின் மயங்கி’ வாய்தல் (வாயில்) அறியாது மயங்கினேன்; கண்ணிலாக் குருடர்கண் பெற்றாங்கு நின்திருவருள் நாட்டம் பெற்றேன்; என்னை இப் பிறவியிற் ‘கட்டிய நீயே அவிழ்க்கினல்லது, எட்டனை யாயினும் யான் அவிழ்க் கறியேன்’ என் கருவி கரணங்களாக ‘விளங்குவ எல்லாம், ஒன்ற நின் அடிக்கே ஒருங்குடன் வைத்து’ நின்றனன் தமியேன் நின்னடி யல்லது சார்வு மற்று, இல்லை (ஒற்றி 9) என்று உரைத் தருளுகின்றார்.

திருவெண்காடர் பெருஞ் செல்வப் பெரு வாழ்வு வாழ்ந் தவராகையால், அதன் பயனாக உலகியலில் செல்வ வாழ்க்கையின் இயல்பைத் தெளிவாக எடுத் தோதுகின்றார். ‘வாழ்ந்தன மென்று தாழ்ந்தவர்க் குதவாது, தன்னுயிர்க் கிரங்கி மன்னுயிர்க் கிரங்காது, உண்டிப் பொருட்டாற் கண்டன வெஃகி, அவிழடு நர்க்குச் சுவைபகர்ந் தேவி, ஆரா வுண்டி யயின்றனராகி’ பெரியோரைப் பேணாமை, சிற்றினச் சேர்க்கை, பிறன் மனை நயத்தல், பொருட் பெண்டிர் முயக்கம் முதலியன செய்து, நச்சி வந்த நல்கூர் மாந்தர்க்கு ‘அக மலர்ந் தீவார் போல முகமலர்ந்து, இனிது மொழிந்தாங் குதவுதலின்றி, நாளும் நாளும் நாள் பல குறித்து’ அவரை வருத்துதலும், இம்மை மறுமை யில்லை யென நாத்திகம் பேசுதலும், செல்வத்தையே பெரியதா விரும்பித் தன்னையே வியந்து கொள்வதும் (திருவிடை 7) பெருஞ் செல்வ வாழ்வின் இயல்பு என இயம்புகின்றார். இவ்வாறே மகளிர் நலம் பாராட்டித் திரியும் மாக்கள் செயலையும் (கோயில் 15) எடுத்தோதி யிழிக்கின்றார்.

செல்வ வாழ்வு பெறுவோர் அதற்காக முயலும் பல்வேறு முயற்சிகளையும் நிரல்படக் கோத்துரைப்பதில் பிள்ளையார் நிகரின்றிப் பிறங்கு கின்றார். நிலத்தை உழுதுவிதை விதைத்துக் கார் வருமேன்று விண்பார்த்திருப்பதும், கிளைஞர்களைப் பிரிந்து பொருள் வயிற் சேறலும், போருடற்றுவதும், கடலில் ஏந்திரம் கடாவிற் குன்று பார்த்து வங்கம் செலுத்துவதும், வேந்தர்க்குச் சோற்றுக் கடன் பூண்பதும், வேறு பல தொழிலில் முயல்வதும், வாட்போர் செய்வதும், அறியாதார்க்கு அறிவு கொளுத்துவதும், சொற் போர் செய்வதும், பாக்கள் புனைவதும், சொற்பொழிவு செய்வதும் (கோயில் 20) மக்கள் செயல்களாகும் இவ்வாறு ஈட்டப் பட்ட செல்வம் நிலையின்றிக் கெடுவதையும் நன்கு கண்டு, ‘கண்டன மறையும் உண்டன மலமாம், பூசின மாசாம் புணர்ந்தன பிரியும், நிறைந்தன குறையும் உயர்ந்தன பணியும், பிறந்தன இறக்கும் பெரியன சிறுக்கும், ஒன்றொன்றொருவழி நில்லா’ என்றும், செல்வம், கல்வி, கொடை, படை ,குலம் முதலிய வற்றால் உயர்ந்தவர்களும் இறந்தொழியக் கண்டு, ‘செல்வமொடு பிறந்தோர் தேசொடு திகழ்ந்தோர், கல்வியிற் சிறந்தோர், கடுந்திறன் மிகுந்தோர், கொடையிற் பொலிந்தோர், படையிற் பயின்றோர், குலத்தி னுயர்ந் தோர், நலத்தினின் வந்தோர், எனையர் எக்குலத்தினர் இறந்தோர் அனையவர், பேரும் நின்றில’ (கோயில் 28) என்றும் உரைக்கின்றார்.

துறவு வாழ்வு முதிர முதிரப் பிள்ளையார்க்கு உலகியலின் பல் வகைக் கூறுகளையும் பகுத்து ஆராயும் ஆராய்ச்சி மிகுவதாயிற்று. யாக்கை நிலையாமை, செல்வ நிலையாமை, இளமை நிலை யாமை முதலிய நிலையாமைகளை ஏனைத் துறவி களைப் போலவே கூறுகின்றாராயினும். மக்களுடைய செயல் வகைகளைத் தொகுத்து வகுத்தும் ஆராய்ந்த முதன்மை நம் பட்டினத்தாருக்கே உரியது. இளமை, மூப்பு, இறப்பு என்றவற்றின் விரைந்த வரவை யெடுத்தோதி, இவற்றையுடைய உடல் வாழ்வைக் கருதி மக்கள், ‘செய்தன சிலவே செய்யா நிற்பன சிலவே’ எனவும், ‘அவற்றிடை நன்றென்ப சிலவே தீதென்ப சிலவே’ ஒன்றினும் படாதன சிலவே எனவும், இவற்றை ஒன்றொன்றாக நோக்கினும், ஒன்றாகச் சேரத் தொகுத்து நோக்கினும், உண்மை தெளிதல் மனத்திற்கு இயலுவதில்லை யாதலால், ‘மனத்தின் செய்கை மற்றிதுவே’ (கோயில் 32) எனவும் கூறுவது இதற்குப் போதிய சான்றாகும். இவ்வாறே உயிர்கள் பலவாய்த் தம்முள் பல வேறு வகையால் ஒன்றினொன்று ஒவ்வாத வேற்றுமை கொண்டு நிலவுவதை ‘யாக்கையி லியங்கும் மன்னுயிர், உருவினும் உணர்வினும் உயர்வினும், பணியினும், திருவினும், திறலினும், செய்தொழில் வகையினும், வெவ்வேறாகி வினையொடும் பிரியாது, ஒவ்வாப் பன்மை’ (ஒற்றி 4) என ஆராய்ந்து வகுத்துக் காட்டுவர்.

இவ்வாறு பொருள்களின் குணஞ் செயல் களைப் பகுத்துணர்ந் துரைக்கும் பண்புடைப் புலமை சிறந்த பிள்ளையார், தத்துவ ஆராய்ச்சியில் தலைப்பட்டு மனத்தின் இயல்பும், அஃது இறைவன் வழிபாட்டில் அமையவேண்டிய அமைதியும் கண்டு, ஓரிடத்தில் அழகுறக் கூறுகின்றார். பிறப்பு இறப்புக்களால் உயிர்கள் எய்தும் துன்பத்தை இறைவனைப் பற்றியல்லது அது கைகூடாது; இறைவனைப் பற்றி நிற்றற்கு ஓன்றை வேண்டுதலும் வெறுத்தலும் ஆகிய இரு செயலும் உள்ளத்தின்கண் உண்டாதல் வேண்டும்; உள்ளமோ ஐம்புலன் வழிநின்று, தானல்லாத தொன்றைத் தானென நினையும் தன்மையதாகும். இது கொண்டு இறைவனை நினைப்பது எங்ஙனம் அமையும்? என்றோர் ஐயத்தை யெழுப்பி, எவ்வகையாலும், ‘இறைவ. கருப்பம் கடத்தல் யான் பெறவும் வேண்டும், கடத்தற்கு நினைத்தல் யான் பெறவும் வேண்டும், நினைத்தற்கு நெஞ்சு நெறி நிற்கவும் வேண்டும்’ (திருவிடை 4) என்று இறைவனை வேண்டியமைகின்றார்.

இவ்வாறு உவமைவகையான் மட்டுமன்றிக் கற்பனைவகையிலும் இவரது புலமை தலை சிறந்து விளங்குகிறது. திருவிடைமருதூரில் இவர் இருந்து வருகையில் அதன் இயற்கையழகு முற்றும் நன்கு கண்டிருந்தார். அதனால் அவ்வூரையும் அதனைச் சூழும் காவிரி யாற்றையும் அழகுறப்புனைந்து கூறுகின்றார். “சந்தன சரள சண்பக வகுள, நந்தன வனத்திடை ஞாயிறு வழங்காது, நவமணி முகிழ்த்த புதுவெயிலெறிப்ப, எண்ணருங் கோடியிருடி கணங்கட்குப், புண்ணியம் புரக்கும் பொன்னிசூழ்ந்த, திருவிடைமருது” (13) என்றும், தெருக்களின் சிறப்பை, “எழுநிலை மாடத்துச் செழுமுகி லுறங்க, அடித்துத் தட்டி எழுப்புவபோல, நுண்டுகிற்பதாகைகொண்டு கொண்டுகைப்பத், துயிலினீங்கிப் பயிலும் வீதித் திருமருது” (25) என்றும் புனைந்து கூறுவர். சீகாழிப்பதி ஊழிக்காலத்தெழுந்த பெருவெள்ளத்தில் தோணிபோல் மிதந்த செய்தியைக் குறிப்பிட்டு, அது, “காட்சியிற் பொலிந்த மாட்சிமை சிறந்த காழி” (19) எனவும், வேதம் போலும் கோபுரங்களும் சிவாகமம் போலும் மணிமேடை களும், இந்திரன் போலும் எந்திரவாவிகளும் “எங்கணும் நிறைந்த வெங்குரு” (22) எனவும், தண்ணீர்ப் பந்தரும், அன்ன சத்திரங்களும் ஆடரங்குகளும், கலைபயில் கழகங்களும், மலர் மன்றங்களும் மணிநெடு வீதியுங்கொண்டு, “பூமகளுறையுளாரமென விளங்கும், பெரும் புகழ்க் காழி” (28) எனவும், செந்தளிரும் மதுமலரும் காய்த் திரளும் செங்கனியும் தாங்கி நிற்கும் மாமரத்தை, வயிரமும் நீலமும் மரகதமும், மாணிக்கமுமாகிய மணிகள் “கிடைத்த சீர் வணிகரிற் படைத்த மாந்தருவும்” (16) எனவும்; அரமியத்தைப் புன்னைப் பொழி லெனவும், செய் குன்றைக் கொன்றைக் காவெனவும்; மயங்கி மொய்த்த வண்டினத்தின் கரு நிறத்தால் இரவு வந்ததென மயங்கி ஆடவரும் மகளிரும் கூடியின்புறுவர் (கழுமல 28) எனவும் கூறு கின்றார். திருவேகம்ப முடையார் திருவந்தாதியில் காஞ்சிமா நகரையும் அதனைச் சூழ்ந்த கச்சி நாட்டையும் பாராட்டி அந்நாட்டின் நீர் நில வளங்களைச் சிறப்புற எடுத்தோதுவர்; தேன் முரல விளங்கும் தடம் பொழிலும் (3), வன்மையிற் குன்றா மதிலும் (10), தடங் கமலம் பூங்குடை கொள்ளும் புனல் வயலும் (51), பிறவும் கொண்ட காஞ்சிமா நகர், அமராவதிக்கு நேராம் (86) என்று வியந்துரைப்பார். இவ்வாறே திருவொற்றியூர், “இரு சில மடந்தைக்கு முகமெனப் பொலிந்த ஒற்றிமா நகர்” (ஒற்றி 1) என்பது முதலாகப் பல இனிய சொற்றொடர்களால் சிறப்பித் துரைக்கின்றார்.

இனி, பட்டினத்தடிகளுடைய பாட்டினைப் படிக்குங்கால் பண்டை நூல்களின் கருத்துக்களும், சொற்களும் படிப்போருள்ளத்திற் றோன்றி அவருடைய பரந்த கல்வி நலத்தைப் புலப்படுத்துகின்றன. “எழுத்தி னுறழாது வழுத்து பொருளின்றிக், குறிப்பொடுபடாது வெறித்த புன் சொல்லே, யாயினும் பறந்த தஞ் சேயவர் சொலு மொழி, குழலினும் யாழினு மழகிதா மது போல்” (கழுமல 28) என்ற இது, “யாழொடுங் கொள்ளா பொழுதொடும் புணரா, பொருளறி வாராவாயினும் தந்தையர்க்கு, அருள் வந்தனவாற் புதல்வர் தம் மழலை” (புறம் 92) என்ற புறப்பாட்டையும், “குழலினிது யாழினிது என்பதம் மக்கள், மழலைச் சொற்கேளாதாவர்” (குறள்) என்ற திருக்குறளையும், “நெடுநீ ரென்னப்படுநெடு நாணில், தங்கிய மடியெனும் நங்குரம் சேர்த்தி” (கழுமல 16) என்பது “நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்” (குறள்) என்னும் திருக்குறளையும், “அடியொன்று பாதல மேழிற்கு மப்புறம் பட்டது இப்பால் முடியொன்று இவ்வண்டங்களெல்லாங் கடந்தது” (கோயில் 6) என்பது “பாதாள மேழினுங் கீழ்ச்சொற்கழிவு பாத மலர், போதார் புனை முடியும் எல்லாப் பொருள் முடிவே” (திருவெம்) என்ற திருவாசகத்தையும், “அறிவும் சிந்தையும்… சுவை யொளியூ றோசை நாற்றந் தோற்றம், என்றிவை முதலா விளங்குவ வெல்லாம் ஒன்ற நின்னடிக்கே ஒருங்குடன் வைத்து, நின்றனன் தமியேன்” (ஒற்றி 9) என்பது, “எண்ணமே யுடல் வாய் மூக்கொடு செவி கண் என்றிவை நின்கணே வைத்து மண்ணின்மேலடியேன் வாழ்கிலேன் கண்டாய்” (வாழா) என்ற திருவாசத்தையும் நினைப்பிக் கின்றன. இவ்வாறே “நஞ்சுமிழ் பகுவாய் வெஞ்சின மாசுணம்” (கோயில் 8) எனத் தொடங்கும் பகுதி திருஞானசம்பந்தருடைய, “செடி கொள் நோயாக்கை யம்பாம்பின் வாய்த் தேரை” (திருவாரூர்) என்ற திருப்பாட்டை நினைப்பிக்கின்றது.

இனி, புலன்களைந்தனையும் அடக்க வேண்டு மெனவுரைத்த பண்டைச் சான்றோர்கள், அவற்றால் உண்டாகும் கேட்டினை நம் பட்டினத்தடிகளைப் போல் எடுத்துக்காட்டி வற்புறுத்தியோர் எவருமில்லை. இதனை, “அழுக்குடைப் புலன் வழி இழுக்கத்தி னொழுகி, வளைவாய்த் தூண்டிலி னுள்ளிரை விழுங்கும் பன் மீன் போலவும் (சுவை), மின்னும் விளக்கத்து விட்டில் போலவும் (ஒளி), ஆசையாம் பரிசத்தி யானை போலவும் (ஊறு), ஓசையின் விளிந்த புள்ளுப் போலவும் (ஓசை), வீசிய மணத்தின் வண்டு போலவும் (நாற்றம்), உறுவதுணராச் செறுவுழிச் சேர்ந்தனை” (கோயில் 28) என வருவதனாலறியலாம்.

இறைவனுடைய ஆணைக்கு “விரையாக் கலியெனும் ஆணை” (கோயில் 4) என்று பெயர் கூறுவர்; இது திருமாணிகுழி, திருப்புறம்பயம் கல்வெட்டுக்களிலும் காணப் படுவது. தில்லைவாழ் அந்தணர்கள், சிவவெருமான் நடனம் உகந்து உலகுயிர்கள் உய்யுமாறு அதனை மேற்கொண்டா னென்ற காரணத்தால் தில்லையில் நிறைந்திருக்கின்றன (திருவேகம்ப 47) ரென்றும், அதனால் அவர்கள் தில்லைக் கூத்தப் பெருமானை “வாழ்வாகவும் தங்கள் வைப்பாகவும்” (கோயில் 34) வணங்குகின்றார்கள் என்றும் இயம்புகின்றார். அவ்வந்தணர்கள் தில்லைப் பெருமானை இன்றும் தங்கட்கு வாழ்வாகவும் வைப்பாகவும் கருதி வழிபடு கின்றனரென்பது அறிந்து இன்புறத் தகுவதொன்று.

திருவேகம்ப முடையார் திருவந்தாதியின் இறுதியில் தாம் பாடிய அந்தாதியின் செய்யுட் டொகை நூறு என்று கூறுவாராய், “தமக்கு அன்பது பெற்றுப் பதிற்றுப்பத்துப் பாடி வைத்தார் பரவித் தொழுதா மவர் பாதங்களே” என்றும், இதற்கு அவையடக்காக, “போதம் பொருளாற் பொலியாத புன்சொற் பனுவல்களும், வேதம் பொலியும் பொருளாமெனக் கொள்வர் மெய்த் தொண்டரே” (100) என்றும் கூறுவர். இவ்வாறு தொகை கூறுவதும் அவையடக்கத்தை நூலின் இறுதியிலுரைப்பதும் ஆகிய செயல் வகைகள், இவர்க்குச் சில ஆண்டுகள் முன்பிருந்த சேரமான் பெருமாளிடத்தும் காணப் படுதலின், இவை அக்காலத்து வழக்கம் போலும் என எண்ண வேண்டியிருக்கிறது.

இவர் காலத்தில் இவர்பால் தலைமைக் கணக்கராயிருந்த சேந்தனார் தில்லையிலிருந்து திருத்தொண்டு பல புரிந்து. திரு விசைப்பா, திருப்பல்லாண்டுகளைப் பாடி இறைவன் திருவடி யடைந்தனர். பத்திரகிரியார் புலம்பல் எனப்படும் பாட்டுக்கள் பல பத்திரகிரியார் பேரால் வழங்குகின்றன.

இறைவன் ஆணைக்கு விரையாக் கலியென்று பெயரென்பது முதன் முதலில் பட்டினத்துப் பிள்ளை யாரால் குறிக்கப்படுகிறது. பின்பு இரண்டாங் குலோத்துங்கன் காலத்தில் திருமாணிகுழி, திருவதிகை, திருப்புறம்பயம் முதலிய இடங்களில் உள்ள கல்வெட்டுக் களில் வழங்குவதாயிற்று. இக் கல்வெட்டுக்களில் வேந்தன் ஆணையைத் திருவாணை யெனவும்; கோயிலார் ஆணையை விரையாக் கலியாணை யெனவும்; இவ்வாணை பிழைத்தாரை முறையே ஊர்ச்சபையாரும் அடியார்களான ஆண்டார்களும் முறை செய்வரெனவும் திருமாணி குழிக் கல்வெட்டொன்றால் (s.i.i. vol. vii. 785) அறிகின்றோம். திருப்புறம்பயத்தில் “விரையாக் கலிப்பெருந்தெரு” (rajehdra i) என்றொரு தெருவுண்டென அவ்வூர்க் கல்வெட்டு (a.r. 153 of 1932) கூறுகிறது. திருவிரையாக் கலி திருக்கண்ணப்ப தேவர் ஸ்ரீபாதம் (s.i.i. vol. viii. 319) எனத் திருவதிகைக் கல்வெட்டுக் (குலோத் ii) கூறுகிறது. உத்தம சோழன் கல்வெட்டொன்று விரையாக் கலியென்றும் நிறைகோலைக் குறிக்கிறது (திருப்புறம் பயம்.)

திருஞான சம்பந்தர் முதலிய மூவரையும் இவர் முத்திறத்தடியர் என்றது கொண்டு பிற்காலக் கல்வெட்டுக்கள் “முத்திறத்தார்” (s.i.i. vol. no.225) என்றும், திருப்புறம் பயம் கல்வெட்டொன்று “முத்திறத் தடியர்” (343 of 1927) என்றும் கூறுகின்றன.

திருப்பாசுரப் பேருரை விளக்கம்


கடவுள் வாழ்த்து
    செம்பொ னம்பலத் தெம்பெரு முதல்வன்  
    விருப்பார் மலரடி பரவுதும்  
    திருப்பா சுரப்பொருள் தேர்தற் பொருட்டே.  

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய திருப்பாசுரம்

" வாழ்க அந்தணர் வானவ ரானினம்,
வீழ்க தண்புனல், வேந்தனு மோங்குக,
ஆழ்க தீய, தெல்லா மரனாமமே
சூழ்க, வையக மும்துயர் தீர்கவே"

என்பது பாசுரம். இஃது என்நுதலிற்றோ எனின், திருந்தா அமணர்தம் தீநெறிப்பட்டுத் திகைத்துநின்ற தென்னவன் தெரிந்துய்தற்பொருட்டு,

" உலகியல் வேதநூல் ஒழுக்க மென்பதும்
நிலவு மெய்ந்நெறி சிவநெறிய தென்பதும்"

உணர்த்துதல் நுதலிற்று. அஃதாவது வேதங்களிலும் ஆகமங்களிலும் விதிவிலக்குகளால் நுவலப்படும் ஒழுக்கநெறியே உலகியலில் ஒழுகுவார்க்கும் உரித்தென்றும், அந்நூல்களுள் உணர்த்தப்பெறும் பல் வகை நெறிகளுள் உண்மை நெறியாவது சிவநெறி யென்றும் கூறியவாறாம். நூல், ஆகமங்கள். வேதம் பொது; ஆகமம் சிறப்பு. பொதுவும் சிறப்புமாகிய இந்நூல்கள் விதித்தன செய்தும் விலக்கியன வொழித்தும் வாழ்வது உலகியல் என்பார், “உலகியல் வேதநூல் ஒழுக்கம் என்பது” என்றார். இவ்வொழுக்கத்தால் பெறப்படும் அறமுதல் நாற்பொருளையும் செவ்வே யறிந்து உறுதியெய்துவார்க்கு, அவரவர் தகுதிக் கேற்பப் பற்பல நெறிகள் கூறப்படுதலின், அவற்றுள் உண்மைநெறியறிந்து ஒழுகும் முன்னைத் தவ முடையார் பொருட்டு, “நிலவு மெய்ந்நெறி சிவ நெறியது” என்றும் கூறியருளினார். என்பது, என்று உண்மையறிந்த பெருமக்களால் சிறப்பித்துக் கூறப்படுவது என்றவாறு.
இத் திருப்பாசுரத்துக்குப் பேருரை வகுப்பான் ஒக்க ஆசிரியர் சேக்கிழார்சுவாமிகள் இப்பாசுரத்தின் கருத்து ஈதென்பார், “உலகியல் வேதநூல் ஒழுக்க மென்பதும் நிலவுமெய்ந்நெறி சிவநெறியதென்பதும்” என்று அருளிச்செய்தது கொண்டு இத்துணையும் கூறப்படுவதாயிற்று.

இதுகாறும் கூறியதற்கியைய, ஸ்ரீ மாதவச் சிவஞான முனிவர், “வேதம் சிவாகமம் என இரு பகுதிப்பட்டது மூன்று வருணத்திற்கும் உரிமை யாதலும் நான்கு வருணத்திற்கும் உரிமையாதலும் பற்றி என நீலகண்ட பாடியத்திற் கூறப்பட்டது. ‘வேதநுல் சைவநூல் என்றிரண்டே நூல்கள் வேறுரைக்கும் நூல் இவற்றின் விரிந்த நூல்கள், ஆதிநுல் அநாதியமலன் தருநூலிரண்டும் ஆரணநூல் பொதுசைவம் அருஞ்சிறப்பு நூலாம், நீதியினாலுலகர்க்கும் சத்திநி பாதர்க்கும் நிகழ்த்தியது நீண்மறையி னொழிபொருள் வேதாந்தத், தீதில் பொருள் கொண்டுரைக்கும் நூல் சைவம் பிறநூல் திகழ்பூர்வம் சிவகாமங்கள் சித்தாந்தமாகும்’ (சிவ. சித். 8:15) எனவும், ‘உலகியல் வேத நூல் ஒழுக்கமென்பதும், நிலவு மெய்ந்நெறி சிவநெறியதென்பதும்’ எனவும் கூறுபவாகலின் அங்ஙனம் தூலாருத்தி முறைமை பற்றிக் கூறுதலின் இருபகுதிப்பட்டது என யாம் கோடும்” என்று அறிவுறுத் தருளியிருப்பது காண்க.

இப்பாசுரத்தின் பொருள்
அந்தணர் வானவர் ஆனினம் வாழ்க - அறவோரும் தேவரும் ஆனினங்களும் இனிது வாழ்க; தண்புனல் வீழ்க - தண்ணிய மழைபொய்யாது காலந்தோறும் பொழிக; வேந்தனும் ஓங்குக - வேந்தனான பாண்டியனும் சிவஞான சிவவொழுக் கங்களால் மேம்படுக; தீயது ஆழ்க - தீமையினை யுடைத்தாகிய சமயம் ஒழிக; எல்லாம் அரன் நாமமே சூழ்க - எல்லா உயிர்களும் சிவபெருமான் திருப்பெயராகிய திருவைந்தெழுத்தினையே ஓதிச் சிறப்புறுக; வையகமும் துயர்தீர்க - நிலத்தே வாழும் மக்கள் இருமையினும் துன்பமின்றி வாழ்க என்றவாறு.

வேறு வேறு இனமாதல்பற்றித் தொகை கொடாது அந்தணர் தேவர் ஆனினம் என்றெண்ணி “வாழ்க” என்றார். காலந்தோறும் தப்பாது பெயதா லன்றித் தட்பம் உண்டாகாமையின், “தண்புனல் வீழ்க” என்றார். வேந்தனை “ஓங்குக” என்றதனால், அவன் ஓங்குதற்குரிய சிவநெறிக்கண் நில்லாமை யுணர்த்தியவாறாம். புறச்சமயம் என்றாதல், அயற்சமய மென்றாதல் கூறாது, அந்நெறி யொழுகுவாரது தீமை குறித்து, “தீயது” என்றார். எல்லாமென்றது, அத்தீநெறிக்கண் இன்றி அதனின் வேறாய நெறிநின்ற உயிர் களை யுளப்படுத்துநின்றது. திருவைந்தெழுத்துச் சிவபரம்பொருளை யுணர்த்துவதாதலின், அதனை “அரன் நாமம்” என்றும், சூழ்தல் நினைத்தலாதலின், நினைத்தும் ஓதியும் வாழ்க என்றற்கு “சூழ்க” என்றும் கூறினார். ஏகாரம், தேற்றம். வேந்தனும் வையகமும் என்புழி உம்மை எச்சப் பொருள். இனி, வேந்தனும் என்பதனைப் பிரித்து, வையகமும் என்பதனோடு இயைத்து, வேந்தனும் ஓங்குக, வையகமும் துயர்தீர்க என்று நிறுத்திப் பொருள்கூறுவாருமுண்டு. ஆயினும், அவ்வாறு பொருள்கோடல் மரபன்மையின் ஈண்டுக் கிடந்தவாறே கொள்ளப்பட்டது.

சேக்கிழார் சுவாமிகள் அருளிய பேருரை:
இனி, இத்திருப்பாசுரத்துக்குப் பேருரை விரிக்கலுற்ற ஆசிரியர் சேக்கிழார் சுவாமிகள், முதற்கண், “வாழ்க அந்தணர்,” என்று தொடங்கும் திருப்பாசு ரத்துக்குப் பொருள் கூறுவார்,

“அந்தணர் தேவரா னினங்கள் வாழ்கஎன்
றிந்தமெய்ம் மொழிப்பய னுலக மின்புறச்
சந்தவேள் விகண்முதல் சங்கரர்க் குமுன்
வந்தவர்ச் சனைவழி பாடு மன்னவாம்” (1)

என்று உரைத்தருளுகின்றார்.

உரை: அந்தணர் தேவர் ஆனினங்கள் வாழ்க என்ற இந்த மெய்ம்மொழிப் பயன் - அறவோர்களும் தேவர்களும் பசுக்கூட்டங் களும் வாழ்க என்று ஆளுடைய பிள்ளையார் அருளிச்செய்த இந்த மெய்ம்மை சேர்ந்த திருமொழியின் பயன்யாது எனின்; உலகம் இன்புற - உலகில் உள்ள உயிர்கட்கு இன்பம் மிகவும்; சங்கரர்க்கு - சிவபெரு மான் பொருட்டு; சந்த வேள்விகள் முதல் - மறையோதிச் செய்யும் வேள்வி முதலாக; முன்வந்த - முன்னை நாள் தொட்டு நடைபெற்று வந்த; அர்ச்சனை வழிபாடுமன்னவாம் - மலரிட்டு அருச்சித்தலும் பிறவுமாகிய வழிபாடுகள் நிலைபெற நிகழவுமாம் எ-று.

என்றது, ஆளுடைய பிள்ளையார் தாம் அருளிச் செய்த திருப்பாசுரத்தின்கண், வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் என்றது, உலகம் இன்புறுதற்கும் தொன்றுதொட்டுச் சிவபரம் பொருட்கு நடைபெற்று வந்த அருச்சனை முதலிய வழிபாடுகள் நிலைபெற்று நிகழ்தற்குமாம் என்று உரைத்தவாறாம்.

அந்தணர், அறவோர்; அவர் முற்றத்துறந்த முனிவராவர். திருவள்ளுவனாரும் அந்தணரென விதந்தோதப்படுபவர் இவரே யென்றற்கு “அந்தண ரென்போர் அறவோர்,” என்று தெளிவித் துள்ளார். உலகில் மக்களை அனாதியே பிணித்து நிற்கும் மலகன்மக் கட்டுக்களை அறுத்தற்குத் துணையாக வந்த உடல், கருவி, உலகு முதலியவற்றை நன்கு பயன்படுத்திக் கோடற்குரிய அறமுதல் நான்கினையும் அவற்றிற்குரிய நன்னெறியினையும் உயர்த்தியும் ஒழுகியும் காட்டும் பேரருளாளராதலின் அவ்வருணி லையைச் சுட்டி “அந்தணர்,” என்றார். அவரால் உலகம் பெறும்பயன் அவர் தாம் பெற்றபயனே; அஃதாவது சிற்றின்பத் தொடக்ககன்று பேரின்பப் பெருவாழ்வில் திளைத்தாடுவது; அதுபற்றியே ஆசிரியர் - “உலகம் இன்புற” என்றார். எனவே, அந்தணர் வாழ்க என்றது உலகம் இன்புறுதற் பொருட்டு என்ற வாறாயிற்று. இன்புறுதல், இன்பம் மிகுதல்; ‘பார்மட்டும் இன்புறூஉம் இன்சொலவர்க்கு’ (குறள். 94. பரி. உரை) என்றாற்போல.

செய்யப்படும் வேள்வியையேற்றுச் செய்வாரை அதன் பயனைத் தலைப்படுவிக்கும் தலைமை யுடைமையின் ‘தேவர் வாழ்க’ என்றார் என்றும், மறைமொழி கேட்டு மகிழ்ந்து போந்து வேள்வியில் நல்கப்படும் அவியுண்டு சிறப்பவராதலின், அவ் வேள்வியைச் “சந்த வேள்வி,” யென்று சிறப்பித்தும் சுறினார். சந்தம், மறையோசை; வடசொற் சிதைவு. தேவர்பொருட்டுச் செய்யப்படும் வேள்விகளால் மழைவளம் பெருகுமென்பதனை அடுத்த பாட்டிற் கூறுதலால், வேதவேள்வி நிலைபெறுவது குறித்துப் பிள்ளையார் தேவர் வாழ்க என்றார் என்று ஆசிரியர் உரைக்கின்றார். பிறாண்டும் ‘வேதவேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி,’ என வேதவேள்வி நிலைபெறுவதையே குறிக்கொண்டும் அதனால் விளைவது குறைவற்ற இன்பவாழ்வென்பார் பிள்ளையார். “மாதவர் களன்ன மறையாளர்கள் வளர்த்த மலிவேள்வியதனால், ஏதமதிலாத வகை இன்பமமர்கின்ற எழில் வீழிநகரே,” (திருவீழி 5) என்றும் ஓதுவது காண்க. இனி சமண சமயச் செல்வாக்கு மிகுதியால் நாட்டில் வேதவேள்வி நிலைபேறின்றிக் கெட்டிருந்தமையின் அது நிலை பெறவேண்டிச் “சந்தவேள்விகள் மன்ன” என்றா ரென்பதூஉமாம். ஆவடுதுறையில் இறைவன் அருளிய பொற்கிழியினைப் பிள்ளையார் தம் தந்தையார்க்கு கொடுத்தபோது, “ஆதிமாமறை விதியினாலாறு சூழ்வேணி, நாதனாரை முன்னாகவே புரியநல்வேள்வி, தீது நீங்கநீர் செய்யவுந் திருக்கழுமலத்து, வேத வேதியரனைவரும் செய்யவும் மிகுமால்,” (திருஞான. 429) என்று உரைப்பதும்* இக்கருத்துக்களை வலியுறுத்துவது காணலாம்.

சங்கரர் - சிவபெருமான். சங்கரன் - எவ்வுயிர்க்கும் சுகத்தைச் செய்பவன். சிவபரம் பொருட்குச் செய்யப்படும் திருப்பணிகளும் தொன்றுதொட்டுவந்த அருச்சனை முதலிய வழிபாடுகள் சிறந்தவை யாதலின், ‘முன்வந்த அருச்சனை வழிபாடு’ என்றார். பிள்ளையார் இக் கருத்தினைப் பல பதிகங்களில் “இருபொழுதும் பூவினைக் கொய்து மலரடி போற்றுதும்,” “பத்தி மலர் தூவ முத்தியாகுமே,” “கரும்பார் மலர் இண்டைகட்டி வழிபாடு செய்யுமிடம்” என்பன முதலிய பல திருவாக்குக்களால் எடுத்தோதுதலைக் காணலாம்.

திருமுழுக்குக்கு வேண்டும் நெய்யும் பாலும் தயிரும் முதலிய வைந்தும் தருவதுடன் அருச்சனைக்குரிய திருநீறும் தருவதால் ‘அருச்சனை வழிபாடு மன்ன ஆனினங்கள் வாழ்க’ என்று பிள்ளையார் அருளிச்செய்தாரென்றார்; “ஆனஞ்சாடும் முடியானும் ஐயாறுடை யடிகளே” என்று பிறாண்டும் பிள்ளையார் கூறுவதுடன், அருச்சனை வழிபாட்டிற்கு வேண்டியவற்றுள் பலவற்றை நல்கும் பண்புபற்றி, ஆவினையே பரமனாக உபசரித்து, “மணியே, ஆனே சிவனே அழுந்தையவர் எம்மானே யென மாமடம் மன்னினையே” (அழுந்தூர் 4) என்று உரைத்தருளுவது காண்க.

இதுகாறும் கூறியவாற்றால் பிள்ளையார் பாசுரத்தை ‘அந்தணர் வாழ்க’ என்றது உலகம் இன்புறுதற்கும், ‘வானவர் வாழ்க’ என்றது சந்த வேள்விகள் முதலியன மன்னுதற்கும், ‘ஆனினம் வாழ்க’ என்றுது அருச்சனை வழிபாடு மன்னுதற்கும் என்றும் தெரித்துரைத்தவாறாம். அந்தணரைப் பிரித்துத் தேவரை ஆனினத்தோடு கூட்டி “மன்னவாம்” எனப் பொதுமுடிபுதந்து உரை வழங்கியது, அத்தேவரனைவரும் ஆனினத்தின் அங்கத்தே யடங்கியிருத்தல்பற்றியென வுணர்க. “துங்கவமரர் திருமுனிவர் கணங்கள் சூழ்ந்து பிரியாத, அங்க மனைத்தும் தாமுடைய வல்லவோ நல்லானினங்கள்” (சண்டே. 19) என ஆசிரியர் தாமே உரைத்திருப்பது காண்க.

இனி நிறுத்த முறையாலே, ஆளுடைய பிள்ளையார், “வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக,” என்று மொழிந்தருளிய பாசுரப் பகுதிக்கு ஆசிரியர் பேருரை வகுத்தருளுகின்றார்.

“வேள்வி நற்பயன் வீழ்புன லாவது
நாளு மர்ச்சனை நல்லுறுப் பாதலால்;
ஆளு மன்னனை வாழ்த்திய தர்ச்சனை
மூளு மற்றிவை காக்கு முறைமையால்.” (2)

உரை: வீழ்புனலாவது - மழை காலந்தோறும் பொய்யாது பொழிவது; வேள்வி நற்பயன் - வேள்விகளால் உண்டாகும் நல்ல பயனாதலாலும்; நாளும் - நாடொறும்; அர்ச்சனை - சிவபெருமா னுக்கு நடைபெறும் அருச்சனை வழிபாட்டுக்கு; நல் உறுப்பு ஆதலால் - சிறந்த பொருளாதலாலுமாம்; ஆளும் மன்னனை வாழ்த்தியது - நாட்டையாள் கின்ற வேந்தனை ஓங்குக என வாழ்த்தியருளியது; அர்ச்சனை மூளும் - அருச்சனை வழிபாடுகள் மிகுதற்கும்; இவை காக்கும் - அவை குன்றாதபடி காத்தற்கும் உரிய; முறைமையால் - முறைமையினை யுடையனாதலால், (எ-று).

“வீழ்த தண்புனல்” என்று பிள்ளையார் அருளிய மெய்ம்மொழி விசம்பினின்று வீழும் மழையென்னும் பொருட்டென்பார், “வீழ் புனலாவது” என்றார். வீழ்க தண்புனல் என்று வாழ்த்தியருளவே மழை காலந்தவறாது பெய்யும் பெருமை பெறுவதாயிற்றென்றற்கு தொகை வாய்பாட்டால் “வீழ்புனலாவது” என்றாராயிற் றென்க. வீழ்புனல் வினைத்தொகை. இவ்வாறு மழையுளதாவது வேள்வியால் விளையும்நற்பயனென்றற்கு , “வேள்விநற்பயன்” என்றார். பிள்ளை யாரும், “அம்பரமாகி யழலுமிழ் புகையினா குதியான் மழைபொழியும், உம்பர்களேத்தும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளியதுவே” (ஓமமாம்.2) என்று ஓதியருளுதல் காண்க. வேள்வியின் நற்பயனாய நல்ல நீர் திருநீராட்டுக்கும் பூசனைப்பொருள்களைத் தூய்மை செய்தற்கும் பயன்படும் சிறப்புடைமைபற்றி, “அர்ச்சனை நல் லுறுப்” பென்றார். நீரை உறுப்பென்றதனால் ஏனைப்பூவணி, ஒப்பனை, புகையீடு,பராவல் முதலிய வழிபாடுகள் பலவும் இஃதில்வழிச் சிறவாமை பெற்றாம்; பெறவே, “வீழ்க தண்புனல்” என்ற மெய்ம்மொழி, வேள்வியால் விளையும் நற்பயன் மழை என்பதும், இறைவனை அருச்சித்து வழிபடுதற்கு இன்றியமையாதது என்பதும் உணர்த்தி நிற்றல்பெற்றாம். எல்லாவுயிர்கட்கும் இன்பம் செய்தல்பற்றி “நற்பயன்” என்றும், இன்றியமையாமையினை வற்புறுத்தற்கு “நல்லுறுப்பு”என்றும் ஆசிரியர் சிறப்பித்தாரென வறிக.

இனி, பிள்ளையார் “வேந்தனும் ஓங்குக” என்ற மெய்ம் மொழிக்குப் பொருள் கூறுவார், “ஆளும் மன்னனை வாழ்த்தியது” என்றார். பாண்டிநாட்டிற் பாண்டி வேந்தன் கேட்ப இத்திருப்பாசுரம் பிள்ளையாரால் திருவாய்மலர்ந்தருளப் பெறுதலின் பாண்டிநாட்டை யாளும் பாண்டிவேந்தன் ஓங்குக என்று தெரித்தோதிற்றிலராதலின், ஆசிரியர், “ஆளும் மன்னனை” எனத் தெரித்தோதினார். இருவழியும் பாண்டிநாடு எடுத்தோதப்படாமையின், இடத்தானும் காலத்தானும் பாண்டிவேந்தன் மேற்றாயினும், பொதுநிலையில் எல்லா நிலத்தும் எக்காலத்தும் நிலவும் வேந்தர்க்கும் அமைந்து மெய்ம்மையொளி திகழ நிற்பது உய்த்துணர்ந்து கொள்ளப்படும்.

இதுகாறுந் தான் நின்றொழுகிய அல்வழியின் நீங்கிச் சைவ மாகிய நல்வழியில் நிற்கின்றானாகலின், பாண்டிவேந்தன் நெடிது ஓங்கவே அருச்சனை வழிபாடுகள் நிலைபெற நடக்குமென்றும், நிலைபெறுமென்னாது “மூளும்” என்றதனால், உலகமெங்கும் அவ்வழிபாடு பரவி நிலைபெறுமென்றும் கூறினாரென வறிக. இவற்றின் நிலைபேறு அரசனது காவல் முறைமைக்கண் தங்குகின்ற தென்பார், “இவை காக்கும் முறைமையால்” என்றார்.

வேள்வியால் தண்மழையும், மழையால் அருச்சனை வழிபாடும் நிலவுமென்பதும், எனவே வேள்வியும் அருச்சனையும் நிலைபெறு மாறு காத்தல் அரசுமுறையென்பதும், அம்முறையினைக் குறைவின்றிச் செய்யும் வேந்தன் வாழ்தல் வேண்டுமென்பதும் பிள்ளையார் உரைத்தருளிய மெய்ம்மொழியின் கருத்தாதல் அறிகின்றாம், மற்று, அசைநிலை. வேள்வியும் மழையும் காரணமும் காரியமுமாய் நின்று, அருச்சனையாகிய பயனை முடித்தமைதலின் “வேள்விநற்பயன் வீழ்புனலாவது” என்று எடுத்துரைத்தாரேன வறிக

இனி, நிறுத்த முறையே, “ஆழ்க தீயது எல்லாம் அரன்நாமமே சூழ்க” என்ற பாசுரப் பகுதிகட்கு ஆசிரியர் பேருரை வகுத்தருளு கின்றார்.

“ஆழ்க தீயதென் றோதிற் றயல்நெறி
வீழ்க வென்றது வேறெல்லா மரன்பெயர்
சூழ்க வென்றது தொல்லுயிர் யாவையும்
வாழியஞ் செழுத் தோதி வளர்கவே.” (3)

உரை:- ஆழ்க தீயது ஒன்று ஓதிற்று - ஆழ்க தீயது எனப் பிள்ளையார் திருவாய் மலர்ந்தருளியது; அயல் நெறி வீழ்க என்றது - சைவத்துக்கு அயலதாகிய தீநெறி வீழ்க என்பது குறித்து நின்றது; வேறு எல்லாம் - அதனின் வேறாகிய நெறிக்கண் நிற்கும் உயிர்க ளெல்லாம்; அரன் பெயர் சூழ்க என்றது - சிவபரம்பொருளின் திருப்பெயராகிய திருவைந்தெழுத்தை எண்ணுக என்று ஓதியருளியது; தொல்லுயிர் யாவையும் - அனாதி நித்தியமாகிய உயிரனைத்தும்; அஞ்செழுத்து ஓதி - அத்திருவைந் தெழுத்தையோதி; வளர்க - சிவனருட் செல்வர்களாய் வளர்ந்தோங்குவார்களாக எ - று.

“ஆழ்க தீயது” என்று பிள்ளையார் அருளிச் செய்த பாசுரப் பகுதிக்குப் பொருள் இஃதென்பார், “ஆழ்க தீயதென்றோதிற்று அயல்நெறி வீழ்க என்றது”, என்றார். எனவே, தீயதென்றது அயல் நெறியை யென்பதும், அஃதாவது சைவத்துக்கு அயலதாய்க் கிளைத்திருந்த புறச்சமயநெறி யென்பதும் பெற்றாம். ஆழ்க தீயதென்பதிலுள்ள ஆழ்க என்றது, எஞ் ஞான்றும் கிளைக்காதவாறு புதைந்து கெடுக என்னும் பொருண்மைத்து என்பார். “வீழ்க என்றது” என்றார். ஆழ்ந்து நோக்கிச் செல்வதொன்றினை வீழ்க்கும் என்பது செந்தமிழ் வழக்காதல்பற்றி வீழ்க என்று பொருளுரைத்தாரென வறிக.

“கொழுங்கொடி வள்ளிக்கிழங்கு வீழ்க்கும்மே” (புற 109) என்று பிறரும் வழங்கியிருத்தல் காண்க. வீழ்க என்ற பொருளுரை ஆற்றலால் மேலெழாமையை வற்புறுத்தல் உணரப்படும். இவ்வேறு பாடு காட்டற் கன்றே, ஆசிரியர், “வீழ்க தண்புனல்” என்ற திருமொழிக்கு “வீழ்புனலாவது” என வேறு வாய் பாட்டால் பொருளுரைப்பாராயினதூஉமென வறிக.

“எல்லாம் அரன் நாமமே சூழ்க” என்றது, சைவ சமயத்தின் வளர்ச்சி குறித்து நிற்றலின், தீயதென்பது அதற்கு அயலதாகிய சமயத்தைக் குறித்து நிற்பது இனிது பெறப்படுதலின், அதனை யெடுத்தோதாது, “அயல்நெறி” என்று உரைத்தொழிந்தார். இனி, அஃது அரன் நாமத்தைச் சூழாது சைவத்துக்கு மாறாய வற்றைச் சூழ்ந்து, அதற்கிடனாகிய வைதிகநெறியை யிகழும் தீமையுடைமையின், “தீயது” என்றார்; “வைதிகத்தின் வழியொழுகாதவர், கைதவம் முடைக் காரமண்தேரர்” (ஆல. 2) என்றும், “மண்ணில் மறையோர் மருவு வைதிகமும்” (வீழி. 6) என்றதனால் வைதிக மின்னதென்றும் பிள்ளையார் ஓதுதல் காண்க. அரன் நாமத்தைச் சூழாது பிறவற்றை யவர்கள் சூழ்ந்தன ரென்றற்கு, “குண்டமணராகி யொரு கோலமிகு பீலியொடு குண்டிகைபிடித், தெண்டிசையுமில்லதொரு தெய்வ முளதென்பர்” (வீழி. 10) என்று ஓதுதலாலறியலாம். சைவம் வேத நெறிப்பட்டதென்பது, ஆசிரியர், “விண்ணின் பயனாம் பொழி மழையும் வேதப்பயனாம் சைவமும் போல்” (சண்டே. 9) என்றும், “வேதநெறி தழைத் தோங்க மிகுசைவத் துறைவிளங்க” (ஞானசம் 1) என்றும் உரைப்பது காண்க. இனி, பிள்ளையாரால் காணப்பட்ட சமணர் பலரையும் “பொல்லா மனசமணர்”(கொடுங், 10) என்றும், “நீதியறியாதார் அமண்கையர்” (புள். ஆல. 10) என்றும், “கோது சாற்றித் திரிவார மண்குண்டர்” (சோற்று. 10) என்றும், “வெஞ் சொல் தஞ்சொல்லாக்கிநின்ற வேடமிலாச் சமணூம்”(நெடுங்களம். 10) என்றும், “பறிகொள் தலையினார் அறிவதறிகிலர்” (வீழீ. மிழலை. 10) என்றும் ஓதுதலின், அவர் மேற்கொண்டொழுகிய நெறியினைப் பிள்ளையார், “தீயது” என்றாரென்றலுமொன்று.

இனி, எல்லாம் எனப் பிள்ளையார் அருளிய திருமொழிக்குப் பொருள் கூறுவார் ஆசிரியார், “வேறெல்லாம்” என்று உரைக் கின்றார். எல்லாம் என்றது சமணசமயமொழிந்த ஏனையெல்லாச் சமயங்களையும் எஞ்சாமல் தழுவி நிற்பது பெறப்படும். அவற்றைப் பிற எல்லாம் என்னாது வேறெல்லாம் என்று சிறப்பித்ததனால், சமணசமயத்தின் வேறாய், சைவத்திற் பிறவாய் நிற்கும் பல்வகை சமயங்களும் குறித்தவாறு உணரப்படும். சைவத்தைப் போல் வேதநெறியைத் தழுவி நெறியினும் முடிபிலும் வேறுபடும் பிற சமயங்கள், வேதநெறியினை அறவே மேற்கொள்ளாத சமண சமயத்திற்கு வேறாதலின் இவ்வாறு தெரித்தோதல் வேண்டிற்று. எவ்வாற்றானும் இயைபில்லதனையே வேறு என்ற சொல்லாற் சுட்டவேண்டுமென்பது ஆசிரியர்க்குக் கருத்தாதல், அப்பூதியடிகள் தாம் நிறுவிய தண்ணீர்ப் பந்தர் முதலியவற்றிற்கு இட்ட பெயரைக் கண்டு நாவரசர், “நும் பேர் எழுதாதே,வேறொருபேர் முன்னெழுத வேண்டிய காரணம் என்கொல்” என்றார்க்கு, வேறு என்ற சொல் லாற்றலால் மிக வெகுண்ட அப்பூதியார், “மன்னவன் சூழ்ச்சி திருத்தொண்டின் உறைப்பாலே, வென்றவர் தம் திருப்பேரோ வேறொரு பேர்,” என்று உரைப்பதனால் இனிது விளங்கும். தீயது எனப் பிள்ளையார் பொதுவாய்க் கூறினாரேனும், வேதவழக்கொடு படாத வேறு சமயம் பலவும் அதனால் அடக்கிக் கொள்ளப்படும். வேதத்தை ஓரோருகால் மேற்கொள்வதும் ஓரொருகால் கொள்ளா தொழிவதும் உடைய தார்க்கிகரும் பிள்ளையாரால் ஒரோவழி மறுக்கவும் படுகின்றனர்; தருக்கமரும் சமணரொடு தர்க்க சாத்திரத் தவர்சொல், “இடுக்கண் வருமொழி கேளாதீசனையே ஏத்துமின்கள்” (கோளிலி. 10) என்று ஓதுவது காண்க.

“அரன் நாமமே சூழ்க” என்ற மெய்ம்மொழியில் நாமம் என்றது “நமச்சிவாய”என்பதனை. இத்திருவைந்தெழுத்தினையே பரமனுகுத் திருநாமம் என்பது. பிள்ளையார் தாமே, “நாதன் நாமம் நமச்சிவாயவே”(பொது. நமச். 1) என்றும், திருநாவுக்கரசர், “எந்தை யார் திருநாமம் நமச்சிவாய” என்றும் ஓதியிருத்தலால் இனி துணரப்படும், சூழ்தல், நினைத்தல். உயிர்கள் யாவும் உணருந் தன்மை யுடையவை யாதலின், அவை தம் முணர்வின்கண் உணர்ந்து ஓதியுய்தற்குத் துணையாவது அத்திருநாமமே யென்பார், “அரன் நாமமே சூழ்க” என்றார். பிறாண்டும் கதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது" என்று பிள்ளையார் ஓதுவது காண்க. இப்பொருண்மொழி, உயிர்கள் உய்தி பெறுதற்
பொருட்டு வழங்கியதொரு பேரருள் நெறியாதலை வற்புறுத்துவார், ஆசிரியர், இதற்கு உரை கூறலுற்றுத் “தொல்லு யிர்யாவையும் வாழி அஞ்செழுத்தோதி வளர்கவே” என்றார். தாம் அறிவுறுக்கும் மெய்ந்நெறிச் செம்பொருளாகிய இதனையறிந்து கடைப்பிடித்தற்குரிய உயிர்கள் அனாதி நித்தியமாதல் பற்றித் “தொல்லுயிர்” என்றும், அவ்வுயிர்வகை பலவும் அடங்க, “யாவையும்” என்றும், இத்திருநாமம் நெஞ்சில் நிலவாதவழி, வாயாற் பிற பொருளில் மொழிகளைப்பேசிப் பிறப் பிறப்புக்களை எய்துவித்துக் கொள்பவாகலின் நெஞ்சின் செயலு மகப்பட, “ஓதி”யென்றும் கூறினாரென வுணர்க.

வாயால் ஓதுந்திறம் நெஞ்சம் சூழ்தலானாம் என்பதுபற்றி இவ்வாறோதின ரென்றலுமொன்று. “துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும், நெஞ்சம் நைந்து நினைமின்” என்றோதிய பிள்ளையார், காதலாகி என்ற திருப்பாட்டில் “ஓதுவார்தமை நன்னெறிக் குய்ப்பது” என்று ஓதுதலாலும், சிவஞான போதத்து ஒன்பதாம் சூத்திரத்தில் “விதியெண்ணும் அஞ்செழுத்தே” என்று ஒதிய மெய்கண்டதேவர், தாம் உரைத்தருளிய பொழிப்பின்கண் “விதிப்படி உச்சரிக்க” என்றே யுரைத்தலாலும், ஓதுதல் என்ற தொழில் நெஞ்சின் நினைத் தற்றொழிலும் அகப்படுத்து நிற்றல் துணியப்படும். இக்கருத்தே, ஈண்டுப் பிள்ளை யார் “சூழ்க” என்றதற்கு ஆசிரியர், “ஓதிவளர்க” என்றுரைத்த உரையின்கண்ணும் விளங்கி நிற்றல் தெளியப் படும். வாழி, அசைநிலை. ஆயினும் அஃது ஈண்டு, ஆசிரியர்க்கு அத்திரு வைந்தெழுத்தின் பால் உள்ள ஆராவன்பினை வெளிப்படுத்தி, அதனால் உயிர்கள் பெறக் கடவதோர் ஆக்கத்தினை உணர்த்தி நிற்கிறது. திருவைந்தெழுத்தை ஓதினோர் தாம் அரனுக்கு அடிமை யென்றுணர்ந்து அத் திருவைந்தெழுத்தாலமைந்த அவன் திருமேனியை இதயத்தே எழுந்தருள்வித்தருச்சித்தும் குண்டலியில் ஒமித்தும் புருவநடுவே கண்டு தியானித்தும் சிவபோகப் பேரின்பத்தே திளைத்தாடிச் சிறப்பரென்பது சான்றோர் முடிபொருளாதலின் “ஓதுக் என்றே ஒழியாது” “ஓதிவளர்க” என்று ஆசிரியர் உரைத் தருளுவாராயினரென வுணர்க.

இனி, அயல் நெறியின் நீங்கிச் சிவத்தைச் சாரும் உயிர்சார்தற் கேதுவாகிய சிவஞானம் விளங்கிய வழியும், பண்டைப் பயிற்சியால் அந்நெறியினை வேம்புதின்ற புழுப்போல நோக்கிற்றையே நோக்கித் துயருறுமாதலின், அது நீங்குதற்கு ஓதியுய்க என்பார், “ஓதிவளர்க” என்றாரென்றுமாம்.

“சொன்ன வையகமுந் துயர் தீர்கவே
என்னு நீர்மை யிகபரத் தில்துயர்
மன்னி வாழுல கத்தவர் மாற்றிட
முன்னர் ஞானசம் பந்தர் மொழிந்தனர்” (4)

இனி, நிறுத்தமுறையானே பிள்ளையார் மொழிந்தருளிய “வையகமுந்துயர் தீர்கவே” என்ற பாசுரப் பகுதிக்கு ஆசிரியர் சேக்கிழார் சுவாமிகள் பேருரை வகுக்கின்றார்.

உரை:- சொன்ன மேலே திருவாய் மலர்ந் தருளிய “வாழ்க அந்தணர்” என்றற் றொடக்கத்துத் திருப்பாசுரத்து; வையகமும் துயர் தீர்கவே என்னும் நீர்மை - வையகமும் துயர் தீர்கவே என்ற மெய்ம் மொழியின் கருத்து; இகபரத்தில் - இம்மை மறுமைகளில்; துயர்மன்னிவாழ் உலகத்தவர் - துன்பம் மிகுந்து வாழும் இவ்வுலகத்து மக்கள்; மாற்றிட - அத்துன்பங்களைப் போக்கி இன்பமெய்துவித்துக் கொள்ளற் பொருட்டு; முன்னர் - முதற் பாசுரத்திலேயே; ஞானசம்பந்தர் மொழிந்தனர் - எல்லாம் அரன் நாமமே சூழ்க அதனால் வையக மெல்லாம் துயர்நீங்கி வாழ்க என்று ஞானசம்பந்தப் பிள்ளையார் மொழிந்தருளினார் (எ - று).

உரைபெருகி நீட்டித்தலின், கடைப்பிடியும் இயைபும் தோன்ற, “சொன்னவையகமும் துயர் தீர்கவே,” என்றார். “அரன் நாமமே சூழ்க,” என்ற திருவுள்ளத்தால், வையகமும் வாழ்த்தப்பெறும் அருமைப்பாடு நினைந்து “சொன்ன,” எனச் சிறப்பித்தாரென்றலு மொன்று. அயல்நெறி நின்றார் வீழ்க என்னாது, அந்நெறியே வீழ்க என்ற அருட்குறிப்பு, அரன் நாமமே சூழ்ந்து வாழும் மக்களேயன்றி ஏனையோர் வாழும் நிலவுலகுக்கும் சென்று, ஆங்கு வாழ்வார் தாமும் துன்பம்நீங்கி இன்பமெய்தி வாழ்க என்று கருதுதல் தெரிந்து, நமக்கு அறிவுறுத்துவார் ஆசிரியர், துயர்மன்னிவாழ் உலகத்தவர் அத்துயர் மாற்றிவாழ்தல் வேண்டி, “வையகமும் துயர் தீர்கவே,” என்று அருளினார் என்று தெரிவிக்கின்றார்.

இனி, “வையகமும்,” என்ற சொல், ஆகு பெயரால் ஆண்டு வாழும் மக்களையே குறித்து நிற்கிற தென்பார், “உலகத்தவர்,” என்றும், இன்புறுக என்னாது “துயர் தீர்கவே,” என்றதனால், உலகத்தவர் இருமையிலும் துன்பமே நுகர்கின்றனரென்றும், உரைத்தருளுகின்றார். இம்மை மறுமையென்ற இருவகை வாழ்விலும் உலகத்தவர் துன்பம்மிக்கு வாழ்வதால், அவர் துன்பம் நீங்கியுய்தல் வேண்டு மென்ற திருவுள்ளத்தால் “துயர்தீர்க,” எனப் பிள்ளையார் அருளிச் செய்தாராயிற்று. துயர் தீர்தலாவது, அத்துன்பம் எய்தியவழி, அதற்குப் பரிதலும் பிறவும் செய்யாது அது தம்மைப்பற்றி நிற்கும் வினைமாசு கழுவவந்த மாண்பொருள் எனக்கொண்டு, துன்பம் பயக்கும் பிறவினைகளைச் செய்யாது தம்மைக் காத்துக்கொண் டொழுகலாம். அதனால், துயரொழிந்து உயிர்கட்குத் துன்பமின்றாம் என்பார், “மாற்றிட” என்றார். மாற்றுதலாவது, “இன்னாமை யின்ப மெனக்கொளி னாகுந்தன், னொன்னார் விழையும் சிறப்பு” (குறள் 630) என்றாற்போல, துன்புறுப்ப வந்தவினையை வினைமாசு கழுவவந்ததாக மாறி நினைத்தல்.

இம்மையிலும் மறுமையிலும் ஒருவன் நுகரும் இன்பங்கள் நிலைபேறின்றிக் கழிந்து மேலும் பிறப் பிறப்புக்கட்கு ஏதுவாகிய வினைகளை விளைவித்துத் துன்புறுத்தலின், “இகபரத்தில் துயர் மன்னிவாழ் உலகத்தவர்” என்றார். மறுமைக்கண் நுகரும் இன்பத் துன்பங்கட்கு நிலைக்களன் மண்ணுலகமேயாதல் பற்றி, “துயர் மன்னிவாழ் உலகத்தவர்” என்றார். மன்னுதல், மிகுதல்.

இவ்வாறு துயரிலே கிடந்து வருந்தும் உயிர்கள் அதனின் நீங்கியுய்தல் வேண்டுமென்ற அருளுள்ளத் தால் இவ்வுலகத்தவர் நினைக்கப்பட்டமையின், துயர்க்கேதுவாகிய வினைகளின் நீங்கி, இறைவன் திருவடியை வழிபட்டு வினையின் நீங்கி இன்புறுவர் என்பது கருதி, முதற்பாசுரத்தேயே பிள்ளையார் இதனை மொழிந் தருளினாரென்பார், “முன்னர் ஞானசம்பந்தர் மொழிந்தனர்,” என்றார். ஞானசம்பந்தமுடையராதலால், ஞானத்தால் சிவபரம் பொருளின் திருவருணெறி நின்றாரேயன்றி, நில்லாரும் பின்னர்த் தெளிந்து நிற்பர் என்னும் திருக்குறிப்போடு “முன்னர் மொழிந்தனர்” என்ப தொருநயம் தோன்றநிற்றல் காண்க. வினைநீக்கத்துக்கு இறைவன் திருவடி வழிபாடே ஏற்ற சாதனமாவதென்பார் பிள்ளையார்.

“அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பது நுந்தமக் கூனமன்றே
கைவினைசெய் தெம்பி ரான்கழ லேத்துதும் நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம்,”

என்றும்,

“பண்டுசெய்த வல்வினை பற்றறக் கெடும்வகை
உண்மக் குரைப்பனான் ஒல்லை நீ ரெழும்பினோ.” (கோடிகா.)

என்றும்,

“துக்கமிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்துநீர்,
தக்கதோர் நெறியினைச் சார்தல்செய்யப் போதுமின்,
அக்கணிந் தரைமிசை ஆறணிந்த சென்னிமேல்,
கொக்கிற கணிந்தவன் கோடிகாவு சேர்மினே.” (3)

என்றும் பலபடக் கூறித் தெருட்டுவது காண்க.

சேரமான் பெருமாள் பிரபந்தங்கள்


சேரமான்பெருமாள் அருளிய பிரபந்தங்களைப் பற்றிச் சில கூறுவதற்கு முன் அவர் வரலாற்றைப் பற்றிச் சிறிது கூறுவது முறையாகும். திருத்தொண்டர் புராணம் ஒரு பெரிய யாறு போல்வது; அவ்யாறு கயிலை மலையில் தோன்றி மண்ணிடையே பல நாயன்மார்களுடைய வரலாறுகளாகப் பிரிந்து சென்று சிவ பரம்பொருளின் திருவருட் கடலில் சென்று சேர்கிறது. இதன் தோற்றுவாய் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வரலாறாகும். இவ்வரலாறு திருமலையில் தோன்றித் தில்லைவாழந்தணர் புராணம் முதலாக வெள்ளானைச் சருக்க மீறாகப் பல ஆறுகளாகப் பிரிந்து சைவவுலகில் பாய்ந்து சைவப் பயிரை விளைவித்துச் சென்று திருவருட் கடலை யடைவதைக் காண்கின்றோம். இவற்றுள் ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் என்ற இருவர் புராணங்களாகிய யாறுகள் பெரியனவாகும். இவை தம்முள் கூடியும் பிரிந்தும் செல்கின்றன. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வரலாறு மூலநதியாய்ப் படர்ந்து ஏயர் கோன் கலிக்காமர், சேரமான் பெருமாள் என்ற இருவர் வரலாறு களுடன் கலந்து ஓடித் திருக்கயிலாயத்தையே அடைகிறது. கிழக்கே கடற்கரையில் தோன்றிய ஸ்ரீ சுந்தரர் வரலாறாகிய யாறு, மேற்கே சேரநாட்டில் தோன்றிய சேரமான் பெருமாள் வரலாறாகிய யாறு கிழக்கே ஓடிவந்து திருவாரூரில் தன்னோடு கலக்கக் கலந்து பாண்டிநாடெல்லாம் பாய்ந்து, சோழ நாட்டிற்கே திரும்பப் போந்து, மேற்கே சேர நாட்டிற்குச் சென்று, மீட்டும் திருவாரூருக்கு வந்து, பின்னரும் அம்மேலை நாட்டிற்கே சென்று சிவனருட் கடலில் கலந்து ஒன்றுபடுகிறது. இவ் யாறுகளின் வரவும், இவை கொணரும் வளங்களும் நம் தமிழ்நாட்டிற்கு வழங்கிய நலத்திற்கும் அதனால் சைவ மக்கள் பெற்றுள்ள மேம்பாட்டிற்கும் அளவு காண்பது முடியாத செயலாகும்.

சேரமான் பெருமாள் இற்றைக்குச் சுமார் ஆயிரத்து நூறு ஆண்டுகட்குமுன் நம் நாட்டில் இருந்து ஆட்சிபுரிந்த அரசர் பெருந்தகையாகும். இவர் பெயர் பெருமாக் கோதையென்பது. சிவ வழிபாட்டில் இவர் இளமை முதலே ஊன்றிய உறுதி படைத்தவர்; செங்கோற் பொறையன் என்னும் சேர வேந்தனுக்குப் பின் சேர நாட்டிற்கு முடியுடை மன்னரானவர்; சிவபெருமான் அன்பராகிய பாணபத்திரர் பொருட்டுத் திருமுகம் விடுக்கப்பெற்றவர்; சிவ பெருமான் திருவருள் காட்டத் திருவாரூரையடைந்து சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் கண்டு அவரோடு பிரியா நட்புற்றவர். இவர், சுந்தரமூர்த்திகளைத் தம் சேரநாட்டிற்கு அழைத்துச் சென்று பல நாள் தம்மோடு இருத்தி அவர்க்குப் பணிசெய்யும் பேறு பெற்றவர்; மறுபடியும் சுந்தரமூர்த்திகள் தாமே தம் நாட்டிற்கு வந்து பரமன் விடுத்த வெள்ளானை மீது கயிலைக்குச் செல்வதுணர்ந்து, அவர் யானைக்கு முன் தம் குதிரைமீதேறிக் காவல்புரிந்து செல்லும் கழிநலம் பெற்றவர்; கயிலையை அடைந்து சிவபெருமான் திருமுன் தாம் பாடிச் சென்ற திருவுலாப் புறத்தை அரங்கேற்றிச் சிவகணங் கட்குத் தலைவராம் செம்மை நிலை எய்தியவராவர்.

இனி, இவர் பாடியருளிய பிரபந்தங்கள் மூன்றாகும். அவை பொன்வண்ணத் தந்தாதி, திருவாரூர் மும்மணிக் கோவை, திருக்கயிலாய ஞானவுலா என்பன. இவற்றுள் பொன்வண்ணத் தந்தாதி, தில்லையில் பாடி நடராசப் பெருமான் திருப்படிக்கீழ் அரங்கேற்றம் செய்யப் பெற்றது; திருவாரூர் மும்மணிக்கோவை திருவாரூரில் சுந்தரமூர்த்திகள் கேட்க அரங்கேற்றம் செய்யப்பெற்றது. திருக்கயிலாய ஞானவுலா திருக்கயிலாயத்தே சிவபரம்பொருளின் திருமுன் அரங்கேற்றம் செய்யப்பெற்றது. இவற்றின் நலம் காண்பதற்கு முன், நாம் இவற்றைச் செய்த ஆசிரியராகிய சேரமான் பெருமாளின் மனப்பான்மையைத் தெரிந்து கொள்வது நலமாகும். சான்றோர் செய்த நலம் காணப்புகு வோர் முதற்கண் அந்நூலைச் செய்த அச்சான்றோர் மனப் பான்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று பெரியோர் கூறுவர்.

நூலாசிரியன் மனப்பான்மையை யுணர்தற்கு இருவகைக் கருவிகள் உண்டு. அவை அகக்கருவி, புறக்கருவி என்பன. அகக்கருவி அவர் செய்த நூலும் புறக்கருவி அவர் வரலாறுமாகும். நம் நாட்டுச் சான்றோர்களுள் பலருடைய மனக்கோளை யறிதற்குப் புறக்கருவி போதிய அளவு கிடைப்பதில்லை. அகக்கருவியே பெரும்பாலும் கிடைப்பது. அதனால், நாம் அச் சான்றோர்களின் மனப்பான் மைகளுள் ஒரு பகுதியே காணமுடிகிறது. மிகச் சிலர்க்கே இரு கருவிகளும் அமைந்திருக்கின்றன. அச் சிலருள் நம் சேரமான் பெருமாளது அருட்கருத்தை இருவகைக் கருவிகளையும் கொண்டு காண்பது இயல்கிறது.

புறக்கருவியாகிய இவரது வரலாறு தெய்வக் கவிநலம் சிறந்த சான்றோரால் செப்பமாக நமக்கு வழங்கப்பட்டுள்ளது. சேக்கிழார் பெருமான் இவர் வரலாற்றைச் சேரமான் பெருமான் நாயனார் புராணம், வெள்ளானைச் சருக்கம் என்ற இரண்டு பகுதிகளில் தெய்வமணக்கும் செய்யுட் களால் தீவிதாகச் செப்பியிருக் கின்றார். அச்செய்யுட்கள் நம் கருத்தை மிக விரைவில் ஈர்த்துக்கொள்ளும் சிறப்புவாய்ந்தவை யாதலின், நாம் மிக்க விழிப்போடு சென்று அவற்றின் வாயிலாகச் சேரமான் பெருமாளின் திருவுள்ளக் கிடையைத் தேர்ந்து கொள்ள வேண்டும். இன்றேல், அத் தெய்வக் கவிகளின் தீஞ்சுவை நம் கருத்தை விழுங்கிக்கொள்ளும். சேரமான் பெருமாள் அரசராதற்கு முன் திருவஞ்சைக்களத்தில் சிவபரம் பொருட்குத் தொண்டுபுரியும் திருப்பணியில் ஈடுபட்டிருக்கின்றார். அக்காலத்தே அவர் உலகியல்பும், அரசியல்பும் ஆராய்ந்து தெளிந்து சிவத்தொண்டிலேயே உறைத்து நிற்கின்றார். இதனைச் சேக்கிழார் பெருமான், “உலகின் இயல்பும் அரசியல்பும் உறுதியல்ல என உணர்வார்” என்று கூறுகின்றார். இவ்வுணர்வு நெஞ்சிலேயே நின்றொழியாது செயலின் கண்ணும் உருக்கொண்டு விளங்குகின்றது. நாடோறும் இவர், “புலரியெழுந்து புனல் மூழ்கிப் புனித வெண்ணீற்றினும் மூழ்கி”1, “திருப்பாடடும் ஒருமை நெறியின் உணர்வுவர ஓதிப் பணிந்து” ஒழுகுவது இக்கருத்தை வற்புறுத்துகின்றது. மேலும், இவர் செங்கோற் பொறையன் இறந்ததும் அரசுரிமை யெய்தியபோது, அமைச்சர் வந்து அரசேற்க வேண்டுங்கால், அரசின்
மேல் விருப்பம்வையாது, “இன்பம் பெருகும் திருத்தொண்டிற்கு இடையூறாக இவர் மொழிந்தார்” என்று நினைந்து நிற்க்கின்றார். அமைச்சர் அரசுமுறை சிவவழிபாட்டிற்கு இடையூறாகாது என்று பல படியாகக்கூறக் கேட்டு, அன்பு நிலை வழுவாமை அரசுபுரக்கும் அருள் உண்டேல்“1, இறைவனை இடைபெற்றறிடுவேன் என்று சொல்லி ஆண்டவனை வேண்டி யாரும் யாவும் கழறுவன அறியும் அறிவுவன்மைபெற்றுக் கழறிற் றறிவாராவது இவருடைய திருத் தொண்டின் உறைப்பை நன்கு வற்புறுத்துவதைக் காண்கின்றோம். இவ்வாறு இறைவன் திருவருட் குறிப்பால் அரசு முறை ஏற்கும் இவரது மனப்பண்பு, சிவநெறிக்கண் ஊன்றி நிற்கும் ஒப்புயர்வற்ற மெய்யுணர்வினை நமக்குக் காட்டுகிறது. இவரும் பின்பு தாம் பாடிய பொன்வண்ணத் தந்தாதியில்,”தனக்குன்றம் மாவையம் சங்கரன்தன் அருள் அன்றிப் பெற்றால், மனக்கென்றும் நெஞ்சிற் கடையா நினைவன்“2 என்றும்,”நானிலம் ஆளினும், நான்மறைசேர் மையார் மிடற்றான் அடிமறவா வரம் வேண்டுவனே" (98) என்றும் தம் மனக்கோளை விளங்க வுரைக்கின்றார்.

இவர் அரசேற்று உலா வரும்போது உடல் முழுவதும் உவர் மண்ணூாறி வெண்ணீறு சண்ணித்தாற்போல் ஒரு வண்ணான் தோன்றக் கண்டு “உழையிற் பொலிந்த திருக்கரத்தார் அடியார் வேடம்”3 என்று நினைந்து அவனுடைய காலில் வீழ்ந்து வணங்குவதும், அவன் மன மருண்டு, “அடியேன் அடிவண்ணான் என்று அஞ்சி நடுங்கி நின்ற போது” “அடியேன் அடிச்சேரன்” என்று மொழிந்து “திருநீற்று வார வேடம் நினைப்பித்தீர்” என்று அவனை இனிது செல்ல விடுத்தலும், இவர்க்குச் சிவபரம்பொருளின் மேல் இருந்த உண்மையன்பினை, அடியார் வழிபாட்டால் தெரிய விளக்குகின்றன. திருநீற்று வார வேடத்தில் இவர்க்கு இருக்கும் பேரன்பினை, அத்திருவந்தாதியில்,

" வருகின்ற மூப்பொடு தீப்பிணிக் கூற்றம்
வைகற்கு வைகல்;
பொருகின்ற போர்க்கென்றும் ஆற்ற கில்லேன்;
வந்துன் பொடிபூசி
அருகொன்றி நிற்கஅருளுகண்டாய்
அழல்வாய் அரவம்
வெருகொன்ற வெண்மதி செஞ்சடை
மேல்வைத்த வேதியனே“1

என்று குறிக்கின்றார்.

இவர் அரசு கட்டிலேறி அரசுபுரிந்து வருங்கால், இவர் மனம் சிவ வழிபாட்டில் சிறிதும் திரியவே இல்லை; தம் மனம், சொல், செய்கை என்ற மூன்றையும் சிவ வழிபாட்டில் ஒன்றுவித்து, நாளும் சிவபெருமான் திருவடிச் சிலம்போசை தமது சிவபூசைக்கண் தம் திருச்செவியாரக் கேட்டுச் சிறந்து வருகின்றார்; இவர் எண்ண மெல்லாம் சிவபெருமான் திருவடியிலேயே ஒன்றி நிற்கின்றன. இவற்றைச் சேக்கிழார் பெருமான், நன்கு கண்டு, நம் சேரமானுடைய அறிவு முற்றும், “நீடும் உரிமைப் பேரரசால் நிகழும் பயனும் நிறைதவமும், தேடும் பொருளும் பெருந்துணையும் தில்லைத் திருச்சிற்றம்பலத்துள், ஆடுங் கழலே எனத் தெளிந்த அறிவு”2 என்றே அறிவிக்கின்றார். நம் சேரமானும் தம் திருவந்தாதியில், இதுவே தம் கருத்து என்பாராய், “நெஞ்சமே எரியாடி எம்மான், கடல் தாயின நஞ்சம் உண்ட பிரான் கழல் சேர்தல் கண்டாய், உடல்தான் உள பயனாவ சொன்னேன் இவ்வுலகினுள்ளே”3 என்றும், “முனியே முருகலர் கொன்றையினாய், என்னை மூப் பொழித்த கனியே, கழலடியல்லால் களைகண் மற்றொன்றும் இல்லேன்”4 என்றும் கூறுகின்றார். இவ்வண்ணமே, நம்பியாரூரரை நினைப்பிக்கும் கருத்தால், பரமன் தன் திருவடிச் சிலம்போசையை ஒருநாள் இவர்க்குக் காட்டத் தாழ்த்தபோது, இவர், “அடியேன் என்னோ பிழைத்தது” என்று உரைப்பவர், “ஆசையுடம் பால் மற்றினி வேறு அடையும் இன்பம் யாது”5 என்று கூறுகின்றார்.

சிவ வழிபாடு புரியும் தமக்குச் செங்கோலரசு தந்து, திருவடிச் சிலம்போசை காட்டிப் பரமன் அருள் செய்வது தம் திருத்தொண்டில் வழாதிருத்தற்கே என்ற கருத்து இவர் கருத்தில் நிலவிய வண்ணம் இருக்கிறது. பாணபத்திரர் திருமுகப் பாசுரம் பெற்றுவந்து காட்டக் கண்டு அளவிலா. இன்பத்தில் திளைத்த இவர் தம் அரசியற் பண்டாரத்தைத் தந்து, அரசுரிமையினையும் உடன் தருகின்றார் பாணபத்திரர் அமைதிகூர்ந்து, “அரசே, அரசு கோடற்கு ஆணை யில்லை” என்று உரைக்கின்றார். இவர் உடனே, தாம் அரசேற்றது பரமன் திருவருட் குறிப்புக் கொண்டேயாதலின், அதனை ஈவதும் அக்குறிப்பினாலன்றிக் கூடாதே; தாம் செய்தது தவறாயிற்றே என்று நினைந்து அஞ்சி அடங்குவார், “இறைவராணை மறுப்பதற்கு அஞ்சி யிசைந்தார்”1 என்று சேக்கிழார் பெருமான் தெரிவிக்கின்றார். இச்செயலால் சேரமான் கருத்தில் ஒரு நல்லுணர்வு பிறந்தமை புலனாகிறது. தன்னை நினைந்து வழிபடுவார்க்கு ஆண்டவன் வேண்டுவனவற்றைத் தந்தும் உணர்த்தியும் வழுவாவாறு திருத்திப் பணிகொள்கின்றான் என்பதைத் தெளிகின்றார். “அரசு ஆணையில்லை” என்ற பாணபத்திரர் விடை, “உமக்கு அரசு நல்கிய இறைவன் அதனை நெகிழ்த்துப் பிறர்க்குக் கொடுத்துவிட ஆணையிடவில்லை” என்று இவரைத் தெருட்டுகிறது. இவர் தெளிந்து அமைகின்றார். இதனைக் குறிப்பாக இவர் தம் திருவந்தாதியில், “தாமே அருள் செய்து கொள்வர் தம் பல்பணியே”2 என்றும், “தாழ்சடையான் வஞ்சம் கடிந்து திருத்திவைத்தான் பெருவாகையே”3 என்றும், “புண்ணிய சூலத்தெம்மான், திருந்தியபோது அவன்தானே களையும் நம் தீவினையே”4 என்றும் இயம்புகின்றார்.

இனி, வண்ணான் தோற்றத்தைக் கண்டு அடியார் வேடம் எனக் கருதியதில் இருந்தே இவர்க்கு அடியார்பால் இருந்த அன்பின் மிகுதி நன்கு தெரிகிறது; ஆயினும் நம்பியாரூரர் பொருட்டுப் பரமன் சிலம்போசை தாழ்த்தது தெரிந்ததும், பரமன் அடியவர் பால் கொள்ளும் அன்பின் திறம் பெரிதும் விளங்கிவிடுகிறது. அப்போது இவர், நம்பியாரூரரைத் தாமும் கண்டு பணியவேண்டு மென்று வேட்கை கொள்கின்றார். அக் காலத்தே இவர் பரமனைப் பற்றி நினைக்கும்போது, “என்னே அடியார்க்கு இவர் அருளும் கருணை யிருந்தவாறு” என்று வியப்புண்டாகிறது. அதனால் அடியார் இணக்கம் தமக்குப் பேரின்பம் தரும் என்பது தெளிவாகிறது. அது குறித்துத் திருவாரூர் நோக்கி வருபவர் தில்லையம்பதி வந்து, சிவபரம்பொருளைக் கண்டு பேரின்பெய்துகின்றார். அங்கே தங்கியிருக்கையில் தமது நினைவு செயல் சொல் முழுதும் சிவ பெருமானிடத்தே ஒன்றி நிற்பது உணர்ந்து பொன்வண்ணத் தந்தாதியைப் பாடியருளி அரங்கேற்றுகின்றார். அதன்கண் தம் கருவி கரணங்கள் சிவமயமாதலை உணர்ந்து, எடுத்த எடுப்பிலேயே, “தன்னைக்கண்ட என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கு, பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்”1 என்று புகலுகின்றார். மேலும், தாம் நம்பியாரூரர் என்னும் பெருந் தொண்டரைக் காண வந்திருக்கும் நினைவு நூன் முடிவில் எழ, அவர் காட்சி தமக்குச் சிவபோகத்தைத் தரும் என்று இவர் துணிகின்றார். அத் துணிவை,

" மாயன்நன் மாமணி கண்டன் வளர்சடை
யாற்கடிமை
ஆயின தொண்டர் துறக்கம் பெறுவது
சொல்லுடைத்தே;
காய்சின யானை வளரும் கனக
மலையருகே
போயின காக்கையு மன்றே படைத்ததப்
பொன் வண்ணமே“2

என்று வெளிப்படுத்துகின்றார்.

இவ்வந்தாதியின்கண் இவர், தாம் இவ்வந்தாதியைப் பாடிய காரணம் தம் கருவி கரணங்களைச் சிவத்தொண்டில் ஈடுபடுத்துதல், உடல் வாழ்வின் உயர்வின்மை, தொண்டு செய்யும் முறை, தொண்டினையேற்கும் பரமனுடைய அருமை நிலை, அம்மையப் பனாய் எழுந்தருளும் திறம், அட்ட மூர்த்தியாய் அமைதல், அகப்பொருட்டுறைகள், இங்கிதப் பாட்டுக்கள், இனிய சொல்லா டல்கள், இனிய காட்சிகள் எனப் பல பொருள்கள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றின் நலம் காண்டற்கு முயல்வோமாயின், இச் சொற்பொழிவு மிக நீட்டிக்குமாதலின், வகைக்கொன்று காட்டி மேற்செல்கின்றேன்.

இவ்வந்தாதி பாடிய காரணம் கூறுவார், ஏனையோர் போல நூலின் தொடக்கத்திலோ முடிவிலோ கூறாது இருபது பாட்டுகள் பாடிய பின்பு கூறலுறுகின்றார். முதற்கண் தமக்குக் கவிபாடும் வன்மையில்லையென்றும், பிறர் உரைத்தவற்றை உரைப்பின் அறிஞர் ஏலார் என்றும், தாம் சொல்லுவன புன் சொற்களே என்றும், அவற்றை ஏற்றல் வேண்டும் என்றும் உரைப்பார்,

" தெள்ளிய மாந்தரைச் சேர்ந்திலன் தீங்கவி
 பாடலுற்றேன்,
 ஒள்ளிய சொல்லும் பொருளும் பெறேன்;
 உரைத்தாருரைத்த
 கள்ளிய புக்கால் கவிகள் ஒட்டார்; கடல்
 நஞ்சயின்றாய்;
 கொள்ளிய அல்ல கண்டாய் புன்சொ லாயினும்
 கொண்டருளே“1

என்கின்றார். இத்துணைக் குறைபாடு கூறிக்கொள்வோர் பாடாதொழியலாமே என எழும் வினாவிற்கு விடை கூறுவார் போல, “அமரர் குழாம் நின்னைப் பொருள் மொழிகளால் போற்றிப் பரவக்கண்டேன்; அக்காட்சி என்னையும் பாடுமாறு ஊக்க அடியேனும் பாடலுற்றேன்; மதிதோன்றி நிலவு பொழியு மிடத்து மின்மினியும் ஒளிவிரிகிறதன்றோ” என்பார்,

" அருளால் வருநெஞ்சம் உண்டுநின் றாயை
 அமரர்குழாம்
 பொருளார் கவிசொல்ல யானும்புன் சொற்களைப்
 புணர்க்கலுற்றேன்;
 இருள்ஆ சறஎழில் மாமதி தோன்றவும்
 என்றதென்ன
 வெருளா தெதிர்சென்று மின்மினி தானும்
 விரிகின்றதே“2

என்று விளம்புகின்றார். இவ்வாறு பாடிச்செல்பவர் எண்பது பாட்டுக்கட்குமேல் பாடிவிடுகின்றார். மேலே பாடுமிடத்துச் சிறிது சோர்வு தோன்றுகிறது. அப்போது, அவர்,

" மானிலத் தோர்கட்குத் தேவ ரனையஅத்
 தேவரெலாம்
 ஆனலத் தால்தொழும் அஞ்சடை யீச
 னவன்பெருமை
 தேனலர்த் தாமரை யோன்திரு மாலவர்
 தேர்ந்துணரார்;
 பாநலத் தால்கவி யாம்எங்ஙனே
 இனிப் பாடுவதே“1

என்று பாடுகின்றார்.

அவர் தம் கருவி கரணங்களைத் தொண்டில் ஈடுபடுத்தும் திறம் நம்மனோரை அத் தொண்டில் ஈடுபடச் செய்யும் அறவுரையாக இருக்கிறது,

" சிந்தனை செய்ய மனம்அமைத் தேன்செய்ய நாவமைத்தேன,
வந்தனை செய்யத்தலையமைத் தேன்தொழக் கையமைத்தேன்
பந்தனை செய்வதற் கன்பமைத் தேன்மெய் யரும்பவைத்தேன்
வெந்தவெண் ணீறணி யீசற் கிளையான் விதித்தனவே"

இவ்வகையில் நம்மை நோக்கி,

" கூறுமின் ஈசனைச் செய்ம்மின்குற் றேவல்
 குளிர்மின்கண்கள்
 தேறுமின் சித்தம் தெளிமின் சிவனைச்
 செறுமின் செற்றம்
 ஆறுமின் வேட்கை யறுமின் அவலம்
 இவைநெறியா
 ஏறுமின் வானத் திருமின் விருந்தாயும்
 இமையவர்க்கே“2

என்று இசைக்கின்றார்.

உடல் வாழ்வின் உயர்வின்மையைப் பலவகையால் தெளிவிக் கின்றார்.

இவ்வகையில் ஏனைப் பெரியோர்களைப் போலத்தான் இவரும் பல பாட்டுக்களில் விரித்தோதுகின்றார். உடல் வாழ்வு நீடித்ததன்று; பலவகையாலும் தேய்ந்து தேய்ந்து இறுவது என்பார்,

" வேண்டிய நாட்களிற் பாதியும் கங்குல்
 மிகஅவற்றுள்,
 ஈண்டிய வெந்நோய் முதலது பிள்ளைமை
 மேலதுமூப்பு
ஆண்டின் அச்சம் வெகுளி அவாஅழுக்
 காறு இங்ஙனே
 மாண்டன; சேர்தும் வளர்புன் சடை
 முக்கண் மாயனையே“1

என்று கூறுகின்றார். ஏனையோர், “வேத நூற் பிராயம் நூறு மனிதர்தாம் புகுவ ரேனும்”2 என வயதெல்லையை நூறாகக் கூற, இவர், அதனைக் குறியாது, “வேண்டிய நாட்கள்” என் பது இவரது உலகியலுணர்வு மிகுதியை விளங்கக் காட்டுகிறது.

இனி, உடல் வாழ்வின் புன்மை உணர்ந்த வழி ஒருவர்க்கு இறைவன் திருவருளில் ஒன்றி நிற்கும் பெருவாழ்வின் கண் ஆர்வ முண்டாவது இயற்கையே. அதனைப் பெறுதற்கு இறைவனை வழிபடுவதன்றிப் பிறிதில்லை. அவ்வழிபாட்டின் திறம் கூறலுற்ற நம் சேரமான் பெருமாள்,

" பணிபதம்; பாடிசை; ஆடிசை யாக;
 பனிமலரால்
 அணி; பதங்கன் பற்கொள் அப்பனை; அத்தவற்
 கே அடிமை
 துணி; பதம் காமுறு; தோலொடு நீறுஉடல்
 தூர்த்துநல்ல
 தணிபதம் காட்டிடும்; சஞ்சல நீஎன்
 தனிநெஞ்சமே“3

என்றும்,
" நெஞ்சம் தளிர்விடக் கண்ணீர் ததும்ப முகமலர,
அஞ்செங் காதலம் கூம்ப அட்டாங்கம் அடிபணிந்து
தம்சொல் மலரால் அணிய வல்லோர்"

என்றும், தொழுதல், பணிதல், நினைதல், அருச்சித்தல் முதலியவற்றின் நலம் கூறுதலுற்று,

“உலகா ளுறுவீர் தொழுமின்; விண்ணாள்வீர்
 பணிமின் நித்தம்;
 பலகா முறுவீர் நினைமின்; பரமனொடு
 ஒன்றலுற்றீர்
 நலகா மலரால் அருச்சிமின்; நாள்நர
 கத்துநிற்கும்
 அலகா முறுவீர் அரனடி யாரை
 அலைமின்களே”1

என்றும் விரியக் கூறுகின்றார். இந்நெறிக்கண் இவர் கூறுவன பலவாதலின் இம்மட்டில் அமைகின்றோம்.

இவ்வாறு நாம் தொண்டுபுரிந்தவழி அதனையேற்று நிற்கும் பரமனுடைய அருமையை இனிது ஓதுகின்றார். அடியார் ஏத்து வதைப் பரமன் மிக விரும்புவன் என்பதை, “ஏத்துக் கொலாம் இவர் ஆதரிக்கின்றது”2 என்று கூறுவதை நோக்கப் பரமன் மிக எளியன் என்று நாம் கருதலாம். ஆனால், அதனை மாற்றி அப்பரமன் மிக அரியவர்; அவர் தம்மை நினைப்பவர் நெஞ்சினும் கண்ணினும் நிலவுகின்றார்; ஆயினும் அவர் தன்மை நம்மனோர்க்கு உணர்வரிது என்பராய் “திரிதவர் கண்ணுள்ளும் உள்ளத்தினுள்ளும் திரிதரினும், அரிதவர் தன்மை அறிவிப்பது”3 என்று அறிவிக்கின்றார். மேலும் அவ்வருமைப் பாட்டிற்குச் சான்று கூறுவார் அப்பரமன் அட்ட மூர்த்தியாய் நிற்பவர் என்று அருளுகின்றார். “அலையார் புனல் அனல் ஞாயிறு அவனி மதியம் விண்கால், தொலையா உயிருடம்பு ஆகிய சோதி”4 என்றும், “பாதம் புவனி சுடர் நயனம் பவனம் உயிர்ப்பு, ஓங்கு ஓதம் உடுக்கை உயர்வான் முடி விசும்பே உடம்பு, வேதம் முகம் திசை தோள்மிகு பன்மொழி கீதம்”1 என்றும், இவரது இந் நிலையை யுணர்ந்து பரவுபவர் சிவலோகம் பெறுவர் என்று கூறலுற்று, “தவனே உலகுக்குத் தானே முதல் தான் படைத்த எல்லாம், சிவனே முழுதும் என்பார் சிவலோகம் பெறுவர்”2 என்று உரைக்கின்றார்.

இப்பரமே மும்மூர்த்திகளாயும் அம்மையப்பனாயும் விளங்கு கின்றார் என்பதை,

“வீரன் அயன்அரி வெற்பலர் நீர்எரி பொன்னெழிலார்
காரொண் கடுக்கை கமலம் துழாய்விடை தொல்பறவை
பேரொண் பதி, நிறம் தார்இவர் ஊர்திவெவ் வேறென்பரால்
பாரும் அறியா வகையெங்கள் ஈசர் பரிசுகளே.

என்றும்,

" வலந்தான் கழல்இடம் பாடகம்; பாம்பு
 வலம்இடமே
 கலந்தான்; வலம்நீறு இடம்சாந்து; எரிவலம்
 பந்து இடம்; என்பு
 அலந்தார் வலம்இடம் ஆடகம்; வேல்வலம்
 ஆழியிடம்;
 சலம்தாழ் சடைவலம் தண்ணங் குடில்இடம்
 சங்காற்கே“3

என்று கூறியருளுகின்றார். பிற நலங்களைப் பின்னர்க் காண்குதும்.

இனி இப்பரமன் அடியார்க்கு அருளும் திறத்தை, “உற்றடியார் உலகாள ஓர் ஊணும் உறக்கமின்றிப் பெற்றமதாவதொன் றேறும் பிரான்”4 என்றும், “கள்ளவளாகம் கடிந்து அடிமைப்படக் கற்றவர்தம் உள்ளவளாகத் துறுகின்ற உத்தமன்”5 என்றும்,

" சந்தித்த கூற்றுக்குக் கூற்றாம் பிணிக்குத்
 தணிமருந்தாம்
 சிந்திக்கிற் சிந்தா மணியாகித் தித்தித்
 தமுதமுமாம்
 வந்திக்கில் வந்தென்னை மால்செய்யும் வானோர்
 வணங்கநின்ற
 அந்திக்கண் ணாடியினான் அடியார்களுக்
 காவனவே“1

என்றும் எடுத்தோதுகின்றார்.

இவ்வியல்பினனாதலின், இப்பரமன்பால் பகைப் பொருள் அனைத்தும் பகை நீங்கி ஒன்றி நின்று நிலவுவதொன்றே அவனது பரமாந்தன்மையை உணர்த்துகின்றதென்பார்,

" ஆர்க்கின்ற நீரும் அனலும், மதியுமை
 வாயரவும்
 ஓர்க்கின்ற யோரும் உமையும், உருவும்
 அருவும், வென்றி
 பார்க்கின்ற வேங்கையும் மானும், பகலும்
 இரவுமெல்லாம்
 கார்க்கொன்றை மாலையி னார்க்கு உடனாகிக்
 கலந்தனவே“2

என்றும் கூறுகிறார். இவ்வடிவத்தே உலகு முழுதும் ஒன்றி நிற்கிறதென்றற்கு.

" இருளார் மிடற்றால், இராப்பகல் தன்னால்,
 இரைமரையால்
 பொருளால் கமழ்கொன்றை யால்முல்லை புற்றர
 வாடுதலால்
 தெருளார் மதிவிசும்பால் பௌவம் தெண்புனல்
 தாங்குதலால்
 அருளால் பலபல வண்ணமு மால்அரன்
 ஆயினனே“3

என்று இசைத்தருளுகின்றார். இவ்வியல்பால், “ஈசனோ டாயினும் ஆசையறுமின்”4 என்ற கொள்கை மிக்க துறவிகளும் இவர்பால் தீரா வேட்கையராகின்றனர் என்பார் “தொடங்கிய வாழ்க்கையை வாளா துறப்பர் துறந்தவரே, அடங்கிய வேட்கை அரன்பால் இலர்”1 என்று அறிவிக்கின்றார்.

இவ்வகைக் கருத்துக்கள் நிரம்பிய இப் பொன்வண்ணத் தந்தாதியைத் தில்லையில் அரங்கேற்றி உள்ளம் சிறந்த இவர், திருவாரூர் சென்று நம்பியாரூரரைக் கண்டு அவர் நட்புற்று உள்ளம் சிறக்கின்றார்.

சேரமான் திருவாரூரையடைந்து நம்பியாரூரைக் கண்ட போது, ஆராக் காதலுற்று அவர் அடித்தாமரையில் முதற்கண் வீழ்ந்து வணங்குகின்றார். இதனைச் சேக்கிழார் பெருமான் “சந்த விரைத்தார் வன்றொண்டர் முன்பு விருப்பினுடன் தாழ்ந்தார்”2 என்றும், “முன்பு பணிந்த பெருமானைத் தாமும் பணிந்து” வரவேற்றனர் என்றும் கூறுகின்றார். இவர் இருவர்க்கும் உண்டான நட்பின் நலத்தைச் சேக்கிழார் பெருமான் நிரம்ப எடுத்து இயம்புகின்றார். இருவரும் ஒருவரையொருவர் பணிந்து தழுவிக்கொள்ளும் செயலை,

" முன்புபணிந்த பெருமாளைத் தாமும்
 பணிந்து முகந்தெடுத்தே
 அன்புபெருகத் தழுவவிரைந்து அவரும்
 ஆர்வத் தொடுதழுவ
 இன்பவெள்ளத் திடைநின்றும் ஏற
 மாட்டா தலைவன்போல்
 என்பும்உருக உயிரொன்றி உடம்பு
 மொன்றாம் எனஇசைந்தார்“3

என்றும், “ஒருவர் ஒருவரிற் கலந்த உணர்வால் இன்ப மொழியுரைத்து” மகிழ்ந்தார் என்றும் கூறுகின்றார். இவ்வாறே பின்பு நம்பியாரூரர் இறுதியில் சேரநாட்டிற்குச் சென்று சேரமானைக் கண்டபோதும், இருவரும் பணிந்த செயலை, “சேரர் பெருமான் எதிர்சென்று, தலைநாட்கமலப் போதனைய சரணம் பணியத் தாவல் பல, கலைநாட்டமுத ஆரூரர் தாமும் தொழுது கலந்தனரால்”4 என்றும், “சிந்தை மகிழும் சேரலனார் திருவாரூரர் எனு மிவர்கள், தந்த மணிமேனிகள் வேறாம் எனினும் ஒன்றாம் தன்மையராய், முந்த எழுங் காதலின் தொழுது”1 தழுவிக்கொண்டனரென்றும், “ஒருவர் ஒருவரிற் கலந்து குறைபாடின்றி உயர் காதல் இருவர்”2 என்றும் உரைக்கின்றார்.

இவ்வாறு நம்பியாரூரருடன் உயர் காதல் நண்பராகிய சேரமான் அவருடன் திருவாரூர்ப் பரமனைக் கண்டு பணிந்து வழிபட்டு அவர்பேரில் தாம் பாடிய திரு மும்மணிக் கோவையை, அந்நம்பியார் இனிது கேட்க அரங்கேற்றம் செய்கின்றார். அக்காலத்தே அதன் நன்மை இனிது விளங்க நம்பியாரூரரை அரசர் கேட்பித்தார் என்று கூறும் சேக்கிழார், “திரு மும்மணிக்கோவை நாவலுர் தம்முன்பு நன்மை விளங்கக் கேட்பித்தார்”3 என்றே கூறுகின்றார்.

இப்போது, நாம் இத்திரு மும்மணிக்கோவையின் நலம் சிறிது காணலாம். இதன்கண் முப்பது திருப்பாட்டுக்கள் உண்டு. இவையாவும் அகப்பொருள் துறையிலேயே அமைந்திருக்கின்றன. திருவந்தாதியிலும் ஐம்பது பாட்டுக்கள் இவ்வகத்துறையே பொருளாகக் கொண்டுள்ளன. இவ்வகத்துறையில், அகனைந் திணைக்குரியன சிலவும், கடவுள் மாட்டு மானிடப்பெண்டிர் நயந்த பக்கத்தன பலவுமாகும் திருவந்தாதியில் வருவன பலவும் அகனைந் திணையல்லாதவை யாதலின், அவற்றை முதற்கண் சிறிது காண்போம்.

ஒருத்தி சிவபெருமானைக் கண்டு அவன்பால் கருத்திழந்து, உடல் மெலிந்து வளைசோர்ந்து வருந்துகின்றாள். அவள் தோழி போந்து “நீ இவ்வாறு வளையும் கலையும் இழந்து நிற்பதால் பிறர் இகழும் பழியுண்டாகும்; நம் பெண்மைக்குரிய சிறப்பும் போம்” என்று கழறிக் கூறுகின்றாள்,

“பாதம் புவனி, சுடர்நயனம், பவனம் உயிர்ப்பு, ஒங்கு
ஓதம் உடுக்கை, உயர்வான் முடி, விசும் பேஉடம்பு
வேதம் முகம், திசை தோள், மிகு பன்மொழி கீதம், என்ன
போதம் இவற்கோ மணிநிறம் தோற்பது? பூங்கொடியே”4

என்று உரைக்கின்றாள். தன்னால் பழியாவதும், பெண்மை நலம் போவதும் ஆகூழும் போகூழுமாம் என்ற கருத்தை எடுத்தோதி,

" ஆவன யாரே யழிக்கவல் லார் அமை யாவுலகில்
போவன யாரே பொதியகிற் பார் புரம் மூன்றெரித்த
தேவனைத் தில்லைச் சிவனைத் திருந்தடி கைதொழுது
தீவினை யேன் இழந் தேன்கலை யோடு செறிவளையே“1

என்று விடையிறுக்கின்றாள். இப் பகல் நிகழ்ச்சி அவள் நெஞ்சை யலைப்ப, இரவில் சிறிது கண்ணயர்ந்து கனவு காண்கிறாள். அக்கனவில் பரமன் பலி வேண்டி வரத், தான் பலியிட்டு மேனி வேறுபடுவ
தாகவும், தாயர் தடுப்பதாகவும், தன்னைப் பரமன் அப்போது வாவென அழைப்பதாகவும் கண்டு கண்விழித்து வருந்துகின்றாள். இச் செயலைச் சேரமான்,

" ஈசனைக் காணப் பலிகொடு செல்ல எற்றே இவளோர்
பேயனைக் காமுறு பிச்சி கொலாம் என்று பேதையர்முன்
தாய்எனை ஈர்ப்பத் தமியேன் தளரஅத் தாழ்சடையோன்
வாஎனைப் புல்லஎன் றான்இமை விண்டன வாட்கண்களே“2

என்று பாடிக் காட்டுகின்றார்.

இங்ஙனம் கனாக்கண்டு வருந்தும் இவள் மெலிவு கண்ட அன்னை மிகவும் மனம் நொந்து மகளைப்பார்த்து,

" செப்பன கொங்கைக்குத் தேமலர்க்
 கொன்றை நிறம்பணித்தான்;
 மைப்புரை கண்ணுக்கு வார்புனற்
 கங்கைவைத் தான்; மனத்துக்கு
 ஒப்பன இல்லா ஒளிகிளர் உன்மத்த
 மும்அமைத்தான்;
 அப்பனை, அம்மனை! நீஎன் பெறாது
 நின்று ஆர்க்கின்றதே“3

என்று சொல்லி அவலிக்கின்றாள். இம்மகள் பின்பு தன் தோழியை நோக்கிப் பரமன்பால் தூதுவிடக் கருதி, “தோழி, நீ பரமனிடம் சென்று என் மனநிலை மொழிந்து அவன் கூறும் மொழி கேட்டு வருதல்வேண்டும்” என்பாள்,

" ஓது அவன்நாமம், உரை அவன் பல்குணம்,
 உன்னைவிட்டேன்,
 போது அவன்பின்னே, பொருந்து அவன்வாழ்க்கை
 திருந்தச்சென்று,
 மாதவ மாகிடு, மாதவன் மாவளர்
 புன்சடையான்
 யாதவன் சொன்னான் அதுகொண்
 டொழியினி ஆரணங்கே“1

என்று மொழிந்து விடுகின்றாள்.

இஃது இங்ஙனமாக, மகளிர் இருவர் ஒரு சொல்லாடல் நிகழ்த்துகின்றார்கள். ஒருத்தி, “இறைவன் முதற்கண் செற்றது காமனையே” என்கின்றாள்; மற்றவள் “காலனையே முதற்கண் செற்றார்” என்று கலாய்க்கின்றாள். அவர்க்கு நடுவாக நின்ற ஒருத்தி நேரே பரமனையடைந்து உண்மை துணிய முயன்று, அவன் ஒன்றும் உரையாமை கண்டு உரைப்பாள்,

" காமனை முன்செற்ற தென்றாள் அவள்,
 இவள் காலன் என்னும்
 தாமநன் மார்பனை முன்செற்ற தென்று
 தன் கையெறிந்தாள்;
 நாம்முனம் செற்றதன்று யாரைஎன் றேற்கு
 இரு வர்க்குமஞ்சி
 ஆமெனக் கிற்றிலர் அன்றெனக் கிற்றிலர்
 அந்தணரே“

என்றுரைத்து மகிழ்கின்றாள். இப்படியே, பரமனுக்குப் பலியிடச் சென்ற பெண்ணொருத்தி நிகழ்த்திய சொல்லாட்டினை நம் சேரமான்,

" அந்தண ராம்இவர் ஆரூர் உறைவதென்
 றேன், அதுவே,
 சந்தணை தோளி! என்றார்; தலையாய
 சலவர் என்றேன்;
 பந்தணை கையாய்! அதுவுமுண் டென்றார்;
 உமைஅறியக்
 கொந்தiண தாரீர்! உரைமின்என் றேன்;
 துடி கொட்டினரே“

என்று இன்புறப் பாடி நம்மை மகிழ்விக்கின்றார். இத் திருவந்தாதிக்கண் இத்தகைய பாட்டுக்கள் பலவுள்ளன.

இனி, திருவாரூர் மும்மணிக் கோவைக்கண் வரும் முப்பது திருப்பாட்டுக்களும் அகனைந்திணைக்குரிய பாட்டுக்களாகவே உள்ளன. களவுவழி யொழுகிக் கற்புக்கடம் பூண்டு நிற்கும் தலை மக்கள் வாழ்வில் தலைவன்பால் பிரிவு நிகழ்கிறது; வினையே ஆடவர்க்கு உயிராதலின் அவன் பிரிவதும் அறமாகின்றது; பிரிந்து செல்பவன், தான் கார்ப்பருவ வரவில் வருவதாகக் கூறித் தலை மகளைத் தேற்றிச் செல்கின்றான். அவளும் அவன் தெளித்த சொல் தேறியிருக்கின்றாள். ஆயினும் பிரிவுத் துன்பம் அவளை மட்டில் வருத்தாமல் இல்லை அவள் வருந்துவதும் தோழி தேற்றத் தேறுவதுமாக இருந்து வருகின்றாள். தலைவன் குறித்த கார்ப்பருவம் வருகிறது; அவன் வருகின்றானில்லை. அதனால் தோழி, தலைவி ஆற்றாளாவள் என்று எண்ணி,

" கண்ணார் நுதலெந்தை காமரு கண்டம்
 என இருண்ட
 விண்ணால் உருமொடு மேலது, கீழது
 கொண்டல் விண்ட
 மண்ணார் மலைமேல் இளமயி லால்மட
 மான் அனைய
 பெண்ணா மிவள்இனி என்னாய்க் கழியும்
 பிரிந்துறைவே“1

என்று சொல்லி வருந்துகின்றாள். பின்பு தலைமகன் போந்து கூடி இன்புறுகின்றான். அவன் மறுபடியும் பரத்தையிற் பிரிந் தொழுகுகின்றான். அத்தகையோன் ஒருநாள் தன் மனைக்கு வந்தபோது தோழி முதலாயினார் வாயில் மறுக்க ஆற்றாமையே வாயிலாக வந்தடைகின்றான். அடைந்தவன் தலைவியைத் தீண்டி னானாக, அவள் புலந்து,

" பொய்யார் தொழலும் அருளும் இறைகண்டம்
 போல்இருண்ட
 மையார் தடங்கண் மடந்தையர் கேட்கின்
 பொல்லாது, வந்துன்
 கையால் அடிதொடல், செல்லஎற் புல்லல்,
 கலைஅலையல்;
 ஐயா, இவைநன்கு கற்றாய்; பெரிதும்
 அழகியவே“1

என்று உரைக்கின்றாள். பரத்தையே உயர்த்துக் கூறும் கருத்தால், அவர்களைப் “பொய்யார் தொழலும் அருளும் இறை கண்டம்போல இருண்ட மையார் பூணாது பொய்யன்பு பூண்டு பரவினும் பரமன் அருள் புரிவதுபோல, பொய்யே ஒழுகினும் அம்மகளிர் நின்னை யேற்பர்; யாம் ஏலேம்; அவர் பாலே செல்க என்பது கருத்து.”கற்பு வழிப்பட்டவள் பரத்தையேத்தினும் உள்ளத்தூடல் உண்டு" என்பது தொல்காப்பியம். இவ்வாறு தலைவி தலைவனைப் புலந்து பரத்தை யரை உயர்த்திக் கூறியது பரத்தைக்கு எட்டுகிறது. அவள் தலைவியைப் புறனுரைக்கின்றாள். அச்செய்தி தலைவிக்குத் தெரிகிறது. தலைவி வெகுண்டு, பரத்தையர் ஒருவரல்லர், பலர் உளராயினும் தலைவன் எனக்கே உரியனாவான்; எப்படியெனின், ஒரு குளத்தில் பல்லாயிரம் ஆம்பல்கள் நெருங்க மலர்ந்திருப்பினும், தாமரை ஒன்று உளதாகிய வழி, அக்குளம் தாமரைக்குளம் என்றே உரைக்கப்படும், என்ற கருத்துத் தோன்றத் தன் தோழியை நோக்கி, பரத்தைக்குப் பாங்காயினார் கேட்ப,

" திறமலி இன்மொழிச் செந்துவர் வாயினை
 எங்கையர்க்கே
 மறமலி வேலோன் அருளுக; வார்சடை
 யான்கடவூர்த்
 துறைமலி ஆம்பல் பல்லாயிரத்துத்
 தமியேஎழினும்
 நறைமலி தாமரை தன்னதன் றோசெல்லும்
 நற்கயமே“1

என்று நவிலுகின்றாள்.

இத்திரு மும்மணிக்கோவைக் கண் வரும் திருப்பாட்டுக்கள் பலவும் சங்கத் தொகை நூற்களிற் காணப்படும் கருத்துக்கள் பலவற்ரை உட்கொண்டு நிற்கின்றன.

" மனையுறை குருவி வளைவாய்ச் சேவல்
சினைமுதிர் பேடை செவ்வி நோக்கி
ஈனில் இழைக்க வேண்டி ஆனா
அன்பு பொறைகூர மேன்மேல் முயங்கிக்
கண்ணுடைக் கரும்பின் நுண்தோடு கவரும்“2

என்ற இம் மும்மணிக்கோவைப் பாட்டுக் குறுந்தொகையில் வரும்.

" உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்,
சூல்முதிர் பேடைக்கு ஈனில் இழைஇயர்
தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்
நாறா வெண்பூக் கொழுதும்“3

என்ற பாட்டை நினைப்பிக்கின்றது. இவ்வாறே,

" பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி
நட்டகல்லும் மூதூர் நத்தமும்,
பான்முரம் பதரும் அல்லது படுமழை,
வான்முறை யறியா வல்வெயிற் கானத்து“4

என்பது அகநானூற்றையும்,5

" புலமயிற் சாயல் பூங்குழல் மடந்தை
மனைமலி செல்வம் மகிழாளாகி
ஏதிலொருவன் காதலனாக"

என்பது நற்றிணையையும்1 பிற பிறவற்றையும் நினைப்பிக் கின்றன.

இன்ன நலம் சான்ற திரு மும்மணிக்கோவையைப் பாடி, “நன்மை விளங்க”, நம்பியாரூரரைக் கேட்பித்த சேரமான் அவருடன் பல தலங்களையும் காணச் செல்கின்றார் செல்பவர் திருமறைக் காட்டில், நம்பியாரூர் “யாழைப் பழித்து” என்னும் திருப்பதிகம் பாட, நம் சேரமான் திருவந்தாதியில், மறைக்காட் டீசனைப் பாடியுள்ள, “துயரும் தொழும் அழும் சோரும் துகிலும் கலையும் செல்லப், பெயரும் பிதற்றும் நகும் வெய்துயிர்க்கும் பெரும் பிணி கூர்ந்து, அயரும் அமர்விக்கும் மூரி நிமிர்க்கும் அந்தோ இங்ஙனே, மயரும் மறைக்காட்டு இறைக்காட்டகப்பட்ட வாணுதலே”2 என்ற திருப்பாட்டை யோதுகின்றார். இதனைச் சேக்கிழார் பெருமான், “அருட்சேரர், சிறந்த அந்தாதியில் சிறப்பித்தனவே ஓதித் திளைத் தெழுந்தார்”3 என்று பாடுகின்றார்.

பின்னர் இவர் நம்பியாரூரருடன் மதுரைக்குச் சென்று மதுரைச் சொக்கேசனைக் கண்டு பரவுமிடத்து, தமக்கு அப்பரமன் விடுத்த திருமுகப் பாசுரத்தால் செய்த திருவருளை வியந்து, “அடியேனைப் பொருளாக அளித்த திருமுகக் கருணை, முடிவேது என்றறிந்திலேன்”4 என்று சொல்லி மொழி தடுமாறி மனங்குழை கின்றார். இவ்வாறு நம்பியாரூரர் தோழமை பெற்றுச் சிறக்கும் சேர வேந்தர் அவருடனே திருவாரூர்க்கே திரும்ப வந்து சின்னாளிருந்து, அவரையும் உடனழைத்துக் கொண்டு தம் சேரநாட்டிற்குச் செல்கின்றார். வழியில் திருவையாற்றுக்குச் செல்லாவகையில் காவிரி பெருகக் கண்டு நம்பியாரூரரை வேண்ட, அவர் திருப்பதிகம் பாடியதும் காவிரியில் வழியுண்டாகிறது. அதுகண்டு வியந்த வேந்தர் நம்பியாரூரரை அடிபணிந்து போற்றுகின்றார். நம்பியாரூரர் இறைவன் சேரமானுக்குத் திருமுகம் விடுத்தும், திருச்சிலம்போசை காட்டியும் சிறப்பிக்கும் திறத்தை நன்கறிந்தவராதலின், காவிரி வழிவிட்டதும் அவர் பொருட்டே என்பது உணர்ந்து, அவரடியில் தாம் வீழ்ந்து வணங்குகின்றார். இதனை “நம்பி பாதம் சேரமான் பெருமாள் பணிய நாவலூர்ச் செம்பொன் முந்நூல் மணிமார்பர் சேரர் பெருமாள் எதிர்வணங்கி, உமபர் நாதர் உமக்களித்ததன்றோ”1 என்று உரைத்து மகிழந்தாரென்று சேக்கிழார் பெருமான் செப்புகின்றார்.

இவ்வாறு ஐயாறப்பன் திருக்காட்சிபெற்றுச் சிறப்பெய்திய இருவரும் பல தலங்களையும் தரிசித்துக் கொண்டு சென்று சேரநாடு அடைந்து அந்நாட்டவர் எதிர்கொள்ளச் சேரவேந்தர் திருமனையை அடைகின்றனர். அங்கே பின்னர் அவருடன் தங்கிய நம்பியாரூரர், திருவாரூரில், வேந்தருடன் கூடி, நிலைச்செண்டு வீசல், பரிச்செண்டு வீசுதல், தகர்ப் பாய்ச்சல் காண்டல், கோழிப்போர் பார்த்தல் முதலியவற்றால் மகிழ்ச்சியுற்றதுபோல,

" செண்டாடுந் தொழில்மகிழ்வும்
சிறுசோற்றுப் பெருஞ்சிறப்பும்
வண்டாடு மலர்வாவி மருவியநீர் விளையாட்டும்
தண்டா மும்மத கும்பத் தடமலைப்போர் சலமற்போர்“2

முதலியன கண்டு மகிழ்கின்றார். பின்பு நம்பியாரூரர் சேரமான் பால் விடைபெற்றுத் திருவாரூர்க்குப் புறப்படுங்கால், அவ்வேந்தர் பெருமான், “இன்றுமது பிரிவாற்றேன், என் செய்கேன்” என்று சொல்ல, நம்பியாரூரர், பண்டு சிவனருளியதுபோல், “ஒன்றும் நீர் வருந்தாதே உமது பதியின்கண் இருந்து, அன்றினார் முனை முருக்கி அரசாளும்” என்று மொழிகின்றார். அக்காலத்து, அவர் தமக்கு அரசியலின்பால் பற்றின்மையும், அதனைப் புரிவது ஆண்டவன் திருவருள் வழி நிற்பதென்று கருதியிருந்தமையும் புலப்பட, “பாரோடு விசும்பாட்சி எனக் குமது பாதமலர்”3 என்று சொல்லி, “தேரூரும் நெடுவீதித் திருவாரூர்க் கெழுந்தருள, நேரூரும் மனக் காதல் நீக்கவும் அஞ்சுவன்” என்று மொழிகின்றார்.

திருவாரூர்க்குச் சென்ற நம்பியாரூரர், பின்னையும் சேரமானை நினைந்து கொண்டு சேரநாட்டு மகோதைக்கு1 வருகின்றார். சேரமான் அவரை எதிரேற்று எல்லை யிலா மகிழ்ச்சி மிகுகின்றார். “பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?” நம்பியாரூரர் திருவஞ்சைக்களம் போந்து தங்கிச் சிவபரம் பொருளின் திருமுன் நின்று திருப்பதிகம் பாடிச் சிறக்கின்றார் அங்கே இறைவன் விடுத்தருளிய வெள்ளானையேறிக் கயிலாயம் செல்லத் தொடங்குவார் மகோதையில் இருந்த “உயிரெல்லாம் சாற்றும் மாற்றங்கள் உணர்பெருந் துணைவரை” மனத்தில் நினைக்கின்றார். அதனை யுணர்வால் உணர்ந்த சேரமான் தம்மருகு நின்ற குதிரையொன்றின் செவியில் திருவைந்தெழுத்தை யோத, அஃது அவரையேற்றிக் கொண்டு நம்பியாரூரர் ஏறி விண்வழிச் செல்லும் வெள்ளானையை யடைந்து வலம்வந்து அதற்கு முன்னே செல்கின்றது. அப்போதுதான், நம்பியாரூரர்

" தானெனை முன்படைத்தான் அதறிந்துதன் பொன்னடிக்கே
நானென பாடல், அந்தோ, நாயினேனைப் பொருட்படுத்து
வான்எனை வந்தெதிர்கோள்ள மத்தயானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய்தான் நொடித்தான் மலை யுத்தமனே“2

என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடியருளுகின்றார்.

திருக்கயிலையை இருவரும் அடைகின்றனர். சேர வேந்தர் மட்டில் வாயிலில் காவலரால் தடையுண்டு நிற்கின்றனர். பரமன் திருமுன் சென்று, பிரிந்த கன்று தன் தாயினையடைந்தது போல அன்பு பெருகி வழிபட்டு முடிவில், “நீரணி வேணிய நின்மலர்க் கழல்சாரச் சென்று சேரலன் திருமணி வாயிலின் புறத்தினன்” என்று நம்பியரூரர் விண்ணப்பிக்கின்றார். பரமன் வருவிக்கச்சென்ற சேரமான் பெருமாள், சிறிது சேய்த்தாகவே நின்று திருவடி பணிந்து நிற்கின்றார் அவரைக் கருணை நிறைந்த நோக்குடன், முறுவலித்து இறைவன், “இங்கு நாம் அழையாமை நீ எய்தியது என்னை?” என்று வினவியருள, அரசர் பெருமான் மிக்க மதிநுட்ப மமைந்த மொழி களால், “அடியேனே ஆரூரர் கழல் போற்றிப் புரசையானைமுன் சேவித்து வந்தனன்; பொழியும் நின்கருணைத் தெண்திரை செய் வெள்ளம் முன்கொடுவந்து புகுதலின் திருமுன்பு வரப்பெற்றேன்”1 என்று செப்புகின்றார். அது கேட்கும் இறைவன் புன்னகை பூப்ப, சேரமான் மீட்டும் வணங்கி, “பெருகு வேதமும் முனிவரும் துதிப்பரும் பெருமையாய், மருவு பாசத்தை யகன்றிட வன்றொண்டர் கூட்டம் வைத்தாய், உனை அன்பால் திருவுலாப்புறம் பாடினேன்; திருச்செவி சாத்திடப் பெறவேண்டும்”2 என்று வேண்டி நிற்கின்றார். இறைவன் இசைகின்றான்; இவரும் அத்திருவுலாப் புறத்தை இறைவன் திருமுன் ஓதுகின்றார்.

திருக்கயிலாய ஞானவுலா, ஆதியுலா என்றும், திருவுலாப் புறம் என்றும் சான்றோர்களால் பாராட்டப்படுகின்றது, இதனை ஆதியுலா என்று கூறுவதன் குறிப்பை நோக்கின், தமிழ் இலக்கியத் தொகையுட் காணப்படும் உலா நூல்களுள் இதுவே மிகத் தொன்மை வாய்ந்ததென்பது துணியப்படும். இவ்வுலா எழுதுவதற்கு முன் தமிழில் உலாநூல் ஒன்று இருந்ததாகத் துணிதற்குச் சான்று கிடைத்திலது. இப்போது காணப்படும் உலா நூல்களும் அவற்றின் இலக்கணங்களும் பெரும்பாலும் இவ்வுலா நூலிற்குக் காலத்தால் பிற்பட்டனவாகவே இருக்கின்றன.

பரமன் செவ்விய கோலமணிந்து தேவர் பலரும் பல சிறப்புடைய பணிகளைச் செய்ய, அவர் வேண்டுகோட்கிசைந்து உலாவருங்கால், அவனைப் பேதை முதலாகப் பேரிளம் பெண் ஈறாகவுள்ள மகளிர் பலர் கண்டு நயக்கின்றனர். அவர்கள் அனைவர்க்கும் அருள் நோக்கம் செய்து இறைவன் உலா வந்தமைகின்றான் என்பதே இதன் பிண்டித்த பொருளாகும். இதனைச் சிறிது விளக்கிக் காட்டுவாம்.

" திருமாலும் நான்முகனும் தேர்ந்துணரா தன்றுஅங்கு
அருமால்உற அழலாய் நின்ற - பெருமான்
பிறவாதே தோன்றினான் காணாதே காண்பான்
துறவாதே யாக்கை துறந்தான் - முறைமையால்
ஆழாதே ஆழ்ந்தான் அகலாது அகலியான்
ஊழால் உயராதே ஓங்கினான் - சூழ்ஒளிநூல்
ஓதா துணர்ந்தான் நுணுகாதே நுண்ணியான்
யாதும் அணுகாது அணுகியான் - ஆதி
அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான்
அரனாய் அழிப்பவணும் தானே - பரனாய
தேவர் அறியாத தோற்றத்தான் தேவரைத்தான்
மேவிய வாறே விதித்தமைத்தான் - ஓவாதே,
எவ்வுருவில் யாரொருவார் உள்குவார் உள்ளத்துள்
அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான் - எவ்வுருவும்
தானேயாய் நின்றளிப்பான் தன்னிற் பிறிதுருவம்
ஏனோர்க்கும் காண்பரிய எம்பெருமான்"

இப்பெருமான் சிவலோகச் சிவபுரத்துத் திருக்கோயிலுள் வீற்றிருக்கின்றான். தேவர் பலரும் வந்து அவனை வணங்கி, “எங்கட்குக் காட்சியருள்” என்று இரந்து கேட்கின்றனர். பரமன் அவ்வேண்டுகோட்கு இசைந்தருள, அவனையும் இறைவி யையும் தேவர்களும் தேவமங்கையரும் நன்கு ஒப்பனை செய்கின்றனர்; இந்திரன் முதலிய இறையவர் தமக்குரிய முறைப்படி சூழ்கின்றனர். முன் செல்வோர் முன்செல்ல, அருகு செல்வோர் அருகு செல்ல, திருவுலா புறப்பாடாகின்றது. சல்லரி, தாளம், தகுணிச்சம் முதல் முருடு ஈறாகவுள்ள பல்வகை வாச்சியங்கள் முழங்குகின்றன. இருது, யோகம், தவம் முதலாகக் குணங்கள் ஈறாகப் பலவும் வந்து

" இமையோர் பெருமானே போற்றி, எழில்சேர்
உமையாள் மணவாளா போற்றி, எமையாளும்
தீயாடி போற்றி சிவனே அடிபோற்றி
ஈசனே எந்தாய் இறைபோற்றி, தூயசீர்ச்
சங்கரனே போற்றி, சடாமகுடத் தாய்போற்றி
பொங்கரவா பொன்னங் கழல்போற்றி, அங்கொருநாள்
ஆய விழுப்போர் அருச்சுனன் ஆற்றற்குப்
பாசுபதம் ஈந்த பதம்போற்றி, தூய
மலைமேலாய் போற்றி, மயானத்தாய் வானோர்
தலைமேலாய்ப் போற்றி தாள்போற்றி,
நிலைபோற்றி"

எனப் போற்றிப் பூமாரி பொழிய, பெருமான் உலாவருகின்றான். வீதியில் பேதை முதலாகப் பேரிளம் பெண் ஈறாகப் பல்வகை மகளிரும் தம்மையும் செவ்வே புனைந்து கொண்டு, பரமனைத் தம் கண்களாரக் கண்டு அறிவு சோர்ந்து அலமரல் எய்து கின்றனர். அவருள், “பேதைப் பருவம் பிழையாதாள், நன்றாகத் தாலி கழுத்தணிந்து, சந்தனத்தால் மெய் பூசி, நீல அறுவை விரித்துடுத்து”, புனையப்பெற்ற பந்தரில் பாவையொன்றை வைத்து விளையாடு கின்றாள். அவளை நோக்கி, “இப்பாவைக்கு, தந்தை யார் என்று ஒருத்தி வினவ, இதற்குத் தந்தை ஈசன் எரியாடி” என்கின்றாள். இவள் பரமன் உலாவரக் கண்டதும், தன் பருவத்துக்கு ஏலாத காமக் குறிப்பு எய்துகிறாள்.

“பேரொளிசேர் காட்சிப் பெதும்மைப் பிராயத்தாள்” ஒருத்தி, தோழியருடன் கூடி மணலில் காமனுடைய உருவம் எழுதி விளையாடிக் கொண்டிருக்கின்றாள். அவ்வுருவில் காமன் வடிவு முடித்துக் கரும்பு வில்லும் மலரம்பும் தேரும் எழுதுங்கால், பரமன் வீதியுலா வந்துவிடுகின்றான். அவள்,

     "தானமர,  
    நன்றறிவார் சொன்ன நலம்தோற்று, நாண்தோற்று,  
    நின்றறிவு தோற்று நிறைதோற்று - நன்றாகக்  
    கைவண்டும் கண்வண்டும் ஓடக் கலையோட  
    நெய்விண்ட பூங்குழலாள் நின்றொழி" -  கின்றாள்.  

“மங்கைப் இடம் கடவா மாண்பினாள்” ஒருத்தி, தான் பொற்கூட்டில் வைத்து வளர்க்கும் பூவைப் புள்ளோடு பேசி, அது. சொல்லும் சொல் கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கின்றாள். வீதியில் பரமன் உலா வரவே அவனுடைய சடாமகுடம் அவட்குக் காட்சி யளித்தது. அக்காட்சியால் உள்ளம் கசிந்து கருத்திழந்து, அப்பரமனது,

" தார் நோக்கும், தன்தாரும் நோக்கும்; அவனுடைய
ஏர்நோக்கும் தன்னது எழில் நோக்கும்; பேரருளான்
தோள் நோக்கும் தன் தோளும் நோக்கும்; அவன் மார்பில்
நீள் நோக்கம் வைத்து நெடி துயிர்த்து நாண் நோக்காது
உள்ளம் உருக ஒழியாத வேட்கையாம்
வெள்ளத் திடை யழுந்தி வெய்துயிர்த்தாள்."

இவட்குப் பின் மடந்தையொருத்தி பரமன் அழகில் ஈடுபடு கின்றாள். அவளைத் “தீந்தமிழின் தெய்வ வடிவாள் திருந்திய சீர் வாய்ந்த மடந்தைப் பிராயத்தாள்” என்று சேரமான் பெருமாள் சிறப்பிக்கின்றார். இவள் தோழியருடன் யாழிசைத்துப் பரமனது “மடல் வண்ணம்” பாடி மகிழ்கின்றாள். அக்காலை இறைவன் பவனிவரக் காண்கின்றாள். எண்ணம் அவன்பால் இயைகிறது.

" தன்னுருவம்பூங்கொன்றைத்தார் கொள்ளத்தான் கொன்றைப்
பொன்னுருவம் கொண்டு புலம்புற்றாள்."

பிறிதோரிடத்தே அரிவையொருத்தி, வீணையைப் பண்ணிப் பரமன்மேல் தமிழ்பாடத் தொடங்குகின்றாள். அக்காலையில் இறைவன் விடைமேல் காட்சி தருகின்றான். அவள் கருத்து அழிகின்றது. தன் தோழியரை நோக்கி, “பொன்னனையீர்,

இன்றன்றே காண்பது எழில்நலம், கொள்ளேனேல்,
நன்றன்றே பெண்மை நமக்கு"

என்று மொழிந்துகொண்டு சென்று பெருவேட்கை தலைக் கொள்கின்றாள்; மேனி மெலிகின்றாள்; வளைநெகிழ்ந்தோடுகிறது; உடையும் சோர்கிறது. அதனால்,

அங்கை வளைதொழுது காத்தாள், கலைகாவாள்
நங்கை இவளும் நலம் தோற்றாள்.

வேறொருத்தி, அரிவைப் பருவம் உடையவள். அவள் தன் ஆய மகளிருடன் கவறாடிக் கொண்டிருக்கின்றாள். அப்போது சிவபெருமான் உலாவருகின்றான். அவன் சடைமுடி அவட்குத் தெரிகிறது. அவன்பால் அவட்குக் காதல் வேட்கை பெருகுகின்றது. அவள்,

தேவாதி தேவன் சிவனாயின் தேன்கொன்றைப்
பூவார் அலங்கல் அருளாது போவானேல்
கண்டால் அறிவன் எனச் சொல்லிக் கை சோர்ந்து
வண்டார் பூங்கோதை வளம் தோற்றாள்.

இறுதியாகப் பேரிளம் பெண்ணொருத்தி உலாவரும் பரமனைக் காண்கின்றாள். அவளைப்பற்றிக் கூறும் சேரமான் பெருமாள்,

" பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள்,
பண்ணமரும் இன்சொல் பணிமொழியாள்-மண்ணின் மேல்
கண்டு கேட்டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஓண்டொடி கண்ணே உள என்று - பண்டையோர்
கட்டுரையை மேம்படுத்தான்"

என்று பாராட்டுகின்றார். இவள், தோழியரும் பணிப்பெண் களும் தன்னைச் சூழ இருந்து செய்வன செய்து சிறப்பிக்க,

" கண் அவனையல்லாது காணா; செவி அவனது
எண்ணருஞ் சீரல்லது இசை கேளா; - அண்ணல்
கழலடியல்லது கைதொழா; அஃதான்று
அழலங்கைக் கொண்டான் மாட் டன்பு"

என்று ஓர் எழிலுடைய வெண்பாவை விரித்துரைக்கின்றாள். அப்போது பரமன் அமரர்குழாம் தற்சூழ மாடமறுகில் உலா வருகின்றான். அவனைக் காணும் இவளும் வேட்கை மிகுந்து மனம் கரைந்து மெய் வெளுத்துப் பெருமயக்கம் உறுகின்றாள்.

இவ்வாறு பரமன் உலாவந்த வீதிகளில் பெண்களின் ஆரவாரம் பெரிதாயிற்று என்பார்,

" பண்ணாரும் இன்சொல் பணைப்பெருந்தோள் செந்துவர்வாய்ப்
பெண்ணார வாரம் பெரிதன்றே - விண்ணோங்கி
மஞ்சடையும் நீள் குடுமி வாள்நிலா வீற்றிருந்த
செஞ்சடையான் போந்த தெரு"

என்று பெருமாள் வியந்தோதுகின்றார்.

இங்கே கூறிய மகளிர் எழுவருள் முதல் அறுவர், இவ்வுலகிற் காணப்படும் அறுவகை உயிர்கள் என்றும், பேரிளம் பெண் கடவுளரும் முனிவரான வுயிரென்றும் இவ்வுலகங்களில் இறைவன் தன் ஐவகைத் தொழில் செய்து நிலவும் நிகழ்ச்சி கண்டு இவ்வுயிர்கள் எய்தும் மனநிலையே இவ்வுலா வகையாகக் கூறப்படுகிறதென்றும் சான்றோர் விளக்கம் கூறுவர். இதனை விரிக்கிற்பெருகும்

இவ்வுலாவிற் கூறப்படும் கருத்துக்கள் பல அந்தாதியிலும் மும்மணிக் கோவையிலும் விரித்துக் கூறப்படுகின்றன. பேரிளம் பெண் பாடிய வெண்பாவையே, அந்தாதியில்,

" சொல்லாதன கொழுநா, வல்ல சோதியுட்
 சோதிதன்பேர்
 செல்லாச் செவிமரம், தேறித் தொழாத
 கைமண், திணிந்த
 கல்லாம் நினையாமனம், வணங்காத் தலையும்
 பொறையாம்,
 அல்லா அவயவந்தானும் மனிதர்க்கு
 அசேதனமே“

என்று கூறியுள்ளார். இவ்வாறு பல செய்தி ஒப்பு நோக்கிய வழிக் காணலாம்.

இனி, இச்சேரமான் இறைவனை இங்கிதமாகப் பாடிய பாட்டுக்கள் பலவாகும். பரமன் கங்கையைச் சடையில் கொண்டி ருத்தல் கண்டும் உமாதேவியார் அக் கங்கையின்கீழ் உறைவிடம் பெற்றிருப்பதோ என்று நகையாடுவார்போல,

 இமையோர் கொணர்ந்திங் கிழித்திட நீர்மைகெட்
 டேந்தல் பின்போய்
 அமையா நெறிச்சென்று ஓர் ஆழ்ந்த கலைமக
 ளாய் அணைந்தே
 எமையாளுடையான் தலைமகளா
 அங்கிருப்ப, என்னே,
 உமையாள் அவள்கீழ் உறைவிடம் பெற்றோ
 உறைகின்றதே

என்று உரைக்கின்றார். பரமன் சடை தீப்போல இருப்பதும், அதன்கண் கங்கையும் பிறையும் பாம்பும் உறைவதும் கண்டு

 எரிகின்ற தீயொத் துள சடை ஈசற்கு
 அத்தீக்கிமையோர்
 சொரிகின்ற பாற்கடல் போன்றது சூழ்புனல்;
 அப்புனலில்
 சரிகின்ற திங்கள் ஏர்தோணியொக்கின்றது;
 அத்தோணியுய்ப்பான்
 தெரிகின்ற திண்கழைபோன்றுளதால்
 அத்திறல் அரவே

என்று இன்பக் காட்சி காண்கின்றார். அதன்பின், அப்பாம்பையும் பிறையையும் பார்த்து இன்ப வுரையாடி நம்மை மகிழ்வுறுத்து கின்றார். பாம்பு நெருப்புயிர்க்கும் என்றும், அதனால் அப்பிறை மேனி வெதும்பிக் கங்கையில் மூழ்கிக் குளிருமென்றும், உமாதேவியார் பரமனாடு ஊடக்கண்டு உருகு மென்றும், பரமன் தீண்டலால் கலை நிறைந்து மண்ணையும் விண்ணையும் விளக்குமென்றும் இவ்வாறு பிறை இறைவன் முடிமேல் இருந்தும் இன்பமும் துன்பமும் எய்துகிறதென்றும் கூறுவார்,

    <div class="poem">அரவம் உயிர்ப்ப அழலும், அம் கங்கை  

 வளாய்க் குளிரும்,
 குரவங் குழலுமையூடற்கு நைந்துருகும்
 அடைந்தோர்
 பரவும் புகழண்ணல் தீண்டலும் பாகவான்
 அவை விளக்கம்
 விரவும் இடர் இன்பம் எம் இறைசூடிய
 வெண்பிறையே
என்று விளம்புகின்றார்.

இறுதியாக இவர் இறைவனும் தேவியும் கூடியிருக்கும் தோற்றம், கங்கையும் யமுனையும் கூடும் திரிவேணி சங்கமத்தை யொத்திருப்பதைக் காட்டுவது மிக்க இறும்பூது பயப்பதாகும்.

" பாடிய வண்டுறை கொன்றையினான்
 படப்பாம்புயிர்ப்ப
 ஓடிய தீயால் உருகிய திங்களின்
 ஊறல் ஒத்தது
 ஆடிய நீறு; அது கங்கையும் தெண்ணீர்
 யமுனையுமே
 கூடிய கோப்பொத்ததால் உமைபாகம்
 எம்கொற்றவற்கே“

என்பது அப்பாட்டு. (இதன் கருத்து 1943ம் ஆண்டு கல்கியென்னும் வெளியீட்டன் தீபாவி மலரில் வெளியான திரிவேணி சங்கமப் படத்தையும் ஒப்பு நோக்கின் இதன் உண்மைத் தோற்றம் நன்கு தெளிவுறுத்தும்.) இவ்வாறு இங்கிதத் துறையில் இவை போலும் பல பாட்டுக்களை இவர் பாடியுள்ளார். இவை இன்பச் சுவையையே யன்றி இவருடைய மனக்காட்சியின் விரிவையும் விளங்க வுணர்த்துகின்றன.

இனி, இவர் பாடிய கருத்துக்கள் பலவற்றைப் பல பெரும் புலவர்கள் மேற்கொண்டு தாம் பாடியவற்றுள் அமைத்துக் கொண்டிருக்கின்றனர். சங்கத் தொகை நூல்களுள் கடவுள் வாழ்த்தைப் பாடிச் சேர்த்த பாரதம் பாடிய பெருந்தேவனார் பெரும் புலவர் என்பது உலகறிந்த செய்தி, அவர் நம் சேரமானுக்குக் காலத்தால் பிற்பட்டவர் என்பது ஆராய்ச்சியாளர் முடிபு அவர் இவர் பாடிய, “பாதம் புவனிசுடர் நயனம் பவனம் உயிர்ப்பு ஓங்கு ஓதம் உடுக்கை, உயர்வான் முடிவிசும்பே யுடம்பு, வேதம் முகம், திசை தோள்மிகு பன்மொழி கீதம்”1 என்ற பாட்டின் கருத்தை, நற்றிமைக்குத் தாம் பாடிச் சேர்த்த கடவுள் வாழ்த்தில்,

" மாநிலம் சேவடியாகத் தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கையாக
விசும்பு மெய்யாகத் திசைகையாகப்
பசுங்கதிர் மதியமொடு சுடர்கண்ணாக
இயன்ற வெல்லாம் பயின்றகத் தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரியோனே"

என்று உரைத்திருக்கின்றார்.

இதன் (நற்றிணைப் பாட்டின்) உரைகாரரான பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் அவர்கள், “ஏனைப் பூதமும் பிறவும் கூறிய அடிகள் சிதைவுற்றமையின் வடமொழிச் செய்யுளை நோக்கிக் கூறலாயிற்று” என்று குறிக்கின்றார். இதனையும், “சுடர் நயனம்,” என்ற சேரமான் திருமொழியும் வைத்து நோக்கின், இந்நற்றிணைப் பாட்டில் வரும் “பசுங்கதிர்மதியமொடு சுடர் கண்ணாக” என்னும் அடி “படர்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக” என நிற்றல் வேண்டும் என்றும், அது முறையே “ஞாயிறு திங்கள் நெருப்பு என்ற மூன்றும் கண்களாக” என்னும் பொருள் தருவதாம் என்றும், எனவே திகிரியோன் என்பது ஆணையுடை யோன் என்றும் நாம் உணரலாம். அய்யரவர்கள் வடமொழிச் செய்யுளை நோக்கி, இத்திருமுறையை நோக்காது போயினர்போலும்.

இவ்வாறே சீவக சிந்தாமணி பாடிய திருத்தக்க தேவரும் இவர் பிரபந்தங்களி லிருந்து சில கருத்துக்களைத் தம் காவியத்தின் கண் மேற்கொண்டு கையாண்டுள்ளார். மகளுற்ற வேறுபாடுகண்டு ஆற்றாத நற்றாய் தலைவனைக் கழறல் என்ற கருத்தில், சேரவேந்தர்,

அடிக்கண்ணி கைதொழுவார்க் ககல்ஞாலம்
 கொடுத்தடிநாய்
வடிக்கண்ணி நின்னைத்தொழ வளைகொண்டனை;
 வண்டுண்கொன்றைக்
கடிக்கண்ணியாய்! எமக்கோரூர் இரண்டகம்
 காட்டினையால்
கொடிக்கண்ணி மேல்நல்ல கொல்லேறுயர்த்த
 குணக்குன்றமே

என்று கூறுகின்றார்.

ஒரு செயலே செய்த இருவருள் ஒருவர்க்கொரு வகையும் மற்றையோர்க்கு மற்றொரு வகையும் செய்து ஓரூர் இரண்டகம் காட்டினை என்ற கருத்தைத் திருத்தக்க தேவர், சுரமஞ்சரி சீவகனைப் புலந்து கூறும் கூற்றில் வைத்து,

" கிழவனாய்ப் பாடி வந்தென்
 கீழ்ச்சிறை யிருப்பக் கண்டேன்,
 எழுதிய பாவை நோக்கி
 இமையவித் திருப்பக் கண்டேன்
 ஒழிகஇக் காமம் ஓரூர்
 இரண்டஃகம் ஆயிற் றென்றாங்கு
 அழுதகண் ணீர்கள் மைந்தன்
 ஆவிபோழ்ந் திட்ட வன்றே“1

என்று அமைத்துக் கொண்டிருத்தலைக் காண்மின்.

இம்மட்டோ! “இல்லாரை யெல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு” என்ற திருக்குறளை மகளிர் ஒப்பனைக் கண் வைத்து நயப்படுத்தும் செயல் முதற்கண் நம் சேரமான்பால் தான் காணப்படுகிறது. அவர், ஆதியுலாவின் கண், அரிவைப் பருவத்தாளின் ஒப்பனை கூறுமிடத்து,

" இல்லாரை எல்லாரும் எள்குவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்புஎன்னும் - சொல்லாலே
அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணி(முலை)மேல்
மல்கிய சாந்தொடு பூண்புனைந்து நல்கூர்
இடையிடையே உள்ளுருகக் கண்டாள்"

என்று கூறுகின்றார்.

இதனைக் காணும் புலவர் எவர்க்குத்தான் வியப்புண்டாகாது போகும்! திருத்தக்க தேவர் இதனைக் கண்டதும் பெருவியப்புற்று, தாம் செய்த காவியத்தே இக்கருத்திலேயே வைத்து அமைத்துக் கொள்கின்றார். சீவகன் நகர வீதியில் உலாவந்தபோது மகளிர் பலர் தம்மை ஒப்பனை செய்து கொண்டு தெருவில் வந்து நின்று அவனை நோக்குகின்றனர். அவ்வாறு வந்த மகளிரின் ஒப்பனையைக் கூறவந்த திருத்தக்கதேவர்,

" செல்வர்க்கே சிறப்புச் செய்யும்
 திருந்துநீர் மாந்தர் போல
 அல்குற்கும் முலைக்கும் ஈந்தார்
 அணிகல மாய வெல்லாம்
 நல்கூர்ந்தார்க் கில்லை சுற்றம்
 என்றுநுண் நுகப்பு நைய
 ஒல்கிப்போய் மாடஞ் சேர்ந்த
 ஒருதடங் குடங்கைக் கண்ணார்“

என்று கருத்தும் இடமும் ஒப்புக்கொண்டிருத்தலை நன்கு காணலாம்.

இதனால், நம் சேரமான், பாணபத்திரர், நம்பியாரூரர் முதலாயினார்க்குப் பெருஞ் செல்வம் வழங்கியதுபோல, புலவர் பலர்க்கும் கற்பனைச் செல்வமும் கலைச் செல்வமும் வழங்கி யிருப்பது அவர் பெருந்தகைமைக்கு ஏற்ற சான்று பகர்கிறது. இவ்வாறு, இவர் பாடியருளிய பிரபந்தங்கள் “ஆயுந்தோறும் தோறும் இன்பம் தரும்” அறிவு நிலையமாதல் தெளியப்படும்.

இச்சேரமான் “வருகின்ற மூப்பொடு தீப்பிணிக் கூற்றம்” என்றலின் இவர் பொன்வண்ணத்தந்தாதி பாடி அரங்கேற்றிய காலத்தில் மூப்புப் பருவம் எய்துகின்ற வயதினராய் இருத்தலைக் காண்கின்றோம். இவ்வாறே இவர் பாடியவற்றை ஆராயின், பல அரிய பொருள்களைக் காண்டற்கு இடம் இருக்கிறது. இவர் பாடிய அகப் பாட்டுக்களில் அமைந்திருக்கும் உள்ளுறை நலம், உவமநலம் முதலிய பலவும் பேரின்பம் தருவனவாகும். அவை ஒரு புறமிருக்கச் சேரநாட்டுச் செண்டு விளையாட்டும் சிறுசோற்றுச் சிறப்பும் சீரிய ஆராய்ச்சிக்கு உரியவாகும். இவற்றை எழுதத் தொடங்கின் இதுவரம்பின்றிப் பெருகு மென்றஞ்சி இம்மட்டில் நிறுத்திக் கொள்கின்றேன்.

திருவானைக்காவில் சோழர்


திருப்பணிகள்
சோழர் என்ற பெயரைக் காணும்போது சங்க காலச் சோழரா, இடைக்காலச் சோழரா என்ற கேள்வி தமிழும் வரலாறும் பயின்றோர் உள்ளத்தில் எழும். சங்க காலம் என்பது தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்து கி.பி. முதல் நூற்றாண்டு வரை நிலவிய காலமாகும். அக் காலத்தில் தமிழகம் சோழ பாண்டிய சேரநாடு என்று மூன்றாகப் பிரிந்து மூன்று தமிழ் வேந்தர் குடியினரால் ஆளப் பெற்று வந்தது. அந்நாளைய சோழரைச் சங்க காலச் சோழர் என்பர்; அவர்களைப் பற்றி அறிதற்குதவும் தமிழ் நூல்கள் சங்க இலக்கியங்கள் எனப்படும். அவை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என இருவகைப் பட்டுப் பதினெட்டாகவுள்ளனவாகும். இடைக் காலச் சோழர் பல்லவர் காலத்துக்குப் பின் தோன்றித் தமிழகத்தை ஆண்டவர். இவர்களை விசயாலயன் வழி வந்த சோழ வேந்தர் என்பது வழக்கம். இவர் களையும், இவர்கட்கு முன்னே விளங்கிய பல்லவர்களையும் அறிதற்கு உதவுவன கி.பி. 1880 முதல் இன்றுவரை சுமார் 100 ஆண்டு களாகப் படி எடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களும் செப்பேடுமாகவுள்ளன. இதுவரை சுமார் 25000 படிகள் கிடைத்துள்ளவெனினும், அன்புடைய மக்கள் அறிய வெளிவந்துள்ளவை சுமார் 5000 ஆகும்.

சங்க இலக்கியங்களில் தமிழகத்தின் வடவெல்லையாகக் கூறப்படும் வடவேங் கடத்தில் திருமாலுக்குக் கோயில் கிடையாது. இப்போது கோயிலுள்ள இடத்தில் புல்லி என்னும் வேந்தன் இருந்தான். அவனது ஆட்சி வேங்கடமலையடியில் சித்தூர் மாவட்டத்தின் மேலைப் பகுதியில் பரவியிருந்தது. அப்பகுதியை ஆங்குக் காணப்படும் கல்வெட்டுக்கள் புலிநாடு என்று குறிக்கின்றன.

அதுபோல, காவிரியின் ஆற்றிடைக் குறையாகிய திருவரங் கத்தில் திருமாலுக்கோ சிவனுக்கோ திருக்கோயில் இருந்ததாகச் சங்க இலக்கியம் கூறவில்லை. எனினும், சங்க காலத்தை ஒட்டி வாழ்ந்த இளங்கோவடிகள் காலத்தில் வேங்கடத்திலும் திருவரங்கத் திலும் திருமாலுக்குக் கோயில்கள் தோன்றிவிட்டன.

    வீங்குநீர் அருவி வேங்கட மென்னும்  
    ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை  
    விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி  
    இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து  
    மின்னும்கோடி யுடுத்து விளங்கு விற்பூண்டு  
    நன்னிற மேகம் நின்றது போல  
    பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்  
    தகைபெறத் தாமரைக் கையி னேந்தி  
    நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு  
    பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய  
    செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்  

என்றும், இவ்வாறே திருவரங்கத்தில் திருமாலுக்குக் கோயில் தோன்றி அவர் கிடந்தவண்ணம் காட்சியளிப்பதை,

    நீலமேக நெடும்பொற் குன்றத்துப்  
    பால்விரிந் தகலாது படிந்தது போல  
    ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறல்  
    பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த  
    விரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தித்  
    திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்  

என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

அந்நாளில் வேங்கடக் கோட்டத்தில் திருக்காளத்தியும் திருவரங்கத்தில் திருவானைக்காவும் இருந்ததில்லையோ எனின், இருந்திருக்கலாம். எடுத்துரைப் பதற்கேற்ற இயைபு வரலாற்று நிகழ்ச்சியில் இல்லாமையால், சமயக் காழ்ப்பிலாச் சான்றோராகிய இளங்கோவடிகள் கூறாமல் விட்டிருக்கலாம்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் விளங்கிய திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் திருக்காளத்தி திருவானைக்கா இரண்டையும் சிறப்பித்து இனிய இசைப் பாட்டுக்களால் சிறப்பித்திருக்கின்றார்கள்; இவ்வகையில் திருவானைக்கா மிக்க தொன்மை வாய்ந்து, புலவர் பாடும் புகழ்பெற்றது என்பது நன்கு மனங்கொள்ளற் பாற்று.

திருவானைக்காவை இந்து அறநிலையத்தவரும் கல்வெட்டுத் துறையினரும் சம்புகேசுரம் என்றே குறிக்கின்றார்களே எனின், இது இடையிலே தோன்றிய மாற்றம். இடைக்காலச் சோழ பாண்டியர் ஆட்சி வீழ்ந்ததும், விசய நகர வேந்தரது ஆட்சி தமிழகத்தில் பரந்த இடம் பெற்றது; முன்னைய ஆட்சியில் ஊர்தொறும் தோன்றித் திருக்கோயில்களைக் கண்காணித்து வந்த திருவுண்ணாழிகை யுடையார், மாகேசுரக் கண்காணிகள், ஊர் மகாசபையினர் மறைந்தனர். கோயில் பூசைத் திருப்பணிக் கெனச் சோழ பாண்டிய மன்னர் நிறுவியிருந்த சிவ வேதியர், பண்டு தொட்டு நிலவிய தமிழ்ப் பெயர்களை வடமொழிப்படுத்தும் புதிய புதிய கதைகளைத் தொடுத்தும் தொன்மை வரலாற்றை மறைக்கும் செயலை மேற் கொண்டனர். தமிழரல்லாத விசய நகர வேந்தரது ஆட்சி அதற்கு இடையூறு செய்யவில்லை; அடுத்து வந்த ஆட்சிகளும் அவ் வியல் பினவேயாக இருந்தமையின், வடமொழிப் படுத்தும் செயல் வெற்றி கண்டது. வழிபாடுகளும் செயல்வகைகளும் வடமொழியி லேயே சமைக்கப் பெற்றன. இன்னோரன்ன மாறுதல்களால் திருவானைக்கா என்ற பெயர் பொது மக்களிடையிலும், சம்புகேசுரம் என்ற பெயர் கற்றோர் சிலரிடையிலும் வழங்குகின்றன.

திருக்கோயில்கள், பல்லவர் காலத்தில் கருங்கற்களால் அமையும் திருப்பணிச் சிறப்புப் பெற்று, வழி வழி வந்த வேந்தர்களாலும் செல்வர்களாலும் கற்றளிகளாக உருக் கொண்டன. பண்டைய வேந்தர் ஆட்சிகளில் திருமாலுக்குக் கோயிலைச் சிவன் கோயிற்குள் ளேயே அமைத்திருந்தமையின், தனிக் கோயில்கள் அருகியே இருந்தன. திருமால் கோயிலைத் தன்னகத்தே கொள்ளாத சிவன் கோயிலுக்குச் சிறப்பில்லை; சிவாகமங்கள் அவ்வாறே விதிக்கின்றன. இச்சிவன் கோயில்கள் பலவும் அமைப்பிலும் வழிபாட்டிலும் பிற நிகழ்ச்சிகளிலும் சிவாகமங்களின் நெறியில் அமைந்தன என்பதைப் பல்லவர் காலக் குறிப்பேடுகளாலும், சேக்கிழார் முதலியோருடைய நூல்களாலும் அறிகின்றோம். எனினும், கிடைத்துள்ள பல்லாயிரம் கல்வெட்டுக்களில் ஒன்றிலேனும் இன்ன கோயில் இன்ன சிவாகமப் படி அமைந்தது என்ற குறிப்பே காணப் படவில்லை. அவ்வக் கோயில்களிற் பணிபுரியும் சிவவேதியர், காரணம், காமிகம், வாதுளம் எனச் சிவாகமங்களைக் கூறுகின்றனரேயன்றி அவற்றைக் காட்டென்றால் காட்டுவார் இல்லை.

இரண்டு மூன்று நூற்றாண்டுகட்கு முன் தோன்றிய அறிஞர் சிலர் வகுத்தளித்த செயல்முறைகளை (பத்ததிகளை) ஆகம முறை யாகக் கொண்டு சிவவேதியர் தம் கோயிற் பணிகளை (கிரியைகளை)ச் செய்து வருகின்றனர். உண்மையை ஆராய்ந்த போது, கழிந்த நூற்றாண்டுகளில் வைதிக வேதாந்திகள் “சிவாகமங்கள் பிரமாணமாகா” எனவும் “ஆகமவழி யொழுகுவோர் மூடர்” எனவும் பழித்தும் இகழ்ந்தும் பேசியும் எழுதியும் வந்தமையாலும், அவர் கூட்டம் தொகை மிகுதியும் செல்வாக்கும் பெற்றிருந்தமையாலும் சிவவேதியர் தம்முடைய சிவாகமங்களைக் கைசோரவிட்டனர் என்பது தெரிந்தது. இந்நாளில் கிடைக்கும் சிவாகமங்களில் ஞானபாதம் கூறுவன வொழிய யோகபாதம் கூறுவன அறவே இல்லை எனலாம். கிரியா பாதம் கூறுவனவற்றுள் பல அவரவரால் காலப்போக்கில் பொருந்தாதனவும் வேண்டாதனவும் எழுதிச் சேர்க்கப்பட்டுப் போலிகளாய் ஒழிந்தன.

இனி, இக்கோயில்களில் பல்லவர், சோழர், பாண்டியர், விசய நகரவேந்தர், நாயக்கமன்னர் காலங்களில் நாட்பூசனைக்கும் திருப்பணிக்கும் எனப் பல நிவந்தங்கள் (endowments) அமைந்துள்ளன. கருவறை சீர் செய்தல், மண்டபங்கள் அமைத்தல், கோபுரத்திருப்பணி, புறமதில் திருப்பணி, திருவாபரணம் முதலியன செய்தளித்தல் முதலிய திருப்பணிகள் மிகுதியாகச் செய்யப்பட்டுள்ளன. கோப் பெருஞ்சிங்கன் முதலிய காடவ குலத்தவர் செய்துவைத்துள்ள திருவாபரணக் கல்வெட்டுக்கள் அழகிய பாட்டுருவில் படிப்பவர் மனம் மகிழத்தக்க வகையில் உள்ளன. ஈங்கு எடுத்துக் கொள்ளப்படு வது திருவானைக்காவில் சோழ வேந்தர் செய்த திருப்பணியாகும்.

சங்க காலச் சோழ வேந்தருள் ஒருவன் சோழன் செங்கணான். இடைக் காலச் சோழர் காலச் செப்பேடுகள், பெருநற்கிள்ளி, கரிகாலன் முதலிய வேந்தர் வழியினன் இச் செங்கணான் என்று கூறுகின்றன. கழுமலப் போரில் சேரமானை வென்று அகப்படுத்திச் சான்றோரான பொய்கையார் பாடிய களவழி என்ற நூலை வியந்து சேரனை விடுவித்தான் என்று கலிங்கத்துப் பரணியால் அறிகின்றோம். இவ்வேந்தர் பெருமானுக்கு நல்லடி என்றொரு மகனுண்டெனச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.

திருவானைக்காவில் நாவல் மரத்தின் அடியில் விளங்கிய சிவபெருமானுக்கு முதன் முதலில் திருக்கோயிலெடுத்தவன் சோழன் கோச் செங்கணான் என்று சேக்கிழார் தெரிவிக்கின்றார். இவ்வேந்தனை நம்பியாரூரர், “தென்னவனாய் உலகாண்ட செங்கணார்” என்று சிறப்பிக்க, இவ் வரலாற்றைச் சிறிது விரித்த நம்பியாண்டார் நம்பிகள்,

“ மைவைத்த கண்டன் நெறியன்றி
 மற்றோர் நெறிகருதாத்
 தெய்வக் குடிச் சோழன் முன்பு
 சிலந்தியாய்ப் பந்தர் செய்து
 சைவத் துருவெய்தி வந்து தரணி
 நீடாலயங்கள்
 செய்வித்தவன் திருக்கோச்செங்க
 ணான் என்னும் செம்பியனே”

என்று பாடிப் பரவியுள்ளனர்.

சுந்தரமூர்த்திகள், இச்செங்கணான், பிறப்பாற் சோழனானதொரு புறம் நிற்க, “தமிழ்கூறும் நல்லுலகத்தை”த் தென்னவனாகவும், சேரலனாகவும் ஆண்டமை புலப்பட, “தென்னவனாய் உலகாண்ட” என்று கூறுகின்றார். இதற்கொப்ப, இவன் கட்டிய சிவன் கோயில்கள், பாண்டி நாட்டிலும் சேர நாட்டிலும் இருந்துள்ளன. சேரநாட்டில் இவன் திருப்பெயரமைந்த தொன்மைச் சிறப்புடையவூர்கள் இருப்பதே தக்க சான்றுபகர்கிறது. “தரணியில் நீடு ஆலயங்கள் பல செய்வித்தவன்” என நம்பியாண்டார் உரைப்பதும், திருமங்கை மன்னனார் தமது பெரிய திருமொழியில், “இருக்கிலங்கு திருமொழி வாய் எண்தோள் ஈசற்கு எழில்மாடம் எழுபது” செய்தான் என்று விளம்புவதும் உண்மை யொளி பரப்புகின்றன.

செங்கணான் திருவானைக்காவில் சிவன் இருந்த வெண்ணாவல் மரத்தில் சிலந்தியாய் இருந்து மறுபிறப்பில் சோழனாய்த் தொன்றினான் என்றொரு வரலாறு உண்டு. இதனைத் திருநாவுக்கரசர்,

“ சிலந்தியும் ஆனைக்காவில்
 திருநிழற்பந்தர் செய்து
 உலந்து அவன் இறந்தபோது
 கோச்செங் கணானுமாகக்
 கலந்த நீர்க்காவிரி சூழ்
 சோணாட்டுச் சோழர் தங்கள்
 குலந்தனில் பிறப்பித்திட்டார்
 குறுக்கை வீரட்டனாரே”

என்று தெரிவிக்கின்றார். இச்செய்தி, திருவானைக்காக் கோயிற் கல்வெட்டொன்றில் ஒரு தோப்புக்குப் பெயராய் “உள்ளுர் புதுப்புடை விளாகத்துச் சிலந்தியைச் சோழனாக்கினான் திருத் தோப்பு” (கல்.தொ. 4,426) என்று போற்றிய மக்களின் சமய வுணர்வின் சால்பை விளக்கி நிற்கிறது.

செங்கணான் திருவானைக்காவில் தொடங்கிய கோயில் திருப்பணி செங்கல்லாலும் மரத்தாலும் ஆகியிருத்தல் வேண்டும். அதன் அமைப்பு தென்னார்க்காடு மாவட்டத்துத் திருமுட்டம் சிவன் கோயில் போன்றிருக்கலாம் என ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இப்போதுள்ள கற்றளியில் காணப்படும் கல்வெட்டுக்களில் மிகப் பழமையானது முதற் பராந்தகனுடைய 40-ஆம் ஆண்டுக் கல்வெட்டு எனத் தெரிகிறது. இதற்கு முன்னைவாய்ப் படி எடுக்கப்பட்டவை என எவையும் காணப்படாமையால் இப்போதுள்ள கோயில் கி.பி. 907க்கு முன்னே கட்டிய தென்று தெரிய நிற்கிறது.

இடைச் காலச் சோழ வேந்தருள் ஆதித்தன் மகனாகிய முதற் பராந்தகனது 40-ஆம் ஆண்டுக் கல்வெட்டுடொன்று இக்கோயிலில் உளது; எனினும் அது குறையாகவும் சிதைந்தும் உளது; அதன்கண் ஆனைக்காவுடைய சிவபெருமான் மகாதேவ படாரர் என்று பெயர் குறிக்கப்படுகின்றார். தோன்றுதலும் இறத்தலும் இல்லாதவர் என்ற பொருள்தரும் இச்சொல் இடைக்காலத்தில் சிவனுக்கு வழங்கியதில் வியப்பில்லை. இளங்கோவடிகளும் திருமுறையாசிரி யர்களும் சிவனைப் பிறப்பும் இறப்பும் இலாப் பெருமையன் எனப் பாராட்டி யுள்ளனர். இவ்வேந்தன் கி. பி. 907-இல் சோழ அரசு கட்டிலேறியவன். இங்குள்ள கல்வெட்டு, 40-ஆம் ஆண்டையதாதலால், இது கி.பி. 947-இல் பிறந்தமை தெளிவாம்.

இப்பராந்தகனுக்குப் பின் வந்த சோழருள் முதல் இராசராசன், முதல் இராசேந்திரன் முதலி யோர் மிக்க சிறப்பு வாய்ந்தவரா லிருக்கவும் அவர்களுடைய கல்வெட்டுக்கள் இக்கோயிலிற் காணப்படவில்லை. இவ்வாறே பின்வந்த சோழர் காலத் திருப்பணி களும் நிவந்தங்களும் இக்கோயிற் கல்வெட்டுக்களில் இடம் பெறவில்லை. 1917 ஆண்டில் கல்வெட்டுத் துறையினர் சில கல்வெட்டுக்களைப் படி எடுத்துள்ளனர். அவை அத்துறையினரிடமே புதைந்து கிடக்கின்றன. இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் இக் கல்வெட்டுக்கள் வெளிவர முயல்வார்களானால் நன்று. வெளிப்படுத்தும் செயலை இடித்துரைத்து வற்புறுத்தினாலன்றி வெளியிடும் பணியை இந்தியப் பேரரசு மேற்கொள்வதாகத் தோன்றவில்லை.

முதற் குலோத்துங்கனது ஆட்சி 40-ஆம் ஆண்டில் வில்ல வரையன் என்னும் தலைவன்ஆனைக்காவுடைய பெருமானுக்குக் காளையூர்தி யொன்றைச் செய்து வைத்து, திருப்பணிக்காக நிலங்கள் சில விலைக்கு வாங்கிக் கோயிலுக்கு அளித்தான். (தொகுதி iii எண். 76)

இரண்டாம் குலோத்துங்கன் மகனான இரண்டாம் இராசராசன் கி.பி. 1146-.ல் அரசனானான். “தந்தையில்லோர்க்குத் தந்தையாகியும் தாயில்லோர்க்குத் தாயாகியும் மைந்தரில்லோர்க்கு மைந்தராகியும் மன்னுயிர்கட்கு உயிராகியும்” நாட்டவர் வியந்து போற்ற வாழ்ந்தான் என இவனுடைய மெய்க் கீர்த்தி விளம்புகிறது. “மலை கொன்று பொன்னிக்கு வழி கண்ட கண்டன் வரராச ராசன்” என்று தக்கயாகப் பரணி இவ்வேந்தனைப் புகழ்கின்றது.

இவ்வேந்தன் கி.பி. 1146-இல் அரசு கட்டிலேறினான் என்பர். நான்கு ஆண்டுக்குப் பின் கி.பி. 1150-இல் அவனது கல்வெட்டொன்று இத் திருவானைக்காக் கோயிலில் உளது. அதன்கண், அரையன் சுந்தனான வாணகோப்பாடி சேரமான் என்ற செல்வன் பூசைத் திருப்பணிக்காக ஊரவர்பால் நிலம் வாங்கிக் கோயிற்குக் கொடுத்தான். (27/1937-38)

மூன்றாம் குலோத்துங்கன் கி.பி. 1178-இல் சோழ வேந்தாயினான். தன்னொடு மாறுபட்ட பாண்டிய சேரரை வென்று மேம்பட்டமை பற்றி இவன் திரிபுவன வீரதேவன் என்ற சிறப்பெய்தினான்.

“ அறந்தரு திருவாலவாயில்
 அமர்ந்தவர்க்குத் தன்பேரால்
 சிறந்த பெருந்திருவீதியும்
 திருநாளும் கண்டருளிப்
 பொருப்பு நெடுஞ்சிலையால் முப்
 புரமெரித்த சொக்கர்க்குத்
 திருப்பவனி கண்டருளித்
 திருவீதியில் சேவித்துத்
 தென்மதுரைத் திருவாலவாய்
 பொன்மலை *எனப் பொன் வேய்ந்து”

(* என-என்று கண்டோர் வியந்து புகழுமாறு)
என வரும் குடுமியான் மலைக் கல்வெட்டு, இவ்வேந்தர் பெருமானு டைய திருப்பணியார் வத்தைப் புலப்படுத்துகிறது. மேலும், சுந்தர மூர்த்திகளைச் சிவபெருமான், தோழனாகக் கொண்டது போல, இக்குலோத்துங்கனையும் திருவாரூர் இறைவன், “நம் தோழன்” எனச் சிறப்பித்தார் என்று திருவாரூர்க் கல்வெட்டொன்றால் அறிகின்றோம்.

சிவநெறிச் செம்மலாகிய இச்சோழ வேந்தன் கல்வெட்டுக்கள் சில திருவானைக் காத்திருக்கோயிலில் இருப்பது வியத்தகு செய்தியன்று.

இவனது 18-ம் ஆட்சியாண்டில் இராசராச தேவன் பொன் பரப்பினான வாணகோவரையனும், சீயன் உடையபிள்ளையான அளங்க நாடாள் வானும் தம்முள் வேறுபாடு நீங்கி ஒருவர்க்கொருவர் துணையாவதாக ஆணைக்காவுடைய அண்ணல் திருமுன் உடன் படிக்கை செய்து கொண்டனர். (483/1908)

இதற்கு அடுத்த ஆண்டில் மேலே கண்ட அரசியல் தலைவனான சீயன் உடையபிள்ளையோடு தொண்டன் சேமனான இராசராச மூவரையன் துணையாவதாக உடன்பாடு செய்து கொண்டான். (480/1908)

இம்மூன்றாம் குலோத்துங்கனுக்குக் “கோனேரின்மை கொண்டான்” என்ற சிறப்புப் பெயரும் உண்டாதலால், திருவானைக்காவில் காணப்படும் இவனது 21-ஆம் ஆண்டும் கல்வெட்டுக்கள், மதுரையும் கருவூரும் பாண்டியன் முடித்தலையும் கொண்ட திரிபுவன சக்கரவர்த்தி என்பதோடு கோனேரின்மை கொண்டான் குலோத்துங்க சோழ தேவர் எனக் குறிக்கின்றன. கோனேரின்மை கொண்டான் என்ற சிறப்புப் பாண்டியர்
களுக்கே சொல்லப்படுவது.

இவ்வேந்தனுடைய தலைமையதிகாரிகளில் மீனவன் மூவேந்த வேளான் முன்னிற்க, திருவானைக்கா திருக்கோயிலில் இருந்து தொண்டைமான் வேண்டி விண்ணப்பிக்க, பழுவூரான இராசேந்திர சோழ நல்லூரில் சில நிலங்களையும் ஏனாதி மங்கலத்தில் சில நிலங்களையும் தொகுத்துக் குலோத்துங்கசோழன் பழுவூர் என்று பெயரிட்டுப் பழுவுரு டையான் நக்கன் அறவன் என்பானுக்கு “ஜன்மக் கணியாக”த் தருகின்றனர். மற்ற மூன்று கல்வெட்டுக்களில் இந்த ஏற்பாட்டின் சார்பாக வரிவகைகள் முறை செய்யப்படு
கின்றன. (38-41/1937-38)

இச்சோழ வேந்தனுக்குப் பின் அரசு கட்டி லேறியவன் மூன்றாம் இராசராசன். இவன் கி.பி. 1216-இல் இளவரசாயவன். இவன் காலத்தில் திருவானைக்காவில் பல கல்வெட்டுக்கள் தோன்றி யுள்ளன.

இவனுடைய 20-ஆம் ஆண்டுக் கல்வெட்டுத் திருவானைக் காவை, பாண்டி குலாசனி வளநாட்டுப் பாச்சிற் கூற்றத்துக் கீழ்ப் புல்லாற்று (சங்ககாலப் புல்லாற்றூர்; இது பில்லாறு எனவும் கல்வெட்டுக்களில் வழங்கும்) காரிசாத்தன் குறையிற் காணியுடை ஓடமுடையாரில், பொல்லாதான் செல்வனான பொன்னி மழ நாடாள்வான், உடையான் நெஞ்சுண்டியான நெற்குப்ப அரையன், குன்றன் சீகயிலாய முடையானான திருவரங்க நாடாடாள்வான் என்ற மூவரும் கோயில் ஆதிசண்டேசுரக் கன்மிகளுக்கு (தருமகருத் தர்களுக்கு) நிலம் விற்று விலைப்பிரமான இசைவுத் தீட்டு நல்குவதைத் தெரிவிக்கிறது.

இவ்வாறே 22-ஆம் ஆண்டுக் கல்வெட்டில், காரி சாத்தன் குறையில் காணியுடைய ஓடமுடை யாரில் கூத்தன் குன்றனான கீழாற்றூர் அரையன், இவன் தம்பி ஆரம்பூண்டான், இவன் தம்பி தாழி, விடங்கன் உடையனான மழநாட்டு விழுப்பரைய நாடாள்வான், இவன் தம்பி திருவரங்கன், பேராயிர முடையான் ஆகியோர் கோயிற்கு நிலம் விற்று விலைப் பிரமாண ஓலையெழுதித் தருகின்றார்கள்.

24-ஆம் ஆண்டுக் கல்வெட்டில் போகைய தண்டல் நாயகர் ஆணைப்படி இருவர், கோயிற்கு நிலம் விற்று “திரவியச் செலவு கையீடு” தருகின்றார்கள். (13-4/1937-38)

29-ஆம் ஆண்டிற் பிறந்த கல்வெட்டொன்று பாச்சிற் கூற்றத்துக் கீழ்ப்புல்லாற்றுத் துறையூருடை யான் அரையன் நித்த கல்லியாணனான பாண்டி ராசன், திருவானைக்காவுடைய நாயனார் கோயில் ஆதிசண்டேசுர தேவர் கன்மிகட்கு தங்களுடையதும் தங்கள் மாதாக்களதுமான நிலத்தை அவர் (மாதா) இறந்துபட்டமையின் தன்மதானமாகக் கொடுப்பதைக் கூறுகிறது. (337/8) வேறே இரண்டு கல்வெட்டுக்களில் பாச்சிற் கூற்றுத்துக் கீழ்ப்புல்லாற்று ஈசனைக் குறையூரவரும், அவ்வூர் கழனி வாயிலுடையான் அனுமனமுடை யானும் அவன் தம்பி நம்பியும், திருவாiகா கோயிற்கு நிலம் தருகின்றார்கள். (338-9/8)

இனி, காலம் புலப்படாதபடி இவ்வேந்தனுடைய கல்வெட்டுக் கள் சில இக்கோயிலில் உள்ளன. அவற்றிலும் ஆனைக்காவுடைய பெருமான் கன்மிகட்கு நிலம் விற்ற செய்தியே காணப்படுகிறது.

இவ்விடைக் காலச் சோழராட்சியின் வீழ்ச்சிக் காலத்து இறுதியில் இருந்தவன் மூன்றாம் இராசேந்திரன்; 1246-இல் இளவரசனாகி, அப்பொழுதே அரசினை ஏற்று நடத்தினான். இவனைச் “சமஸ்த ஜகதேக வீரன்” என்றும் “இருவர் பாண்டியர் முடித்தலை கொண்டருளிய மகா ராசாதிராச நரபதி” என்றும் மெய்க் கீர்த்திகள் புகழ்கின்றன. இவனது மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டொன்றில் திருவானைக்காத் திருக்கோயிலுக்கு அரையன் நித்திய கல்லியாணனான துறையூர் பாண்டியராயன் நிலம் தருகிறான். (29/1937-38)

ஆறாம் ஆண்டில் திருவானைக்காவுடைய அண்ணல் கோயிற் கெனத் திருநந்தவனம் அமைக்கப் படுகிறது. (484/1908) அதே ஆண்டில் சிங்கண்ண தண்ட நாயகர் திருவானைக்காத் திருக் கோயிலில் சித்த வீச்சரத்தைக் கட்டி அதன் பூசைத் திருப்பணிக் கெனப் பாச்சில் கூற்றத்துத் திருவெள்ளறையில் சில நிலங்களைக் கொடுக்கின்றார். (73/1937-38)

இங்ஙனம் சங்க காலச் சோழனான செங்கணான் முதல் இடைக்காலச் சோழர் பலரும் திருவானைக்காவுடைய பெருமானுக்கு அரிய திருப்பணி புரிந்த திறத்தை ஒருவாறு கண்டோம். இப்பெரு மக்கலின் திருப்பணி நலங்களை அறிந்து கோடற் கேற்பப் பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுக் களையும் செப்பேடுகளையும் அரசின் கல்வெட்டுத் துறையினர் படியெடுத்துள்ளனரே யொழியப் பொது மக்கள் இனிதின் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் வெளியிடச் சுணங்குகின்றனர். இந்தியப் பேரரசு இவ்வகையில் கருத்தைச் செலுத்தியிருக்குமாயின் நம் தமிழ்நாட்டுக் கோயில்களின் வரலாறும் சிறப்பும் நாடறிய விளங்கியிருக்கும். கோயில் வரலாற்றிலும் தமிழினத்தின் சமுதாய வளாச்சி வரலாற்றிலும் தெளிந்த அறிவுடைய நன்மக்களைத் தேர்ந்தெடுத்து இந்திய அரசியற் பேரவைக்கு அனுப்பாத பெருங் குறையே, இன்று நாம் நமது வீழ்ச்சிக்குரிய காரணத்தை நினைந்து பார்க்க இயலாமைக்குரிய தடைகளுள் ஒன்றாகும். கல்வெட்டுத் துறையினர் தமது பணியைந் தொடங்கிச் சுமார் 100 ஆண்டுகள் ஆகின்றன; நாம் அரசியல் உரிமை பெற்றுச் சுமார் 25 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் நாம் நமது பழமையும் புதுமையும் கலந்த வாழ்க்கை வரலாற்றை உணர்ந்து செம்மை செய்து கொள்ளும் திறமின்றி யிருப்பது, நினைக்கும் போது மனத்துக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதா? எண்ணுமின்.

குமரகுருபரர் நல்கும்


சமயவாழ்வு
தமிழ்ப் பெருமக்களே!

நாட்டின் நலத்தை நினைப்பதிலே நம் எண்ணம் ஊன்றி நிற்கிறது. ஏன்? நாட்டின் பெருமை நமக்கும் பெருமையைத் தருகிறது. ஆதலின், பொது வாகத் தமிழ்நாடு என்பதை விட்டுச் சிறப்பாக இங்குத் தென்பாண்டி நாட்டைச் சற்று உற்று நோக்குவோம்.

தெய்வப்புலமைச் சேக்கிழார் பெருமான் பாண்டி நாட்டின் பழம் பெருமையைத் திறம்படப் பாராட்டினார். “நார்மன்னு சிந்தைப் பல நற்றுறை மாந்தர் போற்றும், பார்மன்னு தொன்மைப் புகழ் பூண்டது பாண்டி நாடு” என்பது அவர் தம் திருவாக்கு. “தொன்மைப் புகழ் பூண்டது பாண்டிய நாடு”என்று போற்றினார். இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சி வல்லுநர், புதைபொருள் ஆராய்ச்சி வல்லுநர் எல்லோரும் ஒருங்கே முதன்முதல் தோன்றிய நிலம் தென்பாண்டி நாடேயெனத் தெளிவுறப் பேசுகின்றனர்.

இத்தகைய தொன்மைத் தென்பாண்டி நாட்டின்கண் மிகப் பழமை வாய்ந்ததாய்த் திகழும் தெய்வமலை பொதியிலாகும். சிவன் வீற்றிருக்கும் கயிலையும், செந்தமிழ் முனிவன் தங்கும் பொதியிலும் ஒத்த பெருமை யுடையன. கலையின் வடிவான பெருமுனிவன் அகத்தியன் நிலைபெற்று வாழும் நீடிய பெருமையுடையது இத் தென்பாண்டி நன்னாடு. இங்கே தமிழ்ச் சுவையளிக்கும் தண் பொருநையாறு பொய்யாத நீர் வளத்தைத் தந்துகொண்டிருக்கிறது. ஆற்று வளம் நாட்டிற்கு ஏற்றத்தை நல்கும். சோழநாட்டைக் காவிரி நாடென்றே போற்றுவர். தென்பாண்டி நாட்டைத் தண்பொருநை நன்னொடு என்னலாம்.

கி.பி. 12-ஆம் நூற்றாண்டிலே சோழநாட்டையாண்ட இராசேந்திரன் கங்கையாறு வரையிற் படையெடுத்துச் சென்று வென்று இமயத்தில் தனது புலிக்கொடியை நாட்டினான். ‘கங்கை கொண்ட புவிகாவலன்’ என்று போற்றும் பெருமையுற்றான்.

கி.பி. 17-ஆம் நுற்றாண்டிலே தென்பாண்டி நாட்டில் தண்பொருநைக் கரையில் தோன்றிய குமரகுருபரர் கங்கை வரையிலும் தம்மை எதிர்த்த கவிஞரையெல்லாம் சொல்லாற்றலால் வென்று, காசிமன்னனையும் தன்னடிப்படுத்தினார்.

" மண்கண்ட வெண்குடைக் கீழாக மேம்பட்ட மன்னரும் என்
பண்கண்டளவில் பணியச் செய்வாய்"

என்று கங்கைக்கரையில் நின்று முழங்கினார்.

கங்கைகொண்ட புவி காவலனாகிய சோழ வேந்தன் இமயத்தில் பொறித்த புலிக்குறி இன்று உண்டோ? இன்றோ? அறியோம். ஆனால், கங்கை கொண்ட கவி காவலராய குமரகுருபரர் காசியில் அமைத்த குமாரசாமிமடம் இன்றும் நின்று தமிழின் பெருமை பேசுகிறது; சைவத்தின் தெய்வ மாண்பைத் தெரிக்கிறது; குமரகுரு பரரின் பேராற்றலைக் கூறுகிறது.

ஒரு நாட்டுக்குப் பெருமை அந்நாட்டில் தோன்றிய சான்றோ ரால் ஆகும். திருமுனைப்பாடி நாட்டின் சிறப்பைக் குறிப்பிடப் புகுந்த சேக்கிழார் பெருமான்,

" மறந்தருதீ நெறிமாற மணிகண்டர் வாய்மைநெறி
அறந்தருநா வுக்கரசு மாலால சுந்தரரும்
பிறந்தருள உளதானா னம்மளவோ பேருலகில்
சிறந்ததிரு முனைப்பாடித் திறம்பாடும் சீர்ப்பாடு"

என்று வியந்து போற்றினார். ‘நாவுக்கரசரும் சுந்தரரும் பிறந்தருளும் பெருமையுற்றது திருமுனைப் பாடி நாடு’, என்று பாராட்டினார்.

நம் தென்பாண்டி நன்னாடோ குமரகுருபரரும், சிவஞான முனிவரரும் திருவவதாரம் செய்த பெருமையுடையதாகும். இரு வரும் சைவத் தெய்வக் கவிஞர் பெருமக்கள். பிற்காலத்தில் குமரகுருபரரைப் போன்று கொழிதமிழ்ப் பாடல் பாடினார் எவருமிலர். அவர் வாக்கே தெய்வவாக்கு என்று சொல்லத்தகும். அவரைப் போன்று பிற்காலத்தில் சிவஞான முனிவரே உரைவல்ல பெரியாராக விளங்கினார். அவர்தம் உரைபோன்று உரை வரைந்தார் பிற்காலத்து எவருமிர். ஆகவே இவ்விருபெரும் புலவர்களும் முறையே பாட்டாலும் உரையாலும் தமிழுலகுக்கு நிகரற்ற பணியாற்றினர்.

குமரருபரர் தோன்றிய காலத்தில்தான் மேனாட்டவரும் நம் நாடடில் புகத் தலைப்பனர் தென்பாண்டி நாட்டில் தான் முதன் முதலில் கிறித்தவ மதத்தைப் பரப்ப முற்பட்டனர். இத்தாலிய நாட்டினின்று நம் நாடு போந்த வீரமாமுனிவர் (fr. joseph beski) கிறித்தவம் பரவச் சீரிய பணியாற்றத் தொடங்கிய காலம். இவர், நம் குமரகுருபர அடிகளாரிடம் மாணவராக இருந்து தமிழ் பயின்றார் என்றும் கூறுப.

இவர் காலத்தில் தென்பாண்டி நாட்டின் ஊர்தோறும் பெருங்கோயில்கள் எழுந்தன. பிற்காலப் பாண்டியர் பல சிவன் கோவில்களை ஆங்காங்குத் தோற்றுவித்தனர். திருப்புடைமருதூர், அத்தியான நல்லூர், அரிகேசரி நல்லூர் முதலிய இடங்களிலெல்லாம் திருக்கோயில்கள் தோன்றின. அப்போது திருநெல்வேலியை ஆண்ட மன்னன், ‘வென்று மண்கொண்ட பூதலவீர வீரமார்த்தாண்ட மாறவர்மன்’ எனப்படுவான். இவன் தன் பெயரால் நெல்லைத் திருக்கொவிலில் ‘வீரமார்த்தாண்ட மண்டபம்’ என்றொரு மண்ட பத்தை நிறுவினான். சோபான மண்டபம் ஒன்றைக் கட்டுவித்தான். அதுவே இன்று சோமவார மண்டபம் என்று வழங்கப்படுகின்றது. இம்மன்னன் காலத்தில்தான் நெல்லைத் திருக்கோவிலில் அறுபத்து மூவர் திருவுருவங்கள் வெண்கலத்தால் அமைக்கப்பெற்றன என்று கல்வெட்டொன்று சொல்கின்றது.

இவன் காலத்தில் நெல்லையில் சமயப் பணியாற்றும் திரு மடங்கள் இரண்டு சிறப்புறத் திகழ்ந்தன. தெற்குத் தேர்த்தெருவில் சேக்கிழார் மடமும், வடக்குத் தேர்த்தெருவில் மெய்கண்டார் மடமும் விளங்கின. சேக்கிழார் மடத்தில் இருந்து பயின்றவரே மெய்கண்டார் மடத்துக்குத் தலைவராய் வருவதற்குத் தகுதி பெறுவர். அத்தலைவரின் தீக்கைப் பெயர் ‘சத்தியஞான தரிசினி’ என்பதாகும். சத்தியஞான தரிசினி யென்பது மெய்கண்டாரைக் குறிக்கும் திருப்பெயரே. இச்செய்தியை நெல்லைக் கோவில் கல்வெட்டொன்று சுட்டுகின்றது.

இங்ஙனம் மன்னரும் செல்வரும் கோவில்களையும் மடங் களையும் நிறுவி, அவற்றின் வாயிலாகச் சமயப்பணியும் கலைப் பணியும் ஆற்றி வந்தனர். கோவில்களில் மக்கட்குச் சமய ஞானம் நல்கும் வியாக்கியான மண்டபங்கள் விளங்கின. ஆதலின், தென் பாண்டி நாட்டில் மக்கள்பால் மனமொழி மெய்மூன்றினும் சைவமணம் கமழ்ந்த காலம் அது. இத்தகைய நலங்கள் நிறைந்த காலத்தில்தான் ஞானசூரியனைப் போலக் குமரகுருபரர் திருவவதாரம் செய்தருளினார். பிறந்த குழந்தை அழுகிறது; ஆனால் ஓசையில்லை. ஐந்தாண்டு வரைக்கும் ஊமையாகவே யிருந்து செந்தில் கந்தவேள் கருணையால் வாய்திறந்து பேசலுற்றார். வாயினைத் திறக்கும்போதே ‘முருகா’ எனத் திறந்தார். முருகன் திருவருளால் திருவாய் திறக்கப்பெற்ற குமரகுருபரர், முருகன் மீது மனமுருகிப் பாமாலை தொடுத்தார். முதன்முதல் அவர் பாடியது ‘கந்தர் கலிவெண்பா’ என்னும் செந்தமிழ்ச் சிறுநூலாகும். ஐந்தாண்டுப் பருவத்தில் அருங்கவிதை பாடினார் என்று சொல்லுதல் எங்ஙனம் பொருந்தும்?

சீர்காழியில் தோன்றிய ஞானசம்பந்தர் மூன்றாண்டுப் பருவத்தில் முத்தமிழ்ப் பாடல் இசைக்கவில்லையா? இரண்டாண்டுப் பருவத்தில் மெய்கண்டார் திரண்ட சித்தாந்த உண்மைகள் பொதிந்த சிவஞான போதத்தைச் செப்பவில்லையா? அகத்தியர் அருள் வரத்தால் உதித்தருளிய சிவஞான முனிவர் ஐந்தாம் ஆண்டில் செந்தமிழ்ப் பாடல் பாடவில்லையா? இன்றும் பர்மாவிலே நாலாண்டுக் குழந்தையொன்று பெருங் கணக்குகளையெல்லாம் சொல்லியவுடனே விடை பகர்கின்றதே! இவையெல்லாம் அரிதில் வாய்க்கப் பெற்ற திறங்கள். முந்தை நல்வினைப் பயனால் முன்னவன் தந்தருளிய அருட்டிறமாகும்.

நக்கீரன் நல்கிய திருமுருகாற்றுப் படைக்குக் குமரகுருபரரின் கந்தர் கலிவெண்பாவில் பொருள் காணலாம். அரிய சித்தாந்த உண்மைகள் நிறைந்த தத்துவநூல் கந்தர் கலிவெண்பா. சைவாகமங் களில் அத்துவப் பிரகரணத்தில் பேசப்படும் அத்துவாப் பகுதிகள் மிகமிக அருமை வாய்ந்தன; எளிதில் எட்டமுடியாதன. அத்துவாக் களைப் பற்றி யறிவது, கந்தபுராணம் அட்டகோசப் படலத்திற்கு உரை காண்பது போலத்தான். சிறந்த சித்தாந்த வல்லாரும் அத்து வாக்களைப் பற்றிக் கேட்டால் சொல்ல அறியார். அத்தகைய அத்துவாக்களின் இயல்பைத் தெளிவுறத் தம் கந்தர் கலிவெண்பாவில் குமரகுருபரர் கூறுகிறார். தெய்வத் திருவருள் கைவந்த மையின் அங்ஙனம் எடுத்துக்காட்டும் ஆற்றல் பெற்றனர்.

குமரகுருபரர், திருமுருகனைக் கண்களால் தரிசித்தார். அவனது திருக்கோலத்தை இனிய பாட்டால் தந்தார்.

யான் எனது என்பது அற்ற இடமே அவனது திருவடி, மோன பரமானந்தம்-முடி, ஞானம்-திருவுரு, இச்சை செயல் அறிவு-கண்கள், அருள்-செங்கை, இருநிலமே சந்நிதி, இங்ஙனமாக விளங்கும் தனிச்சுடர் என்று கண்டு கூறினார். தம்மைப் பேசுவித்த செயல் முருகனுக்கு அத்துணைப் பெருஞ்செயலன்று.ஆதலின் அதற்கு நன்றி செலுத்தல் முறைமையன்று என்று கருதிய கவிஞர், அவன்பால் வேண்டும் விண்ணப்பத்தைப் பாருங்கள்!

“ ஆயும் பழைய அடியாருடன் கூட்டித்
தோயும் பரபோகம் துய்ப்பித்துச்-சேய
கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி யாட்கொண்டு
அடியேற்கு முன்னின் றருள்”

குமரகுருபரர் தம் காலத்துச் சமயநிலை, மொழிநிலை, ஆட்சிநிலை இவைகளையெல்லாம் அறிவிக்கும் நோக்குடன் அழகிய பாக்களைத் தம் நூல்களில் இடையிடையே தந்துள்ளார். எடுத்துக் காட்டாக ஒரு பாட்டைக் காண்போம்.

ஆங்கிலேயர் நம் நாட்டில் புகத் தலைப்பட்டார்கள். புறச்சமயக் கொள்கைகளை மக்கள் உள்ளத்தில் புகட்டினர். மதுரையில் தோன்றிய சிவாகமங்களும் செந்தமிழ் இலக்கியங்களும் அழிந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. கீழ்நாடு, மேல் நாட்டினர் ஆட்சிக்குட்பட்டுவிடுமோ என்ற பயம் மக்களிடையே எழுந்தது. களப்பிரர் என்னும கலிப்பகைஞர் தமிழ்நாட்டைக் கைப்பற்ற முயன்றனர். மறச்செயல்கள் நாட்டில் தாண்டவமாடத் தலைப்பட்டன. தமிழ் மன்னரின் அரசியலும் பெருங்குடியும் அழியத் தழைப்பட்டன. தமிழ் மன்னர் மூவருள் தலைசிறந்து விளங்கிய பாண்டியர், சோழருக்கொப்பாவர் என்று உணராதாரும் ஓத முற்பட்டனர். இத்தகைய கேடுகள் எல்லாம் தமிழ்நாட்டைச் சூழாவண்ணம் பாண்டிமகளாகத் தோன்றி அங்கயற்கண்ணி அரியாசனம் அமர்ந்து, மதுரைப்பதி தழையத் தழையுங்கொடியாய்த் திகழ்ந்தார் என்று குறிப்பிடுகிறார்.

    <div class="poem">  

முதுசொற் புலவர் தெளித்த பசுந்தமிழ்
 நூல்பாழ் போகாமே
 முளரிக் கடவுள் படைத்த வசுந்தரை
 கீழ்மே லாகாமே
 அதிரப் பொருது கலிப்பகை ஞன்றமிழ்
 நீர்நா டாளாமே
 அகிலத் துயிர்க ளயர்த்து மறங்கடை
 நீணீர் தோயாமே
 சிதைவுற் றாசிய னற்றரு மங்குடி
 போய்மாய் வாகாமே
 செழியர்க் கபயரு மொப்பென நின்றுண
 ராதா ரோதாமே
 மதுரைப் பதிதழை யத்தழை யுங்கொடி
 தாலோ தாலேலோ
 மலயத் துவசன் வளர்த்த பசுங்கிளி
 தாலோ தாலேலோ
கருவிலே திருவருள் வாய்த்த குமரகுருபரர், சமயஞானியாய் - தத்துவஞானியாய் - இலக்கிய ஞானியாய் - முற்றும் துறந்த முனிபுங்கவராய்த் திகழ்ந்து தெய்வத் தமிழ் மணம் கமழும் சைவத் திருக்கொடியைக் காசிமாநகரில் சென்று நாட்டிச் சிவனருள் பரப்பிய பெருமையை என்னென்பது!

உமாபதி தேவரான ஞானசிவ தேவர்


இற்றைக்குச் சுமார் 800 ஆண்டுகட்குமுன் நம் தமிழ் நாட்டில் சோழவேந்தரும் பாண்டி வேந்தரும் நாடு காவல் புரிந்து வந்தனர். சோழநாட்டில் கோவிராச கேசரிவன்மனான இரண்டாம் இராசாதி ராசன் ஆட்சிபுரிந்து வந்தான். அப்போது பாண்டிய நாட்டில் மதுரையில் பராக்கிரம பாண்டியனும் திருநெல்வேலியில் குலசேகர பாண்டியனும் இருந்து வந்தனர். சோழ பாண்டியர்கள் தம்முட் பூசலின்றி இனிதிருந்தமையின், நாட்டில் இன்பவாழ்வு நிலவிற்று.

அந்நாளில் ஈழநாட்டில் வாழ்ந்த ஈழ வேந்தர்கள் மிக்க செல்வாக்குடன் இருந்தனர். அவர்கள் பால் பொருளும் படையும் பெருகியிருந்தன. அதனால் அவர்கட்கு நல்ல புகழும் உண்டாகி யிருந்தது. ஈழ வேந்தரது படைப்பெருக்கம் “இடம் சிறிது” என்னும் நினைவை எழுப்பிப் பிற நாடுகளை வென்று அடிப்படுத்த வேண்டு மென்ற தமிழ் வேந்தியல் அவாவையோ, கடல் வாணிகத்தைத் தமக்கே உரிமையாக்கிப் பிறர் கலம் கடலிற் செல்ல லாகாதெனத் தடுக்கும் சேரலர் செருக்கையோ அவர்கள் உள்ளத்தில் எழுப்பவில்லை. அதனால், அவர்கள் தம்மை யடைந்தார்க்கு உதவிபுரியும் அந்த அளவில் அமைந்தொழுகினர்.

தொண்டை நாட்டில் மேலைப்பகுதிக்குப் பல்குன்றக்கோட்டம் என்ற பெயர் நிலவிற்று. தொண்டைநாடு முற்றும் சோழ வேந்தர் ஆட்சிக் குட்பட்டிருந்ததெனினும் இப்பகுதியில் படைவீடு என்னு மிடத்தைத் தலைநகராகக் கொண்டு சம்புவராயர் என்னும் குறுநில மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்கள் சோழ வேந்தர்கட்கு அவ்வப்போது வேண்டும் படைத்துணை செய்வர். இராசாதிராசன் காலத்தில் படைவீட்டிலிருந்து ஆட்சி செய்த சம்புவராயன் எதிரிலி சோழன் சம்புவராயன் எனப்படுவன்.

பாண்டியநாட்டு மதுரையில் பராக்கிரம பாண்டியன். இருந்து வருகையில் திருநெல்வேலிப் பகுதியிலிருந்து ஆட்சிசெய்த குலசேகரன் பாண்டி நாடு முழுதிற்கும் தானே தனிவேந்தாக வேண்டுமென்ற ஆசை கொண்டான். அவனுக்குரிய நண்பர்கள், பாண்டிநாடு ஒரு வேந்தனாட்சியில் நிலவுமாயின் அதன் ஆக்கம் பெருகுமெனச் சொல்லி அவனை ஊக்கினர். குலசேகரன் படையும் பொருளும் பெருக்கினான். அவனுடைய மனக்குறிப்புப் பராக்கிர மனுக்குத் தெரிந்தது. தன்னையும் தனது ஆட்சியையும் காத்துக் கொள்ளும் முயற்சியில் அவன் ஈடுபட்டு ஈழவேந்தன் பராக்கிரம பாகுவைப் படைத்துணை புரியுமாறு வேண்டினான்.

ஈழ வேந்தன்பால் இலங்காபுரித் தண்டநாயகன் என்றொரு தானைத்தலைவன் இருந்தான். பெருவலியும் ஆழ்ந்த சூழ்ச்சியும் அத் தண்டநாயகன்பால் இருந்தன. மறப்புகழ் வேட்கையே அவனது வடிவம். பராக்கிரமன் விடுத்த வேண்டுகோளைக் கண்டதும் தண்ட நாயகற்கு உள்ளம் பூரித்தது. ஈழ நாட்டின் மறப்புகழைத் தமிழகத்தில் நிலைபெறச் செய்தற்கு நல்லதோர் வாய்ப்பு உண்டானதாக எண்ணினான். பண்டைச் சோழ வேந்தரும் பாண்டி மன்னரும் ஈழநாட்டில் தங்கள் புகழொளியைப் பரப்பி யிருப்பது அவனுள்ளத்தே பொறாமையுணர்வைத் தோற்றுவித் திருந்தது. இதனால் அவன் பராக்கிரமனுக்கு ஈழப்படை சென்று துணைபுரிவது தக்கதே என்று ஈழவேந்தனான பாரக்கிரமபாகுவுக்கு எடுத்து ரைத்தான் தொடக்கத்தில் பராக்கிரமபாகுவுக்குப் பராக்கிரம பாண்டியன் விடுத்த வேண்டுகோளை ஏற்றற்கு உள்ளம் செல்லவில்லை. மேற்கே கேரள வேணாட்டு வேந்தர்களும் வடக்கே சோழவேந்தரும் பொருளாலும் படையாலும் சிறப்புற்று விளங்க அவர்கள் துணையை நாடாது தன்னை நாடியது ஈழ வேந்தனுக்கு உண்மையிலேயே ஐயத்தை எழுப்பிற்று. இவ்வகையில் பராக்கிரமபாகு தன் துணை வரையும் ஏனைத் தானைத் தலைவர்களையும் ஆராய்ந்து இலங்காபுரித் தண்டநாயகன் தலைமையிலேயே பெரும் படையொன்றைச் செலுத்தத் துணிந்து அதற்கு ஆவனவற்றைச் செய்யுமாறு பணித்தான்.

பராக்கிரமன் ஈழவேந்தன் துணை நாடுவதையும், ஈழவேந்தன் துணை புரிதற்கு உடன்படுவதையும் திருநெல்வேலியிலிருந்த குலசேகரன் தெரிந்து கொண்டான். ஈழப்படை வந்து சேருவதற்கு முன்பே, பெரும்படையொன்று கொண்டு சென்று மதுரையை முற்றிப் பராக்கிரமன் காவலையழித்தான்; பராக்கிரமனுடைய கடை குலசேகரன் படைக்கு ஆற்றாது சிதறிக்கெட்டது. தானைத் தலைவரும் போர் மறவரும் மூலைக்கொருவராய் ஓடிவிட்டனர். பராக்கிரமனும் அப்போரில் குலசேகரனாற் கொலையுண்டான்; அவனுடைய மனைவி மக்களும் குலசேகரன் வாட்கு இரையாயினர். உரிமை மகளிருள் சிலர் உயிர்தப்பி மலைநாட்டிற் புகுந்து மறைந்து வாழ்ந்துவந்தனர். அவரிடையே பராக்கிரமனுடைய புதல்வர்களுள் கடைசி மகனான வீர பாண்டியன் மறைவாக மலைநாட்டில் இருந்து வரலானான். இப்போரின் விளைவாகக் குலசேகரன் எண்ணம் நிறைவேறியது. பாண்டிநாடு இவனது ஒருகுடைக்கீழ் வந்தது. திருநெல்வேலியிலிருந்த குலசேகரன் மதுரை நகர்க்கண் பாண்டியரது அரசுகட்டிலேறி முடிவேந்தனாய் விளங்கலுற்றான்.

இந்நிலையில் இலங்காபுரித் தண்டநாயன் தலைமையில் புறப்பட்டுவந்த ஈழப்படை இராமேச் சுரக்கரையில் வந்து இறங்கியது. பராக்கிரமன் கொலையுண்டதும் குலசேகரன் மதுரையிலிருந்து அரசியல் நடத்துவதும் கண்ட தண்டநாயகன் மனம் சினத்தீயால் வெதும்பிப் புகைந்தது. கண்களில் தீப்பொறிகள் பறந்தன. இராமேச் சுரத்துக் கடற்கரையில் காவல்புரிந்திருந்த குறுநிலத் தலைவனை வெருட்டித் துரத்தினான். அதனைத் தனக்கு அடிப் படுத்திப் பாண்டிக்கரையில் இருந்த குந்திக்குளம் என்ற ஊரையும் கைப்பற்றிக் கொண்டான். குந்திக்குளம் குந்துகளம் என்றும் காணப்படுகிறது. இப்போது அது சமரங்கபுரத்துக்கண்மையில் கும்பிகுளம் என்று பெயர்கொண்டு விளங்குகிறது.

இலங்காபுரித் தண்டநாயகன் கடற்கரையைச் சார்ந்துள்ள பகுதியைச் சிறிது சிறிதாகக் கைப்பற்றுவதுகண்ட குலசேகரன், சுந்தரபாண்டியன் என்ற தலைவன் ஒருவரோடு படையொன்றை விடுத்து ஈழப்படையை ஈடழிக்க முயன்றான். பாண்டிப் படை வலியிழந்து பறந்தோடிவிட்டது; சுந்தரபாண்டியன் தோல்வியுற்றான். பின்னர்ப் பாண்டியராசன் என்பவர் தலைமையில் ஒரு பெரும் படை சென்றது. அது கண்டதும் தண்டநாயகன் தானை சீறியெழுந்து சினப்போர் புரிந்து பாண்டிய ராசனைப் புறந்தந்தோடச் செய்தது; அப்போரில் குலசேகரனுக்கு நெருங்கிய துணைவனாய் விளங்கிய ஆளவந்தான் என்னும் தானைத்தலைவன் போர்ப் புண்பட்டு மாய்ந்தான். குலசேகரன் உள்ளத்தில் அசைவு பிறந்தது. இலங்காபுரித் தண்டநாயனுக்குப் பாண்டியநாட்டில் இடமும் வலியும் கிடைத்தன; எண்ணியவாறு போர்ப்புகழும் எய்துவதாயிற்று.

“பராக்கிரமனைத் தொலைக்கப் புகுந்து பராக்கிரமபாகுவின் பகையுண்டாக்கிக் கொண்டோம்; இனி இதனைக் கூடாதொழியின், பாண்டியர் குடியால் தமிழ்நாட்டிற்குட் பிற நாட்டினர் புகுந்து அரசு நிறுவினர் என்ற பெரும் பழியுண்டாமே” எனக் குலசேகரன் நினைத்தான். நாட்டில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த பராக்கிரமனுடைய தானைமறவர் களைத் தேடித் திரட்டினான். அந்நாளில் கொங்கு நாட்டில் குலசேகரனுக்கு மாமன் ஒருவன் ஆட்சி செய்து கொண்டிருந்தமையின் அவனுடைய படைகளையும் சேர்த்தான். பாண்டிப்படையும் கொங்கப் படையும் சேர்ந்துவரத் தானே அப்படையை முன்னின்று நடத்தி இலங்காபுரித் தண்டநாயகனுடன் போர் தொடுத்தான்.

பராக்கிரமன் படைமறவர் உள்ளன்போடு போர் செய்ய வில்லை; கொங்கப்படை அத்துணைப் படைப்பயிற்சியின்றியிருந்தது. படையினது. தொகை பெருகியிருந்ததேயன்றி வலி பெருகவில்லை. ஈழப்படையில் கிளர்ச்சியும் மறமும் படை தொடுப்பும் கண்டவள விலேயே குலசேகரன் படை வலிதளர்ந்து சிதையலுற்றது. பராக்கிரமனுடைய படைமறவருட் சிலர் ஈழப்படையுடன் கலந்து இலங்காபுரித் தண்டநாயகனுக்கே துணைசெய்தனர். முதலில் குலசேகரன் தோற்றான். மதுரைநகர் தண்டநாயகன் கைக்கு வந்தது. அவன் மறச் சான்றோர்களை மலைநாட்டுக்குச் செலுத்திப் பராக்கிரமன் மகன் வீரபாண்டியனைத் தேடிக் கொணர்ந்து அவனையே பாண்டி வேந்தனாக்கினான்.

குலசேகரனோடு நடத்திய போரில் கீழை மங்கலம், மேலை மங்கலம் என்ற சிலவூர்கள் தண்டநாயகன் வசமானபோது அவற்றிற்குக் கண்டதேவமழவராயன் என்பவனைத் தலை வனாக்கினான்; தொண்டி, திருவேகம்பம் முதலிய பகுதிகட்கு மழவ சக்கரவர்த்தி யென்பவனைத் தலைவனாக்கினான். இவ்வாறே புறத்தே பாண்டி நாட்டவர்க்குச் சிறப்புச் செய்யினும் அந்த நாட்டு மக்கட்கு அத் தண்டநாயகன் மிக்க துன்பம் செய்தான். ஊர்களைச் சூறையாடினன்; வயல்களில் தீ வைத்தனன்; உயிர்க்கொலை பல புரிந்தனன். இதனால், அத் தலைவர்கள் தண்டநாயகன் காட்டும் அன்பில் ஐயமுற்றனர்; செய்யும் சிறப்பில் நம்பிக்கை இழந்தனர்.

இதுநிற்க, படையிழந்து பரிபவப்பட்டோடிய குலசேகரன் தென்பாண்டி நாட்டுட் புகுந்து பெரும் படை யொன்றைந் திரட்டிக் கொண்டு வந்தனர். அவன் வரவுகண்ட மழவராயனும் மழவசக்கர வர்த்தியும் குலசேகரனோடு கூடிக் கொண்டு மதுரையை முற்று வாராயினர். அதனால் பேரச்சம் கொண்ட வீரபாண்டியன் மதுரையைவிட்டு ஓடிவிட்டான். தண்டநாயகனும் கடற்கரைப் பகுதிக்கோடி ஈழ வேந்தனைப்படையொன்றைத் துணையாகச் செலுத்துமாறு வேண்டிக் கொண்டான். வேண்டிய வாறே ஈழ நாட்டினின்றும் வந்த பெரும் புதுப் படையுடன் கூடி இலங்காபுரித் தண்டநாயகன் குலசேகரனை மறுபடியும் பொருது வென்று வெருட்டிவிட்டு வீரபாண்டியனுக்கு மதுரையில் முடிசூட்டி வெற்றிவிழா நடத்தினான். பின்பொருகால் குலசேகரன் சீவில்லிப் புத்தூரருகே ஈழப்படையொடு பொருது தோற்றுத் திருநெல்வேலிப் பகுதிக்குச் சென்று சேர்ந்தான்.

பன்முறை முயன்ற வெற்றி பெறாமை ஒருபுறம் வருத்த, மற்றொருபுறம் தன் செயல்களால் ஏதில் ஈழப்படைக்குத் தமிழ் நாட்டில் ஏற்றமும் இடமும் உண்டானது குலசேகரனுக்குப் பெருவருத்தத்தைச் செய்தது. அந்நாளில் சேர நாட்டரசரினும் சோழ வேந்தரே உலகுபுகழும் போர்ப்புகழ் எய்தியிருந்தனர். அவர்களால்தான் தமிழகத்தில் தனிப்புகழும் கெடாது நிலைபெற்று வந்தது. குலசேகரன் அதகை எண்ணினான். இராசகேசரிவன்மனான இரண்டாம் இராசாதிராசன்பால் சென்று நிகழ்ந்தது முற்றும் அவனுக்கு நன்கு எடுத்து இசைத்தான்.

இரண்டாம் இராசாதிராசன் வேண்டும் அளவு தனிப் பெரும் படையொன்றைக் குலசேகரனுக்குத் துணைபுரியுமாறு அனுப்பி யிருந்தான். அப்படைக்குத் தலைவனாக எதிரில் சோழச் சம்புவராயன் மகனான திருச்சிற்றம்பலமுடையான் பெருமாள் நம்பிப் பல்லவ ராயன் என்பான் சென்றான். சோழர் படையின் தென்றிசைச் செலவு கண்டமாத்திரை பாண்டியப் படை உடைந்தோடிற்று; பராக்கிரமன் மகன் வீரபாண்டியனும் முன்போல் ஓடிவிட்டான். சிங்களப்படை சிதறுண்டு போயிற்று. குலசேகரன் மதுரைக்குரியவனானான். இதனையறிந்த பராக்கிரமபாகு மறுபடியும் இலங்காபுரித் தண்ட நாயகனையும் சயதர தண்டநாயகனையும் இருபெரும் படைகட்குத் தலைவராக்கித் தமிழ் நாட்டிற்குட் செலுத்தினான். ஈழப்படையும் குலசேகரன் தூசிப்படையும், தொண்டி, பாசிப்பட்டினம் என்ற இடங்களிற் கைகலந்து பொருதின. அவற்றுள் ஈழப்படையே வெற்றிபெற்றது. அதனால் அப்பகுதிகளில் வாழ்ந்த மறவர்களும் பிறரும் ஈழப்படைத் தலைவர்கட்கஞ்சி அவர்வழி நிற்பாராயினர். அவர்கட்குத் தலைவனான மாளவ சக்கரவர்த்தியென்னும் ஒருவனுக்குப் பொன்னும் பொருளும் தந்து தமக்குத் துணையிருக்கு மாறு மனத்தைத் திரித்துக் கொண்டனர். அவரது படையும் வடக்கு நோக்கி முன்னேறுவதாயிற்று. திருச்சிராப்பள்ளிப் பகுதியைச் சேர்ந்த ஆலம் பாக்கத்தில் வாழ்ந்த சிவப் பிராமணர் சிலர் ஈழப்படை வடக்கு நோக்கிவருவது கேட்டஞ்சி ஊரை விட்டு ஓடத் தலைப்பட்டனர்.

பின்னர்ச் சென்ற சோழர் பெரும்படையுடன் பாண்டிப்படையும் கொங்க நாட்டுத் தலைவர் விடுத்த கொங்குப்படையும் வந்து சேர்ந்தன. முப்பெரும்படையும் கடல்பெயர்ந்து செல்வது போல நம்பிப் பல்லவராயன் தலைமையில் செல்லலுற்றன. ஈழப்படை வடக்கே காளப்பேர் நோக்கி வந்துகொண்டிருந்தது.

தொண்டை நாட்டில் காஞ்சிமாநகரைச் சூழ இருக்கும் பகுதிக்கு எயிற்கோட்டம் என்பது பெயர். கங்கை பாயும் நாடாகிய கௌடதேசத்திலிருந்து சிவாச்சாரியர் பலர் தென்னாட்டிற்கு வந்து மடங்கள் நிறுவி, மக்களுக்குச் சிவதன்மங்களை (சிவாகம நெறிகளை) அறிவுறுத்தி வந்தனர். தீக்கை முறைகளை முதற்கண் உண்டாக்கினவர்கள் அவர்களே. களசூரி வேந்தரும் மாளவ வேந்தரும் சோழ வேந்தரும் பிறரும் இம்மடங்கள் புரிந்த சிவப்பணியின் பொருட்டு ஊர்களும் விளை நிலங்களும் பொருளும் தந்து சிறப்பித்தனர். அவர்கள் நிறுவிய மடங்கள் கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய நாடுகளில் ஆங்காங்கு இருந்து சமயத் தொண்டுபுரிந்தன. மக்கட்குச் சமயக் கல்வி கற்பித்தலும், மருத்துவச் சாலை நிறுவி உடற் குண்டாகும் நோய்களைப் போக்குவதும், காணார் கேளார் அனாதைச் சிறுவர்கள் ஆகியோரைத் தொகுத்து ஆதரித்து அறிவு நல்குவதும் இம்மடங்கள் செய்த சிறந்த பணிகள். இதனால் நாடாளும் வேந்தர் இம் மடங்களின் தலைவர்பால் ஞானவுரை கேட்டு மாணவரானது பெருஞ் சிறப்பெனக் கருதினர்; மாணவரான வேந்தர் சிலர் தம்மை மாணவரென்னாது புதல்வரெனவே கூறிக்கொண்டனர். சமயம் சிசேடம் நிருமாணம் எனப்படும் மூவகைத் தீக்கைகளையும் வேந்தர்கள் பெற்றனர். களசூரி கணபதி வேந்தர் தான் பெற்ற தீக்கை கராணமாத் தன்னைத் தீக்கா குரவர்க்குப் புதல்வனாகவே கூறிக்கொண்டான். பெருவேந்தர்களை அடியொற்றிக் குறுநிலத் தலைவர்களும் இவ்வாறு சிவதீக்கை பெற்ற “ஞானப் புதல்வர்களாய்” விளங்கினர். சிவதீக்கை செய்து சிவதன்மங்களை அருளிய சிவாச்சாரியர் பலர் வேந்தர்கட்கு “ராஜ குரு” வாக இருந்தனர். சிவாச்சாரியர்களைச் சிவமென்றே கருதி வழிபட்டனர். இராசராதிராசன் காலத்தில் திருவொற்றியூரில் பெரியதோர் சைவமடம் இருந்தது. அதற்குத் தலைவர் சதுரானை பண்டிதர்; அதனால் அது சதுரானை பண்டிதர் மடம் என்று பெயர் பெற்றது. அதன்கண் சிவாகமங்கள் மக்கட்கு உரைக்கப்பெற்றன. மடத்து ஆசிரியர் திருக்கோயில்களில் வியாகரணம் முதலிய கல்வி நெறிகளைக் கற்பித்தனர். இது கற்பிக்கும் மண்டபத்துக்கு வியாகரண தான மண்டபம் என்றும் பெயர். அம்மண்டபத்தில திருவிழாக் காலங்களில் சதுரானை பண்டிதர் மடத்துச் சான்றோர், அங்கு வந்து கூடும் மக்களைத் தொகுத்துச் சமயச் சொற்பொழிவுகள் செய்தனர். அச்சொற்பொழிவு கட்கு நாடாளும் வேந்தரும் வந்திருப்பர். பங்குனி உத்திரவிழா வொன்றில் திருவொற்றியூரில் இராசாதிராசன் வந்திருந்து கேட்க, சதுரானை மடந்து வாகீச பண்டிதர் என்பவர் ஆளுடைய நம்பிகளின் வரலாற்றைச் சொற்பொழிவு செய்தாரென அக்கோயில் கல்வெட் டொன்று கூறுகின்றது. இவ்வாறு நாட்டில் ஆங்காங்கு மக்கட்குச் சமயவறிவும் சமய வொழுக்கமும் மடத்துத் தலைவர்களால் கற்பிக்கப் பெற்று வந்தமை நாட்டுவரலாற்றைப் பயில்வோர் இல்லாமையால் மறைந்துபோயிற்று. மடங்கட்கு அளவிறந்த பொருளும் தங்கட்குரிய அறத்துக்குப் புறம்பான தொழில்களும் உண்டாகவே, மடத் தலைவர்கள் ஏனைப் பெரிய பெரிய இல்லற மிராசுதார்களைப் போலத் துறவற மிராசுதார்களாய் விட்டனர்.

அந்நாளில் உமாபதி தேவரென்னும் சான்றோர் காஞ்சி நகர்க்குத் தெற்கில் ஏழெட்டுக்கல் தொலைவிலிருக்கும் மாகறல் என்னுமிடத்தில் மடம் ஒன்று நிறுவி மக்கட்குச் சிவதன்மங்களையும் சிவ ஞானத்தையும் அறிவுறுத்தி வந்தார். சிவஞானச் செம்பொருளை வரையாது வழங்கியதுபற்றி அவரை ஞானசிவதேவரென்றும் மக்கள் பாராட்டிப் பரவினர். அப் பகதிக்குத் தலைவனாகிய எதிரிலி சோழச்சம்புவராயன் அவர்பால் தீக்கை பெற்று அவர்க்கு ஞானப்புதல்வனானான். அவர் இனிதிருந்து தம்முடைய சமயப் பணிகளை நன்கனம் ஆற்றுதற் பொருட்டுப் பொன்னும் பொருளும் மிகுதியும் நல்கினான். அவர் செய்யும் வழிபாட்டு முறைகளில் சம்புவராயன் உள்ளத்தில் மிக நம்பிக்கை யிருந்தது. அவர் எண்ணுவது எண்ணியவாறே நிகழுமென எண்ணினான். எத்தகைய அரசியல் நிகழ்ச்சிக்கும் அவருடைய அறவுரையும் அறிவுரையும் அவனுக்கு வேண்டியிருந்தன.

இந்நிலையில், சோழவேந்தன் பணிமேற் கொண்டு தன்மகன் பல்லவராயன், பாண்டியன் குலசேகரன் பொருட்டுச் சோழர் படைத் தலைவனாய்ச் சென்றிருப்பதும், போகும் ஈழப்படையை எதிர்த்து நிகழ்வதும், தொடக்கத்தில் பாண்டிப்படை ஈழப்படைக்குத் தோற்றதும் பின்பு கொங்குநாட்டுத் தானை வந்து சோழப் படை யுடன்கூடிப் பாண்டிப் படைக்குத் துணையாய்ப் போர்த்தொடுத் திருப்பதும் எதிரிலிசோழன் கேள்வியுற்றான். ஈழப்படைத் தலைவர்கள் தாம்வென்ற பகுதிகளில் மக்களைக் கொன்றும், ஏர்களைத் தீக்கிரை யாக்கியும் கோயில் களைச் சூறையாடியும் கொடும்பாடு செய்வது சம்புவராயனுக்குத் தெரிந்தன. ஈழர்கள் செய்யும் கொடுஞ்செயல் களைக் கேட்குந்தோறும் சம்புவராயன் உள்ளத்தில் கலக்கம் தோன்றுவதாயிற்று. பாண்டிநாட்டு வடவெல்லைநோக்கி முன்னேறி வரும் ஈழப்படை சோழநாட்டிற்கும் புகுமோ என்றோரெண்ணம் தோன்றி அவன் மனத்தை அலைப்பதாயிற்று. இரவு பகல் கண்ணுறக்கம் இலனானான் எதிரிலிசோழச் சம்புவராயன்.

ஒருநாள் தன் மனக்கவலையை ஞான குருவாகிய ஞான சிவதேவரிடம் தேரிவிக்கக் கருதிப் படைவீட்டினின்றும் புறப்பட்டு எழிற்கோட்டத்து ஆற்பாக்கத்திற்குச் சென்றான். சம்புவராயனது வரவறிந்த ஞானசிவதேவர் அவனை அன்புகனிய வரவேற்று நல்வாழ்த்து வழங்கினார். வேந்தன் அவருடைய திருவடியில் வீழ்ந்து வணங்கி, அரசியல் உலகில் பாண்டி நாட்டுத் தலைவர்கட்கும் ஈழ நாட்டுத் தலைவர்கட்கும் இடையே போர் நிகழும் செய்திகளை விரிவாக எடுத்து மொழிந்தான்; முடிவில் தன் மனக்கவலையைத் தெரிவித்து, “இது எங்ஙனேயாமோ என்று விசாரம் தோன்றி வருத்துகிற” தென்று முறையிட்டான்.

அதுகேட்டதும் ஞானசிவதேவர் சம்புவராயன் உள்ளத்தில் நிகழும் அலமரலைப் போக்குவது குறித்து, அவர் பயின்றுள்ள புராண இதிகாசங்களில் கண்ட நிகழ்ச்சிகள் பல எடுத்தோதி ஆறுதல் மொழிந்து, திருவருளியக்கத்தின் சிறப்பையும், அதனை யுணர்ந்து அதன்வழி நிற்பார்க்கு “இடும்பையும் இடுக்கணும் பரிவும் துன்பமும் கடும்பகற்பட்ட பனிபோல் மறைந்தொழியும்” என்ற திறத்தையும் சைவாகமங்கள் சைவத் திருமுறைகள் வாயிலாக எடுத்தொதித் தெருட்டினார். அவ்வுரைகளால் ஒருவாறு தெளி வுற்றானாயினும், ஞானாசிரியரை மறுபடியும் வணங்கி, “ஈழப் படையாகிறது சாலவும் பாபகர்மாக்கள் நிறைந்தது; அவர்கள் சோழமண்டலத் தெல்லையிலே புகுதில் ஸ்ரீமகாதேவர் கோயில் உள்ளிட்ட தேவர்கள் கோயிலுக்கும் பிராமணருக்கும் ராஷ்டரத்துக்கும் அடங்கா விரோத முண்டாகும்; இதற்கும் பரிகாரமாக ஜபஹோமார்ச் சனங்களால் எல்லாப்படியாலும் அவர்கள் அபிஷ்டம் அதம் பண்ணியருளவேண்டும்” என்று வேண்டிக்கொண்டான்.

ஞானசிவதேவர் சம்புவராயனுடைய உள்வேட்கை தெரிய விளங்கியதும், தானும் மனம் தெரிந்து, “ஈழப்படையாகிறது, சாலாபாஷ்டருமாய்த் துர்ச்சனருமாய்த் திருவிரா மேஷ்வரத்தில் தேர் கோயிலைத் திருக்காப்புக் கொண்டு பூஜைமுட்டப் பண்ணி அங்குள்ள ஸ்ரீபண்டாரமெல்லாம் கைக்கள் பூசலிலே அறப்பட்டுத் துறப்புண்டு போம்படிக்கு அதிருஷ்ட முகத்தாலே வேண்டும் யத்னம் பண்ணுகிறோம்” என்று சொல்லி இரண்டு நாட்குப்பின் சாம்புவராயன் முன்பிலே “அகோர சுபூஜை” யைத் தொடங்கினார். சம்புவராயனும் அந்தப் “பூஜை”யைத் தொடங்கி வைத்துவிட்டுப் படைவீடு சென்று சேர்ந்து போர்க்களத்தில் செயற்குரிய அரசியற் செயல்முறைகளைச் செய்து கொண்டிருந்தான். ஆற்பாக்கத்தில் ஞானசிவதேவரது “அகோரசு பூஜை” இருபத்தெட்டு நாட்கள் நடந்தது.

இதற்கிடையே, பாண்டிநாட்டில் சோழ பாண்டியர் படையும் ஈழப்படையும் கடும்போர் புரிந்தன. ஈழப்படைத் தலைவர்கள் தொண்டி, தேனிப்பட்டினம், மானாமதுரை, நெட்டூர், சீவில்லி புத்தூர், வேலங்குடி, திருப்புத்தூர், விக்கிரமங்கலம் முதலிய இடங்களில் பாண்டிப்படையை வென்றும் வெருட்டியும் மேன்மை யுற்றார்கள்: ஆயினும் நாட்டின் பல இடங்களிலும் சோழர் படையால் அலைப்புண்டு திரிந்தமையின் ஈழப்படை நாளடைவில் வலிகுன்றத் தலைப்பட்டது. இடையிடையே இருந்த உள்நாட்டுத் தலைவர்களின் ஆதரவைப் பொருள் கொடுத்து விலைக்கு வாங்கித் திரித்ததனால் ஈழத்தலைவர்பால் பொருட்
குறைவும் உண்டாயிற்று. ஈழ நாட்டுமறவர் நாட்டு மக்கள்பால் அன்பின்றித் துன்பமே மிகச் செய்தமையால் மக்கட்கு அவர்கள்பால் வெறுப்பும் பகைமையும் இயல்பாகவே உண்டாய்விட்டன.

ஒற்றர்கள் வாயிலாக ஈழப்படைக் குளதாகிய குறைபாட்டி னையுணர்ந்த சோழர் படைத்தலைவர் வேறொரு படையினைத் துணை செய்யவிடுமாறு சோழவேந்தனை வேண்டினர். வேண்டிய வாறே பெரும்படையொன்று விரைந்து வந்து சேர்ந்தது. சோழர் பெரும்படை புதிது வந்தணைந்த பெரும் படையுடன் ஈழப்படையை எதிர்நின்று தாக்கி அதனை ஈடழிக்கலுற்றது. மறத்தீக் கிளர்ந்தெழப் பொரும் தமிழ்ப் படைமுன் ஈழப்படை எதிர் நிற்கலாற்றாது உடைந்தோடலுற்றது. ஈழப்படைக்குத் துணைசெய்த பாண்டித் தலைவர் சிலர் இருந்தவிடம் தெரியாதவாறு ஓடி ஒளிந்தனர். ஈழப்படை இதுகாறும் பெற்றுப் போந்த வெற்றியெல்லாம் பகற்கனவாய் மறைந்தழிந்தன.

இவ்வாறு நாடோறும் தமிழ்ப்படையே வெற்றிசிறந்து மிகுவது கண்ட குறுநிலத் தலைவர் பலரும் சோழர்படையின் பக்கம் நின்று துணை செய்வாராயினர். ஈழப்படைத் தலைவர்களான இலங்காபுரித்தண்ட நாயகனும் சயதர தண்ட நாயகனும் அவர்கட்குத் துணையாக வந்த தானைத் தலைவர்களும் இனி, இங்கே போர் புரிந்து வெற்றி பெறுவதென்பது இயலாது எனத் தெரிந்து தம் ஈழநாட்டிற்கு ஓடிவிட்டனர். பாண்டியன் குலசேகரனுடைய ஆட்சி நிலைபேறு கொண்டது.

இவ்வெற்றி நலத்தால் சோழவேந்தனான இராசாதிராசனது புகழ் பெருகிற்று. பாண்டி நாட்டு மக்கள் சோழவேந்தன் படைமற வரைப் பாராட்டி வாழ்ந்தனர் படைத் தலைவனான பல்லவராயன், சோழர்படைக்கு எய்திய வெற்றி நலத்தையும் வேந்தன் புகழ்ப் பெருக்கத்தையும் தன் தந்தைக்குத் திருமுகமெழுதித் தெரிவித்தான். எதிரிலி சோழன் இன்பக்கடலில் மூழ்கினான். தமிழ்ப்படை பெற்ற வெற்றிக்கு ஞானசிவ தேவரது “அகோர சுபூஜை” காரணம் என எதிரிலி சோழச் சம்புவராயன் எண்ணினான்; நேரே ஞானசிவர்பால் சென்றான்.

சம்புவராயன் வந்து சேருமுன் ஞானசிவ தேவருக்குச் செய்தி தெரிந்துவிட்டது. அவருக்கும் மகிழ்ச்சி மிகுந்தது. இறைவன் திருவருள்தான் இவ்வெற்றியை நல்கிற்றென அவரும் எண்ணி அத்திருவருளை வாழ்த்தினார். சம்புவராயனுக்கு ஞானசிவ தேவர்பால் பெருமதிப்பும் பேரன்பும் உண்டாயின. ஞானசிவ தேவருடைய திருவடிகளில் பன்முறையும் வீழ்ந்து வணங்கிப் பரவினான். முடிவில், அவரைக் கைதொழுது, “தேவர் செய்த அதிருஷ்டயத்னமாய் இப்படிப் பலித்தது; இதற்குத் தேவர் ஸ்ரீபாதபூஜையாக நான் தருவதை ஏற்றருள வேண்டும்,” என்று இறைஞ்சினான். ஞானசிவ தேவர், சம்புவராயனை நோக்கி, “நீர் நமக்கு ஏதேனும் முன்பு குறைவாகச் செய்ததுண்டோ? ஒன்றும் இல்லை; எல்லாம் உம்முடையனவாக இருக்கின்றதே” என்றார். “தேவர் பாத பூஜையாக இப்போது ஏதேனும் தரவேண்டும் என்று என் உள்ளம் விரும்புகின்றது” என்று சம்புவராயன் வற்புறுத்தவும் ஞானாசிரியர், “அவஸ்யம் ஏதேனும் தரவேண்டுமென்றிருந்தால் ஆற்பாக்கமாகிற இந்த ஊரைச் செம்பினும் கல்லினும் வெட்டித் தருவது” என்று தெரிவித்தார்.

பின்னர்ச் சம்புவராயன், சோழவேந்தனது ஆணை பெற்று அவனது ஐந்தாமாண்டு நிகழ்ச்சியாக, “ஜயங்கொண்ட சோழ மண்டலத்து எயிற் கோட்டத்து மாகறல் நாட்டு ஆற்பாக்கத்து நன்செய் புன்செய் அகப்பட விளை நிலம் நூற்றறுபத்தேழு வேலியும் எரிகோலும் நத்தமும் குட்டமும் கிணறும் மேனோக்கின மரமும் அகப்பட நாற்பாற்கெல்லையுட்பட்ட நிலம் வெள்ளவாரிபணைக் கூலி தறிவிறை தட்டார்ப் பாட்டம் அந்தா ராயம் உட்பட ஆயமெல்லாமகப்பட்ட ஏகபோகமாக இறையிலியாகக் கொடதேசத்துத் தக்ஷிணராடத்துக் கங்கோஜி சவர்ண கோத்திர மகாமகேஸ்வர ஸ்ருதி ஸ்மிருதி சிந்தே காரநவஸ்யதன் மாஸ்தை உமாபதி தேவரான ஞானசிவ தேவர்க்கு நீர்வார்த்துக் கொடுத்துச் சூரிய சந்திரார்களுள்ள தனையும் செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொடுத்தேன் எதிரிலி சோழச் சம்புவராயனேன்,” என்று கல்வெட்டுமாறு பணித்தான். இஃது ஆற்பாக்கத்துச் சிவன் கோயில் தென்சுவரில் இன்றும் யாவரும் காணக் காட்சியளித்துக் கொண்டுள்ளது.

சைவ முரசு


சைவ சித்தாந்த மகா சமாஜம் 56-ஆம் ஆண்டு நிறைவு விழா, பழனிசைவர் மாநாட்டுத் தலைமையுரை
(30-12-1961)

 பண்டைமறை வண்டரற்றப் பசுந்தேன்ஞானம்
 பரிந்தொழுகச் சிவகந்தம் பரந்து நாறக்
 கண்டஇரு தயகமல முகைக ளெல்லாம்
 கண்திறப்பக் காசினிமேல் வந்த அருட்கதிரோன்;
 விண்டமலர்ப் பொழில்புடைசூழ் வெண்ணெய் மேவும்
 மெய்கண்ட தேவன் மிகுசைவ நாதன்
 புண்டக மலர்தாழ்ச் சிரந்தே வாழும்
 பொற்பாதம் எப்போதும் போற்றல் செய்வாம்.
 திருவிளங்கும் பலமொழியும் சீர்விளங்கு புலவர்பலர்
 சிறப்பத் தோன்றி
 உருவிளங்கும் பாக்கள்பல உரைகள் பல ஆக்குதலால்
 உளவாம் வாய்மை
 மருவிளங்கு தமிழ்மொழியின் மருங்கெழுந்த தெனவிளம்பும்
 மாண்பிற் றாகும்
 திருவிளங்கு வள்ளுவனார் திருக்குறள் கண்டு, அவர் அடியைச்
 சென்னி வைப்பாம்.

சிவநெறி பேணும் செல்வர்களே, தாய்மார்களே!

திருவருட் பெருங்கடலாகிய பழனியாண்டவன் திருவடி நீழலில் இன்று இங்கே கூடும் சைவ சித்தாந்த மகா சமாசத்தின் ஆண்டு விழாவில் தலைமை தாங்கும் சிறப்பை என்னைப் பாராட்டி அளிக்கும் உங்கள் நல்லன்புக்கு என் மனமார்ந்த நன்றி.

இப் பழனி நகரைக் காணும்போது பழம்பெரும் நிகழ்ச்சி ஒன்று என் நினைவில் எழுகின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன். பழனிக்குன்று பொதினி என்றும். இவ்வூர் திருவாவிநன்குடி என்றும் இதனைச் சூழவுள்ள நாடு வையாவி நாடு என்றும் பெயர் தாங்கி நிலவின. இப்போது இவ்வூர்க்குக் கிழக்கில் ஆயக்குடி எனத் திகழும் ஊர் அந்நாளில் ஆவிகுடி என்ற பெயருடன் வையாவி நாட்டுக்குத் தலைநகராக இருந்தது; அதன்கண் இருந்து வையாவிக் கோப்பெரும் பேகன் என்ற வள்ளல் ஆட்சி புரிந்தான். அவன் ஒருகால் பொதினி மலைப்பகுதியில் மயில் ஒன்று கார்முகிலைக் கண்டுகளிமிகுந்து மயிர்சிலிர்த்துத் தன் அழகிய தோகையை விரித்து ஆடுவது கண்டான்; அதன் ஆட்டத்தில் நாட்டம் செலுத்தின அவன் உள்ளத்தே குளிர் காற்று வீசும் இக்கார்கால மாலையில் மயிர்சிலிர்த்து ஆடும் மயில் குளிர்மிக்கு வருந்துமே என எண்ணினான். உடனே தன் போர்வையை அதற்கென அளித்து நீங்கினான். அதுபற்றி அவனை அந்நாளை நல்லிசைச் சான்றோர். “மடத்தகை மாமயில் பனிக்கும் என்று அருளிப் படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக். கடாஅ யானைக் கலிமான் பேகன்” எனப் பாராட்டினர். அப் போர்வை, அக்கானமயிலுக்கு உடுக்கும் உடையாகவோ. போர்க்கும் போர்வையாகவோ ஆகாது என்பது அவன் அறியாதது அன்று. அம் மயில்பால் சுரந்த அருள்மிகுதி அவனது அறிவுக் கண்ணை மறைத்தமையின் அவன் கைகள் தாமாகவே மேலிருந்த போர் வையை எடுத்தளித்தன. அதனை நினைந்த ஆசிரியர் பரணர்.

“என்றும், உடாஅ போரா ஆகுதல் அறிந்தும், படாஅம் மஞ்ஞைக்கு
ஈத்த எங்கோ, கடாஅ யானைக் கலிமான் பேகன்”

எத்துணையாயினும் ஈத்தல் நன்று என்று எண்ணியும். பிறர் வறுமை களைவது கடன் என்று கருதியும் ஒழுகுபவன் என்று கூறுகிறார்.

இத்தகைய பெருவள்ளல் வாழ்ந்த பெருமை மிக்க இடத்தே அருள் வள்ளலாகிய முருகப்பெருமான் கோயில் கொண்டு தனது அருட் செல்வத்தை வழங்குகிறான். அனைத்துயிரும் அதனைப் பெற்று இன்புறுகின்றன. இவ்வள்ளல் இருந்த வளநாட்டில் கோயில் கொண்டருளும் பழனிப் பரமனது நல்லருள் பெற்ற பெருமக்களான தவத்திரு. சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள், தவத்திரு. மறைமலையடிகள், தவத்திரு. சம்பந்த சரணாலய சுவாமி களான திரு. சி.கே. சுப்பிரமணிய முதலியார், திரு. வி.க., திரு. ந. சிவகுருநாதப்பிள்ளை முதலிய பெருமக்கள் தலைமை தாங்கிய இடத்தே நானும் இருந்து பணிபுரிவதென்பது எனக்கே அச்சம் தருகிறது. எனினும், “கருடன் சென்ற நீள்விசும்பில் ஈயும் பறக்கும் இதற்கு என்கொலோ சொல்வது” என்று வீரசோழியப் பாட்டைக் கூறிக்கொள்வது தவிர வேறு சொல் இல்லை.

பெரியோர்களே!
சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் சமரசப் பெருவிழா நிகழ்ந்தபோது கூடியிருந்த நன்மக்கள் பலரை நான் இன்று காண வில்லை; அந்நாளில் அமைந்த அவைகளில் நிகழ்ந்த பொருளுரைகள் பல இப்போது நிகழவில்லை. கூடும் அன்பரிடையே நிலவிய பேச்சுக்களும் செயல்களும் இன்று இல்லை. அவை யாவும் மாறிவிட்டன. மக்களிடையே நினைவும் சொல்லும் செயலும் அன்றுபோல் இன்று இல்லை. அவற்றின் பொருளும் முறையும் புதுமையும் ஒளியும் பெற்றுள்ளன. நினைத்தற்குத் துணைபுரியும் புறப்பொருள்களும் புறநிகழ்ச்சிகளும் நாளும் புதிய புதியவாய் மாறுவதால், நம் நினைவும் சொல்லும் செயலும் புதிய புதிய வண்ணமும் வனப்பும் பெற்று பொலிகின்றன. இம் மாற்றத்தால் மக்களுடைய வாழ்க்கையும், சூழ்நிலையும், மனக்கருத்தும் மாற்றம் பெற்றுள்ளன. ‘நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக’ இயலுவது வாழ்வாதலால், மாற்றம் உலகியல் வாழ்க்கைக்கு இயல்பு. அதனால் தான் மக்கள் அடிவைக்க மாட்டாது உயர்ந் தோங்கி நின்ற பொற்கோட்டிமயமும் இன்று அவர்கள் புல்லிய அடிக்கீழ் மிதிப்புண்டது. பல்லாயிரம் மைல்கள் - கற்கள் என்பது வெறுஞ் சொல்லாய்ச் சுருங்கிவிட்டது. சுருங்கக் கூறுமிடத்து. அறமும் பாவமாய் மாறிவிட்டது. மணமக்களை வாழ்த்துங்கால், மக்கள் பலரைப் பெறுக என்பது முன்பு அறமாகக் கருதப்பட்டது. இன்று அது, வறுமைக்கு இரையாகி வருந்துக எனக் கேடு கூறும் பாவ உரையாகி ஒழிந்தது.

இந்த மாற்றம், உலகம் தோன்றிய நாள்முதல் நிகழ்வது. இதனைத் தொல்காப்பியர். திருவள்ளுவர் முதல் அனைவரும் கண்டனர். கால மாற்றத்தைக் கண்ட வள்ளுவர். “நாள் என ஒன்றுபோற்காட்டி உயிர் ஈரும்வாள்” என்றார். அதனை, அருட் பிரகாச வள்ளலார். எளிய சொற்களால்.

" ஓடுகின்றனன் கதிரவன்; அவன்பின்
 ஓடுகின்றன ஒவ்வொரு நாளாய்,
 வீடுகின்றன, என்செய்வோம், இனிஅவ்
 வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே
 வாடுகின்றனை, அஞ்சலை நெஞ்சே“

என்று நவின்றருளினார்.

இவ்வாறு, மாறுவதே இயல்பாக உடைய உலகில். இப்பொழுது, சமுதாயம், அரசியல், தொழில், வாணிகம் முதலிய துறைகள் பெருமாற்றம் எய்தியுள்ளன. சாதி சமய வேற்றுமைகள் சமுதாயத்தில் பைய மறைகின்றன. அரசியல் நோக்கங்கள் வேறு படுகின்றன. தொழில்களில் எந்திரங்கள் புகுந்து மக்களின் மெய் உழைப்பையும் அது வாயிலாக மக்கள் பண்பையும் மாற்றுகின்றன. வாணிகத்தின் நோக்கமும் போக்கு வரவு வாய்ப்புகளும் பிறவும் பெரு மாறுதல்களுக்கு உள்ளாகிவிட்டன. உயர் கல்வித் துறை யிலும் மக்கள் பண்பை வளர்க்கும் கல்வி சுருங்கி. எந்திர விஞ்ஞானத் துறையில் பெரிதும் சென்று செல்வாக்குப் பெற்றுள்ளது. மக்களின் உணர்விலும் உரையிலும் செயலிலும் புதுமை மணமே நிலை பெற்று விளங்குகிறது. இம் மாற்றங்களுக்கு இடையே நம் சமய உணர்வும் ஒழுக்கமும் பண்டைய நிலையிலேயே நின்று பணி செய்ய முயன்று. நின்ற இடம் சுருங்கித் தேய்ந்து வருகிறது. சில சமய நிலையங்களிலும் பல கோவில்களிலும் இன்றுள்ள செல்வம் குன்றி இருக்குமாயின். கால மாற்றமாகிய புயலில் நமது சமயம் நிலைகுலைந்து சிதைந்து ஒழிந்து மறைந்து போயிருக்கும். எப்படி யோ இப்புயலிடையே நமது சமயம் ஒருவாறு நின்று நிலவுவது திருவருட் பெருங்குறிப்பு என்று தான் நினைக்க வேண்டியிருக் கிறது! “தெய்வம் காட்டுமே யன்றி ஊட்டாது” என்றபடி. தெய்வத் திருவருள் காட்டும் இச் சூழ்நிலையை உணரும் நாம். அதன் திண்ணிய நிலைபேற்றுக்கு ஆவன செய்தல் சீரிய கடனாகும்.

கால மாற்றந்தான் சாதி சமய வேண்றுமையுணர்வு தளர்ந் தமைக்கும். அவற்றின் பெயரால் நிலவிய கொடுமைகள் மறைந்த மைக்கும் காரணம் என்பர்; அவ்வாறு சொல்வதை விடத் தொழில், வாணிகம், விஞ்ஞானம், பொருளாதாரம் முதலியவற்றைப் பற்றிய அறிவும், அரசியல், சமுதாயம் முதலிய அமைப்புக்களைப் பற்றிய உணர்வும் பெருகியிருப்பதே காரணம் என்பது உலகியலை உணர்ந்து கூறும் உண்மை உரையாகும். உலக மக்களிடையே நிறவேற்றுமையும் சமய வேற்றுமையும் மக்கள் இனத்துக்கே கேடு செய்வன என்ற உணர்வு தோன்றி நிற்பதற்கும் இதுவே காரணம். இந்நிலையில், உலகியற் கல்வியும், உணர்வும், ஒழுக்கமும் மக்களிடையே வேற்றுமையையும் பகைமையையும் எழுப்பி வாழ்க்கையைச் சீரழிக்காதவாறு காத்துப் பேணும் கருத்து டைய தலைவர்கள் தோன்றி இருப்பதும் நமக்கு மகிழ்ச்சி தருகிறது. சாதி சமயக் வேற்றுமைச் சழக்கில்லாத சமுதாய அமைப்புத்தான் சித்தாந்த சைவச் செந்நெறியின் சீர்த்த நோக்கமாகும். இதனைச் சைவத் திருமுறைகளையும், திருத்தொண்டர் வரலாறுகளையும், சிவஞான போதம் முதலிய மெய்ந் நூல்களையும் நன்கு பயின்றோர் இனிதறிவர். சமய குரவர்களான சான்றோர். மண்ணக வாழ்வு நன்கு அமைந் தாலன்றி. விண்ணுலகிலோ மேலுலகிலோ மக்களு யிர்க்கு வாழ் வில்லை என்ற கருத்துடையவர். அதனைப் “புவனியிற் போய்ப் பிறவாமையின் நாள் நாம் போக்கு கின்றோம் அவமே; இந்தப் பூமி சிவன் உய்யக்கொள்கின்ற ஆறு” என்று அவர்கள் நமக்கு அறிவுறுத் தியது நினைவில் இருக்கிறது.

நமது பிறப்பின் அருமையையும் சான்றோர் நன்கு விளக்கி யிருக்கின்றனர். “எண்ணரிய பிறவிகளில் மானிடப் பிறவியே யாதினும் அரிதரிது காண்” என்பர். மக்களுடம்பு தான் ஞானம் பெறுதற்கு வாயில்: அதனை நன்கு பேணுவது அறமாகும். அது பற்றியே திருமூலர், “உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்” என்று அறிவுறுத் தினார். இவ்வுடலை இனிது ஓம்பி. மண்ணக வாழ்வை மாண்புற நடத்துபவனே. அயரா இன்ப அமர வாழ்வு பெறுவன் என்ற சமயக் குரவரது அருட் கருத்துக்கு ஆதரவாகத் திருவள்ளுவனார், “வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” என்றார். எனவே மண்ணுலகில் பொன்னும் பொருளும் ஈட்டிப். பிறர்க்கும் தனக்கும் பயன்பட வாழ்தல் வேண்டும் என்பது சித்தாந்த செந்நெறிக் கருத்தாவது காணலாம். இது பற்றியே ஞானசம்பந்தரும் “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்; வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதும் ஓர் குறையில்லை” என்று அறிவுறுத்தினார்.

அதுவாயின், செல்வ நிலையாமை, யாக்கை நிலையாமை முதலிய இயல்புகள் சமய நூல்களில் பெருகித் தோன்றுதற்குக் காரணம் யாது என்று கேட்கலாம். உலகில் இன்ப நுகர்ச்சிக்குக் கருவியாகிய உடலும், உலகியல் பொருள்களும், கால வெள்ளத்தில் அலைப்புண்டு. வளர்ச்சியும் தளர்ச்சியும் வீழ்ச்சியும் எய்தி, தம்மால் நல்கப்படும் இன்பத்துக்கு நிலையாமையாகிய சிறுமையைத் தருகின்றன. அதனால் உலகயில் இன்பம் சிற்றின்பமாய் விடுகிறது. “கண்டு கேட்டு உற்று மோந்து உண்டுழலும் ஐங்கருவி. கண்ட இன்பம் தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்” என்று அருட் செல்வரான நம்மாழ்வார் நவில்வது இங்கே நினைவு கூறத்தக்க தாகும். சிறிது போதில் கழிவது பற்றி அதனைப் பெரிது பெற்ற நெடிது நுகர்தற்கே உயிர்கள் மிகவும் எண்ணி முயல்கின்றன.

“எல்லா உயிர்க்கும் இன்ப மென்பது தான் அமர்ந்து வரூஉம் மேவற்றாகும்” என்ற தொல்காப்பியர் கருத்தின்படி இன்பப்பேறு குறித்த நாட்டமும் முயற்சியும். எல்லா உயிர்களுக்கும் இயல்பாக உள்ளன. ஆயினும், இன்பத்துக்குத் தோற்றமும் நிலைபேறும் தருவது பொருளாதலால். பொருளை ஈட்டுதலிலும், அதனை நுகர்தற்குரிய உடலைப் பேணுவதிலும் தம்முடைய உணர்வு உழைப்பு முதலிய இரண்டையும் செலவு செய்து. பொருளே வாழ்வு உடலோம்புவதே வாழ்வு எனக் கருதியுழந்து. அவற்றின் நிலையாமைப் பண்பால் ஏமாந்து. இடும்பையும் கவலையும் எய்தி வருந்துகின்றனர்.

நிலைத்த பெரிய இன்பம் பெற வேண்டுமென எண்ணு வதும், முயல்வதும் நல்லறம்; நிலையாய பெரிய பொருளை நாடிப் பெற முயல்வது அறிவுடைமை. அந்தப் பெரிய பொருளை அறிந்து. அதனால் பெறக்கூடிய பேரின்பத்தைப் பெற முயல்பவர்க்கு. உலகியல் பொருளின் நிலையாமையையும் இப் பொருள்கள் நல்கும் இன்பத்தின் சிறுமையையும் காட்டுவது. பேரின்பப் பெருவாழ்வின் இயல்புணர்ந்த பெரியோர்க்கு அறமாதலால். அவர்கள், செல்வம் யாக்கை முதலியவற்றின் நிலையாமைகளை அற நூல்களிலும் சமய நூல்களிலும், காலம் வாய்த்த போ தெல்லாம். தொகுத்தும் வகுத்தும் விரித்தும் விளம்பினர். இதனால் மண்ணுலக வாழ்வை வெறுத்து. நிறைந்த பொருளைச் சிறந்த அறநெறியில் ஈட்டுவதைக் கைவிட்டுத். தெளிந்த இன்பத்தைத் துறந்தொழுகுவதுதான் அறம் என்பது அவர்கள் கருத்து எனக் கொள்வது குற்றமாகும். வையத்தில் வாழ்பவர் அறிவு மிகுந்து. உழவு, தொழில், வாணிகம் என்ற துறைகளில் ஈடுபட்டுப் பெரும் செல்வர்களாய்ப் பலவகை இன்பங்களையும் ஆரத்துய்த்தல் வேண்டும். அஃது அவர்களுக்கு மெய்ம்மையுணர்வு நல்கி மேன்மை வாழ்வு எய்துவிக்கும் என்பது அறவோர்களின் ஆழ்ந்த அகன்ற நுண்ணிய கருத்தாகும். மேலும், சேய்மையிலுள்ள பொருள்களைத் தெளியக் காண்பதற்குக் கண்ணாடி போட்டுக் கொண்டவன். அதனால் காணப்படும் பொருளின்பால் பெறலாகும் இன்பத்தை நுகராமல் அக்கண்ணாடியாகிய கருவியையே பெரிதாக எண்ணி, அதனைப் பேணுவ தொன்றையே வாழ்க்கையின் நோக்கமாகக் கொள்வானாயின். அறிவுடை உலகம் அவனைப் பொருளாக மதியாது. அதுபோல, உலகியல் இன்பத்துக்குக் கருவியாகிய பொருளுக்கும் தொழிலுக்குமே கண்ணையும் கருத்தையும் செலுத்துவது முறையாகாது; அறமும் ஆகாது என்பது பற்றியே சான்றோர் பொருள் செல்வங்களின் நிலையாமையாகிய சிறுமை யைக் காட்டித் தெளிவுறுத்தினர்.

தொழில் வளர்ச்சியும் பொருள் பெருக்கமுமே வாழ்வின் குறிக்கோளாக கொண்ட உலக நாடுகள். விஞ்ஞான அறிவைப் பெருக்கி, விரிந்து பரந்து நிறைந்த உயிர்களையும் பொருள் களையும் சுருங்கிய காலத்தில் அழிக்கும் சிறந்த கருவிகளை ஆக்கும் சூழ்நிலையில் புகுந்து அல்லற்படுவதை இன்று நாம் கண்ணாரக் காண்கிறோம். உயிர்ப் பண்புகளையும் உலகியல் அறப்பண்பு
களையும் ஆராயும் துறையை நாடாத இன்றைய மக்களிடையே விஞ்ஞான அறிவுப் பேற்றில் வேட்கையும் முயற்சியும் வீறு கொண்டிருப்பதே போதிய சான்றுமாகும்.

மக்களின் எதிர்கால வாழ்வுக்கு அமைந்த ஒளியும் ஊக்கமும் உண்டாதற்கும் உண்டாக்குதற்கும் உரிய முயற்சியில் ஈடுபட்ட உலகமேதைகள், இன்று ஓரளவு மேனின்று உண்மையொளி பரப்புகின்றனர். இவ்வாறே ஆயிரம் ஆண்டுகளுக்குமுன், மக்களு லகில் போர்ப் புகழும் பொருட் புகழுமே குறிக்கோளாக நிலவியது கண்டோர், அகவாழ்வில் வெறுப்பும். துறவு வாழ்வில் விருப்பும் தோன்றத்தக்க நூலும் உரைகளும் ஆக்கி உலகியல் பொருள் வாழ்வில் மக்களுக்கு நாட்டமுண்டாகாத வகையில் பணி புரிந்தனர். அதன் விளைவாக மக்களினத்தின் ஒருமை அழிந்தது; வேற்றுமை மிகுந்தது; போரும் பூசலும் பொங்கி எழுந்தன; ஆண்மை குறைந்தது; ஆற்றல் காற்றில் பறந்தது; உழவும் தொழிலும் உருக்குலைந்து ஒழிந்தன; வறுமை வளர்ந்தது; பிறர்க்கு அடிமை யுற்று வாடும் கீழ்மைநிலை உருவாயிற்று. இந்த மனப்பான்மையை மாற்றி, மக்களிடையே நிலவும் வேற்றுமைக் கொள்கைகளைப் போக்கி, ஒத்த உணர் வொழுக்கமும் உயரிய நோக்கமும். மக்கள் மனதில் அடையச் செய்வது கடன் என்று அந்நாளைய சான்றோர் உள்ளம் எண்ணத் தலைப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளுக்கு இடையே. வேதங்களும், இதிகாசங் களும் தோன்றி, முழுமுதல் பொருளாகிய சிவனுக்கும் மக்களுக்கும் இடையே கூறப்படும் விண்ணுலக வாழ்க்கையைக் காட்டி விண்ணுறையும் தேவர்கள் மண்ணுலக மக்களைப் போல உழவும் தொழிலாகிய செயல்வகையின்றி நினைவு போனபடியே எல்லா இன்பங்களையும் நெடிது நுகர்வர் என்றும். அவர்கள் சிவபரம் பொருளின் திருவருளை நேரே பெறுவர் என்றும் உரைத்து; மக்களைப் போல அவர்கள் மழை, மின்னல், இடி, கடும்புயல், நிலநடுக்கம் முதலியவற்றுக்கு ஆளாகாது அவற்றுக்குத் தலைமை தாங்கி நடத்துவர் என்றும் உரைத்தனர்; ஆயினும், புராணங்கள் தோன்றி, தேவர்கள் அசுரர்களால் பெருந்துன்பத்துக்கு உள்ளாகி வருந்தி இறந்துபட்டதையும் இறப்பைத் தடுப்பதற்காகக் கடல் கடைந்து அமுதம் பெற முயன்றதையும், அமுதமுண்டும் அவர் களிற் பலர் இறந்ததையும் ஒளிக்காமல் உரைக்கலுற்றன. “விண் ணோர் அமுதுண்டுஞ் சாவ ஒருவரும் உண்ணாத நஞ்சுண்டு இருந்து அருள் செய்குவாய்” என்று இளங்கோவடிகளும்.

" நூறு கோடி பிரம்மர்கள் நொந்தினார்,
 ஆறுகோடி நாராயணர் அங்ஙனே,
 ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்,
 ஈறி லாதவன் ஈசன் ஒருவனே“

என அப்பரடிகளும் புராணக் கருத்தை வடித்துரைத்தனர்.

மக்களுக்கும் சிவபரம்பொருளுக்கும் இடையே கூறப்படும் விண்ணகத் தெய்வங்கள். மக்களில் உயர்ந்து பரம்பொருள் அருள் வேண்டி வாழும் உயிர்வகை ஆகுமேயன்றி, வேறல்ல. அது பற்றியே மணிவாசகர். அத்தேவர்கள் மெய்ம்மை பொய்ம்மை அறியாது துன்புற்று வருந்துதலின் நம் போலும் மக்களே ஆவர்: அவர்கள்.

" மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண்ணாண்டு மண்மேல்
தேவர் என்றே இறுமாந்து என்ன பாவம் திரிதவரே"

என்று அவர் பொருட்டு இரங்குகின்றார். பிறிதோரிடத்தில்.

" வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான்; மனம் நின்பால்
தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மையெல்லாம் தொழ வேண்டி"

எனத் தேவர்களின் வழிபாட்டுக் குறிப்பும் உயர்வாக இல்லை என விளக்குகின்றார். இதனால், தேவர்கள் பிறவாப் பேரின்பத்தை நோக்காது. தேவபோகமே வேண்டுவர் என்றும் முடிவில் மண்ணில் பிறந்துதான் உய்தி பெறுவர் என்றும் தெரிந்தமையின். நம் சான்றோர் மண்ணுலக வாழ்வை நன்கு மதித்தமை அறிகின்றோம்.

உலகியலையும் சமய நூல்களையும் ஒப்ப நோக்கிய சான்றோர். விண்ணுறையும் தேவர் வாழ்வையும் வெறுத்து. இறைவன் திருவடிக் கண் பெறலாகும் இறவாப் பேரின்பமே மக்கள் முயன்று பெறற் குரியது; இறைவன் படைப்பு நோக்கமும் அதுவேயாகும் என அறிவுறுத்துவாராயினர். இச் சூழ்நிலையில்தான் உபநிடதங்களும் சிவாகமங்களும் தோன்றத் தலைப்பட்டன. அவற்றால் மக்களு யிர்க்கும் சிவத்துக்கும் நேரே தொடர்புண்டு என்பது விளங்கிற்று. சிவமும் உயிரும் உலகும் என்ற மூன்றுமே உண்மைச் சமய வாழ்வின் அடிப்படை என்று மக்களால் உணரப்பட்டது.

நமது சிவநெறியாகிய சைவம். மக்களது இயற்கை அறிவு வளர்ச்சி வாயிலாகத் தானே தோன்றி. மெய்யறிவு பெற்ற மேலோர் வழியாக நாட்டில் நிலவுவது: அதனால் இன்ன சான்றோரால் இன்ன காலத்தில் இன்ன இடத்தில் இன்ன சூழ்நிலையில் சிவநெறி தோற்றுவிக்கப்பட்டது என உரைக்கும் வரலாறே இதற்கு இல்லாதாயிற்று. ஏனைச் சமயங்கள் ஒருவரால் படைக்கப்பட்டு நிலவுவன: அவர் கூறியனவே வேதம்: அவற்றை ஏன்? எப்படி? என ஆராயாது பட்டாங்கு ஏற்று நம்புவதே மக்கள் செயலாகும். நம் சைவ சமயமோ எனின். அறிவாராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது: அறிந்தவற்றைக் கொண்டு அறியப்படாத இறை இயல்பை எண்ணி அறிந்து மக்களை ஒழுகச் செய்வது. இதனைச் சிறிது விளங்கக் காண்போம்.

உலகமும் உயிர்களும் யாவரும் அறிந்தவை. உலகு அறிவில்லாதது: உயிர் அறிவு வடிவானது. அறிவில்லாத ஒன்றும். அறிவுடைய ஒன்றும், வேறு வேறு இனமாதலால். இரண்டும் ஒன்றாய்க்கூடி இயைதற்கு வழியில்லை. அறிவில்லாத உலகப் பொருள்களால் வளரும் அறிவில்லாத உடலும். அறிவுடைய உயிரும். ஒருகாலும் தாமே கூடமாட்டா. உடல் அறிவில் பொரு ளாதலால். தனக்குரிய உயிரைத் தானே தேடிக் கொள்ளாது: உயிர் அறிவுடைய தாகையால். அழகில்லாத நோய் மலிந்த உடம்பை ஒருகாலும் சென்றடையாது. ஆகவே, இரண்டையும் கூட்டி உருவாக்கி வாழச் செய்யும் மூன்றாவது பொருள் ஒன்று வேண்டும். அப்பொருளே சிவம். முற்றிலும் மாறுபட்ட இயல்புடைய உடம்பினுள் இருந்து, உயிரை உலகில் வாழச் செய்வதால், சிவமும் உயிரும் ஒன்றன்று; உலகுக்கு ஒன்றினை அறியும் தன்மை யில்லாமையால். பொருளியல்பை அறிந்து உருவாக்கும் சிவம் உலகப் பொருளுமன்று; வேறாய் இலங்கும் சிவம் இரண்டிலும் வேறுபட்டது. இதனை அணு விஞ்ஞானம் நன்கு காட்டுகிறது. அணுவுக்குள் மாறுபட்ட சக்திகள் ஒன்றாய்ப் பிணிப்புண்டு புதைந்து கிடக்கின்றன. இன்றைய விஞ்ஞான அறிவுக்கு எட்டாது. இன்ன தன்மைத்தென உணரவும் படாது நிற்கும் ஒரு சக்தி (“Unknown Energy”), அவற்றின் மாறுபட்ட தன்மை கெடாத நிலையில் ஒன்றுபடுத்தியுள்ளது. அதுபோல, “இன்ன தன்மையன் என்று அறிவொண்ணாச்” சிவபரம் பொருளும். மாறுபட்ட உயிரையும் உலகையும் பிணித்து நிறுத்தியுள்ளது.

உலகு என்பது நிலவணு நீரணு என்பன முதலிய பல அணுக் களால் ஆகியது; பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல் காப்பியர். “நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்” (மரபு.89) என்றார். அணுக்கள்யாவும் பலவகைச் சக்தி களால் ஆகியவை என்பது இன்றைய விஞ்ஞானத்தின் முடிவு. “Matter”, says Eddington, “is composed of electrons and protons i.e., positive and negative charges of electricity.”1 எனவே, நாம் வாழும் உலகிற்கு முதல் காரணம் சத்தி என்பது விளங்கும். இச் சக்தியை நம் சைவம் மாயை என்று குறிக்கின்றது. மாயையாகிய சக்தி. ஒளிமயமாய் இருப்பது என்பதை அணு விஞ்ஞானம் கண் கூடாத ஒளித்திரையில் (Spectrum) காட்டிவிட்டது. “Heat, electricity, light, etc., represent the last stages of matter before its disappearance into the ether”2 அந்த மாயையை “இருளிரி சுடர்” என்று ஞானாமிருதம் 800 ஆண்டுகளுக்கு முன்பே காட்டிற்று.

இனி, மாயையாகிய சக்தியை முதல் காரணமாகக் கொண்டு இவ் உலகமாகிய காரியப் பொருளைச் சிவபரம்பொருள் ஏன் படைத்தது? மாயா காரியமாகிய இவ்வுலகப் படைப்பின் நோக்கம் (purpose of creation) யாது? என்ற கேள்வி சில அறிஞரிடையே எழுகிறது. இவ்வுலகில் வாழ்வன உயிர்கள். உயிர்களாகிய நாம் உலகில் வாழுங்கால். ஒவ்வொரு கணத்திலும் புதிய புதிய அறிவு பெறுகின்றோம். சில ஆண்டு வாழ்ந்த இளைஞனைவிடப் பல ஆண்டு வாழ்ந்த முதியவனுக்கு உலகியல் ஞானம் பெரிது என்று சொல்லி அவனுக்கு மதிப்பு தருகிறோம். இதனால், உலகமாகிய மாயையின் தொடர்பு நமக்கு அறிவு விளக்கம் தருவது என்பது விளங்குகிறது. மேலும், சிவன் உலகைப் படைத்து நம்மை அதன் கண் வாழச் செய்வதும் நாம் அறிவு விளக்கம் பெறுதற்கே என்பது தெளிவாம்.

உயிர் அறிவுடைமைப் பொருளாயிற்றே. அதற்கு அறிவு விளக்கம் ஏன்? என்பது அடுத்து நிற்கும் கேள்வி. உயிர்களாகிய நமக்கு நாளை நிகழ்வது தெரிவதில்லை; மாலையில் நிகழவிருப்பது காலையிலோ நண்பகலிலோ தெரிவதில்லை, ஏன்? யாதோ ஓர் இருள் நம் அறிவை மறைக்கிறது. இவ்வாறே, நேற்றுக்கு முன்னா ளோ நேற்றோ நடந்தது இன்று நினைவில் இல்லை. சென்ற வாரத்தில் நிகழ்ந்தனவும், சென்ற திங்கள், ஆண்டுகளில் நிகழ்ந் தனவும் மறைந்து போகின்றன. அவற்றை யாதோ ஓர் இருள் சூழ்ந்து மறப்பும் மறைப்பும் உண்டாக்குகிறது. அதாவது நாளை வருவதை அறியாமல் தடுக்குங்கால் இருளை மறைப்பு என்றும். நேற்று நிகழ்ந்ததை அறியாமல் தடுக்குங்கால் அதனை மறப்பு என்றும் வழங்குகிறோம். கால வேறுபாடு பற்றிச் சொல் வேறு பட்டதே அன்றிப் பொருளால் இருள் இருளே. இவ்வாறு நம் அறிவு முன்னும் பின்னும் ஒரு வகை இருளால் மறைக்கப்படு கிறதன்றோ. அஃது எங்கே இருக்கிறது? நமக்குள் கிடந்து நம் அறிவைச் சூழ்ந்து கொண்டு மறைக்கிறது. அதனை நம் சிவஞான போதம் மலம் என்று உரைக்கிறது; திருக்குறள் அதனை இருள் என்று காட்டி, “இருள் சேர் இருவினை” என்றும், “இருள் நீங்கி இன்பம் பயக்கும்” என்றும் கூறுகிறது. தேவாரத் திருமுறைகள். “ஊனத்திருள் நீங்கிட வேண்டில் ஞானப் பொருள் கொண்டடி பேணும்” என்றும். “ஞானத்திரளாய் நின்ற பெருமாள் நல்ல அடியார் மேல் ஊனத்திருளை நீக்குமதுவும் உண்மைப் பொருள் போலும்” என்றும் அறிவுறுத்துகின்றன. உலகில் உடம்பு கொண்டு வாழ்க்கை நடத்துவதால். அனுபவம் என்ற ஞானவெளியால் இவ்விருள் பைய நீங்குகிறது. இதனால், உலகப் படைப்புக்குக் காரணம் உயிர்கள் இருள் நீங்கி அறிவு விளக்கம் பெறுதற் பொருட்டு என்பது நன்கு விளங்கும். இக் கருத்தையே.

“ காரியம் காசினியாதி; ஏரியல்
ஈசன் கத்தா, இவற்கு இது போகம்
ஆதல் செல்லாது. அகன்றுயர் கருமம்
தானோ நுகர்தல் செல்லாது ஆனாது
என்னை செய்தது என்னின்? அன்னோ!
கொன்னே செய்யான் தன்நேர் இல்லோன்;
பாரிசேடம் அதனில் பரனுக்கு;
ஏரியல் பரன்பசு என்று அறி இனிதே”

என்று ஞானாமிர்தம் கூறுகிறது.

உயிரைச் சூழ்ந்திருப்பது போல. உயிர்கள் வாழும் உலகையும் இருள் சூழ்ந்திருக்கிறது. மின்கணையின் (Sputnik) வாயிலாக “வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம்” (365) என்று புறநானூறு கூறும் நீத்தத்தில் (Ether) உலவிய ருசிய நாட்டு யூரி காகரின் (Yuri Gagarin) என்பவர். நிலவுருண்டையைச் சுற்றி நீல இருள் சூழ்ந்துளது என்றது பலர்க்கு நினைவிருக்கும். “The Earth has a blue halo round it and the colours on the horizon change from light blue, thorough blue, dark blue and violet to the black of the sky.”3 இவ்வளி வழங்கா நீத்தத்தைக் கண்ட தமிழ்ச் சான்றோர். நிலவுலகு இருளில் மூழ்கிக் கிடக்கிறது என்ற கருத்தை, முருகப் பெருமானுடைய திருமுகத்தின் அருள் நிலையை உரைக்குமிடத்து. “மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப். பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்” என்று காட்டியுள்ளனர். இவ்விருள், ஞாயிறும் திங்களும் கோள் களும் மறைந்த நள்ளிரவில் நாம் காணத்தோற்றமளிப்பதை நுணுகி உணர்பவருக்கு. உலகம் இருளில் கிடப்பதென்பது தெரியும். நல்ல வெயில் காலத்தில் மாசு மறுவிலாத நீலவானத்தில் உச்சிப் பொழுதில் ஞாயிறு ஒளிவிட்டுத் திகழும் அமையத்தும் அதன் வெயில் ஒளியில் இருள் தோய்ந்து உளது என்பாராய் மாதவச் சிவஞான முனிவர். வெயிலொளியில் கையை நீட்டியவழித் தோன்றும் நிழல் யாது? அஃது இருளல்லது வேறில்லை என்று காட்டியது அறிஞர் தெரிந்த தொன்று. ஞாயிற்றின் கதிரை ஆராய்ந்த விஞ்ஞானிகள். நீலக்கூறு கண்டு அது வேறன்று. இருட்கூறு என்கின்றனர். இவ் உண்மைகளை மெய்பெறத் தெளிந்த மேலோ ரான உமாபதி தேவர்.

“ ஒளிக்கும் இருட்கும் ஒன்றேயிடம்; ஒன்ற மேலிடில், ஒன்று
ஒளிக்கும் எனினும் இருள் அடராதுஉள் உயிர்க்குயிராய்த்
தெளிக்கும் அறிவு திகர்ந்துள தேனும்; திரிமலத்தே
குளிக்கும் உயிர், அருள்கூடும்படி கொடிகட்டினனே”

என்று எடுத்துரைப்பது. விஞ்ஞான அறிவு பெருகிய இன்றைய நமக்கு மிக்க இறும்பூது பயக்கின்றது.

இவ்வாறு புறத்தே இருள் சூழ்ந்த உலகில், ஞாயிறு முதலிய ஒளிப்பொருளைத் தந்து உய்விக்கும் முதல்வனாகிய சிவபரம் பொருள். அகவிருளாகிய மலம் நீங்கி அறிவொளி பெற்று நாம் இன்புற வேண்டும் என்ற திருவுள்ளம் கொண்டே உலகைப் படைத்துள்ளான் என்பது. இதுகாறும் விளக்கிய வற்றால் நன்கு உணரலாம்.

இங்கே, உலக வாழ்வு. உயிர்கள் இருள் நீங்கி இன்புறுதற்கு எவ்வாறு துணை செய்கிறது? என்றொரு கேள்வி எழுகிறது. உயிர்கள் உலகில் வாழ்தல் பொருட்டு உடல் படைக்கப்பட்டது; உலகப் பொருளை உண்டு வளர்தலால். உடலும் உலகிற்குக் காரண
மாகிய மாயையால் ஆகியதாகும். உடலில் அறி கருவி ஐந்தும், செயற்கருவி ஐந்தும், மனம் சித்தம் அகங்காரம் புத்தி என்ற நான்குமாகிய அகக்கருவி நான்கும் உள்ளன. உலகியல் பொருளை அறிதற்கும் அப்பொருளிடையே இருந்து செய்வன செய்தற்கும் அறிகருவி செயற்கருவி என்ற இரண்டும் தொழிற்படுகின்றன. இவ்விரண்டும் உடலின் புறத்தே இருத்தலின் இவற்றைப் புறக் கருவி என்பர். இருவகைக் கருவிகளையும் பொறிவட்டம் (Sensory Zone) எனத் தொகுத்துரைப்பர். மனம் முதலிய நான்கும் உடலுக்கு உள்ளே இருத்தலால் அக்ககருவி என்றும் புந்தி வட்டம் (Mental Zone) என்றும் குறிக்கப்படும். “புந்தி வட்டத்திடைப் புக்கு நின்றானையும் பொய்யென் பனோ” என்று அப்பரடிகள் அருளுவது காண்க. புறக்கருவிகள் நிகழ்கால நிகழ்ச்சி களை அறிதற்கும் செயற்கும் உரியன. அகக்கருவி முக்கால நிகழ்ச்சிகளையும் எண்ணி அறிதற்கு அமைந்தன. அகக்கருவியான புந்திக்கு உள்ளே உயிர் இருக்கிறது. உயிரைச் சூழ்ந்து கலை முதலிய உட்கருவிகள் உள்ளன. அவற்றை உயிர்வட்டம் (Spiritual Zone) என்றல் வேண்டும். அவை உயிரின் அறிவு, விருப்பு, தொழில் என்ற மூவகை ஆற்றல் களையும் தொழிற்படுத்துவனவாகும். அவற்றை வித்தியாதத்துவம் என்று சாத்திரங்கள் கூறும்.

நம் உடற்குள் இருக்கும் கலை முதலிய உட்கருவிகளைச் சிவ பரம்பொருளின் அருட்சத்தி தோய்ந்து தொழிற்படுத்தும். சிவனது அருட்சத்தி அறிவு தொழில் என இரண்டாய் இயைந்து. கலை முதலிய கருவி வாயிலாக உயிரின் அறிவு விருப்பு செயல் ஆகிய மூன்றையும் எழுப்பி. அவற்றிற்கு உரிய புந்திவட்டத்து அறிகருவி களையும் பொறிவட்டத்துப் புறக்கருவிகளையும் இயக்கும் அறிவைச் சிவம் என்றும், செயலைச் சக்தி என்றும், அறிவும் செயலும் ஒத்த அளவில் சதாசிவம் என்றும், அறிவினும் செயலளவு மிகுதற்கு ஈசுரம் என்றும், செயலினும் அறிவாற்றல் மிகுங்கால் சுத்தவித்தை என்றும் நூலோர் வழங்குவர். அருள் வாயிலாகிய சிவம் முதலிய ஐந்தையும் சிவதத்துவம் என்பர். சிவ தத்துவம், வித்யாதத்துவம், புந்திவட்டம், பொறிவட்டம், நிலநீர் முதலிய பூதவட்டம் என்ற மூன்றும் கூடிய ஆன்ம உடலோடு கூடி உயிர் இயங்கும்போது இம்மூவகைத் தத்துவங்களும் தொழிற்படுகின்றன. மனத்தால் எண்ணும்போதும். வாயால் பேசும்போதும், கைகால்களால் ஒரு தொழிலைச் செய்யும்போதும் இம்மூவகைத் தத்துவங்களும் செயல் படுகின்றன.

செயல்கள் அத்தனையும் வினை எனப்படும். மனத்தால் நினைத்தலும் நினையாமையும், வாயால் பேசுதலும் பேசாமையும், உடம்பால் ஒன்றைச் செய்தலும் செய்யாமையும் யாவும் வினையாகும்.

ஒரு வினை நிகழவேண்டின் அதனைச் செய்வது ஒன்று வேண்டும். வினையால் விளைவது பொருள். பயன் என இரு வகைப்படும். பொருள், செயப்படுபொருள்; பயன் இன்பம் துன்பம் என்பன. இன்பம் பயப்பது நல்வினை; துனபம் பயப்பது தீவினை. வினைப்பயன் அவ்வினையைச் செய்பவர்க்கே உரியது; அது வினை தொடங்கும் போது உடன் தோன்றி, அது வளரத் தானும் வளர்ந்து. அது முடியுங்கால் இன்ப வடிவிலோ துன்ப உருவிலோ அமைகிறது. நாளுக்கு இரண்டு ரூபாய் கூலி பேசிக் கொண்டு ஒருவன் ஒரு வினையைச் செய்வதாக வைத்துக் கொள் வோம். அவன் காலையில் அதனைத் தொடங்கும் போதே பயனாகிய கூலியும் தோன்றி வளர்கிறது. பகல் ஒரு மணிக்கு அது ஒரு ரூபாயாகிறது; மாலை மூன்று மணிக்கு ஒன்றரை ரூபாயாகி, ஆறு மணிக்கு இரண்டு ரூபாயாகிறது. வினைமுடிந்தபின் அதனிட த்தே ஊழ்த்திருக்கும் பயனாகிய இரண்டு ரூபாயும் அவனை அடைகிறவரையில் வினைப்பயனாய் ஊழாய் நிற்கிறது.
வினைப்பயன் உயிரில்லாத அருவப் பொருளாதலால் அது தானே சென்று செய்பவனை அடையாது; அருவராய் இருத்தலால் வினைப்பயனைச் செய்பவனும் எடுத்துக் கொள்ள முடியாது. அதனால், ஒருவன் ஒருவினையைச் செய்தால், அவ்வினைப்பயன் அவனையே அடையுமாறு இறைவன் ஊட்டுகிறான். இச் செயலால் வினை செய்பவன் அவ்வினைப்பயனை நுகராமல் போவ தற்கு இடமில்லை யாகிறது.

இவ்வாறு உயிர்கள் உடலைக்கொண்டு உலகில் வினை செய்வதால். அறிவு விளக்கமும் இன்பமும் பெறுகின்றன. அதனால் அவற்றின் அறிவைச் சூழ்ந்த இருள் நீங்குகிறது. இவ்வகையால் மக்கள் உடலும், வினையும் கொண்டு உலகில் செய்வன செய்து நுகர்வன நுகர்ந்து வாழ்வதால் இருள் நீங்கி இன்பம் பெறுகின்றனர்.

உடம்பும் உலகமுமாகிய மாயையும், வினையும் என்ற இரண்டும், உயிர். இருள்நீங்கி இன்புறுதற்குக் கருவியும் உதவியு மாயிருக்க. “வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்” எனத் தொல்காப்பியரும். “வினையால் அசத்து விளைதலால் ஞானம் வினை தீரினன்றி விளையாவாம்” என்று மெய்கண்டாரும். இவர்களுக்கு இடையில் தோன்றிய பெரியார்கள். “வினையாயின தீர்ந்து அருளே புரியும் விகிர்தன் விரிகொன்றை. நனையர் முடி மேல் மதியும் சூடும்நம்பான்” என்றும், “வெய்தாய வினைக்கடலில் தடுமாறும் உயிர்க்கு மிக இரங்கி அருள்புரிந்து வீடுபேறு ஆக்கம் பெய்தானைப் பிஞ்ஞகனை” என்றும். வினையை வெறுத்துப் பேசுகின்றனர். இவ்வாறே உடம்பின் வெறுக்கத்தக்க கூறுகளை வகுத்து “ஊனார் புழுக்கூடு இதுகாத்து இங்கு இருப்பதானேன்” என்றும். “பொத்தையூன்சுவர் புழுப்பொதிந்து உளுத்து அசும் பொழுகிய பொய்க்கூரை. இத்தை மெய்யெனக் கருதிநின்று இடர்க்கடலில் சுழித்தலைப்படுவேன்” என்றும் உடம்பை வெகுண்டு ரைக்கின்றனர். பெரியோர்களின் இப்பேருரைகள். முன்னே நாம் கண்ட கருத்துக்கு மாறுபடு கின்றனவே என்று உண்மை ஆராய்வார் உள்ளத்தில் ஐயங்கள் எழும். எழுவது முறையுமாகும்.

இன்ப வடிவினனாகிய இறைவன். உயிர்கள் இன்பம் பெறுவது கருதி அளித்த உடம்பும் உலகும் வினையும் இன்ப வடிவினவே ஆகும். உடம்புற்று நிற்கும் உயிர்கள் மனம் மொழி மெய்களால் உலகப் பொருள்களினூடே வினை செய்து வாழ்க்கை நடத்துங் கால். அவ்வினை முடிவில் இன்பம் தோன்றுகிறது. “உள்ளிய வினை முடித்தன்ன இனியோள்” என நற்றிணை கூறுவது காணலாம். அரசியலில் உயர்ந்த வினைக்குரிய பதவியில் இருந்து அதன் இன்பச் சுவை கண்டவன் அதற்கே அடிமையாகித் தன் தனி வாழ்க்கைக்கு உரியவற்றையும் நன்கு எண்ணாது அப் பதவியையே காதலித்து வருவதுபோல. வினைக்குரிய கூறுகள் யாவும் ஒழுங் காகத் துணை செய்யுங்கால் வினை வழியாக விளையும் பொருளும் பயனும் தோன்றிப் புகழும் இன்பமும் தருகின்றன; இவ்வின்பத்தை நுகரும் உயிர். இன்ப நாட்டத்தையே இயல்பாக உடையதாகை யால், வினைக்கே அடிமையாகி அதுதரும் புகழ் இன்பங்களையே நச்சிப் பற்றிக் கொள்கிறது.

உடம்பும் உலக வாழ்க்கைக்கு ஏற்ற வன்மையும் அழகும் பெற்று இன்பக் கருவியாய். அறமும் பொருளும் நல்கும் இன்பத்தை நுகர்கிறது. இவ்வகையில் உடம்பும் இன்பப் பேற்றுக்கு வாயிலாவ தால் அதனுள் உறையும் உயிர் உடம்பின்பால் (மாயைபால்) பற்றுக் கொள்கிறது. “இழத் தொறும் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறும் காதற்றுயிர்” என்று திருவள்ளுவரும். “உயிர்க்காய் வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமும் செய்யும் அன்றே” என்று அருணந்திசிவனாரும் கூறுவர். இவ்வாறு வினையும் உடம்பும் இன்பம் நல்குவதால் அதுபற்றி. உயிர்கள் வினையே வாழ்க்கைக்கு உறுதியாவது என்றும். உடம்பைப் போற்றிப் பேணுவதே வாழ்வின் பயன் என்றும் மயங்கி. அவ் விரண்டுக்குமே அடிமையாகின்றனர். வினை நுகர்வும் உடம்பைப் பேணலும் வினையாதலால். அச்செயல்களால் வினைகளும் பெருகுகின்றன. வினை செய்யச் செய்யப் பயன் பல விளைதலால். அவற்றைச் செய்யும் உயிர்கள் வினைப்பயனை நுகர்ந்தே கழிக்கவேண்டிய வாகின்றன. வினை நுகர்ச்சி உடம்பில்லாமல் ஆகாது. ஆகவே, வினைக்காக வேறு வேறு உடம்பு எடுக்க வேண்டிய இன்றியமை யாமை உண்டாகிறது. இவ்வாறு உயிரும் வினையும் உடம்பும் ஒன்றோடு ஒன்று பிணிப்புண்டலால். வினையையும் உடம்பாகிய மாயையையும் கட்டென்றும் பாசமென்றும். உயிரைச் சூழ்ந்து பற்றி நிற்கும் இருளை மலம் என்றும் அசத்தென்றும் சான்றோர் கூறினர்.

இருள்நீங்க இன்பம் பெறுதல் பொருட்டு இறைவன் படைத்து உதவிய உலகின்கண். அவன் அருளால் கிடைத்த உடம்பிடை நிலவும் உயிர். இருணீக்கத்துக்குரிய வினையை மேற்கொள்ள வேண்டும் என்பது பெறப்படும். அவ்வினைகள் மேன்மேலும் பிறப்பதற்கே ஏதுவாதலையும் காண்கிறோம். இவற்றை எண்ணியே திருஞானசம்பந்தரும் “அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் அஃது அறிவீர்; உய்வினை நாடாதிருப்பது உந்தமக்கு ஊனம் அன்றோ” என்றார். உய்வினை என அவர் கூறியது யாது? உய்வினை என்பது சிவஞானச் செய்தி என அறிவு நூல்கள் கூறும். ஞானசம்பந்தரும், “ஊனமாம் உடம்பினில் உறுபிணிகெட எண்ணில். ஞான மாமலர் கொடு நணுகுதல் நன்மையே” என்பர். மெய் கண்டார். “ஞானம் வினை தீரினன்றி விளையாது” என்பர். இவர்கள் கூறுவன எல்லாம் அடங்கத் திருமூலர்.

“ வினையால் அசத்து விளைவதும் தேரார்
வினைஞானம் தன்னில் வீடலும் தேரார்
வினைவீட வீடு என்னும் வேதமும் தேரார்
வினையாளர் மிக்க விளைவறி யாரே”

என்று சுருங்க உரைக்கின்றார்.

வினைதீர்தற்கு வாயிலாயின் அந்த ஞானம் யாது?
இன்று. ஞானம் என்பது உலகியலில் விஞ்ஞானத்தின் மேல் நிற்கிறது. விஞ்ஞானிகளையே இன்றைய அரசியல் - பொருளியல் - உலகுகள் ஞானிகளாகக் கொண்டு அவர்களுக்கு வழிபாடு செய்கிறது. அவர்களது விஞ்ஞானம் எங்கே நிற்கிறது என்று காண்பது நன்று. ஓர் உண்மையைக் கண்டறிய முயலும் ஒரு விஞ்ஞானி பன்னாளும் பன்முறையும் பல்வகைப் பொருளையும் கொண்டு ஆராய்கின்றான்; உண்மை காண முடியாமல் மெய் சோர்ந்து அறிவு சோர்ந்து தளர்ந்து சாய்கிற நிலையில் ஓர் உணர்வு அவன் உள்ளத்தில் ஒளிர்கிறது. அதனைச் செயற் படுத்துகிறான்; உண்மை விளங்கிவிடுகிறது. ஓடுகிறான், ஆடுகிறான், பாடுகிறான், பித்தேறியவன்போல் பேசி மகிழ்கிறான். சிறிது போது கழித்து. இப்பொழுது தோன்றிய இவ் உணர்வு ஏன் முன்னமே தோன்ற வில்லை என எண்ணுகிறான். அவனுக்குப் பெர்க்சன் (Bergson) என்ற அறிஞர். Matter and Memory என்ற நூலில். அது உள்ளு ணர்வு (Intuition) என்று உரைக்கின்றார். அவ் உள்ளுணர்வை (Intuitionism) நம் முன்னோராகிய சிவஞானச் செல்வர்கள் அருள் என்றும். அருள் ஞானம் என்றும். அருளறிவு என்றும் பலபடப் பாராட்டியுரைப்பர். விஞ்ஞானியின் கருவியாகிய உடலும் கரண மாகிய மனமும் உண்மையாக முயன்று ஓய்ந்து அயர்ந்து செயலறு கின்ற போது உள்ளுணர்வு தோன்றி ஒளி செய்யப்பார்க்கின்றோம். பாரதத்தில் பாஞ்சாலி, அரசவையில் துச்சாதனன் கைப்பட்டுக் கலங்கியபோது. கணவன்மார் கைவிட்டனர்; குடிப்பிறந்தோர் கைவிட்டனர்; சான்றோர் சமழ்த்தனர்; அரசும் கைவிட்டது. கண்ணீர் சொரிந்தாள்; கை சோர்ந்தாள்; மெய் சோர்ந்தாள். சுருங்கச் சொன்னால். பாஞ்சாலியின் கருவி கரணங்கள் யாவும் வலியழிந்து கையறவுபட்டன. அப்போது அவள் கோவிந்தா கோவிந்தா என அரற்றினாள். அவள் உள்ளத்தில் ஊறாத அமிழ்து ஊறிற்று; உடல் முழுதும் பரவிப் பெருவலி நல்கிற்று; துச்சாதனன் சோர்ந்தான்; அங்கிருந்த அனைவரும் அஞ்சி அலமந்தனர்; இதுதான் திருவருள் உணர்வு. அறிவு, உதவி என்று பாராட்டப் படுவது. இதனைச் சிறிது எண்ணினால் பாஞ்சாலியின் துகில் பற்றிய இச்செய்தி, திருவருள் உயிர்களுக்கு அருள் செய்யும் செயற்கு ஏற்ற எடுத்துக் காட்டாவது இனிது விளங்கும்.

இந்த அருளுணர்வு உள்ளத்தின்கண் தோற்றுவித்து அதனை முன்னிறுத்தி. அதற்கு முதலாகிய சிவ பரம்பொருளை உள்ளத்தின் கண் எழுந்தருளச் செய்வதுதான் சித்தாந்தச் செந்நெறியின் அறிவுரை.

அருளொளியை உள்ளத்தில் தோற்றிவிப்பது எவ்வாறு?
மாயை என்ற சத்தி வடிவாய்த் தன் அருளாற்றலில் ஒடுங்கிக் கிடந்ததனை அணுவாக்கிப் பின் அவற்றைக் கொண்டு உலகு உடம்புகளை இறைவன் படைத்து உயிர்களுக்கு உதவியது. அவ்வுயிர்கள் உடம்பின்கண் நின்று வாழ்வாங்கு வாழ்தல் பொருட்டு என்று முன்பே கண்டோம். உலகு உடம்புகளின் ஒவ்வொர் அணுவும் ஒழுங்காகவும், முறை பிறழாமலும், வளம் எய்தும்போது வளர்ந்தும், கேடு வரும்போது தற்காத்தும், தானே நிலவுதல் பொருட்டு. அவனது அருளாற்றல் ஒவ்வோர் அணுவிலும் கலந்து பரந்து நிறைந்து நின்று இயக்குகிறது. அதனால், நாம் அவற்றின் நலம் கண்டு மகிழ்ந்தும். வேண்டுமளவு கையாண்டு பயன் துய்த்தும் வாழ்கிறோம். இன்று மக்களுயிர் நிலவுலகின் பலவேறு கூறுகளை நுணுகி ஆராய்ந்து பயன் துய்த்து இன்புறுகிறது. நிலம் நீர் நெருப்பு காற்று வானம் ஆகிய ஐந்தினும் துருவி ஆய்ந்து அவற்றின் நுட்பங் களைப்பற்றி நல்லறிவு பெற்று வருகிறது. நிலனும் கடலும் காற்றும் வானும், இன்று மக்களுயிர் இயங்குதற்கு ஏற்ற இடமாய்க் கொண்டு இன்புறுதற்கு அறிஞர் செய்த ஆராய்ச்சிகள் ஏதுவாகின்றன. அந்த ஆராய்ச்சியாளர் உள்ளத்தில் நின்று அவரது அறிவுக்கும் முயற்சிக்கும் ஒப்ப ஒளி தந்து உதவிய திருவருள் திறத்தை உன்னுதல் வேண்டும். இன்றைய விஞ்ஞானம். தனது புதிய புதிய நுண்ணிய கண்டு பிடிப்புக்களுக்குக் காரணம் தனது நுழைபுலனும் அதிரா ஊக்கமும் அயரா முயற்சியுமே என நினைக்கிறது. அவற்றின் உள்ளீடாய் நின்று ஒளிவழங்கிய திருவருளை மறந்துவிடுகிறது. அதனால் உலகியல் வாழ்வை ஆராயும் அறிவு “அறிதோறும் அறியாமை கண்டற்று” என்று திருவள்ளுவர் கூறியது போல. அறிதோறும் அறியாமை கண்டு வருந்துகிறது. அந்த அறிஞர்கள்.

“The more we learn the less we know; every advance reveals new mysteries and new uncertainties; the molecule discloses the atom, the atom disclose the electron, the electron discloses the quantum and the quantum defies and overlaps all our categories and all our laws. Our instruments, we perceive, are bound up with matter, and our senses are bound up with mind; it is through these mists that we ‘flakes on the water’ would comprehend the sea.”1
என்று கூறுகின்றனர். நான் முன்னே காட்டிய பாஞ்சாலியின் செயலை மறுபடியும் காண்போம். அவள் துரியோதனன் பேரவையில்.

“ஆறாகஇரு தடங்கண் அஞ்சன வெம்புனல் சோர அளகம் சோர
வேறான துகில் தகைந்த கைசோர மெய் சோர வேறோர் சொல்லும்
கூறாமல் கோவிந்தா கோவிந்தா என்றரற்றிக் குளிர்ந்து நாவில்
ஊறாத அமிழ்தூற உடல் புளகித்து உள்ளமெலாம் உருகினாறே.”

என்று பாரதம் கூறுகிறது. தனக்குக் கோவிந்தன் துணை செய்வான் என்பதை அறிந்திருந்தும். தன் உடல் கருவி கரணங்களை முழுதும் செலுத்தித் தன் மானத்தைக் காக்க முயன்றாள்; அவை யாவும் சோர்ந்து செயலற்றதைக் காண்கிறாள். இறைவன், தான் அருளிய உடலும் மனமும் சோர்வு எய்தும்போது. அச் சோர்வு போக்கி, இன்றியமையாத துணை செய்வது தனக்கு அருட் கடனாதலின். ஊறாத அமிழ்து தந்து அவளுடைய உடலின் சோர்வு போக்கி வன்மை தந்தான்; அவனது திருவருள் அவளுக்கு வேண்டிய சீலையையும் தோற்றுவித்தது. இவ்வாறே இயற்கைப் பொருளை ஆராய்ந்த அறிஞர்களுக்கு. அவர்களுடைய கருவி கரணங்கள் முழுதும் ஓய்ந்து அயர்ந்தபோது வேண்டிய அறிவொளி தந்து பெறுதற்கரிய நுண்ணிய கருவிகளைக் காணும்படி திருவருள் உதவியுள்ளது. இன்றைய நமக்கு ஆயிரக்கணக்கான மைல்கள் தூரமாகத் தோன்றவில்லை; ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருப்பரோடு பேசுவது சுமையாக இல்லை. ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து பேசுபவரையும் அவர் பேச்சோடு உருவத்தையும் காண்பது வியப்புத் தரவில்லை. இவ்வளவு நலங் களையும் பெறுவதற்குத் தோன்றாத் துணையாவது அருள் என்று அறிதல் வேண்டும்.

ஒரு சிறுவன் ஒரு கணக்குப் போடுகிறான். மிக்க கண்ணும் கருத்துமாய்ப் போட்டவிடத்தும் உண்மை விடை தோன்றவில்லை. தலையில் அடித்துக்கொண்டு வருந்து கிறான்; அழுகிறான்; புழுங்குகிறான். ஒரு வழிக்குப் பல வழிகளை எண்ணுகிறான்; சோர்வு எய்துகிறது. அதனூடே ஒரு குறிப்புப் பிறக்கிறது. கணக்கைப் போடுகிறான்; உண்மை விடை வந்துவிடுகிறது. ஆடுகிறான்; மகிழ்கிறான்; அள வில்லாத இன்பம் அடைகிறான். சோர்வும் வருத்தமும் எய்துமுன் வராத விடை. அச் சோர்வு தோன்றியபின் வருகிறது. கருவி கரணங்கள் மெய்யாக உழைத்துச் சோர்வு எய்துங்கால் உண்மை ஒளி எய்துகிறது. உடம்பையும் உள்ளத் தையும் மெய்யாக உழைப்பின்கண் செலுத்துவது திருவருளின் துணையைப் பெறுதற்கு நேரிய வழி என்பது இதனால் தெளிவாகக் காணலாம். இதுதான் சிவஞானபோதம் கூறும் தவம். அதில் மெய்கண்டார். “ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத். தம் முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு. அந்நியமின் மையின் அரன்கழல் செலுமே” என்றார். தவம் என்றது உண்மை உழைப்பு, குரு, இருள் நீக்கும் ஒளிப்பொருள்; ஒளி நல்கும் பொருள். அறிவுக்கு அறிவாய் அகத்தே நின்று ஒளிர்வதேயன்றிப் புறத்தே அறிவு நல்கும் மக்களாகவோ பொருளாகவோ உதவுவது பற்றித் தம் முதல் குருவுமாய் உணர்த்துவன் என்று அருளுகிறார்.

நான் இப்பொழுது உங்கள்முன் பேசுகிறேன். என் பேச்சின் ஒலியை இந்த ஒலிபெருக்கி. பன்மடங்கு உயர்த்தி உங்களிடையே பரப்புகிறது. அது செய்யும் வேலை யாது? என் பேச்சை முதற்கண் வாங்குதல் ஒன்று; பன்மடங்கு பெருக்குதல் ஒன்று; பெருக்கிய அதனை வெளியிடல் ஒன்று. வாங்கும் கருவி ஒலியை வாங்குதல் தவிர வேறு எதையும் செய்யாது; ஒலி மிகுவிக்கும் கருவி அஃது ஒன்றைத்தான் செய்யும்; ஒலி பரப்பும் கருவி பரப்புவதொன்றைத் தான் செய்கிறது. இவை ஒவ்வொன்றும் தனித்தனிக் கூறுகளா யினும். என் வாயினின்றெழும் ஒலி. எழுந்தவுடனே உங்கள் செவியில் விழுமாறு அத்துணை விரவில் இதன் உட்கருவிகள் பணிபுரிகின்றன. இவற்றிற்கு எல்லாம் மூலகாரணம் யாது? வேறு ஒன்றுமன்று; மின்சக்தி.

நான் பேசுவதைக் காணுங்கள். சிவதத்துவத்தால் இயக்கப் படும் வித்தியா தத்துவத்தால் என் உயிரறிவு பேச முற்படுகிறது; ஆன்ம தத்துவத்து மனம் அதற்கு வேண்டும் கருத்துக்களை எடுத்து வழங்குகிறது; அவை உடனே சொல் உருவும் ஒளியும் பெற்று. என் தொண்டை, நா, பல், வாயிதழ் ஆகியவற்றின் செயற்பாட்டால் வெளிவருகின்றன. இவை யாவும் ஒழுங்காக வேலை செய்தாலன்றி என் பேச்சு நிரம்பாது. இவை எங்ஙனம் வேலை செய்கின்றன? இவற்றுக்கு மூல காரணம் யாது? அதுதான் ஒலிபெருக்கியை இயக்கும் மின்சக்தி போலும் அருட் சக்தி. அதனை அறிவதுதான் அருளறிவு. அருளொளியை உள்ளத்தின் கண் தோன்றக் காணும் திறமும் இதுவேயாகும்.

இம் முறையில் காணுமிடத்து எப்பொருளும் அருளாட்சியில் அமைந்து கிடப்பது தெரிவதால். காரைக்கால் அம்மையார்.

“அருளே உலகெல்லாம் ஆள்விப்பது ஈசன்
அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்
எப்பொருளும் ஆவ தெனக்கு”

என்று அருளுகின்றார்.

இந்த அருள் எங்கே உளது? இந்த ஒலி பெருக்கியை இயக்கும் மின்சக்தி எங்கும் பரந்து இருப்பது; அஃது இல்லாத இடமே இல்லை என்பது விஞ்ஞானம் உணர்த்தும் உண்மை. ஆனால், அது இன்ன தன்மைத்தென்று இன்றுவரை எந்த விஞ்ஞானியும் கண்ட தில்லை. அதனைப் பல பொருளி லிருந்து வெளிப்படுத்திப் பயன் கொள்ள அறிந்த விஞ்ஞானம். அதன் தோற்றக் கூறுகளை அறிய மாட்டாது கைவிட்டு விட்டது. அந்த மின்சக்தி சில பொருள்களின் ஊடே செல்ல முடிவதில்லை. மரக்கட்டையில், ரப்பரில் அது பாய்வதில்லை. இத்தகைய குறைபாட்டுக்கு உள்ளாகிய மின்சக்தி போலாது. அருட்சக்தி உயிர்ப்பொருள் உயிரில் பொருள் எல்லா வற்றிலும் கலந்து கொள்ளும் பெருமையுடையது. அதன் இயல்பு கண்ட அருளாளர். அருட் சக்தி, உயிரில் பொருள் களில் ஒன்றாயும், உயிர்ப் பொருளில் உடனாயும், தனி நிலையில் வேறாயும் இருக்கும் என்று கூறுகிறார்கள். இதனை “உலகெலாமாகி வேறாய் உடனு மாய் ஒளியாய் ஓங்கி” நிற்பது எனச் சிவஞான சித்தியார் கூறுவதை நினைவில் கொள்ள வேண்டும். உயிரில் பொருள்கள் அறிவில்லா தவை ஆதலால், அவை ஒழுங்கு முறை பிறழாமல் அமைவது வேண்டி அவற்றோடு ஒன்றாயும். உயிர்கள் அறிவுடை யவை ஆதலால் அவற்றிற்கு அறிவு உதவுவது குறித்து உடனாயும் இருக்கிறது Nature obeys certain lows என்பது விஞ்ஞானி கண்டுரைக்கும் முடிபு.

இவ்வாறே, இத் திருவருள். நம் உடல் கூறுகளில் ஒன்றாயும். உயிரோடு உடனாயும் இருக்கும் திறத்தை அறிதல் வேண்டும் என்பது சிவநெறி கூறும் அறிவுரை ஆகும். அது சிந்தனையால் அறியப்படும். நான் பேசும்போது என் பேச்சை உருவாக்குங்கால் என் உடற்கூறுகள் ஒழுங்காக வேலை செய்கின்றன. அறிவில்லாத இக் கூறுகள் ஒழுங்காக வேலை செய்கின்றன. அறிவில்லாத இக்கூறுகள் மின்சக்தியால் இயங்கும் எந்திரக் கூறுகள் போல ஒழுங்காக வேலை செய்கின்றன. அறிவில்லாத இக் கூறுகள் மின்சக்தியால் இயங்கும் எந்திரக் கூறுகள் போல ஒழுங்காகவும் முறையாக வும் வேலை செய்வதற்குக் காரணம் அருட்சக்தி என்பது ஆழ்ந்த சிந்தனைக்கே புலனாகிறது. கணக்குப்போட்ட சிறுவனுக்குத் தொடக்கத்தில் தோன்றாத உண்மை. பல முயற்சிகளுக்குப் பின்னே தோன்றியது ஏன் என்று சிந்திக்கும்போது. அருட் சக்தியின் உண்மை புலனாகிறது. இது பற்றியே மெய்கண்டார். “ஊனக்கண் பாசம் உணராப் பதியை ஞானக் கண்ணினிற் சிந்தை நாடுக” என்றார்.

மின் சக்தியைக் கண்ட விஞ்ஞானிகள் அது வானவெளியில் வளி வழங்காத நீத்தத்தில் (Ether) ஒடுங்குவது கண்டு அதனை ஆராய முற்பட்டனர். அஃது இன்ன தன்மையதென்று யாரும் அறிய முடியவில்லை. “Ether? No body knows”5 என வில்டூரண்டு என்பவரும். “The ehter, said Lord Salisbury, is only a noun for the verb to undulate, it is a fiction created to conceal the learned
ignorance of modern science”6 என்று William James என்பவரும். “The ether is not a kind of matter; it is non-material” என்று எடிங்டன் என்பவரும் கூறுகின்றனர்.

ஆனால், சிவநெறிச் செல்வர்களாகிய நம் முன்னோர். அருட்சக்தி ஒடுங்கும் நீத்தம் சிவபரம்பொருள் என்றும். அதற்கு அந்த அருளே திருமேனி என்றும் அறிவுறுத்
தருளினார்.

மேலே நிகழ்ந்த அருளாராய்ச்சியால் நமது மனம் நினைப்ப தற்கும் வாய் பேசுவதற்கும். உடல் ஏற்ற தொழில்களைச் செய்வ தற்கும் அருட்சக்தியின் இயக்கம் முதலாதல் கண்டோம்.

இந்த அருளறிவை அருள்ஞானம் என்றும் சிவஞான மென்றும் பதிஞானமென்றும் சான்றோர் குறிப்பிடுவர். இதனை அறிந்து பெறுபவர் அருளுக்கு முதலாகிய சிவத்தைத் தமக்கு முன்னே நிறுத்தித் தம்மை அதன்கண் ஒடுக்கித் தமது நினைவு சொல் செயல் அனைத்தும் அச் சிவத்தின் செயலாகவே கொள்ளத் தலைப்படுவர். அவ்வாறு ஆணும் பெண்ணுமாகிய ஒவ்வொருவரும் செய்தல் வேண்டும் என்று வற்புறுத்தவே மெய்கண்ட தேவர் “அவனே தானே ஆகிய அந்நெறி. ஏகனாகி இறைபணி நிற்க” என்றும். அவ்வாறு நின்றால் பிறப்பிறப்பாகிய துன்பச் சூழலனின்றும் நீங்கலாம் என்றற்கு “மலமாயை தன்னொடு வல்வினை இன்றே” என்றும் வற்புறுத்துகின்றனர்.

அவர்க்குப் பல்லாண்டு கழித்துத் தோன்றிய உமாபதி சிவம். அருளை அறிந்தொழுகும் நெறியை ஞானம் பற்றல். தன் பணி நீத்தல் நேயத் தழுந்தல் என்று மூன்றாக்கி. அவற்றை முறையே ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி, ஆன்ம லாபம் எனப் பெயர் தந்து.

“ தேசுற மருவும் ஆன்ம தெரிசனம் ஆன்ம சுத்தி
ஆசிலா ஆன்ம லாபம் ஆக மூன்றாகும் மூன்றும்
பாசமது அகல ஞானம் பற்றல் தான் பணியை நீத்தல்
ஏசில் நேயத்து அழுந்தல் எனும் இவற்றுள் அடங்கும் அன்றே”

என்று வகுத்தும் விளக்கியும் கூறினார்.

நாம் செய்யும் முயற்சியில் நமது கருவி கரணங்களோடு கலந்து. நாம் அறிய வேண்டியவற்றைத் தானும் அறிந்தும். அதுபற்றி நாம் செய்ய வேண்டியவற்றிற்குச் செய்முறை அறிவித்தும். திருவருள் உதவுவதை நினையின். உதவி புரியும் அவன்பால். உதவி பெறும் நமக்கு அயரா அன்புண்டாகிறது. அந்த அன்பு, நம்மை முடிவில், உடலின் நீங்கும் காலத்துச் சிவானந்த ஞான வடிவம் நல்கிச் சிவபரம் பொருளின் திருவருள் இன்பம் பெறுவிக்கிறது.

இதனை மெய்கண்டார்.

“ காணும் கண்ணுக்குக் காட்டும் உளம் போல்
காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்
அயரா அன்பின் அரன்கழல் செலுமே”

என்றார்.

இச் செயல்முறைகள். சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களினத்துக்கு இனிது அறிந்து கொள்ளும் வகையில் உரைக்கப்பட்டன. இடைக்காலத்தில் நாம் நம் நாட்டின் சூழ்நிலை யையும் மக்களினத்தின் நினைவியல்பு களையும் பொருளும் தொழிலும் பிறவுமாகிய வாழ்வியல் களையும் அறியும் அறிவு சுருங்கிப் “பிறர்க்கே உழைத்து ஏழையானேன்” எனத் திருமங்கை யாழ்வார் சொல்வது போலப் பிறர் பொருட்டு அடிமையுற்றோம். அதனால், இன்று நமக்கு அப்பெருமக்கள் கூறியன அறிதற்கு அருமையாகத் தோன்றுகின்றன. எளியவாய் இருப்பின், நாம் அனைவரும் சீரிய பெரிய சிவஞானச் செல்வர்களாக அன்றோ திகழ்வோம்!

இந்த நிலையில் கல்வி, சமுதாயம், தொழில், வாணிகம், அரசியல் முதலிய துறைகள் அருள்நெறி நோக்காது பிறழ்ந்து போகின்றன. எல்லாவற்றிற்கும் அடிப்படையாக உள்ள மனமும் சொல்லும் செயலும் இருள் நெறியிலே இயங்கு கின்றன. மன நினைவில் காரண காரிய ஆராய்ச்சி நோக்க மில்லை. மெய்யுணர்தல் என்ற தலைப்பில் திருவள்ளுவர் சொன்ன அறவுரை. செயலுக்கு வரவில்லை. எதனையும், ஏன்? எப்படி? என ஆராயும் மனப் பான்மை பெருபான்மையும் காணப் படவே இல்லை. அதனால் வாயிலிருந்து வெளிவரும் சொல். உள்ளே மனத்துக்கும் வெளியே செயலுக்கும் ஒவ்வாமல் உளது. சொல் வேறு. செயல் வேறுபடுத லால் தொழிலும் வாணிகமும் உலக மக்கள் அரங்கில் நம்பிக்கை யிழந்து சோர்வுபடுகின்றன. தான் வாழ ஏனோர் தனக்குக் கீழாக எனும் ஊன அறிவு உயர்ந்து நிற்கின்றனது.

மக்கள் மனம் வாழ்க்கைக்கு இன்றியமையாத உணர்வு களால் நிரம்பாது குறைபடுவதால். பள்ளத்தை நோக்கி ஓடும் நீர் போலத் தன்னலம் ஒன்றே கருதும் தீயுணர்வுகள் போந்து மனத்தில் நிரம்பிவிட்டன; துன்பமும் இருளும் சூழ்ந்துகொண்டன. அருள் நெறி நல்கும் இன்பமும் ஒளியும் மறைந்தன. அச்சமும் அடக்கப் பண்பும் தோன்றி உலக அரசியல் சூழலில் அலைக்கின்ற காட்சியை நாம் நாளும் காண்கின்றோம். நாமும் சமய மாநாடு கூட்டியும் புராணப் பிரசங்கம் செய்தும் திருவிழாக்கள் எடுத்தும் சமய உணர்வும் ஒழுக்கமும் ஓங்கச் செய்தோம்; நமது சமுதாயம் இம்மியளவும் அசையவில்லை.

மக்கள் வாழ்க்கையை நோக்காது அதைப் புறக்கணித்து இயலும் எவ்வகைச் சமயமும் சமயமாகாது. வாழ்வில் அறமும் பொருளும் இன்பமும் நிறைந்து அமைவதை வற்புறுத்துவது தான் உண்மைச் சமயம். வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து சிவப் பேரின்பம் பெறச் செய்வதே நம் சைவ சமயத்தின் குறிக்கோள். அதுபற்றியே, சைவ சமயத்துக்கென வரையறுத்த நூல்களைத் தொகுத்துக் கூறிய பண்டை நாளைப் பெரியோர்.

“ வள்ளுவர்மெய் யன்பர்மொழி வாசகம்தொல் காப்பியமே
தெள்ளு பரிமேலழகன் செய்தவுரை - ஒள்ளியசீர்த்
தொண்டர் புராணம் தொகுசித்தி ஓர்ஆறும்
தண்டமிழின் மேலாம் தரம்”

என்றனர்.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” என்ற திருக்குறளும். அதன் கடவுள் வாழ்த்து, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல், ஊழ் என்ற அதிகாரங்களும் பிறவும் சைவத்தின் தனிப்பெரும் கொள்கைகள் ஆதலால், சைவர்கள் திருக்குறளை முதற்கண் நன்கு படித்துப் பயில வேண்டும் என்பதற்காக தலைமை நூலாகத் திருக்குறளைச் சைவர்கள் மேற் கொண்டனர்.

மண்ணுலகு முதலிய பலவகை உலகுகளையும் இறைவன் படைத்தளிப்பது. “நாம் மண்ணகத்தே வந்து” வாழ்தல் பொருட்டே என்று ஞானசம்பந்தர் முதல் மாணிக்கவாசகர் உள்ளிட்ட பலரும் அவ்வப்போது உரைத்துள்ளனர். உடம்பை நன்கு பேணினால் அன்றி மக்கள் ஞானவாழ்வு பெறார் என்பதற்காகத் திருமூலர்.

“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்;
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்”

என்று தெளிவாகக் காட்டியுள்ளார்.

மக்கள் வாழ்வு தனித்தனியாகவும், சமுதாயமாகவும் இயலுவது. இவ்வாழ்க்கைக்கு வேண்டுவன உதவும் வகையில் கல்வியும், தொழிலும், வாணிகமும், பணிபுரிகின்றன; இவற்றிற்கு ஏற்ற வாய்ப்பும் பாதுகாப்பும் அரசு நல்குகிறது. மனைவாழ்வு - நோய்க் கிடந்தராத அகம் புறம் தூய்மை பற்றிய அறிவும்; மக்களை நன்முறையில் வளர்த்து நல்லொழுக்கம் உடையாராக்கும் செயல் பற்றிய அறிவும்; ஒவ்வொருவரும் மேற்கொண்டிருக்கும் தொழில் பற்றிய அறிவும்; சமுதாயத்துக்கும் அரசுக்கும் தனக்கும் உள்ள தொடர்பு பற்றிய அறிவும்; திருவருள் முதல்வனாகிய சிவநெறி அறிவும் கருத்தும் அமைய வேண்டும் என்று வில்லியம் குளோவர் (William Glover) என்பவர் உரைக்கின்றார். இந்த அறிவு மக்கள் மனத்தில் சிந்தனையைத் தூண்டி எல்லா வற்றிற்கும் உள்ளீடாய்த் திகழும் திருவருள் ஞானத்தைப் பெறுவிக்கும் என இக்காலத்துச் சமயச் சான்றோர் கூறுகின்றனர். இங்கே குறித்த அறிவுகளும் கருத்துக்களும் உலக வாழ்வை வாழ்வாங்கு வாழத் துணைசெய்து திருவருள் ஞானத்தை விரிவாகப் பெறுதற்கு உதவுகின்றன.

அருளாராய்ச்சியால், மாயா காரியமாகிய உலகியல் பொருள் நிகழ்ச்சிகளின் உண்மை புலனாகிறது; செய்யப்படும் நல்வினை, தீவினைகள் முறையே நல்கும் இன்பங்களையும், துன்பங்களையும் சமமாக நோக்கும் மனப்பான்மை எய்துகிறது. அதனால், உண்மை அறிவான சிவஞானத்தால் உலகியல் நாட்டம் தூர்ந்துவிடுகிறது; உயிர் சிவத்துள் ஒடுங்குகிறது. எஞ்சி நிற்கும் வினை பற்றுக் கோடின்றிக் கெட்டொழிகிறது.

வாழ்வாங்கு வாழ்ந்து அருள்நிலையை உணரும் உயிர் அதனை விடாது பற்றிப் பயிலுதல் பொருட்டு நாளும் திருவருள் சிந்தனை இன்றியமையாது வேண்டப்படுகின்றது. அருட் சிந்தனைக்குத் திருவைந்தெழுத்தும். அதனைப் பற்றிவிடாமைக்குச் சிவவழிபாடும் துணையாகும். திருவைந் தெழுத்தில் ம என்ற எழுத்து உலகியல் வாழ்வையும். ந அதனை வாழ்வாங்கு வாழப் பண்ணும் அருளையும். ய வாழும் உயிரையும். வ உலக வாழ்வை விடுத்துச் சிவஞானத்தை நுகர்விக்கும் அருட்சக்தியையும். சி இறவாப் பேரின்பம் நல்கும் சிவத்தையும் குறிப்பன.

நமது உள்ளம். உலகியல் வாழ்வுக்குரிய மனைவாழ்வு சமுதாய வாழ்வுகளுக்கு வேண்டிய அறிவு செயல்வகைகளில் ஈடுபடுங்கால். அவற்றிற்குரிய கருத்துக்களை வழங்கி உலகியல் பயன்களை நுகரப்பண்ணும் திருவருள். சிவத்தையும் அதன் பேரருளையும் நினையாவாறு மறைக்கும். மறைக்காவிடில், உலகியல் அனுபவம் நிகழாது; உயிர் தன்னைச் சூழ்ந்திருக்கும் இருள் மறைப்பினின்றும் நீங்காது. அதற்காகவே நாம் ஒன்றில் ஈடுபடும்போது. மற்றவை தோன்றாதவாறு மறைக்கப் படுகின்றன. திருவருள் நினைவால் அதற்கு முதலாகிய சிவத்தை நினைக்கும் போது. உலகியல் உணர்வுகளை மறைத்து. சிவ நினைவால் பிறக்கும் சிவஞான வாழ்வை நுகர்விக்கின்றது. இவ்வாறு உலகியல் பொருளின்பாலும் சிவத்தின்பாலும் நம் அறிவும் மனமும் ஈடுபட்டு இருள் நீக்கம் பெறற்கு இருவழியும் மறைத்துத் துணைபுரியும் திருவருளை ‘ந’ என்ற எழுத்தால் பெரியோர் காட்டியிருக்கின்றனர்.

உலகில் நாம் வாழ்வாங்கு வாழ்தல் வேண்டியும். அதனை விடுத்து இன்பமே நிலவும் பெருவாழ்வு பெறல் வேண்டியும். தனது திருவருட் சக்தியைச் செலுத்தி. வேண்டு வனவற்றை அறிவித்தும் வேண்டாதவற்றை மறைத்தும் அத்திருவருளே தனக்குத் திருமேனி யாகக் கொண்டு. வேறாய் நில்லாது. நம்மோடு உடனாயும் ஒன்றாயும் நின்றருளும் சிவபரம்பொருளை. நாம் மறத்தல் நன்றி கொன்ற தீவினையாக முடியும்; நன்றி மறத்தல் உலக வாழ்வில் பெருந் துன்பத்தைச் செய்வதுபோல. சிவன்பால் பெறலாகும் பேரின்ப வாழ்விலும் குற்றமாதல் பற்றியே சிவ வழிபாடு சிறப்பாக வேண்டப்படுகின்றது.

சிவ பரம்பொருள் உயிர்களுக்குச் செய்திருக்கும் அருட் செயல்களை நினைதலும், வழிபாடாகும்; அதுபற்றியே திருமுறை ஆசிரியர்களும். அவர்களுக்குப் பின்வந்த பெருமக்களும். சிவனுடைய அருட்செயல்களை எழுத்துத் தோறும் இன்பம் பெருக; இனிய இசை கலந்த பாட்டுக்களில் தொகுத்துப் பாடியுள்ளனர். அவற்றைப் பாடிப் பயிலுவதால் நமது உள்ளம் அவனுடைய பேரருட் பெருமையில் தோய்ந்து பேரின்பமும். உலகியல் நுகர்ச்சிகளை மறந்து தூய்மையும் எய்துகிறது.

இன்றைய மக்களினம் பொருட் செல்வம் பெறுவதே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு. அதனைப் பெருகப் பெறுவதற்குரிய விஞ்ஞானம், தொழில், வாணிகம், அரசியல் என்ற துறையிலேயே பெரு மயக்கம் கொண்டு இயலுகின்றது. உலக வாழ்க்கைக்குப் பின் உயிர்களுக்கு வேறு வாழ்க்கை யில்லை என்று கூறும் சமயவுரைகள் செல்வாக்குப் பெற்றதே இதற்குக் காரணமாகும். மேலும் அச்சமயங்கள் கடவுள் கொள்கையும் வழிபாட்டு மரபும் உடையவாயினும். மக்களை அறிவாராய்ச்சி வகையால் அறிந்துணரும் வழிவகைகளைக் காட்டாமல். கண்மூடி நம்பிக்கையையே வற்புறுத்தின; அதனால் வாழப் பிறந்த மக்களுக்கு மண்ணில் வாழ உரிமையுண்டு என்பதை மறந்து. ஒருவரை யொருவர் தாழ்த்தியும் வேறுபடுத்தியும் அடிமைப்படுத்தியும் அமைத்த செய்தியை வரலாறு காட்டுகிறது. இன்றோ மக்களினம், நலம் செய்யக் கற்றுணர்ந்த பொறியியல் விஞ்ஞானத்தால், பேரழிவு விளைக்கும் கருவிகளைச் செய்து பெருங்கேட்டை எதிரே நிறுத்திக் கொண்டு வருந்துகிறது. இவ்வுலக வாழ்வுக்குப் பின்னும் வாழ்வு உண்டு. இன்று செய்வன நல்லனவாயின் மறுமையில் இன்பமுண்டு. தீயனவாயின் துன்பமே எய்தும். என்ற எண்ணம் நெஞ்சில் ஊன்றி விடுமாயின் தீமை குறையும்; நன்மை பெருகும்.

தீமை செய்தற்கு அச்சமும். நன்மை செய்தற்கு விருப்பமும் மக்கள் உள்ளத்தில் வளமுற அமைவதற்குச் சமயவுணர்வை மக்களி டையே பரப்புவது தவிர வேறு வழியில்லை. பொருட் பெருக்கத் துக்கான பொறியியல் தொழிலியல் விஞ்ஞான அறிவைப் பரப்பு வதற்காகப் பொது மக்களும் அரசும் பெரிதும் முனைந் திருப்பதைக் காண்கின்றோம். அதுபற்றி, அவர்கள் திட்டங்கள் வகுப்பதையும் அவற்றை முறையே செயற்படுத்துவதையும் அறிகின்றோம். அவை சிறந்த பயனை அளித்து வருவதையும் நாம் கண்கூடாகப் பார்க் கின்றோம். அவ்வாறு நாமும் ஏன் திட்டமிட்டு நமது சமயப் பணிகளைச் செய்யக்கூடாது?

இன்றைய மாணவர்களே எதிர்காலத்தில் இந்நாட்டு நன் மக்களாவர். அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உலகிற்கு வேண்டு வனவற்றையே முழுதும் தன்கண் கொண்டுளது. அரசும் அதனையே பெரிதும் ஆதரிக்கிறது. அதன் வாயிலாக வளரும் மாணவர்கள் நாளைக்கு உலகிற்கே பெருங்கேடு செய்யும் பெருங்கருவிகளைப் படைத்து நாசகாரிகளாகப் விளங்குவரோ என்ற அச்சம் இப்பொழுது தோன்றியிருக்கிறது. அமெரிக்க நாட்டு நியூயார்க்கு நகரத்து ஏசிவா (Yeshiva) பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சாமுவேல் பெல்கின் (Dr. Samuel Belkin) என்பார். தற்காலக் கல்வி நிலையையும், அது உண்மைச் சமுதாய அமைப்புக்கு உதவாது ஒழிந்தமையையும், மக்கள்பால் அமையவேண்டிய ஆன்ம ஞான ஒழுக்கங்களை எண்ணாது பகை வளர்க்கும் பண்பில் செயலாய் அக்கல்வி மாறியதையும் எடுத்துக் காட்டி; உண்மை காணும் அறிவும். உண்மை ஞான அருளாராய்ச்சியும், மிகைப்படப் பெறச் செய்வதுதான் இன்று கல்வியின் முடிந்த முடிவாக வேண்டும் என்ற கருத்துப்பட; “If the present day educators are openly alarmed at the fact that Europe with its ancient seats of learning failed to stem the tyranny and brutality on the continent, it is primarily because the modern age has over estimated the power of secular and material knowledge to influence the conduct of human beings. Our knowledge of the Natural sciences, the social sciences and humanities has not failed us, we have failed it by expecting these branches of learning to serve a purpose which is not within their domain - the creatiog of an ideal society.

“The complete divorcement between scientific research and spiritual and moral ideas has brought disatrous consequences. A science which remains indifferent to the importance of morality in the life of society becomes an oponent of morality.

“The end of education should be the cultivation of intellectural and spiritual values bringing to a maximum development the moral potentialitites of man”1 என்று கூறுகிறார்.

என்றாலும் பொருள் வேட்கை அறிவை மறைத்து விடுகிறது. கல்வித்துறையில் நாற்பது ஆண்டு அனுபவத்தைக் கொண்டு இதனைக் கண்டுரைக்கிறேன். கெய்சர்லிங் (Keyseling) என்ற மேனாட்டறிஞர். கல்வியாளர் உலகாயதச் சூழ்நிலையைக் கடந்து சென்றுவிட்டார்கள். இப்பொழுது பொதுமக்கள் அதன்கண் காலை வைத்துள்ளார்கள் என்பாராய். “If men of education have already passed through the materialistic stage, the masses are only just entering it”2 என்று கூறுகின்றார்.

எதிர்கால மக்களுக்கு இத்தகைய சூழ்நிலை எய்தாமல் காப்பதற்குக் கல்வி நிலையங்களில் திருவருள் உணர்வு ஒழுக்கக் கல்விக்கு இடமில்லை. பொது மேடைகளோ, செய்தித்தாள்களோ இடம் கொடுப்பதில்லை; கோயில் களிலும் போதிய வாய்ப் பில்லை. ஆனால், எங்கள் கல்லூரி நிறுவிய கலைத்தந்தை திரு. கருமுத்து, திகாகராசச் செட்டியார் ஒருவர் தான். திருவருள் உணர்வும் ஒழுக்கமும் நல்குதற்கு மிக்க துணிவுடன் ஏற்பாடு செய்துள்ளார். வேறு யாரும் எவ்விடத்தும் சைவச் செந்நெறியாகிய திருவருள் உணர்வு நெறியைக் கற்பிக்க எண்ணினாரில்லை. பரந்த பெருநாட்டில், பல கோடி மக்களிடையே பத்துப் பதினைந்து பேர்க்குத் தரப்படும் இக் கல்வி கடலில் கரைத்த காயம் போல் ஆகிறது.

அரசு வகுக்கும் ஐந்தாண்டுத் திட்டம் போன்று அறநிலையங் களும் செல்வக் கோயில்களும் ஐந்தாண்டுத் திட்டங்கள் வகுத்துத் திருவருள் உணர்வுப் பணிபுரியத் தலைப்பட வேண்டும். ஆண்டு தோறும் கோயில்களிலும், அறநிலையங்களிலும், விழாக்களும் குருபூசை களும் நடைபெறுவதில் தவறுவதில்லை. விழா நடக்கும் நாளில் சொற்பொழிவுகளும் நடைபெறுகின்றன. ஆயினும் அவை வெறும் பொழுது போக்காக உள்ளனவே அன்றி முறையாகத் திருவருள் நெறியை உணர்த்துவனவாக இல்லை. இப்பொழுது இந்து அற நிலையத்துறைத் துணை ஆணையாளராக இருக்கும் திரு.விவேகானந்தம் பிள்ளையவர்கள் திருச்செந்தூரில் கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்தபோது. கந்தர் சட்டி விழாவில் ஆறு நாளும் திருமுருகாற்றுப்படை, சிவஞான போதம் என்ற நூற் பொருளை வகுப்பு போல அமைத்து நடத்தினார். இருநூற்றுவர்க்குக் குறை யாமல். கற்ற அறிஞர்கள் வந்திருந்து கேட்டனர். கற்றவர்கள் திருந்தினால் மற்றவர்கள் அவர்களைப் பார்த்துச் செம்மையான முறையில் திருந்தி விடுவார்கள். இது தொடர்ந்து நடந்திருந்தால். சிவ நெறியின் செம்பொருளை உணர்ந்தவர்கள் 2000 பேர்களாகி யிருப்பார்கள். இது கோயில் தோறும் அற நிலையங்கள் தோறும் தொடர்ந்து பத்தாண்டுகள் நடக்கு மாயின். ஆண்டுக்கு 5000 விகிதத்தில் நாட்டில் 50,000 பேர் திருவருள் ஞானம் பெற்று தக்கோராய்த் தோன்றி விடுவர். அவர்களுடைய உணர்வும் செயலும் நாட்டின் சமுதாய வாழ்வில் மிகச் சிறந்த நோக்கங்களை உண்டாக்கும்.

நமது சமாசமே ஆண்டு விழாவின் வேறாக இடையிடையே பலவிடங்களில் சைவ வகுப்பு ஏற்படுத்தித் திருவருள் ஞானம் நல்கும் பணியில் முயன்றது. அரசியல் தேர்தல்கள் போல் இந்த மக்கள் பணி கைம்மேல் பயன் தருவதில்லையாதலால் சில ஆண்டு களில் செல்வரது ஆதரவு குறைந்தது; அதனால் சமாசம் தனது பணியைத் தொடர்ந்து நடத்த இயலாது போயிற்று. ஆகவே அப் பணிகளைக் கோயில்களும் அறநிலையங்களும் மேற்கொள்ளுதல் கடனாகிறதல்லவா?
திருவருள் நல்கும் முறையிலும் சிறிது கருத்தைச் செலுத்த வேண்டும்.

அருள் நூல்கள் தோன்றிய காலத்தில் மக்களினத்தின் அறிவும் சூழ்நிலையும் வேறு வகையில் இருந்தன. இப்போது உலகியல் பொருள் அறிவு பெருகியுள்ளது. காரணகாரிய ஆராய்ச்சி ஆண் பெண் இருபாலாரிடத்திலும் ஓரளவு வளர்ந்துள்ளது. வெறும் நம்பிக்கைகள் நிற்க இடமின்றித் தடுமாறுகின்றன. திருக்குறள், சிவஞானபோதம், திருமுறைகள் போன்ற நூல்களே இன்று விஞ்ஞான நெறியில் வளரும் அறிவாராய்ச்சியின் எதிர் நிற்கும் ஆற்றல் உடையவையாக இருக்கின்றன. ஆண்டுதோறும் கோயில்களும் அறநிலையங்களும். விழா நாட்களில் பதினாறு வயதுக்கு மேற் பட்ட கற்ற இளைஞர்களையும் முதியவர்களையும் கூட்டிச் சிவஞான போதம் திருக்குறள் ஆகிய நூல் கருத்துகளைக் காலையில் வகுப்பு நிறுவிக் கற்பிப்பதும். மாலை சொற்பொழிவு வாயிலாகத் திருமுறை வரலாறு. திருமுறை ஆசிரியர் வரலாறுகளை எடுத்து ரைப்பதும் என ஐந்தாண்டுத் திட்டம் ஒன்று வகுத்துப் பணி புரிவது, இக்காலத்துக்கு ஏற்றது. ஓர் ஆண்டுக்கு நமது மாநிலத்தில் பத்தாயிரம் பேர் விகிதம் சமயவுணர்வுடையராகச் செய்வது தக்கது. ஐந்தாண்டில் 50,000 பேர் ஆவர். அவர்கள் வாயிலாக ஆளுக்கு ஐந்து பேர் வீதம் கொண்டாலும். ஐந்து ஆண்டுகளில் இரண்டரை லட்சம் பேர் சமயவுணர்வு பெற்று மகிழ்வர்.
நம் நாட்டில் கோயில் வழிபாடு பொறுப்பற்ற நிலையிலும். விழாக்கள் பொழுது போக்காகவும் மாறி வருகின்றன. சில இடங்களில் பீடி சுருட்டு முதலிய பொருள்களின் விற்பனை விளம்பரம் தருவதற்கு விழாக்கள் வசதி செய்து தருகின்றன. கோயிலுக்குப் போகிறவர்கள். இறைவனுக்கு நீராட்டுவித்தலும், தேங்காய் உடைத்தலும் சூடம் ஏற்றவிப்பதும், விளக்கிடுவதும் விழாச் செய்வதுமே சமயப் பணியாகக் கருதி அமைகின்றனர். இவை வழிபாட்டில் நம் சிந்தையை ஈர்த்து நிறுத்துவன. ஆயினும், இவற்றைச் செய்பவருள் பெரும்பாலார் மனம் இவற்றோடு நேரே தொடர்புபடுவதில்லை; இது திருவருளின் இயக்கம் என்பது அவர்களுக்குத் தெரியாது.

ஆண்டவனை வழிபடும்போதும், அவனது திருவருளே நம்மில் இயங்குகிறது. “அவன் அருளாலே அவன்தாள் வணங்கி” என்பது மணிவாசகம். இத்திருவருளைச் சிந்திக்கும் பயிற்சி இல்லா மைதான் வழிபாட்டில் மனம் பொருந் தாமைக்குக் காரணமாகும். ஆண்டவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு; ஆண்டவனுக்கும் நாம் வாழும் உலகுக்கும் உள்ள தொடர்பு; நமக்கும் உலகுக்கும் உள்ள தொடர்பு; ஆகிய மூன்று தொடர்புகளும் ஏன் உண்டாயின? எப்படி உண்டாயின? எனச் சிந்திப்பதே திருவருட்சிந்தனை.

அச்சிந்தனை திருவைந்தெழுத்தை முன்நிறுத்தி நமது மனத்தின் கோழைப் பண்பை மாற்றித் திண்மையும், தூய்மையும் உடையதாக்கும். மனம் திண்ணியராயினோர் திருக்குறள் சொல்வது போல “எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்.” மனம் தூய்மை, கல்வி, தொழில், வாணிகம் முதலிய வாழ்க்கைக் கூறுகளை வளமாக்கி மக்கள் செல்வமும், மாநிதிச் செல்வமும், மிக்க வாழ் நாள் மேம்படு செல்வமும் நிறைவிக்கும். மனம் தூய்மை கெடாமல் பாதுகாப்பது அரிது. அதற்கு வழி திருமுறைகளைப் பொருளறிந்து ஓதுவது. சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார். பலரும் ஏத்தப் பேரின்பம் பெறுவர். எப்படியெனில் மனம் தீய நினைவுகளுக்கு இடமாகும்போது தேவாரம், திருவாசகம் முதலிய திருமுறைப் பாட்டுக்களைப் படித்து அவற்றின் கருத்தறிய முற்படு வோமானால் தூய்மையைச் சிதைக்கும் நினைவுகள். ‘ந’ என்ற மறைக்கும் அருளால் கெட்டுப்போகும்; பாட்டின் பொருளும் அவற்றைச் செய்த திருமுறை ஆசிரியர்களின் ஞானவொளியும் உள்ளத்தில் பாய்ந்து ஒளிசெய்யும். மனமும் தூய்மை கெடாமல். திண்மை சிதையாமல் திகழ்ந்து சிறக்கும்.

வெறும் நம்பிக்கைமேல் நில்லாமல் அறிவாராய்ச்சி மேல் நிற்கும் நம் சைவ சமய உணர்வு தழைத்துப் பரவுமானால். மக்கள் அனைவரையும். சமநிலையில் நின்று இயக்கும் திருவருளின் சிறப்பு நன்கு உணரப்படும். ஒவ்வொருவரும் உலகோடு தமக் கிருக்கும் தொடர்பையும், தமக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பையும் உணர்வர்; உணர்ந்தால் தம்போல் உலகில் பிறந்த அனைவரும். இறைவன் அருள் பெறும் இயல்பினராவர் என்ற உணர்வு பெற்று. வேற்றுமையுணர்வைப் போக்கி ஒரு குடும்பத்த வராய் ஒத்து வாழ்ந்து இன்பம் எய்துவர். இதனை முடிபாகக் கொண்டே மெய்கண்டதேவ நாயனார்.

“தம்மை யுணர்ந்து தமையுடை தன்உணர்வார்
எம்மை உடைமை எமை இகழார் - தம்மை
உணரார் உணரார் உடங்கு இயைந்து தம்மில்
புணராமை கேளாம் புறன்”

என்ற சிவஞான போதத்தின் தொடக்கத்திலேயே எடுத்துரைத்தார்.

இதில் தம்மை உணர்வது என்பது ஒரு பெரிய செயல் அன்று. இந்த உணர்வு, உலகத்தையும், உடம்பையும் படைத் தளித்து வாழச் செய்யும் தலைவனாகிய சிவ பரம்பொருளின் திருவருட் செயலை அறிந்து கொள்ளச் செய்யும். இனி தம்மை யுடைய தன் உணர்தல் என்பது இவ்வாறு தன் உணர்வார். தம்மைப்போல் ஏனை நாம் எல்லோரும் சிவத்தின் அருளுக்கு இலக்கானவர் என்ற கருத்து விளங்கப்பெற்று நம்மைத் தம் போ லவே எண்ணிச் சமநிலையில் கொண்டு தழுவி ஒழுகுவர் என்பதற்காக. ‘எம்மை உடைமை எமை இகழார்’ என்று சிவஞானபோதம் கூறுகிறது. ‘தன்’ என்ற சொல் முதல்வனாகிய சிவ பரம்பொருளைக் குறிக்கிறது.

தம்மை உணரார் உணரார்: அதாவது முன்னே சொன்ன முறையில் தம்மை உணராதவர் வேற்றுமையற்ற ஒருமைச் சம நிலைச் சமுதாய அமைப்பே வேண்டியது என்று அறியமாட்டார்கள். அந்த உணர்விலிகள் தம்மில் மனம் கலந்து ஒன்று சேர்ந்து வாழ ஒருப்படவும் மாட்டார்கள் என்பது விளங்க. உடங்கு இயைந்து தம்மில் புணரார் என்றும். பின்பு அவர்கள் என்ன செய்வார்கள் என்றால் பிறரைப் புறங்கூறிச் சமுதாயத்தின் ஒருமையைச் சீரழிப்பர் என்றும் அவர் கூறுவதை யாங்கள் ஒருநாளும் செவியில் ஏற்க மாட்டோம் என்றும் கூறலுற்ற மெய்கண்டதேவர், கேளாம் புறன் என்றும் விளங்க உரைக்கின்றார்.

இன்றைய அரசியல் தலைவர்கள் பலரும் இத்தகைய ஒருமைச் சமுதாயம் அமையவேண்டும் என்று தமக்குரிய முறையில் அரசியல் மேடைகளிலும். பொது மேடைகளிலும் பறையறைந்து வரு கின்றனர். நமது சிவநெறிச் சமயக் கருத்தும் அதற்கு ஒத்து இயங்கு வதால். அவர்களுக்கு இதனை எடுத்துரைப்பின் அவர்களும் வேண்டும் உதவிகளைச் செய்வர்; அவரவர் எண்ணும் எண்ணங் களும் ஈடேறும்.

“ நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்
 நரகத்தில் இடர்ப்படோம் நடலையில்லோம்
 ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
 இன்பமே எந்நாளும் துன்பமில்லை.”

செம்மாந்து பேசும் செல்வ வாழ்வு பெற்றுச் சிறக்கலாம்.

பெருமக்களே, இதுகாறும், என் உள்ளத்தில் தோன்றிய கருத்துக்களை எடுத்துரைத்தேன்; நீங்களும் அமைதியுடன் இருந்து கேட்டீர்கள். இவ்விழாவிற்குத் தலைமை தந்து என்னைச் சிறப்பித்த வரவேற்புத் தலைவரையுள்ளிட்ட பெருமக்களுக்கும். சென்னைச் சைவசித்தாந்த மகா சமாஜத்தினர்க்கும். இங்கே கூடியிருக்கும் ஏனை நன்மக்கள் அனைவர்க்கும். என் பணிவன்பு கலந்த வணக்கத் தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் கருவி கரணங்களை இயக்கியும். இச்சமாச ஆண்டு விழா இங்கே நிகழ்தற்கு வேண்டிய எண்ணத்தையும் முயற்சி யையும் உண்ணின்று தூண்டியும். உதவிய சிவபரம் பொருளாகிய பழனிப் பால தண்டாயுத முருகப்பெருமாள் திருவடிகள் வாழ்க என வாழ்த்தி என் தலைமையுரையை இவ்வளவில் நிறுத்துகின் றேன். வாழ்க சிவநெறி.

ஞானாமிர்த சாரம்


அருள்மிக்க அவைத்தலைவர் அவர்களே,
அன்புடைய பெரியோர்களே, தாய்மார்களே!

“ஞானாமிர்த சாரம்” என்னும் பெரும் பொருள் பற்றி அடியேனைப் பேசுமாறு எனக்குக் கட்டளையிட்டவர் நமது சமாசக் காரியதரிசியாகிய சைவத்திரு. பாலசுப்பிரமணிய முதலி யார் அவர்களே ஆவர். அவர்கள் செய்துவரும் சைவத் தொண்டும். சமயத்தொண்டும் தமிழ்நாடு நன்கறிந்த செய்தியாகும். அவர் களுக்கு நாம் செய்யக்கூடிய கைம்மாறு ஒன்றும் இல்லையாயினும். அவர்கள் பெருநலம் எய்திப் பல்லாண்டு வாழ ஆண்டவனை வழிபடுவ தொன்றையே உடையோம். என் போன்றோர். அதனோடு அவர் இடும் பணிகளை ஆற்றவேண்டும் என்னும் கடமையுடை யவராவார். அதனால் என் பேச்சில் நலம் உண்டாகுமாயின் அதனை அவர்களுக்கே உரிமை செய்து விடுமாறு முதற்கண் வேண்டிக் கொள்ளுகிறேன்.

சென்ற சில ஆண்டுகளாக, யான் ஞானாமிர்த நூலுக்கு விளக்கவுரை ஒன்று வகுத்து நம் சித்தாந்தத்தின் வாயிலாக வெளி யிட்டு வருகின்றேன். சுமார் முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன் மதுரைத் தமிழ்ச் சங்கத்தினர் இந்த ஞானாமிர்த நூலைப் பதிப் பித்தனர். இதனை ஆராய்ந்து தந்த பெரியார் சேற்றூர் - திரு. சுப்பிரமணியக் கவிராயர் அவர்கள் இத்துறையில் பட்ட துன்பத் துக்கு அளவில்லை என்பது அவர் எழுதியுள்ள முன்னுரையால் விளங்குகின்றது. தற்செயலாக எங்கள் வீட்டின் பழைய ஏட்டுப் பிரதி ஒன்று சில ஆண்டுகளுக்குமுன் கிடைக்கப் பெற்றது. அதனைப் பார்த்தபோது பாட்டுக்கள் பலவும் செவ்வையாகவே காணப் பட்டன. ஆனால் அவற்றில் இலக்கணக் குறிப்பும், உரைக் குறிப்பும், பாடவேறுபாடுகளும் இருப்பக் கண்டேன். அவ்வுரைக்கும், அச்சாகி வெளிவந்துள்ள உரைக்கும் மிக்க வேறுபாடுகள் காணப் படுகின்றன. ஒன்று கூறுகிறேன்; “யாளி, கூவல் தூண்டும் ஆதப் புலைச்சி, காதற்காசனியாகி, மேதினி இன்னிசை எழுவர்ப் பயந் தோள் ஈண்டே” (ஞானா - 40) என்பதன் உரையில் எழுவர் என்றது கபிலர் அதிகமான் முதலிய எழுவர் என அச்சாகியுள்ள உரை கூறுகிறது; ஏட்டுப் பிரதியில் உள்ள குறிப்புரை. “எழுவர் என்றது முனிவர் எழுவரை” என்று கூறுகின்றது. அதனால், இவ் வேறு பாடுகளை ஆராய்ந்து விளக்கவுரை ஒன்று எழுதி வெளியிட விரும்பி நமது சமாசக் காரியதரிசி அவர்களுக்குத் தெரிவித்தேன். அவர்கள், அவ்வாறு வெளியிடுவது நன்றே என உரைத்தார்கள். யானும் அவ்வண்ணமே எழுதியுள்ள விளக்க வுரையைச் சென்ற சில ஆண்டுகளாக நம் சித்தாந்தத்தில் வெளியிட்டு வரலானேன்.

சென்ற சில மாதங்களுக்குமுன் ஓர் எண்ணம் தோன்றியது. “இதனை இவ்வாறே செய்துவரின் காலம் நெடிது பிடிக்கும்; முழுதும் நன்கு எழுதித் தனி நூலாக வெளியிடுவதே தக்கது.” என எண்ணி வேண்டுவன செய்யத் தொடங்கினேன். அதனால், நம் காரியதரிசியவர்கள். யான் இதனைக் கைவிட்டு விட்டதாகக் கருதலானார்கள். தில்லைத் தமிழ்க் கழக ஆண்டு விழாவிற்கு என்னை அழைத்த காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பொருள் நூல் ஆசிரியரும். என் இனிய தோழருமாகிய உயர்திரு. S.K. கோவிந்தசாமிப் பிள்ளையவர்கள் என்னை இந்த ஞானா மிர்தத்தைப் பற்றியே பேசவேண்டும் என்றார்கள். அப்போது செவ்வியபடி எடுப்பதற்காகப் பிரதிகளை வேற்றூருக்கு அனுப்பி யிருந்தமையால் முடியாது போயிற்று. போயினும், இம்முறை குன்றக்குடி முருகன் திருமுன் அது வெளிப்பட வேண்டும் என்பது திருவருள் முடிபு போலும் என்று எண்ணி, என் மனமொழிகளால் ஆண்டவனை வேண்டுகின்றேன். இது குறித்து என்னை ஊக்கிய திரு. கோவிந்தசாமிப் பிள்ளை, M.A., அவர்களுக்கும் என் பணி வான நன்றி செலுத்துகிறேன்.

பெரியோர்களே, ஞானாமிர்தம் என்கிறபோதே, குற்றமோ கோதோ ஏதுமில்லாத அமுதமாகும் இது என்பது விளங்கும். குற்றமும் கோதும் உள்ளதாயின். அதனை வடித்துச் சாரம் காண்பது இயல்பாகும். ஆனால், இங்கு சாரம் என்றொரு சொல்லைப் பெய்து நம் காரியதரிசியார் குறித்துள்ளார்கள். வேண்டாத ஒரு சொல்லைப் பெய்து கூறுவது வேறொரு பொருளைக் கருதுமிடத்து உண்டு. அதனால், ஞானாமிர்தம் என்பது ஒரு செவ்விய தமிழ்ச் சைவப் பெருநூல் என்றும். அதனுடைய சுருங்கிய கருப்பொருள்தான் அடியேனால் பேசப்படவேண்டும் என்றும் சமாசம் கட்டளை யிட்டது என்று கருதுகின்றேன்.

அமுதம் என்று சொல்லுகிறபோதே. அதன் ஓசை இரண்டு செய்திகளை நம் நினைவிற்குக் கொண்டுவருகிறது. ஒன்று தேவ ருண்ட சாவா மருந்து என்பது; மற்றொன்று பண்டு. அது குறித்துக் கடல் கடையப்பட்ட செய்தி. சாவா மருந்து என்பது. சாதலை நீக்க வந்த - உயிர் உடலை விட்டு நீங்குவதாகிய சாதலை நீக்க வந்த - அமுதமாகும். ஆகவே, உடலின் நீங்காது உயிர் நெடிது நிற்றற் குதவும் மருந்தாகிய அந்த அமுதத்தினும். இந்த அமுதம் வேறு பட்டது. உயிரை உடலின் நீக்குவோரை நண்பர் என்றும், ஒன்று படுத்து வோரைப் பகைவர் என்றும் கூறும் பான்மை உடையது இந்த ஞானாமிர்தம்.

“ ஈன்றோர் பகைஞர், கீழ்ந்தோர் நட்பே
அருஞ்சிறை விடுநரின், அருஞ்சிறை இடுநரின்
யார்கொல் உறுதி யோரே”

என்று இது கூறுகின்றது. ஆனால், கடைந்து கொள்ளப்படும் செய்தியை நோக்கின். இந்நூல் அதனைத் தழுவி.

“ ஆகம மத்தின், அருளின் கோலத்து
ஆசிரி யமலன் பாத பங்கயப்
போதொளி யிலகப் புனைந்து, மாதவன்
அருள் உபதேச அரும்பெறல் நோன்ஞாண்
மதிமாத் தடக்கைக் கதுமெனப் பூட்டி
முறுக வாங்க மறுகுபு கலுழந்து
………………………… …………………….. …………………….
அச்சா னாழி ஏற்பட எழுதலின்
ஞானா மிருதம் என்ப
ஆனாச் செவ்வி மாநூற் பெயரே”
- ஞானா – 3

என்கின்றது.

இனி, இந்நூலாசிரியர் வாகீச முனிவர் என்பவர். இவர் சுமார் நானூறு ஆண்டுகளுக்குமுன் கோடலம்பாகை என்னு மிடத்தில் இருந்த பரமானந்த முனிவரிடம் சித்தாந்த சைவ மெய்நெறியை உணர்ந்தவர். இச்செய்தி, இந்நூலில்.

“ பாடல் சான்ற பல்புகழ் நிறீஇ
வாடாத் துப்பின் கோட லாதி
அருளா பரணன் அறத்தின் வேலி
அருள் மொழி திருமொழி போல”
- ஞானா – 28

என வருவதாலும்.

“ இருள்நெறி மாற்றித்தன் தாணிழல்இன்ப மெனக்களித்தோன்
அருள்மொழித்தேவன் நற்கோடலம் பாகை யதிபனெங்கோன்
திருநெறி காவலன் சைவ சிகாமணி சில்சமய
மருணெறி மாற்ற வரும்பர மானந்த மாமணியே”

என இவர் பாடியதாகக் கூறப்படும் தனிச்செய்யுளாலும் தெரி கின்றது. வேறு குறிப்புகள் மிகுதியாகக் கிடைத்தில. கிடைத்துள்ள வற்றைக் கொண்டு பின்னர் ஆராய்ச்சி செய்யக் கருதி இதுபோது நிறுத்திக் கொண்டிருக்கின்றேன். ஆனால், இவர் பாடிய பாட்டுக் களை எங்கள் சைவத் தனிமுதலாகிய சிவஞான முனிவர். யாம் செய்த தவப்பயனாகத் தந்துள்ள மாபாடியத்தும், பிறாண்டும் பொன்னே போற் போற்றி ஆண்டிருக்கின்றார் எனின். இப்பாட்டுக் களின் நலங்கள் எத்துணைச் சிறப்புடையது என்பது யாவர்க்கும் நன்கு விளங்கும்.

பெரியோர்களே, இனி யான் பேச வேண்டியது “ஞானா மிர்த சாரமே” யாதலின், இனியும் இவற்றைப்பற்றிக் கூறிச் செல்வது மற்றொன்று விரித்தல் ஆகும். அதனால் இனி யான் பொருளுக்கு வருகின்றேன்.
ஆண்டவன் அருளிய ஆகமங்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு பாதமாக நடக்கும் என்றும். ஞானபாதம் பதி, பசு, பாசம் என்பதை உரைப்பது என்றும் நாம் கேட்டிருக்கின் றோம். ஆனால், இந்நூல் “திருமிகு ஞானம், இலங்கொளி யோகம், நலங்கிளர் கிரியை, சரியையென்ற விரிதருபாதம்” நான்கு என்று முறைசெய்து கொண்டு. ஞானபாதத்தைப் பதி பசு பாசம் என்று முறை செய்யாது. பசுவும், பாசமும், பதியும் என்று முறை செய்து கொள்கின்றது. ஞானபாதம் “பசுபாசத்தொடு பதியாய் பெற்றி” என்றே ஆசிரியர் நமக்கு வழங்குகின்றார். பசுவின் இயல்பைப் பத்துப்பாட்டிலும். பாசத்தின் தனியியல்புகளை ஒன்பது பாட்டுக் களிலும், பசுபாசப் பிணைப்பும் வீடும் முப்பத்தாறு பாட்டுக் களிலும், பதியியல்புகளை இருபது பாட்டுக்களிலும் உரைக் கின்றார். மேலும், இந்நூல், பாயிரம், சம்மிய ஞானம், சம்மிய தரிசனம், பாசபந்தம், தேகாந்தரம், பாசவனாதி, பாசச் சேதம், பதியுண்மை உணர்த்தல், பாசமோசனம் என ஒன்பது வகையாக வகுத்து ஆராயப் பட்டிருகின்றது. இனி, அம்முறையைப் பின் பற்றாது. இந்நூலின் சாரத்தையே ஒரு வகையாய்ச் சுருங்கக்கூறி என் சொற்பொழிவை முடித்துக் கொள்கின்றேன்.

இனி, பசு, பாசம், பதி என்ற மூன்றனுள் பசு என்பதும் பதி என்பதும் அறிவுடைய சித்துப் பொருள்களாகும். பசுவை உயிர் என்றும், சீவன் என்றும், ஆன்மா என்றும்; பதியை இறைவன் என்றும் சிவன் என்றும் கூறுவர். இவை அனாதியாகவும், நித்த மாகவும் உள்ளனவாகும். முதலாக எடுக்கப்பட்ட சீவன் அனாதியே ஆணவமல சம்பந்தமுற்றுத் தன்னறிவு பெரிதும் மறைப்புண்டு. உரிமை குன்றிப் பிணிப் புடையதாயிற்று. அதனால் இதனை ஆராய்ந்து கண்ட அறிஞர். இதனைப் பசு என்றே கூறலாயினர். பசு என்ற வடமொழிச் சொல்லுக்குக் கட்டப்பட்டது என்பதே பொருளாகும். சீவனைப் பற்றிப் பிணித்து நிற்கும் ஆணவம் மாயை, கன்மம் என்பவைகளைப் பாசம் என்றும் கூறுவர். பாசத்தால் பிணிப்புண்டு அறியாமை பெரிதும் அறிவு சிறிதும் உடையது பசு என்று கூறுங்கால். அறிவும் அறியாமையும் ஓரிடத்தில் எவ்வாறு நிற்கமுடியும் என்று ஒரு கேள்வி பிறக்கின்றது. அதற்கு, இந்நூலா சிரியர், தீக்கடைக்கோலை எடுத்துக்காட்டி, கடையுங்காறும் கோலோடு கிடந்து, கடைந்தவழிப் பிறந்து, அதனையே அழிக்கும் தீப்போல, அறிவும், அறியாமையொடு விரவிக்கிடந்து. பக்குவம் வந்தவழித் தான் விளங்கித் தோன்றி. அறியாமையை அழித்து உண்மை அறிவாய்த் துலங்கும் என்பார்.

“ ஒல்லா வல்லழல் போல, நல்லோய்!
ஞானமும் இன்மையும் நலம்மிக்கு
ஆனா உயிர்கட்கு உணர்வு அனைவகையே” - ஞானா – 70

என்று கூறுகின்றார்.

இனி, பதிப்பொருளாகிய சிவன். சீவன்களைப்போல மலப் பற்று இல்லாத அறிவுப் பிழம்பாகும். ஆயினும், சீவன்களைப் போலச் சித்துப் பொருளாகிய இது. மலமில்லா மலும், சீவன்கள் மலமுடையனவாயும் இருப்பதற்குக் காரணம் கூறுவர். பளிங்குக்கு ஒளியும். செம்பிற்குக் களிம்பும்போல் இவை அனாதி என்றும். இஃது ஆன்றோர் அறிந்துரைத்த அருண்மொழி என்றும் கூறு கின்றார்.

“ அம்ம சீருணம்
திகழொளிப் பளிங்கு போலப் புகழரும்
இறை புற்கலனுக்(கு) என்றனன் குறைவின்று
அறைகழல் அருளொலி பரந்த
பொறைவளர் சாரல் அறவ னோனே” - ஞானா – 9

என்பதனால் இது விளங்கும்.

இவ்வாறு, அனாதியே மலசம்பந்த முற்றுப் பசுவாகிய உயிர்பால். அருள் மிகக் கொண்ட பரமனுக்கு. அதனை அப்பிணிப் பினின்றும் விடுவிக்கவேண்டுமென்ற திருவுள்ள முண்டாகின்றது. அவன் எல்லா வல்லமையும் உடைய வனாதலால். தன் சத்தி சங்கற்பத்தால் மாயையைக் கலக்கி. அதனால் உடல், கருவி, உலகு, நுகர்ச்சி எனப்படும் தனு கரண புவன போகங்களைப் படைத்து. அவற்றில் இச் சீவன்களைப் புகுத்தி. தம்மைப் பற்றி நிற்கும் மலவழுக்கைப் போக்கிக் கொள்ளுமாறு அருளுகின்றான். இவற்றிற்கு முதற்காரணமாகிய மாயை என்பது பாசவகையுள் கூறிய ஒன்றாகும். இதுவும் உயிரைப் பற்றி நிற்பாதயினும். ஆணவத்தால் உண்டாகிய அறியாமையை உடைப்பதற்குக் பெருந்துணை செய்வதாகும். இதுவும் அனாதியானது; உயிர்போல் பதியின் சத்தியில் ஒடுங்கி. அவன் சங்கற்பித்தவழி மீளத் தோன்றும் இயல்புடையது. அதனால் ஆணவத்தை இயற்கை மலம் (சகச மலம்) என்றும். மாயையைச் செயற்கை மலம் (ஆகந்துக மலம்) என்றும் அறிஞர் கூறியிருக் கின்றனர். இந்த மாயையின் காரியமாகத் தோன்றியுள்ள உடல், கரணம், உலகு முதலியவை அசேதனமாக இருப்பதால். இம்மாயை அசேதனமாகும். ஆதலால்தான், இதனை.

“ வாலிய சேதனமன்றுஇது, தீதறு செயல்கள்
கோதுக அசேதன மாதலின்; அலதேல்
காரணம் நியமம் என்னும் பேரிசை
எல்லாம் உடைக்கும் பொல்லாத் தோடம்
வல்லே எய்தும்” - ஞானா – 21

என்கின்றார்.

மேலும், இந்த மாயை, தன் காரியப்பொருளால் ஆன் மாவைப் பற்றியுள்ள மலம் அறுமளவும் விடாது தொடர்ந்து. அற்றவழி, ஆண்டவனது சத்தியில் ஒடுங்கிப் பின் அவன் திருவுள்ளப் படி மீளத் தோன்றுவதாகும்.

“ ஓதுமாயா காரியம் நிற்பது, முடிவில், சீரிய
சத்தி வடிவிற் பொற்பொடு புணர்ந்து
தொடங்கற் காலை வலம்பட விளங்கும்;
ஆருயிர் ஏரிசைப் போகம்
சீரிதின் அருந்தத் திகழ்தனு முதலே” - ஞானா – 21

என்று இதனை விளக்குகின்றார். இதன்கண் ஆருயிர் போகம் அருந்தத் திகழ்தனு கரணாதிகளுக்கு முதலாகிய மாயை என்ற தனால். இது பரமன் அருள் மிகுதியால் வேலை செய்வது என்பது பெறப் படும். ஆனால், அறியாமை மிக்கு வருந்தும் உயிர்கள் இதன் உண்மையினைத் தம் அறிவால் ஆராய்ந்து காணாது. இவற்றிற்கே அடிமையாகி. கன்மங்கள் பல செய்து மீளமீளப் பிறந்து இறந்து உழலுகின்றன. மலம் அறாமையின். உடலும் கருவியும் பிறவும் உயிர்களைச் சூழ்ந்து தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. உயிர்வகையின் தோற்றம் குறித்து அமைந்த காம வுணர்ச்சி. தீங்குகளுக்கும் காரணமாதல்போல, பல நீக்கத்துக்கென வந்த தனுகரணாதிகளை உயிர்கள் பிறப்பிறப்புக்களுக்கும் இன்ப துன்பங்களுக்கும் காரண மாக்கிக் கொள்கின்றன. ஆகவே, அறியாமை கொண்டு உயிரை மறைத்துத் துன்பம் உறுவிக்கும் ஆணவத்தைக் கெடுக்கப் புகுந்த ஆண்டவன். மாயா காரியமாகிய பிறிதொரு துன்பக் காரியத்தை உண்டுபண்ணுவது என்னை? என்றொரு வினா நிகழ்கின்றது. இதற்கு ஆசிரியர்.

“ …… உடையுறு
கறைகடி தகற்றப் பிறகறை பிடித்த
பெற்றியின் இவனுக் குற்ற வான்பிணி” - ஞானா – 10

என்றும், மாயாகாரியமாகிய தனுகரணாதிகளைப் பாரிசேடப் பிரமாணத்தால் ஆன்மாவின் மலநீக்கத்துக்கென்றே ஆண்டவன் படைத்துளன் என்பார்.

“ காரியம் காசினி யாதி; ஏரியல்
ஈசன் கத்தா; இவற்கிது போகம்
ஆதல் செல்லாது; அகன்றுயர் கருமம்
தானோ நுகர்தல் செல்லாது; ஆனாது
என்னை செய்தது என்னின், அன்னோ,
கொன்னே செய்யான், தன்நேர் இல்லோன்;
பாரி சேட மதனிற் பரனுக்கு
ஏரியல் பரன்பசு என்றறி இனிதே” - ஞானா – 12

என்றும் கூறியுள்ளார். இவ்வாறு, உயிர்களைத் தனுகரணாதி களில் கூட்டிப் பந்தியாதுவிடின். இவற்றிற்கு விடுதலை, (வீடுபேறு) இல்லை என்றற்கு.

            “விரவிய பந்தம்  
    கூடா தோடின் குலவிய போகம்  
    துய்த்தல் செல்லான்; செல்லா னாக  
    எய்த்தல் இன்றாம் இருவினை யாக  
    அபவர்க்கமும் மற்று அடையான்”                       - ஞானா – 10  

என்று கூறுகின்றார்.

இங்ஙனம், ஆன்மாவிற்கு உதவியாக வந்துள்ள உடல், கரணம், உலகம், போகம் முதலியவற்றை. அது நன்கு ஆராய்ந்து கண்டு. அவற்றிற்கே அடிமையாகாது. பாசச் சேதம் விரும்பி அதற்குரிய முயற்சியில் இறங்கிக் கன்மச் சேத உபாயத்தால் மலங்களைப் போக்கி உண்மை ஞானம் பெற்று விடுதலையாகிய சிவபோகம் துய்த்தல் வேண்டும்.

“ பயன்பல மாந்தி வியந்துறை காலை
வல்வினை எல்லை செல்லாக் காலத்து
ஒல்லென ஒப்ப உயர்பெருஞ் சிவனது
சத்தி நிபாதம் தழைப்ப மெய்த்தகு
குருபரம் பரனது அருளின் செவ்வி
வம்பறு சம்பிர தாயத் தஞ்சுடர்
உற்ற காலைச் சொற்றொடர் பற்றுத்
தேயாது யாவுமாய் அறிவகன்ற
ஆயாச் சிவனது அணிகிளர் சீர்த்தி
நின்மலத் தியையும் பின்மலத்து இயையான்
அந்தமில் பந்தம் மற்று இ(வ்)வணம்
சிந்துதல் சிந்தல் தெரியுங் காலே” - ஞானா – 8

எனக் கன்மச்சேத உபாயத்தால் மலநீக்கமும் வீடுபேறும் எய்தும் வகையை விளக்குகிறார்.

இனி, பாசத்சேதமாகிய ஞானநெறியை விளக்கத் தொடங்கும் ஆசிரியர். ஆன்மாவை அனாதியே பிணித்துக் கொண்டு கிடக்கும் ஆணவமலம் நீங்குமாறு யாதெனக் கூறத் தொடங்கி.

“ உயிர்தொறும் நின்றக் கண்ணும், விளிதரும்;
தன்னுடைக் காலம் துன்னில் பின்னிடும்
வலியின் தகுதித்து” - ஞானா – 19

என்கின்றார்.

வன்மையுடைய பொருளொன்று, பிறிதொன்றைப் பற்றி இருக்குங்கால். அது பக்குவமடையும் வரையில் பற்றியிருந்து. வந்தவழி நீங்குவது சிறப்பு ஆதல் குறித்து. “பின்னிடும் வலியின் தகுதித்து” என்றது குறிக்கத்தக்கதாகும்.

இவ்வாறு மலத்தைக் கெடுத்தற்காக வந்து பற்றும் மாயா மலத்தின் இயல்பு கூறுவார். உலண்டுப் புழுவை எடுத்துக்காட்டி.

“ நுண்ணூற் பேரில் இழைத்து அகப்படுபு
தன்முதல் கெடூஉம் எண்ணாக் கீடத்து
இறும்பூத யார் அஃதறிந் திசினோரே” - ஞானா – 18

என்று விளங்குகின்றார். உயிரைப் பற்றியுள்ள அழுக்கைப் போக்குவது குறித்து வேறோர் அழுக்கு வடிவாய்ப் போந்து. அவ்வுயிர்க்குத் துணை செய்யும் இயல்புடைமை காணாது. பலரும் அதனை அத்தகைய துணையாகக் கருதாது. அதற்கே அடிமை யாகிக் கழிகின்றனர் என்பார். “யார் அஃது அறிந்திசினோரே” என்கின்றார்.

இனி, தனுகரணாதிகளைக்கொண்டு ஆன்மா போகத்தை நுகருமிடத்துக் கன்மம் பிறக்கின்றது. கன்ம மாவது நல்வினை தீவினை என்ற இரண்டுமாகும். இவ்வினை மலமாயை காரணமாக வருவது குறித்து. இந்நூலாசிரியர். “களியிடைக் கலித்ததென்ப, விளிவருங்குரைய இவ்விரு வினைத்திறனே” என்கின்றார். இவ் வினைகளைச் செய்யு மிடத்து நன்மை தீமைகள் தோன்றி. உயிரின் கட் கிடந்து, தம்மை நுகர்விக்கும் தன்மையுடையவாகும். இவை எவ்வாறு உயிர்களைப்பற்றி நிற்கின்றனவெனின். இதற்கு மூன்று பொருள்களை எடுத்துக்காட்டுகின்றார்.

“ ஆடிப், பேரிருள், புடம்மடிகூடிய குற்றம்
கோடேந் தல்குல் மாதோர் பாகற்
சேர்வோர் இன்பம்”
- ஞானா – 25

போல இவை செறிந்திருக்குமென்றும். இவை பின்னர் விரிந்து உயிர்களுக்குப் பயன் தரும் திறத்தை. உச்சிப்போதில் நிழல் அடிக்கீழ் ஒடுங்குவதும். கற்ற கல்வி உள்ளத்தில் ஒடுங்குவதும். ஆலமரம் வித்தில் ஒடுங்குவதும்போல. ஒடுங்கிக்கிடந்து விரியும் என்றும் கூறுவார்.

“ பாதவக் கண்ணிழல், பனுவல், கோளிப்
பெரும்பணை பொதிந்த சிறுநுண் வித்தின்
இருந்தவை விரியும்” - ஞானா – 25

என்கிறார்.

இக் கன்மங்கள் சுயங்கன்மம், பூர்வகன்மம் என இருவகைப் படும். இவற்றுள் சுயங்கன்மம் உண்மை ஞானத்தால் சார்பின்றிக் கெட்டழியும். பூர்வகன்மத்தை நுகர்ந்தே தீர்தல் வேண்டும். நெய்யாகியது வெண்ணெயும், திருநீறாகியது சாணமும் ஆகாத வாறு போலப். “போகாதம்ம புராதனம்” (ஞானா-41) என்று ஆசிரியர் கூறுகின்றார். பூர்வ கன்மங்களுள் பக்குவப்படாதவை. ஆன்மா மெய்யுணர்வு பெற்றவழி, சார்பில்லாமையால் கெட்ட ழிந்து விடும்.

இனி, இக்கன்மங்களைக் கெடுத்தற்கு வழி யாது என நிகழும் அவாய்நிலையை ஓர்ந்து. இந் நூலாசிரியர் ஓர் உபாயமும் கூறு கின்றார். நிகழும் நலந்தீங்குகளுக்குக் காரணம் ஊழே என நினைந்து வினையின்பால் விருப்பு வெறுப்புக் கொள்ளாதொழிய வேண்டும்.

“ …………….மாறெழுந்து
உடம்பிடி உடல் துணி படுப்பினும், விரையொடு
மலைய சாந்தும் வழுத்தும் கொண்டு
தலையிற் பாதம் தாங்கினும், “உலையாப்
பிறவிப் பிணிதணி அறவணர் இவ,” ரென
விளையா இன்பம் விளையின் அல்லதை,
உளைவதை யுடையரோ வினையுணர்ந்தோரே” - ஞானா – 37

என்றும். இவ்வியல்பினால், உணர்வு மிகுந்து வருவோர்க்கு. வினைப்பற்றுக்கு ஏதுவாகிய உடல் முதலியவை வேறாய்த் தோன்றும்; தமக்கென ஓர் உருவின்மையும், தம்மைப் பின் எப்பொருளும் நலந்தீங்குகளுக்கு அடிப்படுத்த இயலாதென்பதும் விளங்கும்; அதனால்.

“ உருவில் ஒர் உயிருக்கு உடலுநர் உழையரென்
றிருவே றுரைப்பதை யெவனோ” - ஞானா – 35

என்றும் கூறுகின்றார். இவ்வாறு உணர்ந்து எவ்வுயிர்பாலும் எப்பொருள்பாலும் காய்தல் உவத்தல் கொள்ளாதவரே உண்மை ஞானத்துக்கேது உடையராவர். அவ்வாறு இல்லாத மக்கள் நாயினும் கடைப்பட்டவர் என்பார்.

“ அளியரோ அளியர்தாமே, தெரியாது
இளையோன் எறிந்த குணில்வாய்ச் செல்லாது
இளையோற் சினவும் வளைவாய் ஞமலியின்
அளியரோ அளியர் என்னை,
ஒளிகொள் காரணம் உன்னா தோரே” - ஞானா – 35

என்கின்றார்.

இவ்வாறு கன்மச்சேத உபாயத்தால் வினைப்பயன் நுகர்ந்து வருமுகத்தால் வினையொப்புண்டாகும். பற்றி நிற்கும் மலங்களும் அதனால் கெடுதற்குரிய பரிபக்குவம் எய்த, நல்லுணர்வு பரமனால், தன்மை, முன்னிலை என்ற நிலைகளுள் ஒன்றின் வழியாகக் கொள்ளப் படுகிறது. அதனைப் பெற்றுச் சிறக்கும் மேலோர்கள். ஏனை யோரைப் போலவே, நின்றவினை அறக்கெடும்வரையில் செய்வன செய்து வருவார்கள். ஆனால், அவற்றால், அவர்கள் வினை வயப்பட்டுத் தீது அடைவது இலர் என்பார்.

“ ஞான மாக்கழல் யாணுற வீக்குநர்,
விடய வேலைத் தடையின்று படியினும்,
தீதொடு படியுநர் அல்லர்;
மாதுயர் கழியுநர், நீதி யானே” - ஞானா – 44

என்கின்றார். விடயவேலையில் படிந்து செய்வன செய்பவர் எவ்வாறு வினையால் பற்றப்படுவதிலர் என்றோர் ஐயம் நிகழ் கின்றது இதற்கொரு சிறந்த உவமை கூறுகின்றார். சுற்றிவிட்ட குலாலன் சக்கரம் தானே வினைப்பயனின்றிச் சுழலுதலும். காய மிருந்த பாண்டம் மணநாறுதலும்போல. வினைசெய்து பயின்ற உடல். தானே அதனைச் செய்கின்றதேயன்றி. அதன் பயனைப் பெறுவதில்லை என்பார்.

“ மண்வினை மாக்கள் தம்வினை முடிமார்
திகிரி யுருட்டி யொருவி யாங்கும்
வருதல் ஒவாமாறும், குவிவாய்த்
தசும்பு இங்கு ஆங்கு அசும்பறத் துடைத்தும்
இருங்கடி யிகவாப் பெருங்கட னல்லதை
உடையதை உடையரோ மற்றே” - ஞானா – 48

என்கின்றார்.

அங்ஙனமாயின், தனுகரணாதியோடு கூடியிருப்பதால். அவர் மனத்து நிகழும் எண்ணந்தான் யாதாகும் எனின். “உருவில் உயிர்” எனத் தம்மை எண்ணி, தான் அடைதற்குரிய சிவத்தையே நினைந்து பயின்று. அதனைக் கூடுநாள் எந்நாளோ என்ற எண்ணமே உடையராய் இருப்பர் என்பார்.

“ ……….உரைதுடக்கு
உணர்வொடு கழிந்து இணையில் இன்பத்து
என்றுகொல் எய்து ஞான்றென்று நன்றும்
வடுநீங்கு சிறப்பின் வயங்கியோரே” - ஞானா – 47

என்கின்றார். அவர் மனத்துப் பந்தகாரணமமதை சிறிதுமின்றி, முத்தி காரணமான மமதையே தலைசிறந்து நிற்கும். இதன் உண்மை யினை. நம் அப்பமூர்த்திகள்.

“ இறுமாந்திருப்பன் கொலோ - ஈசன்
பல்கணத் தெண்ணப்பட்டுச்
சிறுமானேந்தி தன் சேவடிக்கீழ்ச்சென்று
இறுமாந்திருப்பன் கொலோ”

என்று அருளியிருத்தல் வற்புறுத்துகின்றது.

இவ்வாறு பசுபாச இயல்புகளை விளக்கிவந்தவர். பின்பு பதியின் இயல்புகளைப் பல அளவைகளால் வற்புறுத்தி. அவன் அருவுருவத் திருமேனி உடையனாதலை விளக்குவார். விந்துநாத தரிசனமுடைய சிவயோகிகளுக்காகவும். எல்லாப் பொருளினும் கலந்துநின்று. அவரவர் பக்குவத்திற்கேற்ப காட்சி வழங்குவதற் காகவும் அருவுருவனாகின்றான் என்றும். அருட்குரவனாய் எழுந் தருளுங்கால் கொள்ளும் உருவத் திருமேனி. அவன் தானே சங்கற் பித்துக் கொள்வதென்றும் கூறுகின்றார். இச்செய்தி.

“ அகளமாய் யாரும் அறிவரி தப்பொருள்
சகளமாய் வந்ததென் றுந்தீபற;
தானாகத் தந்ததென் றுந்தீபற”

என்ற திருவாக்கை நினைவுறுத்துகின்றது. அங்ஙனம் அவன் சகளீ கரித்து வரும் திருவுருவைக் கூறுவார்.

“ இரந்து குறையுறினும் பிறந்தை எந்திறம்
மறந்தும் நோக்காது; எவன்புகல் எமக்குஎன,
ஒழிவற நிறைந்த மதிசேர் செஞ்சடை
ஒருவன் பாத மல்லதை
பிறிது முண்டோ பெரும்புகல் நமக்கே” - ஞானா – 53

என்கின்றார்.

இனி, சத்திநிபாதமுற்று மெய்யுணர்வு கூடியவர் அந்தரங்க தியானத்தால் அச்சிவத்தைக் கூடிப்பெறும் இன்பம் எத்தகைத்து எனின். அஃது உரையிறந்து நிற்கும் உவட்டாப் பேரின்பம் என்பார்.

“ கலவி விளைந்த காமத் தேறல்
உண்டோர் உணரின் அல்லதை யவருங்
கொண்டுரை கூடா மாறு” - ஞானா – 67

என்கின்றார்.

இனி, முத்தியின்கண் சிவஞானிகள் சிவத்தோடு அத்து விதமாகும் இயல்பினை மூன்று வகை உவமைகளால் விளக்கு கின்றார். உப்பளத்துப் பட்டவை உப்பாதலும். உவரிபுக்க நன்னீர் உவரி நீராதலும். புழு வேட்டுவனாதலும் போல அத்துவிதமாவர் என்கின்றார். அது.

“ முதுதிரை முந்நீர் விரிதரு காயல்
வித்தாது விளைத்த வெண்திரள் பழனத்து(உப்பு)
உற்றவை யெவனோ, உரவ, துப்புவளர்
உவரி யுற்ற தீநீ ரல்லதை
கவர்பு முண்டோ, கற்றோய், கவர்புக
மண்புனை மதிற்பெய்து ஒண்சிறை பரப்பி
ஊதுவண் டுணர்ந்த பேதை வான்புழு
மாதர்வண் டாவதை யறிதி; கோதற்று
அமலனை ஆசற வுணர்ந்த
அமலர் செய்தியும் அற்றால் மற்றே” - ஞானா – 73

என்பது.

இந்நிலையில் நுண்ணிய தருக்கமுறையில் கடா வொன்று எழுப்பி விடை பகரப் பெறுகின்றது. ஆன்மாக்கள் சிவமாந்தன்மை எய்துமிடத்து. பசுத்துவம் கெட்டபின் பதித்துவம் எய்துமோ, பதித்துவம் எய்தியபின் பசுத்துவம் கெடுமோ எனின். பசுத்துவம் கெட்டபின் ஆயின். “கெட்டது ஆதல் தானும். அமரர்க்கானும் மேவாதாகும்” என்பதனால். பதித்துவம் பெறுமாறு இல்லை; பதித்துவம் எய்தியபின் ஆயின், கெடுதல் பதித்துவத்துக்குக் குற்ற மாகும்; அதனால், இரண்டும் ஒரு காலத்து நிகழ்ச்சி என்கிறார்.

“ அழிந்தாய்த் தன்று, ஆயழிந்தது மன்று
மொழிந்தவை இரண்டும் ஓரமை யத்தே” - ஞானா – 74

என்கின்றார்.

இனி, பசுத்துவமின்றிப் பதித்துவம் எய்திய ஆன்மா எவ்வண்ண முள்ளது என்பதற்கு. உப்பளத்தில் பட்ட கொம்பொன்று. உப்பே என்னுமாறு உப்பேற்றி நிற்றல் போல. பதித்துவம் எய்திய ஆன்மா சிவமேயாகித் தூய்மையாக உள்ளது என்றும். இஃது ஆண்டுப் பெறும் இன்பத்தை. கானலிடத்து அலவன்பெடையோடு கூடிப் பெறும் இன்பத்தோடு உள்ளுறுத்தும் கூறுகின்றார்.

“ ………………………………………………………..அளிவளர்
தடவுநிலைப் புன்னை மடலவிழ் வாசம்
கடற்புல வகற்றும் கானல் அலவன்
வன்பெடை தழீஇ இன்புறு காயல்
உப்புவிளை பழனத் துற்ற பொன்தோட்டு
உலவையின் அறிக மாதோ
கலைவ லாளர் நிலைபுணர் பண்பே” - ஞானா – 74

இதன்கண் கடற்புலவைப் புன்னையின் மடலவிழ் வாசம் மாற்றும் என்றதனால். பாசபந்தமாகிய அஞ்ஞான நாற்றத்தை. பாசச் சேதமாகிய ஞான மணம் பரந்து மாற்றும் என்றும். அலவன் வன்பெடை தழீஇ இன்புறும் என்பது உயிர் அவாவறுத்து மெய் யுணர்வுற்றுச் சிவத்தோடு கூடிப் பேரின்பம் நுகரும் என்றும் கூறி. சிவத்தோடு அத்துவிதமாகிய வழி. ஆன்மா சிவத்துக்குரிய தலைமை இயல்பெல்லாம் பெறாது என்பதை வற்புறுத்துவது குறித்து. “உலவையின் அறிக” என்றும். “நிலைபுணர் பண்பு” என்றும் கூறியுள்ளார். ஊடலுற்று. நீக்க நீங்கிக் கூடிய பெடை என்றற்கு. வன்பெடை என்றார். இன்றேல் மென்பெடை என்று கூறியிருப்பர்.

பாசபந்தமாகிய அஞ்ஞானம். பாசச் சேதமாகிய ஞானத்தால் கெடும் திறத்தைப் பிறிதோர் இடத்தில் வேந்தர் இருவர் போர் செய்து பெறும் வெற்றிச் செயல் மேல்வைத்து மிக அழகாகக் கூறுகின்றார். பாசபந்தமாகிய அஞ்ஞான வேந்தன்.

பொறாமை, அவா காவற்காடு ஆகவும்
புத்திரர், தாரம் அகழி ஆகவும்
தேகம் வேலி ஆகவும்
கோபம், மாற்சரியம் சேனை ஆகவும்
ஐம்பொறி யானை ஆகவும்
ஐம்புலன் தேர் ஆகவும்
மனம் குதிரை ஆகவும்
அறியாமை மந்திரி ஆகவும்
புண்ணிய பாவம் நகரி (அரண்) ஆகவும்
நால்வகைப் பிறப்பு தேசம் ஆகவும்

கொண்டு எதிர்க்கவே. பாசச் சேதமாகிய ஞானவேந்தன்.

புத்தி மந்திரியாகவும்
விரக்தி சேனை ஆகவும்
பொறை தேர் ஆகவும்
உபதேசம் குதிரை ஆகவும்
அவாவறுத்தல் யானை ஆகவும்

கொண்டு சென்று.

“ அடுமிளை பொடிபட எறிந்து, நெடுமதில்
அகழியொடு இடிய நூறிக், கொடுநகர்
எரிவிருந்து ஊட்டி, அரிதுபெறு சிறப்பின்
தன்னுடை நாசம் மன்னன் எய்தப்
பரமா னந்தப் பைதிரம்
வளையாச் செங்கோல் ஓச்சினன் நெடிதே” - ஞானா – 33

என்பதனால் இச்செயலை அழகுறுத்துகின்றார். உயிர்கள் வினைத் திரளை ஈட்டிப் பிறவித் துன்பம் எய்தும் திறத்தை அரசன் செயல் மேல் வைத்து.

“ …………….துயரிடை வினைநகர்க்
கருங்கைக் கயமைக்களிறு உகைத்து, இரும்புலப்
பெரும்படை விரிந்துசூழத், திருந்தா
நாற்கதிப் பவன் யுலாஅய்,
ஆர்த்தவிழ் திறம்பிற; போற்றுமதி புரிந்தே” - ஞானா – 26

என்று கூறுகின்றார்.

இங்ஙனம் தாம் உணர்ந்து உரைத்த ஞானாமிர்தச் சிறப்பை. இந்நூலாசிரியரே பிறிதோர் இடத்தில்.

“ தேனுடன் அமிழ்து கலந்தன்ன சுவைய,
அமிழ்தூண் அண்டரும் பெறற்கருந் தகைய,
தண்டாப் பிறவிப் பேரிடர் எறிப,
உரையுணர்வு கூடா வரகதி யுய்ப்ப
மதியோர் ஆனாது பருகுவ, பருகியும்,
அமையாது நுவலும் அமைதிய, பாச
வல்லி வேரற நிமிர்ப, எல்லையில்
மறக்குறும் பறுப்ப, அறத்தின் வேலிய,
தனக்குநிக ரில்லாத் தகைமைய, மனத்தின்
மாசறக் களைவ, தேசொடு நிவந்த” -ஞானா – 32

பாசச் சேதமாகிய ஞானாமிர்தம் என்கின்றார்.

இத்துணைச் சிறப்பு வாய்ந்த இந்நூலின் சாரத்தை அறிவில் சிறிய அடியேன் கூறியதில் குற்றங்கள் மிக இருக்கலாம். கருத்து வேறு பாடு இருக்கலாம். இவற்றை ஏற்று யான் இதுகாறும் செய்த என் சிறு சொல்லை அமைதியோடு கேட்டு என்னை ஊக்கிய சைவப் பெருமக்களாகிய உங்களுக்கும். என்னை இவ்வாண்டு விழாவிற்கு வரவழைத்து என் பணியை ஏற்றுச் சிறப்பித்த இச்சைவ சித்தாந்த சமாஜத்திற்கும். என் பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு என் சொற்பொழிவை இவ்வளவில் நிறுத்திக் கொள்ளு கிறேன்.

திருவாசகம் சிவபுராணம்


வாழ்த்தும் வணக்கமும்
நமச்சிவாய வாஅழ்க! நாதன்தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள்வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க! 5

வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடிவெல்க!
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க!
புறத்தார்க்கும் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க!
கரம்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க!
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க!
ஈசன் அடிபோற்றி! எந்தை அடிபோற்றி!
தேசன் அடிபோற்றி! சிவன்சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
மாயப்பிறப்பு அறுக்கும் மன்னன் அடிபோற்றி!
சீரார் பெருந்துறை நம்தேவன் அடிபோற்றி! 15

ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி!

வருபொருள் உரைத்தல்
சிவன் அவன்என் சிந்தையுள் நின்ற அதனால்,
அவன் அருளாலே அவன்தாள் வணங்கி,
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை,
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான்! 20

கண்நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்துஎய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல்இறைஞ்சி

அவையடக்கம்
விண்நிறைந்து மண்நிறைந்து, மிக்காய், விளங்குஒளியாய்
எண்நிறைந்து, எல்லை இலாதானே! நின்பெரும்சீர்
பொல்லா வினையேன், புகழும்ஆறு ஒன்றுஅறியேன்!25

சென்ற நிலைகளும் இன்றைய நிலையும்
புல்ஆகிப், பூடுஆய்ப், புழுஆய், மரம்ஆகி,
பல்விருகம் ஆகிப் பறவைஆய்ப் பாம்புஆகி,
கல்ஆய், மனிதர்ஆய், பேய்ஆய், கணங்கள்ஆய்,
வல்அசுரர் ஆகி, முனிவர்ஆய், தேவர் ஆய்,
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்துஇளைத்தேன்; எம்பெருமான்!
மெய்யே, உன் பொன்னடிகள்கண்டுஇன்று வீடுபெற்றேன்!

பொய்அகல வந்த மெய்ச்சுடர்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்காரம்ஆய் நின்ற
மெய்யா! விமலா! விடைப்பாகா! வேதங்கள்
“ஐயா” என, ஓங்கி, ஆழ்ந்துஅகன்ற நுண்ணியனே!35

வெய்யாய்! தணியாய்! இயமானன் ஆம்விமலா!
பொய்ஆயின எல்லாம் போய்அகல, வந்தருளி,
மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச்சுடரே!
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே!
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்அறிவே! 40

ஐந்தொழில்
ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய்! அனைத்துஉலகும்
ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள்தருவாய்,
போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பில்.

சிந்தனையுள் ஊறும் தேன்
நாற்றத்தின் நேரியாய்! சேயாய்! நணியானே!
மாற்றம், மனம், கழிய நின்ற மறையோனே!
கறந்தபால் கன்னலொடு, நெய்கலந்தால் போலச்
சிறந்துஅடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று,
பிறந்தபிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்!

மாயஇருள் போக்கிய மாசற்ற சோதி
நிறங்கள்ஓர் ஐந்துஉடையாய்! விண்ணோர்கள் ஏத்த
மறைந்து இருந்தாய், எம்பெருமான்! வில்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை,
அறம், பாவம், என்னும் அரும்கயிற்றால் கட்டி,
புறம்தோல் போர்த்துஎங்கும் புழுஅழுக்கு மூடி,
மலம்சோரும் ஒன்பது வாசல் குடிலை
மலங்கப் புலன்ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55

விலங்கு மனத்தால், விமலா! உனக்குக்
கலந்த அன்புஆகிக், கசிந்து உள்உருகும்
நலம்தான் இலாத சிறியேற்கு நல்கி,
நிலம்தன்மேல் வந்தருளி, நீள்கழல்கள் காஅட்டி,
நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்கு, 60

தாயின் சிறந்த தயாஆன தத்துவனே!
மாசுஅற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே!

ஆட்கொண்ட பெருங் கருணை
தேசனே! தேன்ஆர் அமுதே! சிவபுரனே!
பாசம்ஆம் பற்றுஅறுத்து, பாரிக்கும் ஆரியனே!
நேச அருள்புரிந்து, நெஞ்சில் வஞ்சம்கெட, 65
பேராது நின்ற பெரும்கருணைப் பேர்ஆறே!
ஆரா அமுதே! அளவுஇலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கிஎன் ஆர்உயிர்ஆய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே! 70
அன்பருக்கு அன்பனே! யாவையும்ஆய், அல்லையும்ஆம்
சோதியனே! துன்இருளே! தோன்றாப் பெருமையனே!
ஆதியனே! அந்தம், நடுஆகி, அல்லானே!
ஈர்த்துஎன்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே!
கூர்த்தமெய்ஞ் ஞானத்தால் கொண்டுஉணர்வார்தம்
கருத்தின் 75
நோக்குஅரிய நோக்கே! நுணுக்குஅரிய நுண்உணர்வே!
போக்கும் வரவும் புணர்வும்இலாப் புண்ணியனே!
காக்கும்எம் காவலனே! காண்புஅரிய பேர்ஒளியே!
ஆற்றுஇன்ப வெள்ளமே! அத்தா! மிக்காய்நின்ற
தோற்றச் சுடர்ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர் வாய் 80
மாற்றம்ஆம் வையத்தின் வெவ்வேறே வந்து, அறிவுஆம்
தேற்றனே! தேற்றத் தெளிவே! என் சிந்தனையுள்
ஊற்றுஆன உண்ணார் அமுதே! உடையாளே!
வேற்று விகார விடக்குஉடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன்; “எம் ஐயா! அரனே! ஓ!” என்றுஎன்று85
போற்றிப் புகழ்ந்திருந்து, பொய்கெட்டு மெய்ஆனார்,
மீட்டுஇங்கு வந்து வினைப்பிறவி சாராமே,
கள்ளப் புலக்குரம்பை கட்டுஅழிக்க வல்லானே!
நள்இருளில் நட்டம் பயின்றுஆடும் நாதனே!
தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே!90
அல்லல் பிறவி அறுப்பானே! ‘ஓ’ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள்உணர்ந்து சொல்லுவார்
செல்வர் - சிவபுரத்தின் உள்ளார், சிவன்அடிக்கீழ்ப்
பல்லோரும் எத்தப் பணிந்து. 95

சிவபுராணம் விரிவுரை
செம்பொருட் செந்தமிழ்
திருநெறியாகிய சிவநெறிக்கண் நிற்கும் சைவர் அனை வருக்கும் சிவபுராணம் என்பது நன்கு தெரிந்த ஒன்றாகும்.

சைவத் திருமுறைகளுள் ஒன்றாகிய திருவாசகத்துள் இது முதற்கண் காணப்படுவது; மணிவாசகப் பெருந்தகையார் திருவாய் மலர்ந்தருளியது; தொண்ணூற்றைந்தடிகளால் இயன்ற கலிவெண் பாட்டாக அமைந்துள்ளது; சிவனோடு இயைபுடைய புராண வரலாற்றுக் குறிப்புச் சிறிதும் இன்றி, அப் பரம்பொருளின் பரமாம் தன்மையினையே பெரிதும் எடுத்தோதும் இயல்புடையது. சுருங்கச் சொல்லுமிடத்துச் சிவ பரம்பொருளின் செம்மை நலம்முற்றும் செம்மையாக ஓதும் செம்பொருட் செந்தமிழ்ப் பாட்டு இச் சிவபுராணம் என்பது சாலும்.

சிவனது தொன்மை
சிவம் என்பது, எல்லா உலகிற்கும் இறைவனாகிய கடவுட்குத் தென்னாட்டவர் வழங்கும் பெயராகும். இதனை மணிவாசகப் பெருந்தகையார் ‘தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்ட வர்க்கும் இறைவா போற்றி’ என்பதனாலறியலாம். மிருகேந்திரம் முதலிய ஆகமங்கள் சிவனென்னும் பெயர் வேதங்களிற் காணப் படவில்லை யென்பதும் இக்கருத்தினால்தான் என அறியலாம்.

புராணம் என்ற வடசொல் பழமை என்னும் பொருள் தருவதாகும். சிவபுராணம் என்ற தொடர், சிவபரம்பொருளின் பழமை என்று பொருள் தந்து, அப்பழமையை உணர்த்தும் நூல் என்று உணர்த்துவதாயிற்று. இதற்கு நம் நாட்டுத் தொல்லைச் சான்றோரும் “சிவனது அனாதிமுறைமையான பழமை” என்று உரைத்துள்ளனர்.

அனாதி முறைமையான பழமைக்கண் சிவபரம் பொருட்டு எவ்வகை வரலாறும் பொருந்தாமையால், இந்நூற்கண் அடிகள், சிவ பரம்பொருளின் ஞான நலம், தொழில்நலம், இச்சையாகிய அருள் நலம் என்ற மூன்றும் கூறி, அந்நலங்களைப் பாராட்டிப் பாடி, முடிவில் பாடிப் பரவும் மெய்யடியார் பெறும் பயன் கூறி முடித்திருக்கின்றார்.

புராணப் புதுமை
இனி, இக்காலத்தே நிலவும் புராணங்களுட் பல இக்கால மக்களின் கருத்துக்கு ஒவ்வாத நிலையில் இருப்பது கொண்டு, இக்காலத்தவர்க்குப் புராணமென்ற சொல்லே அருவருப்பைப் பயந்து நிற்கின்றது. அதனால், சிலர், சிவபுராணம் என்பதும் அப்புராணங்களுள் ஒன்றே எனக் கருதித் தவறு கூறுகின்றனர். அவர்கள் இதனை ஒருமுறை கருத்தூன்றிப் படிப்பரேல் தம் தவற்றுக்கு வருந்துவர். எதிர்காலத்தே இவ்வாறு கூறுவோரும் உளராவர் என்று கருதியோ, என்னவோ, அடிகளார், இச்சிவ புராணத்தின் முடிப்புரையில், “சொல்லியபாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் உளராதல் வேண்டும்” என வற்புறுத்தி உள்ளார் என நினைக்கவேண்டி இருக்கிறது.

இனி, சிவபுராணம் உணர்த்தும் கருத்துக்களைக் காண்ப தன் முன் அதன் பொது அமைப்பைச் சிறிது நோக்குதல் வேண்டும். இதன்கண் முதல் இருபத்தைந்து அடிகளால் இதற்குப் பாயிரமும், இறுதி ஆறடிகளால் இச் சிவ புராணத்தை ஓதும் முறையும், ஓதினார் பெறும் பயனும், இடைநின்ற அறுபத்து நான்கடிகளால் சிவ புராணமும் அமைந்துள்ளன.

பாயிரம்

பாயிரம் என்றது முன்னுரை என்று பொருள்படும்.
" ஆயிரம் முகத்தான் அகன்றதாயினும்,
பாயிரம் இல்லது பனுவல் அன்றே"

என்பது பண்டையோர் கூறும் இலக்கணப் பழமொழி. “திருவிளங்கிய மாநகர்க்கு உருவிளங்கிய வாயில்போல” பொருள் நிரம்பிய நூலுக்குத் தெருள் வழங்கும் தோற்றுவாய் ஆவது, இப்பாயிரம்.

இப்பாயிரத்தையும் கடவுள் வாழ்த்து, கூறப்படும் பொருள், அவையடக்கம் என்ற மூன்று கூறாகப் பகுத்துக் கூறுவர்.

இவற்றுள் கடவுள் வாழ்த்து - வாழ்த்து, வணக்கம், பொருளி யல்பு உரைத்தல் என மூவகைப்படும்; இவைகளில் பொருளியல்பு உரைத்தல் தனித்தும், ஏனை இரண்டோடு விரவியும் வரும்; அதாவது பொருளியல்புரைத்தலும், பொருளியல்பு உரைத்து வாழ்த்துவதும், பொருளியல்பு உரைத்து வணக்கம் கூறலும், என மூவகைப்பட்டு நிற்கும். நிற்பினும் கடவுள் வாழ்த்துக்கள் பெரும் பாலும் வாழ்த்தும், வணக்கமும் பொருந்தி நிற்குமென்பதைத் தெளிய உணர வேண்டும்.

வாழ்த்து

இந்நூற்கண், மணிவாசகப் பெருந்தகையார்,
நமச்சிவாய வா ஆழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகமம் ஆகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க (1-5)

என முதல் ஐந்து அடிகளால் வாழ்த்துக் கூறுகின்றார்.

சிவபரம் பொருளின் திருப்பெயராதலின் “நமசிவாய” என்பதை முதற்கண் ஓதி, இதற்குரிய ஓசைக்கும் பொருட்கும் முதல்வனாதலால் ‘நாதன்’ என்றும், இதனை ஓதுபவர்களை நன்னெறி உய்த்தற் பொருட்டு அவர் தம் நெஞ்சில் நீங்காது நிற்கும் அவன் இயல்பு தோன்ற “இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்” என்றும்; நெஞ்சில் நீங்காது நிற்பவன், குருவாய்ப் போந்து அருள்செய்யும் முறைமை தோன்ற, ‘குருமணி’ என்றும், அக்குருமணியால் அருளப்படும் ஆகமப்பொருளும் தானேயாய் உயிர் கட்கணுக்கனாய் நின்றருளும் சிறப்பியல்பை, “ஆகமமாகி நின்றண்ணிப்பான்” என்றும், உயிர்த்தொகை பலவாயினும் தான் ஒருவனேயாய் நிற்பது தோன்ற ‘ஏகன்’ என்றும், அவரவர் விரும்பிய வகையில் தோன்றி அருளுதலால் ‘அநேகன்’ என்றும், உயிருள் பொருள், உயிரில் பொருள் என்ற எல்லாப் பொருளிடத்தும் நீக்கமற நிறைந்திருக்கும் நிலைமை குறித்து “இறைவன்” என்றும் பொருளியல்பு கூறி, “வாழ்க” என வாழ்த்தி யிருப்பதை இதன்கண் காணலாம்.

“நமசிவாய” என்பது, சிவ பரம்பொருளின் திருப் பெயராம் என்பதை “நாதன் நாமம் நமசிவாயவே” என ஞானசம்பந்தரும், “எந்தையார் திருநாமம் நமசிவாய” என நாவரசரும் கூறுதல் காண்க.

நாதனாய், நெஞ்சில் நீங்காதவனாய் நிற்பதோடு குருவாய் எழுந்தருளி ஆகமப் பொருளை உணர்த்தி அண்ணியனாய், ஏகனாய், அவரவர் வேண்டுருவம் கொண்டு வருதலின் அநேகனாய், எப் பொருளிலும் தங்கியிருந்து அருள் செய்தலின் இறைவனாய் உள்ள சிவ பரம்பொருளின் திருவடி வாழ்க என்பது இவ் வாழ்த்து வகையின் பொருளாகும்.

வணக்கம்
இனி, வணக்கம் கூறும் பகுதியில்,

    ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி  
    தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி  
    நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி  
    மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி  
    சீரார் பெருந்துறை நம் தேவன் அடிபோற்றி  
    ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி              (11-16)  

என ஆறு அடிகளால் சிவ பரம்பொருளின் திருவடிகட்கு வணக்கம் கூறும் மணிவாசகப் பெருந்தகையார், அவனை, ஈசன், எந்தை, தேசன், சிவன், நேயத்தில் நின்ற நிமலன், மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன், சீரார் பெருந்துறையில் எழுந்தருளும் தேவன், ஆராத இன்பம் அருளும் மலை என்று பாராட்டி வணங்குகின்றார்.

நேயத்தில் நின்றான் ஆயினும் அங்ஙனம் நிற்றற்குரிய, வேண்டுதலும் நில்லாமைக்குரிய வேண்டாமையும் இல்லாதவன் என்பதற்கு ‘நிமலன்’ என்றும், தன் தாள்நிழல் வாழ்வார்க்கு வரும் துன்பத்தைத் துடைத்து அகற்றும் மன்னவன் போல, தன்தண் அருள் நீழலில் வாழும் உயிர்க்குத் துன்பத்தைச் செய்யும் பிறப்பினை அறுத்தருளும் இயல்பு தோன்ற “மாயப் பிறப்பறுக்கும் மன்னன்” என்றும், தன்னால் அருளப்படுவார் பொருட்டு உடம்பில்லாத தான் ஓருடம் பினைத் தானே சங்கற்பித்துக் கொண்டு தற்சுதந்த ரனாய் எழுந்தருளுதல் பற்றி, ‘தேவன்’ என்றும். உலகியல் வாழ்வில் வேந்தன் முதலாயினார் அருளும் இன்பம் உவர்த்துப் போதலும், அவ் வேந்தர் தாமும் சலித்துப் போதலும் போல அன்றி, தெவிட்டாத பேரின்பம் அருளி எஞ்ஞான்றும் தன் நிலையில் சலியாது நிற்றல் தோன்ற, சிவனை, “ஆராத இன்பம் அருளும் மலை” என்றும் பொருளியல்பு உரைத்து வணக்கம் கூறப்படுவது இதனால் விளங்கும்.

வென்றிச் சிறப்பு
இங்கே காட்டிய வாழ்த்தும் வணக்கமும் ஒன்றினை ஒன்று அடுத்து நிற்க வேண்டியிருப்ப, நம் மணிவாசகனார், வாழ்த்துக்கும் வணக்கத்துக்கும் இடையே வெற்றி கூறல் என ஒன்று நாட்டி அதனை,

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரம் குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க (6-10)

எனவரும் ஐந்தடிகளால் கூறுகின்றார்.

தன் கோற்கீழ் வாழ்வாரிடத்து அன்பு செய்தலால் வாழ்த்தவும், அறநெறிக்கண் நிறுத்திக் காத்தருளுதலால் வணங்கவும் உரிய வேந்தற்கு அவ்விரண்டும் செவ்வே அமைவதற்கு ஏது அவர்கள் பகை கொடுத்து மேம்படும் வெற்றியேயாகும்; அது கண்டு அவர்களைச் சான்றோர் புகழ்வது மரபு. அம்முறையே அளவிறந்த அண்டப்பகுதி முற்றும் தனது அருளாணை செலுத்தி ஆக்கல் முதலிய ஐவகைத் தொழிலும் செய்தருளும் உயர்வற உயர்ந்த தனி முதலரசாகிய சிவ பரம் பொருளின் அருளும் அன்பும் எடுத்தோது மாற்றால் அவன் வென்றிச் சிறப்பை மணிவாசகப் பெருந்தகையார் “வெல்க வெல்க” எனப் பாடி மகிழ்கின்றார்.

வேகங் கெடுத்தாளுதலும், பிறப்பறுத்தலும் அவன் அருட் செயல்களென்றும், ஏனைச் சேயோனாதலும், உள் மகிழ்தலும், ஓங்குவித்தலும் அன்புடைச் செயல்களென்றும் கொள்ளப்படும். பிறவிச் சுழலில் அகப்பட்டுக் கறங்கெனச் சுழலும் உயிர்களின் வேகத்தைக் கெடுப்பதென்பது, இடையறவின்றிப் பிறந்திறந்துழலும் உயிர்களை ஒடுக்கு வதாகிய அழித்தலையும், அதனின்று வீடு பெற நிற்பார்க்கு அறிவு கொளுத்தி, அவரைத் தொடரும் பிறவித் தொடர்பு தொடராதவாறு ஆட்கொள்ளும் பிஞ்ஞகன் என்பது, அருளுதலையும் சுட்டி நிற்கின்றன.

செம்மையேயாய சிவ நெறி தேறாது வேற்றுத் துறையில் கிடந்து பக்குவமுறாது நிற்பார்க்கு அஃது எய்துங்காறும் அவரறிவை மறைத்துச் சேய்மைப்பட்டு நிற்பன் என்பது மறைத்தலையும், சிவஞான நன்னெறிக்கண்ணே நின்று வீடுபேறு வேண்டினார்க்கு உள்நின்று இன்பம் அருள்வ னென்பது, அளித்தலையும், தலை குனிந்து வணங்குவோரை உயர்த்துவனென்பது ஆக்கலையும் குறித்து நிற்கின்றன. இவ்வாறு தன் ஐவகைத் தொழிலையும் எளிதில் கடைபோகச் செய்யும் செயல்நலம் உயிர்களால் வாழ்த்தவும், வணங்கவும் படுதற்கு ஏதுவாதலின். இதனை இடையே வைத்து உரைத்தருளுகின்றார். ஒன்னாரைத் தெறுதலும் உவந்தாரை ஆக்கலும் அரசர்க்கு வென்றியாக, ஒன்னாரே இல்லாத இறை வனுக்கு உயிர்கட்கு வேண்டுவன செய்யும் ஐவகைத் தொழில் களைச் செய்தருளுதலே வெற்றி ஆயிற்றென அறிக.

பண்டைத் தமிழ் நூல்களும் வெற்றி கூறும் வாகைத் திணையின் இயல்பு கூறுமிடத்து, “தரவில் கொள்கைத் தத்தம் கூறு பாட்டைப் பாகுபட மிகுதிப்படுத்தல் என்ப” என்னும்.

நுதலிப் புகுதல்
இவ்வண்ணம் வாழ்த்தும், வெற்றியும் வணக்கமும் கூறிய அடிகளார், தாம் கூறக் கருதும் பொருள் இது என்பாராய், நான்கு அடிகளால்

    சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்  
    அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்  
    சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை  
    முந்தை வினை முழுதும் ஓய உரைப்பனியான்              (17-20)  

என்று கூறியருளுகின்றார். இதன் கண் “சிந்தை மகிழச் சிவ புராணந் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்” என்பது நூற்பொருள் கூறல். இதனை நுதலிப்புகுதல் என்னும் உத்தி என்று இலக்கண நூலார் கூறுவர்.

இங்கே கூறப்படும் நூற்பொருள் பருப் பொருளதாய்ச் சுருங்கிய மிகச் சிலவாகிய சொற்களால் அமைதல் வேண்டு மாகையால், ‘சிவ புராணம்’ என்கின்றார்.

இப்பாயிரத்துள்ளே வாழ்த்தவும் வணங்கவும் படுபவ னாகிய அம் முதல்வன் சிவன் என்றும், என் சிந்தையுள்ளே அவன் நிற்பதனால், அவனது திருவருள் ஞானம் என்பால் நிறைகின்றது; அது கொண்டு அவன் திருவடிகளை வணங்கினேன் என்பார். “அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்றார்.

“அருட்கண் இல்லாதார்க்கு அரும் பொருள் தோன்றா” என்ற திருமந்திரப்படியே, அரும் பொருளாகிய சிவ புராணத் துக்குத் திருவருள் வேண்டுவதாயிற்று. அவன் திருவருள் உயிர்க்கு யிராய் நின்று, உயிர் தன்னையும், அவ்வுயிரை அடிமையாக உடைய முதல்வன் தன்னையும் காட்டி இன்புறுத்துமாதலின், அது காட்டக் கண்டு வணங் கும் தமக்கு அதுவே முதல் என்பதையும். “அவனருளாலே அவன் தாள் வணங்கி” என்று வற்புறுத்தினாராம். எல்லாக் காட்சிக்கும் திருவருளே முதல் என்பதை, திருமூலர்

“அருளின் தலைநின் றறிந்தழுந்தாதார்
அருளின் தலைநில்லார் ஐம்பாசம் நீங்கார் திருமந்.)

என்றும், அம்மையார்,

“அருளாலே மெய்ப் பொருளை நோக்கும் விதிஉடையேன்”

என்றும் கூறுவது காண்க.

நூற்பயன்
அருள்வழி நின்று இறைவன் தாளை வணங்கிச் சிவ புராணம் கூறுவதால் தம் சிந்தை மகிழ்கிற தென்றும், முந்தை வினை முழுதும் தேய்ந்து கெடுகிற தென்றும் உணர்த்துதற்கு,

" சிந்தை மகிழச் சிவ புராணந்தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்"

என்று அருளுகின்றார். சிவ புராணந் தன்னை, சிந்தை மகிழ, முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் என இயையும். இதனால் சிவ புராணத்தை உணர்ந்து ஓதற்கு முதலாகிய திருவருள், ஓதுத லால் சிவஞானப் பேரின்பத்தை உள் நின்று சுரந்து மகிழ் வெய்து விப்பதும், முந்தை வினை முழுதும் தேய்ந்து கெடச் செய்வதும் அறிகின்றோம். நல்ஞானம் தோன்றிய வழி இன்பம் உண்டாதல் வழக்கினும் கண்கூடாகக் காண்கின்றோம்.

வினைகெடச் செய்வது யாங்ஙனம்?
சிவ புராணத்தை உணர்ந்து ஓதுதலால் இம்மைக்கண் வினை இல்லை ஆகிறது. இப்போது எடுத்துள்ள உடம்பு முகந்து நிற்கும் பண்டை வினை உடம்பளவாய் நின்று அது தேயத் தேய்ந்து அது கெடக் கெடுகிறது; இதனால் தான் “முந்தை வினை முழுதும் ஓய” என்றார்; பிறிதோரிடத்தும் ஊனினை; “ஊனினை உருக்கி, உள் ளொளி பெருக்கி” என்றருளிச் செய்கின்றார். இதனால் நிகழ் காலத்தும் எதிர் காலத்தும் வினை இல்லை யாதலால் முந்தை வினையே எடுத்தோதப் படுவதாயிற்று.

ஆணவம் கன்மம் மாயை என்ற பாச வகை மூன்றனுள், நடுநின்ற வினை கெடுமாறு கூறவே, ஏனை இரண்டும் கூற வேண்டா வாயின; அவையும் உடனே கெடும் என்பதாம் எனவே, சிவபுராணத் தை உணர்ந்து ஓதுவார்க்குச் சிந்தை மகிழ்ச்சி ஆகிய சிவஞானப் பேறும், வினைக் கோடாகிய பாச நீக்கமும் பயன் என்று கூறியருளி னாராயிற்று. ஆகவே, இதனால் நூற்பயனும் ஓராற்றால் சுட்டிய வாறும் காணப் படும். ஞானப் பேறேயன்றிப் பாச நீக்கமும் திருவருளால் உண்டாவதாம் இதனைத் திருமூலனார்,

" பாசத்திலிட்டதருள்; அந்தப் பாசத்தின்
நேசத்தை விட்டதருள்; அந்த நேசத்தின்
கூசற்ற முத்தி அருள்; அந்தக் கூட்டத்தின்
கேசத்துத் தோன்றா நிலை அருளாமே"

என்று தெரிவித்திருப்பதைக் காணலாம்.

இன்று, சைவ நன்மக்களாக நிலவும் நமக்குச் சமயப் பெரு ஞான நூலாகவுள்ள சிவஞான போதமும், பத்தாம் சூத்திரத்தாற் பாச நீக்கமும், பதினோராம் சூத்திரத்தால் ஞானமாகிய சிவப்பேறும் கூறுகிறது. சாதனமும் பயனும் கூறும் இயைபு பற்றிச் சிவஞான போதம் பாச நீக்கங்கூறிச் சிவப் பேறு கூறாநிற்க, இச்சிவபுராணம் பயனும் சாதனமும் கூறும் இயைபால் சிவப்பேறும் பாச நீக்கமும் முறையே குறிப்பதாயிற்றெனத் தெரிந்து கொள்ள வேண்டும்.

எண்ணுதற்கெட்டா எழில்

இவ்வாறு, தாம் கூறும் சிவபுராணப் பொருளைக் குறித்த அடிகளார் சிவபரம்பொருளின் பெருமையையும் தமது சிறுமை யையும் சிந்தையில் நாடுகின்றார்; அவன் பெருமைக்குள் தாம் இருப்பதையும், பார்க்குமிடமெங்கும் ஒரு நீக்கமற அவன் நிற்ப தையும் எண்ணி அறிகின்றார்; “ஆழ அமுக்கி முகக்க மாட்டாத வாறு போலத் தம் அறிவால் அதனை உணர்ந்து ஓத மாட்டாமை அவருக்குத் தோன்றுகிறது; அதனால், தமது மாட்டாமையை,

கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந்தெல்லை இலாதானே நின்பெருஞ்சீர்,
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் (21-25)

என்று தெளிய உரைத்தருளுகின்றார். இதன்கண், சிவ பரம் பொருள் வரம்பிறந்த பெருமை உடையன் என்பதை, “விண்ணி றைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண் இறந்து எல்லை இலாதானே” என்றும், “பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்” என்றும் கூறுகின்றார். இத்துணைப் பெருமை உடையனாயினும், தன் கழலிறைஞ்சி வழிபட விரும்பும் அடி யார்க்குத் தன் அருட்கண்ணை வழங்கி, அது வாயிலாகத் தன்னை அறிந்து போற்றத் துணை செய்கின்றான் என்பாராய், ’கண்ணு தலான் தன் கருணைக் கண்காட்ட வந்து எய்தி, எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி" வழிபட அருள் செய்கின்றான் என்கின்றார்.

இவ்வாறு அருள் செய்த வழியும் அடியேன், அவன் புகழ் எல்லை முழுதும் அறிந்தேத்தும் நெறி அறியும் திறன் இல்லாத வனாய் உள்ளேன் என்பாராய், “புகழுமாறு ஒன்றறியேன்” என்றும், அறிந்தேத்தும் நெறியறிய மாட்டாமைக்கு ஏது என்பொல்லாத வினையே என்பார், “பொல்லா வினையேன்” என்றும் உரைக் கின்றார் ஆகவே, என் வேட்கை அறிந்த கண்ணுதற் கடவுள் என்பார் வந்தெய்தித் தன் கருணைக் கண் காட்ட, அதனால் யான் அவனது எண்ணுதற் கெட்டாஎழிலார் கழலிறைஞ்சிப் புகழத் தொடங்குகின்றேன்; ஆயினும், பொல்லா வினையேன் ஆதலால், அஃது இடையிடையே என்னறிவை மறைக்கும்; மறைப்பதால் நன்கு புகழும் திறம் இன்றிச் சிறிதே கூறுவேன்; ஏற்றருள்க என அவையடக்கம் கூறினாராயிற்று.

இவ்வண்ணம் வாழ்த்து, வெற்றி, வணக்கம், நூற்பொருள், அவையடக்கம் என்ற இக்கூறுகளை உள்ளடக்கிப் பாயிரம் கூறி முடித்த அடிகளார் இனிச் சிவபுராணத்தைக் கூறுகின்றார். ஈண்டுக் கூறிய வாழ்த்து முதலியவற்றுள், வாழ்த்தினை முதற்கண் கூறியது அவர்க்குச் சிவ பரம் பொருள்பாலுள்ள பேரன்பினை எடுத்துக் காட்டுகின்றது.

உண்மை யன்புடையார், தம்மால் அன்பு, தாம் புகழ் தற்கும் வணங்குதற்கும் உரியராகிய வழி, அவற்றைச் செய்யாது வாழ்த்து தற்கே முதற்கண் விரும்புவர். உழுவலன்பால் பிணிக்கப் பட்ட ஒருவனும் ஒருத்தியும் கூடியிருந்த வழி, அவன் அவளால் வணங்கவும் புகழவும் படுதற்குரியனாகவும், வாழ்த்தப்படுவதையே அன்பின் முதிர்நிலையாகவும், இன்ப ஊற்றாகவும் சான்றோர் கருதுவர். அஃது உயிர்கட்கு இயல்புமாகும். இதனை, இன்பநுகரும் சிறப்பால் ஊடியிருந்த காதலர் மாட்டு நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றைக் குறிக்கப் போந்த வள்ளுவப் பெருந்தகையார், காதலியாகிய அவள், தன் காதலனாகிய கொழுநனை வாழ்த்தும் செயலையே விதந்து, அவள் கூற்றில் வைத்து,

" ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து"

எனக் கூறுதல் காண்க.

வினையின் விளைவு
இவ்வாறு காதலன்பால் பெருங்காதல் கொண் டொழுகும் காதலி வாழ்த்துவது போல வாழ்த்தினைக் கூறி வழிபட்ட அடி களார், சிவபரம் பொருளை நிரம்பப் புகழு மாறு இல்லாமைக்கு ஏதுவாய் நின்ற பொல்லா வினையை விதந்து “பொல்லா வினை யேன்” என்றாரன்றோ? அவ்வினை தன்னைப் பல்வேறு பிறப்புக் களில் புகுத்தித் துன்புறுத்திய பொல்லாங்கை,

    புல்லாக்கிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்  
    பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்  
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்  
    வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்  
    செல்லா அ நின்றஇத் தாவர சங்கமத்துள்  
    எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்,  
    மெய்யே உள் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்        (26-32)  

என்று தெரிவிக்கின்றார். இதன்கண் புல் முதலாகக் கூறினா ரேனும், கல்முதல் தேவர் ஈறாகக் கூறுவது கருத்தாகக் கொள்க. வினையின் செயல் வகையைக் காணும் முகத்தால் தாம் பண்டு பிறந்திறந்து கழித்த பிறப்புக்களை உணர்ந்து கூறுவது ஒருவகையால் சான்றோர் கூறும் ’தம்மை உணரும் நெறி’யுமாம்.

“தம்மையுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்” சான்றோர் என்பர் மெய்கண்ட தேவர்.

இனி ஆசிரியர் திருமூலனார்,
" கூறுமின் நீர்முன் பிறந்திங் கிறந்தமை
வேறொரு தெய்வத்தின் மெய்ப்பொருள் நீக்கிடும்"

என்பதானல் முதற்கண் தமது புராணமாகிய பிறப்பு வரலாற்றி னைக் கூறினாரென்று கொள்வதுமாம்.

வினையால் பல்வகைப் பிறப்புக்கள் உண்டாகியதும் அவற்றின் நீங்கி அறிவு சிறந்ததும் ஆகிய இவற்றைச் சிவபரம் பொருளின் திருவருள் கண்ணாகக் கண்ட தமக்கு இனி, அதன் தொடர்பு நீங்கிப் பிறவா நிலைபெறுதல் விரைவில் கைகூடுதல் பற்றி, “எம் பெருமான் மெய்யே உன்பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்” என்று உரைக்கின்றார்.

“இனி ஒருகால் வினையால் பிறப்பு உண்டாயின், அவ்வினை யைக் கெடுத்துப் பிறவா நிலையருளுதல் வேண்டும்; பல பிறப்பும் பிறந்து இளைத்தேன்; இனியும் பிறத்தற்கு ஆற்றேன்” என்பாராய்,

    செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்  
    எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்  

என்று குறையிரந்து நிற்கின்றார். எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்த அளவில் திருவருள் கண்ணாகப் பெற்ற பேரறிவால் அவன் திருவடி கண்டு இன்புறும் சிறப்பால் பிறவாத தன்மை தமக்கு வந்தமை தோன்ற, “எல்லாப் பிறப்பும் பிறந்திளைத் தேன்” என்றவர், மேலும் “எம்பெருமான், மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்” என்பதனால் அறியலாம்.

திருவடி ஞானம்
திருவடி காணும் காட்சியே சிவஞானமாகும்; இதனைத் திருவடி ஞானமென்றும், திருவருள் ஞானமென்றும், பரஞான மென்றும், பதி ஞானமென்றும், சான்றோர் பலபடியாகப் பரிந் தோதுவர்.

இந்த ஞானத்தின் பயன் பிறவியைப் போக்குவதெனச் சேக்கிழாரும், “சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம், பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்” என்றும் உரைத்தார்.

இந்த ஞானக் காட்சி உடையாருக்கு இறைவன் அவர் மனத்தின் கண்ணே எழுந்தருளி இருப்பன் என்ற கருத்துப்பட, ஞானசம்பந்தர்.

" அகனமர்ந்த அன்பினராய்
அறுபகைசெற் றைம்புலனும் அடக்கி ஞானப்
புகலுடையோர் தம்உள்ளப்
புண்டரிகத் துள்ளிருக்கும் புராணர்"

என்பர்.

ஞான நலம்
அடிகளார், தம் உள்ளப் புண்டரிகத்தில் எழுந்தருளி இருக்கும் சிவபரம்பொருள் ஓங்காரமாய் விளங்குவதையும், ஏனை அபரஞான மாகிய கலைஞானங்களால் காணுமிடத்து, அந்த ஞான எல்லை யைக் கடந்து நிற்பதையும், பரஞானக் காட்சியால், அபரமாகிய பசு பாச ஞானங்கள் நீங்குவதையும், பாசங் காரணமாக உளதாகும் அஞ்ஞான மறைப்பு ஒழிவதையும் விளக்கிக் காட்டுவராய்,

    உய்யவென் னுள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற  
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்  
    ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே  
    வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா  
    பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி  
    மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே  
    எஞ்ஞான மில்லாதேன் இன்பப் பெருமானே  
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே          (33-40)  

என எட்டடிகளால் சிவபரம் பொருளின் ஞான நலத்தை எடுத் தோதுகின்றார்.

சிவ பரம் பொருளின் பொன்னடி கண்டு வினை வீடு பெற்றேன் என மகிழ்ந்துரைக்கும் அடிகளார், அதனைக் கண்டவிடம் இது வென்பார், “என் உள்ளத்துள்” என்றும், கண்டவிடத்துச் சிவ பரம்பொருள் ஓங்காரமாய் நின்றார் என்பதனை, “ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா” என்றும் இவ்வாறு தம் முள்ளத்தே எழுந்தருளிக் காட்சி வழங்கியது தாம் உய்தற்கே என்பார், “உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா” என்றும் விளக்குகின்றார்.

" ஊனக் கண்ணின் உணராப் பதியை
ஞானக் கண்ணிற் சிந்தை நாடி"

என்று சிவஞான போதமும் கூறுமாறு காண்க.

உள்ளத்தில் ஓங்காரமாய் நிற்கும் முதல்வன், அகரமாய் அகங்காரத்தையும், உகரமாய்ப் புத்தியினையும், மகரமாய் மனத் தையும் இயக்கி, அவ்வவற்றிற் கேற்ப, மெய்யனாயும், விமல னாயும், விடைப்பாகனாகியும் விளங்குதலைக் காட்டு வார், “ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா” என்று ஓதுகின்றார்.

அங்காரம் மெய்ம்மேலும், புத்தி விமலமாகிய விளக்கத்தின் மேலும், மனம் செலவின் மேலும் நிற்பது குறித்து இவ்வாறு கூறினாரென உணர்க.

இனி, விந்து சித்தத்தை இயக்குமென்றும், பகுக்கப் படாது நிற்கும் ஓங்காரம் நாதத்தை இயக்குமென்றும் கொள்வதுண்டு.

சித்தம் மனத்தின்கண் அடங்கு மாதலின், ஏனை மூன்றுமே ஈண்டுக் கொள்ளப் பட்டன. இனி, படைத்தல் காத்தல் அழித்தல் என்ற தொழில் மூன்றும் அகர உகர மகரங்களால் நடப்பன என்றும் சான்றோர் கூறுப இவ்வகையின் இயல்புகளை அறிந்த சான்றோர் களைக் கேட்டறிதல் வேண்டும்.

வேதங்கள் என்றது பாசஞானமாகிய கலை ஞானத்தைக் குறித்து நிற்கிறது வேதாகம ஞானம் வெறுங் கலையறிவாய் மெய்யுணர்வுக்குக் கருவியாய் நின்றொழிவது இவ்வுணர்வுக்குச் சிவ பரம் பொருள் எட்டான் என்பதற்கே “வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா” என்று இயம்புகின்றார்.

கலை அறிவு கொண்டு அளக்கும் உயர்வு, தாழ்வு, அகல நுட்பம், வெப்ப தட்பம் முதலியவற்றுக்கு அகப்படாமை இதனால் விளக்கப்படுகிறது. இங்ஙனமெல்லாம் மாறுபட்டுக் காண்பதற் குரிய தலைமையும் அவன்பாலே உளது என்றும், அதனால் அவன் மாசுறுவதில்லை என்றும் உணர்த்துவதற்கே, இயமானனாம் ‘விமலா’ என்று குறிக்கின்றார்.

இங்கே கூறிய கலை ஞானமும், இந்த ஞானத்தால் தன்னையே வியந்து கொள்ளுதற்கு ஏதுவாகிய பசுஞானமும் திருவருள் பெறுதற்குத் துணையாகாது கழிவதால், இவற்றைப் பொய்யென்றும், அவன் திருவருள் ஞானம் ஒன்றே உண்மை ஞானமாய் அவன் திருவடி கண்டு வீடுறுதற்கு விளக்கம் தரும் என்பார், “பொய்யாயின வெல்லாம் போய்கல வந்தருளி மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே” என்றார்.

என்றவர் இந்த அபரஞானங்களாகிய பாச ஞானமும் பசு ஞானமும் என்ற எந்த ஞானமும் கிடையாது; நின் திருவடி புகழும் செயலால் வரும் இன்பமொன்றே அறிவேன்; அதுவே அடியேனது ஞானமென்பார், “எஞ்ஞான மில்லாதேன் இன்பப் பெருமானே” என்றும், இது தானும் அறியாது அஞ்ஞானத்திற் கிடந்த எனக்கு, என் அறிவினுள் அருளால் மன்னி அறிவித்தாய் என்பார் “அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே” என்றும் கூறியருளினார்.

எஞ்ஞானமும் என வரவேண்டிய உம்மை விகாரத்தால் தொக்கது. இதுகாறும் கூறிய அதனால், சிவபரம் பொருள் பதி ஞானத்தால் தெளியப்படுவதும், ஏனைப் பசு பாச ஞானங்கட்கு எட்டாது நிற்பதும், அஞ்ஞானத்தால் மறைப் புண்டு மயங்கும் உயிர்கட்கு ஞானம் வழங்கி இன்பம் தருவதுமாகிய ஞான நலன் களை அடிகள் உரைத் தருளி யதைக் காண்கின்றோம்.

ஐந்தொழில் நலம்

இனி, இச்சிவ பரம் பொருள் செய்தரும் அருட்செயல் களைப் பொதுவாகவும், சிறப்பாகவும் கூறிகின்றார். பொது வாக அவன் புரியும் ஐந்தொழில்களையும், அவற்றினிடமாக அவன் நிற்கும் திறத்தையும் கூறுவாராய்,

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பில்.
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே (41-44)

என்ற நான்கடிகளால் விரித்துரைக்கின்றார். உலகினைத் தோற்று வித்தல் முதலிய தொழில்களைச் செய்யும் முதல்வன் தோற்றம் முதலியன உடையவனாதல் பொருந்தாதாகையால், முதல்வனாகிய நீ அவற்றை உடையவனல்லை என்பார், “ஆக்கம் அளவு இறுதி இல்லாய்” என்றார். ஆக்கம் தோன்றுதல் நிலை என்பது தோற்றக் கேடுகட்கிடைப்பட்ட அளவின் மேலதாகையால் அதனை, ‘அளவு’ என்றார். எனவே இறைவனாகிய சிவபரம் பொருட்குத் தோற்றம் நிலை இறுதி என்ற மூன்றும் இல்லை என்றார் ஆயிற்று. இவனே உலகிற்கு முதல்வன் என்பதை “அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்” என்றார்.

படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்ற தொழில் ஐந்தனுள், படைத்தல் முதலிய நான்கையும் ஆக்குவாய் என்பது முதலிய நான்காலும், மறைத்தலை மட்டில் “போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்” என்பதனாலும் விளக்கு கின்றார்.

மலத்தொடு கூடிய வழித் திருவருளைக் காணாதபடி மறைத்தலும்; அருளொடு கூடிய வழி மலத்தைக் காணாத படி மறைத்தலும்; மறைத்தலாகிய தொழிலாகும். யான் மலமாயை கன்மங் களொடு கூடி அவற்றாற் பெறப்படும் இன்ப துன்பங்களை நுகரும் இடத்து; திருவருள் நெறியாகிய திருவடித் தொண்டினை அறியாது மறைப்புண்டு போக்கப் பட்டேன் என்பார் “போக்குவாய்” என்றும், மலமாயை, கன்மங்களிற் பிரிந்து திருவடித் தொண்டே வேண்டுவதெனத் தெளிந்த வழி அவற்றின் தொடர்பை மறைத்து அத்திருவடித் தொழும்பிலே புகுத்தப்பட்டேன் என்பார், “என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்” என்றும் உரைத்தருளுகின்றார். (தொழும்பு - தொண்டு).

எல்லாமாய் நின்றவன்
இனி, இங்கே கூறிய படைத்தல் முதலிய ஐவகைத் தொழில் களைச் செய்தலால், சிவபரம் பொருள் உடையானாகவும் உலகு யிர்கள் அவற்குடைமையாகவும் தொடர்புபட்டிருப்பினும், உடையவனாகிய முதல்வன் உடைப் பொருளிடத்தே ஒன்றாயும், வேறாயும் உடனாயும் நிற்கின்றான் என்பதை,

நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
என்று தெரிவிக்கின்றார். மலரும் மணமும் வேறாயினும், தோன்றுங் கால் மலர் வேறு மணம் வேறாகப் பிரித்தறிய ஒண்ணாதவாறு ஒன்றாய் நிற்பதுபோல உயிர்களிடத்தே உயிர்க்குயிராய் வேறு பிரித்தறியாவாறு ஒன்றாய் இயைந்து நிற்குமாறு தோன்றவே, “நாற்றத்தின் நேரியாய்” என்றும் உயிர்களின் வேறாய்ப் பிரிந்து நிற்குங்கால் சேயனாதலும் சேயனாகாது உயிரும்தானும் ஒருங்கே உடனிருக்குங்கால் அணியனாத லும் தேர்ந்து, “சேயாய் நணியானே” என்றும் விளம்பினார்.

இச்சை நலம்
இவ்வண்ணம் ஒன்றாயும், வேறாயும், உடனாயும் நின்றா னாயினும், அவனை அவன் திருவருள் ஞானத்தால் காணலாகு மேயன்றி, உயிர்களின் மன உணர்வாகிய பசு ஞானத்தாலும், வாக்காகிய பாச ஞானத்தாலும், காண முடியாது என்று முன்னே குறித்த குறிப்போடு இயைய, தன்னைத் தன் திருவடி ஞானத்தால் தேர்ந்து வழிபடும் அடியவர்பால் செய்யும் அருட்செயலால் பெறப்படும் இச்சை நலத்தை நமக்கு உணர்த்துகின்றார்.

அதனை,
    மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே  
    கறந்தபால் கன்னலொடு நெய்கலந் தாற்போலச்  
    சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று  
    பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்  
    நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த  
    மறைந்திருந்தாய் எம்பெருமான்              (45-50)  

என்ற ஆறடிகளால் அருளிச் செய்கின்றார்.

இதன்கண், மாற்றம் என்பது வாக்கு; இது பாச ஞானத்தைக் குறிப்பது. மனம் என்றது மன உணர்வாகிய பசு ஞானமாகும். இவ்விருவகை ஞானங்கட்கும் முதல்வன் எட்டாதவன் என்பதை “மாற்ற மனங்கழிய நின்ற மறை யோனே” என்றார்.

மன வாக்குக் கெட்டாத ஒன்றை உள்பொருள் எனத் துணிந்து மேற்கோடற்கு, உண்மை அறிவால் உணர்ந்த சான்றோர் அவன் திருவருள் ஞானத்தால் உணர்ந்து உரைக்கும் மறைமொழியே இடமாதலின், “மறையோன்” என்றார். என்றது, பசு பாச ஞானங் கட்கு எட்டாத முதல்வன் பதி ஞானத்தால் உணர்வார் உணர்ந் துரைக்கும் நிறைமொழியாகிய மறைமொழி வாயிலாக உணர நிற்பன் என்பதாம்.

பதி ஞானத்தால் பதியாகிய சிவ பரம் பொருளை உணர்ந்தவர் அதனையே பார்த்திருப்பதன்றிப் பிற எதனையும், அப்பரம் பொருள் அவர்க்குச் செய்யும் சிறப்பு இது என்றற்கு, சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் என்று குறித்தருளுகின்றார்.

சிறந்த அடியார், சிறந்தடியார் என வந்தது. சிவ பரம் பொருளை அவன் திருவடி ஞானத்தால் கண்டு அதனையே நோக்கி நிற்கும் சான்றோர், “சிறந்த அடியார்” எனப்படு கின்றனர்.

அவர் உள்ளத்தே நின்று இன்பம் பெருகுவித்தலால், “சிந்தனை யுள் தேனூறி நின்று” என்றும், எடுத்துள்ள பிறப்பே பிறப்பாக மேலே பிறப்பில்லையாமாறு அவர்கட்கு அருள் செய்கின்றான், “பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்” என்றும் கூறியருளு கின்றார்.

சிறந்தடியார் உள்ளத்தே ஊறும் சிவானந்தத் தேனின் சுவையை வேறே காட்டலாகாமையால் உவமையால் காட்டுவார், “கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தாற் போல” என்றார்.

தேன் முன் தோன்றத் தான் பின் தோன்றுவன் என்பது தோன்ற தேனூறு நின்று என்னாமல், “தேனூறி நின்று” என்றார்.

பிறிதோரிடத்தும், “தேனுந்து செந்தீ” என்பது காண்க. உயிர்களிடத்தே அன்றிப் பூதங்களிடத்தும் அவன் இருக்கும் திறத்தை, “நிறங்களோர் ஐந்துடையாய்” என்பதனால் குறிக் கின்றார். ஐம்பெரும் பூதங்கட்குமுள்ள ஐவகை நிறத்தையும் தான் உடையவன் எனவே, அவற்றையும் தனக்கு இடமாகக் கொண் டான் என்பதே கருத்தாம்.

இனி, மக்களினும் விண்ணோர் உயர்ந்தவர் என்ப வாதலால் அவர்களைப் பற்றிக் கூறலுற்றவர் போக நுகர்ச்சி யொன்றே கருதியும் பெற்றும் நிலவும் விண்ணவர்க்கு, ஞான மூர்த்தியாகிய முதல்வன் காணப்படான் என்பார், “விண்ணோர்கள் ஏத்த மறைந் திருந்தாய் எம்பெருமான்” என்றார், போக நுகர்ச்சி ஞான நுகர்ச்சியின் வேற்றுநிலை அன்றோ?

தாயிற் சிறந்தவர்
இனி, சிறந்தடியார் உள்ளத்தில் தேனூறி நின்று பிறப்பறுத் தருளும் அருட் செயலை எடுத்தோதிப் பாராட்டிய அடிகளார், தம்பால் சிவ பரம் பொருள் செய்தருளிய அருட்செயலால் காண நிற்கும் இச்சை நலத்தையே எடுத்தோதலுற்று,

    .......................வல்வினையேன் தன்னை  
    .................................................  
    தாயிற் சிறந்த தயாவான தத்துவனே                 (50-61)  

என்று உரைக்கின்றார்.

யான் வல்வினை உடையேனாதலின், நின்னை வழிபடுதற் குரிய நெறியினின்றும் விலகுமாறு குறுக்கிட்டு நிற்கும் மனத்தால், நின்பாற் கலந்த அன்பு கொண்டு உள்ளம் கசிந்து உருகும் நலம் இல்லாதவனாய்ச் சிறுமைப் பட்டேன் என்பார். “வல்வினையேன், விலங்கு மனத்தால் கலந்த அன்பாகிக் கசிந்துள் உருகும் நலந்தான் இலாத சிறியேன்” என்கின்றார். (விலங்குதல் - குறுக்கிடுதல்)

வினையால் தொடக்குண்டு கிடக்கும் என்னை மூடி மறைக்கும் மலவிருளைப்போக்க வேண்டுமெனக் கொண்ட இச்சை நலத்தால் அறம் பாவம் எனப்படும் கயிற்றாற் கட்டி, புறத்தே தோல் போர்த்து, புழுவழுக்கால் அதனை மூடி, மலஞ்சோரும் ஒன்பது வாயிலமைந்த உடம்பாகிய குடிலைச் சமைத்து அதன்
கண்ணே என்னை வாழ வைத்தாய்; அங்கே புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய, மனம் அவற்றால் மயங்கிக் குறுக்கிட்டு மாறான நெறியிற் செலுத்துவதாயிற்று. அதனால் யான் அன்பால் உருகி உள்ளம் கசிந்துருகும் நலமில்லாது சிறுமைப்பட்டேன்; ஆயினும், விமல னாகிய நீ, சிறுமைக்கு ஏதுவாகும் மலத்தின் நீக்கி என்னை உய்விக்க வேண்டுமென என்பாற்கொண்ட பெருங்
கருணையால் யான் வாழும் இந்நிலவுலகத்தே என் முன்னே போந்து நின் திருவடி ஞானம் வழங்கி உன் அடியன் ஆக்கினாய்; இது நின் கருணை இருந்தவாறு எனச் சிவ பரம்பொருளின் தாயிற் சிறந்த தயாவினை இதனால் விளக்கி அருளினார்.

இதன்கண், தாம் வல்வினையால் தொடக்குண்ணற்குக் காரணம் மலம் என்றும் அது தம்மறிவு முற்றும் மூடி மறைக்கிறது என்றும் கூறுவார். “மறைந்திட மூடிய மாய இருளை” என்றார். மல விருளைப் போக்க வேண்டுமாயின் உடம்பெடுத்து வினை செய்விக்க வேண்டுதலின், “அறம் பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி” என்றார்.

வினை, அறம் பாவ வடிவாய் உயிரைப் பிணித்து நின்று அது புக்குழிப்புக்குப் புலனாகாதிருப்பது பற்றி ‘அருங்கயிறு’ எனப் பட்டது. உயிரோடு தான் பிணிப்புண்டிருப்பதே அன்றி, எடுத்த உடம்பளவாய்க் கட்டுற்றிருப்பது பற்றி அதனை முதற்கட் கூறினார்.

தோற்போர்வை கொண்டு புழுவழுக்கு மூடி மலஞ் சோரும் வாயிலை உடையதாயினும், தன்னிடம் வாழும் உயிரைத் தன்பால் பெருங் காதல் கொண்டு தன்னையே பேணுமாறு செய்தல் பற்றி, குடிலை “மலங்க” என்றும், புலனைந்தும் அவாவினை எழுப்பி இன்பம் தருவது போலத் துன்பம் பயத்தலின், “புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய” என்றும், மனம் அவ்வஞ்சனையை ஓராது குறுக்கே நின்று புலன்கள் மேற் செல்வது பற்றி, “விலங்கு மனத்தால்” என்றும், மனம் ஒன்றாகாவழி அன்பு தோன்றி உள்ளம் உருகும் நலத்தைப் பயவாது ஆதலால், “விலங்கு மனத்தால் உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்துள்ளுருகும் நலந்தான் இலாத சிறியேற்கு” என்றும் கூறினார்.

உள்ளுருகும் நலமின்றித் தாம் இந்நிலத்தே இருக்கும் இருப்பை, “நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்கு” என்பதனால் குறிக் கின்றார்.

தமக்கு இறைவன் குருவாய் எழுந்தருளி வழங்கிய திருவடி ஞானத்தை, “நீள்கழல்கள் காட்டி” என்றும், அதனைப் பெற்ற தாம் அதனையே பற்றி வாழுமாறு தோன்ற, “அடியேற்கு” என்றும், இந்தச் சிறப்பைப் பலரும் பெறாதிருப்பத்தாம் பெற்று மகிழுமாறு அருளியதையும், பெற்ற தன் பெருமையையும் நினைக்கும்போது சிவபரம் பொருளின் கருணை மிகுதி தோன்றக் கண்டு, “தாயிற் சிறந்த தயாவான தத்துவனே” என்றார்.

தன்னை யன்றி ஒன்றும் செய்து கொள்ள மாட்டாத குழவியின் நிலைகண்டு தாயே அதற்கு வேண்டியது செய்தல் போல இறைவனும் தன்னை அன்றி ஒன்றும் செய்துகொள்ள மாட்டாத என் நிலை கண்டு என்னை மலங்கழுவி ஆட்கொண்டான் என்பது, “தாயிற் சிறந்த தயாவான தத்துவனே” என்பதனால் விளங்குகிறது.

புகழ்ந்து போற்றுதல்
இவ்வாறு தமது நிலையினையும் சிவ பரம் பொருளின் பெருங் கருணையினையும் கண்ட அடிகளார், ஆராமையால் எழுந்த பேருள்ளத்தால், சிவ பரம் பொருளின் திருப் புகழைப் பலபடியாற் பாடலுற்று,

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
……………………………………………………………………………………….
ஊற்றான உண்ணா ரமுதே! உடையானே! (62-83)

எனப் பாடுகின்றார்.

சிவபுராணம் கூறலுற்ற அடிகளார் முதற்கண் சிவபரம் பொருளின், ஞான நலம், தொழில் நலம், அருள் நலம் என்ற மூன்றையும் முறையே கூறிப் போந்தவர், நலம் கண்டவிடத்து அதனைப் பாராட்டிப் பாடும் புலமைப் பண்பினால் “மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே” என்பது முதல் “ஊற்றான உண்ணார முதே உடையானே” என்பது ஈறாகச் சொல்லிப் பாடியுள்ளார்.

மேலும், சிவபரம் பொருளின் சிறப்பை வாழ்த்தியும், வணங் கியும், ஞானம் முதலிய நலங் கண்டு போந்தவர் இனிச் செயற் பாலதும் இதுவே ஆதலின் இவ்வாறு பாடலுற்றா ரென்றும் கருதலாம்.

ஞானக் காட்சிக் கண், ‘மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே’ என்றாராகலின், அதனை விதந்து “மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரே” என்று பாடுகின்றார்.

கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தாற்போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்

என்றதனையே ஈண்டு, “தேனாரமுதே சிவபுரனே” என்றும், “நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சங் கெடப், பேராது நின்ற பெருங் கருணைப் பேராறே” என்றும் பாடுகின்றார்.

“நிலந்தன்மேல் வந்தருளி நீள் கழல்கள் காட்டி” அருள் செய்ததை, “பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே” என்று பாடுகின்றார்.

இவ்வாறே, புறத்தோர்க்குச் சேயனாம் தன்மையை, “ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே” உள்ளத்துள் உய்யவந்து ஓங்கார மாய் நின்ற இயல்பை, “நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே” என்றும், அவன்பால் உள்ளது வற்றாத பேரின்பமே அன்றிப் பிறிதில்லை என்பதை, “இன்பம் உள்ளானே, துன்பம் இல்லானே” என்றும் ஞானவான்களின் நுண்ணறிவுக்கும் எளிதில் புலனாகாத நுட்பத்தை, “கூர்த்தமெய்ஞ் ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தின், நோக்கரிய நோக்கே, நுணுக்கரிய நுண்ணுணர்வே” என்றும், பிறருடைய பிறப்பறுக்க வல்லவன் தான் பிறப்பு இறப் பில்லாதவனாதல் வேண்டுதலின், “போக்கும் வரவும் புணர்வு மிலாப் புண்ணியனே” என்றும், “ஆதியும் அந்தமும் நடுவாகி அல்லானே” என்றும், பேரொளியும், மிகு நுட்பமும் உடைய னாகிய பரம்பொருள், வையத்தில் வேண்டுவார் வேண்டுமாறே வெவ்வேறாக வந்து அறிவு வழங்கும் விளக்கத்தை, “தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய், மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தோற்றனே” என்றும், சிந்தையுள் தேனூறி நிற்கும் திறத்தை மீட்டும் வற்புறுத்தி, “தேற்றத் தெளிவே என் சிந்தையுள் ஊற்றான உண்ணாரமுதே” என்றும் பாடுகின்றார்.

இப்பாட்டின் பொருட்பகுதியும் பிற சிறப்பும் காணப் புகின் இது மிக நீளுமாதலின் இம்மட்டில் நிறுத்திமேற் செல்லுகின்றோம்.

 பூதங்கள் தோறுநின் றாயெனி னல்லாற்
 போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்,
 கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
 கேட்டறி யோமுனைக் கண்டறி வாரை

என அடிகளார் பிறிதோரிடத்துக் கூறியது, இப்பாட்டு இங்கே தோன்றுதற்கு அமைதி கூறுவது போல் உள்ளதை நினைப்பித்து மேற்செல்லுகின்றோம்.

பொய் கெட்டு மெய்யானார்
இவ்வண்ணம் சிவபரம் பொருளைப் பாடிப் பரவிய அடி களார், மெய்யுணர்வுடைய அடியார்களும் இவ்வாறே பாடிப் பிறவா வாழ்க்கையினைப் பெற்றார்; அது செய்து நாமும் அவ்வாழ் வைப் பெறுவோமாக என்னும் குறிப்பால்,

    வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப  
    ஆற்றேனெம் ஐயா அரனேயோ என்றென்று  
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்  
    மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே  
    கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே             (84-88)  

என்று ஓதியருளுகின்றார்.

“வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா” என்பது பொய் கெட்டு மெய்யானார் பாடும் பாட்டு. அதனைத் தாம் கொண்டு கூறுமாறு தோன்ற, “என்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து” என்றார்.

உடம்பு “மலஞ் சோரும் ஒன்பது வாயிற் குடிலை” என்றும் கூறினாராதலின், ஈண்டும் “கள்ளப் புலக்குரம்பை” என்றார்.

விடக்கு - தசை. விடக்கின் உட்கிடக்கலுறின், அப்போது “எண்ணமே உடல்வாய் மூக்கொடு செவிகண் - நின்கணே வைத்து” வாழ்தல் வேண்டும்; விடக்குடம்போ அவ்வாறு வாழ வொட்டாது மேன்மேலும் பிறப்புக்கே ஈர்த்துச் சேறலின், “வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேன்” என்றும், அவ்வுடம்பைக் கெடுக்க வல்லவன் என்றற்கு “அரனேயோ” என்றும் மெய்யானார் வேண்டுகின்றார்கள்.

அவர்கள்பால் “பொய்யாயின எல்லாம் போய் அகல வந்தருளி, மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்றா”னாதலால், அவர்கள் பொய் கெட்டு மெய்யுணர் வுடையராய் வினைப் பிறவி சாரா தொழி கின்றார்கள். அவர்களைப் போல யாங்களும் போற்றிப் புகழ் கின்றோம்; எம் கள்ளப் புலக்குரம்பை கட்டழிப்பாய்; அது செய்தற்கு நீ வல்லுநன் என்பது மெய்யானார் கூற்றால் விளங்கு கிறதென்பார், “கள்ளப்புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே” என்றார்.

சொல்லற்கரியானைச் சொல்லுக
இதனால், அவனை அவன் புகழ் பாடிப் பரவுவதே செய்தற் குரியதென்பதும் அவ்வாறு செய்தே சான்றோர் பொய் கெட்டு மெய்யாகி மீட்டிங்கு வந்து வினைப் பிறவி சாரா துயர்ந்தனர் என்பதும் கூறிய அடிகளார், நாம் செய்யத் தகுவது இதுவென்ற ருள்வாய்,

நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லற் பிறவி யறுப்பானே யோவென்று
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பெUளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. (89-95)

என்று உரைத்தருளுகின்றார்.

மாசங்கார காலத்தில் எங்கும் இருளே நிரம்ப எல்லாம் ஒடுங்குகிற காலத்தும் சிவ பரம் பொருள் அவ்விருளில் நட்டம் புரிந்து, ஒடுங்கும் உலகினை மீளத் தோற்றுவிப்பன் என்பர். அதனையுட் கொண்டே அடிகள்,
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
என்றார்.

“நாதனே, தில்லையுட் கூத்தனே, தென்பாண்டி நாட்டானே” யென்று தாம் அறிந்த வாறு சொல்லுக; அவனது உண்மை நிலை முழுதும் ஒருவராலும் சொல்லுதற்கரியது என்பதை, “சொல்லற் கரியானை” என்றும், நாதனே, கூத்தனே, நாட்டானே என்று அழைத்து. “எங்கள் அல்லற் பிறவியை அறுத்தருள் எனச் சொல்லி வழிபடுக” என்ற கருத்துப்பட, “அல்லற் பிறவி யறுப்பானேயோ வென்று சொல்லி” என்றும், ஈண்டுச் சொல்லிய பாட்டினையும் பொருளுணர்ந்து சொல்லுவதும் சாலும் என்றற்கு, “சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்” என்றும், அவர் பெறும் பயன் இது வென்றற்கு, அவர்கள் இவ்வுடம்பின் நீங்குங் காலத்து வேறு உடம்புகட்குச் செல்லாது சிவபுரமே சென்று சேர்ந்து இன்புறுவர் என்ற பொருள்பட, “செல்வர் சிவ புரத்தின்” என்றும் கூறினார்.

சென்று சேர்ந்தவர் மீளப் பிறப்பர் கொல்லோ என்ற ஐயம் உண்டாகாமைப் பொருட்டு, சிவபுரத்திற் சென்று சேர்ந்தவர் சிவனடிக் கீழ், சிவகணத்தார் பலரும் தம்மைப் பணிந்து ஏத்தச் சிவபோகம் துய்த்துக்கொண்டு நிலைபெற உளராவர் என்பார், “சிவனடிக் கீழ்ப் பல்லோரும் பணிந்தேத்த உள்ளார்” என்று அருளுகின்றார்.

எனவே, சொல்லியோர் தகுதி நோக்காது சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுதலே வேண்டுவது; அது சிவபுரத்திற் கொண்டுய்த்துப் பிறவா வாழ்க்கைப் பேரின் பத்துள் நிலை நிறுத்தும் என்பது கருத்தாயிற்று.

சொல்லிய பாட்டின் பொருள்
இதுகாறும் கூறியவாற்றால்,
சிவபுராணம் கூறப்புகுந்த மணிவாசகப் பெருந்தகையார் முதற்கண் சிவ பரம்பொருளின் திருப் பெயராகிய நமசிவாய என்பதை வாழ்த்தி அவன் திருவடிகட்கு வாழ்த்தும், வெற்றியும், வணக்கமும் கூறி,
சிந்தை மகிழச் சிவபுராணந்தன்னை முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் என முன் மொழிந்து,

அவன் பெருஞ் சீரை, பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் என அவை யடக்கம் கூறித் தொடங்கியதும்,
வினை அதிகப்படுதலின் அதனால் தாம் கல்லும் புல்லும் முதலாகச் செல்லா நின்ற தாவர சங்க மத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் என்று கூறி,
பின்பு சிவ பரம்பொருள் பரஞானக் காட்சிக் கண் ஓங்கார மாய் உள் நிற்பதும், அபரஞானக் காட்சிக்கண் ஓங்கியும் ஆழ்ந்தும் அகன்றும் நுண்ணியனாயும் இருப்பதும் கூறி,
திருவருள் ஞானக் காட்சியில் மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடராய்த் தோன்றுவதும், ஏனைப் பசு பாச ஞானங்களை மேற் கொள்ளாவிடத்து இன்பப் பெருமானாய் விளங்குவதும், அஞ்ஞானத்தால் மயங்கும் காலத்து நல்லறிவாய் விளங்குவதும் கூறி,
இவ்வண்ணம் ஞானப் பொருளாய் நிற்கும் சிவ பரம் பொருள், தனக்குரிய தொழில்களாகிய ஆக்குதல் காத்தல் முதலிய ஐந்தொழில் களைச் செய்வதும், தொழிற்பட்ட உலகுயிரிடத்தே ஒன்றாயும் வேறாயும் உடனாயும் இருப்பதும் கூறி,
தன்னையே நினைந்தேத்தும் சிறந்த அடியார் உள்ளத்தே தேனூறி நின்று பிறப்பறுத்தருளுவதும், நிலத்தே நாயிற் கடையாய்க் கிடந்த தமக்கு நேரே வந்து நீள்கழல்கள் காட்டித் திருவடி ஞானம் பெறுவித்தருளுவதுமாகிய பேரருட் செயலும் கூறி,
பின்பு, சிவ பரம் பொருளின் ஞான நலம், தொழில் நலம், அருள் நலம் மூன்றும் பேசியதாம். மேலே செய்தற்குரியது அவன் திருப்புகழைப் பாடுவது தவிர வேறில்லை எனத் தேர்ந்து, “மாசற்ற சோதி மலர்ச் சுடரே” என்பது முதல் “ஊற்றான உண்ணாரமுதே உடையானே” என்பது ஈறாகப் பாடி,
அதன்பின், இவ்வாறு பாடிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டும் இங்கு வந்து வினைப் பிறவி சாராவகைப் பிறப்பறுத்த பெரு நலம் கூறி,
இப் பரம்பொருள் நலம் முற்றவும் சொல்லற்கரியது “நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே, தில்லையுட் கூத்தனே, தென்பாண்டி நாட்டானே, அல்லற் பிறவி அறுப்பானே” என்று சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுக; சொல்லுவோர், சிவபுரம் சென்று சேர்ந்து, சிவனடிக்கீழ் உள்ள பலரும் பணிந்தேத்த நிலைத்த இன்பத்தில் உளராவார் என்று உரைத்தவாறாம்.

“தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!”

தூத்துக்குடி சைவசித்தாந்த சபையின் 65-ஆம் ஆண்டு நிறைவு விழாத் தலைமைப் பேருரை


" தென்னா டுடைய சிவனே போற்றி
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி"

சித்தாந்த சைவச் செந்நெறி நிற்கும் பெருமக்களே!
அந்நெறி வளர்க்கும் தாயர்களே! அன்பர்களே!

பல்லாண்டுகளாகச் சைவப்பணியும், தமிழ்ப் பணியும் நல்லியல்பு வழாமல் ஆற்றிவரும் சைவசித்தாந்த சபைகள் பலவற்றிலும் தொன்மையும், பணி நன்குடைமையும் கொண்டு சிறப்புற்று விளங்கும் பெருஞ் சபையாக விளங்குவது தூத்துக்குடி சைவசித் தாந்த சபையென்பது சைவவுலகு நன்கறிந்த தொன்று. இதனுடைய பல ஆண்டு விழாக்களிற் போந்தும், சிறப்பு விழாக்களிற் கலந்து கொண்டு சைவப்பணி புரிந்த வகையில் யான் இச் சைவ சித்தாந்த சபைக்குப் பழையேனாகலின், இதன் செயல்முறைகளையும், பணி வகைகளையும் யான் நன்கறிந்தவன். அதனால், இச்சபை யின்பால் எனக்கிருக்கும் தொடர்பு கொண்டு இதன் இந்த ஆண்டு விழா விற்குத் தலைமையேற்றல் வேண்டுமென்ற பணி வந்தபோழ்து அதனையுடன்பட்டு ஏற்றற்கு யான் அஞ்சி னேன், இப்பொழுதும் அஞ்சுகின்றேன். யான் தமிழறிவும் சைவவுணர்வும் பெற்ற நாள் முதல் இச்சைவ சித்தாந்த சபையின் நிகழ்ச்சிகளையும் இதன் ஆண்டு விழாக்களில் தலைமை தாங்கிச் சிறப்பித்த சான்றோர் களின் சால்புகளையும், இதன் உறுப்பினர்களின் தமிழன்பு சைவ மெய்த் திருவுடைமைகளையும் நினையும் போதெல்லாம் நேரிற் பன்முறை கண்டறிந்துள்ள என் நெஞ்சம் இத்தலைமைப் பணி வந்தபோது ஏற்றற்கு அஞ்சுதலே செய்தது. பெரும் பணி எய்தவரும் போழ்து அதன் பெருமை முன்னே தோன்றும் அது காண்பவர் உள்ளத்தில் அச்சம்தோன்றும். அஃது இயல்பு, அஞ்சுவது அஞ்சாமை பேதைமை. சுருங்கச் சொல்லுமிடத்து அச்சத்தோடு இப்பணி யினை மேற்கொள்ளு கின்றேன், அச்சந்தீர, அருளாளர்களாகிய உங்கள் அன்பு நிறைந்த ஆதரவு நாடி வணங்குகின்றேன்.

இத்தலைமைப் பேற்றை விரும்பி எனக்கு இதனைத் தந்து சிறப்பிக்க வேண்டுமென எப்போதேனும் வேண்டிக் கொண்ட தோ, நெஞ்சால் விழைவதோ செய்திருப்பேனாயின், இது குறித்து யான் இச்சபையினருக்கு நன்றி செலுத்தும் கடமையுடையேனா வேன். அத்தகைய கடனொன்றும் யான் பெற்றதில்லை. ஆகவே, இந்தச் சீரிய தலைமைப் பதவியை ஒன்றானும் நிறைவில்லாத எனக்கு அளித்துச் சிறப்பித்தது பற்றி இச்சைவ சித்தாந்த சபைக்கு என் பணிவார்ந்த நன்றியினைச் செலுத்துகின்றேனென்று தெரிவித்துக் கொள்ளுகின்றேனில்லை.

நம் நாட்டிற் பல இடங்களிலும், அரசியல், சமுதாயம், இலக்கியம் முதலிய பல துறைகளை வளர்க்கும் பல வகைக் கழகங்கள் உள்ளன. அவற்றின் ஆண்டு விழாக்களில் தலைமை தாங்கி நடத்தும் தலைவர்களைக் காண்கின்றோம். அத்தலைவர் களுக்கும் தலைமை தாங்கும் கழக விழாக் களுக்கும் நேரிய தொடர்பு இருப்பதில்லை. தலைவர்களின் தலைமையுரையில் ஒரு பகுதி தலைவருக்கும் கழகத்துக்கும் உள்ள தொடர்பு கண்டு உழைப்பதாலேயே கழியும். மேலும் தலைவரைத் தேருமிடத்துக் கழகங்கள் பலவும் ஒரு குறிப்பைக் கொண்டிருப்பது தெளிய விளங்குகிறது. தலைவராவோர், செல்வம், அரசியல், செல்வாக்கு பொருட் கொடை முதலிய பண்புடையராதல் வேண்டும் என்பது முதற்படி. இன்ன பண்புடையார் இலாது போயின், மேனாட்டுக் கல்விக்குரிய பட்டமும், பதவியும் உடையராதல் வேண்டும். இதுதானும் உடையார் கிடைத்திலராயின், முதுமையும், தமிழ்ப் புலமையும் உடையாரைத் தேர்ந்து கொள்வர். இக்கூறிய தலைமைப் பண்புகளுள் ஒன்றும் என்பால் தலைமை யேற்றற்குரிய அளவில் நிறைந்தில தென்பதை என் நெஞ்சே எனக்குக் கூறுகிறது. தம்மால் அன்பு செய்யப்பட்டார்பால் காணப்படும் நலம் சிறிதாயினும், அன்பர்கட்கு அது பெரிதாய்த் தோன்றும். அதனால் என்பால் காணப்படும் சிறு பண்பினைப் பெரிதெனக் கருதி இத்தலைமைச் சிறப்பினைத் தந்திருக்கின்றீர்கள். அதனால் யான் அன்பர் பணி செய்ய ஆளாக்கிக் கொண்டதாக மேற்கொண்டு ஆற்ற முற்படு கின்றேன். இந்த அன்பர் பணியால் விளையும் இன்பநிலை இவ் விழாவின் முடிபொருளாகும். ஆதலால் நாம் அதனைப் பெற அமைவோமாக.

இவ்விழாவின் இன்பநிலை இங்கே நிகழும் நிகழ்ச்சி களால் விளையத்தக்கது. இந்நிகழ்ச்சிகள் இனிது நிகழ்தற்கு இங்கே கூடியிருக்கும் பேரவையினராகிய உங்கள் “ஆன்ற மைந்தடங்கிய கேள்வி” இன்றியமையாத ஆக்கமாகிறது. உங்களுடைய அமைதி யான இருக்கை நிகழ்ச்சிகள் ஒழுங்குற நிகழ்வதற்குப் பெருந் துணை. உங்களுடைய விளக்கமமைந்த வரவேற்பு, சொற்பொழி வாளருக்கும், கேட்கும் பிறருக்கும் பேரூக்கந் தருவதாகும். உங்கள் குறிப்பறிந்து நிகழ்வன நிகழப்பண்ணுவதே தலைமைப் பணியின் கடன், என் கடன் இந்தப் பணி செய்வதே. உங்கள் கடன் விழா நிகழ்ச்சிகளைத் தாங்குதலே.

2. தூத்துக்குடி சைவ சித்தாந்த சபை
பெருமக்களே, இப்போது நம் தூத்துக்குடியில் நடைபெறும் இந்தச் சைவசித்தாந்த சபை ஆண்டுவிழா இந்த ஆண்டில் ஒரு தனிச்சிறப்பை எய்துகின்றது. சென்ற ஆண்டு களிலெல்லாம் நம் தமிழகத்தில் சித்தாந்த சைவத்துறையில் இரண்டு பெருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். ஒன்று சென்னைச் சைவசித்தாந்தசபை ஆண்டுவிழா. மற்றொன்று தூத்துக்குடி சைவசித்தாந்த சபை ஆண்டுவிழா. சைவ சித்தாந்த சபை தமிழக மெங்கம் பரவி நிற்கும் பண்புடையது. தூத்துக்குடி சைவ சித்தாந்த சபை தூத்துக்குடி யளவில் அமைந்து விளங்கும் பண்புடையது. இவை யிரண்டும் பொதுவும் சிறப்புமாய்த் தம்மில் இயைந்து சைவப்பணி புரிவன வாகும். இவ்வாண்டில், சைவசித்தாந்த சபை கடல் கடந்து ஈழநாடு சென்று தனது விழாவினைக் கொண்டாடிச் சிவம் பெருக்கும் சீர்மை பெற்றது. அதனால் நம் தமிழகத்துச் சைவ வாழ்வு தூத்துக்குடி சைவசித்தாந்த சபையின் இந்த ஆண்டு விழாவோடே அமைதி பெறுவதாயிற்று. ஆயினும் சபை விழாவின் பொது நலமும், இதற்கேயுரிய சிறப்பு நலமும் ஆகிய இரு நலங்களும் இந்த விழா நல்கும் கடமை கொண்டு நிகழ்தலின், இது தனிச்சிறப்புடைய தென்பது தெளிவாகும்.

3. ஆண்டுவிழாச் சிறப்பு
மேலும் இந்த ஆண்டில் இப்போது இந்து அறநிலையங் களின் செம்மை நிலை குறித்துச் சென்னை அரசியலாரால் அற நிலையப் பாதுகாப்புச் சட்டம் திருத்தப் பெறுகிறது. இந்து அறநிலையங்களுள் சைவத்தின் பங்கு பெரியதாகும். தென்னாட்டில் இந்து சமயமென்பது கிறித்தவம், இசுலாம் என்ற சமயமொழிய ஏனைய எல்லா வற்றையும் தனக்குள் அடக்கியிருக்கும் சமயமாகக் கருதப்படுகிறது. இதன்கண் சிறப்பாகச் சைவமும், வைணவமும் சைவவைணவமாகிய சுமார்த்தமும் அடங்கியுள்ளன. இவற்றுள் ஏனையாவும் நூறென்றால் சைவம் என்பது ஆயிரம் என்ற வகையில் அமைந்துள்ளது, “ஆயிரத்தெட்டு சிவாலயம் நூற்றெட்டுத் திருப்பதி” என்ற உலக வழக்கே இந்து அறநிலையங்களுள் பெரும்பாலான சைவமாதலை வற்புறத்தும். இந்த அறநிலையங்களைப் பற்றி ஒரு சட்டம் வருகிற தெனின் பெரிதும் சைவத்தின் செம்மை குறித்தே இச்சட்டம் வருகிறதென்பது தெளிவாம். இச்சட்டம் சென்னை அரசியலார் ஆராய்ச்சி புரியும் இந்நிலையில் இந்த ஆண்டுவிழா நிகழ்கின்றமையின், இதன் சிறப்புக்குத் தனிமையான நலம் ஒன்று சேர்கிறது. ஆகலாற்றான், தூத்துக்குடி சைவசித்தாந்த சபையின் இந்த ஆண்டு விழா ஒரு தனிச் சிறப்புடையதென்று கூற வேண்டிய தாயிற்று.

4. சைவர்களும் சைவசமய அறநிலையங்களும்
இச்சட்டத்தை அரசியலார் கொணருவது குறித்து சென்னை அரசியல் சார்பில் எடுத்துப்பேசிய முதலமைச்சர் இந்து அறநிலையங் களின் ஆண்டு வருவாய் உரூபாய் மூன்றரைக் கோடி என்றும், இவற்றின் ஆட்சி செவ்விய முறையில் இல்லையென்றும், செம்மையான ஆட்சிமுறை வகுக்க வேண்டிய கடமை இதனால் அரசியலார்க்கு உண்டாயிற் றென்றும் குறித்துரைத்து ஆட்சிமுறை செம்மையாக இல்லையென்பதை வற்புறுத்துவதற்குச் சான்றுகள் மிகப்பல எடுத்துக் காட்டினார். நாட்டுமக்களிடை யேயும் சமய வுணர்வும், சமய வொழுக்கமும் குறைந்துள்ளன. சமய நிலையங்களில் மக்களின் புறக்கணிப்பும் உண்டாகியிருக்கிறது. இதனால் பொதுவாக இந்துக் களுக்கும் சிறப்பாகச் சைவர்களுக்கும் தங்கள் சமயத் துறையில் போதிய கருத்தில்லை யென்பது தானே ஏற்படுகிறது.

சைவர்களுக்குத் தங்கள் சைவ சமய அற நிலையங்களில் கருத்தில்லாமைக்குக் காரணமென்ன? அற நிலையங்கள் செய்ய வேண்டிய பணிகளுக்கு வேண்டும் வருவாய், ஆயிரமாண்டுகட்கு முன்பே நம்முன்னோரால் வழங்கப் பட்டன. அறநிலையப் பணி களைச் செய்வோர் தத்தமக்குரிய கடமைகளைச் செவ்வையாகச் செய்தற் பொருட்டு அரசியலார் அறநிலைய ஆட்சிக் கழகங்களை ஏற்படுத்தி யிருந்தனர். கடமையினின்றும் வழுவுவோர் நன்கு தண்டிக்கப் பட்டனர். தவறு செய்வோர் தக்காங்கு நாடி ஒறுக்கப் பட்டனர். இவ்வாறு தீதுகடிந்து நல்லது நிகழ்தற்கு வேண்டிய ஆட்சிக் கழகங்களும் அரசுகளும் முன்னின்று ஒழுகினமை யின், அற நிலையங்கள் அறநெறி வழாது நிலவி வந்தன. பொதுமக்கள் கருத்து அவற்றின்பால் செல்லாது போயிற்று. இடைக்காலத்தே தமிழ் நாட்டு அரசு முறை மாறிற்று: சமய நிலையங்களும் பல மாறுதல்களுக்கு உள்ளாயின. பழையன கழிந்தன. புதியன தோன்றின. சமயப் பணி தவிர்ந்தது. பொது மக்கள் கருத்துச் சமய நிலையங்கள் பால் செல்லாது விலகியே நிற்பதாயிற்று. “அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்” என்பது நாட்டில் வழங்கும் அறிவுரை. குற்றஞ்செய்த அன்றே ஒறுத்து நெறி நிறுத்தும் அரசாட்சி முறையிலே, பொதுமக்கள் கருத்து நெறி நிறுத்தும் அரசாட்சி முறையிலே, பொது மக்கள் கருத்து இந்த இருபதாம் நூற்றாண்டில்தான் நன்கு ஊன்றி வளம்பெற வல்லதாயிற் றென்றால், தெய்வநெறியில் பொதுமக்கள் கருத்துச் சென்று வேரூன்றி வளம்பெறுவதென்பது அத்துணை எளிதில் இயலுவதன்று.

இடைக்காலத்தே வேறு மாறுதல்களும் உண்டாயின. சமய நிலையங்கள் பல, பொதுமக்கள் தொடர்பை நாடாதவாறு மிக்க பொருள் நிலையங்களாக மாறின. மேனாடுகளிற் போல அரசியலை ஆட்டிவைக்கும் அத்துணைச் செல்வம் பெறாதொழிந்தன வென் றாலும் பொதுமக்கள் ஆதரவை வேண்டாத அளவு செல்வமுடைய வாயின. தெளிந்தாரைச் சேராமையும், ஒருகால் சேரின், தெளிந்தாரது தெளிவைக் கெடுத்துத் தெளியாமை இருளில் அழுத்துவதும், இவ்வகையால் வீழ்ந்தாரை மேன் மேலும் வீழ்த்துவதும், உயர்ந் தாரையே உயர்த்துவதும் செல்வத்துக்குப் பொது இயல்பு. இப்போதும், மிகவும் தெளிவும் செல்வமும் படைத்த நாடுகள் எனப்படுவன இந்தக் குற்றங்கட்கு உள்ளாவதை நாம் காண்கிறோம். இச் செல்வம் சமய நிலையங்களிற் சேர்ந்தது. இதன் செயல்கள் சமயங்களில் உண்டாயின. ஆகவே சமய நிலையங்கள் தெளிவிழந்து உயர்ந் தோரை உயர்த்துமுகத்தால் பொதுமக்கள் தம்பால் கருத்துச் செலுத்தா வகையைச் செய்துகொண்டன. இவற்றின் விளைவாக நாட்டில் சமய நிலையங்கள்பால் பொது மக்களுக்குப் புறக்கணிப்பு உண்டாய் விட்டது. இப்போது பொது மக்கள் கைக்கு அரசியல் வந்து விட்டது. அவர்கள் கருத்துச் சமய நிலையங்களின் பொருள் நிலைமை மேல் செல்வதாயிற்று.

பொதுமக்கள் கருத்து அரசியலில் சென்று வளரத் தொடங்கு வதைச் சமய நிலையங்கள் காணாதொழிந்தன. ஆளப்பட்டு வந்த மக்கள் ஆள்பவராக முயன்று வெற்றி பெற்று வருவதைக் கண்டிருந்த சமய நிலையங்கள், பொது மக்கள் கருத்தில் படிந்திருந்த புறக் கணிப்பை மாற்றி நன் மதிப்பு நிலவத்தக்க வகையில் தம்முடைய பணியை மாற்றியிருக்க வேண்டும். சமய நிலையங்கள் ஏனைப் பொருள் நிலையங்கள் செய்யும் பணியைச் செய்தனவேயொழிய தமக்குரிய சமயப்பணி புரிவதைத் தவிர்த்தன. சமயப்பணி யென்பது கோயில்களில் நாட்பூசனையும் ஆண்டுவிழாச் செய்வதுமே யென்று கருதப்பட்டது. சமய நிலையங்கட்குப் பண்டை நாளை வேந்தரும் செல்வரும் பொருள் வழங்கிய காலத்தில் அவை பஞ்சத்தால் வருந்தும் மக்கட்கு ஆதரவு நல்கின. நோயுற்றார்க்கு மருத்துவ வசதிநல்கின; கல்வி கற்பித்தன. காணார், முடவர் முதலாயி னோர்க்கு உணவு உடையும் உறையுளும் உதவி, சமய ஞானங் களை வழங்கின. செல்வம் சிறந்த கோயில்கள், செல்வம் குறைந்த கோயில்கட்குச் செம்மை குன்றாத வகையில் வேண்டும் உதவி புரிந்தன. பின்பு, சமய நிலையங்கள் வெறும் பொருள் நிலைய மானபின் இப்பணிகளைக் கைவிட்டன. அண்மையில் நம் நாட்டிற்குப் போந்த வேற்றுச் சமயங்கள் இப்பணியைப் புரிந்தன. இவற்றின் வாயிலாகப் பொதுமக்கள் நன்மதிப்பை அவைகள் பெற்று, அரசியலிலும் பங்கு பெறலாயின. நம் சமய நிலையங்கள் சமயப்பணிக்கு மாறாக வம்புக்கும் வழக்குக்கும் பெரும் பொருள் செலவிட்டும் பிறங்குவவாயின. திருக்கோயில்களுள் செல்வ
முடைய திருக் கோயில்கள், செல்வமும் செல்வாக்கு முடையார் கைப்பட்டு வழிபாட்டு நிகழ்ச்சியிலும் வரிசையிழந்து நிற்கலாயின. செல்வக் கோயில்களே சீரழிந்தபோது செல்வமில்லாத கோயில்கள் கீழ் நிலையடைந்தமைக்கு வேறு கூற வேண்டியதில்லை.

இந்நிலையில் அரசியலார் சமய நிலையங்களிலும் கோயில் களிலும் தலையிடாது நடுவுநிலை மேற்கொண்டனர். பொது மக்களும் இவற்றிலிருந்து விலகி நின்றனர். வன்மை மிக்க செல்வர் கைப்பட்ட கோயில்களும் அறநிலையங்களும் அச் செல்வர்க்கே செல்வமாய்ப் பயன் பட்டன. இதனால் பொது மக்கட்குச் சமயவு ணர்வும் சமயவொழுக்கமும் குறைந்து போயின. போகவே சமயக்கல்வி குதிரைக் கொம்பாயிற்று. கற்றோரிடை யேயும், நம் சமயக் கல்வி பரவாமையால் பெயரளவில் சமய அற நிலையமாகிய இவை பெரிதும் அருவருப்பை விளைத்துக் கொண்டன.

5. சைவசித்தாந்த சபைகள் தோற்றிய சூழ்நிலை
ஆங்காங்கு ஒருசில அறிஞர்கள் நம் சைவ சமயவுணர் வும் ஒழுக்கமும் பரவுதல் வேண்டி முயல்வாராயினர். நெறி வழுவி நீர்மை மாறிக் கிடக்கும் சமய அறநிலையங்களின் பால் அருவருப்பும் அவமதிப்பும் கொண்ட அறிஞர், இச் சமய நிலையங்களால் சைவ முதலிய இந்து சமயத்துக்கு விளையும் அவக்கேட்டுக்கு அஞ்சித் தத்தம் மனைகளிலே தங்கினர். இக்காலத்தே செட்டி நாட்டுச் செல்வமக்கள் திரை கடலோடி ஈட்டிய தம் செல்வத்திற் பெரும் பகுதியைத் தென்னாட்டுத் திருக்கோயில் திருப்பணி செய்து கோயில்கள் சீர்கேடு அடையாவாறு ஓரளவு காத்து உதவினர். அவர்கள் உள்ளம் இத்துறையில் புகாது போயிருக்குமேல் இன்று பல கோயில்கள் கல்மேடும் மண்மேடுமாய்ப் பாழ்பட்டிருக்கும். பெருஞ் செல்வமுடைய செட்டி நாட்டு மக்கள் செய்த திருப்பணி கண்டும் பொதுமக்கள் உள்ளம் சமயத்துறையில் ஈடு படவில்லை; ஈடுபடுதற்குரிய முயற்சி தானும் இல்லை யாயிற்று. சமய நிலையங் களிலிருந்து கொண்டு அதனைச் சுரண்டி யுண்டு வாழ்ந்தோர், பொது மக்கள் வெறுப்புற்றும் மாறுபாடுற்றும் நீங்குதற்கேற்ற செயல் முறைகளை நூல்கள் பெயராலும், வழக்கத்தின் பெயராலும் வழிமுறையின் பெயராலும் புதிய புதிய வகையில் ஏற்படுத்தி வாழ்ந்து செல்வமுடையராயினர்.

இந்நிகழ்ச்சிகளை யெல்லாம் கூர்ந்து நோக்கிய சமய வுணர் வுடைய சான்றோர் பலர். இச்சமய நிலையங்கட்கு வேறாகத் தனித்தனி சமயச் சார்புடைய கழகங்களை யும், சபைகளையும் ஏற்படுத்திச் சமயப்பணி புரியக் கருதினர். மேலே கூறியவாறு உண்டாகியிருந்த சூழ்நிலை, இச் சபைகள் புரியக்கருதிய சமயப் பணிகட்கு வேண்டும்பொருள் வழங்கியுதவுவோர் மிகப் பலராகாதொழிவதற்குக் காரணமாய் நிற்பதாயிற்று. அதனால் சமயப்பணியென்பது சமய நூற்கருத்துக்களைச் சொற் பொழிவு வாயிலாகவும், பாடஞ் சொல்லுதல் வாயிலாகவும் மக்களுக்கு உணர்த்துவ தென்பது என மேற் கொள்ளப்பட்டது. படவே, ஆங்காங்கு சைவசித்தாந்த சபைகளும், சைவக் கழகங்களும் தோன்றத் தலைப்பட்டன. அவ்வாறு தோன்றியவற்றுள் மிகப் பழைமை வாய்ந்தவை யெனப்படுவன இத்தூத்துக்குடி சைவ சித்தாந்த சபையும், நாகைச் சைவசித்தாந்த சபையும் வேறு பிறவுமாம். இவற்றுள் பலவும் இறந்து போகவும், இத் தூத்துக்குடி சைவசித்தாந்த சபை ஒன்று தான் ஆண்டவன் திருவருளால் நடைபெற்று வருகிறது.

6. தூத்துக்குடி சபையின் திருப்பணி
இச் சபை, கடந்த பல்லாண்டுகளாகச் சித்தாந்த சைவ நூற்கருத்துக்களைச் சொற்பொழிவு வாயிலாக நாட்டில் பரப்பி வந்தது. இதன் பயனாக இந்நகரிலேயே சித்தாந்த சைவ நூல் வல்லுநர் பலர் தோன்றிப் புகழ் மேம்பட்டனர். அவருள்ளும், இச் சமயப் பணியால் தலையாய புகழ் பெற்று, “தமிழ் நாட்டில் இன்று சைவ நூற்கருத்துக்கள் பலவற்றையும் துரிசறக்கற்றுக் கேட்போர் உளங்கொள்ளத்தக்க வகையில் சொல் வல்லுநர் உளரோ?” எனின். “இலரல்லர் உளர்” என்றற் கெடுத்துக்
காட்டாக, இதோ, நம் கண்முன் சிவகுருநாதனாகக் காட்சி
யளிக்கும் திரு. ந.சிவகுருநாத பிள்ளையவர்கள் ஒருவரே விளங்குகின்றார்கள். சைவர் வாழும் தமிழ்நாடு கை விடினும், சைவம் வளர்த்தற்குரிய சைவ சமய அற நிலையங் கள் கைவிடினும், சைவத் திருக்கோயில்கள் கைவிடினும் என்போன்றோர் இவ்வுடலோடு கூடியுறையுமளவும் கைவிடோம் எனக் கட்டாண்மை கொண்டுறையும் சைவக் காவலர் திரு. ந.சிவகுருநாதனார் பல்லாண்டு வாழ்க என்று மனதால் ஆண்ட வனை நினைந்து வாயார வாழ்த்துவோமாக.

பெருமக்களே!
இதுபோலும் சைவசபை விழாக்களில் முன்னெல்லாம் சொற்பொழிவுகள் நிகழ்வதை யான் இளையனாயிருந்து கண்டிருக் கிறேன். அந்நாளில் சொற்பொழிவாளர்கள் ஆற்றிய சொற் பொழிவுகள் சைவ நூற்கருத்துக்களை நிரம்பக் கொண்டிருந்தன. ஆயினும், அவை பொது மக்களுக்கு எளிதில் பொருள் விளங்கா நிலையிலேயேயிருந்தன. அவர்கள் வழங்கிய மொழிகளும் எளிதில் பொருள் விளங்காத மணிப்பிரவாள மாயிருக்கும். அவரவர்களும் தாங்கள் தங்கள் கற்ற நூற் பொருள் அனைத்தையும் அவை யினர்க்குக் காட்டுதற் கேற்ற வாய்ப்பாகக் கருதி அவற்றைக் கடல்மடை திறந்ததுபோலப் பேசிக்காட்டுவர். இவ்வாற்றால் சமயக் கருத்துக்கள் கேட்போர்க்கு எளிமையில் புலப்படாவாயின. சமய வேற்றுமையும் சாதி வேற்றுமைகளும் பொங்கிக் கொதித்துக் கொண்டிருந்தகாலமாதலால் அக்காலம் கற்றோர்க்கே இன்ப மாயிருந்தது. கல்லாத மக்களின் கல்விக் கண்ணைத் திறப்பதற்கு அக்காலம் போதிய துணைசெய்யாது போயிற்று.

அந்நாளில், அச்சூழ்நிலையில் தோன்றி இடையில் மக்கள் மனவுணர்வு வளர்ந்த வகையில் வளைந்துகொடுத்துச் சிறந்து கற்றோர், கல்லாதோர் என்ற இரு திறத்தோரையும் தழுவிக் கொண்டு முன்னேறி மேம்படும் பெருமை இத்தூத்துக்குடி சைவ சித்தாந்த சபைக்கே யுண்டு.

தமிழ் நாட்டில் ஆங்காங்கு நிகழும் கழக விழாக் களிலும் சபை விழாக்களிலும் யாதானும் ஒருவரலாற்றைத் துணையாகக் கொண்டே சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவது வழக்கம். வரலாறொன்றை ஆற்றொழுக்காக வைத்துக் கொண்டு சமயக் கருத்துக்களை இடையிடையே காட்டிச் செல்வது அச் சொற் பொழிவுகளின் பொதுநெறி. அது கற்றோர்க்கு இன்பத்தையும் கல்லாதார்க்கு வியப்பையும் தந்து மகிழ்விக்கும். அதனால் சைவ சபைகளில் திருத் தொண்டர் புராணமும், வைணவ சபைகளில் இராமாயண பாரதமும் சொற்பொழிவுகட்குப் பொருள் தந்து மேம்பட்டு நிற்கும். பொது மக்கள் இடையிடையே சிதறிவிழும் சமயக் கருத்துக்களை நெகிழ்த்துவிட்டு, வரலாற்று நிகழ்ச்சிகளைக் கேட்டு இன்புறுவர். கேட்போர்க்குச் சோர்வு உண்டாகும் போது, சொற்பொழிவாளர் தங்கள் இசையாலும் நகைச் சுவை பொதுளும் வெறுங்கதைகளாலும் சோர்வு நீக்கிச் செல்வர். அதனால் பொது மக்கள், சிறப்புடைய சொற் பொழிவுப் பொருளைக் காற்றில் விட்டு விட்டு இடையே நகைகலந்து நிற்கும் சிறப்பில்லா வேடிக்கைக் கதைகளையே மேற் கொண்டு செல்வதும் நிகழ்வதாயிற்று. காலம் செல்லச் செல்ல உயர்நூல் வெளியீடுகளும், மேனாட்டுக் கல்வி முறையும் பெருகவே, பொதுமக்கள் கருத்து நிறைந்த சொற் பொழிவு களில் வேட்கையும், உயர்நூற் பொருளை ஓர்ந்தறிவதில் ஒட்பமும் உடையராயினர். பொது மக்கள் மனவுணர்வு வளர்வது கண்ட இத் தூத்துக்குடி சைவசித்தாந்த சபை அதற்கேற்பவே சொற்பொழிவுகளை அமைத்துத் தன் பணியைச் செய்வதாயிற்று. அதன் விளைவாக, அயின்சுடன் கண்ட அரும்பொருள்போல் மிகச்சிலரே அறியத் தகுவதா யிருந்த சைவசித்தாந்த நுண்பொருள், ஆயிரக்கணக்கினரான பொது மக்கள் அமைந்திருந்து கேட்டு இன்புறத்தக்க எளிமை எய்துவதாயிற்று நாலைந்தாண்டுகட்கு முன் இவ்வூர்த் திருக்கோயிற் பெருவிழா ஒன்றில், சைவசித்தாந்தம் பொருளாக ஐந்து நாட்கள் யானே சொற்பொழிவாற்றும். பணியைச் செய்தேன். நாடோறும் பல ஆயிரக்கணக்கினரான பொதுமக்கள் மூன்றுமணி நேரத்துக்குக் குறையாமல் இருந்து கேட்டனர், ஒருமுறை மெய்கண்ட தேவர் அருளிய சிவஞான போதம் பொருளாக மூன்று நாள் தொடர்ந்து சொற்பொழிவு நடந்த ஞான்று, பொதுமக்கள் திரளாக வந்து கேட்டின் புற்றனர். ஒருகால் உமாபதி சிவனார் அருளிய சிவப் பிரகாசம் என்னும் நூலைக் காலை மாலை யென்ற இருபோதும் பலர் வந்து இன்புறக் கேட்டனர். இவ்வாற்றால் சித்தாந்த சைவப் பெருநூல்களின் எத்துணை நுண்ணிய பொருளையும் தூத்துக்குடியில் ஒருவர் சொற்பொழிவு செய்யலாம். அச்சொற் பொழிவின் நுட்பத்தை நுனித்தறிந்தின்புறும் நலம் தூத்துக்குடி சைவசித்தாந்த சபையிற் கூடும் பேரவைப் பெருமக்கட்குண்டு என்ற பெரும் புகழை இச்சித்தாந்த சபை இவ்வூர்க்கு எய்துவித்திருக்கிறது. ‘கற்றலிற் கேட்டலேநன்று’, என்பவாதலால் கேள்விநலத்தால் இச் சபை செய்த தொண்டில் பயன் விளைந்த முறை இதுவென்பது காட்டவே இஃது ஈண்டுக் கூறவேண்டுவதாயிற்று.

இதுகாறும் கூறியவற்றால் சைவசித்தாந்த சபையின் சிறப்புடைய நோக்கம், மக்கள் சித்தாந்த சைவவுள்ள முடையராதல் வேண்டு மென்பதும், அது குறித்துச் சைவ சித்தாந்தக் கொள்கைகளை மக்களிடையே பரப்ப வேண்டு மென்பதும் இப்பணியையே இச்சபையும் இன்று வரையும் செய்திருக்கிற தென்பதும். இனியும் அதனைச் செய்யவே சமைந்திருக்கிற தென்பதும் ஒருவாறு காட்டினேன்.

7. சைவசித்தாந்தம் - பொருள் விளக்கம்
இனி, சைவசித்தாந்தம் என்பது யாதெனக் காண்டல் வேண்டும். சைவசித்தாந்தம் என்பதை ஒரு தொடராக வைத்தும் தனித்தனிச் சொற்களாக வைத்தும் பொருள் காண்பதுண்டு. தொடர் மொழி யாகக் காணுமிடத்துச் சைவத்தின் முடிந்த முடிபு என்ற பொருள் காணப்படும். சைவத்தின் உட்பிரிவாகப் பாசுபதம், காபாலம் முதலாக அறுவகையுண்டு. அவற்றையாராய்ந்து வேண்டாதன விலக்கி, வேண்டுவன கொண்டு இந்நாட்டிற்கே உரித்தாய்த் தொன்று தொட்டு வந்த சைவத்தோடு கூட்டி முடிந்த முடிவாகக் கொண்ட சமயம் என்றற்குச் சைவசித்தாந்தம் என்று வழங்குவ தாயிற்று. பாசுபதம் முதலியன சைவத்தின் கூறுகளாய் இந்நாட்டில் நிலவிய திறத்தை ஏழு, எட்டாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டு, பதின்மூன்றாம் நூற்றாண்டு வரையில் தமிழகத்தில் தோன்றிய கல்வெட்டுக்களால் நன்கு அறியலாம். இவ்வரலாறு ஒரு தனித்த நூலாவதற்குரிய அத்துணைப் பெருமையுடைய தாயின், இக் குறிப்பை இவ்வளவில் நிறுத்திக்கொண்டு, பதின்மூன்று பதினான் காம் நூற்றாண்டுக்குப் பின்பே, மெய்கண்ட தேவர் தோன்றிச் சிவஞானபோதத்தைத் தந்து சிறப்பித்த பின்பே சைவசித்தாந்தம் என்ற பெயருடன் சைவம் நம் தமிழ் நாட்டில் விளக்கமுற்றுத் திகழ்வதாயிற்றெனக் கூறியமைகின்றேன்.

இத்தொடரைப் பிரித்து நோக்கின், சைவம், சித்தாந்தம் என்ற இரு சொற்கள் தோன்றக் காணலாம். சைவம் என்பது “சிவசம்பந்தம்” என்று பொருள் தரும். “சைவம் சிவத்தோடு சம்பந்தமாவது” என்பது திருமந்திரம். சிவம் என்பது கடவுளைக் குறிக்கும் சொல் லாகும். கடவுள் என்பது இறைவன் என்ற அன்னீற்று உயர்திணைப் பெயராகவும் வழங்கும்; அவ்வாறே சிவமென்பது சிவன் எனவும் வழங்கும். இறைவன் எனக் கடவுளைக் குறிக்கும் சொற்பொருள் இந்த உலகிலுள்ள எல்லா உயிர்கட்கும் உரியது. எந்நாட்டு எத்திறத்து உயிர்கட்கும் உரியவனாகிய இறைவனைத் தென்னாட் டவரான செந்தமிழர் சிவன் என வழங்குவர். “தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என மணிவாசகனார் கூறுவது ஈண்டு நினைவு கூறத்தக்கது. பொது வகையில் இறைவனை இறையென்பது போலச் சிவனைச் சிவம் என்று கூறுவது வழக்கு. சிவமென்பதன் பொதுப் பொருண் மையையுணர்ந்தே சயினச் சான்றோரும், கிறித்துவச் சான்றோரும் பேரின்ப நிலையைச் “சிவகதி” எனத் தம் நூல்களில் வழங்கியிருக் கின்றனர். வேற்றுச் சமயத்தவரும் விரும்பிக் காதலித்து மேற்கொண் டொழுகும் வீறு சிறந்தது சிவமெனும் இந்தச் செந்தமிழ்ச் சொல். சிவமென்பது தமிழ்ச் சொல்லென மேனாட்டு மொழி நூல் வல்லுந ரான கிரையர்சன் முதலி யோர் நடுநின்று கண்டுரைத்
துள்ளனர். கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கே முன்பிருந்த சமய நூல்களில் சிவமெனும் இச்சொல் வழக்கிலிருந்ததென்றற்கு மணிமேகலை யென்னும் பழந்தமிழ் நூல் சான்று கூறுகிறது. மிருகேந்திராகமத்து உபோற்காதப் பிரகரணமும் இதற்கு ஆதரவு தருகிறது. ஆதலால் இது பற்றிய ஆராய்ச்சி இனி வேண்டாததொன்று.

சிவ சம்பந்தம் சைவமாதலால், சிவத்துக்கும் உயிர் கட்கும் உள்ள சம்பந்தம் சைவம்; சிவத்துக்கும் உயிரில்லாத உலகிற்கும் உள்ள தொடர்புசைவம்; ஆகவே, உயிர்கட்கும் அவ்வுலகிற்கும் உள்ள தொடர் சைவமாம். உயிரின் வேறாய் அதற்கு நிலைக் களமாய் விளங்கும் உடம்பு உலகியற் பொருளாய் விடுவதால் உயிர்க்கும் உடம்புக்கும் உளதாகி தொடர்பும் சைவமாம். உயிர்க்கும் உடம்புக்கும் தொடர் பாவது அன்பு என்றார் திருவள்ளுவர். சிவமெனக் கண்டார் திருமூலர். அதனால் அவர்,

" அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவதாரும் அறிகிலார்
அன்பே சிவமாவதாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே"

என்று விளக்கினார். இச்சம்பந்தத்தை யறிந்தொழுகும் திருநெறி சைவமாயிற்று. இதனை அளவைகளாலும் பொருந்தும் நெறி யாலும் ஆராய்ந்து தெளிந்து முடிவு கண்டு அன்பர் பணி செய் தொழுகுவது சைவசித்தாந்தம் எனப்படு வதாயிற்று.

இனி, சைவத்தாற் குறிக்கப்படும் சிவம், உயிர், உலகு என்ற மூன்றனையும் தொகுத்தும் வகுத்தும் விரித்தும் எடுத்தோதி, உயிர்கள் பிறவித்துன்பச் சுழலின் நீங்கிப் பிறவாப் பேரின்பத்தை யெய்துதற்குரிய நெறிகளை விளக்கிக்கூறும் நூல்கள் சிவாக மங்க ளாகும். இவை சிவ முதலிய முப் பொருளையும் அறுதியிட்டுத் தடை விடைகளால் தூய்மை செய்து உணர்த்துவது பற்றிச் சித்தாந்தம் என்றும் கூறப்படும். ஆதலின் சைவசித்தாந்தமென்பது சைவமாகிய சிவாகம நெறிபற்றிய சமயம் என்பது தெளிவாம். இடைக் காலத்தே பிரமசூத்திரத்துக்குப் பேருரை கண்ட வடமொழியாசிரி யருட் சிலர் சிவாகமங்களைப் பிரமாண நூலாகக் கொள்ள மறுத்தனர். வேதாந்த நூல்களே பிரமாணமாவன என்பது அவர்கள் கொள்கை. அவர்கள் கூறும் கூற்றுப்பொய்யா தலைக் கண்ட பேரறிஞர்களான சீகண்டர் முதலியோர் சிவாகமங்கள் பிரமாணமென்றும், வேத வேதாந்தங்களின் தெளிவே சிவாகமம் என்றும் தெளிவுபடுத்தி (சித்தாந்தப் படுத்தி(ச்) சித்தாந்த மெனப்படும் பெயரையும் நிலை நாட்டினர். தென்னாட்டுச் சிவன் கோயில்கள் எல்லாம் சைவ சித்தாந்த முறையிலே தொன்று தொட்டு நடந்து வருவன. சிவாகமங் களை மறுத்த வேதாந்திகளில் சிலர் தில்லைப் பெருங்கோயிலைக் கைப்பற்றிக்கொண்டு அதன்கண் சிவாகம மாகிய சைவசித்தாந்த முறையை விலக்கி வைதீக பூசைசெய்து வரலாயினர். முன்னூறு ஆண்டுகட்கு முன்பு வரை அக்கோயில் சைவசித்தாந்தமாகிய மகுடாகம முறையில் நடைபெற வகுக்கப்பெற்றிருந்ததென்பது இரட்டையர் கலம்பகத்தால் விளங்குகிறது. இதனையறியாது தென்னாட்டுக் கோயில்களில் சிவாகமங்களே நிலவின என்பது பொருந்தாதெனவும் தில்லைப்பெருங்கோயிலில் வைதீகபூசை நடைபெறுவதே இதற்குச் சான்றெனவும் சிலர் கூறுவாராயினர். சுருங்கச் சொல்லுமிடத்து தென்னாட்டுச் சிவன்கோயில்களும் சைவர் வாழ்வு முறையும் பிறவும் எல்லாம் சைவ சித்தாந்த நெறியிலேயே இயலுவன என்பது முடிவாகும்.

8. அறிவியலும் தத்துவஞானமும்
இக் காலம் சயன்சு எனப்படும் அறிவியலுக்குச் சிறப்பளித்து அதனாற் பெறலாகும் அறிவியல் நலங்கட்கு முதன்மை தந்து நிலவும் காலமாகும். அறிவியலால் விளக்கப்படும் பொருள்களே உண்மையெனவும், கொள்ளத் தகுவன எனவும் கருதுவது இக் காலத்தில் சிறப்பியல்பு. சிவமாகிய கடவுட் பொருள் அறிவியல் முறையில் காணப்பட்டா லொழியக் கொள்ளத் தகுவதன்றெனவும் இக்காலம் கருதுவதுண்டு. அறிவென்பதுகூட அறிவியல் முறையிற் பெறுவதுதான் சிறப்பு என்று இக்காலத்தவர் கருதுகின்றனர். இவர்கட்கு முன்னணியில் நிற்பவர் இம்மானுவேல்கான்டு என்பாரும், அகத்தே காந்தே என்பாருமாவர். இவ்விருவரும் தத்தங் கொள்கை வகையில் பெரிதும் வேறுபாடு உடையவராயினும் “அறிவாவது விஞ்ஞான முறையிற் பெறப்படும் அறிவே” என்ற வகையில் ஒத்துள்ளனர். விஞ்ஞான முறை அறிவாவது நியூட்டன் கண்ட அறிவியல் முறைப்படி, அறிய வேண்டியவற்றை அறிவதாகும். உலகியற் பொருளொன்றை அறிவியல் முறையில் அறிவதென்பது, குறித்த பொருளின்பால் பிறபொருட்டுள்ள தொடர்புகளைக் கணக்கியல் வாய்பாட்டாற் கண்டறிவ தென்பர். சிவமாகிய செம்பொருள் உலகியற் பொருள்களுள் ஒன்றாக வைத்து விஞ்ஞான முறையிற் காணக்கூடியது. அன்மையின் அச்செம் பொருள் அறியக் கூடியதன்று; ஆகவே அதனைப்பற்றிப் பேசுவது வீண் செயல் என்பது அவர் கொள்கை. ஆயினும், உலகியல் நிகழ்ச்சிக்கு அத்தகைய செம்பொருளொன்று உளதாக வைத்துச் செய்வன செய்ய வேண்டியிருக்கிறது எனவும், எனவே, அது நம்மால் வகுத்துக் கொள்ளப்பட்ட தொன்றே தவிர, அறிவியல் ஆராய்ச்சி யால் அறிந்து கொள்ளக் கூடிய ஒன்றன்று எனவும் கான்டு என்பவர் கூறுகின்றார். காந்தே என்பார் வேறு வகையில் தமது நாவன்மை யைச் செலுத்தி இந்த முடிவுக்கே வந்து சேர்ந்தார்.

இவர் தம் கொள்கைகளுள் காண்டென்பாரைப் பின் பற்றி செருமனிநாட்டில் பால்சென் வைசிங்கர் முதலியோரும் பிரான்சு நாட்டில், இரினோவியர் முதலியோரும், அமெரிக்காவில் இலியோன் பிரன்சிக் முதலியோரும், காந்தேயைப்பின்பற்றி இங்கலாந்தில் சான் ஸ்டூவர்ட் மில், கெர்பர்ட் ஸ்பென்சர் முதலியோரும், பிரான்சு நாட்டில் எமில் வித்ரே, எமில் டாக்கீம் முதலியோரும், நாட்டிற் பரப்பலுற்றனர்.
புதுமையில் மக்கட்கு விழைவும் வியப்பும் உண்டாதல் இயல்பு. விஞ்ஞானிகள் இங்ஙனம் புது முறையில் தமது பேச்சு வன்மையும் எழுத்து வன்மையும் கூட்டிக் கடவுட் கொள்கையைத் தாக்கத் தொடங்கியதும், அறிவியல் காட்டும் புதுமைகள் கண்டு வியப்பால் விழுங்கப்பட்டுக் கிடந்த மக்களது உள்ளம் நிலை கலங்கிற்று. அறிவியல் துறையின் நோக்கத்தை நுணுகிக்காணும் திறம் இழந்தவர், அவர் கொள்கைகட்கு இரையாயினர். உலகியற் பொருள்களின் ஆக்கக்கூறுகளும்; அவை, தம்மில் இயைந்து அமைந் திருக்கும் அமைதியும் அவற்றின் ஊடே நிலவும் ஒழுங்கும் கண்டு எப்படி யமைந்துள்ளன என்று கண்டறிவதே விஞ்ஞானத்தின் முழுத்த நோக்கமாகும். பொருள்களின் தோற்றம், நிலை, கேடு ஆகியன உண்டாதல் எங்ஙனம் என்று கண்டு அவை ஏன் அங்ஙன மாயின என்று காணாது போதலால், விஞ்ஞானத்தாற் பெறும் உலகியலறிவு முழுத்த அறிவாகாகா தென்பதை மக்கள் அறிந்திலர். பொருள்களின் ஆக்க அமைதிகளை ஆராயுங்கால் புதிய புதிய அறிவும் அவ்வழி அவற்றால் உண்டாகும் இன்பமும் அவரது ஆராய்ச்சியறிவை மழுப்பி விடுவதால், விஞ்ஞான அறிவு ஒரு மருங்கு பற்றியதாக இருத்தலை விஞ்ஞானிகள் தாமும் அறியா தொழிகின்றனர். மேலும் அவர்கட்குக் கடவுளாகிய செம்பொருள் விஞ்ஞான நெறியில் ஆராயத்தக்க பொருளாக இல்லை. விஞ்ஞான நெறியிற் காணப்படும் பொருளின் கண் ஊடுருவி நிற்கும் இயற்கையே முழு முதலாகிறது. அதனைக்காட்டும் பொருள்களின் ஆக்க அமைதிகட்கு உரிய காரணத்தை (ஆக்கமும் அமைதியும் ஏன் உண்டாயின எனக்காணும் காட்சியால் அறிதற்
கெழும் உரிய காரணத்தை) நோக்கும் நிலையில் நாம் இருத்தலால் அவர்கருத்தை ஏற்கின்றோமில்லை. நீர் எப்படியுண்டாகிற தென விஞ்ஞானத்தைக் கேட்பின், அஃது இரு கூறு நீர்க்காற்றும், ஒரு கூறு நெருப்புக் காற்றும் கூடி நீருண்டாகிறது என்னும்; இவ்வாறு ஏன் உண்டாக வேண்டும் என்றால், விஞ்ஞானம் விடை தாராது.

பொருள்களின் ஆக்க அமைதிகண்டு ஏன் என்னாது எப்படி யென வினாவிச் சேரல் விஞ்ஞானத்தின் குறிப்பு. எப்படி யென்னாது ஏன் என வினவிச் செல்வது தத்துவ ஞானத்தின் குறிப்பாகும். இதனை மேனாட்டார் ஃபிலாசஃபி என்பர். விஞ்ஞான தத்துவ ஞானமும் தத்தமுக்குரிய எல்லைக்கண் நிற்குமாயின், உண்மை யறிவு விளக்கமுறும். இவ்விரு ஞானங்களும் தம்முள் மாறு கொண்டு ஒன்றனையொன்று கெடுத்தற்கே முயன்றுள்ளன. உலக வரலாறு காண்போர், தத்துவ ஞானத்தின் செல்வாக்கால் விஞ்ஞானிகள் பலர் பெருங்கேட்டுக்குள்ளாகியதைக் காண்பர். விஞ்ஞானிகள் பலர் நாடு கடத்தப்பட்டதும், உயிர்க்கொலை செய்யப் பட்டதும் வரலாற்று நூல் வாய்விட்டரற்றுகிறது. கால வேறுபட்டால் தத்துவஞானம் செல்வாக்குக் குறையலுற்ற தும், விஞ்ஞானம் செல்வாக்குற்று தத்துவஞான எல்லைக்குள் புகுவதாயிற்று. தன் னெல்லைக்குட்படாதசெம் பொருளை விஞ்ஞானம் தேடியாராய்ந்து “அற்புதமோ சிவனருளோ அறியேன்” என அலமருகிறது.

தத்துவ ஞானமும், விஞ்ஞானமும் வேறு வேறு குறிப்பின வாயினும், தத்துவ ஞானத்துக்கு விஞ்ஞானம் இன்றியமையாது வேண்டப்படும். உண்மை வழி நின்று கடவுளுண்மை காணும் நெறி, தத்துவ ஞான நெறியின் வயப்பட்டு இயலுவது. ஆதலால், தத்துவ ஞானியொருவர் ஒன்றனைப்பற்றி பேச வருமுன் அதுபற்றி விஞ்ஞானி யாது கூறுகின்றார் என்பதை முதற்கண் காண்டல் வேண்டும் என்பர். ஒரு பொருளின் ஆக்கம் எங்ஙனமாயிற்றென்பது காண்டால் அஃது அங்ஙனம் ஏன் ஆயிற்றெனக் காணுமாற்றால் உண்மைத் தன்மையுணரல் கூடும் என்று சர் சேம்சுசீன்சு என்பார் கூறுகின்றார். விஞ்ஞானக் காட்சியிற் செல்லுமிடத்து மிக்க விழிப் போடு செல்ல வேண்டும். சிறிது அயர்ந்து விடத்து, விஞ்ஞானம் தத்துவ ஞான எல்லைக்குட் புகுந்து மயக்கத்திற் செலுத்திவிடும். பின்னர், தத்துவ ஞான நெறியிற் காணும் பொருள்கட்கு விஞ்ஞான நெறியில் விளக்கங் காணச் செலுத்தி உழல்விக்கும். விஞ்ஞானமும் தத்துவ ஞானமும் ஒருங்குடையராகிய சர் சேம்சு சீன்சு 1930-ஆம் ஆண்டில், தத்துவ ஞானப் பொருட்கு விஞ்ஞான விளக்கங் கூறத்தலைப்பட்டு முடிவில் “அற்புத பிரபஞ்சம்” (The Mysterious Universe) என்ற நூலை எழுதி முடித்தார்.

இப்பிரபஞ்சம் அற்புதமானது என்றதற்கு ஒரு விஞ்ஞானி வேண்டுமா? மக்கள் நாகரிகமின்றி விலங்குபோல் வாழ்ந்த காலத் தேயே இவ்வுலகம் அற்புதமானது என்பது அறியப்பட்டது. விஞ்ஞானத்தின் கருத்து பிரபஞ்சத்தின் அற்புதத் தன்மையை மாற்றி விளங்கவைப்பதாகும். அத்துறையில் முயன்று அஃது எவ்வளவோ விளக்கத்தைத் தந்திருக்கிறதன்றோ! இந்நாளில் பள்ளியில் பயிலும் ஒரு மாணவன் தாமசு ஆச்வினாசு, அரிஸ்தாத்தல், பிளேடோ முதலாயினோர் அறியாத உண்மைகளை நன்கு அறிந் துள்ளான். அவர்கட்குப் பெருமயக்கத்தைத் தந்த உலக நிகழ்ச்சிகட்கு இக்கால விஞ்ஞானம் தெளிவுடைய விளக்கந் தந்துள்ளது. இங்ஙனமிருக்க, விஞ்ஞானிகள் இவ்வுலகம் அற்புதமான தென்பாராயின், அவர் கூற்று நன்கு சிந்திக்கத்தக்க தொன்றாம். சிந்தித்தவிடத்து உண்மை புலனாகிறது. தத்துவ நெறியிற் காண்பனவற்றை விஞ்ஞான மாகக் கருதி அதற்கு விஞ்ஞான முறையில் விளக்கங் கூறப்புகுவதே அவர் செய்யும் தவறு. அதனால் அவர்கள் உலகம் அற்புதமானது என்று கூற வேண்டியவராயினர். தத்துவ ஞானக் காட்சிப் பொருள் விஞ்ஞானக் காட்சிக்கு அகப்படாமையின், விஞ்ஞானம் அதனைக் காண்டதற்குத் துணைசெய்யாதாயிற்று என்பதே அவர் கூறுவதன் கருத்தாகும். மேலும், விஞ்ஞான முறையிற் காணப்படும் கொள் கைகள் ஒரு நிலைமையனவல்லை. காலஞ்செல்லச் செல்லப் புதுக்காட்சிகளால் மாறுபடுவன, “குறைபாடு உள்ளதற்கன்றே வளர்ச்சியுண்டாவது” என்பர் திருக்கோவை யாருக்கு உரைகண்ட பேராசிரியர். மேன் மேலும் வளர்ந்து சிறத்தலால் குறைபாடுடைய விஞ்ஞானம், ஒரு முடிவு கண்டு முற்றி நிற்கும் தத்துவஞானத் தோடு இயையாதாகலின் பிரபஞ்சத்தின் அற்புத நிலைமையை விளக்காதாயிற்று.

“வந்தவாறு எங்ஙனே போமாறேதோ, மாயமாம்பெரு வாழ்வு” என்றார் நம் நாவரசர். இதன் முதற்பகுதிக்கு உரை கூறுவோர் போல, மக்களுயிர் உலகிற்கு வந்தவாற்றைக் கூறலுற்று, விண்மீன் வீழ்ச்சியும், ஞாயிற்றுத் தெறிப்பும், நிலவுலகின் தோற்றமும் பிறவும் விரியக்கூறி “இந்நிலவுலகிற்கு மக்களுயிர் வந்தது தற்செய லாக அமைந்தது என விஞ்ஞானம் கூறுகிறது”1 என்று சர்சேம்சு சீன்சு உரைத்தார், தற்செயல் விளக்கமில்லாத சொல்லாதலின், “வந்தவாறு” காண்டதற்கு விஞ்ஞானம் வலியிழந்து நிற்கிறதென்பது தெளிவாகும்.

பின்பு அவர், ஐன்சுடைன் கீசன்பர்க் திரா அக் இலமேத்தர் லூாயி-தெ-பிரேக்ஸி முதலாயினர் கண்ட பௌதிகவுலகை விளக்கிக் கூறி, முடிவில் தத்துவ ஞானமென்ற ஆழ்கடலுள் மூழ்குகின்றார். அதன்கண் பிரபஞ்சம் “கடசக்கரர் எந்திரமெனச் சுழல்வது”2 எனக் காண்கின்றார். முடிவில், இது “படைக்கப்பட்டதே” என்று தேறி, இதுவும் சங்கற்பத்தால் படைக்கப்பட வேண்டும் எனவும்3 இதனைப் படைத்தோன், ஓவியம் வல்லானொருவன் தான் தீட்டும் ஓவியக் கிழிக்குப் புறம்பே நின்று ஓவியத்தை எழுதுவதுபோல, காலம், இடம் முதலியன கடந்து நின்றே படைத்திருத்தல் வேண்டும் என இன்றை விஞ்ஞானக் கொள்கை நம்மை நினைக்குமாறு வற்புறுத்து கிறது என்ற கருத்துப்படவும் கூறிமுடிக்கின்றார்.

பிரபஞ்சவட்டமெனவும், சங்கற்பசிருட்டியெனவும். இவர் கூறுவன மேனாட்டுச் சாக்ரடீசு முதலிய தத்துவ ஞானிகட்கும் நம் நாட்டுப் பௌக்கர மெழுதிய புட்கரர் முதலிய சிவஞானி கட்கும்1 முன்னிருந்த முன்னோர்கள் கண்டனவாகும். இவை பல நூற்றாண்டுக்கு முன்பே நம் முன்னோர் கண்டு உரைத்திருப்பவும், சுற்றப்போயும் சுங்கச் சாவடிக்கே வந்தது போல, புதிய புதியவாக விஞ்ஞான நெறியில் நுணுகிச்சென்று நுணுக்கரிய நுண்ணுணர்வு காணும் ஐன்சுடன் முதலாயினோர் இந்த முடிவையே கண்டுரைக் கின்றார்கள் என்பது சர் சேம்சு சீன்சு கூறுவதனால் விளங்குகிற தன்றோ?

இனி, சூலியன் கக்சிலி என்பார் உலகில் உயிர்களின் தோற்ற வரலாற்றை யாராய்ந்து கூறிச்செல்லும் கூற்றுக்களிலும் A.H. காம்ப்டன் கூறுவனவற்றிலும், விஞ்ஞானமும், தத்துவ ஞானமும் தம்முள் மயங்கிப் பலதலையான முடிவுகண்டு அலமருவது நன்கு புலனாகும். அன்றியும், அணுவைப்பற்றிய ஆராய்ச்சி தோன்றி அவர்களது மயக்கத்தை மிகுதிப்படுத்துகிறது. பௌதிக இரசாயன அணுக்களின் கூட்டுறவால் உண்டாகும் பொருள்களினிடை யே உயிரணுக்கள் நிலவுகின்றன. இந்த உயிரணுக் கள் எங்ஙன முண் டாயின எனக்காணும் விஞ்ஞானிகள் பெருமயக்க முற்று நிற் கின்றனர். இதுகாறும் ஒரு விஞ்ஞானி யும் உயிரணு வொன்றைப் படைத்தது கிடையாது. உயிரணு வென்பது பௌதிக அணுவோடு கூடியேயிருக்கிறது. அவ்வணுவின் பௌதிகப்பகுதிக்கு வேறாக யாதும் அதன்கண் இதுகாறும் காணப்படவில்லை. பௌதிகப் பகுதியின் வேறாக உயிர்த் தன்மை அதன்பால் எங்ஙன முண் டாயிற்றென ஆராய்ந்த விஞ்ஞானிகள் ஒரு முடிவும் காணாது மயங்குகின்றனர். மேலும் அணுத்திரள்களின் இடையே, புரோ டான்சு, எலக்ட்ரான்சு நியூட்ரான்சு ஃபோட்டான்சு (Photons), என்ற அணுக்கள் காணப்படுகின்றன. இவற்றிற்கு விஞ்ஞான முறையில் விளக்கங்காண முடியவில்லை. இவ்வாறு விஞ்ஞானம் காட்டும் காட்சிகள் பல நமது உண்மைக்கே விளக்கம் புலப் படுத்தாமல் உள்ளன. இன்னோரன்னவற்றால் மயக்கமும், தத்துவ ஞானம் பண்டை நாளில் செய்த தவறுபற்றி அதன்பால் காழ்ப்பும் கொண்டு, கடவுளாகிய செம்பொருளுண்மை கண்டு மேற் கொள்ளாது Blind Evolution எனவும், Clear sighted Orthogenesis எனவும் பிறவும் சில விஞ்ஞானிகள் கூறுவது பற்றி, கற்ற அறிஞர்கள் மயங்கியொழிதல் கூடாது.

9. ஈட்டன் கில்சன் கண்ட கடவுட் கொள்கை நெறி
இனி, தத்துவ ஞானத்துறையில் பெரும் புலமை கொண்டு விளங்கிய பேராசிரியர், ஈட்டன் கில்சன் என்பார், சிவமாகிய செம்பொருள் தனது உண்மையினை உலகியல் வாழ்வில் சில காலங்களில் நமக்கு உணர்த்துகின்றது என்று கூறுகின்றார். ஒருவன் அடுக்கிவரும் இடுக்கண்களால் நெருக்குண்டு நெஞ்சு சோருங் காலத்துக் கடவுளுண்மை அவன் உணர்வில் காட்சியளிக்கிறது. அவன் தன்னந்தனி யனாய் இருக்குங்காலும், ஆழ்கடலின் ஆழமும், மால்வரையின் மாண்பும், வேனிற்காலத்து நள்ளிரவில் விசும்பிடை வயங்கும் விண்மீன் கூட்டத்தைக் காணுங்காலும், தன் வாழ்நாள் தனக்குரிய எல்லையை நெருங்குங்காலும் செம்பொருளாகிய கடவுள் உண்மை அவன் உணர்வில் தோன்றுகிறது என்று கூறு கின்றார். அவரை விஞ்ஞானிகள் இரண்டு காரணங் காட்டி மறுக்கின்றனர். முதலாவது, மக்களினம் நாகரிகமின்றி விலங்கு வாழ்வு வாழ்ந்த கால முதலே, கடவுட் கொள்கையுடையதாக இருந்து வந்தது. காலஞ்செல்லச் செல்ல மக்களினம் நாகரிகம் பெற்றுச் சிறக்கும் இந்நாளில். மனவுணர்வு விரிந்ததாயினும், அநாகரிகப் பண்பாடுகள் ஒழிந்து போயினும், கடவுட் கொள்கை ஊறியிருந்த உணர்வு தன் வாசனை போகாமல் இருக்கிறது. அதுமேற் கூறிய காலங்களில் அரும்பிப் போதாகி விரிகிறது என்பர். இரண்டாவது, அவன் இளமையில் தான் வளர்ந்த இல்லத்தில் வாழ்ந்தோர் அவனுக்கு கடவுட் கொள்கை பற்றிய கல்வி நல்கி யிருப்பர். இளமையில் அவனுள்ளத்திற்படிந்த கடவுளுணர்வு மேற்கூறிய காலங்களில் தோன்றி மலர்ந்திருக்கிறது என்பர்.

மக்கள் அநாகரிகமாய் வாழ்ந்த காலத்தில் தீ, காற்று, மழை, வெள்ளம், இடி, மின்னல், கடல், ஆறு, மலை, காடு முதலியவற்றுக்கு அஞ்சி அவற்றைத் தனித் தனித் தெய்வமாகக் கருதி வழிபட்டனர். நாகரிகம் உண்டாக உண்டாக அவை தெய்வ மென்ற உணர்வு மாறிவிட்டமையின், தெய்வவுணர்வு அவர்கள் உள்ளத்தே ஊறிவிட்டதென்பது பொருந்தாது. மேலும் அநாகரிக வாழ்வில் தெய்வவுணர்வுக்கே இடம் இல்லையாதலால். அப்போது தெய்வவுணர்வு உண்டாகி யிருந்ததென்பதே பொருந்தாது என முதற்கூறு மறுக்கப் பட்டது. சில இல்லங்களில் இளமையில் சமயக் கல்வி தரப்படுவதே யில்லை; அங்ஙனமிருப்பவும், அவ்வில்லத்திற் பிறந்து வளர்ந்தோர் கடவுட் கொள்கை யுடையரா யிருப்பதையும், சமயக்கல்வியும் சமயச் சூழ்நிலையுமுடைய இல்லங்களிற் பிறந்து வளர்ந்தோர் உள்ளத்தில் கடவுட் கொள்கை இல்லாதிருப்பதையும் நாம் காண்கிறோம். ஆகவே, விஞ்ஞானிகள் கூறும் இரண்டாவது மறுப்பும் தகர்ந்து போகிறது.

10. தத்துவ ஞானமும் சமய ஞானமும்
இனி, தத்துவ ஞானிகளுள் மேனாட்டவர் பலர் தத்துவ ஞான நெறியினின்று சமய நெறியை நீக்கி விடுகின்றனர். இது தத்துவ ஞானிகள் செய்யும் பெருந்தவற்றுக்குள் தலையாயது. பண்டை நாளில் விஞ்ஞான வளர்ச்சிக்குக் கேடு சூழ்ந்து வந்த தத்துவஞானம், இடைக்காலத்தே சமய நெறியை விலக்கிப் புறக்கணிக்கத் தலைப் பட்டது.

தத்துவ ஞானம் கடவுளாகிய செம்பொருள் ஒன்று உண் டென்று கூறுமே தவிர, அப்பொருளின் பொதுவியல்பு சிறப்பியல்பு களைக் கூறாது என்பர். சிலர் வால்டேர் கூறுவது போலக் கடவு ளாகிய செம்பபொருள் ஒரு கடிகாரம் செய்வோனை யொக்கும் எனவும், தச்சனையொக்கும் எனவும் கூறுவர். இவ்வுவமையைக் கொண்டு மேனாட்டுத் தத்துவ ஞானிகள் வேறு முடிவு காண்பதும் உண்டு. அஃது ஈண்டு வேண்டுவதன்று. கடிகாரம் செய்வோ ரெனவும் தச்சரெனவும் மக்களில் தனிப்பிறவி கிடையாது. பிறப் பொக்கும் எல்லாவு யிர்க்கும், செய்தொழிலால் சிறப்பு வேறுபடும். கடிகாரம் செய்ய வல்லவன் கடிகாரம் செய்வோனாவன். அவ்வாறே கடவுளாகிய சிவமும் உலகைப் படைக்க வல்லதாம். “எப்பொருளும் ஆக்குவான் ஈசனே” எனச் சேக்கிழார் கூறுவது காண்க. உண்மை யான தத்துவஞானம் சிவபரம் பொருளின் உண்மையேயன்றி இருப்பையும் கூறும். இருப்புக்குரிய அதனது பொருண்மை மக்கள் அறிவைக் கடந்து நிற்கிறது. அதனால் அது கடவுள் எனப்படுகிறது. எல்லா இயக்கங்கட்கும் ஏதுவாதலின் இயவுள் எனக் குறிக்கப்படுகிறது. அறிவியக்கங்களைக் கடந்து நிற்பதால் தத்துவ ஞானம் அதனைக் காண்டற்குத் தடைப்படுகிறது. அறிவைக் கடந்த கடவுள் நிலை சிவமெனவும், இயக்கங்கட்கு எல்லையாகிய இயவுள் நிலை சத்தியெனவும் சைவநெறிக்குரிய தத்துவ ஞானம் கூறுகிறது.

எங்கே தத்துவஞானம் செல்லமாட்டாது தடைப்படு கிறதோ அங்கே சமயநெறி தொடங்குகிறதென ஈட்டன் கில்சன் கூறு கின்றார். சிவ தத்துவ சத்தி தத்துவங்களில் மக்களுடைய தத்துவ ஞானம் சென்று எட்டுதல் கூடாமை யின், எட்டிதடைப்படும் சதா சிவ தத்துவம் சமய வழி பாட்டுக்குத் தொடக்கநிலையாகிற தென்பது சைவ சித்தாந்தி கள் நன்கறிந்தது.

சமயம் தொடங்குமிடத்துக்குக் கொண்டுசெல்லும் நெறி ஒன்றேயாகும். அறநெறி செல்லுவோனை, அது கடவுளாகிய செம்பொருள் உண்மையினையுணர்த்தி அதன் இருப்பைப் புலப் படுத்தி, அதன் ஆக்கமும் தன்மையையும் நோக்கவிடாது அதனது “அற்புத நிலை” யிற் செலுத்தி விடும். இந்த நெறியைக் காண்பது அரிதன்று; எளிது. ஆனால், அதனைப் பின்பற்றி விடாது செல்பவர் மிகவும் அரியராவர்.

இனி, விஞ்ஞானமும், தத்துவ ஞானமும், சமயவுணர்வும் ஒன்றினொன்று தொடர்புற்றுச் சிறந்து நிற்பது காணத்தக்கது. இவ்வுண்மையைக் கண்டு வைத்தும், விஞ்ஞானிகளிற் சிலர் விஞ்ஞானங் காட்டும் புதுமையிலும் அழகிலும் மூழ்கித் தம்மை மறந்து கடவுட் கொள்கை நெறியில் கருத்தைச் செலுத்தாரா கின்றனர். இவ்வாறே தத்துவ ஞானிகளிற் சிலர், உலகக் காரண முதற்பொருளைச் சிந்திக்கும் சிந்தனையில் ஆழ்ந்து தத்துவ ஞானமும் சமயநெறியும் ஒன்றுபடும் இடமுண்டென உணர்கின்றனர். உணர்ந்தும், மேனாட்டுத் தத்துவஞானிகள் பலர், அவை எங்கே எப்படி ஒன்றுபடு கின்றன என்பதைக் காணாராய், சமயத்தைத் தமது தத்துவ நெறியினின்றும் வேறாகப் பிரித்துக் கொள்கின்றனர். கொள்ளுமிடத்தும், பாசுகல் முதலியோரைப் போலச் சமயத்தைக் கொண்டு, தத்துவஞான நெறியை விலக்கு வோரும், தத்துவ ஞானத்தைக் கொண்டு சமயத்தைக் கைவிடுவோரும் உளராயினர். இந்நிலையில் சில்சன் என்பார் முற்போந்து, “உண்மையை ஏன் ஒதுக்கவேண்டும்? தத்துவ நெறியிற் காணப்படும் கடவுளே சமய முதற்கடவுளாவர் என்று தெரிந்து கொள்ளவேண்டும்” என்று அறிவுறுத்து கின்றார்.

இவ்வாறு தத்துவ ஞானமும் சமய ஞானமும் ஒன்றுக் கொன்று, படி முறையில் இருப்பதுகண்டே மெய்கண்ட தேவர் தாமருளிய சிவஞான போதத்தில் முன் ஆறு சூத்திரங் களால் தத்துவ ஞானமும், பின்னாறு சூத்திரங்களால் சமய ஞானமும் வழங்கியுள்ளார். மேனாட்டவர் இதுகாறும் தத்துவ ஞானத்தையும் வேறு வேறு வைத்தே பேசி வந்தனர்; வருகின்றனர்; தத்துவ ஞானத்தின் முடிவிடம் சமய ஞானத் தொடக்கம் என்று கண்டு, இப்போது தான் இரண்டையும் ஒன்றாகக் கொள்ளும் முயற்சியைச் செய் கின்றனர்.

நம் தமிழ் நாட்டில் திருமூலர் கால முதலே இரண்டும் ஒன்றாய்ப் பிரிப்பறப்பிணைந்து வந்திருக்கின்றன. இடைக் காலத்தே முதலில் சமய ஞானமும் பின்னர்த் தத்துவ ஞானமும் சிறப்பு நிலை பெற்றன. ஞானசம்பந்தர் முதலிய சமயகுரவர் காலத்தில் சமய ஞானமும், மெய்கண்டார் முதலிய சந்தான குரவர் காலத்தில் தத்துவ ஞானமும் சிறப்புற்று நின்றன என்பது வரலாறறிந்தோர்க்கு தெரிந்த செய்தியாகும்.

மேலே கூறிய விஞ்ஞானம், தத்துவ ஞானம், சமய ஞானம் என்ற மூன்றும் சைவ சித்தாந்தத்திற் கூறப்படும் பாசஞானம், பசுஞானம், பதிஞானம் என்ற மூன்றன் கண்ணும் அடங்குகின்றன. பசு, பாச ஞானங்கள் ஓரெல்லை யடைந்ததும், தடைபட்டு நிற்பதை மேனாட்டறிஞர் அறிந்து கூறுகின்றனரென்று மேலே கூறினாம். இதனை முன்கூட்டியறிந்த தமிழ்ச்சான்றோர் “பாசஞானத் தாலும் பார்ப்பரிய பரம்பரன்” என்று கூறியிருப்பதைக் காண் கின்றோம்.

11. சைவசித்தாந்தமும் நம்நாட்டு ஏனை
வைதீக சித்தாந்தங்களும்
இனி, நம் சைவசித்தாந்தம் சிவம், உயிர், உலகு என்ற மூன்றனையும் அடிப்படையாகக் கொண்டது என முன்பே கூறினோம். சிவத்தைப் பதியென்றும், உயிரைப் பசு என்றும், உலகைப் பாச மென்றும் வழங்குவதுண்டு. பதிப்பொருள் சிவமாகிய செம்பொரு ளாகும். பசுவென்பது உயிர்; பாசமென்றது மலமும் வினையும், உயிர் நிற்கும் உடல், கருவி, உலகு நுகர்ச்சிகளும் என்றவற்றின் தொகுதி; இதுபற்றியே சிவாகமங்கள் இவற்றைப் “பாசசாலம்”* என்று குறிக்கின்றன.

பண்டை நாளில் இங்கே பொருள்களைப்பற்றி நம் நாட்டுத் தத்துவ ஞானிகள் விரிந்த ஆராய்ச்சியைச் செய்திருக்கின்றனர். ஆராய்ச்சியால் அவரவர் கண்ட கருத்துக்களுக் கேற்ப வேறுபாடு களும் அவரிடையே உண்டாயின. அவ்வாற்றால் மீமாஞ்சை, யோகம், வைசேடிகம், நியாயம், சாங்கியம் முதலிய பலநெறிகள் சமயதத்துவப் பிரிவுகளாக நிலவுகின்றன. மீமாஞ்சை, பூருவமீ மாஞ்சை உத்தரமீமாஞ்சை என இரண்டாய் பூருவம் கன்ம காண்டம் எனவும், உத்தரம் ஞானகாண்டம் எனவும் கூறப்படும். இந்த உத்தர மீமாஞ்சையை வேதாந்தமென வழங்குவது பெருவழக்கு.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே நம் தமிழகத்தில், சைவத்தோடு முன்னே கூறிய சாங்கியம், நையாயிகம், வைசேடிகம், மீமாஞ்சகம், பௌத்தம், உலகாயதம் என்ற சமயங்கள் நிலவின என்று மணிமேகலை கூறுகிறது. இச்சமயங்களிற் பலவும் இப்போது இறந்து போயின; எனினும் அவ்வவற்றின் நற்கூறுகள் வழிவழியாக வந்துள்ளன. இவற்றுள் பௌத்தம், உலகாயதம் ஒழித்து ஒழிந்த எல்லாம் வேதவழக்கொடுப்பட்டன என்பர். நம் சைவத்தையும் “வேதப் பயனாம் சைவம்” எனச் சேக்கிழார் குறித்தருளுகின்றார். இக்காலச் சமயதத்துவ ஆசிரியர்கள், மேலே பௌத்தம் முதலாகக் கூறியவற்றொடு ஒப்ப நம் சைவசித்தாந்தத்தை ஒரு தத்துவ சமய மாகக் கருதுவதில்லை. இந்திய நாட்டுத் தத்துவ சமயங்களைப்பற்றி விரித்தும் தொகுத்தும் நூலெழுதும் ஆசிரியர்கள் எவரும், மேலே கூறியவற்றோடு ஒன்றாகச் சைவசித்தாந்தத்தை இதுகாறும் எழுதாமையே இதற்குப் போதிய சான்று. பல்கலைக் கழகங்களில் சைவசித்தாந்தம் ஒரு தத்துவ ஞான சமயமாக வைத்து ஆராய்வதே இல்லாமல் இருந்து வந்தது. இப்போதுதான் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அதனைச் செய்ய முன்வந்துள்ளது.

இந் நிலையில் சைவ சித்தாந்தத்துக்கும் ஏனைச் சித்தாந்தங் கட்குமுள்ள உயர் வொப்புமைகளை நாம் நினைவு கூர்வது தக்கது. இறைவன், உயிர், உலகிற்கு முதற் காரண மாகிய மாயை என்ற மூன்றும் அனாதிநித்தியப் பொருள்கள் எனவும், இறைவனாகிய சிவம் தன் சத்தி சங்கற்பத்தால் மாயையைக் கலக்கி உடல், கருவி, உலகுகளாகச் செய்வது படைப்பெனவும், உயிர்கள் அனாதியே மலத்தொடக்கு உடையவை யெனவும், மலத்தின் மறைப்பு நீங்குதற் பொருட்டு உடல் கருவிகள் படைக்கப்படுகின்றன எனவும், உயிர்கள் பல எனவும், பல வெனவே உயிர்கள் ஒன்றினொன்று வேறுபாடு டையவெனவும், வேறுபாட்டுக் கேற்பப் பிறப்பு வேறு படுகின்றன வெனவும், உயிர்கட்கு அறிவு, விருப்பு, தொழில் என்ற மூன்று ஆற்றல் உண்டெனவும், அவற்றைத் தொழிற் படுத்தி உண்மை ஞானம் எய்துதற் பொருட்டே உலகத் தொடர்பு உயிர் கட்குண்டாகிறதெனவும், இங்ஙனம் உயிர் கட்கு உதவும் வகையில் சிவபரம்பொருள் உயிரோடு உடனாய் இருக்கின்றது எனவும், நம் சைவசித்தாந்தம் கூறுகிறது. இவையும் இவற்றோடு இயைபுடைய பிறவும் நீங்கள் அறிந்தவை யாதலால் இவற்றை ஞாபகப்படுத்தி மேற் செல்லுகின்றேன்.

மேலே கூறிய நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம், மீமாஞ்சை, முதலியவற்றுள் மீமாஞ்சை யொழிய ஏனைய வெல்லாம் உயிர்கள் அனாதிநித்தமென்றும் பல வென்றும் கூறுவன; இவ்வுல கிற்கு முதற்காரணம் பிரகிருதி மாயையென யோகரும், சாங்கி யரும் கூறுவர்; அணுவை முதற்காரணமென வைசேடிகரும் நையாயிகரும் கூறுவர், இம் முதற்காரணங்களைக் கலக்கித் தொழிற்படுத்தி உடல், கருவி, உலகமாக ஆக்கிய வகையில் இறைவன் நிமித்த காரணனாகின்றான் என்னும் கருத்தில் இவர்கள் பலரும் ஒத்த கருத்துடையராகின்றனர். இறைவன் நிமித்த காரண மாய் நின்று உடல் கருவி உலகுகளைப் படைத்தற்குக் காரணம் கூறுமிடத்து, உயிர்கள் தம் தூய நிலையினின்றும் நீங்கிப் பிரகிருதி யோடு தொடர் புற்றுக் கட்டுற்றன வெனவும், அக் கட்டினின்றும் நீங்கி வீடுபெறு தற்கே இப்படைப்பு நிகழ்வதாயிற்றெனவும் இத்தத்துவ சமயங்கள் கூறுகின்றன. கேவலத்தில் தூயவாயிருந்த உயிர்கள் பிரகிருதி தொடர் புற்றதற்கு அச்சமயங்கள் ஏதுக்காண மாட்டாவாயின; அதனையாராய்ந்து கேவலத்தில் மலத்தொடக்கு காரண மெனக் கண்டது நம் சைவம், உயிர்கள் செய்யும் வினைப் பயன்கள் அறிவில்லாதனவாதலின், அவற்றை உயிர்கள் நுகரப் பண்ணுவது இறைவன் செயல் என நையாயிகர் முதலியோர் கூறுவர். உயிர்கள் உணர்வுடையன வாதலின் அவைதாமே தம் வினைப் பயன்களை நுகரலாமே என்றெழும் தடைக்கு வைசேடிகர் ஆன்மா ஒடுக்கத்தில் செயலற்றுக் கிடக்குமென்றும், பிறர் பிறவாறும் கூறினாராக, மலத்தால் மறைப்புண்டு அறிவு, விழைவு, செயல்கள் கட்டுற்று நிற்கும் உயிர், மலத்தால் மறைப்புண்ணும் சிறுமையுடை யதாகலின், சிவபரம் பொருள் போல் வினைக்குரிய பயனைக் காணவும், கண்டு நுகரவும் இயலாதாதலின், சிவபரம்பொருள் உயிர் செய்யும் வினைப் பயனைச் செய்தவுயிரை நுகரப்பண்ணுவர் எனச் சைவம் கூறுவதாயிற்று. இவ்வாறு பிறசமயங்களால் விளக்க முறாத தத்துவப் பகுதிகள் பல சைவசித்தாந்தத்தில் ஐயந்திரிபற விளக்கப்படு கின்றன.

இறைவன் ஒருவனைத்தவிர, உயிர்களும் உலக முதற் காரணங் களும் அவனைப் போல் அனாதிநித்தமாக இருப்பவை என்பது முறையன்று; அஃது இறைவனது எல்லாம் வல்ல தன்மைக்கு இழுக்கு என்று கொண்டு, இறைவனே எல்லாவற்றிற்கும் முதற் காரணமும் நிமித்த காரணமுமாவன் என்றுகூறும் தத்துவ சமயங் களுமுண்டு. ஒரு காரணத்திலிருந்து இரண்டு மாறுபட்ட இயல்பு டைய காரியங்கள் பிறவா என்ற முறையும் பிறவும் அடிப்படை யாகக் கொண்டு அக்கொள்கையை ஏற்காது விலக்கும் வகையில் சைவம் சிறந்து நிற்கிறது. இல்லதினின்றும் உலகும், உயிர்களும் தோற்றுவிக்கப்பட்டன என்னும் சமயமும் உண்டு. இல்லது தோன்றாது, உள்ளதே தோன்றும் என்னும் சற்காரிய முறையால் சைவம் மேன்மையுறுகிறது. வன்மை யென்பது படைப்ப தொன்றுக்கே உரியதன்று; தொழிற் படலும் பயனுகர்தலும் ஆகிய செயல் வலியில்லாதவற்றுக்கு வலிதந்து தொழிற்படுத்துதல், பயன் நுகர் வித்தல் முதலியவற்றுக்குச் சிறப்பாக உரியது.

இவ்வாறு பல வகையாலும், அறிவாராய்ச்சிக்கு ஒத்த நிலையில் மேன்மையுற்றுத் திகழும் சைவசித்தாந்தம் நம் நாட்டில் நன்கு பரவியில்லை. சிவனைவழிபடும் சைவருள் சைவமறிந்தவர் மிகவும் அருகியேயுள்ளனர். சைவ நெறியை நாட்டில் பரப்பும் வகையில் சைவ அறிஞர்களும் சைவ அறநிலையங்களும் கருத்தில் லாது போயின என்பதை முன்னரே கூறினேன்.

12. சைவசித்தாந்த நூல்களும் செய்தற்குரிய பணியும்
சைவசித்தாந்தத்தை விளக்குதற்கு மெய்கண்ட நூல்களும் பண்டார சாத்திரங்களும் தமிழில் உள்ளன. அவை பெரும்பாலும் செய்யுள் வடிவில் இருக்கின்றன. இக் காலத்தில் தோன்றி நிலவும் செய்யுட்களையும் உரைவகைகளையும் காண்போமாயின், மேலே காட்டிய மெய்கண்ட நூல்களும் பிறவும் எத்தனையோ வகையில் எவ்வளவோ விரிவாக எழுதப்படவேண்டும் என்பது தெளிய விளங்குகிறது. மறு மலர்ச்சி நடையும் புதுமுறை வெளியீடும் வேண்டப்படு கின்றன. முன்னையினும் படிப்போர் தொகையும், படிப்பிக்கும் கழகங்களும் இப்போது பெருகியிருத்தலால், இவற்றிற் கேற்ப, சித்தாந்த சைவ நூல்கள் பெருகி வெளியாதல் வேண்டும் என்பது ஆண்டு விழாவிலும் அறிஞர்களால் வற்புறுத்தப்பட் டிருக்கிறது.

புதுமுறையில் இவையேயன்றி இவைபோலும் பிறவும் செய்யவேண்டுமென்பதில் யான் கருத்து வேறுபாடு உடையே னல்லேன். ஆயினும் நம் தமிழகத்தில் சில பல நூற்றாண்டுகட்கு முன் நிகழ்ந்து போந்த சமயப்பணிகளை மீளவும் உயிர்ப்பித்து எழச்செய்ய வேண்டுமென்று கூறி விழைகின்றேன். இன்றைய நிலையில் அப்பணி மிகவும் இன்றியமையாதது. அதனால் நம்ம வரிடையே சமயத்துறை பற்றிய கருத்து வேற்றுமை நீங்குமென்று உறுதி கூறலாம்.

13. சமயப்பணிக்குரிய இன்றை சூழ்நிலை
இப்போது நம்மிடையே சாதிபற்றியும், பொருள்நிலை பற்றியும், அரசியற் கருத்துப் பற்றியும் பல வேறு பிரிவுகள் உண்டாகியிருக்கின்றன. சாதி வேற்றுமையும் சமய வேற்றுமையும் தாண்டவமாடும் நம்மிடையே, கல்வி வேற்றுமையும், கட்சி வேற்றுமையும் புகுந்து புதுப் புது வேற்றுமைகளை மிகுக்கின்றன. இவ் வகையால் பிளவு பெருகுகிறதேயன்றி, ஒற்றுமை காண்பது அரி தாகிறது. பண்டை நாளில் சாதி வேற்றுமையூடே சமயமே ஒற்றுமை உண்டு பண்ணிற்று. இன்று நாம் அதனை மறந்தோம்.

இன்று, நம்முடைய இளைஞர்கள் சமயத்துறையில் கருத்து வேறுபடுகின்றனர். சமயநிலையங்களில் நிகழும் நிகழ்ச்சிகளிற் குற்றங் கண்டு கூறுகின்றனர். சில நடை முறைகளை வேண்டா வென மறுக்கின்றனர் சில. அரிய கருத்துக்களை ஆராய்ச்சிக் கண்கொண்டு கண்டு கேட் கின்றனர்; அவர்களைக் காணவே நம்மவர் பலர் அருவருக் கின்றனர். பலர் அவர் கருத்தைப் புறக் கணிக்கின்றனர். அவர்கள் அவ்வாறு மாறுபடுவதற்கும் வேறுபடு வதற்கும் வினாவிற்கும் காரணம் யாதெனக் கண்டறிந்தவர் மிகச் சிலரே இருப்பர். அவ்விளைஞர்க்கு நம் குடும்பங்களிலோ, கல்லூரிகளிலோ சமய நிலையங்களிலோ சமயக்கல்வி தந்த துண்டா? சமய நூற் கருத்துக்களையேனும் நாம் கற்பித்த துண்டா? அவர்களை வைதுவிடுவதாலோ, புறக்கணிப் பதாலோ, அருவருப்ப தாலோ சமயத்துறை பண்பட்டு விடுமா? சமயவறிவு வந்து விடுமா? என்பன போன்றவற்றை நாம் நினையாது போயினோம். பிரிந்தேகும் கூட்டத்துட் கூட்டமாக அவர்களைப் பிரிப்பதுதானே செய்திருக் கின்றோம்!

நாம் பிரிந்தது போதும். இனி ஒன்றுபடுவோம். நம்மை ஒன்றுபடுத்தற்குச் சமயவுணர்வும் சமயவொழுக்கமும் பெருந்துணை செய்யும். சமயவுணர்வு ஒழுக்கங்களுக்குச் சமயக் கல்விவேண்டும் இன்றைய அரசியல்நிலை சமயக் கல்வி தருதற்கு ஒருப்படாது; அரசியல் அமைப்பு முறையினை அறிந்திருக்கின்ற நாம், சமயக் கல்வி வழங்குமாறு அரசியலாரைக்கேட்பதும் அறமன்று; முறையு மன்று. ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற நாவரசின் நன்மொழி உள்ளத்திற்பதிய வேண்டும். நம் கடன் பணிசெய்து கிடப்பதே என அத்திரு மொழி நம் வாய்பாடாதல் வேண்டும்.

14. சமயப்பணி விளக்கம்
சமயப்பணி யென்பது யாது? இன்று நம்மிடையே சமயப்பணி யென்பது மிகவும் குறுகிய எல்லைக்கு வந்து விட்டது. தீக்கை செய்து கோடலும், அனுட்டான சிவபூசைகள் செய்வதும், திருக் கோயில்களில் நாட்பூசனை ஆண்டுவிழாச் செய்வதும், செல்வமிக்க போது திருக்கோயில் திருப்பணி செய்வதுமே சமயப்பணிகளாகக் கருதப்படுவன வாயின. இவை பொதுவாக வேண்டுவன எனினும் சிறப்பாக உயிர்கட்கு வேண்டும் பணிகளைச் செய்வதே சமயப் பணியாகும். ஈசனுக்கு அன்பு செய்யவேண்டும் என்பது சமய நூல்கள் வற்புறுத்தும் பேரறமாகும். ஈசனுக்கு அன்பு செய்வதாவது அவனுடைய அடியாரிடத்து அன்பு செய்வதாகும். அடியாராவார் மக்களுயிர் அனைவருமாவார். ஆகவே மக்களுயிர்க்குச் சாதி, நிற, அரசியல், சமய வேற்றுமை கருதாமல் நலன்களைச் செய்வது அடியவர்பால் அன்பு செலுத்துவதாகும். எப்பொருளையும் ஆக்குவோன் ஈசன் எனவும், அப்பொருளை ஆளுமுகத்தால் உய்திபெறும் மக்கள் அடியராவர் எனவும் சேக்கிழார் பெருமான், ஞானசம்பந்தர் அறிவுறுத்தியதாக எடுத்துரைப்பது சைவர்கள் அறிந்ததாகும். மக்களுயிர்பால் உண்டாகும் அன்பு பின்பு எல்லா வுயிர்க் கண்ணும் செல்லும், எவ்வுயிர்க்கும் அன்பு செய்பவரே தம்முயிர்க்கும் நலம் செய்பவராவர். இதனை “ஈசனுக்கன் பில்லார், எவ்வுயிர்க்கும் அன்பில்லார் எவ்வுயிர்க்கும் அன்பில்லார் தமக்கும் அன்பில்லார்” எனவும், இத்தகைய அன்பு செய்யாதாரைப் பிணங்கள் என்று ஏசுவாராய், “பேசுவது என் அறிவிலாப் பிணங்களை” எனவும் அவர்களை, “நாம் இணங்கின், பிறப்பிலும் இறப்பினிலும் பிணங்கிடுவர்” எனவும் அருணந்தி சிவனார் அறைந்து கூறுவது நினைவு கூறத்தக்கது. இவ்வாறு எவ்வுயிர்க்கும் அன்புசெய்து வாழ்வதே “வையத்து வாழ்வாங்குவாழும் வாழ்வாகும்; இவ்வாழ்வு டையாரே “வானுறையும் தெய்வமாவர்” எனத் திருவள்ளு வரும், “அன்பர் பணிசெய்ய எனை ஆளாக்கி விட்டு விட்டால், இன்ப நிலை தானே வந்தெய்தும்” எனத் தாயுமானாரும் விளக்கியருளினர். இத்தகைய சித்தாந்த வாழ்வு நம்மிடையே நிலவுகிறதா என்பதை இறைவன் திருமுன் நின்று நம் நெஞ்சை நாமே ஆராய்ந்து தெளிதல் வேண்டும்.

மக்களுயிர்க்கும், எவ்வுயிர்க்கும் அன்பு செய்தல் வேண்டும் எனின், அதனை எப்படிச் செய்வது என்ற வினா எழும். உயிர்க்குப் பணிசெய்வதென்பது உயிர்க்கு உறுதி பயக்கும் கல்வியறிவும், உடற்கு நலன் பயக்கும் உணவும் மருந்தும் உதவுதல் ஆகும்; இதுவே அன்பு செய்வார் செய்யும் உயிர்ப் பணியாகும்; இதனைச் செய்யும் சமயமே இந்நாளில் உலகமெங்கும் பரவியிருக்கிறது.

15. முன்னாளில் சைவம்புரிந்த சமயப்பணி
இப்பணியை நம் சைவம் செய்ததுண்டா? இதனைச் செய்வது சமயப்பணியென நீங்களே கூறுகின்றீர்களா? என்று கேட்கலாம். இக்கேள்வி எழுதற்குக் காரணம் சைவ சமய வரலாறு நம் நாட்டில் பரவாமையே என்று கூறலாம். நெடுங்கால எல்லைக்குப் போக வேண்டா. பதினோராம் நூற்றாண்டின் இடையிலே சோழ வேந்தருள் வீரராசேந்திரன் என்பான், கங்கைகொண்ட சோழபுரத்தி லிருந்து ஆட்சிபுரிந்து வருகையில் நாட்டில் மழையில்லாமையால் பஞ்ச முண்டாயிற்று. அக்காலத்தே பெருந்துன்பத்துக் குள்ளான வர்களில் தஞ்சை மாநாட்டில் ஆலங்குடிப் பகுதியினராவர். அப்போது ஆலங்குடிச் சிவன் கோயிலார் 1011 கழஞ்சு பொன்னும், 464 பலம் வெள்ளியும் ஊரவர்க்குக் கொடுத்து, உணவுக்கும் விதைக்கும் நெல். பெற்றுக்கொள்ளுமாறு உதவினர் என அவ் வேந்தனுடைய கல்வெட்டொன்று கூறுகிறது. 1செங்கற்பட்டு மாநாட்டில் வாலாசாபாத்துக்கு அண்மையில் பாலாற்றங்கரையில் திருமுக்கூடல் என்னும் ஊர் ஒன்று உளது. அவ்வூரில் பெருமாள் கோயிலில் சனநாத மண்டபமென ஒரு மண்டபமுண்டு. அதன் கண், மருத்துவச் சாலையொன்றும் வேதம், சரித்திரம், இலக்கணம் முதலியன கற்பிக்கும் கல்லூரியொன்றும் இருந்தன. கல்லூரி மாணவர்க்கு உறையுளும், உணவும், சனிக்கிழமைதோறும் எண் ணெயும், நாளும் இரவில் விளக்கெரிக்க எண்ணெயும் கோயில் தந்து உதவிற்று. மருத்துவச் சாலையில் பதினைந்து படுக்கைகள் இருந்தன. மருத்துவர் ஒருவர் இரணவைத்தியர் ஒருவர், மருந்து செய்து கொடுப்போர் இருவர், சிகிச்சைமகளிர் இருவர், பொதுப் பணி செய்வோன் ஒருவன் இருந்தனர். அவர்க்கு ஓராண்டுக்குரிய மருந்து வகைகளுள் கோமூத்திர அரிதகை என அரிதகை வகை களும், கண்டீரம், பலா கோரண்ட தையிலம், முதலிய தயில வகைகளும் வில்வாதி கிருதம், மண்டூகரவடகம் முதலிய வச்சிர கல்பம், கலியாண லவணம் ஈறாகப் பல மருந்து வகைகள் அளிக்கப் பட்டன என அக்கோயில் கல்வெட்டான்று1 கூறுகிறது. திருக் கண்ண புரத்துக்கருகிலுள்ள திருவிராமனதீச்சுரம் என்னும் கோயி லார், தங்கள் கோயிலுக்கிருந்த 50 வேலி நிலமும் நாளடைவில் குறைந்து போகவே, “கோயில் காரியம்” குன்றிப்போகக் கண்டு, தில்லைப் பெருங்கோயில் பேரவை மாகேச்சுரர்க்கு விண்ணப்பம் செய்துகொண்டனர். அவர்கள் உண்மைதேர்ந்து, சோழமண்டலம், பாண்டி, கொங்கு மண்டலம், தொண்டை மண்டலம், நடுநாடு என்ற தமிழ் மண்டலத்திலுள்ள சிவன் கோயில்களுள் 10 வேலிக்கு மேற்பட்ட கோயில்கள் ஆண்டொன்றுக்கு ஒரு கல அரிசியும், மற்றவை ஒரு தூணி ஒருபதக்கரிசியும் இராமன தீச்சரத்துக்குக் கொடுக்க வேண்டுமெனப் பணித்தனர். இது திரிபுவன சக்கர வர்த்தி இராசராச சோழன் காலத்துப் பதினாறா மாண்டில் நடந்தது3 இவ்வாறு சிவன் கோயில்கள் நடத்திய செந்தமிழ்ச் சைவப்பெருமக்கள் கல்வியும் உண்டியும் மருந்தும் குருடர், முடவர் அனாதைகளான பெண்டிர் முதலியோருக்கு உறையுள் தந்து உடற்கு உணவும், உயிர்க்குக் கல்வியும் தந்து சமயப் பணி புரிந்துள்ளனர். இவற்றுக்குப் பல நூற்றுக்கணக்கான கல்வெட்டுக்கள் சான்று பகர்கின்றன. இச் சமயப்பணிகளை இன்று நம் சமய நிலையங்கள் புரிகின்றனவா? இல்லை யென்பதை நாம் எல்லோரும் அறிவோம். இப்பணிகளைக் கூடிய அளவில் புரிந்தவரும் கிறித்துவ சமயத்தவரிடையோ இசுலாம் சமயத்தவரிடையோ சமய வகையில் கருத்து வேறுபாடு கொண்டு பிணங்கிப் பிரிந்து நிற்பவர் உண்டா? நம் சமயத்தவரிடையே இருப்பது போல அவ்வளவு பெருந் தொகையினராக உளரா? இவற்றை நம் சமய நிலையங்கள் எண்ணிப் பார்க்கின்றனவா? இது காறும் போனது போகட்டும். இனியேனும் இச் சமயப் பணிகளைப் புரிவதற்கு நம்மவர் கருத் தூன்றுதல் வேண்டும்.

16. சைவத்திருமுறைகளும் சைவ சமய நிலையங்களும்
இறுதியாக ஒன்று கூறி என் முன்னுரையை முடிக்கின்றேன். நம் நாட்டுச் சிவன்கோயில்களுள் மிக்க செல்வச் சிறப்பும் திருப் பணிச் சிறப்புமுடைய கோயில்கள் சிலவாகும். அவை அச் சிறப்புடையன வாயிருத்தற்குக் காரணம், சமய குரவர்களான திருஞான சம்பந்தர் முதலியோரால் பாடப் பெற்றதேயாகும். செட்டிநாட்டுச் செல்வமக்களால் திருப்பணி செய்ய பெற்றவை அனைத்தும் திருமுறைப் பாராட்டு பெற்றவையேயாகும். சுருங்கச் சொல்லுமிடத்து இச்சிறப்பும் செல்வமுடைய திருக்கோயில் கட்கு அச்சிறப்பும் செல்வமும் தந்தவை திருமுறைத் தேவாரத் திருப் பாட்டுகளே யாகும் இத்திருமுறைத் திருப்பாட்டுக்களை நாடோறு இறைவன் திருமுன் ஓதவேண்டுமென ஒவ்வொரு திருகோயிலிலும் நம் முன்னோரால் நிவந்தங்கள் விடப்பட்டன. முன்னணியில் ஓதப்பட வேண்டிய திருமுறைகள் இப்போது எங்கே உள்ளன? சிவபரம்பொருளைச் செந்தமிழில் வழிபட்ட சைவர்கள், இன்று அந்த மொழியில் தம் வழிபாடைச் செய்கின்றனரா? ஞான சம்பந்தர் முதலிய சைவ சமய குரவர்கள் வழிபட்ட தமிழ், இன்று சைவ சமய நிலையங்களில் தன் சிறப்பிழந்து ஓர் ஒதுக்கிடத்தே ஒதுகிக் கிடக்கின்றது. தில்லைப் பெருங்கோயிலில் மண்ணாளு வேந்தன் வந்து மனங்கனிந்து கண்டுவணங்கிப் போற்ற தக்க நிலையில் இருந்த திருமுறைத் தேவாரம், செந்தமிழ் சைவ நன்மக்களால் சிவன் கோயில்களில் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்த இழி நிலை ஒழிய வேண்டும்.

இன்று அரசியலவையில் ஆராயப் பெற்றுவரும் இந்து அறநிலையச் சட்டத் திருத்தம் வந்ததும், அதன்கண், சிறந்த நிலையில் இருத்தற்குரிய திருமுறைகள் இடம் பெறாமையை நம்சைவர்கள் காணவே இல்லை. திருத்தம் வழங்கிய சைவ நன் மக்கள் திருமுறைகள் முதலிடம் பெற வேண்டும் எனச் செப்பா தொழியினும் எழுத்தில்கூட எழுதினாரில்லை “வேத நெறி தழைத் தோங்க” வேத பாராயணம் குறிப்பிடப் பட்டது போல, “சைவத் துறை விளங்க”, நம் சைவ திருமுறைகள் குறிக்கப்படவேண்டுமென நம்நாட்டு பத்திரிகைகள் எல்லாவற்றிற்கும் எழுதினோம்; அவற்றை அவை வெளியிடாமலே இருட்டடிப்புச் செய்தன. தமிழ் நாட்டுத் தமிழ்க் கோயில்களில் தமிழ்த் திருமுறைகட்கு இடந்தர வேண்டு மென அடிபணிந்து கையேந்தி நிற்பது தமிழனுக்கு மானக்கே டல்லவா என நண்பர் பலர் அறிவுறுத்தினர், சைவர் பலர் சமய நிலையங்களைப் பாதுகாப்பவர் போலப் பல கூறக் காண்கின் றோமே யொழியத் தமிழ்த் திருமுறைகட்குச் சைவத் திருக்கோயில் களில் முதலிடம் தரவேண்டு மென்றோ, சமய வழிபாடுகளும் திருமுறை வழங்கும் செந்தமிழ் வழியாக நடைபெற வேண்டு மென்றோ நாடறிய மொழிகின்றிலர்.

17. சைவ சித்தாந்த ஆசிரியர்கள்
வேதம் பசு என்றும், ஆகமம் அதன் பால் என்றும், முதல்வர் ஓதும் தமிழ் அதன் நெய்யென்றும், மெய்கண்டார் வழங்கிய சிவஞான போதம் அந்நெய்யின் சுவையென்றும் சைவர்கள் கூறுவர். இதனால், மெய்கண்டார் வழங்கிய மெய்ந்நூல், நால்வ ரோதும் தமிழ், பால் மணக்கும் ஞானமாதல் என்பது ஒருதலை. நால்வரோதுந் தமிழை நட்டாற்றில் எறிந்து விட்டு, மெய்கண்ட ஞான நூலை மட்டில் கைப்பற்றி ஞானத்தைப்பெற முயன்ற சமய நிலையங்களும் நாட்டில் உண்டு. அந்த ஞானம் அடிப்படை யில்லாத ஓவியக்கூடமாய் உருவாகாதொழிந்ததை நாடறியும்.

இனி, ஞான நூல்பால் பேரார்வமுடையார் பலர் நம் நாட்டில் காணப்படு கின்றனர். ஞான நூலின்பால் எழும் ஆர்வம் உண்மை யானால், அது அந்த நூலை வழங்கிய ஞானாசிரியர் பால் அயரா அன்பினையுண்டுபண்ணும்; அவர் பிறந்த வூர்க்குத் தம் பிறப்பில் ஒரு முறையேனும் போய்வர வேண்டுமென்ற விழைவைத் தோற்று விக்கும் அவர் பிறந்தவூர், பிறந்த மனை முதலியவற்றைப் பலரும் உண்டு மகிழத்தக்க ஊக்கத்தை உண்டாக்கும். மெய் கண்டார் பிறந்த பெண்ணாகடமோ, அவர் பிறந்த மனையிருந்த களப்பாளர் மேடோ கண்டவர் சிலர். அவர் இருந்த திருவெண்ணெய் நல்லூரில் இருக்கும் மெய்கண்டார். திருமடத்தைக் காண்பவர், சைவர் களாகிய நம்மை ஒரு முறையேனும் சலியா தொழியார். மெய் கண்டார் நிலையே இதுவாயின், அவருடைய மாணவரும் சிவஞான சித்தி வழங்கியவருமான அருணந்தி சிவனாருடைய திருத்துறையூர் செல்பவர் அச்சிலரினும் சிலர் என்பது தேற்றம். மற்றவரைப் பற்றிக் கூறுவானேன்?

இது கிடக்க, சமயகுரவர்களான ஞானசம்பந்தர் பிறந்த மனை ஒருபுறம் இருக்க, அவர் ஊர் பெயர் புகைவண்டி நிலையத்தில் எவ்வாறு உளது? தின்னவெல்லி திருநெல்வேலி யாக, திருச் சின்னாப்பள்ளி திருச்சிராப்பள்ளியாக, தின்னனூர் திருநின்றவூராக, நிகப்பட்டாம் நாகைப்பட்டினமாகத் திருந்தும் இந்நாளிலும், ஞான சம்பந்தர் பிறந்த சீகாழி ஷிய்யாளி என்றே இன்னும் நிலவு கிறது. அவ்வூரில் நடந்த சைவ சித்தாந்த சமாசமும் அது திருத்தப் பட வேண்டுமெனத் தீர்மானம் செய்தது. அஃது இன்று வரை திருந்தாமைக்குக் காரணம் சைவருள்ளத்தில் சைவ
வுணர்வு நன்கு பதியாமை யைத்தானே காட்டுகிறது! இன்று நம் நாட்டில் சிறந்து விளங்கும் சமயத்தவருள் கிறித்தவரும் இசுலாமியரும் தங்கள் சமய முதல்வர் பிறந்த வூர்களை எத்துணைப் பெருமிதத்தோடு விரும்பி நோக்குகின்றனர் அவர்களைக் கண்டேனும் சைவர்களாகிய நாம் திருந்த வேண்டாவா? நடு நாட்டைப் பாடவந்த சேக்கிழார் பெருமான், அது, “அறந்தருநாவுக் கரசும், ஆலாலசுந்தரரும் பிறந்தருள” வரும் பெருமையுடைய தென எத்துணைப் பெருமிதத் தோடு கூறுகின்றார்! இதனால், பெரியோர் பிறப்பால் உளதாகும் பெருமை கண்டு பெருமிதங்கொள்வது சைவர்கட்குப் பிறப்பியல் பாகத் தானே காணப்படுகிறது? அப்பெருமிதம் இன்று மறைந்து கிடப்பது ஆகாது. சீகாழியும் திருவாமூரும், திருநாவலூரும் திருவாதவூரும் செந்தமிழ்ச் சைவப் பெருமக்கள் வாழ்வில் ஒரு முறையேனும் காண்டல் வேண்டும்; அதுவழியாக எய்தும் இன்பமும் சமயப்பற்றும் நம்மைச் சமயத்துறையில் அரண் செய்யும்.

18. சமயச் சொற்பொழிவுகள் பற்றிய குறிப்பு
முடிவாக ஒன்று. சமயச் சார்பாக நிகழும் விழாக்களிலும், கழக நிகழ்ச்சிகளிலும் சமயச் சொற்பொழிவு கள் நிகழ்த்தப் படுகின்றன. சொற்பொழிவுக்குரிய பொருள் களுள் திருத்தொண்டர் வரலாறுகளும் புராணவரலாறுகளும் எடுத்துக் கொள்ளப்படு கின்றன. கவிஇரவீந்திரநாத் தாகூர் கூறியது போல இக்காலம் காரண காரிய ஆராய்ச்சி புரியுங் காலமாதலின் அவற்றை மிக்க செம்மையாகக் கூற வேண்டும். திருத்தொண்டர் வரலாறுகளுள் ஒருவர் தனித் திருந்து படித்துச் சிந்தித்தற்குரிய வரலாறுகளும், பிறர்க்கு எடுத்துரைத்தற்குரிய வரலாறுகளும் உள்ளன. திருக் களிற்றுப் படியார் வகுத்துரைக்கும் வல்வினை வரலாறுகளும் மெல்வினை வரலாறுகளும் பகுத்தறிந்து மெல்வினை வரலாறு களையே சொற்பொழிவுக் குரியவாகக் கோடல் சிறப்பு. இந் நிலையில், ஞானசம்பந்தர், நாவரசர், நம்பியாரூரர், காரைக் காலம்மையார், சேரமான் பெருமாள் என்ற இந்த ஐவர் வரலாறு களையும் அவர்கள் வழங்கிய திருப்பாட்டுக்களுக்குச் சிறப்பளித்துப் பொருள் விளக்கம் செய்தும் சொற்பொழிவு செய்வது சிறந்த நெறியாகும். புராணவரலாறுகளுள் கடவுளரை மக்களினும் கீழானவராகக் காட்டும் வரலாறு களைப் படக்காட்சிகளிலும் நாடக மேடைகளிலும் காட்டா தொழியுமாறு சைவர்களாகிய நாம் ஏற்பாடு செய்தல் வேண்டும். அவை வேண்டப்பட்ட காலம் வேறு, இக்கால நிலைவேறு என்பதை நன்கு நினைவு கூர வேண்டும்.

19. முடிப்புரை
பெருமக்களே, எனது தலைமையுரை மிக நீண்டுவிட்ட தென்பதை நன்கு உணருகிறேன். உங்கள் பொறுமையினை மிகவும் அலைத்துவிட்டேன். ஆனால், இச்சைவ சித்தாந்த சபையின் தோற்றத்துக்கு அமைந்த சூழ் நிலையினையும், இது செய்த திருப்பணியினையும் அதனால் விளைந்த பயனையும் முதற்கண் கூற வேண்டிய கடமை வந்தது. பின்னர்ச்சைவ சித்தாந்தமென்பதின் பொருளை விளக்கினேன். அதன்பின், இக்காலத்தில் விஞ்ஞான வளர்ச்சியின் பயனாய் மக்கள் உள்ளம் எய்தியிருக்கும் நிலை யினையும், அந்நிலையில் தத்துவ ஞானம் இருக்கும் இருப்பினையும், அதன் முடிவில் சமய ஞானம் விளங்கும் சால்பினையும் காட்டி, அவை பசு பாச பதி ஞானங்களாய்ப் படிமுறையில் அமைந் திருக்கும் அமைப்பினையும், மேனாடுகளில் அவை எய்தியிருக்கும் இயல்பினையும், எடுத்துக் கூற வேண்டியவனாயினேன். பின்பு சைவ சித்தாந்தம், ஏனைய நம் நாட்டுச் சித்தாந்தங்களோடு ஒத்தும், உயர்ந்தும் இருக்கும் நலத்தைக் கூறினேன். இதன் கண் சிலர் கூறும் தடைகட்கு ஓரளவு விடையளித்தேன். இச் சைவ சித்தாந்தக் கருத்துக்களை நம் நாட்டிற் பரப்புதற்கு வேண்டும் முறையினைக் கூறுமாற்றால், சமயப் பணியிருக்க வேண்டிய முறையினையும், இடைக்காலச் சோழபாண்டியர் காலத்தில் சமய அற நிலையங்கள் புரிந்த சமயப் பணியினைக் கல்வெட்டுக்களின் துணை கொண்டு எடுத்தோதி அத்தகைய பணிகளை மீளவும் நம்முடைய நிலையங்கள் புரிய வேண்டுமென வேண்டினேன். பின்பு சிவன் கோயில்களில் திருமுறைகள் இருக்கும் நிலையினையும், இதற்கிடையே இவற்றையும் இவற்றைத் தொடர்ந்து போந்த சித்தாந்த நூல்களையும் ஆசிரியர்கள் பால் சைவர்களாகிய நாம் காட்டும் அன்பின்மையினையும், காட்ட வேண்டிய அன்பு நெறியினையும், சமயச் சொற்பொழிவு செய்யு மிடத்து நாம் குறிக்கொள்ள வேண்டிய கருத்துக்களையும் ஓரளவு காட்டினேன். இவ்வளவும் அமைதியோடு கேட்டுச் சிறப்பித்த உங்கள் பெருந்தகைமைக்கு என் வணக்கத்தைத் தெரிவித்து என்னை இந்நிலையில் வைத்துச் சிறப்பிக்கும் இச் சபைத் தலைவர்கள், செயலாளர்கள் அனைவருக்கும் என் வணக்கத்தை மிக்க பணி வோடு தெரிவித்துக் கொண்டு, என்னையும் உங்களையும் எல்லோ ரையும் ஒன்று கூட்டி நம் சைவசித்தாந்தப் பெரும்பொருளை நினைந்து. இன்புறு விக்கும் சிவகுரு நாதனாகிய

“தென்தமிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர்
அன்பன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்றிலமே”

திருஞானசம்பந்தர்.

என்று கூறி முடிக்கிறேன். நன்றி வணக்கம்.

சிவஞானபோதச் செம்பொருள்


செந்திலாண்டவன் துணை திருவெண்ணெய்நல்லூர்
மெய்கண்ட தேவர் அருளிச்செய்த
சிவஞான போதச் சூத்திரமும்
ஆங்கில மொழி பெயர்ப்பும்*

காப்பு
கல்லால் நிழல்மலை, வில்லார் அருளி
பொல்லார் இணைமலர், நல்லார் புனைவரே.

The Good will crown their heads with the two Feet of Ganesha who was begotten by the Great Teacher, who sat under the Sacred Mountain Banyan tree and removed the doubts of the Great Nandi.

நூல்
முதற் சூத்திரம்

பதி உண்மைக்குப் பிரமாணம்
அவன் அவள் அதுஎனும் அவைமூ வினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கிமலத் துளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்.

As the (seen) universe, spoken of as he she and it. undergoes three changes (origin, development and decay), this must be an entity created (by an efficient cause). This entity owing to its conjunction with Anava Mala has to emanate from Hara to whom it returns during Samharam. Hence, the learned say that Hara is the First Cause.

இரண்டாஞ் சூத்திரம்
பாச உண்மைக்குப் பிரமாணம்
    அவையே தானே யாய்இரு வினையின்  
    போக்கு வரவு புரிய ஆணையின்  
    நீக்கம் இன்றி நிற்கும் அன்றே.  

He is one with the souls (Abetha). he is different from them (Betha). He is one and different from them (betha betha). He stands in Samava union with His Gnana Sakti and causes the souls to undergo the processes of evolution (births) and return (Samharam) by including their good and bad acts (Karma).

மூன்றாஞ் சூத்திரம்
பசு உண்மைக்குப் பிரமாணம்
    உளதுஇலது என்றலின் எனதுடல் என்றலின்  
    ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படில்  
    உண்டிவினை இன்மையின் உணர்த்த உணர்தலின்  
    மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா.  

It rejects every portion of the body as not being itself; it says my body; it is conscious of dreams; it exists in sleep without feeling pleasure or pain or movements; it knows from others; this is the soul which exists in the body formed as a machine from Maya.

நான்காஞ் சூத்திரம்
பசுவின் பொது இலக்கணம்
    அந்தக் கரணம் அவற்றின்ஒன் றன்றுஅவை  
    சந்தித்தது ஆன்மாச் சகசமலத் துணராது  
    அமைச்சரசு ஏய்ப்பநின்று அஞ்சவத் தைத்தே.  

The soul is not one of the Andakaranas It is not conscious when it is in conjunction with Anavamala. It becomes conscious only when it meets the Andakarana, just as a king understands through his ministers. The relation of the soul to the fvie Avastha is also similar.

ஐந்தாஞ் சூத்திரம்
பாச இலக்கணம்
    விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்கு  
    அளந்தறிந்து அறியா ஆங்கவை போலத்  
    தாம்தம் உணர்வின் தமியருள்  
    காந்தங் கண்ட பசாசத் தவையே.  

The senses while perceiving the object cannot perceive themselves or the soul; and they are perceived by soul. Similarly, the soul while perceiving cannot perceive itself (while thinking cannot think thought) and God. It is moved by the Arul Sakti of God, as the magnet moves the iron, while Himself remains immoveable or unchangeable.

ஆறாஞ் சூத்திரம்
பதி இலக்கணம்
    உணர்உரு அசத்தெனின் உணராது இன்மையின்  
    இருதிறன் அல்லது சிவசத் தாம்என  
    இரண்டு வகையின் இசைக்குமன் உலகே.  

That which is perceived by the senses is Asat (changeable). That which is not so perceived does not exist. God is neither the one nor the other, and hence called Siva Sat or Chit Sat by the wise; Chit or Siva when not understood by the human intelligence and Sat when perceived with divine wisdom.

ஏழாஞ் சூத்திரம்
பசுவின் சிறப்பு இலக்கணம்
யாவையும் சூனியம் சத்தெதிர் ஆகலின்
சத்தே அறியாது அசத்திலது அறியாது
இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா.

In the presence of Sat, every thing elese (cosmos-Asat) is Sunyam (non-apparent). Hence Sat cannot perceive Asat. As Asat does not exist, it cannot perceive Sat. That which perceives both, cannot be either of them. This is the soul (called Satasat).

எட்டாஞ் சூத்திரம்
ஞானம் உணரும் முறை
    ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்  
    தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு  
    அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே.  

The Lord appearing as Guru to the soul which had advanced in Tapas (virtue and knowledge) instructs him that he has wasted himself by living among the savages of the five senses; and on this, the soul, understanding its real nature, leaves its former associates and being different from Him, becomes united to His Feet.

ஒன்பதாஞ் சூத்திரம்
ஆன்ம சுத்தி
    ஊனக்கண் பாசம் உணராப் பதியை  
    ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி  
    உராத்துணைத் தேர்த்தெனப் பாசம் ஒருவத்  
    தண்ணிழ லாம்பதிவிதி எண்ணும்அஞ் செழுத்தே.  

The soul, on perceiving in itself with the eye of Gnanam, the Lord who cannot be perceived by the human intellect or senses, and on giving up the world (Pasa) by knowing it to be false as a mirage, will find its rest in the Lord. Let the soul contemplate Sri Panchatchara according to Law.

பத்தாஞ் சூத்திரம்
பாச நீக்கம்
    அவனே தானே ஆகிய அந்நெறி  
    ஏக னாகி இறைபணி நிற்க  
    மலமாயை தன்னொடு வல்வினை இன்றே.  

As the Lord becomes one with the soul in its human condition, so let the soul become one with Him and perceive all its actions to be His. Then will it lose all its Mala, Maya and Karma.

பதினோராஞ் சூத்திரம்
சிவப்பேறு
    காணுங் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்,  
    காணஉள் ளத்தைக் கண்டு காட்டலின்  
    அயரா அன்பின் அரன்கழல் செலுமே.  

As the Soul enables the eye to see and itself sees, so Hara enables the soul to know and itself knows. And this Adwaitha knowledge and undying Love will unite it to His Feet.

பன்னிரண்டாஞ் சூத்திரம்
சீவன் முத்தரின் தன்மை
    செம்மலர் நோன்றாள் சேரல் ஒட்டா  
    அம்மலங் கழீஇ அன்பரொடு மரீஇ  
    மாலற நேயம் மலிந்தவர் வேடமும்  
    ஆலயந் தானும் அரன்எனத் தொழுமே.  

Let the Jivathma after washing off its Mala which separates it from the strong Lotus Feet of the Lord and mixing in the society of Bhaktas (Jivan Muktas) whose souls abound with love, having lost dark ignorance, contemplate their Forms and the Forms in the temples as His Form.

சிவஞான போதம்
பொது அதிகாரம் உண்மை அதிகாரம்
    பிரமாண  இலக்கண  சாதன    பயன்  
    இயல்    இயல்    இயல்    இயல்  
    (1,2,3 சூத்.)   (4,5,6 சூத்.)   (7,8,9 சூத்)    (10,11,12 சூத்.)  
              

சிவஞான போத மூலமும்
ஆங்கில மொழி பெயர்ப்பும்
முற்றிற்று.

சிவஞான போதச் செம்பொருள்
காப்பு
கல்லால் நிழல்மலை, வில்லார் அருளிய
பொல்லார் இணைமலர், நல்லார் புனைவரே.

நம் கண்ணுக்குப் புலனாகும் இவ்வுலகம், உயிருடைப் பொருள் உயிரில் பொருள் எனவும், இயற்கைப் பொருள் செயற்கைப் பொருள் எனவும், பருப் பொருள் நீரியற் பொருள் காலியற் பொருள் எனவும், செய்யப்படும் ஆராய்ச்சிக் கேற்ப வகுத்து ஆராயப்படும். சமயத்துறையில் நின்று ஆராய்ச்சி செய்வோர் தங்கள் தங்கள் சமயக் கொள்கைகட் கேற்பப் பொருள்களைப் பகுத்து ஆராய்வர். தமிழிலக்கண நூலோர் பொருள்களை மக்கட் பொருள் என்றும் பிற பொருள் என்றும் பகுத்து நோக்குவர். இவ்வுலகிடை நின்று அறிவாராய்ச்சி செய்யும் அறிஞர் அனைவரும் தமக்கேற்ற வகையில் இவ்வுலகம் பகுத்து நோக்கப்படும் பான்மையுடையதாயிருப்பதைக் காண்கின்றனர். தமிழ் நூன் முறைப் படி இவ்வுலகம், உயர்திணை அஃறிணை என இருவகையாக வைத்துப் பொரு ளாராய்ச்சி செய்யுமாறு அமைந்துளது. உயர்திணைப் பொருள் ஆண் என்றும், பெண் என்றும் பகுக்கப்படுகிறது; ஏனை அஃறிணைப் பொருளின்கண் உயிருடையன சில ஆண் பெண்ணெனப் பகுத்துணரப் படினும் உயிருடைப் பொருளுட் சிலவும், உயிரில் பொருள் அனைத்தும் ஆண் பெண் பாகுபாட்டிற்கு அகப்படுவதில்லை; அதனால் அப்பொருள் அது என்ற சொல்லாலும், உயர்திணை ஆண் அவன் என்றசொல்லாலும், உயர்திணைப் பெண் அவள் என்ற சொல்லாலும் குறிக்கப்படுவது தமிழ் படிப்பவர் அனைவரும் அறிந்தது.

இதனால் இவ்வுலகு முற்றும் அவன், அவள், அது என்று குறிக்கப்படும் பொருள்களின் தொகுதியே யென்பது தெளிவாம். ஆனது பற்றியே மெய்கண்ட தேவர் இவ்வுலகத்தை, “அவன் அவள் அது எனும் அவை” என்று குறித்தருளினார். ஆணும் பெண்ணுமாய்ப் பலர் கூடியிருக்கும் இடம் அவை யெனப்படும். அவ்வாறே, அவன், அவள், அது என்னும் மூவகைப் பொருளும் கூடி இயன்றுள்ள உலகும் அவை யென்று குறிக்கப்பட்டது.

நாம் காணும் ஒவ்வோர் அவையும் மக்கள் வந்து கூடுங்கால் தோற்றமும், இருக்குங்கால் நிலை பேறும், பிரிந்து போகுங்கால் கேடும் எய்துகிறது. இதுபோலவே இவ்வுலகமாகிய அவையும் தோற்றம், நிலை, இறுதி யென்ற மூன்று செயல்களையும் உடைய தென்பது இனிது விளங்குகிறது. நாம் காணும் அவைகள் தாமே கூடுவதின்றி, ஒருவர் முன்னின்று கூட்டக் கூடலும், இருத்த இருத்தலும், பிரிக்கப் பிரிதலும் உடையது; இதுபோலவே இவ் வுலகமும் தானே தோன்றாது முதல்வன் ஒருவன் தோற்றுவிக்கத் தோன்றலும், நிற்பிக்க நிலைபெறுதலும், ஒடுக்க ஒடுங்குதலும் உடையதென்பது தானே விளங்கும். நம்மாற் காணப்படும் உலகம், ஒருவர் கூட்டக் கூடியிருக்கும் அவை போல்வதாகையால், ஒருவர் தோற்றுவிக்கத் தோன்றி நிலைபெறுகிறது என்பது தெளிவாம். ஆதலால், ஆசிரியர், அவனும் அவளும் அதுவுமாகிய பொருள்கள் கூடியிருக்கும் இவ்வுலக மாகிய அவைக்குத் தோன்றுதல் முதலிய மூவினைகள்1 இருக்கிறபடியால், ஒருவர் கூட்டக் கூடியிருக்கும் அவைபோல, உலகம் தோற்றுவிக்கத் தோன்றி நிலை பெறுகிறது என்று கூறுகின்றார். இதனை முதற்சூத்திரம், அவை மூவினை உடைமையின் தோற்றிய திதியே என்று கூறுகிறது. இது, தானே தோன்றிய தன்று என்பதற்காகத் தோன்றிய திதி என்று சொல்லாமல் தோற்றிய திதி என்றார். அதற்கு, தானே தோன்றாமல் தோற்று விக்கப்பட்டு உளதாயது என்று பொருள் கூறப்படும்.

உலகில் நாம் கூட்டக் கூடும் அவை முடிந்தவழி, அவ்வ வையிற் கூடியிருந்தோர் தத்தம் மனைக்குச் சென்று ஒடுங்குவர்; மீள நாம் கூட்டும்போது அவர்கள் தாம் ஒடுங்கியிருந்த மனையிலிருந்து வந்து கூடுவர். இவ்வண்ணமே இவ்வுலகமாகிய அவையும் ஒடுங்கும் போது இறைவனிடத்திலே சென்றொடுங்கி, மீளத் தோற்றுவிக் கும்போது அவனிடத்திருந்தே வந்து உலகமாகிய அவையாய்க் காட்சியளிக்கிறது. உலகத்தை ஒடுக்கும் போது, அஃது ஒடுங்கியிருப்பதற்குத் தானே இடமாதலால், இறைவனை “ஒடுங்கி” என்று ஆசிரியர் கூறுகின்றார். ஒடுங்கிய உலகம் தான் ஒடுங்கியிருப்பதற்கு இடமான ஒடுங்கியிலிருந்தே தோன்றுவது கொண்டு. “ஒடுங்கி உளதாம்” என்றார். எனவே, அவன் அவள் அது என்பவற்றின் தொகுதியாகிய அவை தோற்றிய திதியாய்க் காட்சியளித்து ஒடுங்கும் என்றும், தான் ஒடுங்கியிருந்த ஒடுங்கி யினின்றே மீள உளதாம் என்றும் தெரிவித்த வாறாயிற்று.

ஒருநாள் கூடிய ஒரு பேரவை மறுநாளும் மீளக்கூடுமாயின், நாம் என்ன நினைப்போம்? முன்னாள் கூடியதன் நோக்கம் கைகூடாமையால் மறுநாளும் கூடி யிருக்கிற தென்றும், கைகூடாமைக்குக் காரணமாயிருந்த தடை முன்னாளே நீங்காது மறுநாள் கூடுவதற்குக் காரணமாயிற் றென்றும் தானே நினைப்போம். அது போலவே, ஒருகால் தோற்றுவிக்கப்பட்ட உலகம், தோன்றியதுகொண்டு பெற்றுக் கொள்ள வேண்டிய பயனைப் பெற்றுக் கொள்ளாமையால் ஒடுங்கி மீளத் தோற்றுவிக்கப்படுதாயிற்றென்றும், பெற்றுக் கொள்ளாவாறு தடுத்திருந்த தடை யினால் மீளத் தோற்றுவிக்கப் படுகிற தென்றும் எண்ணவேண்டும். அத்தடையாது என ஆராய்ந்து அஃதாவது மலம் என்று கண்டதனால், உலகமாகிய அவை ஒடுங்கி மலத்தால் மீள அவ்வொடுங் கியினின்றே உளதாம் என்று ஆசிரியர் அறிவுறுத்துகின்றார்.

இவ்வாறு ஒடுக்குவதும் ஒடுங்கியதற்கு இடமும் ஆதலால் இறைவன் உலகுக்கு அந்தமும், மீளத் தோற்றுவித்தற்கும் அவனே காரணமாதலால் ஆதியுமாகின்றான். தனக்கு ஆதியும் அந்தமும் இல்லாத இறைவன், உலகிற்கு அந்தமும் ஆதியுமாவது பற்றி, “அந்தம் ஆதி என்மனார் புலவர்” என்று ஆசிரியர் கூறுகின்றார். என்மனார் புலவர் என்பதற்கு, என்று சொல்லுவர் ஆராய்ச்சியுணர்வு படைத்த அறிஞர் என்று பொருள் கொள்ள வேண்டும்.

இச்சூத்திரத்தால் சில கருத்துக்கள் தெளிவுபட வேண்டும். ஓர் அவை கூட்டப் பெறுதற்கு ஒரு நோக்கம் இருப்பது போல, உலகப் படைப்புக்கும் ஒரு நோக்கம் இருத்தல் வேண்டும். அந்நோக்கம் யாது? அந்நோக்கம் கைகூடாது தடுக்கும் மலம்யாது? உலகப் படைப்பு அந்நோக்கத்தை எவ்வாறு கைகூட்டுவிக்கும்?

இவ்வுலகம் உயிரும் உயிரில் பொருளுமாகக் காட்சி அளிக்கிறது. இவ்வாறு காட்சியளிக்கச் செய்வதுதான் உலகப் படைப்பு என்பது. உயிர்கள் ஆக்கப்படுவது மில்லை; அழிவதுமில்லை. இறைவன் என்று உண்டோ அன்றே உயிர்கள் உண்டு. இறைவன் ஒருவன்; உயிர்கள் எண்ணிறந்தன. செம்பின் கண் களிம்பு உடனிருப்பது போல உயிர்களிடத்தே மலம் உடன் இருக்கிறது. களிம்பு நீங்கின செம்பு ஒளிவிட்டுத் திகழ்வதுபோல, மலம் நீங்கின உயிர் ஞானவொளி சிறந்து பேரின்பம் எய்தும். செம்பின்கண் களிம்பு எப்பொழுது ஏன் உண்டாயிற் றென்ற கேள்விக்கு விடை கிடையாது; அது போல உயிர் கட்கு மலம் எப்பொழுது ஏன் உண்டாயிற் றென்று காண்பது ஆகாத ஒன்று. இதனை அனாதி சம்பந்தம் என்று அறிவுநூலோர் கூறுவர். உயிரின் வேறாகக் காட்சியளிக்கும் உடலும் கருவிகளும் நுகர் பொருளுமாகிய உலகம் இவ்வாறு காணப்படுமாறு செய்வதுதான் படைப்பு என்பது. இவ்வுலகத்துக்கு முதற்காரணம் ஒன்று உண்டு. உயிரில் பொருளாகிய இவ்வுலகம் ஒடுங்குங்கால் முதலில் நுண்பொருளாய் ஒடுங்கும்; அதுவே பின்னர் ஆற்றலாய் (Energy) ஒடுங்கும்; அந்த ஆற்றல் (சக்தி) மாயை யென்று நூல்களிற் கூறப்படும். இறைவன் ஒளியும் ஒளிப் பொருளும் போல்வன். ஒளிப்பொருளினின்றும் நீங்காமல் இருக்கும் ஒளிபோல அவனிடத் தினின்றும் நீங்காமல் இருப் பது அவனது அருள். அஃது அருட்சத்தி யென்றும் வழங்கும். ஆற்றலாய் ஒடுங்கிய மாயை அவனது அருட்சத்தியில் தங்கும், அந்த அருட்சத்தி இறைவனாகிய சிவத்தில் ஒடுங்கியிருக்கும் ஒடுங்யாகிய சிவன், மாயையை மீளத் தோற்றுவிக்கக் கருதுவானாயின், அருட்சத்தியை நோக்குவன்; அது மாயையாகிய சக்தியை வெளிப்படுத்தி, உடம்பும் கருவியும் பொருளும் உலகுமாக விரிந்து காட்சிப் படச் செய்யும். அதனை இதுபற்றியே, “ஒடுங்கியுளதாம்” என்றார்.

முதற் காரணமாகக் கொண்டு உயிர்கட்கரிய உடம்பொடு கூடி வாழும் உயிர் மலமறைப்பு நீங்கி அறிவு விளங்கப் பெறுகிறது. உயிர்க்கு அந்த நன்னிலை எய்த வேண்டுமென்ற பேரருளால் இவ்வுலகம் மீளப் படைக்கப்படுகிறது. அறிவுருவாக இருக்கும் உயிரோடு கொண்ட அனாதி சம்பந்தத்தால், மலம் அதன் அறிவை மறைத்து, உலகிடைத் தோன்றிப் பெறுதற்குரிய அறிவு விளக்கத்தை நிரம்பப் பெறாதவாறு தடை செய்கின்றது. அறிவு விளக்கம் பெற்று அதன் வழியாக எய்தும் பேரின்பத்தை நுகர்வதுதான் உயிரின் நோக்கம்; அதற்குத் துணைபுரிவது, உடல் கருவி முதலியவற்றிற்கு முதற் காரணமாகிய மாயை. இக் கருத்துக்கள் விளங்கவே, ஆசிரியர் மெய்கண்டார்,

“ அவன் அவள் அதுஎனும் அவைமூ வினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கிமலத் துளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்”

என்று அறிவுறுத் தருளுகின்றார்.

2.  அவன் அவள் அது என்னும் மூவகைப் பொருளும் கூடிக் காட்சியளிக்கும் உலகமாகிய அவையைத் தோற்றுவித்து நிலை பெறுவித்தற்கு இறைவன் தனது அருட்சத்தியை நோக்குவன் என்று முன்னே கண்டோம். அந்த அருட்சத்தி இறைவனாகிய முதல்வனுக்கு ஆணை என்று சொல்லப்படும். அவன் நினைப்பையே தனக்கு ஆணையாகக் கொண்டு அவ்வருட்சத்தி இயங்குவதால் அஃது ஆணை என்று கூறப்படுகிறது. அந்த ஆணையும் இறைவனும், குணமும் குணியும் போலப் பிரிந்து நில்லாத தற்கிழமைத் தொடர்பு உடையவை; செந்தாமரைப் பூவின் செம்மை பிரிக்கமுடியாது ஒன்றியிருப்பது போல இறைவனது ஆணையாகிய அருட் சத்தி அவனிற் பிரியது ஒன்றி நிற்கும். இதுபற்றியே ஆசிரியர், அந்தம் ஆதியென முதற் சூத்திரத்திற் கூறப்பட்ட இறைவனாகிய முதல்வன் “ஆணையின் நீக்கமின்றி நிற்கும்” என்ற அறிவுறுத்துகின்றார், நீங்கி நிற்பதற்கும் நீக்கமின்றி நிற்பதற்கும் உரிமையுடையவன் முதல் வனாதலால், ஆணை நீக்கமின்றி நிற்கும் என்று சொல்லாமல், முதல்வன் “ஆணையினின்றும் நீக்கம் இன்றி நிற்கும்” என்று சொல்லியருளுகின்றார்.

இனி, இவ்வுலகத்துக்கு அந்தமும் ஆதியுமாய் நிற்கும் இறைவன் இருக்கும் இயல்பு கூறலுற்ற ஆசிரியர், உலகமாகிய அவையேயாய், தானேயாய், அவையே தானேயாய் நிற்கின்றான் என்று கூறுகின்றார். முதல்வன் தானேயாய், அவையேயாய் நிற்கும், அவை யாயும் தானாயும் உடன் நிற்கும் என்பது கருத்து. முதல்வன் தானேயாய் நிற்பதென்பது, முதல்வன் உலகுயிர்களோடு கலக்காமல் வேறாய்த் தனித்து நிற்கும் நிலை; அவையேயாதலென்பது, உலகமாகிய அவை வேறு தான் வேறு என்னாதவாறு ஒன்றாய்க் கலந்து நிற்கும் நிலை; உயிரும் உடம்புமாய்க் கலந்து நிலவும் நம்பால், உயிர் வேறு உடம்பு வேறு எனப் பிரித்துக் காணாதபடி நம்முயிர் உடம்போடு கலந்து ஒன்றாய் நிற்பது போல, முதல்வன் உலகில் ஒன்றாய்க் கலந்து நிற்கின்றான் என்பது. உலகில் ஒன்றாய்க் கலந்து நிற்குங்கால் உலகம் முதல்வனாதலும், முதல்வன் உலகமாதலும் இல்லை. எவ்வாறென்றால், உடம்போடு ஒன்றாய்க் கலந்து நிற்கும் உயிர் உடம்பாவதும், உடம்பு உயிராவதும் இல்லை யன்றோ, அதுபோல என அறிதல் வேண்டும். உலகில் நிலவும் உயிர்கட்கு, அறிவு விழைவு செயல் என்ற மூன்று இயல்புகள் உண்டு. அறிவு முதலிய இயல்புகள் வெளிப்படுதற்குரிய கருவியொடு கூடுமாயின், உயிர், அறிவதோ விழைவதோ செய்வதோ மேற்கொள்ளும். உயிரின் வேறாய உலகியற் பொருள்கட்கு அத்தகைய செயல் கிடையாது. அப்பொருள்கள் உயிர்ப்பொருட்டுச் செயற்படவேண்டி யிருப்பதால் முதல்வன் அவற்றோடு ஒன்றாய்க் கலந்து நிற்கின்றான். அவ்வாறு நில்லானாயின், உலகியற் பொருள் ஒரு நெறிப்பட ஒழுகுதற்கு ஏது இல்லையாகும்; இக்கால விஞ்ஞான வளர்ச் சிக்கும் இடமில்லையாம்.

உலகியற் பொருளால் ஆகிய உடம்பின்கண் நிற்கும் உயிர் மலத் தடையிலிருந்து நீங்க வேண்டுமென்று, உலக வாழ்க்கையைத் தொடங்கும்; வாழ்க்கையில், அறிவனவற்றை அறியவும், விழையவும், செய்யவும் இறைவன் உடனிருந்து துணை செய்கின்றான். உடம்போடு ஒன்றாயும், உயிரின் வேறாயும், இரண்டினையும் விட்டு நீங்காமலும், இருப்பதால் அவ்வாறு இருக்கும் முதல்வனது இருப்பு உடனாதல் என்ப்படுகிறது; இரண்டாம் சூத்திரம், அவையே தானே யாய் என்று உணர்த்துகிறது. உலகிற்கு அந்தம் செய்யும் ஆதியாகிய முதல்வன் அந்தமும் ஆதியுமாகும்போது வேறாய் நிற்பதும், உயிரில் பொருளாகிய உலகியற் பொருள்களோடு ஒன்றாய் நிற்பதும், உயிர்களோடு உடனாய் நிற்பதும் உணர்த்த வந்த திருஞான சம்பந்தப் பெருமான்,

“ஈறாய்முதல் ஒன்றாய்இரு பெண்ணாண்குண மூன்றாய்
மாறாமறை நான்காய்வரு பூதம்மவை ஐந்தாய்
ஆறார்சுவை ஏழோசையொ டெட்டுத்திசை தானாய்
வேறாய்உட னானான் இடம் வீழிம்மிழ லையே*”

என்று அருளிச் செய்துள்ளார். வேறாய் நின்று அந்தமும் ஆதியுமாம் திறத்தை, “வேறாய் ஈறாய் முதலாய்” என்றும்; ஒன்றாய் நின்று உலகியற் பொருள்களை இயக்கும் திறத்தை, “ஒன்றாய், இரு, பெண்ணாணாய், குணமூன்றாய், மறை நான்காய், பூதமவையைந் தாய், ஆறார் சுவையாய், ஏழோசையாய், எட்டுத் திசை தானாய்” என்றும்; உயிர்களோடு ஒன்றாகாமலும் வேறா காமலும், உடனிருந்து கண்டும், காட்டியும், உதவியருளும், முதல்வன் திறத்தை “உடனானான்” என்றும் இத்திருப்பாட்டில் திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்கின்றார். இவ்வாறு இறைவனது மூவகை நிலையினையும் திரு வருளாள் உணர்ந்து ஒருங்கே எடுத்து ஓதிய நூல் வடமொழியிலோ வேறு மொழிகளிலோ இதுகாறும் காணப்படவில்லை. இக்கருத்துக் களை வற்புறுத்துவதற்காகத்தான். ஆசிரியர், புலவர் பெருமக்களால் “அந்தம் ஆதி” எனப் புகழ்ந் தோதப்பெற்ற முதல்வன், “அவையே தானேயாய் நிற்கும்” என்று இச்சூத்திரத்தின் எடுத்த எடுப்பிலேயே இயம்பி யருளுகின்றார்.

உலகில் நிலவும் உயிர்கள் ஒவ்வொன்றும் மனத்தால் நினைத்தலும் வாயாற் சொல்லுதலும், உடம்பால் செயல் செய்தலும் செய்கின்றன. இவையாவும் வினையென்றே கூறப்படும். இவ்வினைகள், இன்பம் விளையுமாயின் நல்வினையும், துன்பம் விளையுமாயின் தீவினையும் என இரு வகைப் பெயர் பெறும், இவ்வினையும் வினைப்பயனும் உயிர்போல அறிவில்லாதன வாதலால், அவை தம்மைச் செய்த உயிரைத் தாமே சென்று சேரா; வினையையும் வினைப்பயன் களையும் கூட்டுவிப்பது முதல்வன் செயல். வினைக்குரிய பயனையும், பயனை உயிர்கள் நுகர்தற்குரிய உடல் கருவிகளையும் முதல்வன் தன் ஆணையாகிய சிற்சத்தியால் தோற்றுவிப்பன். அவ்வாணை, உயிர்களின் வினை நுகர்ச்சிக் கேற்ப உடல் கருவி முதலியவற்றைக் கூட்டுவதும் நீக்குவதும் செய்யும். கூட்டுங்கால் பிறப்பும், நீக்குங்கால் இறப்பு உண்டாகின்றன. ஆனது பற்றியே, உயிர்கள் ஆணையின் இரு வினையின் போக்குவரவு புரிய என்று ஆசிரியர் உரைத்தருளு கின்றார். போக்கு, இறப்பு; வரவு, பிறப்பு.

இவ்விரண்டு சூத்திரங்களாலும், உலகிற்கு முதல்வன் இறைவன் என்றும், முதற்காரணம் மாயை யென்றும், துணைக் காரணம் ஆணையாகிய அருட்சத்தி யென்றும், உலகப் படைப்புக்குக் காரணம் உயிர்களிடத்திலுள்ள மலம் என்றும், உலக வாழ்வின்கண் உயிர்கள் வினை செய்கின்றன என்றும் கண்டோம். இவ்வகையால், இறைவன், உயிர், உலகு என்ற மூன்றும், மலம், மாயை, வினை என்ற மூன்றும் அறிகின்றோம். மலம் முதலிய மூன்றையும் பாசம் என்றும், இவற்றோடு தொடக்குறும் உயிரைப் பசு என்றும், இறைவனைப் பதி என்றும் கூறுவது வழக்கம். இவற்றை உணர்த்தவே.

“ அவையே தானே யாய்இரு வினையின்
போக்கு வரவு புரிய ஆணையின்
நீக்கம் இன்றி நிற்கும் அன்றே”

என அறிவுறுத்துகின்றார்.

3.  உயிரென்பது ஒன்று உண்டென்பதை மூன்றாம் சூத்திரத் தால் வற்புறுத்துகின்றார். உயிர்க்கு ஆன்மா என்ற பெயரை வேதாந்த நூல்களாகிய உபநிடதங்கள் கூறுகின்றன. நம் நாட்டில் சமய நெறியில் நின்ற அறிஞருள் சிலர் ஆன்மா என ஒன்று கிடையாது என்றனர்; சிலர் உடம்பே ஆன்மா என்றனர்: சிலர் இந்திரியங்களையே ஆன்மா என்றனர்; கனவின் கண் காணப்படும் சூக்கும உடம்பையே சிலர் ஆன்மா என்றனர்; பிராணவாயுவையே ஆன்மா என்றனர் சிலர். இவ்வாறு சுத்த பிரமமே ஆன்மா என்றும், எல்லாக் கருவிகளும் கூடிய கூட்டமே ஆன்மா என்றும் சிலர் கூறி வந்தனர். அவர்களை முறையாக எடுத்து மறுத்து அவர் கூறுவனவற்றின் வேறாக ஆன்மா என்று ஒன்று உளது என ஆசிரியர் நிலைநாட்டு வாராயினர்.

உடம்பை நோக்கி, உடல், பொறி, மனம் முதலிய கூறுகளாகப் பகுத்து ஒவ்வொன்றையும் உயிரல்லவெனக் கழித்து ஒன்றும் ஆன்மா அன்று என்று கண்டு ஆன்மா என ஒன்று இல்லையென்பாரைப் பார்த்து, இவ்வாறு கூறிட்டு நோக்கி ஆன்மா இல்லையென எண்ணிக் கூறுவதுயாதோ அதுவே ஆன்மா என்று சொல்லலுற்று. “இலது என்றலின் ஆன்மா உளது” என்றார். உடலே ஆன்மா என்பாரை நோக்கி, “நீங்கள் இது எனது உடல் என்கிறீர்களல்லவா? எனது என்ற சொல்லுக்குப் பொருளாய் உள்ளது யாது?” என்று கேட்டு, உடலின் வேறாக எனது என்றும் சொற்குப் பொரு ளாய் இருப்பதுவே ஆன்மா; அதற்கு உடைமையாகிய உடம்பு ஆன்மா அன்று என்று தெருட்டுதற்கு. “எனது உடல் என்றலின் ஆன்மா உளது” என்றார். கண் முதலிய இந்திரியங்கள் பொருள்களைப் பார்த்தல் முதலிய அறிவுச் செயலைச் செய்வதால் அவ்விந்திரியமே ஆன்மா என்பவர்களைக் கண்டு, கண் முதலிய பொறிகள் தத்தமக்குரிய ஒளி முதலியவற்றைக் கண்டறியுமேயன்றி, கண் ஓசையையும் காது ஒளியையும் இவ்வாறே பிற பிறவற்றையும் அறியா; இவையே ஆன்மாவாயின், ஒன்றே எல்லாவற்றையும் அறிய வேண்டும். அவ்வாறு அறியாமையால் இந்திரியம் ஆன்மா ஆகாது என்பாராய், “ஐம்புலன் அறிதலின் ஆன்மா உளது” என்றார்.

இனி, சூக்கும வுடம்பே ஆன்மா என்பாரை நோக்கிக் கனவின்கண் சூக்கும வுடம்பு காணும் காட்சியை நனவின் கண் தூலவுடம்பு கண்டதாகக் கூறுவதால், அதற்கு வேறாக ஒன்று நின்று காண்கிறதென்பது பெறப்படும். அவ்வொன்றே ஆன்மா என அறிக என்பாராய், “ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உளது” என்றார். பிராணவாயுவே ஆன்மாவாயின், அஃது நனவுக்காலத்தில் நுகரும் இன்பத் துன்பங்களை உறங்குங் காலத்திலும் பிராணவாயுவின் இயக்கம் இருப்பதால் நுகர்தல் வேண்டும்; அவ்வாறு நுகர்ச்சி இல்லாமையால் பிராண வாயு ஆன்மா அன்றாம். ஆகவே அதனின் வேறாக ஆன்மா உளது என்பார், “கண்படில் உண்டி வினை இன்மையின் ஆன்மா உளது” என்றார், உண்டி யென்றது இன்பத் துன்பங்களை நுகர்வத.

இனி, சுத்த பிரமமே ஆன்மா என்பவர்களைப் பார்த்து, பிரமம் என்பது, எல்லாவற்றையும் ஒருவர் அறிவிக்க அறியாமல் ஒருங்கே ஒரு குறையுமில்லாமல் தானே அறியும் சைதன்னியம் என்று சொல்லுகிறீர்கள். ஆன்மாவோ, தானே எதையும் அறிய மாட்டாது, அறிந்தோர் அறிவிக்க அறியும் சிறுமையுடையது; ஆகவே, பிரமமே ஆன்மா என்பது பொருந்தா தென்பாராய், “உணர்த்த உணர்தலின் ஆன்மா உளது” என்றார்.

இனி, பொறி முதலிய எல்லாவற்றின் கூட்டமே ஆன்மா வென்பார்க்கு, பொறி முதலிய எல்லாம் ஒரு பாவையிடத்தும் கூடியுள்ளன; ஒரு பிணத்தினிடத்தும் உடம்புக்குரிய கூறுகள் எல்லாம் கூடியிருக்கின்றன. எனினும் ஆன்மாவுக்குரிய அறிவு விழைவு செயல்கள் இல்லை. ஆகவே அக்கூட்டத்தின் வேறாக ஆன்மா ஒன்று இவ்வுடம்பினுள் உளது என்று கூறுகின்றார்.பொறி முதலிய கருவிகளின் கூட்டமாகிய உடம்புக்கு முதற்காரணம் மாயை;அம்மாயை ஆன்மா அன்று; அந்த ஆன்மாவுக்கு இந்த மாயா காரியமான உடம்பு இடமாகும்; அவ்வுடம் பின் செயல் கொண்டு. அதனுள் ஆன்மா இருப்பது உணரப்படுகிறது என்பதை விளக்குதற்கு. “மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா உளது” என்றார். மாயா இயந்திர தனு - மாயையிலிருந்து தோற்றுவிக்கப் பட்ட இயந்திரம் போன்ற உடம்பு. இக்கருத்துக்களையே.

“ உளதுஇலது என்றலின் எனதுடல் என்றலின்
ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படில்
உண்டிவினை இன்மையின் உணர்த்த உணர்தலின்
மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா”

என்று கூறுகின்றார்.

4.  மூன்றாம் சூத்திரத்தில் ஆசிரியர், காணப்படாத உயிரை உண்டு என்பதற்காகக் காணப்படும் நமது உடம்பையே ஆராய்ந்து காட்டினார். நம் உடம்பில் அறி கருவி, செயற் கருவி என இருவகைக் கருவிகள் உள்ளன. அறி கருவியை ஞானேந்திரியம் என்றும், செயற் கருவியைக் கன்மேந்திரியம் என்றும் வட மொழியிற் கூறுவர். அவற்றுள் ஞானேந்திரியம், மெய்வாய் கண் மூக்கு செவி என ஐந்தாகும். கண்மேந்திரியம், வாய் கால் கை பாயு உபத்தம் என ஐந்தாம். மெய் முதலிய அறி கருவிகளால் உலகியலை அறிவதாகிய செயலைச் செய்கின்றோம். வாய் முதலிய செயற் கருவிகளால் பேசுதல், நடத்தல் முதலிய செயல்களைச் செய்கின்றோம். இக் கருவிகட்கு வேறாக, மனம் சித்தம் அகங்காரம் புத்தியென நான்கு உட்கருவிகள் நம் உடம்பில் உண்டு. மனம் சித்தம் முதலியவற்றை அந்தக்கரணம் என அறிவு நூல்கள் கூறும். உடம்பு பருப்பொருளாய்க் கண்ணுக்குத் தெரியக்கூடியது; உயிர் கண்ணுக்குத் தெரியாத அருவப் பொருள். உடம்பின் எல்லையை நீங்காமல் அதனுள்ளே அறிவாய் உடம்பின் பல வேறு கூறுகளையும் இயக்கும் இயக்கப் பொருளாய் உயிர் இருக்கிறது. உடம்பின் எல்லையை உருமண்டலம் என்றும், அறிவுருவாய் நிலவும் உயிரெல்லையை அறிவு மண்டலம் என்றும் அறிஞர் கூறுவர். அறிகருவிகளும் செயற் கருவிகளும் உருமண்டலத்தில் இருப்பவை. உட்கருவிகளான அந்தக் கரணங்கள் அறிவு மண்டலத்தில் இருக்கின்றன. உரு மண்டலத்தை உருவுடம்பு என்றும். அதற்குள் இருப்பது அந்தக் கரணங் களைத் தன்னிடத்தே கொண்ட அருவுடம்பு என்றும், நம்முடைய நூல்கள் குறிக்கும். ஆங்கிலம் ஜெர்மனி முதலிய மொழிகளைப் பேசும் மேனாட்டார் லத்தீன் மொழியால் தம்முடைய ஆராய்ச்சியிற் கண்ட பொருள் களுக்குப் பெயரிட்டு வழங்குவது போல நம் நாட்டார் வடமொழியால் ஞானேந்திரியம், கன்மேந்திரியம், அந்தக்கரணம் எனப் பெயரிட்டு வழங்குவர். ஆகவே, இவை வடசொல்லால் குறிக்கப்படுவதுபற்றி வடநூலாருக்குத் தான் இந்த ஞானேந்திரிய முதலியனவுண்டு; தமிழர்கட்கு இல்லை யென்று கூறிப் பிணங்குவது பெருந்தன்மை யாகாது. இவ்வாறே இந்நூலில் ஆங்காங்குக் காணப்படும் வடசொற்கள் ஆட்சி காரணமாக மேற் கொண்டவையெனக் கொள்ளல் வேண்டும்.

இனி, மூன்றாம் சூத்திரத்தில் இந்திரியங்கள் ஆன்மா ஆகா என்பது கண்ட சமயவாதிகளிற்சிலர், அந்தக்கரணமே ஆன்மா என்று கூறினர். அந்தக்கரணம் ஆன்மாவின் செயலுக்குக் கருவியாகுமே தவிர ஆன்மாவாகாது என்பாராய், “அந்தக் கரணம் அவற்றின் ஒன்றன்று ஆன்மா என்று ஆசிரியர் நான்காம் சூத்திரத்தில் கூறுகின்றார். கண் முதலிய கருவிகளின் வாயிலாகக் காணப்
படுவதைப் பற்றுவது மனம்; அதனை இன்னதெனச் சிந்திப்பது சித்தம்; சிந்தனையின்கண் இதுதானெனத் துணிவேனென எழுவது அகங்காரம்; துணிந்து தன்கண் கொள்வது புத்தி. இவற்றைக் கருவியாகக் கொண்டு ஆன்மா அறிவுப் பொருளை அறிந்து கொள்ளும். இவ்வகையில் மனம் முதலிய நான்கும் ஆன்மாவாகிய அரசனுக்கு அமைச்சர் போல நின்று அறிவுத்துணை செய்கின்றன. இக்கருவிகள் ஆன்மாவோடு கூடி அதற்கு அமைச்சுத் தொழில் செய்யும் என்பது விளங்கவே, ஆசிரியர், “அவை சந்தித்து நின்று அமைச்சரசு ஏய்ப்ப” என்று கூறியருளுகின்றார்.

முன்பு கண்ட உரு மண்டலமும் அறிவு மண்டலமு மாகிய இரண்டையும் ஒன்றாயடக்கி ஆன்மதத்துவம் என்று நம் சமய நூல்கள் கூறுகின்றன. இதனின் வேறாக இருவகைத் தத்துவங்கள் உண்டு; அவை, வித்தியா தத்துவம் சிவ தத்துவம் எனப்படும். வித்தியா தத்துவம் (Spiritual Sphere) நுண்ணுடம்புக்கு உள்ளாய் உயிரைச் சூழ்ந்து நிற்பது. சிவதத்துவம் உயிர்க்கு மேலாய்த் திருவருள் தோய்தற்கு வாயிலாய் (Medium) இருப்பது. இறை வனுடைய அருட்சத்தி சிவ தத்துவத்தின் வாயிலாக ஆன்மாவின் அறிவு, விழைவு, செயல் என்ற மூவகையான ஆற்றல்களையும் கிளரச் செய்யும்; சிவ தத்துவத்தின் வாயிலாக வரும் அவ்வருட் சத்தியே ஆன்ம தத்துவத்தையும் வித்தியா தத்துவத்தையும் தொழிற் படுத்துகிறது. வித்தியா தத்துவத்தால் உயிரினுடைய அறிவு முதலிய ஆற்றல்கள் எழுந்து அறிதற்கும், விழைதற்கும், செய்தற்கும் முற்படு கின்றன. அப்போது ஆன்ம தத்துவம் அறிதல் முதலிய செயல்களை நிகழ்விக்கின்றது. ஆன்மாவாகிய உயிரைச் சூழ்ந்து ஆன்மதத்துவமும் அதற்குள் வித்தியா தத்துவமும், அதற்குள்ளாக ஆன்மாவும் இருக்கின்றன. இது பற்றியே ஆன்மதத்துவத்து இந்திரியங்களைப் புறக்கரணம் என்றும்; மனமுதலியன அவற்றிற்குள்ளாக இருப்பது பற்றி அகக்கரணமாகிய அந்தக்கரணம் என்றும், அவற்றிற்கும் உள்ளேயிருக்கின்ற வித்தியா தத்துவத்தை உள்ளந்தக்கரணம் என்றும், அவற்றிற்கும் உள்ளால் இருக்கிற ஆன்மாவை உள்ளம் என்றும் சான்றோர் வழங்குகின்றனர். “ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒரு தலையாப். பேர்த்துஉள்ள வேண்டா பிறப்பு” என்ற (357) திருக்குறளில் திருவள்ளுவர் ஆன்மாவை உள்ளம் என வழங்குவதை இங்கே நினைவு கூர்தல் வேண்டும்.

இவ்வான்ம வித்தியா தத்துவங்களுக்கு உள்ளே இருக்கும் ஆன்மாவுக்கு அறிவு முதலிய மூவகை ஆற்றலும் இயல்பாகவே உண்டென்றாலும், முதற் சூத்திரத்தில் காட்டப்பட்ட மலத்தால் மறைப்புண்டு கிடக்கின்றன. அம்மலம் செம்பில் களிம்பு போல இயல்பாய் ஆன்மாவில் அனாதி தொடர்பு கொண்டிருப்பதால் அது சகசமலம் என்று கூறப்படும் இச்சகசமலத்தால் மறைப் புண்டு இருப்பது விளங்க, ஆசிரியர், “ஆன்மா சகச மலத்து உணராது” என்றார். சகசம், இயற்கை. மலத்தால் மறைப்புண்டு ஆற்றல் சுருங்கியிருக்கும் ஆன்மா, அவ்வாற்றலைச் செலுத்தி நினைவன நினைந்து செய்வன செய்து ஒழுகுதற்கு இத்தத்துவங்கள் கருவியாய் இன்றியமையாது வேண்டப்படுகின்றன. இவை ஓர் அரசனுக்கு அமைச்சரும் பிற அரசியல் வினையாளரும் போல ஆன்மாவுக்கு அமைந்துள்ளன என்பது பற்றியே “அமைச்சரசு ஏய்ப்ப” என்றார்.

இனி, நம்முடம்பு, உருவுடம்பு (தூலவுடம்பு), அருவுடம்பு (சூக்கும உடம்பு), கருவுடம்பு (புரியட்டக வுடம்பு), நுண்ணுடம்பு (கஞ்சுக வுடம்பு), காரண வுடம்பு என ஐந்து வகையாக இத்தத்துவங்களைக்கொண்டு பகுத்துக் காணப்படுகிறது. இவை நம்முடம்பினுள் ஒன்றிற்கொன்று நுட்பமாய் அமைந்துள்ளன. உருவுடம்பு தொழிற்படுங்கால் உயிர் புருவ நடுவில் நிற்கும் என்றும், சூக்கும உடம்புக்குச் செல்லுங்கால், கழுத்திலும், புரியட்டக வுடம்புக்குட் செல்லுங்கால் இதயத்திலும், கஞ்சுக வுடம்பில் உந்தியிலும், காரண வுடம்போடு நிற்கையில் உந்தியின்கீழ் மூலாதாரத்திலும் நிற்கும்; புரு நடு முதலிய இடங்கள் உயிருக்கு உணர்வெல்லையாகும். புருவ நடுவில் நிற்கும் நிலை சாக்கிரம் (கனவு) என்றும், கழுத்தில் நிற்கும் நிலை சொப்பனம் (கனவு) என்றும், இதயத்தில் நிற்கும் நிலை சுழுத்தி (துயில்) என்றும், உந்தியில் நிற்கும் நிலை துரியம் (உறக்கம்) என்றும், மூலாதாரத்தில் நிற்கும் நிலை அதீதம் (பேருறக்கம்) என்றும் நூல்களிற் கூறப்படுகின்றன. புருவ நடுவிலிருந்து மூலாதாரம் வரையில் இத்தத்துவக் கருவிகளை விட்டுப் படிப்படியாக நீங்கிக் கீழே செல்லுவதும், பின்பு படிப்படியாக மேலேறிப் புருவ நடுவுக்கு வருவதும், வரும்போது ஆங்காங்கு விட்ட கருவிகளோடு கூடுவதும் உயிருக்கு உடம்பில் உண்டாகும் இயக்கமாகும் மேலே கூறிய ஐவகை நிலைகளும் அவத்தை எனப்படும். இதுபற்றியே “ஆன்மா அஞ்சவத்தைத்து” என்று கூறியருளினார். இதனை நான்காம் சூத்திரம்,

“ அந்தக் கரணம் அவற்றின் ஒன்றன்று அவை
சந்தித்தது ஆன்மாச் சகசமலத் துணராது
அமைச்சரசு ஏய்ப்ப நின்று அஞ்சவத் தைத்தே”

என்று இயம்புகிறது. இவ்வவத்தையில், கீழ் நோக்கிச் செல்லும் அவத்தை (இயக்க நிலை) கீழாலவத்தை யெனவும், மூலாதாரத் திலிருந்து மேல்நோக்கி வரும் அவத்தை மேலால வத்தை யெனவும் வழங்கும்.

இச்சூத்திரத்தால் ஆன்மாவுக்கு ஐந்தவத்தைப் படுவது இலக்கணம் என்பது பெறப்படுவது கொண்டு அமைந்து விடலாகாது அந்தக் கரணங்களே அறிதல் என்ற தொழிலைச் செய்வதால் அவற்றையே உயிரென்றல் அமையும் என்பவர் எவ்வாறு மறுக்கப்படுகின்றார்கள் என்பதை மறவாது கடைப் பிடித்தல் வேண்டும். இந்தக் காலத்தில் நிலவும் மேனாட்டு உளநூல்களைக் காணு மிடத்து அந்தக்கரணமே ஆன்மாவாம் என்ற கூற்று வலியுறுவதுபோலத் தோன்றும். உயிர் அவத்தைப் படுவதென்பது அறிகருவிகளோடு கூடுவதும் கூடாது நீங்குவதுமாகிய நிலையை எய்துவதென்று கண்டோம். உயிர் அந்தக்கரணங்களோடு கூடிய வழி அறிவு விளக்க முண்டாகிறது; கூடாவழி அறிவினது விளக்கம் குறைகிறது. அந்தக் கரணங்களே அறிதல் என்னும் செயலை யுடையவாயின், ஆன்மா அடையும் அவத்தை வேறு பாட்டுக் கேற்ப அறிவு விளக்கத்தில் மிகுவதும் குறைவதும் உண்டாதற்குக் காரணமில்லை. ஆன்மா கீழும் மேலுமாக அவத்தை யெய்துங்கால், நின்றாங்கு நிற்கும் கருவிகள், உயிர் வந்து தோயும்போது விளங்குவதும் நீங்கும்போது விளக்கம் குன்றுவதும் நிகழ்கின்றன. இதனால் அறிவாகிய ஒளியும் செயலும் ஆன்மாவுக்கே உரியவாய் இருப்பது தெளிவாகிறது. ஆதலால்தான் ஆன்மா அந்தக் கரணங்களாகிய அவற்றின் ஒன்றன்று என்பது வற்புறுத்தப் படுகிறது.

5.  அந்தக்கரணங்களின் வேறாய்ச் சகசமலத்தால் உணர்வு மறைக்கப்பட்டு உடல் கருவிகளோடு கூடி நிற்கும் எனப்பட்ட ஆன்மா கீழும் மேலுமாக ஐவகை யவத்தை எய்துவானேன்? அவத்தை எய்துங்கால், கருவிகளோடு கூடி அறிவு விளக்கம் பெறுவதும் அவற்றோடு கூடாத வழி அறிவு ஒடுங்குதலும் எற்றுக்கு? என்று சில ஐயங்கள் நம் நினைவில் எழுகின்றன. இந்த ஐயங்களை எண்ணி ஆராய்ந்தோர், ஓர் உண்மையைக் கண்டனர்; உலகிடைத் தோன்றும் பொருள்கள் அனைத்தும் இயங்கிய வண்ணம் இருக்கின்றன. பருப் பொருளின் இயக்கம் நமக்குத் தெரிகிறது; நுண்பொருளின் இயக்கம் புலனாவதில்லை. புலனாகாமை கொண்டு அவற்றின் கண் இயக்கம் இல்லை யென்று கூறமுடியாது; அதனைச் சில விஞ்ஞானிகள் நுண்ணிய கருவிகளால் காட்டியுமிருக்கின்றனர். இதனால் எல்லாப் பொருளிடத்தும் இயக்கம் உண்டு என்பது தெளிவாகியிருக்கிறது. உயிர்ப் பொருளிலும் இவ்வியக்கம் காணப்படுகிறது. எந்த இயக்கமும் தானே உண்டாகாது என்பது பொது உண்மை. இயக்கமெல்லாம் காரியமாதலால், அதற்குக் காரணமாய் இயக்குவது ஒன்று உண்டு. அவ்வாறே உயிரை இயக்குவதும் ஒன்று உண்டு. அஃது இறைவனது திருவருள் என்று அறிஞர் கண்டுள்ளனர். இத்திருவருள், கருவிகளோடு கூடி அவைவேறு தான்வேறு என நினையாது அவையே தான் என மயக்கும் ஆன்மாவை, மேலும் கீழும் இயக்கியும், கருவிகளிற் பிரித்தும் கூட்டியும் உண்மையறிவு பெற உதவுகிறது.

இவ்வாறு தனக்கு தோன்றாத் துணையாய் உடனிருந்து உதவிபுரியும் முதல்வனது அருளை ஆன்மா உணர்வதில்லை; அவனது அருளையின்றித் தான் ஒன்றும் செய்து கொள்ள முடியாத ஏழை என்பதையும் அஃது எண்ணுவதில்லை. சுருங்கச் சொல்லு வோமாயின், உயிர் தன்னையும் அறிவதில்லை; தனக்குத் தோன்றாத் துணையாய் உடனின்றுதவும் திருவருள் முதல்வனையும் அறிவ தில்லை. ஆன்மாவுக்கு மெய் வாய் முதலிய அறிகருவிகள் உள்ளன. அவை தத்தமக்கு உரிய பொருள்களைக் கண்டு அறுதியிட்டு உயிர்க்கு உணர்த்துகின்றன; ஆனால் அவை தம்மையே அறிவதில்லை; பொருளைக் காணுமாறும் ஓசையைக் கேட்குமாறும் செலுத்தும் உயிரையேனும் அக்கண் முதலிய கருவிகள் அறிகின்றனவோ எனின் அதுவும் கிடையாது. அதுபோலவே உயிர்கள் தம்மையோ தமக்குத் தோன்றாத் துணையாய் நின்று உதவும் திரு வருளையோ அறியாவா கின்றன. இதனை ஆசிரியர், “விளம்பிய வுள்ளத்து மெய் வாய் கண் மூக்கு அளந் தறிந்து அறியா; ஆங்கு அவை போலத் தாம் தம் உணர்வின் தமி அருள்” என்று உரைக்கின்றார். உள்ளம் என்றது, ஆன்ம வித்தியா தத்துவங்கட்கு உள்ளே அருவாய் ஆற்றல் வடிவாய் இருக்கும் ஆன்மாவை என அறிக.

தம்மால் அறியப்படாத முதல்வனது திருவருளால் உயிர்கள் அறிவு விழைவு செயல்வகைகளில் எவ்வாறு தொழிற்படுகின்றன எனின், காந்தத்தின் முன்னே நிற்கும் இரும்பு எங்ஙனம் அசைகிறதோ அங்ஙனமே முதல்வன் திருவருளின்முன் உயிர்கள் அறிவது விழைவது முதலிய செயல்களைச் செய்கின்றன. இரும்பு அசைவதும் காந்தம் அசையாது இருப்பதும் போல, திருவருளின்முன் உயிர்கள் அறிவது முதலியன செய்ய முதல்வன் ஒரு விகாரமும் இல்லாமல் இருப்பான். இக்கருத்து விளங்க ஆசிரியர், “காந்தம் கண்ட பசாசத் தவையே” என்றார். பசாசம் - இரும்பு. இதனை,

“ விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்கு
அளந்தறிந்து அறியா ஆங்கவை போலத்
தாந்தம் உணர்வின் தமியருள்,
காந்தம் கண்ட பசாசத் தவையே.”

என்று ஐந்தாம் சூத்திரம் கூறுகிறது.

மெய் வாய் கண் மூக்கு செவி என்ற கருவிகள் ஆன்மாவின் துணையால் பொருள்களை அறிகின்றன; அவ்வாறு அறிந்தும், அறிகின்ற தம்மையும் தம்மை அறியச் செய்யும் ஆன்மாவையும் அறிவதில்லை; அவற்றைப் போலவே ஆன்மாக்களும் திருவருள் துணையால் செய்வன செய்து, செய்வினையின் பயனை நுகர் கின்றன. அவ்வாறு நுகர்ந்தும், நுகர்கின்ற தம்மையும், தமக்குத் தோன்றாத் துணையாய் உடனின்று இயக்கும் முதல்வன் திருவருளையும் அறிவதில்லை! திருவருள் இயக்க இயங்கும் ஆன்மாவின் இயக்கம் காந்தத்தின் முன்பு நின்ற இரும்பு இயங்குவது போலும் இயக்கமாம். அப்படி இயங்கினும் சலியாத காந்தம் போல, முதல்வன் சலிப்பின்றி நிருவிகாரியாய் இருப்பன் என்பது இதனால் உணர்த்தப்படும் பொருள்.

6.  கண் காது முதலியவற்றால் காணக்கூடிய பருப் பொருள் களையும் ஓசை முதலிய நுண் பொருள் களையும் காண்கின்றோம். இக்கருவிகளால் அறியப் படுவன அனைத் தும் உலகியற் பொருள்களே யாகும். இவற்றை மனத்தின்கண் வைத்துச் சிந்திப்பதால் பெறப்படும் உணர்வுப் பொருளும் உலகியற் பொருள்களை அடிப்படையாகக் கொண்டன வாதலால் உலகியல் உணர்வுப்பொருள்களே.

முதற் சூத்திரத்திற் கண்டவாறு இவ்வுலகமே நிலை பேறில்லாததாகும். நிலையில்லாத பொருளை அசத்து என்றும், நிலையுடைய பொருளைச் சத்து என்றும் கூறுவர். மெய்யைச் சத்தென்றும், பொய்யை அசத்தென்றும் கூறுவதுண்டு. இது பற்றியே “காண்ப தெல்லாம் பொய்” என்ற பழமொழியும் மக்களிடையே நிலவுகிறது. காண்பதென்பது, கண்ணாற் காண்பது, காதாற் கேட்பது வாயாற் சுவைக்கப்படுவது முதலியவற்றைப் பொதுவாகக் குறிக்கும். இவ்வாறு கண் முதலிய அறிகருவிகளால் அறியப்படுவன வெல்லாம் உருவும் அருவுமாகிய உலகியற் பொருள்களேயாய் அசத்தாய் இருக்கின்றன. எவ்வகையாலும் அறியப்படாத பொருளே கிடையாது. ஒரு பொருள் எவ்வாற்றாலும் அறியப்படா தென்றால், அப்படி ஒரு பொருளே இல்லை யென்பதே கருத்து. அவன், அவள், அது எனப் பகுத்துக் காணப்படும் உலகியற் பொருள்கள் உருவுடையன வாயினும் உருவில்லன வாயினும் எப்படியும் அவை அசத்தாகவே உள்ளன. முதல்வனாகிய பரம்பொருள் நம்முடைய அறிவால் அறியப்படுவானாயின், அறியப்படும் ஏனை உலகியற் பொருள் போல அசத்தாவான். எவ்வாற்றாலும் அறியப்படா தொழியுமாயின், பரம் பொருள் ஒன்று இல்லை யென்றே முடியும். ஆசிரியர் இக் கருத்தையே முதல்வனாகிய பரம்பொருள், “உணர் உரு எனின் அசத்து; உணராது எனின் இன்மை” என்று அருளினார் அஃதாவது இறைவன் நம் கருவிகளால் உணரப்படும் பொருள் எனின், அசத்தாவான்; உணரப்படான் எனின் அவன் என்றும் எவ்விடத்தும் இல்லாத பொருளாம்; அஃதாவது சூனியம் என்பதாம்.

பரம்பொருள் ஒன்று உண்டென்பது முதற் சூத்திரத்தால் துணியப்பட்டது. ஆகவே, அஃது உள்பொருளாகிய சத்து என்று கூறப்படும். காணப்படும் நம் உடம்பைக்கொண்டு காணப்படாத உயிராகிய நாம் உண்டென்பதை மூன்றாம் சூத்திரத்தால் துணிந் துள்ளோம். உயிரும், பரம்பொருள் போல அனாதியே நின்று நிலவுவது; அறிவு விழைவு செயல் என்ற ஆற்றல்களையுடையது; அதனால் உயிரும் சத்து என்று கூறப்படும். பரம்பொருளாகிய சத்து, உயிராகிய சத்துப் பொருளால் ஒருவகையில் உணரப்படுவதும் ஒருவகையில் உணரப் படாமையும் உள்ள சத்தாகிறது; ஒருவாற்றால் உணரப் படுவதால் அசத்தாவதும், உணரப்படாமையால் சூனிய மாவதும் இல்லை. இதனை ஆசிரியர், “இருதிற னல்லது சிவசத்தாம் என இரண்டு வகையின் உலகு இசைக்கும்” என்று அருளுகின்றார். இருதிறன், அசத்தாவதும் சூனிய மாவதுமாகிய இரண்டு திறன்; இரண்டு வகை, ஒருவாற்றால் உணரப் படுவதும் ஒருவாற்றால் உணரப் படாமையுமாகிய இருவகை, உலகியலறிவும் உயிரறிவும் கொண்டு உணருமிடத்து முதல்வனாகிய பரம்பொருள் உணரப் படுவதில்லை யென்றும், அப்பரம்பொருளின் திருவருள் அறிவு கொண்டு நோக்கின் அப்பரம்பொருள் உணரப்படும் என்றும் மெய்யுணர்வால் பரம்பொருளைக் கண்டு இன்புற்ற சான்றோர் கூறுகின்றனர். “சொல் தெரியாப் பொருள் சோதிக்கப்பால் நின்ற சோதியான்” என்று திருஞானசம்பந்தரும், “காண்பாரார் கண்ணுதலாய்க் காட்டாக்காலே” என்று திருநாவுக்கரசரும் கூறியருளுவதால் முதல்வனாகிய சிவபரம்பொருள் ஒருவாற்றால் உணரப்படுவதும் உணரப்படாமையும், “அருளாலே மெய்ப் பொருளைக் காணும் விதியுடையேன்” என்று காரைக் காலம்மையாரும். “அவனருளே கண்ணகக் காணினல்லால்” என்று திருநாவுக்கரசரும் கூறியருளுவதால், திருவருள் அறிவு ஒன்றே சிவபரம் பொருளைக் காண்டற்குத் துணையாம் என்பதும் சைவத் திருமுறைகளில் வற்புறுத்தப்படுகின்றன. இதுபற்றியே, “இரண்டு வகையின் இசைக்குமன் உலகு” என்றார். உலகு என்பது திருவருளே கண்ணாகக் கொண்டு இறைவனைக் கண்டு இன்புற்ற உயர்ந்தோரைக் குறிக்கும். மேலே கூறிய சான்றோர்களை ஆசிரியர், உலகு என உயர்த்திக் கூறியுள்ளார்.

“ உணர்உரு அசத்து எனின் உணராது இன்மையின்
இருதிறன் அல்லது சிவசத் தாமென
இரண்டு வகையின் இசைக்குமன் உலகே.”

என்பது இக்கருத்தை யுணர்த்தும் சூத்திரம்.

இங்கே கூறிய உலகியலறிவு பாசஞானம் என்றும், உயிரறிவு பசுஞானம் என்றும், திருவருள் அறிவு சிவஞானம் (பதிஞானம்) என்றும் வழங்கும். உலகியலறிவு கல்வி கேள்விகளால் உண்டாகும் செயற்கையறிவு; இது பாசஞானம், உயிரறிவு உண்மை யறிவெனப் படும் இயற்கையறிவு; இது பசுஞானம், பரம்பொருள் பசுபாச ஞானங்களால் அறியப் படாது, சிவ ஞானத்தால் அறியப்படுவது பற்றிச் சிவசத்து என்று ஆசிரியரால் குறிக்கப்படுகிறது.

இச்சூத்திரத்தால், சிவ பரம்பொருள் இயற்கையும் செயற்கையு மாகிய நம் அறிவெல்லையைக் கடந்து நிற்பினும், அதனால் அருளப்படும் சிவஞானத்தால் ஆன்மாக்களாகிய நாம் அதனை அறிதல் கூடும் என்பது வற்புறுத்தப் பெறுவது காண்க.

7.  இறைவன் உயிர் உலகு என்ற மூன்றனுள், இறைவனைச் சிவசத்து என்றும், உலகை அசத்தென்றும் முன்னைச் சூத்திரத்தால் அறிந்தோம். சத்தாகிய சிவம் அசத்தை நோக்குமாயின், அது நிலையின்றிப் போகும் மரத்தால் செய்யப்பட்ட யானை யொன்றை அது செய்யவல்ல ஒரு மரத்தச்சன் காண்பானாயின், அவனுக்குச் சத்தாகிய மரம் புலனாகுமே அன்றி அச்சதாகிய யானை வடிவம் புலப்படாது. அது போலவே, சத்தாகிய சிவத்தின் முன் அசத்தாகிய உலகம் நில்லாது மறைந்தொழியும், அசத்தாகிய உலகம் தன்னி லையில் அறியும் அறிவு இல்லாதது; அதனால் அது சத்தாகிய சிவத்தை அறியாது. இதனையே ஆசிரியர், “சத்தின் எதிர் யாவையும் சூனியம்; ஆகலின், சத்து அறியாது; அசத்து இலது ஆகலின் அறியாது” என்றார். யாவையும் என்றது அசத்தாகிய உலகியற் பொருள்களையாகும். அவை தோற்று விக்கத்தோன்றி நின்று அழிவன வாதலால் அசத்தாகும். சத்தாகிய சிவத்தின் முன் காரியமாகிய அவை நில்லாது போது கொண்டு சூனியம் என்று ஆசிரியர் கூறியருளுகின்றார். அசத்து இலது என்றது அசத்தாகிய உலகியற் பொருள் உயிரில்லாதது; அதனால் அறிவில்லாதது; ஆகவே, அதற்கு எதனையும் அறியும் திறம் இல்லை என்பதாம்.

இவ்வகையால், இறைவன் உலகு என்ற இரண்டும் சத்தும் அசத்துமாய் ஒன்றனை யொன்று அறியா என்பது காணும் நமக்கு. இவ்விரண்டின் வேறாகிய உயிர், சத்தாகிய சிவத்தையும் அசத்தாகிய உலகத்தையும் அறியும் போலும் என்ற ஐயமுண்டாகிறது. அந்த ஐயத்தை நீக்கவே ஆசிரியர், இரண்டினையும் அறியவல்லது ஆன்மா என்பாராய், “இரு திறன் அறிவுளது இரண்டலா ஆன்மா” என்று ஏழாம் சூத்திரத்தால் கூறுகின்றார். இருதிறன் அறிவுளது என்பது, சத்தும் அசத்துமாகிய இரண்டினையும் அறியும் அறிவு உள்ளது என்றும், இரண்டினாலும் அறியும் அறிவுள்ளது என்றும், இரண்டினிடத்தும் நின்று அறியும் அறிவுள்ளது என்றும் பொருள் கொள்ளப்படும். சத்தாகிய சிவத்தால் அருளப்படும் சிவஞானத்தால் உயிர் அச்சிவத்தை அறியும் அறிவு பெறுகிறது; அசத்தாகிய கருவி கரணங்களைக் கொண்டே உலகியலறிவை அறியும் அறிவுடையதாகின்றது. அதனால் இருதிறனால் அறியும் அறிவுளது என்று பொருள் கொள்ளப்பட்டது. சிவத்தின்கண் தோய்ந்து சிவமாய் நின்று சிவபோகத்தை அறிந்து நுகர்வதும், அசத்தாகிய உலகியலில் தோய்ந்து உலகப்பொருளாய் இயைந்து உலகியல் இன்பத்தை அறிந்து நுகர்வதும் செய்வதால், உயிராகிய ஆன்மா இரண்டின்பாலும் அறியும் அறிவு உள்ளது என்று பொருள் கொள்ளப்பட்டது. இக்கருத்தெல்லாம் விளங்கவே.

“ யாவையும் சூனியம் சத்தெதிர், ஆகலின்
சத்தே அறியாது அசத்து இலது அறியாது
இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா.”

என்று ஆசிரியர் அறிவுறுத்துகின்றார்.

இதன்கண் சத்தாகிய சிவத்தையும் அசத்தாகிய உலகத் தையும் வேறுபடவைத்தும், துணையாகக் கொண்டும், இடமாக நின்றும் அறியும் உயிராகிய ஆன்மா, சத்தாகிய சிவமும் அன்று; அசத்தாகிய உலகியற் பொருளும் அன்று என அறிகின்றோம். இதபற்றியே ஆசிரியர், ஆன்மாவை இரண்டலா ஆன்மா என்று கூறியருளினார். சத்தன்றாயினும் சத்தோடியைந்து சத்தாகிய சிவத்தையும், அசத்தோடு கூடி அசத்தாய் நின்று அசத்தையும் அறியும் தன்மையுடையதாக இருப்பதால் இந்த ஆன்மாவைச் சதசத்து என்று சான்றோர் கூறுவாராயினர். “சத்து அசத்து அறிவது ஆன்மா, தான் சத்தும் அசத்தும் அன்று. நித்தமாய்ச் சதசத்தாகி நின்றிடும்” என்று அருணந்தி சிவனாரும், “சதசத்தாம் உயிர்” என்று உமாபதி சிவனாரும் விளக்கினார்.

8.  சதசத்தெனப்படும் ஆன்மாக்களாகிய நாம் அசத்தாகிய உடம்போடு கூடி அசத்தாகிய உலகியலில் அழுந்தி உலகியல் வாழ்க்கையை நடத்துகின்றோம். இவ்வாழ்க்கையில் கண்,காது முதலிய கருவிகளால் அறிவன அறிவதும், கை, கால், வாய் முதலிய கருவிகளால் செய்வன செய்வதும் நம்முடைய செயல்களாகின்றன. இச்செயல்களில் ஈடுபடுங் கால் நமக்கு அறிவு விளக்க முண்டாகிறது. அப்போது இன்பமும் உண்டாகிறது. ஆன்மா அந்த இன்பத்துக்கு அடிமையாகி, அந்த அசத் தாகிய கருவிகள் காட்டும் காட்சியையே விரும்பி அவை இயங்கும் நெறியிலேயே செல்லுகிறது. உலகியல் வாழ்க்கையோடு தொடர்புண்டானதால் விளையும் பயன்கிட்டாது போகிறது. ஆன்மா, தனக்கும் அசத்தாகிய உலகுக்கும் உள்ள வேறுபாட்டியல்பை யெண்ணி, உலகு உடல் கருவிகளைக் கருவியாகக் கொண்டு பெறுதற்குரிய பயனை எய்தவேண்டும். அப்பயன் உண்மை அறிவால் உணரப்படும். அந்த அறிவையும் முதல்வன் உடனாய் நின்று உணர்த்தி வருகின்றான். இவ்வகையால், உண்மை யறிவின் விளக்கத்தால், உடல் கருவி உலக வாழ்வுகளைப் பயன் கொண்டு வரும் ஆன்மாவுக்கு, மலத்தால் தடையுண்டிருக்கும் சிறுமை கெடத் தொடங்குகிறது அந்த நிலையில் உண்ணின்று தோன்றாத் துணையாய் உண்மை அறிவைக் காட்டியருளும் முதல்வன், ஞானாசிரியன் உருவில் ஆன்மாக்களின் எதிரில் வந்து உண்மையறிவாகிய சிவஞானத்தை நல்குவன். மாணிக்கவாசகருக்குத் திருப்பெருந்துறையில் குருந்த மரத்தின்கீழ் எழுந்தருளியதும், மெய்கண்ட தேவருக்குத் திருவெண்ணெய்நல்லூரில் பரஞ்சோதி முனிவர் எழுந்தருளியதும் போல எழுந்தருளி வந்து சிவஞானத்தை உதவுவான்.

“வேந்தன் ஒருவனுடை மகன் வேடர் கூட்டத்திற் பட்டு அவர் தருவனவற்றைப் பெற்று வளர்ந்துவந்தான். வளர்ந்தவன், தன்னை ஓர் அரசன் மகன் என்பதை மறந்து, வேடர் வயமே நின்று தன்னை அவ்வேடரின் வேறல்லேன் என்றே நினைக்கலுற்றான். அவன் வளர்ச்சியைப் பார்த்துக் கொண்டே வந்த வேந்தன், அவனுக்குச் சொன்னால் கேட்டுத் தெளிந்து அச்சொல் வழி நிற்கக் கூடிய செவ்வி வருவது கண்டான். உடனே தானும் ஒரு வேடன் உருவில் அவனெதிரில் வந்து அவனோடு சொல்லாடி, “நீ வேடன் அல்லை; வேடர்களிடையே வளர்ந்து உன்னை இன்னானென அறியாது மறந்து விட்டாய்; நீ ஒரு வேந்தனுடைய மகன்” என்று சொல்லித் தெருட்டினான். உடனே அவன், வேந்தன் இயல்புகளைக் கேட்டறிந்து வேந்தனுடைய பண்புகளை யெண்ணி வேந்தனாய் விளக்கமுற்றான்” என்பது போலும் வரலாற்றைச் சொல்லிச் சிவஞானம் உணர்த்தவரும் ஞானாசிரியன், ஆன்மாக்களாகிய நம்மைத் தெருட்டத் தொடங்குவன். “நான் மேலே சொன்ன அரசன் மகன் ஆன்மாவாகிய நீ; வேடர் கூட்டம் என்றது, உனக்குக் கருவிகளாக அமைந்த ஐம்புலன்களாகும்; அவ்வரசன் மகன் போலவே ஆன்மாவாகிய நீ உன்னை மறந்து அக்கருவிகளின் வயமே நின்று ஒழுகுகின்றாய்; நீ இவற்றின் வேறு; அறிவே உனக்கு உரு; உண்மையறி வின்பமாகிய சிவபோகத்தை நுகர்தற்கே நீ உரியை; சிவானந்த ஞான வடிவு கொண்டு சிவ பரம் பொருளின் திருவடி நீழலில் என்றும் பொன்றாத இன்பம் பெறுதல் வேண்டும்” என்று அறிவுறுத்துவன். இதனை ஆசிரியர், “ஐம்புல வேடரின் வளர்ந்து அயர்ந் தனை எனத் தம் முதல் குருவுமாய் உணர்த்த” என்று அருளுகின்றார். தம் முதல் என்றது ஆன்மாக்களுக்கு முதல் வனாகிய இறைவனைக் குறிக்கும். குருவுமாய் என்றது, இதற்கு முன் னெல்லாம் உயிர்க்குயிராய் உடனிருந்து உள்ளே அறிவருளி வருவதேயன்றி குருவாகவும் வருகின்றான் என்பதைக் குறிக்கிறது. சொன்ன சொல்லைக் கேட்டு அச்சொல்வழி நிற்கக்கூடிய செவ்வி வரக் கண்டு வேந்தன் அறிவுறுத்தியது போல, ஆன் மாக்களாகிய நமக்கு ஞானவுரை கேட்டு அதன் வழியே நிற்கக்கூடிய தகுதி வரும்போதுதான் ஞானாசிரியன் வருவன். செய்யப்படும் தவத்தால் தான் ஆன்மாக்களுக்கு அத்தகுதியும் செவ்வியும் உண்டாகும். ஆதலால், “தவத்தினில் உணர்த்த” என ஆசிரியர் அறிவுறுத் தருளுகின்றார்.

அரச குமரனுக்கு வேடர் கூட்டத்தின் தொடர்பு, வேந்தன் சொல் கேட்டு வேந்தாகும் பண்பு பெறுதற்குக் கருவியாயிருந்து, அதனைப் பெறத் தலைப்பட்டதும் விடுபட்டது போல, ஆன்மா ஞானாசிரியனது ஞானவுரை கேட்டு ஞானநெறி யொழுகும் செவ்வி பெறுதற்கு உடல் கருவி முதலிய அசத்தின் தொடர்பு கருவியாகிறது. ஞானம் பெற்று ஞானநெறி நிற்கத் தலைப்படுங்கால் ஆன்மா அசத்தின் தொடர்பை விட்டுவிடுகிறது. “நிலையாத உலகியல்பு கண்டு நிலையா வாழ்க்கை யல்லேன்” என்று அறிந்து திருநாவுக்கரசர் அறத் துணிந்தது போல, ஆன்மா, உடல், கருவி உலகு முதலிய அசத்தின் வேறாதலால் அதனோடு உளதாகிய தொடர்பு அற்றொழுகுவதே அது செய்யத்தக்கது. “ஒன்றலாவுயிர் வாழ்க்கையை நினைந்திட்டு உடல் தளர்ந்து அருமா நிதி இயற்றி, என்றும் வாழலாம் எமக்கெனப் பேசம் இதுவும் பொய்” என்று நம்பியாரூரர் நினைந்து அசத்தின் தொடர்பை விட்டது போலவும், “எண்ண மோ உடல், வாய், மூக் கொடு, செவி, கண் என்றிவை நின்கணே வைத்து மண்ணின் மேல் அடியேன் வாழ்கிலேன்” என்று மணிவாசகர் கருதி யொழுகியது போலவும் ஒழுகுவதனால் அசத்தின் தொடர்பு விடும்.

ஆன்மாவுக்குச் சதசத்து என்ற பெயருண்டானது, சத் தோடும் அசத்தோடும் தொடர்புற்று நிற்கும் இயல்பினால் தான், சத்து அசத்து என்ற இரண்டிலொன்றைச் சார்ந்து நிற்பது உயிர்க்கு இயல்பேயன்றி வேறே தனித்து நிற்கும் இயல்பு அதற்குக் கிடையாது. சதசத்தாகிய ஆன்மா அசத்தின் தொடர்பு விட்டவழி, சத்தாகிய சிவத்தையே சென்று சாரும். ஊசலாடும் ஒருவனுக்கு அதன் கயிறு அறுமாயின் அவன் தரையைச் சார்வது போல, ஆன்மா அசத்தின் தொடர்புவிட்டால் சத்தாகிய சித்தையே சாரும். சத்தாந்தன் மையாலும் சித்தாந்தன்மை (அறிவுடையது என்னும் தன்மை) யாலும் ஆன்மாவுக்குச் சத்தாகிய சிவம் அந்நியமன்று; அதனால் ஆன்மா சிவத்தையே சென்று சாரும் என்பது தெளிவாம். ஆன்மாவுக்கு ஏனை உடல் கருவி முதலிய அசத்து அந்நியம். அசத்தைச் சார்ந்து அதுவது வாய் இயைந்திருந்த போதும், ஆன்மா அசத்தின் வேறாக இரண்டு பட்டு நின்றதுபோலின்றி சத்தாகிய சிவத்தைச் சார்ந்து ஒன்றுகிறபோது அதன்கண் ஒன்றி உடனாய் நிற்கும். இதனை உணர்த்துவதற்கு ஆசிரியர், “விட்டு அன்னியம் இன்மையின் அரன்கழல்செலுமே” என்றார் இதனை,

“ ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே.”

என வருவது காண்க. அரன்கழல் சென்று சேர்ந்த திருஞான சம்பந்தரைச் சேக்கிழார் பெருமான், “போதநிலை முடிந்த வழிப்புக்கு ஒன்றி யுடனானார்” என்றும், திருநாவுக்கரசரை. “நண்ணரிய சிவானந்த ஞான வடிவேயாகி அண்ணலார் சேவடிக் கீழ் ஆண்ட அரசு அமர்ந்திருந்தார்” என்றும் கூறுவதனால் இது நன்கு தெளியப்படும். “சிவானந்த ஞான வடிவேயாகி” என்றது ஒன்றுதல்; “அமர்ந்திருந்தார்” என்றது உடனாதல். இவ்வாறு ஒன்றியுடனாதல் என்பதையே வடசொல்லறிஞர், அநந்நிய மாதல் என்றும் அத்துவிதமாய்க் கலத்தல் என்றும் கூறுகின்றனர்.

9.  ஆன்மாவாகிய உயிருக்கு இயற்கையும் செயற்கையுமாக இருவகையறிவு உண்டு. இயற்கையறிவு என்பது, உடல் கருவியாக உயிரிடத்துண்டாகும் அனுபவ அறிவு. செயற்கை யறிவென்பது கல்வி கேள்விகளினால் உண்டாகும் அறிவு. இயற்கை யறிவில்லாத விடத்துச் செயற்கையறிவு எத்துணைவரினும் பயன்படாது. “வாய்த்துத் தனக்கு இயல்பாய் வந்த அறிவு இல்லார்க்குச் சாத்திரங்கள் என்ன செய்யும்” என்று சான்றோர்கள் கூறுவது காணலாம். இயற்கையறிவு உடற் கூற்றாலும், சூழ்நிலையாலும், குடிவரவாலும் உளதாவது; செயற்கையறிவு கற்கப்படும் கல்வி வகையாலும், கேள்வி வகையாலும் உளதாவது. இயற்கையனுபவ வறிவைப் பசுஞான மென்றும், செயற்கை யறிவைப் பாசஞான மென்றும் சைவ நூல்கள் கூறும். ஒருவன் பசுஞானத்தாற் கண்ட காட்சிகளையே நூல் வடிவில் வைத்து விடின், அது தன்னைப் பயிலும் பிறர்க்குப் பாசஞானமாகி விடும். பாச ஞானத்தால் பெறுவது பல அறிஞர்கள் கண்டுரைத்த பசு ஞானத் தொகுதியே. வேதம் ஆகமம் முதலிய எல்லா வற்றாலும் உண்டாகும் அறிவு பாசஞானமே யாகும். உடலிள்ள பல கருவிகளின் வாயிலாகத் தொகுவது பசு ஞானம்; பலருடைய பசுஞானக் காட்சிகளை ஒருங்கே தொகுத்து நல்குவது பாசஞானம். ஆகவே, பசுபாசஞானங்கள் என்பவை ஆன்மாக்கள் தம்முடைய உடல் கருவி உலகம் முதலியவற்றால் பெறும் அறிவு என்பது துணியப்படும். இவ்வுடல் முதலிய கருவிகள் அசத்து; அசத்து எனவே அவற்றிற் கெனத் தனியே அறிவில்லை யென்பது விளங்கும். அசத்து அறிவில தாகலின், சத்தாகிய சிவத்தை அறியாது என்று ஆசிரியர் முன்பே அருளிச்செய்துள்ளார். அதனால், அந்த அசத்துத் துணை செய்ய வந்த பசுபாசஞானங்கள் சிவத்தை அறிதற்குத் துணையாகா என்பது தெளிய விளங்கு கிறது. இது பற்றியே ஆசிரியர் “ஊனக்கண் பாசம் உண ராப் பதியை” என்றார். பாசம் என்றது பாசஞானம் ஊனக்கண் என்றது. அசத்தாகிய கண் முதலிய கருவி கொண்டு அறிய வரும் பசுஞானம். கண் முதலிய உடற் கருவிகள் அசத்தாகிய ஊனம் உடைய வாதலால், அவற்றால் பெறப்படும் ஞானம். ஊனக்கண் எனப்பட்டது. ஆனது பற்றியே, அசத்தாகிய உடம்பு என்றற்குத் திருஞான சம் பந்தர். “ஊனமாம் உடம்பு” என்றும், “ஊனத்திருள்” என்றும் அறிவுறுத்தியுள்ளார். கண்ணென்றது அறிவு. பசுபாச ஞானங்களால் சிவபரம்பொருளைப் பார்க்க முடியாது. பதி என்றது சத்தாகிய சிவபரம் பொருளை என அறிதல் வேண்டும்.

பசுபாச ஞானங்களால் காணப்படாத முதல்வன் அவனது திருவருளே கண்ணாகக் காண்பார்க்குக் காட்சியளிப்பன். அதனா லன்றோ முதல்வனுக்குச் சிவசத்து என்பதும் ஒரு பெயராயிற்று. சத்தாதலால் உணரப்படாதெனவும், சிவசத்தாதலால் சிவஞானம் ஒன்றினாலே உணரப்படு மெனவும் முன்னே கூறியிருக்கின்றார். சிவஞானம் ஞானாசிரியரால் அருளப்படுகிறது. சிவஞானமே கண்ணாகக் கொண்டு புறக்கருவிகளைக் கொள்ளாமல் அகக்கருவி யாகிய சிந்தையில் விளங்கும் அறிவின் கண்ணே ஆராய்தலே வேண்டுவது என்பதை நாம் தெளிகின்றோம். இது தெளியவே. ஆசிரியர் “ஊனக்கண் பாசம் உணராப் பதியை, ஞானக் கண்ணினில் சிந்தை நாடி” என்று அருளிச் செய்துள்ளார். ஊனக் கண்ணும் பாசமும் உணரமுடியாத பதியை ஞானக் கண் கொண்டு சிந்தையின்கண் நாடுக என்பது இதன் பொருள்; அஃதாவது பசுஞானத்தாலும், பாசஞானத்தாலும் உணர முடியாத இறைவனை அவனது திருவளாகிய சிவஞானத்தால் சிந்தையின்கண் ஆராய்ந்து உணர வேண்டும் என்பது ‘கூறுக’ என்பதைக் ‘கூறி’ என்று சான்றோர் வழங்குவது போல, நாடுக என்பதை நாடி என்று வழங்குகின்றார். இக்கருத்தையே அருணந்தி சிவனார். “பாசஞானத் தாலும் பசு ஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞானத்தாலே நேசமொடும் உள்ளத்தே நாடி” என்று கூறுகின்றார். இங்கே அவர் நாடி என்பதற்கு ஆராய்க என்று பொருள் கொள்ளாமல் ஆராய்ந்து என்றே கொள்ளுகின்றார். மற்று சிவஞான முனிவரோ, ‘நாடுக’ என்றே பொருள் சொல்லுகின்றார். முனிவர் உரையே அறிஞர் அனைவராலும் ஈண்டுக் கொள்ளப்படுகிறது.”

ஞானாசிரியன் திருவருள் ஞானத்தை நல்கப் பெற்றால், ஆன்மாவாகிய நம் அறிவுக்கு உடல் கருவி உலகுகளாகிய அசத்தின் தொடர்பு வேறுபட்டுத் தோன்றும். அதனால் அகக் கருவியாகிய சிந்தையின்கண் வேறுபட்ட அதன் தொடர்பு வந்தவாறும், அதனை நாமாகவே மயங்கி அவனால் பிணிப் புண்டு கிடக்கு மாறும், நமக்கும் அவற்கும் தொடர் பொன்றும் இல்லாதவாறும் விளங்கும். அவ்விளக்கத்தால் ஆன்மாவாகிய நம்மையே அத்தொடர் பினின்றும் நீக்கி நிறுத்திக் காணத் தொடங்குவோம். நம்மை அறிந்தாலன்றி நாம் நம்மை அத்தொடர்பினின்றும் நீக்க முடியாது, நம்மையே அறிய முயல்வோமாயின், அறிய நிற்கின்ற உடல் கருவி முதலிய அசத்தை நிக்குவது இனிது கைகூடும். இவ்வாறே நம்முடைய முன்னோர் களாகிய சான்றோர்கள் முயன்றிருக்கின்றார்கள். பட்டினத் தடிகள்.

“ மேவிய புன்மயிர்த் தொகையோ, அம்மயிர்
பாவிய தோலின் பரப்போ, தோலிடைப்
புகவிட்டுப் பொதிந்த புண்ணோ, புண்ணிடை
ஊறும் உதிரப் புனலோ, கூறுசெய்து
இடையிடை நிற்கும் எலும்போ, எலும்பிடை
முடைகெழு மூளை விழுதோ, வழுவழுத்து
உள்ளிடை யொழுகும் வழும்போ, மெள்ளநின்று
ஊரும் புழுவின் ஒழுங்கோ, நீரிடை
வைத்த மலத்தின் குப்பையோ, வைத்துக்
கட்டிய நரம்பின் கயிறோ, உடம்பிற்குள்
பிரியா தொறுக்கும் பிணியோ, தெரியாது
இன்னது யான்என்று அறியேன், என்னை
எங்கும் தேடினன், யாதிலும் காணேன்………
திருவிடை மருத! பொருவிடைப் பாக!
மங்கை பங்க! கங்கை நாயக! நின்
தெய்வத் திருவருள் கைவந்து கிடைத்தலின்
மாயப் படலம் கீறித் தூய
ஞான நாட்டம் பெற்றபின் யானும்
நின்பெருந் தன்மையும் கண்டேன்; காண்டலும்
என்னையும் கண்டேன், பிறரையும் கண்டேன்;
நின்னிலை யனைத்தையும் கண்டேன்; என்னே!
நின்னைக் காணா மாந்தர்
தன்னையும் காணாத் தன்மையோரே ”*

என்றும். “நானார் என்னுள்ளமார் ஞானங்களார் என்னை யாரறிவார், வானோர்பிரான் என்னை ஆண்டிலனேல்” என்று மாணிக்கவாசகனாரும் ஞானக்கண் கொண்டு சிந்தையில் நாடியது காணலாம்.

இவ்வண்ணம், உடல் கருவி முதலிய அசத்தை வேறு வைத்து ஆராயும்போது, கடுவெயிலில் பேய்த்தேர் (கானல்) தண்ணீர் போல் காட்சி தருவதுபோல, நம்மின் வேறாகாது ஒன்றாய் நாமாகவே காட்சியளித்த அசத்துப் பேய்த்தேர் போல நீங்கி மறைந்தொழியும்; ஒழியவே, இறைவனது திருவருள் நிலையமாகிய அவன் திருவடி நீழல் காட்சிப்படும்; ஆன்மாவும் அந்த நீழலைச் சென்று சேர்ந்துவிடும். இதனை ஆசிரியர் “உராத்துனைத் தேர்த்தெனப் பாசம் ஒருவத் தண்ணிழலாம் பதி” என்று அறிவித்தருளுகின்றார், பட்டினத்தடிகளும், “தூய ஞான நாட்டம் பெற்றபின் மாயப் படலம் கீறி நின் பெருந் தன்மையும் கண்டேன்” என்று கூறுவது காண்க. பேய்த் தேரை ஆசிரியர் உராத்துனைத் தேர் என்று இயம்புகின்றார். உரா என்பது ஊரா என்பதன் குறுக்கம். துனை, விரைவு, ஒருவராலும் ஊரப்படாது விரைந்து செல்லும் தேர் என்று பேய்த்தேர் குறிக்கப் படுகிறது. குதிரை மலையை ஓடாக் குதிரை என்றும், வேங்கை மரத்தைப் பாயா வேங்கை என்றும் சான்றோர் சொல் லழகு தோன்றக் கூறுவது வழக்கம். இதனை வெளிப்படை யென்னும் அணிவகை என்பர். இவ்வாறே பேய்த் தேரை, உராத்துனைத்தேர் என்று ஆசிரியர் அருளிச் செய்கின்றார். சங்கச் சான்றோரும், “உருவில் பேஎய் ஊராத் தேர்” (அகம். 67) என்று சொல்லியிருக் கின்றார்கள்.

இவ்வாறு ஞானநாட்டம் பெற்று மாயப்படலம் கீறி முதல்வன் திருவடி நீழலைக்கண்ட திருநாவுக்கரசர்,

“ மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.”

என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கின்றார்.

இனி, உடலிடமாக நின்று ஞானக்கண் கொண்டு சிந்தையில் நாடி, முதல்வன் திருவருள் நிலையைக் கண்ட பின்பு, அதனிடமே ஒன்றியிருப்பதற்கே உள்ளத்தில் விருப்ப முண்டாகும்; திருவருள் காட்சி தோன்றும் போதே பேரின்பம் சுரக்கும்; “சிந்திப்வர்க்குச் சிறந்து செந்தேன் முந்திப் பொழிவன (முதல்வன்) அடித்தலம்” என்று திருநாவுக்கரசர் அருளுவதைக் காணலாம். இன்பத்தை நாடுவதே உயிர்க்கு இயல்பாதலால், நம் உள்ளம் திருவருள் காட்சியின்பத்தைப் பெறுவதற்கே பெரிதும் விரும்பும். ஆயினும், அவ்விருப்பத்தை, உடல் கருவி உலகுகள் போந்து சிதைத்து, விருப்பமைந்த உயிரின் உள்ளத்தைத் தாம் கவர்ந்து கொள்ளும். பாசி படர்ந்த நீர்நிலையில் கல்லைவிட்டெறிந்தால், கல் விழுந்தவிடத்தில் அப்பாசி சிறிது நீங்கும்; பின்னர் வந்து மூடிக்கொள்ளும்; அதுவே போல், திருவருட்காட்சியில் முயலும்போது அசத்தாகிய பாசத்தில் தொடர்பு நீங்கும் அக்காட்சி நீங்கும்போது அப் பாசம் வந்து மூடிவிடுகிறது. இதனை, “பாசிபடு குட்டத்தில் கல்லினை விட்டெறியப்படும் பொழு து நீங்கி அது விடும்பொழுதில் பரக்கும்; மாசு படுமலமாயை அருங்கன்மம் அனைத்தும் அரனடியை உணரும் போது அகலும், பின் நணுகும்” என்று அருணந்தி சிவனார் நம் ஆசிரியர் பால் நேர்முகமாகக் கேட்டறிந்து உணர்ந்து சொல்லு கின்றார் அரனடியை உணரும் உயிர், அந்த அடியின் கீழே இருக்க விரும்பும் என்பது உண்மையே; ஆனால் அவ்வாறு இருப்பதற்கு வழி யாது? அதற்கு ஒரு வழி உண்டு; அஃதாவது திருவைந் தெழுத்தை இடையறாமல் முறைப்படி எண்ணுவது என்பாராய், “விதி எண்ணும் அஞ்செழுத்தே” என்று ஆசிரியர் அறிவுறுத்தருளு
கின்றார். எண்ணும் - எண்ண வேண்டும்; நீர் இதைச் சொல்லும் என்றால் நீர் இதைச் சொல்ல வேண்டும் என்று பொருளாவதுபோல எண்ணும் என்பது எண்ண வேண்டும் என்று பொருள்படுகிறது.

இனி, திருவைந் தெழுத்தென்பது, சி, வ, ய, ந, ம என்ற ஐந்தெழுத்துக்களையும் குறிக்கும். இவ்வைந்தெழுத்தையும் கூட்டவரும் சிவய நம என்பது வடமொழியில் ஒரு சொற் றொடராகும். இங்கே, “அது சொற்றொடர் அன்று; எழுத்து,” என்பதற்காகவே திருவைந்தெழுத்து என்று சிறப்பாக எடுத்துக் கூறப்படுகிறது. இவ்வெழுத்துக்கள் இறைவன் திருப்பெயர்களுள் ஒன்றான நமசிவ என்பதில் உள்ள எழுத்துக்கள். நமசி வாய என்பது இறைவன் திருப்பெயர். அதை மாற்றிச் சிவாயநம என்றால் பெயர்த்தன்மை நீங்கி எழுத்தாகிவிடுகிறது திருவைந் தெழுத்தை நினைந்து ஓதவேண்டுமாயின், நமசிவாய என்ற திருப்பெயரை மாற்றி எழுத்தாக்குவது முதல் விதி; இல்லையானால் திருவைந் தெழுத்துக்களை இலக்கணப்படி பெற முடியாது. “நந்தி நாமம் நமச்சிவாய” என்று திருஞான சம்பந்தரும், “எந்தையார் திருநாமம் நமச்சிவாய” என்று திருநாவுக்கரசரும் அருளிச் செய்திருப்பது காண்க.

இவ்வெழுத்துக்களில் சி என்பது சிவபரம்பொருளையும், வ என்பது அவனது அருளையும், ய என்பது உயிரையும், ந என்பது உயிர் அசத்தோடு கூடும் போது சத்தை நினையாது அசத்தாய் இயைந்து அசத்து நல்கும் நுகர்ச்சிகளை நுகர்வதற்கும், அசத்தை விட்டுச் சத்தாகிய சிவத்தோடு கூடும்போது அசத்தை நினையாது சிவத்தோடு சிவமாய் இயைந்து சிவபோகத் தை நுகர்வதற்கும் உயிரை மறைத்து நின்று இயக்கும் இறைவனு டைய மறைப்புச் சத்தியையும், ம என்பது மலத்தையும் குறிக் கும். இவ்வெழுத் தைந்தினையும் எண்ணுங்கால், சிவத்துக்கும் உயிர்களுக்கும் உள்ள தொடர்பும், சிவத்துக்கும் உலகத்துக்கு முள்ள தொடர்பும், உயிர்களுக்கும் உலகத்துக்குமுள்ள தொடர்பும், அத்தொடர் புண்டான காரணமும், அதனால் விளையும் பயனும் எண்ணத்துக்கு வந்து இறைவன் திருவருள் நீழலை விட்டு நீங்காது நிற்கும் நிலைமையைக் கைவரச் செய்யும். இதனை,

“ அண்ணல் முதலா அழகார் எழுத்தைந்தும்
எண்ணில் இராப்பகலற் றின்பத்தே-நண்ணி
அருளா னதுசிவத்தே யாக்கும் அணுவை
இருளா னதுதீர இன்று*”

என்று திருவதிகை-மனவாசங் கடந்தார் கூறியருளுவது காணலாம். இவ்வாறு இத்திருவைந்தெழுத்தையே புணையாகப் பற்றிக் கொண்டு இடையறாது எண்ணிப் பேரின்பம் சுரக்கப் பெற்று நுகர்ந்த மணிவாசகப் பெருமான்.

“ நானேயோ தவம் செய்தேன்! சிவயநம எனப்பெற்றேன்.
தேனாய் இன் னமுதமுமா மாய்த் தித்திக்கும் சிவபெருமான்
தானேவந்து எனதுள்ளம் புகுந்துஅடியேற் கருள்செய்தான்
ஊனாரு முயிர்வாழ்க்கை யொறுத்தன்றே வெறுத்திடவே.”

என்று தேன்சொட்டப் பாடும் திருவாசகத்தால் நாம் அறிய அருளிச் செய்கின்றார்.

10. இவ்வாறு திருவைந்தெழுத்தை விதிப்படி யெண்ணு வதால் இறைவனுக்கும் உலகுக்கும் உலகில் வாழும் உயிர்களாகிய நமக்கும் உள்ள தொடர்பு விளங்கும் என்று முன்பு கண்டோம். நுண்ணிய மாயையாகிய உள்பொருளிலிருந்து உடல் கருவி உலகு முதலியவற்றை இறைவன் படைக்கிறான். அதனால் அவன் செய்பவனாகின்றான்; உடல் கருவியுலகுகள் செய்யப்படும் பொருள்களாகின்றன. செய்யப்படும் பொருள் செய்பவனது உடைமையாகும். எவ்வாறெனின், மாயை என்பது முதல்வனுடைய திருவருளாற்றலை (சத்தியை) இடமாகக் கொண்டு கிடக்கும் ஒருவகை ஆற்றல்; அந்த ஆற்றலைக்கலக்கி உடல் கருவி உலகுகளைச் செய்தருளுவது பற்றி அவன் செய்பவனானான்; அவை செயப்படு பொருள்களாயின. தன்பால் உள்ள ஒன்றைக்கொண்டு ஒரு செய் பொருளை ஒருவன் செய்வானாயின் அச்செயப்படுபொருள் அவனது உடைமையாகிற தன்றோ? அதுபோலவே இவ்வுலகமும் உலகியற் பொருளும் அவற்றிடை நிலவும் நம் உடலும் அதற்குள் இருக்கும் கருவிகளும் ஆகியயாவும் இறைவனுடைய உடைமை யாகும். இதுபற்றியே மணிவாசகர் முதலிய அருட் செல்வர் இறைவனை, “உடையவனே” என்றும், “உடையாய்” என்றும் அடிக்கடி எடுத்தோதியிருக்கின்றனர். இவ்வுடல் கருவி முதலியன இறைவனது உடைமையேயாயினும் இவற்றைப் பயன்கொள்ளுவது உயிராகிய ஆன்மாவேயன்றி அவனன்று. ஆன்மா இவ்வுடல் கருவி முதலியவற்றைத் தன்னுடைய பொருளாகவே எண்ணி அவற்றின் பால் பற்றுக்கொள்ளுகிறது. தந்தை ஒருவன் ஒரு சட்டையைத் தைத்துக் கொண்டுவந்து தன் மகனுக்குக் கொடுத்தால், அவன் அதனைத் தனதாகக் கொண்டு அதன்பால் பற்றுக்கொள்ளுகிறான்; அதுபோலவே, ஆன்மாவின் செய்கையும் உளது. தான் பற்று வைத்துப் பயன் கொள்ளும் சட்டையை உதவிய தந்தையை, மகன் “எந்தையே” என அன்பு செய்யும் முறைமையிலேயே, நம் சான்றோர் சிவபெருமானான முதல்வனைத் தந்தையே என்றும், எந்தையே என்றும், பலபடியாக அன்பு மொழிகளால் அழைப்பதை அவர்களின் திருமுறைகளில் பார்க்கின்றோம்.

இனி, ‘இறைவன் இவற்றை உண்டுபண்ணி ஆன்மாக்களுக்குக் கொடுப்பானேன்’ என்றோர் எண்ணம் இந்நிலையில் நமக்கு உண்டாகிறது. ஆன்மாக்களை அநாதியே மலமானது பிணித்து மறைத்து இருளில் கிடத்தியிருக்கிறது; தன்னைப் போலவே அறிவு விழைவு செயல் முதலிய ஆற்றல் படைத்த சத்தாகிய ஆன்மா மலத்தால் கட்டுண்டிருக்கும் நிலையை நோக்கியருளும் இறைவன், ஆன்மாவின்பால் பேரருள் கொண்டு மாயையிலிருந்து இவ்வுடல் கருவி முதலியவற்றைப் படைத்துக் கொடுத்து உதவுகின்றான். ஆற்றல் வடிவாகிய மாயை என்பது ஒளி மயமாக இருக்கிறதென்று இன்றைய விஞ்ஞான அறிவு உறுதிப்படுத்துகிது. மலவிருளில் கிடக்கும் உயிர் ஆற்றலாகிய ஒளிப்பொருளிலிருந்து உண்டாக்கப்படும் உடல் கருவி முதலியவற்றைத் துணையாகக் கொண்டு, அறிவதும், விழைவதும், செய்வதும் செய்து மலவிருளிலிருந்து விடுதலைபெற முயல்கிறது. இவ்வகையில் முதல்வன் தன்பொருட்டு உடல் கருவி முதலிய வற்றைப் படைத்து மலவிருளிலிருந்து வீடுபேறு எய்துவதற் காகத் தனக்கு நல்கியிருப்பதை உயிர் நினைக்கும்; நினைந்த வழி, அதற்கு அம் முதல்வன்பால் அளவிறந்த நன்றியுணர்வு உண்டாகும். அதனால் ஒவ்வொரு கணமும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் கடமை உயிர்க்கு மிகுகின்றது.

இவ்வண்ணம் உடல் கருவிகளை நல்கிய இறைவன், அம் மட்டில் நின்று போகாது, அவற்றோடு கலந்து ஒன்றாயும், உயிரொடு கூடி உடனாயும் உண்ணின்று தோன்றாத்துணை செய்வது திருவைந் தெழுத்தை விதிப் படி ஓதுவதால் உணரப்படுகிறது; உடலோடு கூடி உயிர் செய்யும் ஒவ்வொரு செயல் நிகழ்ச்சிக்கும் இறைவன் தோன்றா முதலாய் இருப்பதும் விளங்குகிறது. அவனது கலப்பில்லையாயின் உடல் கருவி முதலியவற்றில் ஒழுங்கான செயல் நிகழாது; மலத்தால் மறைப் புண்டிருத்தலால் உயிர்க்கும் அறிவு முதலியன தொழிற் படா; ‘அவனன்றி ஓரணுவும் அசையாது’ என்பது உண்மையாகிறது.

இவ்வாறு எல்லாச் செயற்கும் இறைவனே முழுமுதலாக இருப்பவும், அவன் உயிரை முன்னிருத்தித் தான் அதனோடு ஒன்றியுடனாய் நிற்கின்றான். அதனால், உயிர், எதையும் தானே செய்வதாகவும் தானே முழு முதலாகவும் நினைந்தும் சொல்லியும் செய்தும் ஒழுகுகிறது. இதனால் விளையும் நன்மை தீமைகட்கு உயிரே பொறுப்பாளியாகின்றது. அப்பொறுப்புக்கு ஆன்மாக்களாகிய நாம் உரியராகா விட்டால் விளையும் நன்மை தீமைகள் நம்மைச் சேர மாட்டா. இதற்கு வழி யாது?
இதுவரையில் நம்மை முற்பட வைத்து நம்முள் கலந்து உடனாய் நின்ற முதல்வனை முன்னே நிறுத்தி அவனுக்குள் நம்மை ஒன்றுவிப்பதுதான் இதற்குத் தக்க வழியாம். இதை நமது ஆசிரியர், “அவனே தானே ஆகிய அந்நெறி, ஏகனாகி இறைபணி நிற்க” என்று அறிவுறுத் தருளுகின்றார். அவன் என்றது இறைவனையும், தான் என்றது ஆன்மாவையும் குறிக்கும், குறிக்கவே, இறைவன் உயிர்களின் உடல் கலந்து உளங்கலந்து உயிரேயாய் ஒன்றியிருக்கும் அந்நெறியே மேற் கொண்டு ‘உடல் கருவிகளின் ஆக்கம் எனதன்று, ஆதலால் அவற்றின் செயல்வகைக்கட்கும் இயக்கத்துக்கும் முதல்வன்யான் அல்லன், எல்லாவற்றிக்கும் முழுமுதல் இறைவனே’ எனக் கழித்து அவன்பால் ஒன்றிவிட வேண்டும் என்பது விளங்கும். அப்போது உடல் கருவிகளின் இயக்கத்தால் உண்டாகும் பணிகட்கு இறைவன் பொறுப்பாளியாகின்றான். எல்லாம் இறைவன் பணியாகி விடுதலால், ஏகனாகி நிற்க நிகழும் செயல் இறைபணி யெனப்படுவ தாயிற்று. ‘இவ்வாறு வாழ்வதுதான் வாழ்வெனப்படும்; வேறுபட வாழ்வது ‘வாழ்வாகாது’ என்பது தோன்றவே, மணிவாசகப் பெருமான், “வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்
பட்டு, ஆழ்கின்றாய்” என்றும், வாழ வேண்டிய வாழ்வாவது, “எண்ணமே யுடல் வாய்மூக்கொடு செவி கண் என்றிவை நின்கண்ணே வைத்து” வாழ்வது என்றும் எடுத்துரைத்துள்ளார்.

அன்றியும், இறைவனை முற்பட நிறுத்தி ஏகனாகி இறை பணியில் நின்ற திறத்தை, “கூறும் நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம் நீ, தேறும் வகை நீ, திகைப்பும் நீ, தீமை நன்மை முழுதும் நீ, வேறோர் பரிசு இங்கு ஒன்றில்லேன்” என்றும், “வேண்டி நீ யாது அருள் செய்தாய்யானும் அதுவே வேண்டினல்லால், வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே” என்றும். “நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே” என்றும் வரும் திரு வாசங்கள் விளக்குகின்றன.

இவ்வாறு நான் என்றும் எனது என்றும் எழும் எண்ணங் கட்கு இடங்கொடாது கெடுத்து ஏகனாகி நிற்பதால், அப்போது நிகழும் செயல்களை முதல்வன் தானே என்று கொள்வன்; இதனை ஆசிரியர்க்கு முன்னே வாழ்ந்த சான்றோர்களும், “நம் செயல் அற்று இந்த நாம் அற்றபின் நாதன், தன் செயல்தானே என்று உந்தீபற” என்று தெரிவித் துள்ளார்கள்.

மலக்கட்டால் இருளிற்கிடந்த நம்பொருட்டு உடல் கருவி உலகுகளாகிய மாயையின் தொடர்பு நமக்கு எய்து விக்கப் பட்ட தன்றோ! அத்தொடர்பு உண்டானதும் வினைகள் தோன்றின; அவற்றிற்கு நாமே முழுமுதல் என நினைந்து செய்தமையால், அவற்றின் பயனை நுகர்தற் பொருட்டு நாம் பிறப்பிறப்புக்கட்கு உள்ளாகி உழன்றோம். ஏகனாகி இறை பணி நிற்கலுற்றால் வினைத் தொடர்பு கெடுகிறது; அது கெடவே மாயையின் தொடர்பு கெடுகிறது; அவற்றின்கண் நிகழும் செயல்கள் இறைவன் செயல் களாகின்றன. அவன் செயல் முற்றும் ஆன்மாக்களாகிய நாம் மலத்தின் மறைப் பினின்றும் நீங்கி விடுதலை பெறுவது குறித்து நிகழ்வதனால் மலமறைப்பும் நீங்குகிறது. இதுபற்றியே ஆசிரியர், “ஏகனாகி இறைபணி நிற்க, மலமாயை தன்னொடு வல்வினை யின்றே” என்று அருளியுள்ளார். இக்கருத்துக்களையே,

“ அவனே தானே யாகிய அந்நெறி
ஏகனாகி இறைபணி நிற்க
மலமாயை தன்னொடு வல்வினை இன்றே”

என்று ஆசிரியர் உரைத்தருளிகின்றார்.

11. உடல் கருவி முதலியவற்றோடு கூடி அவற்றைத் தன் உடைமையென்றும், அவற்றால் நிகழும் செயல்கட்குத் தானே முதல் என்றும் கருதி யொழுகிவந்த உயிர், நான், எனது என்ற நினைவும் செயலும் அற்றிருப்பது அருமையாதலால், அதற்கு வழியாது? என்றோர் ஐயம் நமக்குண்டாவது இயல்பு. அந் நினைவுச் செயல்களை முழுமுதலாக நிறுத்திய இறைவன்பால் அன்பு செலுத்துவதில் செலவிடவேண்டும்; இதுவே அதற்கு வழி என்று ஆசிரியர் அறிவுறுத்தத் தலைப் படுகின்றார்.

நமக்கு ஒருவர்பால் அன்புண்டாக வேண்டுமாயின், அவருக்கும் நமக்கும் எவ்வகையிலேனும் தொடர்பு உண்டாகவேண்டும். ஒருவகையிலும் தொடர்பில்லாத வரிடத்தில் நமக்கு அன்புண்டாவ தில்லை. அன்றியும், தொடர்புடையாருடைய தொடர்பை அறியாதிருந்தாலும் மறந்தாலும் நமக்கு அவரிடத்தில் அன்பு தோன்றுவதில்லை. இது நாடோறும் நிகழும் நிகழ்ச்சி. இம்முறையே நாம் இறைவன் பால் அன்பு செய்யவேண்டு மாயின் நமக்கும் அவனுக்கும் உள்ள தொடர்பைக் காணவேண்டும். திருவைந் தெழுத்தை விதிப்படி எண்ணுவதால் நமக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு விளக்கமாகிறது. நாம் மலத்தால் கட்டுண்டு மலவிருளில் அறிவு செயலற்றுக்கிடந்ததும், இறைவன் நம்பால் அருள்கூர்ந்து மாயையிலிருந்து உடல் கருவி முதலிய வற்றை ஆக்கித் தந்ததும், அறிவில்லாதவையாகிய அவ் வுடல் முதலியன தத்தமக்குரிய செயல்களில் ஒழுங்கு கெடாது செந்நெறி பிறழாது இயலுதற் பொருட்டு அவற்றோடு ஒன்றியும் அவ்வுடலிடத்தே கருவிகளோடு ஒன்றியிருக்கும் அறிவுடைப் பொருளாகிய உயிரின் அறிவு செயல்கள் எழுந்து தொழிற்படுதற் பொருட்டு உடனா கியும் இருப்பதும் நன்கு விளங்குகின்றன. இவ்வகையில் இறைவன் நமக்குச் செய்யும் உதவி தெளிவாக விளங்க விளங்க, நமக்கு அவன்பால் உள்ள தொடர்புணர்வும் அத்தொடர்பால் அன்பும் உண்டாகின்றன. அவன் செய்த உதவிகளிலும் நம்மோடு ஒன்றி உடனாய் நின்று செய்யும் உதவியை நினைக்கும் போது அந்த அன்பு எல்லையற்றதாய் விரிகிறது.

இறைவன் நம்மோடு ஒன்றியுடனாய் நின்று செய்யும் உதவியாது? நாம் கண்ணால் ஒரு பொருளைக் காண்பதாக வைத்துக் கொள்வோம். அப்போது நம் அறிவு, கண்ணொளி வேறு, தான் வேறு என வேற்றுமையில்லாமல் அதனோடு ஒன்றி உடனாய் நின்று அப் பொருளைக் கண்ணைக் காணச்செய்கிறது. அப்போது நாம் அப்பொருளைக் கண்டோம் என்றும், நம் கண்கண்டதென்றும் கூறுகிறோம். இவ்விடத்தே நம் உயிரறிவு கண்ணொளியொடு கலந்து உடனாய் நின்று முதலில் கண்ணைக் காணச் செய்வதும் பின்னர்த் தான் காண்பதுமாகிய இருசெயல்கள் நிகழ்வது தெரிகிறது. இவ்வாறே இறைவனும் ஆன்மாவோடு ஒன்றி உடனாய் நின்று பொருள்களை ஆன்மாவைக் காணச் செய்வதும் பின்பு தான் காண்பதும் ஆகிய இரு பேரு தவிகளைச் செய்தருளுகின்றான். இதனையே நம் ஆசிரியர், “காணும் கண்ணுக்குக் காட்டும் உளம் போல, காண உள்ளத்தைக் காட்டிக்” காண்கின்றான் என்று உரைத் தருளு கின்றார். கண்டு காட்டுகின்றான் என்று சூத்திரம் கூறினும், காட்டிக் காண்கின்றான் என மாற்றிக் கொள்ள வேண்டும்.

மேலும், நாம் ஒன்றைக் காணும்போது நம்முடைய ஆன்ம அறிவும் கண்ணும் செய்யும் செயல்கள் பிரித்தறிய வாராதபடி ஒன்றி உடன் நிகழ்கின்றன; அவ்வண்ணமே இறைவன் செயலும் ஆன்ம அறிவும் பிரித்தறிய வாராதபடி ஒன்றி உடன் நிகழ்கின்றன. இவ்வாறு இறைவன் நம்பொருட்டுக் காட்டு வதும் காண்பதுமாகிய இருவகைப் பேருதவிகளைச் செய்வதை நினைக்கும் போது அவன்பால் வற்றாத பேரன்பு பெருகுகிறது. அன்பின் விளைவு அருள். அன்பு பெருகுங்கால் அருளே உருவாகவுள்ள இறைவனிடத்தே அது நம்மைச் செலுத்திவிடுகிறது. ஆன்மா அவனது திருவடியாகிய அருள் நிலையத்தைச் சேர்ந்து பேரின்பத்தைப் பெறுகிறது. இதனைத் தான் நம் ஆசிரியர்.

“ காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்
காண வுள்ளத்தைக் கண்டு காட்டலின்
அயரா அன்பின் அரன்கழல் செலுமே.”

என்று உரைத்தருளுகின்றார், உள்ளத்தைக் காட்டிக் காண்டலின் அயரா அன்பும், அயரா அன்பினால் அரன் கழலைப் பெறுதலும் பயனதலால். “கண்டு காட்டலின் அயரா அன்பின் அரண்கழல் செலுமே” என்று அருளி யுள்ளார்.

12. மேலே சொன்னபடி இறைவனோடு ஏகனாகி இறை பணி நிற்பதும், அவன் ஆன்மாவாவின் பொருட்டுக் காட்டும் உதவி, காணும் உதவி என்ற இருவகை உதவிகளைச்செய் தொழுகுவதை நினைந்து அவன்பால் அயராத அன்பு செய்வதும் என்ற இருவகை அறங்களும் சித்தாந்த சைவச் செந்நெறி என்றும்; திருநெறி என்றும் சிவநெறி என்றும் வழங்கும். இவற்றை மேற்கொண்டு ஒழுகுபவன் சிவஞானி யாவன். ஆயினும் அவன் மாயையிலிருந்து உண்டாகிய இவ்வுடல் கருவிகளோடு கூடி உலகியற் பொருள்களைப் பெற்று உலக வாழ்வு வாழவேண்டியவனாக இருக்கின்றான். சிவஞானம் பெறுதற்கு முன்னே, அவனை இறுகப் பற்றி நின்ற மலம் இறைவனுடைய நற்றாளைச் சேராதபடி மறைத்துக் கொண்டிருந்தது இப்போதும் அது நீங்கவில்லை. அம்மலத்தின் மறைப்பு நெகிழ்ந்து நீங்கும் பொருட்டு வந்து கூடிய உடல் கருவி முதலிய மாயா காரியங்கள் வந்து இயக்கியபோது அவற்றின் வழியே நின்று அவற்றையே தானென எண்ணி மயங்கிப் போனான். மாயையோடு கூடி நிற்கையில் நிகழும் இயக்கம் வினைத் தொடர்பாய் நின்றது. சிவஞானம் பெற்ற பின், அவை வேறு தான் வேறு என எண்ணி, முன்னர்ச்சொன்ன இருவகைச் செந்நெறிகளையும் மேற்கொண்டு உலகியல் வாழ்வு நடத்தும்போதும், ‘அந்த மலமாயை வினைகளின் தொடர்பில் பிணிப்புண்டு கிடந்து பழகிய பழக்கம் அவனை விடாதன்றோ? அது வந்து தாக்கா திருப்பதற்கு உலகியல் வாழ்வு அரணாகாதே; இதற்கு என்செய்வது?’ என்பன போலும் ஐயங்கள் இங்கே எழுகின்றன. அவற்றிற்கு விளக்கம் தரப்படுகின்றன.

திருநெறி மேற்கொண்டெழுகும் சிவஞானியால் மலம் இருந்தபோதிலும். மறைப்புண்டு அறிவு அறை போகா வண்ணம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளல் அவன் கடமையாகும். அதற்காகவே, ஆசிரியர், “செம்மலர் நோன்றாள் சேர லோட்டா அம்மல”த்தைக் கழுவிக்கொள்க என்று அறிவுறுத்துகின்றார். இறைவன் திருவடி செந்தாமரை போன்ற சிறப்புடையதென்பது விளக்கச் “செம்மலர்த் தாள்” என்றார். சிவஞானச் செல்வர்களின் சென்னியிலும் சிந்தையிலும் மலர்ந்து விளங்கும் செம்மையுடைய தாளா தலால் இவ்வாறு அது சிறப்பிக்கப்படுகிறது. மலர் போல மென்மையுடைய தாயினும் தன்பால் வந்து உற்ற ஆன்மாக் களை மீளப்பிரிந்து ஏகாதவாறு ஆட்கொண்டருளும் வன்மையுடையது இறைவன் செம்மலர்த் திருவடி. அதனால் அதனை “நோன்றாள்” என்று சிறப்பிக்கின்றார். நோன்மை, வன்மை; “உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்” என்று நக்கிரனாரும் கூறுவது காண்க. “சேர லொட்டா அம் மலம்” என்றது. நினைய விடாது உயிரறிவை மறைத்துப் பிணித்துக் கொண்டிருந்த அந்த ஆணவ மலம் என்று பொருள்படுகிறது. இயல்பான அறிவாற்றலால் விரிந்த பண்பு கொண்டு சிவமாந் தன்மை எய்தும் சிறப்புடைய ஆன் மாவைப் பிணித்து இறுக்கி அணுப் போல் சிறுமையடையச் செய்வது பற்றி மலத்தை ஆணவமலம் என்று சிவாகமங்கள் பெயர் கூறுகின்றன. சிவஞானிபால் நெகிழ்ந்து நீங்காது கிடக்கும் மலம், சிவஞானம் பெறுதற்குமுன், நெகிழும் நீர்மையின்றித் திண்ணிதாய்ப் பிணித்திருந்த சிறப்புத் தோன்ற “அம்மலம்” என்று குறித்தருளினார். மலம் போந்து மறைக்காதவாறு காத்தல் வேண்டும் என்பதற்கு “மலம் கழுவுக” என்றார். மலத்தை நீக்குதற்கு, ஏற்ற சொல் கழுவுதல் என்பது. மலத்தால் அறிவு அறை போகாதபடி காத்துக் கொள்ளுதற்கு வழி திருவைந் தெழுத்தை விதிப்படி எண்ணுவதேயாகும். சிவஞானிகள் எப்போதும் இத் திருவைந்தெழுத்தை எண்ணுவதும் ஓதுவதும் இயல்பு; “நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே” என்றும், “ஐந்தெழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேன்” என்றும், “வினைப் பகைக்கு அத்திரமாவன அஞ்செழுத்துமே” என்றும். சமயகுரவர்கள் கூறுவதும், மிகப் பழையோரான திருமூலநாயனார். “மரணம் கை வைத்து உயிர் மாற்றிடும் போது அரணம் கைக்கூட்டுவது அஞ்செழுத் தாமே” எனவும், “அருள்வழி காட்டுவது அஞ் செழுத்தாமே” எனவும் ஓதுவதும் போதிய சான்றுகளாம்.

இவ்வாறு திருவைந்தெழுத்தை இடையறாது நினைந் தோதி மலம் கழுவும் சிவஞானி உலகியல் வாழ்வில் பலதிற மக்களோடு கூடி வாழவேண்டியவன். அவர்கள் பலரும் சிவ ஞானம் பெற்ற வர்களாக இருப்பர் என்பது அரிது. அவர்களோடும் சிவஞானி ஒத்து வாழ வேண்டும்.அவ்வாறு வாழுங்கால், அவரது கூட்டத்தால் சிவஞானம் பெற்றார்க்கும் விழைவும், வெறுப்பும், தோன்றித் துன்பம் செய்யுமன்றோ? இதற்கென செய்வது? என்றொரு வினா எழுகிறது. இஃது உண்மையே, நிலத்தியல்பால் நீர் திரிவதுபோல எத்திறத் தோர்க்கும் இனத்தியல்பால் அறிவு திரியும்; இதுபற்றியே பெரியோர்கள் நல்லின மல்லாத சிற்றினத்தோரை அஞ்சி நீங்கு கின்றனர். ஆதலால், சிவஞானச் செல்வர்கள் சிவபரம் பொருளிடத்தே அன்புடையவர்கள் எவர்களோ அவர்களோடே கூடி வாழ்வது
தான் செய்யத்தக்கது; அதுதான் இதற்கு வழி, இது பற்றியே
“அன்ப ரொடு மருவுக” என்று ஆசிரியர் அறிவிக்கின்றார். சிவன்பால் அன்புடைய அன்பரை எவ்வாறு அறிவது?அந்த அன்பு அவரவர் சிந்தையிலேயன்றோ நிற்பது! ஆயினும், சிவத்தின்பால் உண்மை யன்புடையார் எல்லா வுயிரிடத்தும் அன்புடைய
ராவர்; அவரால் இகழப்படுவோர் எவருமிலர்; எவ்வுயிரும் இல்லை. எல்லா உயிர்களோடும் ஒன்றியுடனாய் நிற்கும் சிவ பரம் பொருள் பால் மெய்யாக உயர்ந்த அன்புடையவர், எல்லோரையும் ஒப்பக்கருதி அவர் உவப்பன செய்யும் நினைவும் சொல்லும் செயலும் உடைய வராயிருப்பர்; சிலரை வேறு வைத்து இகழ்வதும், சிலரை வேறு வைத்துப் புகழ்வதும் சிவநெறி கைக்கொண்ட “அன்பர்” செயல் அல்ல. “தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார் எம்மை யுடைமை எமை இகழார்” என்று உண்மைச் சைவர் இலக்கணத்தைப் பாயிரத்தில் வற்புறுத்திக் கூறி யருளின மையால், இங்கே “அன்பர்” எனப் பொதுப்படக் கூறி, “சிவன்பால் அன்புடை யாரொடு மாவுக” என்பதன் உரையில் “சிவபக்தர்களோடு இணங்குக” என்றது. அல்லாதார் அஞ்ஞானத்தை உணர்த்துவர் என்பது காட்டி வற்புறுத்துதற்பொருட்டு என அறிதல் வேண்டும். சிவ பெருமான் “பரவுவாரையும் உடையார் பழித்து இகழ் வாரையும் உடையார்” என்று சிவஞானச் செல்வராகிய திருஞான சம்பந்தர் அறிவுறுத்தியும், தமது வாழ்வில் ஒழுகிக் காட்டியும் நிலை நாட்டிய சிவநெறியில் நிற்கும் சைவர்பால் சிறப்பாகச் சித்தாந்த சைவர்பால் சிலரை இகழ்வதும் சிலரைப் புகழ்வதும் நிகழ்வதும் குற்றம். அது செய்பவர் “தம்மை யுணரா தவர்” என்றும், அவன் கூறுவன “புறம்” என்றும் “கேளாம்” என்றும் ஆசிரியர் இந்நூலின் தொடக்கத்தே நன்கு வற்புறுத்தியுள்ளார். இவ்வாறு வேற்றுமைக் கொள்கை கொண்டோழுகுவோர் “அன்பர்” ஆகார்; இதுவே சிவன் பால் அன்புடையாரை அறியும் கூறுபாடு. அன்பரல்லாதார் சிவஞானத்தைச் சிதைத்து அவஞானமும் அஞ்ஞானமும் உணர்த்துவர். ஆதலால் அன்பரொடு மருவுவதே; செய்யத் தக்கது என்பதாம்.

இனி, உலகியலில் வாழும் சிவஞானிக்கு அவ்வவ் விடங்களும் இடத்து நிகழ் பொருள்களும் பலப்பல காட்சிகளை வழங்கும். அவற்றைக் காணுமிடத்துச் சிவ ஞானியின் செயலும் வேறுபடு மன்றோ? அதனால் அவர்பால் குற்றம் புகுமே? இதற்கென் செய்வது? எனின், சில இடங்களும் இடத்து நிகழ் பொருள்களும் சிவஞானத்துக்கு அரண் செய்யும். திருகயிலாயம் நோக்கிச் சென்ற திருநாவுக்கரசருக்குத் திருவையாற்றுக் காட்சிகள் சிவதரிசனப் பயனை நல்கினவல்லவோ? அவைகளைக் கண்டவிடத்து அவை சிவபரம் பொருளே என எண்ணி வழிபடுதல் சிவஞானச் சைவர்கட்குக் கடமை. இக்காட்சிகளில் சிறப்புடையவை மெய்யன்பர் திருவேடமும், சிவபெருமான் எழுந்தருளும் திருக்கோயில்களுமாகும். இவற்றையே குறிக்கொண்டு நோக்கிச் செல்லின், அல்லாதவை காட்சிப் படா. அதனை, “மாலற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே” என்று ஆசிரியர் அறிவுறுத்தி யருளுகின்றார். காண்பவர் உள்ளத்தில் இது மாயமோ என்ற எண்ணம் எழாவகையில் சிவபரம் பொருள்பால் அன்பு நிறைந்தவர் வேடத்தைக் கண்டால், அவ்வேடத்தைச் சிவமென்றே தேறி வழிபடவே செய்யும் என்பதற்கு “மாலற நேயம் மலிந்தவர் வேடம்” என்று கூறப்பட்டுளது. “வேட நெறி நில்லார் வேடம் பூண்டென் பயன்?” என்று திருமூல நாயனார் அருளுமாறு, வேடநெறி நில்லாதவர் வேடம், காண்பவர் கருத்தில் மால் விளைவிக்கும். திருவேடத்தின் நோக்கம் மெய்க்கு அணிசெய்வதன்று. போர்ச்சான்றோரது வேடம் பகைவரது பகைமையைக் கெடுக்கும் குறிப்பிற்றாவது போலச் சிவஞானச் சான்றோரது திருவேடம் பிறவிக்குரிய வினைப்பகையைக் கெடுக்கும் குறிப்பின தாகும். அது சிவபெருமானது திரவருளால் விளைவ தாகையால் காண்பார் கருத்தில் தாம் வழிபடும் சிவபரம் பொருளையே அது நினைப்பிக்கும். அதனால் அவர் உள்ளம் சிவஞானத்தால் திகழ்ந்து மாலறும்; இதனைத் திருநாவுக்கரசர் வரக்கண்ட போது, அவரது திருவேடம், திருஞானசம்பந்தர் “கருத்தில் பரவும் மெய்க்காதல் தொண்டர் திருவேடம் நேரே தோன்றியது” எனத் தொழுது வணங்கச்செய்த நிகழ்ச்சியால் நன்கறிகின்றோம். முதியோன் வடிவில் திருவேடம் தாங்கி வந்து உரையாடிய முருகன் செயலை வெறுத்துக் கூறலுற்ற வள்ளி நாயகியார்” “நேயமலி மெய்யடியார் நேர்ந்துழியும் நின்போல் மாயமென உள்ளுமொரு வான்பழியும் வைத்தாய்” என்பதனால் மாலுண்டாக்கும் வேடமும் உண்டு என்பது பெறப்படும்.

திருவேடம் பூண்டார், “நேயம் மலிந்தவரா அல்லரா” என்பதை அறிவது அரிது. அந்த நேயம் அவரவர் நெஞ்சின் கண் நிகழ்வது, ஆயினும், நேயம் மலிந்தவர் திருவேடம் காண்பார் உள்ளத்தில்மால் உண்டாக்காது என்பது உறுதி, எப்படியிருப் பினும் காண்பார்க்குத் திருவேடம் பொருளே தவிர, “வேடம் பூண்டோர் நேயம் மலிந்தவரா? அல்லவரா?” எனக் காண்பது பொருளன்று என்பதை வற்புறுத்தவே ஆசிரியர் அன்பரையும் வேடத்தையும் வேறு வேறு நிறுத்தி வேடத்தை விதந்தருளுகின்றார். வேடம் பூண்டு வேடநெறி நில்லாதாரை ஆராய்ந்து நெறிநிறுத்துவது வேந்தன் கடன் (திருமந். 240); அதனை அவன்பால் விடுத்து, வேடத்தை அரனெனத் தொழுக என்பது இங்கே விதிக்கப்படுகிறது. பண்டை நாளில் ஞானமில்லாதார் வேடம் பூண்டு ஞானிகள் போல நடிப்பராயின், நாடாளும் வேந்தன் தெரிந்த ஞானிகளைக் கொண்டு ஆராய்ந்து அவர்கட்கு ஞானத்தை நல்குவன்; அவனுக்கு அது கடன்; அது நாட்டுக்கு நலமாகும் (திருமந். 242) என்று திருமூல நாயனார் அறிவுறுத்துகின்றார்.

இனி, ஆங்காங்குக் காணப்படும் சிவன் கோயில்களைச் சிவனெனவே தேறி வழிபடுதல் வேண்டும். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் முதலிய பெருமக்கள் தமிழகத்தில் திருவுலா வந்தபோது அவர்கட்குத் திருக்கோயில்களே காட்சியளித்தன. அத்திருக் கோயில்கள் அவர்களுக்குச் சிவபரம்பொருளாகவே விளங்கின; அவர்கள் அப்பரம்பொருளோடு உரையாடினர்; வேண்டிய வேண்டியாங்குச் சிவபரம் பொருள் நல்கியருளப் பெற்றனர். கோயில்கள் அறநிலையங்களாகவும், பொருள் நிலையங் களாகவும், ஓவியம், சிற்பம், கூத்து முதலிய கலை நிலையங்களாகவும், அறச்சாலைகளாகவும், மருத்துவச் சாலைகளாகவும் ஆசிரியர் மெய்கண்டதேவர் காலத்தில் காண்பார்க்குக் காட்சியளித்தன. அக்காட்சி முற்றும் உயிர்கட்குத் தொண்டு புரியும் சிவப்பணியாகவே இருந்தமையின் அவ்விடங்களைச் சிவன் என்றே வழிபடவேண்டு மென்பது சிவஞானச் செல்வர்களின் திருவுள்ளம். ஆதலால், “திருக்கோயில்களைச் சிவனெனவே தேறி வழிபடுக” என்று ஆசிரியர் மெய்கண்ட தேவர் அருளிச் செய்கின்றார். இக்கருத்தை,

“செம்மலர் நோன்றாள் சேர லொட்டா
அம்மலம் கழீஇ அன்பரொடு மரீஇ
மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயந் தானும் அரனெனத் தொழுமே”

என்று ஆசிரியர் இனிய சொற்களால் எடுத்தியம்புகின்றார். இதன்கண் மலம் கழுவுதல், அன்பரொடு மருவுதல், திருவேடத் தையும் திருக்கோயிலையும் சிவனெனத் தேறி வழிபடல் என்ற மூன்றும் வற்புறுத்தப்படுவதைக் காணலாம்.

சித்தாந்தச் செந்நெறியாகிய சிவநெறியில் நிற்கும் சைவ நன்மக்கள் மலவாதனையறுமாறு திருவைந்தெழுத்தை யோதுவதும், பிறவுயிர்கட்கு அன்பு செய்வதும், மக்களிடையே வேற்றுமைச் யொழித்து நோயுற்றோர்க்கு மருத் துவப் பணியும் வாழ வகையற்று வாடும் மக்கட்கு வேண்டும் பணியும், திக்கற்ற இளஞ் சிறார்கட்கு உண்டி உறைவிடம் முதலியன தந்து கல்வியறிவு நல்கி ஆதரிக்கும் சிவப்பெரும் பணியும், சமயஞான நெறிகளை அறிவுறுத்தும் சமய ஞானப் பணியும், இவை போல்வனவாகிய பிறபணிகளும், அன்பர் பலருடன் கூடிச் சிவவேடங்களையும் சிவன் கோயில்களையும் சிவனெனவே தேறி வழிபடுவோர் செய்தற்குரிய கடன்களாம் என்பதை வற்புறுத்துவதற்கே இதனை இறுதிக்கண் வைத்து ஆசிரியர் உரைத்தருளுகின்றார்.
சிவஞான போதம் வாழ்க!
சிவஞான போதச் செம்பொருள்
முற்றிற்று.

நம்பியாண்டாரும் அப்பரும்


நம்பியாண்டார் நம்பிகள் கி.பி. 9-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 10-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்த சிவவேதியர். தில்லைச் சிதம்பரத்திற்கு மேற்கில் சுமார் 10,12கல் தொலைவில் உள்ள திருநாரையூரிற் றோன்றி வாழ்ந்தவர்; அவ்வூர், அவர்க்கு முன்பே ஏழாம் நூற்றாண்டில், திருஞான சம்பந்தர், “சிவன் மேயச்செல்வத் திருநாரையூர் என்றும், திருநாவுக்கரசர்,”நாறுபூம்பொழில் நாரையூர்" என்றும் மகிழ்ச்சி யோடு வந்திருந்து பாடிய மாண்புடையது.

நம்பிகள் இளமையிலேயே திருவருட் கல்வியும் சிவநெறித் தெளிவும் சிறக்கப் பெற்றவர். தந்தை, ஊரில் இல்லாதபோது சிறுவராகிய நம்பிகள், அவ்வூர் விநாயகர்க்குப் பூசைத் திருப்பணி புரிந்து தாம் கொண்டு சென்ற திருவமுதை உண்பித்த பெருமை யுடையவர். அந்நாளைய சோழர் அரசியற் குறிப்புக்கள், இவ்வூருக்கு “வடகரை விருதராச பயங்கர வளநாட்டுத் தனியூர் வீர நாராயணச் சதுர்வேதி மங்கலத்துப் பிடாகையான திருநாரையூர்” என்றும், இங்குள்ள சிவபெருமானுக்குத் “திருக்கயிலாயமுடைய மகாதேவர்” என்றும், பெருமாளுக்குத் “திருவாய்ப்பாடி ஆள்வார்” என்றும் பெயர் தெரிவிக்கின்றன. (ஏ.ஆர்.எண்.542-3/1921) நான்மறை வல்ல வேதியர் வாழ்தலால், வைதிக ஞானவொழுக்கங்களும், சைவ நெறியின் பெருக்கமும் இவ்வூர்க்கண் சிறந்து நின்றமை அறியலாம். வடமொழிப் புலமையுடன் நம்பிகள் தமிழில் இயற்புலமையும் திருமுறைகளை யோதுதற்குரிய இசைப் பயிற்சியும் நன்கு பெற்றிருந்தார். அதனால், அவரது புகழ் காவிரி வடகரை நாட்டில் நன்கு பரவியிருந்தது.

சோழ வேந்தனான இராசராசன் தேவாரத் திருப்பதியங்கள் தில்லைப் பெருங்கோயிலில் இருப்பதை அறிந்து அவற்றை வெளியிற் கொணர்ந்து முறை வகுக்க விரும்பினான். அக்காலத்தே மக்களிடையே திருப்பதியங்களை ஓதுவதில் மிக்க விருப்ப முண்டாகியிருந்தது. ஆங்காங்கே அவற்றில் காண்ப்படும் இனிய தொடர் களைக் கொண்டே, மக்களுக்கும், வீடு மனை நிலம் முதலியவற்றிற்கும் பெயரிட்டுப் போற்றுவது வழக்கம்.

திருப்பதியங்களைக் கண்டு ஆராய்ந்து இசை வகையில் முறைப்படுத்தும் திறம், நம்பிகட்குண்டெனச் சோழர் பெருமானுக்கு நாட்டு நல்லறிஞர் தெரிவிக்கவும், அவன் நம்பிகளைக் கொண்டு தில்லைக்குச் சென்று திருப்பதியங்களை வெளிப்படுத்திப் பண் வகையில் முறை செய்யுமாறு வேண்டினான். பண்முறைகளை அறிந்தவ ராயினும், திருவெருக்கத்தம்புலியூரில் திருநீல கண்ட யாழ்ப்பாணர் குடியில் பெண்ணொருத்தி பண்முறையில் மிக்க புலமையுற்றிருந்ததை அறிந்து அரசனைக் கொண்டு அவளை வருவித்துப் பண்முறை வகுத்தார்.

நம்பியாண்டார்க்கு இயல்பாகவே திருஞானசம்பந்தர் திருப்பதியங்களில் மிக்க ஈடுபாடு உண்டு; அவருடைய திருப்பாட்டுக் களை விரும்பிப் பயிலும் விழைவு மேம்பட்டவர். ஞானம் பெற்ற பிள்ளையாகிய அவரைச் சிவமாகவே கருதி மெய்யால் வணங்கியும் வாயாற் பல நூல் களைப் பாடியும் வழிபடும் இயல்பிi. ஞானசம் பந்தரோடு உடனிருந்து யாழ் இசைப் பணி புரிந்த நீலகண்டப் பாணர் வழியினள், எருக்கத்தம் புலியூர் நங்கை என்றது, நம்பிகட்கு அவள்பால் பெருமதிப்பை உண்டுபண்ணிற்று. அவரது திருவுள்ளமும் சாதி வேற்றுமைச் சேற்றில் அழுந்திக் கெடாமல் பண்ணிசைப் புலமையையே பொருளாகக் கருதியது; அஃதொன்றே நம்பியாண்டார் நம்பிகளின் பெருமைக்கு உயரிய சான்று; அவரே திருப்பதியங் களை முறை செய்தற்குத் தகுதி வாய்ந்தவர் என்பதையும் வற்புறுத்து கிறது.

நம்பி ஆரூரராகிய சுந்தாமூர்த்திகளிடத்தும் நம்பியாண்டார்க்கும் பெருமதிப்பு இருந்தது. அவர் பாடிய திருத்தொண்டத் தொகையில் தொக்கு நின்ற வரலாறுகளை, நேர்மை நிறைந்த மனத்தோடு தெரிந்து, திருத்தொண்டர் திருவந்தாதி என்ற நூல் செய்து தமது நன்றிக்கடனை அவர்க்குச் செலுத்தினார். அதன்கண் நம்பி ஆரூரரின் பெருமைகளை நற்றேன் பிலிற்றும் சொற்றொடர்களால் நயம் கனியப் பாடியிருப்பது தமிழ் அறிஞர்க்கு இன்பம் தருவதாகும்.

பின்பொருகால், சோழவரசின் பேரமைச்சராய்ப் பிறங்கிய சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் வரவாறு எழுதும் திருப் பணியை மேற்கொண்டபோது, நம்பிகளின் நேர்மையில் பெருகிய அன்பினராய் அவர் பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியையே, தாம் முதலாகக் கொண்ட திருத்தொண்டத் தொகைக்கு, வழி நூலாகக் கொண்டார்.

திருவாசகம் பாடியருளிய திருவாதவூரரிடத்தும் நம்பிகள் மிக்க அன்பும் ஆர்வமும் கொண்டவர் என்று அவருடைய இனிய நூல்களால் அறிகின்றோம். திருவாசகமும் திருக்கோவையாகும் நம்பிகளின் புலமையுள்ளத்தில் நிலைபெற்று நின்று, வெளிப்படற்கு இடம் வாயாமையால், ஆங்காங்கு ஒளி செய்து தமது இருப்பைப் புலப்படுத்துகின்றன. நம்பிகள் காலத்து வாழ்ந்தோருள் ஒருவர் திருக்கோவை போன்ற நூலொன்று எழுதியது காண்கின்றார் நம்பிகள்; அதுகண்டு அவர் மனத்தெழுந்த நகைப்பை,

" வருவா சகத்தினில் முற்றுணர்ந்
 தோனைவண் தில்லைமன்னை
 திருவாத வூர்ச்சிவ பாத்தியன்
 செய்திருச் சிற்றம்பலப்
 பொருளார் தருதிருக் கோவைகண்
 டேயும்மற் றப்பொருளைத்
 தெருளாத உள்ளத் தவர்கவி
 பாடிச் சிரிப்பிப்பரே"

என்று தெரிவிக்கின்றார்.

இங்ஙனம் ஞானசம்பந்தரையும் நம்பி ஆரூரரையும் திருவாத வூரரையும் சிந்தித்து மகிழும் நம்பியாண்டர், திருநாவுக்கரசரை மறப்பரா? மறக்கத்தான் அவர்க்கு இயலுமா?
திருத்தொபண்டத் தொகை பாடிய நம்பியாரூரர், தாமே தம்முமைய தண்டமிழால் கூறாமல், நாவுக்கரசர் மொழிந்தருளிய நன்னெறியேபற்றி, “சிவனெனும் ஓசையல்ல தறையோ உலகில் திருநின்ற செம்மை யுளதே” என்பதே கொண்டு, “திரு நின்ற செம்மையே செம்மை யாக்கொதண்ட திருநாவுக்கரையன்” என்று குறித்தருளினார்; நம்பியாண்டார், திருநாவுக்கரசரை.

" நற்றவன்; நல்லூர்ச் சிவன்திருப்
 பாதம்தன் சென்னி வைக்கப்
 பெற்றவன்; மற்றுஇப் பிறப்பற
 வீரட்டர் பெய்கழல்தாள்
 உற்றவன்; உற்ற விடம்அடை
 யார்இட ஒள்ளமுதாத்
 துற்றவன் ஆமூரில் நாவுக்
 கரசென்னும் தூமணியே“

என்று பாராட்டி, அவருடைய அருள் பெருகு திருப்பாட்டுக்களை வியந்து,

" சைவப் பெருநெறிக்கே அணியன நாவுக் கரையர்
பிரான்தன் அருந்தமிழே"

எனச் சுருங்க வுரைத்துத் தெரிவித்தார்.

திருநாவுக்கரசு தேவர் திருஏகாதச மாலை என்ற நூல் ஒன்றைத் தனியாகப் பாடிப் பரவினார் நம்பியாண்டார் நம்பிகள். இதன்கண் உள்ளவை அந்தாதியாக அமைந்த பதினொரு பாட்டுக்கள். பதினொன்று என்பதை வடமொழி ஏகாதசம் என்று கூறும்; பதினோராம் நாளை ஏகாதசி திதி (தியதி, தேதி) என்றாற்போலப் பதினொரு பாட்டுக்களால் ஆகிய பாமாலை ஏகாதச மாலை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாட்டும் இனிய சந்த உருவாகி யிருப்பது, படிப்பவர்க்கும் இசைப்பவர்க்கும் இசைக்கக் கேட்பவர்க்கும், சருக்கரைக் கட்டியால் இயன்ற பண்டத்தை வடித்த செந்தேனிற் பெய்து உண்பது போன்ற சுவை நிறைந்துளது.

சிவநெறிக்கு அருட் செல்வங்களாகிய திரு முறைகள் மிக்க பெருமை தருவன.

வேற்றுச் சமயத்தில் வீறுபெற்று விளங்கினவர் மருணீக்கியார் என்னும் பிள்ளைத் திருநாமம் உடைய தருமசேனர். அவர் சூலை நோய் உற்று வருந்திப் போந்தது கண்ட அவருடைய தமக்கை யாரான திலகவதியாரால் அவர், திருவைந்தெழுத்து ஓதித் திருநீறணிவிக்கப்பெற்று, நோயும் சமண்சமயப் பிணிப்பும் நீங்கிச் சிவநெறிச் செல்வத் திருநாவுக்கரசரானார் என்ற வரலாற்றை இந்நூலில்தான் முதன் முதலாக நம்பியாண்டார் குறிக்கின்றார்; “தம்க்கையார் புணர்வினால் உற்று உரைசெயக் குடர்சுலவு சூலைப்பிணி கெடுத்து ஒளிர் வெண்ணீறிட்டு அமண் அகற்றிய துணிவினான்” எனத் திரு ஏகாதச மாலையின் முதற் பாட்டிலேயே மொழிகின்றார்.

திருநாவுக்கரசர் பிறந்த ஊர் நடுநாட்டுத் திருவாமூர் என்பதை, “ஆமூரில் நாவுக்கரசு எனும் தூமணி” எனத் தொகுத்துச் சுட்டி, இந்நூலின்கண்,“வண்ணத் திண்சிலை மாடம் திகழ்புகழ் ஆமூர் உரை திருநாவுக்கரசு” என்று விளக்குகின்றார். இதனைக் காணும் சேக்கிழார் பெருமான், திருப்பாசுரங்கட்குத் தெளிவுரை காணும் சிவஞானச் செல்வராதலால்,அறிவு நெறி (scientific outlook)யிற் பொருள் காண்கிள்றார். “வண்ணத்தின் சிலைமாடம் திகழ் ஆமூர்” என உரைக்க வேண்டிய நம்பிகள், புகழ் என்ற சொல்லை இடையிற் பெய்வது ஏன் என்று எண்ணி, “ஆமூர் உறை திருநாவுக்கரசு” என்பதோடு இயைவதால், அஃது அவரது தந்தையின் பெயராதல் வேண்டுமெனத் துணிகின்றார். தமது திருத்தொண்டர் புராணத்தில், “உளரானார் திக்கு நிலவும் பெருமை திகழவரும் புகழனார்” எனப் பாடி மகிழ்கின்றார்.

சமண்சமயத் தருமசேனராக விளங்கியவர், ஒருவர்க்கும் சொல்லாமல், ஒரு கருத்தும் வெளிப்படுத்தாமல், திடீரெனச் சைவத் திருநாவுக்கரசரானது கண்ட சமண் தலைவரும் அவரைத் தழுவிப் புரக்கும் அரசும் சும்மா இராமல் கடிய செயல் பல மேற்கொண்டி ருக்குமே என்ற ஐயம் யாவர் மனத்திலும் எழும்; அஃது அகலும் பொருட்டு, “அவர்கள் வாதை பல செய்தனர்; அவற்றை அதிகைப் பெருமான் திருவருளால் வென்றுயர்ற்தார் நாவரசர்” என்பாராய், “அதிகை மாநகர் மேவி அருளினால் அமன் மூடரவர் செய் வாதைகள் தீரும் அனகன்” என்று இயம்புகிறார்; வாதைகளில் ஒன்றான கல்வொடு பிணித்துக் கடலின்கண் தள்ளின செய்தி மனத்தில் மறக்கப்படாது நின்றதால், அதனை விதந்து, “ஏற்றுணையின் மிதவாமல் கற்றுணையின் வரும் ஆதி” என மொழிகின்றார். இக் குறிப்பின் தலைமை நலம் கண்டே நாவுக்கரசரை நினைப்பவர் அனைவரும், கன்மிதப்பிற் கரையேறிய இச்செயலை எடுத்துரைப்பதை இயல்பாகக் கொண்டு இன்றும் “ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான்” என்று ஓதி வருகின்றார்கள்.

திருநாவுக்கரசரானபின் அவர் செய்த செயல் வகைகளை எண்ணுகின்றார், நம்முடைய நாரையூர் நம்பி. அவர் பாடிய திருப்பதியங்கள் நெஞ்சில் காட்சி தருகின்றன. ஏழ் எழுநூறு பதிகங்கள் என்ற எண்ணிக்கை முன் நிற்கிறது. இத்தனையும் பாடுதற்கு நாவரசு மேற்கொண்ட “கவியோகம்” அவர் கருத்தைப் பிணிக்கிறது. பரவுகின்றார்; பணிகின்றார். “பதிகம் ஏழெழு நூறு பகரு மாகவி யோகி பரசு நாவரசான பரமகாரண ஈசன்” எனப் பாடி மகிழ்கின்றார். மேலும், காம மயக்கில் வீழ்ந்து கலக்குற்று வருந்தும் மனத்தை நோக்கி, “உள் நோய்க்கு மருந்து இன்பம் தானே, இதற்கு மருந்து இதோ தருகின்றேன்; எங்கள் திருநாவுக்கரசு தந்தருளும் திருப்பதியமே இன்பத் திருமருந்து; வேறு மருந்து கிடையாது” என்று கூறுகிறார்.
நன்மடவார்,

“ அழிந்த பொசியதிலே கிடந்து இரவுபகல் நீ
அளைந்து அயரும்அது, நீ அறிந்திலைகொல், மனமே!

    கழிந்த கழிகிடு; நாள் இணங்கு இதயம் நெகவே;  
    கசிந்து இதயம் எழுநூறு அரும்பதிய நிதியே  
    பொழிந்தருள் திருநாவின் எங்கள் அரசினையே  
    புரிந்து நினை; இதுவே மருந்து; பிறிது இலையே ”  

எனத் தெருட்டுகின்றார்.

‘இந்த மயக்கம் மண்ணினிற் பிறற்தார் அனை வரையும் ஒழியாது வருத்துவதாயிற்றே; நாவுக்கரசர் என்னானார்?” எனச் சிலர் வினவுகின்றார்கள். “காம வெகுளி மயக்கங்கள் முற்றவும் கெடும் குற்றங்கள் அல்லவே” எனச் சாத்திரங்களைக் காட்டு
கின்றார். ஆம் சாத்திரங்கள் கூறுவது உண்மைதான்; எங்கள் நாவுக்கரசை அவை அடர்த்தழிக்க முயன்றன; கவியோகம் இல்லாதபோது அவர் உழவராப் படையோகம் கொண்டார்; அதனால் பொல்லாத அம்மயக்கம் அவர்முன் நில்லாதாயிற்று; அவர் திருவுள்ளத்தையும் வெல்லாதாயிற்று என்பாராய்,

“ தெளிதேன் ஒத்த இனியசொல் மடவார் ஊர்ப்பசிமுதல்
வருவானத்து அரிவையர் நடமாடிச் சிலசில
வசியாகச் சொலும்அவை துகளாகக் கருதி, மெய்
உருஞானத் திரள்மனம் உருகா நெக்கு அமுது
உழவாரப் படைகையில் உடைய னாயினான்”

என உரைக்கின்றார். காமவுணர்ச்சி கருத்தை ஈர்க்கும்போது கைத்தொழில் வகையில் அதனைச் செலுத்துக என இக்காலக் கருத்தடை விஞ்ஞானம் கூறுவதை நினைந்து பார்மின்; கருநாடக இசையை எருவிட்டு வளர்க்கும் பெருமக்களுக்குத் திருமுறைகளின் பெருமை தெற்றென விளங்கும்.

இந்நிலையில் பதியம் ஏழெழு நூறு பகரும் பரம கவியோகத்தில் நம்பிகள் தமது ஆராய்ச்சி வழிபாட்டைச் செலுத்துகின்றார். நாற்பத்தொன்பது நூறு பதியங்களில், நாவுக்கரசு என்ன நவில்கின்றார் என, எழும் அவாய்நிலைக்குத் தெளிவு கூறும் நம்பிகள், `மாயையா லாகிய இவ்வுலகு, உயிர்களை மயக்குவதும் செய்வது; அதன் பொய்ம்மயக்கத்தைப் போக்குவன வாய்மைப் பொருள்கள்; அவற்றை மிகுதியாகத் தருவன நாவரசின் நற்பதியங்கள்.

“ உலகின் மாயப் பிறவியைத் தரும்
 உணர்விலா அப்பெருமயக்கினை
 ஒழிய, வாய்மைக் கவிதை”

என்றும்,
அவற்றின் வழியாகச் சிவஞானமாகிய கடலின் கண் உள்ள அமுதாகிய சிவவொளியில் ஆன் மாக்கள் புகுந்து உய்திபெறுதற்கு இன்றியமையாத திருவருள் நல்கப்படுகிறது என்றும் விளக்குவாராய்,

“ வாய்மைக் கவிதையிற் பல
 உபரிபாகப் பொருள் பரப்பிய
 அலகில் ஞானக் கடலிடைப்படும்
 அமுத யோகச் சிவவொளிப் புக
 அடியரேமுக்கு அருளினைச் செயும்”

என்று பரிவோடு உரைக்கின்றார். முடிவில், இவர் திருப்பதியங்களை ஓதுவார் பெறும் பயனையும், நாட்டு மக்கள் பயன்பட வாழ்ந்த நாவுக் கரசர்க்கு நாம் செய்யலாகும் கடமைகளையும் இவ்வேகாதச மாலையில் இனிமை கமழ எடுத்து இயம்புகின்றார்.

திருநாவுக்கரசரைச் சிவகுருவாகவும் அவருடைய திருப்பதி யங்களைச் சிவஞானவுரையாகவும் கொண்டு வாழ்பவர், பிறவி யறுத்துப் பேரின்பப் பெருவாழ்வு எய்துவர். இதனை,
“ உழவராப் படைகையில் உடையான் வைத்தனதமிழ்
குருவாகக் கொடுசிவன் அடிசூடத் திரிபவர்
குறுகார்புக்கு இடர்படு குடர்யோனிக் குழியிலே”

எனப் பாடுகின்றார்.

அப்பெருமானை விரும்புபவர், அவரது “திருநாவுக்கரசு” என்ற திருப்பெயரையே மந்திரமாகக் கொண்டு ஓதுதல் வேண்டும். அவ்வாறு ஓதி முழுப் பயன் பெற்ற வேதியரான அப்பூதியடிகளின் நலங்களை,

“ தனமா வதுதிரு நாவுக் கரசின்
 சரணம்எண்ணா
 மணமார் புனற்பந்தர் வாழ்த்தி வைத்
 தாங்கலன் வண்தமிழ்க்கே
 இனமாத் தனது பெயரிடப்
 பெற்றவன் ; எங்கள் பிரான்;
 அனம்ஆர் வயல் திங்களுரினில்
 வேதியன் அப்பூதியே ”

என்று ஓதினாராதலால், இங்கே அப்பூதியின் வாழ்வைக் கருத்தில் நினைவு கூர வைத்து,

“ இலைமாடு என்று இடர்பரியார்
 இந்திரனே ஒத்து உறுகுறைவற்றாலும்
 நிலையாது இச்செல்வம் எனவே கருதுவர்;
 நீள்சன்மக் கடலிடையிற் புக்கு
 அலையார்; சென்று அரன்நெநி யாகும் கரை
 அண்ணப் பெறுவர்கள் , வண்ணத் திண்
 சிலைமாடம் திகழ்புகழ் ஆமூர்உறை
 திருநாவுக்கரவு என்போரே ”

என்று அறுதியாக அறிவிக்கின்றார். அவர் திரு வடிகளைப் பணிபவர்,

“ நிதியராகுவர்; சீர்மையுடையராகுவர்; வாய்மை
 நெறியராகுவர்; பாவம் வெறியராகுவர்; சால
 மதிய ராகுவர் ; ஈசன் அடியராகுவர்; வானம்
 உடையராகுவர், பாரில் மனிதரானவர் தாமே ”

என்றும் இசைத்தருளுகின்றார்.

இத்தகைய பெருநலம் அருளும் பெருமானாகிய திருநாவுக் கரசரின் திருவடிகள் நமக்கெல்லாம் உய்தி தரும் பெருந்துணையாவது காண்கின்ற நாம், அதுவல்லது பற்று மற்று இல்லை என்று கொண்டு வாழ்வோமாக என அறிவுறுத்துகிற நாரையூர் நம்பிகள்,

“ நன்றும் ஆதரம் நாவுக்கரசு அடி
 நளினும் வைத்து உயின் அல்லால்
 ஓன்றும் ஆவது கண்டிலம்; உபாயம் மற்று
 உள்ளன வேண்டேமால்’’

என்றும், “ஆதியும் அந்தமும் இல்லதோர் இகபரத்து இடைப்பட்டுப் பொன்றுவார் புகும் சூழலில் புகேம் புகில் பொறியில் ஐம்புல னோடே” என்றும் திட்டவட்டமாக உரைத்துத் தமது திருவேகாத சத்தைத் தேனொழுக்குப் போலப் பாடி முடிக்கின்றார். வாழ்க திருநாவுக்கரசர், வண்திருநாரையூர் நம்பி வான்கழல்கள்.

சீவக சிந்தாமணியும் சைவமும்


தமிழ் நாட்டின் தவப்பயனாய், சைவத்தின் பெருங் கருவூலமாய் எம்போல்வார் நாளும் பரவும் குருபரம்பரனாய், இன்று தலைமை தாங்கும் அடிகள் திருவடிகளை மனத்தால் பரவி, கையால் தொழுகின்றேன். சைவநலம் கெழுமிய சான்றோர்களே, தாய்மார்களே!

இன்று இங்கே நடைபெறும் சைவசித்தாந்த மகா சமா சத்தின் 36-வது ஆண்டு விழாவில் நம் சமாசக் காரியதரிசியாரும், இதன் வளர்ச்சிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உடல் பொருள் உயிர் என்ற மூன்றையும் ஒருங்கே உரிமைசெய்து சலியாது உழைத்து வருபவரும், சென்ற பல ஆண்டுகளாக என்போன்றாரை இத் துறையில் இயக்கிப் பணிகொள்பவருமாகிய சைவத்திருவாளர் - ம.பாலசுப்பிரமணிய முதலியார், b.a.,b.l., அவர்கள், “சீவக சிந்தாமணியும் சைவமும்” என்ற பொருள்பற்றியே பேசுதல் வேண்டும் என்று பணித்தார்கள். பணித்தவர்கள், அந்தமட்டில் நில்லாது அப்பேச்சினை முதற்கண் எழுதிப் போந்து, முக்கால்மணி நேரத்திற்குள் படித்து முடித்ததும் வேண்டும்; “இறந்தநாள் யாவர்மீட்பார்”(2616) எனத் திருத்தக்க தேவர் கூறியுள்ள சீரிய கருத்தை மேற்கொண்டு காலவளவில் கருக்தூன்றி நிற்றல் வேண்டும் என்று கழறிக் கூறினார்கள். அவர் கூறியவை அனைத்தும் பொன்போற் போற்றத்தக்கன வாதலின், அவற்றை மேற்கொண்டு என் கடமையினை ஆற்றத் தொடங்கு கின்றேன். கருத்து வேற்றுமை, குற்றம் குறை முதலியவற்றைப் பொறுத்தருளுமாறு உங்கள் திருவுள்ளப் பேரருளைப் பெரிதும் வேண்டிக்கொள்ளுகின்றேன்.

“சீவக சிந்தாமணியும் சைவமும்” என்ற தலைப்பைக் கண்டதும் சில நண்பர்கள் வியப்புற்றனர். அதனைக் கண்டதும், இவ்யாண்டில் நம் சைவ சித்தாந்த சமாசத்தில் சீவக சிந்தாமணி மூலம் மட்டில் வெளியிடப் பெறுகிறது என்றுயான் சொன்னேன்; அது கேட்டதும் அவர்கட்கு வியப்பு மிகுதியாயிற்று. “சீவக சிந்தாமணி யென்பது சமண் சமயக் காவியம்; அதற்கும் சைவத்துக்கும் என்ன தொடர்புண்டு?” என்றனர். அவர்கள் நம் சைவத்தின்பால் உள்ள ஆர்வமிகுதியால் அவ்வாறு கேட்கின்றனர் என்பதனை யான்நன்கு தெரிந்துகொண்டேன். புறச்சமய நெறிநின்று அகச்சமயம் புகுதலும் பிறவும் சைவத்துக் உடன்பாடாகும். புறச்சமய நூல்களைப் பயின்று சைவத்தின் மாண்பு காண்பதும் ஒருவகை அறிவுநெறியே என்று நாவரசர் வரலாறு நமக்குக் காட்டுகின்றது. இதனால். சைவர் அனைவரும் புறச்சமய நூல் பலவும் வரைவின்றிக் கற்றல்வேண்டுமென்று வற்புறுத்துகின்றேனென்று துணிதல் கூடாது. புறச்சமய நூல்களுள்ளும் சீரிய நலமுடையவையுளவாயின், அவற்றைக்கற்றல் குற்றமின்று; அக்கற்றறிவால் நம் சைவத்தின் தனிப்பெருமாண்பினை நன்கு தெளிய உணர்தல் கூடுமென்பதே பேறிஞர் பலர் கருத்து.

இனி, சீவக சிந்தாமணியென்பது சீவகன் என்னும் அரசகுமரன் ஒருவனது வரலாற்றினைக் கூறும் தமிழ்க் காவியமாகும். இச் சீவகன், ஏமாங்கத நாட்டை அதன் தலை நகரான இராசமாபுரத் திருந்து ஆட்சிபுரிந்த சச்சந்தன் என்னும் வேந்தனுக்கு மகன். இவன் பிறந்த அன்றே கட்டியங்காரன் என்னும் அமைச்சனால் சச்சந்தன் கொலையுண்டான். சீவகன் தாயான விசயை என்பாளும் அவனை விட்டு நீங்கினள். சீவகன், கந்துக்கடன் என்பானால் எடுத்து வளர்க்கப் பெற்று, அச்சணந்தி என்னும் சமண முனிவன்பால் பலகலைகளையும் கற்பிக்கப்பெற்றான். பின்பு இவன், தன் பிறப்பு வரலாறு ஆசிரியனால் உணர்ந்து, அவனே தேற்றத் தேறியிருக் கையில், அந்நகரத்து ஆயரது ஆனிரையைக் கவர்ந்த வேட்டுவரை ஆளற்றம் நேராத வகையில் வென்று வீறுபெற்றான். பின்னர், இச்சீவகன் காந்தருவதத்தை யென்பவளை இசையால் வென்றும், குணமாலை யென்பவளை அசனிவேகம் என்னும் யானையினின்று காத்துக் காதலுற்றும் மணந்து கொண்டான். இவ்வாறே பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை என்ற ஆறு மகளிரை மணம் செய்து கொண்டு சிறப்புற்றான். இலக்கணையை மணப்பதற்கு முன், தன் தாயைக் கண்டு, அவள் பணித்த வாறே, தாய்மாமனான கோவிந்தராசன் என்பவனைத் துணை கொண்டு கட்டியங்காரனை வென்று தன் அரசுரிமை எய்தினான். முடிவில், இச்சீவகன், நன்மக்கள் பலரைப் பயந்து, அவர்பால் தன் அரசினை வைத்துத் தான் துறவுபூண்டு, இறுதியாக, பரிநிருவாணம் பெற்றான். இதுவே, சீவக சிந்தாமணியில் அடங்கிய கதை.

இதனை, இனிய அழகிய தமிழ்ப் பாக்களால் நமக்கு உணர்த் தருளிய சான்றோர் திருத்தக்க தேவர் என்ற சமண முனிவராவார். இவர் சோழர் குலத்தவர் என்று சைனர் கூறுகின்றனர். இவர் ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தாம் நூற்றண்டின் தொடக்கத்திலும் இருந்தவர் என ஆராய்ச்சியாளர் முடிவு கண்டுள்ளனர். இவர் வடமொழி, தமிழ் மொழி என்ற இரண்டினும் சிறந்த புலமையும், தமிழில் அரிய பாவன்மையும் உடையவர்.

இவர் காலத்தே, திருஞானசம்பந்தர் முதலிய சைவத் திருவருட் செல்வர்களால் சீர் செய்யப்பெற்ற வைச சமயம் சிறப்புற்றிருந்தது. சமண் சமயம் தலைமையிழந்திருந்தது. திருஞானசம்பந்தர் முதலி யோரால் நிலைநாட்டப் பெற்ற வைதிக சைவம், வேதநெறி பற்றிய புராணங்களையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. “வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துரைவிளங்க” என்றும், “வேதப் பயனாம் சைவமும்போல்” என்றும், தேவர்க்குச் சுமார் இருநூறு ஆண்டுகட்குப் பிற்போந்த சேக்கிழார் பெருமாள் எடுத்தோதுதலால் இவ்வுண்மை புலனாகின்றது, ஆகவே, தேவர் இச்சிந்தாமணியைப் பாடிய காலத்தில், நம் தமிழ் நாட்டில் நிலவிய சைவநெறி வைதிக சைவப் புராணங்களைக் கொண்டிருந்தமை இனிது விளங்கும்; அன்றிவும் எட்டுத் கொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என வகுத்துக் காணப்பெறும் சங்க இலக்கியங்களும் தமிழர் கற்கும் தமிழ்க் கல்விக்குப் பெருநூல் களாகத் திகழ்ந்தன. தேவரும், இவ்வைதிகச் சைவ நூல்களையும், செந்தமிழ்ச் சங்க இலக்கியங் களையும், திருஞானசம்பந்தர் முதலியோர் பாடியருளிய திருமுறை களையும் நன்கு கற்று மிக்க சொல் வளம் படைத்த தமிழ்ப் பாவலரால் விளக்கமுற்றிருந்தார். இவர் பாடிய இப்பெருங் காவியத்தில், வைதிக சைவப் புராணக் கருத்துக்கள் பல ஆங்காங்கு நின்று மிளிர்கின்றன. இதனால், இவர் இயற்றிய சிந்தாமணி நந்தாவளம் பெற்று, சமய வேற்றுமையின்றித் தமிழர்களால் போற்றிப் படிக்கப்பெறுவதாயிற்று; இன்னும் அவ்வண்ணமே வந்துகொண்டிருக்கிறது. இந்நூலுக்கு ஓர் அரிய உரையும் நச்சினார்க் கினியார் என்னும் வைதிக சைவர் ஒருவரால் எழுகப்பெற்றுள்ளது.

சமயப்போர் என்னும் சூறாவளியால் நிலைகலக்குண்ட சமயமொன்றைச் சார்ந்த பாவலர் ஒருவர், ஒரு காவியம்செய்வரேல், அவரது அக்காவியத்தின்கண் காவிய நலம் ஒன்றே சிறந்துநிற்கும் என்பது சிறப்பன்று; அவர் உள்ளத்தே தம் சமயத்தைப் பண்டை நிலையில் நிறுத்த வேண்டு மென்னும் ஆர்வமும், அது வாய்ப்பது குறித்து ஒல்லும் வாயெல்லாம் சமயக் கருத்துக்களை நாட்டு மக்கிடையே பரப்ப வேண்டுமென்ற வேட்கையும் உள்ளுறக் கிடந்து தன் கடமையினைச் செய்யுமென்பது இயற்கையாகும். இதனை ஆராய்ச்சியறிவுடையவர் எவரும் உடன்படுவர், தேவர் வாழ்ந்த காலமும், அக்காலத்தே அவரது சமயமிருந்த நிலையும் நோக்குமிடத்து, அவர் பாடிய காவியத்தில், காவிய நலமும் சமண் சமயக் கருத்தும் ஒருங்கே விரவிவரப் பாடியிருப்பர் என்பது இனிது உணரப்படும். இவர் மேற் கொண்டநெறியே இவர்க்குப் பின்வந்த சமண முனிவர்களின் தமிழ் நூல்களில் அமைந்து கிடக்கின்றது.

அன்றியும், இச் சிந்தாமணிக்கண் ஏறக்குறைய 3100 செய்யுட்கள் உள்ளன. இவற்றுள் சில கந்தியார் பாடியன என்பர்; ஆனால் அவை இன்னவென அறியக்கூட வில்லை; ஆகவே, இப்போது காணப் பெறுவன 3100 செய்யுட்கள் என்றே கொள்வோம். இவற்றுள், கடவுள் வாழ்த்து, பதிகம் என்ற இரண்டினையும் ஒரு பகுதியாகக் கொள்ளின், இக்காவியம் பதினான்கு பகுதியதாகும். இவைகளுள், இறுதியில் உள்ள முத்தியிலம்பகம் நீங்கலாக, ஏனைய பதின் மூன்றுக்கும் சராசரி 200 செய்யுட்கள் உள்ளன; முத்தியிலம்பகத்தில் மாத்திரம் 500 செய்யுட்கள் இருக்கின்றன. இம் முத்தியிலம்பகம் மட்டில் ஐந்நூறு செய்யுட்கள் கொண்டிருப்பதற்குக் காரணம், இப்பகுதி முற்றும் சமண் சமயக் கருத்துக்களைத் தமிழ் நாட்டவர்க்கு எடுத்து உரைப்பதேயாகும். மேலும், இச்சீவக சிந்தாமணி சைனரிடையே ஒரு சமயப் பெரு நூலாகவே போற்றப்பட்டு வருகின்றது. முத்தியிலம் பகத்தை மட்டில் தனியே பிரதிசெய்து கொண்டு ஓதியும் வழிபட்டும் வரும் வழக்கம் சைனர்பால் இன்றும் உண்டு. இவ்வாறு வழிபடப் பட்டுவந்த முத்தியிலம்பக ஏட்டுப்பிரதிகள் அடியேன் பால் இரண்டு உண்டு; அவற்றுள் ஒன்று ஆம்பூர் “தமிழணங்கு” ஆசிரியர், உயர்திரு.ஆ.ம.சிவஞானம் அவர்கள் வழங்கியது. தென்னார்க்காடு சில்லாவைச் சேர்ந்த வீடூர், ஆலக்கிராமம், பெருமண்டூர், விழுக்கம், சிற்றாமூர் முதலிய இடங்களில், பல சைனர் வீடுகளில் இம்முத்தியிலம் பகப் பகுதி மட்டில் தனியே இருக்கக் கண்டிருக்கின்றேன். இச்கூறிய வாற்றால், திருத்தக்கதேவர், தாம்பாடிய இச்சிந்தாமணிக் காவியத்தில், காவிய நலமும், சமண்சமயப் பொருள் நலமும் சிறக்க அமைப்பதை ஒரு நோக்கமாகக் கொண்டிருந்தனரென்பது துணிபாம்.

இவ்வாறு இவர் சமண் சமயப் பொருளைத் தமிழ் உலகிற்கு வழங்கும் கருத்தினராதலைப் பண்டையறிஞர் அறியாமல் இல்லை. எனினும், இக்காவியத்தின் தமிழ்நலத்தைத் தேர்ந்து இன்புற்ற சிறப்பால், இதனை அவர்கள் புறக்கணிக்கவில்லை. பின்வந்த யாப்பருங்கலம், நேமிநாதம், நன்னூல் முதலாயினவும் இவ்வாறே தமிழறிஞர்களால் இன்று காறும் போற்றப்பட்டு வருகின்றன. ஆறுமுக நாவலர் முதலிய சைவவொழுக்கம் தலைசிறந்த சான்றோர் உரைவகுத்தும் அச்சிட்டும் வெளியிட்டுமுள்ளார்கள். வைத்தியநாத தேசிகர் என்னும் சீரிய சைவச் சான்றோர் எழுதிய இலக்கண வீளக்கத்தை மறுத்து, சமண முனிவரான பவணந்தியார் எழுதிய நன்னூலை வலியுறுத்தியவர் யாம் செய்த தவப்யனாய்த் தோன்றி, அருமைச் சிவஞான போதத்துக்குப் பேருரை விரித்த பெருந்தகை மாதவச் சிவஞான யோகிகளாவர். “எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்ற மெய்ம்முறையின் துணிபுதோய்ந்த உள்ளத்தராதலின், அவர்பால் சமயக் காழ்ப்பு அக்காலத்தே இலதாயிற்று.

அன்றியும், வெள்ளறிவுடைய மக்கள் உள்ளத்தை எளிதிற் பற்றி யீர்க்கும் எளிய நூல்கள் அக்காலத்தே சைவ வுலகில் அருமையாய் இருந்திருத்தல் வேண்டும். சங்க இலக்கியம், தேவாரத் திருமுறை, திருமந்திரம் முதலிதன அக்காலத்தே இருந்தனவாயினும், நுண் மாண்புலமை யுடையார்க்கன்றி ஏனையோர்க்கு-அவருள்ளும் இறைவன் திருவருள் நலம் வாயாதார்க்கு-எளிதிற் பொருள் விளங்காவாய் இருந்தன. இவ்விடர்ப்பாடு நம் திருநாவுக்அரசர் காலத்தேயே இருந்திருக்கின்றதென்று அவர் வரலாறு கூறுகின்றது. அவர் காலத்தே திருமந்திரம் முதலிய சமய நூல்கள் இல்லாமல் இல்லை. நாவரசர்க்குத் திருவருள் நன்கு வாய்ப்பதற்கு முன்பு, அவர் சமண் சமய நூல்களையே மிக்க கற்றனரென்று அவர் வரலாறு கூறுகின்றது:

“ நில்லாத உலகியல்புகண்டு நிலையா வாழ்க்கை
அல்லேன் என்றறத் துணிந்து சமயங்க ளானவற்றின்
நல்லாறு தெரிந்துணர்ந்தும் நம்பர் அருளாமையினால்
கொல்லாமை மறைந்துறையும் அமண்சமயம் குறுகினார்”

என்று சேக்கிழார் பெருமாள் கூறுதல் காண்க. இதனை நோக்கின், தொடக்கத்தில் மருள்நீக்கியாய் இருந்தவரைத் தன்பால்கொண்டு, தருமசேனராக்கி, முடிவில், நாவுக்கரசாய், அப்பமூர்த்தியாய், தாண்டக வேந்தராய், சைவ சமயாசிரியராய் நமக்கு வழங்கியது, திருவருள் என்பது ஒருபுறமிருக்க, இச்சமண் சமயப்பெருநூல் தொகுதியுமாம் என்பது பொருந்தா உரையன்றாம். எனவே, இச்சீவக சிந்தாமணியென்னும் செந்தமிழ்ப் பெருநூல் சமண் சமயப் பெரு நூலாயினும், சைவர்களாகிய நாம் மேற்கொண்டு போற்றுதற்கும், நம்மைப்போல் பிறரும் போற்றுமாறு அச்சிட்டு வெளியிடுதற்கும் மிக்க உரிமையுடையோம் என்பது தெள்ளிதாம்.

இனி, “ஒள்ளிய சீர்த்தொண்டர் புராணம்” என்றும், “பொரு வரிய திருத்தொணடர் புராணம்”, “சங்கரன்தாள் தமது சிரங்கொள் திருத்தொண்டர் புராணம்” “சேண்தகைய திருத்தொண்டர் புராணம்” என்றும் நாம் பரவிப் படித்து ஒதி இன்புறும் பெரிய புராணம் பிறந்த தற்கும் இச்சீவக சிந்தாமணி ஒரு காரணமாம் என்பதனைத் திருத்தொண்டர் புராண வரலாறு உரைத்தருளிய உமாபதி சிவனார் விளம்புகிள்றார்கள். சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் புராணம் பாடிய காலத்தில் இருந்த சோழன் கி.பி.1132 முதல் 1146 வரை ஆட்சி செலுத்திய இரண்டாங் குலோத்துங்கன் என்பர். இவ்வேந்தன் பரந்த மனப்பண்புடையவன் என்னும், சிறந்த சிவத்தொண்டன் என்னும் ஏனைச் சமயத்தவரையும் இனிது ஆதரிக்கும் விரிந்த நோக்குடையவன் என்றும் ஆராய்ச்சி யாளர் விதந் தோதுகின்றனர். இவன் இச்சீவக சிந்தாமணியின் நந்தாத் தமிழ் நலங்கண்டு அதனையே பெரிதும் விரும்பி எப்போதும் ஒதியும் உரைப்பக் கேட்டும் இன்புற்றிருந்தான். இச்சிந்தாமணிக் கண் இடையிடையே கொளுத்தப்பெறும் சமண்சமயக் கருத்துக்களை அரசன் ஏற்றுச் சமணனாய் விடுவனோ என்று சேக்கிழார் பெருமாள் முதலிய சான்றோர் அறிந்து அஞ்சி, அவர் கருத்துச் சிவநெறியிலேயே ஊன்றி நிற்றல்வேண்டித் திருத்தொண்டர் புராணத்தைச் செய்தருளினர் என்று உமாபதிசிவனாரும், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களும் பிறரும் பலவகையாலும் எடுத்தோதியுள்ளார்கள்.

சிந்தாமணியின் காவிய நலத்திலே சோழ வேந்தன் கருத்துத் தோய்ந்து நின்றதை, “வளவனும்… சிந்தாமணிக் கதையை மெய்யென்று வரிசைகூற, உளமகிழ்ந்து பலபடப் பாராட்டிக் கேட்க உபயகுல மணிவிளக்காம் சேக்கிழார் கண்டு, இளவரசன் தனைநோக்கிச் சமணர் பொய்ந்நூல் இது, மறுமைக்காகாது இம்மைக்கும் அற்றே; வளம் மருவுகின்ற சிவகதை இம்மைக்கும் மறுமைக்கும் உறுதி” என வரும் திருத்தொண்டர் புராண வரலாற்றுச் செய்யுளால் அறியலாம். இதனைத் “திருட்டுச் சிந்தாமணிக் கதை” என உமாபதி சிவனார் கூறுவர்; இது காவிய வடிவிற் போந்து சமண் சமயக் கருத்துக்களை நாட்டு மக்கட்குக் கொளுத்தும் குறிப்புடையதாய் இருத்தல் பற்றி, உமாபதி சிவனார் இச்சீவக சிந்தாமணியை நன்கு ஓதியுள்ளார் என்பது அவர் பாட்டுக்களால் இனிது உணரப்படுகின்றது. ஒன்று காட்டுதும்: சீவகன் தன் மனைவியருடன் நீர்விளையாட்டயர்ந்த போது, அம்மகளிர் அலைந்த திறத்தைக் கூறப்போந்த திருத்தக்க தேவர், “கூந்தலை ஒருகை யேந்திக் குங்குமத் தாரைபாயப், பூந்துகி லொருகை யேந்திக் புகுமிடம் காண்டல் செல்லார்” (சீவக.2660) என்றனர்; இதனையே நம் உமாபதி சிவனார், கோயிற்புராணப் பாஞ்சலில் சருக்கத்தில், ஆண்டவன் திருவடிவம் கண்டு தாரு வனத்து முனிமகளிர் பெண்மைப் பண்பிழந்து அலமந்த செய்தி கூறுமிடத்து, “சாயவார் குழலொருகை கலையொரு கையுறத் தாங்கி, பாய வாள்விழி யருவிப் பரவசராய் எதிர் பயில்வார்” (பதஞ்சலி 19) என்ற செய்யுளின்கண் அமைத்து ஒதுகின்றார். இவ்வாறு வருவன பல.

இனி, சேக்கிழார் பிள்ளைத் தமிழ் வாயிலாக, “பயனிலதாகும் சிந்தாமணிவழிப் படர்தல் எனப் போதித், துத்திச் சுமையொரு தோள்வைத் திடுபுலி யுயர்த் தோன் மனம் அடியார் உறுசெயல் நாடப்புரி மதிவலவ” என்றதனால், சேக்கிழார் பெருமான், சிந்தாமணி வழியே படர்ந்த வேந்தன் உள்ளத்தை மாற்றற் கெனத் திருத்தொண்டர் புராணம் பாடியருளினர் என்ற செய்தியைத் திரு.மீனாட்சிசுந்தரம் பிள்ளையாவர்கள் கூறுவதை யறிகின்றோம். திரு.பிள்ளையவர்களும இச்சீவக சிற்தாமணியின் காவிய நலத்தை யறியாதவரல்லர். ஆனால், டாக்டர்-திரு.உ.வே.சாமிநாதையரவர்கள் தம் ஆசிரியரான திரு.பிள்ளையவர்கள் சீவக சிந்தாமணியைப் படித்திலர் எனத் தாம் எழுதிவரும் தம் வரலாற்றிற் குறித்திருக் கின்றார்கள். சீவக சிந்தாமணியை அச்சிடுதற்குத் தாம் பெற்ற ஏட்டுப் பிரதிகளுள் முதற் பிரதி, “திருவாவடு துறையாதீனத்து மகாவித்வான் ம-ள-ள-ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரம் பிள்ளையவர்கள் பிரதி-க” என்று குறித்துள்ளார்கள். மேலும், திரு.பிள்ளையவர்கள் பாடியுள்ள தல புராணங்களிலும் கோவை, உலா, பிள்ளைத் தமிழ் முதலிய பலவற்றிலும் இச்சீவக சிந்தாமணியின் சொற்களும் சொற்றொடர்களும் கருத்துக்களும் எண்ணிறந்தன உள்ளன. இவற்றை நோக்குங்கால், திரு.பிள்ளையவர்கள் இச்சிந்தாமணியின் காவிய நலத்தை நன்கு பயின்று. தேர்ந்தவர் என்பது விளங்கத் தெரிகின்றது. திரு.பிள்ளையவர்களின் மாணாக்கரான திரு.அய்யரவர்கள் கூறுவதோ, திரு.பிள்ளை யவர்களின் பாக்கள் விளக்குவதோ, இன்னது தான் உண்மை என்பதை அறிஞர்கள் ஆராய்ச்சிக்கு விட்டு விட்டு, இதனை விகடப் பத்திரிகையில் வரும் ஒருவகை விகடம் என அடியேன் கருதி ஒதுக்கிவிட்டு மேற்செல்ல விரும்புகின்றேன்.

இதுகாறும் கூறியவர்ற்றால், மண்ணாளும் வேந்தனொருவன் மனக்கண்ணையும் கருத்தையும் கவ்வி மிக்க இன்பூட்டிய மாண் புடையது இச்சிந்தாமணி யென்றும், இதனுடைய இப்பண்பே, சேக்கிழார் பெருமான், திருவருள் துணைபெற்று, தெய்வத் திருத்தொண்டர் புராணத்தைப் பாடியருளுதற்குக் காரணமாயிருந்த தென்றும் நாம் தெளிய அறிகின்றோம்.

சமயக் கருத்துக்களை யுணர்த்தும் அறிவு நூல்கள், பிற சமயக் கருத்துக்களையும் எடுத்தோதி ஆராய்ந்து உண்மை துணியும் கடப்பாடுடையவையாகும். பிற சமயக் கருத்துக்களை நிரல்பட எடுத்தோதாது, பருந்தின் வீழ்ச்சி போல், ஆங்காங்கு ஒன்றிரண்டை எடுத்தோதி மறுத்துத் துணிபு காண்பதால், கற்பார்க்குப் பொருளுணர்ச்சி இனிது நிகழாதாம். ஆதலால், தம் சமயக் கருத்துக்களை வற்புறுத்தும் பகுதியைச் சுபக்கம் எனவும், பிற சமயக் கருத்துக்களைத் தொகுத்தெடுத்து ஓதும் பகுதியைப் பரபக்கம் எனவும் வகுத்துரைப்பது சமய அறிவு நூல்கள் மரபாகும். நம் சைவத்திலும், ஆசிரியர் அருணந்தி சிவனார், சிவஞான போதத்துக்கு நல்லுரையாக அருளிய சிவஞான சித்தியாரைப் பரபக்ககெனவும் சுபக்கமெனவும் வகுத்து, பரபக்கத்தில், உலகாயதம் முதலிய பல வேறு சமயக் கருத்துக்களை விரியக்கூறி மறுத்தலைக் காண்கின்றோம்; சுபக்கத்தில், சித்தாந்த சைவத்தின் உயிர் நிலையாக விளங்கும் சிவ ஞானபோதத்தின் உரையினை விரித்தோதுவதையும் காண்கின்றோம். சங்கற்ப நிராகரணமும் இப்பெற்றியதேயாகும். சைவசமய அறிவு நூல்களைச் சைவர் அனைவரும் தவறாது கற்றுத் தெளிதற் குரியரா தலால், அவர்கள். பரபக்கம் சுபக்கம் இரண்டும் கற்றுத் தெளியும் கடன்மை யுடையரா கின்றனர். பரபக்கத்தில் காணப்படும் பல்வேறு சமயங்களுள் சமண் சமயமும் ஒன்று. ஆகவே, சமண் சமய நூல் களையும் படித்தலும், படிப்போர் எளிதிற் பெற்றுப் படிக்குமாறு அச்சிட்டு வழங்கலும் சமயப் பணியாகின்றன. ஆதலாற்றான், நம் சைவ சிந்தாந்த சமாசம், இன்று, சீவக சிந்தாமணியை அச்சிட்டு எளிய விலைக்கு வழங்குகின்றது. இங்கே கூடியிருக்கும் சைவ நன்மக்களாகிய உங்களை, நம் சமாசம் புரியும் இச்சமயப் பணியை ஊக்குமாறு, சமாசத்தின் சார்பாக வேண்டுகின்றேன்.

தேவர் சிந்தாமணியைப் பாடிய காலத்தே நம் தமிழ் நாட்டில் வைதிக சைவம் உயர்நிலையில் இருந்ததென்றும், அவ்வைதிக நெறிபற்றிய புராணவரலாறுகள் பல்கிப் பயிலப்பெற்று வந்தன வென்றும் அடியேன் முன்பே கூறியுள்ளேன். அவர் காலத்துக் கல்வெட்டுக்கயில் வைதிக சைவப் புராண வரலாற்றுக் குறிப்புக்கள் பல காணப்படுகின்றன. எனவே, கற்றறிந்தார் கூட்டத்தில் வைதிக சைவ வரலாறுகள் மிகுதியும் பயின்றிருந்தமையின், அவர் கூட்டத்துக்கு அறிவுவிருந்து நல்கும் உரவோர் இவ்வரலாறுகளைப் பெரிதும் பயன் கொண்டனர். தேவரும் தம் சமண் சமயநெறி பற்றியே இவ்வினிய காவியத்தைச் செய்தாராயினும். எந்தை சிவபரம் பொருளை விதந்து பலவிடங்களில் பாராட்டி உவமப் பொருளாகக் காட்டி நம்மை மகிழ்விக்கின்றார்.

திருமால், கண்ணனாய் இடையர் மனையில் மறைவாக வளர்ந்த செய்தியைக் கூறுவார், அத்திருமால் இறைவன் முப்புறம் எரித்தபோது அவர் வில்லிற்குக் கணையாகிய வரலாற்றை விதந்து, “போகம் ஈன்ற புண்ணியன் எய்த கணையேபோல், மாகம் ஈன்ற மாமதியன்னான் வளர்கின்றான்” என்னும் கூறுகின்றார். இறைவன் தேவியொடுகூடி உயிர்கட்குப் போகமும் இன்பமும் நல்கும் அருள்வள்ளல் எனத் திருத்தக்க தேவர் கூறும் இச்செய்தி, நம் ஞான சம்பந்தப் பெருந்தகையார் அருளிய,

“ போகமும் இன்பமு மாகிப் போற்றி யென்பாரவர் தங்கள்
ஆகமும் உறைவிட மாக அமர்ந்தவர் கொன்றையி னோடும்
நாகமும் திங்களும் சூடி நன்னுதல் மங்கைதன் மேனிப்
பாகம் உகந்தவர் தாமும் பாண்டிக் கொடுமுடி யாரே”

என்றும்,

“ சார்ந்தவர்க் கின்பங்கள் தழைக்கும் வண்ணம்
நேர்ந்தவன் நேரிழை யோடும் கூடி;
தேர்ந்தவர் தேடுவார் தேடச் செய்தே
சேர்ந்தவன் உறைவி டம்திரு வல்லமே”

என்றும் வரும் திருப்பட்டுக்களை நினைவுறுத்துகின்றன.

மேலும், “போகம் ஈன்ற புண்ணியம்”- தான் சத்தியும் சிவனுமாய் உலகத்துக்கெல்லாம் போகத்தை உண்டாக்கின புண்ணியன்; புண்ணியன் என்றார், திரிபுரத்தை யழித்தும் நஞ்சுண்டும் பல்லுயிர்களையும் காத்தலின் என ஆசிரியர் நச்சினார்க்கினியார் உரை கூறுகின்றார். இதனை எழுதுங்கால், நச்சினார்க்கினியார் உள்ளத்தில், நாவரசர் வழங்கியருளிய,

“ சீரார் முடிபத் துடையான் தன்னைத்
 தேசழியத் திருவிரலால் சிதைய நூக்கிப்
 பேரார் பெருமை கொடுத்தான் தன்னைப்
 பெண்ணிரண்டு மாணுமாய் நின்றான் தன்னைப்”

சிவபெருமானைக் குறித்து ஓதலுற்ற தேவர், “முக்கண் சினந்திகழ் விடையான்” (சீவக. 188), “கொய்ம்மலர்க் கொன்றை மாலைக் குளிர்மதிக் கண்ணியான்” (சீவ. 208), “போகமீன்ற புண்ணியன்” (சீவ. 362), “வார்சடைய வள்ளல்” (சீவ.598), “காரியுண்டிக் கடவுள்” (சீவ. 670), “கனையெரி அழலம்பெய்த கண்ணுதல் மூர்த்தி” (சீவ. 2249), “பிறையணி கொண்ட அண்ணல்” (சீவ. 2537) என்பன முதலிய இனிய சொற்றொடர்னளால் பாராட்டி யுரைக்கின்றார். இறைவன் பங்குறையும் தேவியாரை, “செல்வி” (188) என்றும், “கணிமலை யரையன் மங்கை மைம் மலர்க்கோதை” (208) என்றும் அழகுறுத்துகின்றார்.

இவ்வாறே, முருகவேளையும் உரியவிடங்களில், “குன்றமார் பரிந்து வெள்வேல் குடுமிமா மஞ்சையூர்ந்து நின்றமால்” (சீவக. 286), “கொழுங்கயற் கண்வள்ளி நலன் நுகர்ந்தான் அன்றே நறுந்தார் முருகன்” (சீவக. 482), “தாமரை, அமரர் மேவரத் தோன்றிய அண்ணல்” (சீவ. 994), “கத்திகைக் கண்ணி நெற்றிக் கைதொழு கடவுள்” (சீவக. 971), “முருகவேள்”(சீவ.1943), “வள்ளல் மாத்தடிந் தான்” (சீவ. 1029), “பூவினுட் பிறந்த தோன்றல் புண்ணியன்” என்றெல்லாம் பாராட்டியிருக்கின்றார். இவ்வாறே திருமாலையும் ஏற்றவிடத்துச் சிறப்பியாது தேவர் ஒழிந்தாரில்லை.

மேலே கூறிய வண்ணம் சிவபெருமான் முதலிய இறைவர்களை எடுத்தோதிய திருத்தக்க தேவர், சிவபெருமான் இறைவியோடு “நல்ல போகத்த” னாய் விளங்கும் செய்தியை, சீவகன் தந்தையான சச்சந்தன் தன் மனைவி விசயையை மணந்து இன்புற்றிருந்த செய்திக்கு உவமமாக வைத்து, “இனம் தமக்கு எங்குமில்லார் இயைந்தனரென்ப, முக்கண் சினந்திகழ் விடையினானும் செல்வியும் சேர்ந்த தொத்தே” என்னும், சீவகன் கந்துக்கடன் மனையில் வளர்ந்த காலையில், அவன் வளர்ச்சிக்கு உவமமாக

 போரார் புரங்கள் புரள நூறும்
 புண்ணியனை வெண்ணீ றணிந்தான் தன்னை
 ஆரானை ஆருரில் அம்மான் தன்னை
 அறியாது அடிநாயேன் அயர்த்த வாறே’’

என்ற திருத்தாண்டகத்துள், “போரார் புரங்கள் புரள நூறும் புண்ணியனை” என்ற தொடர் நின்று உரிய பொருளை வழங்கி யிருப்பது புலனாகின்றது.

சீவகன கட்டியங்காரனை வென்று, இலக்கணையை மணந்து இன்புற்றவன், நகரின்கண் உலாவருங்கால், அவனைக்கண்ட மகளிருள் வேட்கை பிறந்த மகளிர் சிலர் செயல் கூறலுற்ற தேவர், சிலர் சீவகன் நகருலா வரலைக் காண்டற்குத் தம்மைக் கைபுனைந்து கொள்ளலுற்று, ஒருபாதி முடிந்ததும், சிலர் சீவகன் வந்தரன் என்று கூறிவிடவே, அவ்வளவில் அவனைக் காண்டற்கு ஓடிவர, ஒருபாதி கைபுனையாமையின் நாணி அதனை மறைத்துக்கொண்டு நின்றனர்; அவர் நின்ற தோற்றம், உமையமர்ந்து விளங்கும் இறைவன் போல்கின்ற தென்பார்,

“ குறையணி கொண்டவாறே கோதைகால் தொடரஒடிச்
சிறையழி செம்பொன்உந்தித் தேன்பொழிந் தொழுக ஏந்தி
பறையிசை வண்டுபாடர் பாகமே மறையநின்றார்,(தொத்தார்”
பிறையணி கொண்டஅண்ணல் பெண்ணொர்பால் கொண்ட

என்று கூறியுள்ளார். இதன்கட் காட்டிய பிறையணியும் பெண்ணொரு பாகமும், நாவரசர், திருவையாற்றில் கண்டு ஓதியருளிய திருப்பாட்டாகிய, “மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி, போதொடு நீர்சுமந்தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்” என்பதனை நினைவுக்குக் கொணர்கின்றன. இவ்வாறு நால்வர் வழங்கிய திருமுறைத் திருப்பாட்டுக்கள் பல இச்சிந்தாமணியைப் படிப்பவர் மனத்தே ஆங்காங்கே தோன்றி இன்புறுத்துகின்றன. இவ்வாறே, வீரச்சுவை நிகழுமிடத்தும், அஃதாவது, கட்டியங்காரன் சீவகன்பால் தீராச் செற்றங் கொண்டுள்ளான் என்ற செய்தியை நாகமாலை யென்பாள் கந்து கடனுக்கு ஒலையெழுதித் தெரிவித்த விடத்தே, “வெம்பினான் காரியுண்டிக் கடவுளினிற் கனன்று வேந்தன்” என்று எழுதி யுள்ளாள்; இத்தொடர், *மலைபடுகடாத்து, “பேரிசை நவிரம் மேஎ யுறையும், காரியுண்டிக் கடவுள தியற்கையும்” (84-5) என்ற அடிகளை நினைப்பிக்கின்றது. மதனன், மன்மதன் என்ற இருவரும் விசயன் என்பவனுடன் பொருது பட்டழிந்தபின், சீவகன் தோழனான புத்திசேனன் தன்னை எதிர்த்த வேந்தரொடு போர் செய்தான் என்பார், “வளைகலத் திகிரித் தேர்மேல் மன்னரை குடுமி கொண்டான்” என்றவர், அவன் வெகுண்டு நின்ற நிலையை விதந்து, “கனையெரி அழலம் பெய்த கண்ணுதல் மூர்த்தி யொத்தான்” (2249) என்கின்றார். “அழலம்பு ஒன்றினால் எய்த பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே” எனவரும் திருநெறித் தமிழை இவ்வடி நினைப்பித்தல் காண்க.

இவ்வண்ணம் சைவத் திருமுறைப் பாட்டுக்களை இச்சிந்தா மணிச் செய்யுட்கள் ஆங்காங்குப் படிப்போர் உள்ளத்தே நினைவு கூர்வித்தலால், நாம் ஒர் உண்மையினை உணர வேண்டியவர் களாகின்றோம். தேவர் காலத்தே, சிவபரம் பொருளின் வரலாறு கூறும் சைவப் புராணங்கள் தமிழ் மொழியில் பெரும்பாலும் இல்லையென்றே கூறலாம்; தேவாரத் திருமுறைகளே அவ்வர லாற்றினை மக்கட்குச் சுருக்கமாகக் குறிப்பிக்கும் நிலையில் இருந்தன. அவையே,தேவர் தோன்றுதற்குங்ச சிறிது ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகட்குமுன் மழுங்கியிருந்த சிவநெறியை மேம்படுத்தி நிலை நாட்டுயதோடு, உயர்ந்தோங்கியிருந்த சமண் சமய நெறியை வீழ்ந்தாழ்ந்துபடச் செய்தன. தம் சமயத்தின் சீரைக் குலைத்துச் சைவத்தை உயர்த்தி நிறுவிய இத்திருமுறைகளை, விரிந்த மனப்பண்பு சான்ற தேவர், பன்முறையும் ஒதிப்பயின் றிருத்தல் வேண்டும். அத்திருமுறை கட்குரிய வன்மை காண்டற்காகவேனும் உண்மையாக அவர் ஊன்றிய பயின்றிருத்தல் வேண்டும். வீழ்ந்த சமயத்தை நன்னிலைக்கும் கொணர முயல்வோர், அதன் வீழ்ச்சிக்கு ஏதுவாகிய அகக்காரணம், புறக்காரணம் இரண்டினையும் ஆராய்தல் வினைதூய்மையாகும். சைவத் திருமுறை புறக்காரணமாதலின், இதனை அவர் நன்கு பயின்றிருப்பர் என்பதில் ஐயமில்லை.

இதனை உண்மையென நிலை நாட்டற்கு வேறு கருவி வேண்டா; தேவர் பாடிய சிந்தாமணியே போதிய சான்று பகருகின்றது. “பூவார் கொன்றை” யென்று தொடங்கும் சீகாழித் திருப்பதிகத்தில், ஞானசம்பந்தப் பெருந்தகையார், “மாடே ஓதம் எறிய வயற் செந்நெற் காடேறிச் சங்கீனும் காழியார்” என்ற விடத்துச் செந்நெல் வயலைச் “செந்நெற் காடு” என்று அருளினார்கள்; இதனைத் தேவர் கண்டு வியந்தெடுத்து, “தேய்பிறை இரும்புதம் வலக்கை சேர்த்தினார், ஆய்செந்நெல் அகன்ற காடு அரிகுற்றார்களே” (சீவக.55) என்றனர். பிள்ளையார் திருப்புறம்பயத்துத் திருப்பதிதத்துள். “குருந்தொசி பெருந்தகையும் நீயும் பிரிந்தனை புணர்ந்தனை” என்றாராக. தேவர், அதன்கண் உள்ள வினைத் தொகையை விரித்து, “விரிபுனல் தொழுநையாற்றுள், கோல்நிற வனையினார்க்குக் குருந்தவன் ஒசித்த தென்றான்” (சீவக.209) என்றார். தேவர், சீவகன், நிரை கவர்ந்த வேட்டுவரை வெருட்டு யோட்டிய செய்தி கூறுமிடத்தே, “விளியும் சங்கும் வீணையும் பறையும் கோடும் கடத்திடை முழங்கக் காருங்கடலு மொத்தெழுந்த வன்றே” (சீவ.447) என்றது, ஞானசம்பந்தப் பிள்ளையார், “வேதமோதி” யென்று தொடங்கும் திருப்பழனப் பதிகத்து, “வீளைக் குரலும் விளிசங்கொளியும் விழவின் ஒலியோவா, மூளைத்தலைகொண் டடியாரேத்தப் பொடியா மதிள் எய்தார்” என்ற திருப்பாசுரத்தைக் காட்டுகின்றது. “கொட்டமே கமழுங் குழலாளொடு கூடினாய்” (திருஞான.கோயில். ஆடினாய்) எனப் பிள்ளையார் அருளினாராக. தேவர், “கொட்டமே கமழும் குளிர் தாமரை” (சீவக.2575) என்றனர்.

நாவரசர் வழங்கியவற்றுள், “நீறேறு” எனத் தொடங்கும் திருமழபாடித் திருத்தாண்டகத்துள், “விரிசுடராய் விளங்கொளியாய் நின்றான் கண்டாய்” (10) என்றவிடத்து வரும் விழவொலியும் வேள்வொலியும், தேவர் பாடிய சிந்தாமணிக்கண், “விழவும் வேள்வும் விடுத்த லொன்றின் மையால், புகழலாம் படித்தன்றிது பொன்நகர்” (138) என வருகின்றன. “விளங்குதோள் நலார்முள்கு மாயரும் மொய்ம்பொ டேகினார்” (சீவ.420) எனவரும் இதன்கண் முள்குதல் என்ற அரியசொல், “முள்குவார் போகம் வேண்டின் முயற்றியால்” (9) எனவரும் நாவரசர் அருளிய திருவொற்றியூர், “வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத கீதன்” என்று தொடங்கும் திருநேரிசையில் விளங்கி நிற்கின்றது. “சின்னமாம் பன்மலர்கள் அன்றே சூடிச் செஞ்சடைமேல் வெண்மதியம் சேர்த்தி னானை” (நாகை. தாண். பாரார் 4) என நாவரசர் நவின்றருளினாராக. தேவர், “சின்ன மாமலர்க் கோதைத் தீஞ்சொலார் போற்றிசைப்பத் திருமால் போந்தான்” (2369) என்றார். “வேன லானை யுரித்துமை யஞ்சவே, கான லானைக் கண்டீர் கடவூரரே” (கடவூர். குறுந். மலைகொள்.3) என நாவரசர் வழங்கியது, “வேனல் மல்கி வெண்தேர் சென்ற வெந்நிலம், பானல் மல்கி வெண்பா லன்னம் பாய்ந்தவே” (2578) எனச் சிந்தாமணிக்கண் இடம் பெறுகிறது.

சீவகன் கனகமாலை யென்பாளை மணந்து இனிதிருக் குங்கால், காந்தருவ தந்தையின் விஞ்சையால் அவளை யடைந்த நந்தட்டனை அவன் அவட்குக் காட்ட, கண்டு மகிழ்ந்த கனகமாலை, “எழுமையும் பெறுக இன்ன இளங்கிளைச் சுற்ற மென்றாள்” (1730) என வரும் இச்சிந்தாமணி, சுந்தாமூர்த்தி சுவாமிகள், திருக்குருகாவூர்த் திருப்பதிகத்தில், “இளங்கிளை யாரூரன்” என்ற திருவாக்கில் அமைந்திருக்கின்றது. இவ்வாறே பதினொராந் திருமுறையில் பல பாசுரங்கள் இச்சிந்தாமணியின் ஆக்கத்திற்குத் தேவர்க்கு உதவி செய்துள்ளன.

தேவாரத் திருமுறைகளிற் காணப்படும் அரிய சொற்பொருள்கள் பல, தேவரது சீவக சிந்தாமணிக்கண், உள்ளவாறே வந்துள்ளன. ஞானசம்பந்தர் பெருந்தகையார் தீர்த்தம் என்ற சொல்லை ஆகமம் என்ற பொருளில் வழங்கியதோடு, அது சமணர் கூட்டத்தில் வழங்குவது என்ற குறிப்பும் தோன்ற, திருக்கருகாவூர், “முத்திலங்கு” என்று தொடங்கும் திருப்பதிகத்தில், “போர்த்த மெய்யினர் போதுழல் வார்கள்சொல், தீர்த்தமென்று தெளிவீர் தெளியேன்மின்” என்று அருளுகின்றார்கள். அஃது இச்சிந்தாமணியில் “தீராவினை தீர்த்துத் தீர்த்தம் தெரிந்துய்த்து, வாராக் கதியுரைத்த வாமன்தான் யாரே” (1247) என்று வருகின்றது. திரிச்சிராப்பள்ளி “நன்றுடையானை” என்று தொடங்கும் திருப்பதிகத்தில்,

“ கொலைவரையாத கொள்கையர் தங்கள் மதில்மூன்றும்
சிலைவரையாகச் செற்றனரேனும் சிராப் பள்ளித்
தலைவரைநாளும் தலைவரல் லாமை யுரைப்பீர்காள்
நிலவரைநீல முண்டதும் வெள்ளை நிறமாமே”

எனவரும் திருப்பாசுரத்தின் ஈற்றடி, சீவகன் சுரமஞ்சரி கொண்ட கொள்கையைச் சிதைத்து மணந்து வருவதாகச் சூள்செய்யும் பாட்டின் சிந்தாமணியில்,

“ வண்டுதேன் சிலைகொள் நாணா மாந்தளிர் மலர்க ளம்பாக்
கொண்டவன் கோட்டந் தன்னுள் கொடியினைச் கொணர்ந்து நீலம்
உண்டது காற்றி ஆண்பேர் ஊட்டுவல், உருவக் காமன்
கண்டபொன் படிவம் சார்ந்து கரந்திரு நாளை என்றான் ”

எனவருகின்றது. மேலும், ஞானசம்பந்தர். “நிலவரைநீலம் உண்டதும் வெள்ளை நிறமாமே” என்ற தொடர், நிலவரைநீலம் உண்டது வெள்ளை நிறமுமாமே என இயைந்து உம்மையை இசை நிறையாக்குகின்றது; அவ்வியைபு, சிந்தாமணியில், “நுண்துகில் வேதலஞ்சி நெருப்பகம் பொதிந்து நோக்கிக், கொண்டுபோய் மறையவைத்தால் கொந்தழல் சுடா துமாமே” (1434) என்ற பாட்டில் அமைந்து கிடக்கின்றது. “வல்லோர் செதுமொழி சீத்தசெவி” (கலி. 68) என்றுவரும் சொல்,“செதுமகப் பலவும் பெற்றுச் சிந்தை கூர் மனத்தையாகி” (சீவக 1124) எனச்
சிந்தாமணியாலும், “செதுமதித் தக்கன் வேள்வி செற்ற மறத்தினர்” என ஞானசம்பந்தர் திருவாக்கிலும், “செதுமதிச் சமணர்” எனத் திருவிசைப்பாவிலும் வரக்காண்கின்றோம். செதுமொழி என்ற கலித்தொகை வழக்கினை மாற்றி வேறு சொற்களோடு இயைத்து வழங்குந் திறத்தை முதன் முதலாகப் பிற்காலத்தார்க்கு வழங்கிக் காட்டிய பெருந்தகை யாதலின், அதனை மேற்கொண்டே தேவரும் வழங்கியிருக் கின்றனர். இவ்வாறே, பிள்ளையார், “எயில் மூன்றும் எரியுண்ணக் கணையல் செய்தான்’’ (கழுக்குன்றம்-4) என்றும் ஒருங்கழிநீ இறைவா என்று உம்பர்கள் ஓலமிடக்கண்டு இருங்களமார விடத்தை இனைமுது உண்ணிய ஈசர் (கற்குடி - 4) என்றும் வருமிடங்களில் கணை விடுத்தான் என்பதைக் “கணையல் செய்தான்” எனவும் உண்ட என வரற்குரிய பெயரெச்சத்தை “உண்ணிய” எனவும் வழங்கிக் காட்டும் தலைமை. பிள்ளையார் அருளிய திருநெறித் தமிழில் சிறந்து நிற்றலை நாம் நன்கு காணலாம்.

இவ்வாறே, நம் நாவரசர் வழங்கிய சில அருஞ்சொற் களைத் தேவர் தாமும் எடுத்தாண்டு நமக்கு அவற்றின் பொருளை உணர்த்து கின்றார். திருவாரூர், “குழல்வலம்” என்று தொடங்கும் திருநேரிசையில் வரும், “தொழுதகம் குழைய மேவித் தொட்டிமையுடைய தொண்டர் அழுதகம் புகுந்து நின்றார்” (3) என்பதில், தொட்டிமையென்ற சொற்குப் பொருள் விளக்குவாராய்த் தேவர், “காமன் தந்த தொட்டிமையுடைய வீணைச்செவிச் சுவையமிர்தம் என்றான்” (சீவக.2047) என்று பாடுகின்றார். தொட்டிமை-ஒற்றுமை. துளங்குதல் என்ற சொல்லுக்கு நடுங்குதல், அசைதல் என்ற பொருளிருக்கக் கண்டிருக்கிள்றோமேயன்றி, வணங்குதல் என்ற பொருண்மை பிற்காலத் தமிழ் நூல்களிற் கண்டதில்லை. வணங்குதல் என்ற பொருளில், முதலாவதாக, நம் சொல் வேந்தர், “தொண்டர் தொழுதேத்தும் சோதியேற்றார், துளங்கா மணிமுடியார் தூய நீற்றார்” (பந்தணை. தாண். நோதங்கம்.5) என்று வழங்கியருளினர்; தேவர், “முனைவற்றொழுது முடிதுளக்கி, முகந்து செம்பொன் கொளவீசி” (2357) என்று அவ்வணங்குதற் பொருளே வர அமைத் தோதினர். அரித்தல், “சூட்டுதல்” என்ற பொருளில் நமைத்தல் என்றொரு தமிழ்ச்சொல் உண்டு. அதனை மக்கள் வழக்காற்றில் காண்டல் கூடுமேயன்றி, நூல் வழக்கில் காண்டலரிது. இச்சொல்லை நம் நாவேந்தர், திருவாருர் பொய்ம்மாய என்னும் திருத்தாண்ட கத்து மூன்றாம் பாசுரத்தில், “நல்லுருவிற் சிவனடியே யடைவேன் நும்மால் நமைப்புண்ணேன் கமைத்துநீர் நடமின்களே” எனப் புண்ணிய பாவ முதலியவற்றை விளித்துக்கூறி யருளுகின்றார்கள். இச்சொல்லையே தேவர் சிந்தாமணியில், “குஞ்சி நமைத்த பூந்தாமம் தோய நகைமுக விருத்து பெற்றான்” (2839) என்று அமைத்துப் பாடுகின்றார். இனி,

“ வம்படுத்த மலர்ப்பொழில் சூழ மதிதவழ்
செம்படுத்த செழும்புரி சைத்தெளிச் சேரியீர்
கொம்படுத்த தோர்கோல விடைமிசைக் கூர்மையோடு
அம்படுத்த கண்ணாளோடு மேவல் அழகிதே”

எனவரும் ஞானசம்பந்தப் பெருந்தகையின் திருப்பா சுரத்தையும்.

வம்புகொண் டிருந்த மாதர் வனமுலை மாலைத் தேன்சேர்
கொம்புகொண் டன்ன நல்லார் கொழுங்கயல் தடங்கண் போலும்,
அம்புகொண் டரசர் மீண்டார் ஆக்கொண்டு மறவர் போனார்,
செம்புகொண் டன்ன வில்சித் திருநகர்ச் செல்வ !
என்றார்.

                                                                     சீவ.439  

என்ற சிந்தாமணிச் செய்யுளையும் எதுகையொன்றே பற்றி ஒப்பு நோக்குக; திருநாவுக்கரசர் பாடியருளிய திருமருகல் குறுந்தொகைக் கண் வரும்,

“ நீடு நெஞ்சுள் நினைந்துகண் ணீர்மல்கும்
ஒடும் மாலினோ டொண்கொடி மாதராள்
மாட நீள்மரு கற்பெரு மான்வரின்
கூடு நீஎன்று கூட லிழைக்குமே”

என்ற திருப்பாசுரப் பொருளையும், சிந்தாமணிக்கண், தேவர் குணமாலை யென்பாள் வாயில் வைத்து வழங்கும்,

“ சென்றார் வரைய கருமம்; செருவேலான்
பொன்தாங் கணியகலம் புல்லப் பொருந்துமேல்
குன்றாது கூடுகெனக் கூறிமுத்த வார்மணல்மேல்
அன்றாங் கணியிழையாள் ஆழி யிழைத்தாளே”

என்ற செய்யுட் பொருளையும் வைத்து ஒப்பு நோக்குக. இவ்விருவகை ஒப்பு நோக்காலும், திருத்தக்கதேவர், சைவத்திருமுறை நூல்களை நன்கு ஓதிப் பயின்ற நற்பயிற்சி யுடையர் என்பது இனிது விளங்கும்.

இனி, திருவாசகம் திருவாய்மலர்ந்தருளிய மணிவாசகப் பெருந்தகை, ஞானசம்பந்தர் முதலிய மூவர்க்கும் காலத்தால் முற்பட்டவர் என்பவரும், பிற்பட்டவர் என்பவரும் என ஆராய்ச்சி யாளர் இருதிறத்தார் உளர். அவருள் முற்பட்டவர் என்போர் பெரும்பான்மையோர். அவரது திருவாசகம் தேவர்க்கு எவ்வளவில் உதவி செய்துளது என்பதைச் சிறிது காண்பாம். எந்தை சிவபரம் பொருளின் திருவடி ஞானத்தால் பெருகும் சிவபோகத்தை நுகர்ந்து இன்புறும் மணிவாசகப் பெருந்தகையார், அந்நிலையைத் தாமே வியந்து, “நானார் அடியணைவான் ஒருநாய்க்குத் தவிசிட் டிங்கு, ஊனார் உடல்புகுந்தான் உயிர்கலந்தான் உளம் பிரியான்” என்று கூறுமிடத்து “ஓருநாய்க்குத் தவிசு இட்டு” என்ற கருத்தினையே தேவர் கட்டியங்காரனை வைத்து, தன் அரசியலை ஏற்குமாறு சச்சந்தன் பணித்ததற்கு “வண்ணப் பூந்தவிசு தன்னை ஞமலிமேல் இட்டதொக்கும், கண்ணகன் ஞாலங் காத்தல் எனக்கு” (202) என்று கட்டியங்காரன் கூறுவதாக அமைக்கின்றார். “வலைத்தலை மானன்ன நோக்கியர் நோக்கின் வலையிற்பட்டு மிலைத்தலைந் தேனை விடுதி கண்டாய்” என்ற திருவாசகம், சீவக சிந்தாமணியில், நிரையிழந்த ஆயர் மகளிர் அழுத நிலையை யுரைக்கும் பாட்டில், “வலைப்படு மானென மஞ்ஞையென…. அலைத்த வயிற்றினராய் அமுதிட்டார்” (424) எனக் காணப்படுகின்றது. “எங்கெழிலென் ஞாயிறு” என்னுமோர் அழகிய தொடர், “எங்கெழில் என் ஞாயிறு *எமக்கேலோர் எம்பாவய்” எனத் திருவாசகத்துள் வருவது நாமெல்லாம் நன்கறிந்த செய்தி; இதன் அழகினை யுணர்ந்து கொண்ட திருத்தக்க தேவர், தண்டாரணியத்துத் தவப்பள்ளியில் விசையயைக் கண்ட சீவகன் தோழர் அவட்கு அவன் வரலாறு கூறும் கூற்றில் வைத்து, “எங்கள் தமர் நம்பிக் கிவர்தோழர் என ஈந்தார்; எங்கெழில் என் ஞாயிறென இன்னணம் வளர்ந்தேம்” என்று மொழிகின்றார். நீத்தல் விண்ணப்பப் பகுதியில், நம் மணிவாசகப் பெருந்தகை.

“ மறுத்தனன் யான்உன் அருளறி யாமையின் என்மணியே
வெறுத்தெனைநீ விட்டிடுதி கண்டாய்; வினையின்தொகுதி
ஒறுத்தெனை யாண்டுகொள் உத்தரகோச மங்கைக்கரசே,
பொறுப்ப ரன்றேபெரியோர் சிறுநாய்கள் தம்பொய்யினையே”

என்றருளிய திருவாசகம் யாவரும் இனிது அறிந்த தொன்று; இதனைத் தேவரும் நன்கு பயின்றிருந்தார் எனப்தறுகுத் தக்க சான்றொன்று, சுரமஞ்சரி இலம்பகத்தில் வரும்பாட் டொன்றில் காணப்படுகிறது. ஊடலுற்ற Rமஞ்சரியின் ஊடல் தீர்க்கும் சீவகன், “சிலம்பின் மேல் சென்னி சேர்த்திச் சிறியவர் செய்த தீமை, புலம்பலர் பொறுப்பரன்றே பெரியவர் என்று கூறி, இலங்குவேற் கண்ணியூடல் இளையவன் நீக்கினானே” (சீவக.2088) என்ற விடத்து, “சிறியவர் செய்த தீமை புலம்பலர் பொறுப்பரன்றே பெரியவர்” என்ற தொடரும், “பொறுப்பரன்றே பெரியோர் சிறுநாய்கள்தம் பொய்யினையே” என்ற மணிவாசகமும் சொல்லும் பொருளும் ஒத்து நிற்றலைக் காணலாம். பாண் பேசுதல், பாண் செய்தல் என்றொரு செந்தமிழ்த்தொடர், பணிவு தோன்றப் பேசுதல் என்ற பொருளில் திருவாசகத்துள் வருகின்றது. “காணுமாறு காணேன் உன்னை அந்நாள் கண்டேனும், பாணே பேசி யன்றென்னைப் படுத்ததென்ன பரஞ்சோதி” என்பது திருச்சதகம். உன்னை அடியேன் காணுமாற்றால் கண்டேனில்லை; கண்ட அந்நாளும், பேணுமாற்றால் பேணாது பிணங்கினேன்; எனினும், என்பால் நீ பாணேபேசி நின்பால் என்னைப்படுத்தாய் இஃதென்ன என்பது இதன் கருத்து. இனி தேவர் சிந்தாமணிக்கண் பாண் செய்தலின் கருத்தை இவ்வகையினாலேயே பிணங்கி அகன்ற பெண்ணன்னத்தின் ஊடல்தீர்க்கும் சேவலன்னத்தின் செயலில் வைத்து, “செயிர்ப்பொடு சிவந்து நேகத்தில் சேவலின் அகலச் சேவல், அயிர்ப்பதென்? நின்னையல்லால் அறியலேன் அன்றி மூக்கின், உயிர்ப்பதுன் பனியினாலே ஊடல் நீ என்று பல்கால், பயிர்ப்பறச் சிறகாற் புல்லிப் பணிந்துபாண் செய்ததன்றே” என்று கூறுகின்றார்.

இனி, இவ்வண்ணமே, தேவர் இச் சிந்தாமணியைச் செய்தற்குத் திருச்சிற்றம்பலக் கோவையாரைத் துணை கொண்டிருக்கும் பல பாக்களையும் எடுத்தோதிக் காட்டலுறின், காலம் மிக நீட்டிக்கு மாதலின் ஒன்று காட்டி மேற் செல்லுகின்றேன். சீவகனுக்கு மக்கட்பிறப்பின் அருமை யுரைக்கத் துணிந்த மணிவண்ணன் என்னும் சாரணன், “பரவை வெண்டிரை வடகடல் படுநுகத் துளையுள், திரைசெய் தென்கடல் இட்டதோர் நோன்கழி சிவணி, அரசு, அத்துளை யகவயிற் செறிந்தென அரிதால், பெரிய யோனிகள் பிழைத்திவண் மானிடம் பெறலே” (சீவக.2749) என்ற சிந்தாமணிச் செய்யுளும “வளைபயில் கீழ்கடல் நின்றட மேல்கடல் வான்நுகத்தின், துளைவழி நேர்கழி கோத்தெனத் தில்லைத் தொல்லோன் கயிலைக், கிளைவயின் நீக்கி இக்கெண்டையங் கண்ணியைக் கொண்டு தந்த, விளைவை யல்லால் வியவேன் நயவேன் தெய்வம் மிக்கனவே” (6) எனவரும் திருப்பட்டையும் ஒப்ப நோக்கின் இவ்வுண்மை இனிது புலனாகும்.

சிந்தாமணியின் நந்தா நலத்தில் சோழவேந்தன் கருத்து ஈடுபட்டு அதனையே பெரிதென மயங்கிக் கிடப்ப, அவன் கருத்தை மாற்றிச் சீர்செய்வது குறித்துத் திருத்தொண்டர் புராணத்தைச் சேக்கிழார் பெருமான் பாடியருளினார் என்றொரு வரலாறு உண்டென்பதனை அடியேன் முன்பே கூறினேன். சிந்தாமணி பாடிய தேவர் இடையிடையே தம் சமயக் கருத்தையும் நம் நாட்டவர் உள்ளத்தே விதைக்கின்றார் என்பதை யறிந்தே சேக்கிழார் முதலிய சான்றோர் அலனை விலக்கினரேயன்றி, அச்சிந்தாமணியின் தமிழ் நலத்தை ஒருபோதும் புறக்கணித்திலர். சேக்கிழார் பெருமான் பாடியருளிய பெரிய புராணத்தின்கண், சிந்தாமணியின் இனிய சொற்றொடர்களும் பிறவும் காணப்படுவதே இவ்வுண்மைக்கு ஏற்ற சான்றாகிறது. “காய்த்த செந்நெலின் தாழ்கதிர் நெற்றிமேல், பூத்த முல்லையின் போது பொழிந்துக” (சீவக.1777) என்ற சிந்தாமணி, திருநீலநக்க நாயனார் புராணத்தில், “பூத்த பங்கயப் பொகுட்டின் மேல் பொருகய லுகளும், காய்த்த செந்நெலின் காடுசூழ் காவிரி நாட்டுச் சாத்த மங்கை” (1) என வருகின்றது. “மழலைமென் கிளிமருதமர் சேக்கைய மருதம்” (திருக்குறிப்பு-10) என்றும், “விளங்கு நீள் விசும்பிடையூர் கோள், வளைத்த மாமதி போன்றுள மருதநீர் வைப்பு” (குறிப்பு-26) என்றும் வரும் பெரிய புராணக் கருத்துக்கள், சிந்தாமணிக்கண், “கிளிவளர் பூமரு தணிந்து கேடிலா, வளவயல் வைகலும் இன்ன தென்ப” (சிந்தா.64) எனவும், “எழாயிரத் திரட்டி மள்ளர், கட்டழற் கதிரை யூர்கோள், வளைத்தவா வளைத்துக் கொண்டார்” (1136) எனவும் வருகின்றன. இவ்வாறு ஒத்துவரும் பகுதிகளை நோக்கின் விரியுமென்று இம்மட்டில் நிறுத்துகின்றேன்.

சேக்கிழார் பெருமான் முதலிய iவப் பெருமக்கள் புறச் சமயத்துச் சான்றோர் ஒருவரால் பாடப் பெற்றதாயினும் இச்சீவக சிந்தாமணி, செந்தமிழ் வளமும் நலமும் சிறந்திருக்கும் சீர்மையறிந்து, இதனை அத்தமிழ் நலமே கருதிப் பயின்றதனோ டமையாது, தேவர் மொழிந்த பொருளும், சொல்லும் ஏற்பன கொண்டு பொன்போல் போற்றி வந்த சிறப்பு, பின்வந்த சான்றோர் தாமும் விரும்பிப் பயின்று மேற்கொள்வதற்கும் ஏதுவாயிற்று. தமிழ்ப் புராணமும் சிற்றிலக்கியங்களும் செய்தற்கண், அவர்கள் இச்சிந்தாமணியை நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளனர். செந்தமிழ்ச் சைவப் பெருநூலாகிய சிவஞானபோதத்துக்குப் பேருரை வகுத்தருளிய ஸ்ரீமாதவச் சிவஞான முனிவரும் சிவஞானபோதப் பேருரை யின்கண் இச்சீவக சிந்தாமணியை வேண்டுமிடத்து மேற்கோளாகக் காட்டியிருக் கின்றனரெனின், யாம் வேறு கூறுதற்கில்லை.

“ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத் தம் முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த விட்டு, அன்னிய மின்மையின் அரன்கழல் செலுமே” என்பது சிவஞான போத எட்டாம் சூத்திரம். இதற்கு முன்னே செய்து கொண்ட தவத்தின் பயனாக, தனக்கு உண்ணின்று உணர்த்திப் போந்த முதல்வன், குருவுமாய் வந்து, ஐம்புல வேடரின் வளர்ந்து நின் பெருந்தகைமையை அயர்ந்தனை என உணர்த்த, ஆன்மா, அவ்வேடரை விட்டு நீங்கி, அன்னிய மின்மையால், அம்முதல்வன் கழலை அடையும் என்பது இதன் கருத்து. இதன்கண் “அன்னிய மின்மையின் அம்முதல்வன் கழல் செலுமே” என்று சொல்லாமல், ஆசிரியர் மெய்கண்ட தேவர், அம்முதல்வன் என்ன வேண்டிய சுட்டினிடத்தை “அரன்” என்று அருளியுள்ளார். அதனால், அரன் என்பது அவன் என்னும் சுட்டு மாத்திரையாய் நிற்பது விளங்கும். ஆகவே, இவ்விடத்தே நம் முனிவர் பெருமான், “அரன் என்பது சுட்டுப் பெயர் மாத்திரையாய் நின்றது” என்று உரைத்தருளினவர். அதனோடு நில்லாது இதற்கு மேற்கோளாக, சீவக சிந்தாமணியின் பதிகத்திலிருந்து, “கற்பாடழித்த கனமாமணித் தூண்செய் தோளான்” என வருவதனை எடுத்துக்காட்டி, “கற்பாடழித்த கனமாமணித் தூண்செய் தோளான் என்புழிப் போல” என்று ஒதுகின்றார். இவ்வாறே, உண்ணின்று இறைவன் உணர்த்த உணரும் உயிர், அவ்விறைவனைக் காணாது என்றற்கு ஆசிரியர் மெய்கண்ட தேவர்,

“ காட்டிய கண்ணே தனைக்காணா, கண்ணுக்குக்
காட்டாய உள்ளத்தைக் கண்காணா– காட்டிய
உள்ளம் தனைக்காணா உள்ளத்தின் கண்ணாய
கள்வன்தான் உள்ளத்தில் காண்”

என்றோர் அழகிய வெண்பாவினை ஒன்பதாம் சூத்திரத்துள் முதல திகரணத்தில் ஓதியருளியுள்ளார். இதற்குப் பேருரை வகுக்கப் போந்த முனிவர் பெருமான், “காட்டிய” என்பது தன்வினைப் பொருள்பட (நின்றது; “வாணிக மொன்றும் தேற்றாய்… என்புழிப் போல்” எனச் சீவக சிந்தாமணிச் சொற்றொடரொன்றை எடுத்துக் காட்டுகின்றார். இவ்வாறே அவர் தொல்காப்பியச் சூத்திர விருத்தி, இலக்கண விளக்கச் சூறாவளி, காஞ்சிப்புராணம் முதலிய தாம் எழுதியருளிய உரையினும் பாட்டினும மிகப் பலவிடங்களில் இச்சிந்தாமணியைப் பயன் கொண்டிருக்கின்றனர். அவர் மாணவராகிய கச்சியப்ப முனிவர் தாம் பாடியருளிய தணிகைப் புராணத்தில் இச்சிந்தாமணியின் சொல்லும் பொருளும் மிகுதியாக எடுத்தாண்டிருக்கின்றனர். நாட்டுப் படலம், நகரப் படலம், பிரமன் சிருட்டிபெறு படலம், சீபரிபூரண நாமப்படலம், களவும் படலம் ஆகிய இவற்றுள் சீவக சிந்தாமணியின் சொற்பொருள்கள் செறிந்திருக் கின்றன. அவற்றை ஈண்டு எடுத்தோதலுறின், இவ்விரிவுரை வரம்பின்றிப் பெருகும்.

இவ்வண்ணம இம்முனிவர் பெருமக்களே யன்றி குமரகுருபர சுவாமிகள், சிவப்பிரகாச சுவாமிகள் முதலிய பெருமக்களும் இக்காவியத்தை நன்கு ஓதிப் பயின்று நாநலம் சான்றிருக்கின்றனர். சுருங்கச் சொல்லின், “ஆறு நாள் கூடியொரு கொக்குப்பட்டது; அகப்பட்ட கொக்கை அவித்தொரு சட்டியில், சாறுவைத்த பின் வேதப் பிராமணர் தாமும் கொண்டார் சைவர் தாமும் கொண்டார் தவப் பேருமுனிவரும் ஏற்றுக்கொண்டார்” எனத் திரிகூடப்ப ராசப்பக் கவிராயர் கூறியது போல, இச்சிந்தாமணியின் செந்தமிழ் நலத்தைச் செவ்வே நுகர்ந்து தேக்கெறியாத சைவ நன்மக்கள் இத்தென்தமிழ் நிலத்தில் இலரென்றே திட்பமாய்க் கூறலாம்.

இதுகாறும் கூறியவாற்றால், சிந்தாமணியும் சைவமும் என்ற இப்பொருள்பற்றிப் பேசுதற்குச் சைவராகிய நமக்கு நல்ல உரிமையுண்டு என்பதும், புறச்சமய நூல்களாயினும் சிலவற்றைப் படிப்பதால் சைவர் தம் சைவநெறி கருத்துக்களை இனிது தெளிதல் கூடும் என்பதும், இச்சீவக சிந்தாமணி சீவகன் என்னும் ஏமாங்கத நாட்டு அரசகுமரன் வரலாறு கூறுவதென்பதும், இச்சிந்தாமணியை எழுதிய திருத்தக்க தேவர் காலத்தே சைவம் உயர்ந்தும், சமணம் சீர்குறைந்தும் இருந்தனவென்பதும், தேவர் சைவத் திருமுறைகளை நன்கு ஓதித் தெளியப் பயின்றவரென்பதும், அக்காலத்தே அவரது நோக்கம், சீர்குறைந்திருந்த தமது சமய நுண்பொருள்களைத் தமிழகத்தே பரப்ப வேண்டுமென்றிருந்த தென்பதும், இதற்கு இச்சிந்தாமணிக்கண் உள்ள முத்தியிலம்பகமே செய்யுட்டொகை யாலும், கருத்தாலும் போதிய சான்று பகருமென்பதும், இவ்வுண் மையைப் பண்டைச் சைவச் சான்றோர் இக்குறிப்பை இனிதே அறிந்திருந்தும், இந்நூலின் தமிழ் நலத்தை நன்கு நுகர்ந்து மகிழ்ந்த சிறப்பால், இதனைப் புறக்கணிக்கவில்லை யென்பதும், அக்காலத்தே நுண்ணுணர் வுடையாரன்றிப் பிறர் தாமே அறிந்து கோடற்குரிய எளிய சமய நூல்கள் அத்துணை பயில வழங்காமையின், நாவரசர் முதலியோர் சமண சமய நூல்களைக் கற்கத் தொடங்கினர் என்பதும், சோழவேந்தன் இந்தச் சிந்தாமணியின் சுவையில் கருத்து ஈடுபட்டிருந் தமையின், அவர் கருத்தைமாற்றற்ச் சேக்கிழார் பெருமான் முதலி யோர் முயன்று திருத்தொண்டர் புராணத்தை எழுதியருளினர் என்பதும், சமண் சமய நூல்கள் சைவர் பரபக்க நூலாகக் கருதிக் கற்றற்கு உரிமையுடைய ரென்பதும் தாம் சிந்தாமணி பாடிய காலத்தே மிக்க சிறப்புற்றிருந்தவை சைவத் திருமுறைகளே யாதலின், தேவர் இவற்றை நன்கு பயின்று அவற்றுட் காணப்பட்ட சொல்லும் சொற்றொடரும் பிறவும் தாம் பாடும் காவியத்தில் அமைத்துக் கொணடனர் என்பதும், சில அரியசொற்களைத் தாமே இனிது பொருள்விளங்க அமைத்துக் காட்டினரென் பதும், தேவாரம் திருவாசகம் என்ற இவற்றின் அரியசொற்றொடர்களே மிகப் பல்கியிருக்கின்றன என்பதும், இவர் பாடிய சீவக சிந்தாமணியைச் சேக்கிழாரும் இனிது பயின்று தமது காவியத்தில் அமைத்துக் கொண்டுள்ளனர் என்பதும் அவருக்குப் பின்புபோந்த முனிபுங்க வர்களும் இச்சீவக சிந்தாமணியை மேற்கொண்டு, தாம் இயற்றிய பாட்டினும் உரையினும் எடுத்தாண்டிருக்கின்றன ரென்பதும், மாதவச் சிவஞானமுனிவர், தாம் இயற்றிய சிவஞானப்போதப் பேருரையின் கண்ணும் இச்சீவக சிந்தாமணியை மேற்கொண்டுள்ளனர் என்பதும் பிறவுமாகும்.

பெருமக்களே, இறுதியாக ஒன்றுகூறி இச்சொற்பொழிவை முடிக்கின்றேன். இச்சீவக சிந்தாமணியின் தொடக்கத்தே ஏறக்குறைய நூறு பாட்டுகளை ஒரு புதிய யாப்புவகையில் தேவர் தொடங்கி யிருக்கின்றார். கடவுள் வாழ்த்து முதலாகத் தொடங்கும் பாட்டு விருத்தக் கலித்துறையென அதன் உரைகாரரால் கூறப்படுகிறது. யாப்பியலில் இப்பகுதிக்கு எடுத்துக்காட்டி வழங்கியவர் களும் இச்சிந்தா மணியின் முதற் செய்யுளையே காட்டி யிருக்கின்றனர். இப்பாவினத்தை முதன் முதலாகத் தமிழுலகில் வழங்கியவர் திருஞானசம்பந்தப் பெருந்தகையாவர். “வாழ்க அந்தணர்” என்று தொடங்கும் திருப்பாசுரத்துள், வருவனவற்றுள்,

“ ஏதுக்க ளாலும் எடுத்து மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர்விட்டுள்ன் எங்கள் சோதி
மாதுக்கம் நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்
சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே”

என்பது ஒன்று. இஃது அடிதோறும் ஐந்து சீர்பெற்று விருத்த வோசை பெற்று வந்தமையின் விருத்தம் கலித்துறை எனப்படுவதாயிற்று.

இதனையே தேவர் மிகவும் விரும்பித் தாம் பாடிய இச்சீவக சிந்தாமணியிற் பெரிதும் பாடியுள்ளார். சீவக சிந்தாமணி பதிகத்துள் முதற் பாட்டு,

“ மீனே றுயர்த்த கொடிவேந்தனை வென்ற பொற்பின்
தானே றனையானுளன் சீவக சாமி யென்பான்;
வானேற நீண்ட புகழான் சரிதம் இதன்னைத்
தேனூற நின்று தெருண்டாரவை செப்ப லுற்றேன்”

என வருகின்றது. இவ்வாறு வருவன மிகப்பல என்று முன்பே கூறியுள்ளேன்.

இதனால், சீவகசிந்தாமணியை யாத்த திருத்தக்கதேவர், சீவகன் கதையைத் தம் சமய நூல்களிலிருந்து கொண்டாயினும், அதனைத் தமிழில் உரைக்குமிடத்து, அதற்குத் துணையாகச் சைவ நூல்களில் காணப்படும் சொல்லும், சொற்றொடரும், யாப்பு முறையும் என்ற இவற்றைப் பெரிதும் மேற்கொண்டனர் என்பது இனிது விளங்கும். இது குறித்தே அடியேன் “சீவக சிந்தாமணியும் சைவமும்” என்ற பொருள் பற்றிப் பேச முற்பட்டேன்.

இதுகாறும் யான் பேசிய இவ்வனை த்தையும் அமைதியுறக் கேட்டுச் சிறப்பித்த உங்கள் அனைவர்க்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, என்போன்றாரை இத்துறையில் இயக்கிப் பணிகொள்ளும் இச் சைவ சித்தாந்த சமாசத்திற்குப் பொதுவாகவும், சிறப்பாக இதன் தலைவர் அமைச்சர் முதலியோர் கட்கும் என் நன்றியும் வணக்கமும் தெரிவித்துக் கொண்டு என் சொற்பொழிவை இம்மட்டில் நிறுத்திக் கொள்ளுகின்றேன்.

திருநணாவில் திருஞானசம்பந்தர்


நணா என்கிற பெயரை நோக்கின் அஃது ஒரு புதுமையாகத் தேவாரத் திருமுறைகளில் பயிற்சியுடையவர்க்கு அது திருஞான சம்பந்தர் சென்று வழிபட்ட இடங்களில் ஒன்று என்பது தெரியும். கொங்கு நாட்டிற் காவிரிக் கரையில் உள்ள இந்த நணா என்ற திருப்பதி மலைச்சாரலில் சோலை சூழ்ந்து இயற்கையழகு சிறந்து விளங்கும் இடமாக ஞானசம்பந்தர் கண்டுள்ளார்.

இனிச் சங்க இலக்கியத்துள் ஒன்றாகிய பதிற்றுப்பத்து, நன்றா என்னும் குன்று ஒன்றைக் குறிக்கின்றது. சேர மன்னiன செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் என்ற புலவர் பெருமான் பாடியதை வியந்து அம்மன்னன்,

" நன்றா என்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற்
கண்ட நாடெல்லாம் காட்டிக்கொடுத்தான்"

என்று கூறிகின்றது. இப்பகுதியில் உள்ள கபிலக்குறிச்சி என்ற ஊர்ப்பெயரும் இவ்வரலாற்றுக்குச் சான்று பகர்கின்றது. இந்த நன்றா என்ற குன்றுதான் நாளடைவில் நன்னா எனத் திரிந்து திருஞான சம்பந்தர் காலத்துக்கு முன்பே, 1300 ஆண்டுகட்கு முன்பே நணா என மருவி மக்களிடையே வழங்கி வந்தது என எண்ணற்கு இடமுண்டாகிறது. ஆயினும் அது ஞானசம்பந்தர் முதலிய மூவரும் ஊர்களை வைத்துப் பாடிய திருப்பதிகங்களில் இடம் பெறக் காணோம். இது நன்கு அமர்ந்து ஆராய வேண்டியதொன்று.

இனி, இத்திருநணா இக்காலத்தில் பவானி கூடல் என வழங்குகிறது. பவானி என்ற ஆறும் காவிரியும் கூடுமிடத்தே இந்த நணா அமைந்திருப்பது பற்றி இவ்வாறு பவானி கூடல் என வழங்குவது பொருத்தம். ஆனால் பாவனி என்பது பிற்காலத்தில் வந்த பெயர்; இதன் பழம் பெயர் பூவானி என்பது. இந்த ஆறு பாயும் நாட்டைக் கல்வெட்டுக்கள் பலவும் பூவானி நாடு என்றே குறிக்கின்றன. இவ்வாறு மைசூர் மாநிலத்தில் ஓடிக் காவிரி யோடு கலக்கும் கீழ்ப் பூவானியாற்றை அந்நாட்டவர் `கெப்பானி’ என்ற வழங்குகின்றனர்.

இச் செய்திகளை நினைவிற் கொண்டு திருஞானசம்பந்தர் தேவாரத் திருப்பதிகத்தை நோக்குவோமாயின், பூவானியாறு போந்து நணாவிடத்தே காவிரியொடு கலக்கும் செய்தி காணப்பட வில்லை. இவ்வாறே குடவனாறும் அமராவதியும் கூடுமிடத் திலுள்ள வெஞ்சமாக் கூடலைப்பாடும் சுந்தரர் தேவாரத்தும் ஆறு கூடும் செய்தி குறிக்கப்படவில்லை. அதனால் திருநணாவைப் போற்றும் திருப்பதிகம், பவானி யாறு போந்து கூடும் கூடலைக் குறிக்காமை பற்றி நாம் கருத்தைச் செலவிடவேண்டியதில்லை.

தேவார ஆசிரியர்கள் காலத்தில், அதாவது 1300 ஆண்டுகட்கு முன்பே பவானி கூடற்கண் உள்ள நணா மிக்க சிறப்புற்று விளங்கிற் றென்பது உண்மை.

சைவம் செய்த தவத்தாற் பிறந்து தமிழகம் எங்கும் சிவம் பெருகுவித்த திருஞானசம்பந்தர், திருப்பைஞ்ஞீலி, திருவீங்கோய் மலை முதலிய திருப்பதிகளைப் பாடிப் பரவிக் கொண்டு திருச்செங் குன்றூர் வந்து சேர்ந்தார்.

செங்குன்றூர் அந்நாளில் கொங்குநாட்டு அரசு வீற்றிருக்கும் தலைநகரமாகச் சிறந்து விளங்கிற்று. வானளாவ உயர்ந்த மாடங்களால் பொலிந்ததோடு, வெற்றி, கொடை, திருமணம் ஆகிய நலங்களை எடுத்துக் காட்டும் கொடிகள் மலிந்திருந்தது அத்திருநகர். அதனால் அதனை அந்நாளைய நன்மக்கள், வெறிதே செங்குன்றூர் என்று மொழியாமல், கொடிமாடச் செங்குன்றூர் என்று பாராட்டிப் புகழ்ந்தனர். அதனால் சேக்கிழாரும், “நொண்டல் பயில் நெடும் புரிசைக் கொடிமாடச் செங்குன்றூர்” என்றும், அந்நாளில் கொடிமாடச் செங்குன்றூர் அமர்ந்திருந்த மெய்ஞ்ஞானப் பிள்ளையார்" என்றும் புகழ்ந்துரைக்கின்றார். இடைக்காலத்தில் இது செங்கோடு என்று வழங்கிவருவதாயிற்று.

செங்குன்றூரை அடைந்த ஞானசம்பந்தர், அங்கே கோயில் கொண்டருளும் சிவபெருமானை வழிபடுவதில் பெரிதும் ஈடுபாடு கொள்கின்றார். காலந்தோறும் சென்று இறைவனைப் பாடிப் பரவுவதில் அவரது ஆர்வம் பெருகுகிறது. இதனை,

" தம் பெருமான் கோயிலினுள்
 எழுந்தருளித் தமிழ் விரகர்
 நம்பரவர் திருமுன்பு
 தாழ்ந்தெழுந்து நலம் சிறக்க
 இம்பரும் உம்பரும் ஏத்த
 இன்னிசை வான்தமிழ் பாடிக்
 கும்பிடும் ஆதரவுடன் அக்
 கோநகரில் இனி தமர்ந்தார்“.

என்று சேக்கிழார் தெரிவிக்கின்றார். செங்குன்றூர் இறைவனை அவர் இசை கலந்து பாடிய பாட்டுக்களை மண்ணவரும் விண்ண வரும் மகிழ்ந்து போற்றினர். பாடப்பாட ஞானசம்பந்தருக்குச் செங்குன்றூரில் தங்கி இறைவனைக் கும்பிடவேண்டும் என்ற ஆர்வம் பெருகிற்று. “இன்னிசை வண்தமிழ் பாடிக் கும் பிடும் ஆதரவுடன் இனிதமர்ந்தார்” என்று சேக்கிழார் உரைக்கின்றார். மேலும் கொங்கு நாட்டரசும் அவருக்கு இனிய வரவேற்பளித்து அவரது விருப்பம் நிறைவெய்துமாறு வேண்டிய ஆதரவு செய்தது. அதனைக் குறிப்பாக உணர்த்த வேண்டி, “அக்கோ நகரில் இனிது அமர்ந்தார்” என்று சேக்கிழார் பெருமான் செப்புகின்றார்.

“கும்பிடும் ஆதரவுடன் அக்கோ” நகரான கொடிமாடச் செங்குக்றூரில் இனிதிருந்த ஞானசம்பந்தரது இளமையுள்ளம், கொங்கு நாட்டில் விளங்கிய கோயில்கட்கெல்லாம் சென்று வழிபடும் விருப்பம் எய்துகிறது. அதே நிலையில் செங்குன்றூரை விட்டு நீங்காவாறு “கும்பிடும் ஆதரவு” எழுந்து தடுக்கிறது.

“மறக்கும் மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்திப் பிறப்பில் பெருமான் திருந்தடிக்கீழ்ப் பிழையாத வண்ணம், பறித்த மலர்கொடு வந்துமை ஏத்தும் பணியடியோம்” என்று செங்குன்றூர்ப் பெருமானைப் பாடுவது ஒன்றே அவரது விருப்பமிகுதியைப் புலப்படுத்தும். இந்நிலையில் அவர் என் செய்வார்? செங்குன்றூரைத் தலைமை இடமாகக்கொண்டு சுற்றியுள்ள திருப்பதிகளைக் கண்டு பரவ முற்படுகின்றார். அங்கே இருந்து கொண்டு, அவர் சுற்றிப் பார்த்த திருப்பதிகளில் திருநணா அவரது ஞானக் கண்களுக்கு இனிய காட்சி வழங்குகிறது. அக்காட்சி “இன்னிசை வண்தமிழாய்ப்” பெருக்கெடுத்து வருகின்றது. அப்பெருக்குக்குக் காவிரியிலும் பூவானியிலும் வரும் பெருக்கு நிகராகாமையாற் போலும், இரண்டினுள் ஒன்றைக்கூட அப்பாட்டின் பெருக்குக் காட்டுகின்றிலது.

கூடற்றுறையின்கண் நின்று பவானியின் கரையை நோக்கின் அது பெரிய குன்று போல் காட்சியளிப்பது இன்றும் நாம் காண விளங்குவது. ஞானசம்பந்தர் கண் முன் அப்பகுதி பசுந்தரை போர்த்த பெருங்காடுகள் பரந்துளது. சாரலில் குரங்குகளும் பொழில்களில் வண்டும் தேனும், பக்கங்களில் மாமரங்களும் பெருகியுள்ளன. ஞானசம்பந்தர்க்கு அவை இனிய காட்சி தந்து மகிழ்விக்கின்றன. ஒருபால் மந்திகள் கூத்தாட, கூத்துக்கொப்ப வண்டினம் இசைபாட, பாடுவோர்க்குப் பொற்கட்டிகளைப் பரிசு தருவது போல மாமரங்கள் கனிகளை உதிர்க்கின்றன. இதனை,

" அந்தண்சாரல்
 வந்தார் மடமந்தி கூத்தாட
 வார் பொழிலில் வண்டுபாடச்
 செந்தேன் தெளி ஒளிரத் தேமாக்
 கனியுதிர்க்கும் திரு நணாவே“

என்று பாடுகின்றார்.

அகன்ற பசுமையான இலைகள் விரித்து விளங்கும் கானம் ஒருபால் தோன்றுகிறது. அவற்றின் இடையே மலையருவிகள் சலசல வென்ற ஒலி செய்து கொண்டு வீழ்கின்றன. இருமருங்கும் முங்கில்கள் வளர்ந்து முத்துக்காய்த்து அசைகின்றன. அருவியலைத் ததாலும் காற்று அசைத்ததாலும் முங்கிலின் முத்துக்கள் உதிர்ந்து நீரில் மிதக்கின்றன. கூடற்றுறையில் தேங்கி நிற்கும் நீரில் எழும் அலைகள் அம்முத்துக்களைக் கரையில் ஒதுக்குவது காண்போர் உள்ளத்தில் உவகை தோற்றுவிப்பதைக் கண்ட ஞானசம்பந்தர்,

 “இலை சூழ் கானில்,
 ஓட்டம்தரும் அருவி வீழும்
 விசைகாட்ட முந்தூழ் ஓசைச்
சேட்டார் மணிகள் அணியும்
 திரை சேர்க்கும் திருநணாவே.”

என்று பாடுகின்றார்.

ஒருபால் செந்தாமரைகள் மலர்ந்து தேனைத் துளிக்கின்றன. அது பசித்துவரும் வண்டுக்குத் தேன் நல்கி விருந்தோப்பும் நல்லறத்தை நினைப்பிக்கிறது. அது காணும் வானோர் இது சிவபெருமான் செய்யும் அருளின் குறிப்பு என்று நினைந்து அவன்பால் அன்பு மிகுகின்றனர் என்று ஞானசம்பந்தர் நவில்கின்றார்.
 " மிடைந்துவானோர்
ஐயரவர் எம்பெருமான் அருள்
 என்று ஆதரிக்கச்
செய்ய கமலம் பொழிதேன் அளித்து
 இயலும் திருநணாவே.“

என்று பாடுகின்றார்.

ஒரு சார், சிவனடியார்கள் கொய்து வழிபடும் மலர்ச்சூழலை ஞானசம்பந்தர் பார்க்கின்றார். மலர்ந்த பூக்களின் தேனையுண்ணும் ஆசையால் தேன் வண்டு இனிமையுறப் பாடுகின்றன; தும்பிகளும் அங்கும் இங்கும் ஓடியாடி முரலுகின்றன. இவற்றின் நுண்ணிய இசை இறைவன் அருளில் உள்ளத்தைப் படிவிப்பதால், கேட்பவர் உயிரைப் பற்றி நிற்கும் வினைகள் கெடுகின்றனவாம். வினைதீர்ந் தாலன்றி ஞானம் விளங்காது எனத் தொல்காப்பியமும் சிவஞான போதமும் தெளிவிக்கின்றன. இவ்வுண்மை விளங்க,

 “சோலை சூழ்ந்த
அத்தேன் அளியுண் களியால்
 இறை முரல்வு ஆலத்தும்பி
தெத்தே எனமுரலக் கேட்டார்
 வினைகெடுக்கும் திருநணாவே.”

என்று உரைக்கின்றார்.

இனி, அங்கு வாழும் பெரு விலங்குகளை ஞானசம்பந்தர் காண்கின்றார். புலியும் மானும் இவையல்லாத பெரு விலங்குகளும் தம்மிற் பகைமையின்றி ஒருமுகப்பட்டு வழிபடும் அடியார்களை வணங்கி நீங்குகின்றன. அது காணும் அப்பெருமக்களும் காமவெகுளி மயக்கங்களால் உண்டாகும் பகையுணர்வு நீங்கி, எளிதிற் செல்லலா காத ஞானநெறியில் இனிது செல்லுதற்கு மனம் கொள்கின்றனர். இதனை,

 “புலியும் மானும்
 அல்லாத சாதிகளும் கழல்மேல்
 கைகூப்ப அடியார் கூடிச்
 வெல்லா அருநெறிக்கே செல்ல
 அருள்புரியும் திரு நணாவே.”

என்று செப்புகின்றார்.

ஒருபால், சிங்கங்கள் தம்மில் போர் செய்து தம்பால் நிலையாக வுள்ள வலியழிந்துபோகின்றன. அங்கே அவற்றின் குருதி தோய்ந்து கிடப்பதை யானைகள் கண்டு அஞ்சியோடி ஒளிந்துக்கொள்கின்றன. கொடியேர்களின் கொடுமையைக் கண்டவிடத்து நல்லோர் அஞ்சி நீங்குவது போன்ற குறிப்பு யானையின் செயலில் புலப்படவே, ஞானசம்பந்தர் அந்த நிகழ்ச்சியை,

 “முனை சேர் சீயம்
மன்னீர்மை குன்றி அழலால்
 வலிகுறைய அழியும் முன்றில்
செந்நீர் பரப்பச் சிறந்துகரி
 ஒளிக்கும் திருநணாவே”

என்று கூறுகின்றார். முனைசேர் சீயம் என்றது போர் செய்யும் சிங்கங்களை நினைப்பிக்கின்றது. அழல், கோபத்தோடு செய்யும் போர்.

மற்றொருபால் ஆற்றின் கரையில் நீர்ப் பெருக்கில் வரும் முத்துக்களும் அகிற்கட்டைகளும் கரையில் ஓதுங்குகின்றன. அரிய பொருள்களான முத்து முதலியவற்றைக் கண்டும் மனம் கொள்வதின்றி இறைவன் வழிபாட்டிலேயே உள்ளமுடைய மேலோர் இறைவனைப் போற்றிப் பரவுகின்றனர். அவ்விடத்தே தோன்றிப் பூக்கள் மலர்ந்து சுடர்விட்டுக் திகழ்கின்றன. இக்காட்சியும் அவரது திருவுள்ளத்தை மகிழ்வித்தமையால், அதனை,

" ஓடும் நிதசேரும் நித்திலமும்
 மொய்த்து அகிலும் கரையில் சாரச்
 சேடர் சிறந்து ஏத்தத் தோன்றி
 ஒளிபெருகும் திருநணாவே“

என்று உவந்து பாடுகின்றார். தோன்றியின் பூ சுடர்போல விளங்கும் என்பதைச் “சுடர்விடு தோன்றி” என்று சங்கச் சான்றோர் அனைவரும் கூறுவது வழக்கம்.

இவ்வண்ணம் மக்களல்லாத அஃறிணை யுயிர்களைக் கண்டு மகிழ்ந்த ஞானசம்பந்தர், மக்களினத்தைப் பார்க்கின்றார். திருநணா வுடைய பெருமானை வழிபடும் மக்கட் கூட்டத்தில் விரதங்களாலும் அவற்றால் விளைந்த ஞானத்தாலும் உயர்ந்த நன்மக்கள் காணப்படுகின்றனர். அவரவர் நிலைக்கும் தகுதிக்கும் ஏற்ப விரதங்கள் வேறுபடுகின்றன. அதனால் அவர்களது வழிபாடும் வேறுபடுகிறது. இவ்வேறுபாடுகட்கிடையே, இறைவன் திருப்பெயர் ஒன்றையே அனைவரும் ஏத்தி வாழ்த்து கின்றனர். வேற்றுமைக்கிடையே தோன்றி விளங்கும் ஒருமைப்பாடு சம்பந்தர்க்கு இன்பம் தருகிறது. அதனை நயந்து.

 “கோயில் எங்கும்
 நானாவிதத்தால் விரதிகள்
 நன்னாமமே ஏத்தி வாழ்த்தத்
 தேனார்மலர் கொண்டு அடியார்
 அடிவணங்கும் திருநணாவே.”

என்று வியந்து புகிழ்கின்றார். இறைவனது நாமம் ஓதுகின்ற அனைவர்க்கும் உயர்ந்த நலங்களைச் செய்வதாதலால் அதனை “நன்னாமம்” என்று சிறப்பிக்கின்றார். அது “நமச்சிவாய” எனவரும் திருப் பெயர். “நாதன் நாமம் நமச்சிவாய” என்று நமச்சிவாயத் திருப்பதிகத்தில் எடுத்து மொழிந்து, அதனை ஓதி நன்கு உணர்பவர் எய்தும் பயனைப் பல பாட்டுக்களில் ஞானசம்பந்தர் உரைக்கின்றார். இவ்வாறு ஓதுபவர்க்கு நன்மையெல்லாம் தருவது பற்றி அத்திருப் பெயரை “நன்னாமம்” என்று சுருக்கமாகக் காட்டுகின்றார்.

இனி, இத்திருநணாவில் விளங்கும் திருக்கோயில் ஞானசம்பந்தர் உள்ளத்தில் சிவபரம் பொருளின் பலவேறு இயல்புகளை நினைப்பிக் கின்றது.

அப்பெருமானுடைய புகழ் பாடத் தொடங்கியதும், எடுத்த எடுப்பில் அவன் மாதொரு பாகனாய் அருள் வழங்கும் திறத்தை,

" பந்தார் விரல் மடவாள் பாகமா
 நாகம் பூண்டு எருதேறி
 அந்தார் அரவு அணிந்த
 அம்மான்.“

என்று பாராட்டி அவன் உறையும் இடம் நணா என்று குறிக்கின்றார். இங்ஙனம் தொடங்கிய திருப்பதிகம், “நன்னுதலாள் பாகமாய் ஞாலம் ஏத்த மின்தாங்கு செஞ்சடையெம் விகிர்தர்,” என்றும், “மையார் மணிமிடற்றன் மங்கையோர் பங்குடையான், என்றும் பன்முறையும் குறிக்கின்றது. மங்கை பங்கனாவதன் கருத்தைப் பலவிடங்களில் ஞானசம்பந்தர் காடடியுள்ளார்.”அரிதரு கண்ணியாளை ஒருபாகமாக அருள் காரணங்கள் வருவார்" என்று கூறுமுகத்தால் உயிர்கட்கு அருள் செய்வது கருதி மங்கைபங் கனாவது இறைவன் திருவுள்ளம் என்று அறிகின்றோம். பிறிதோா இடத்தில், “பொண்ணின் நல்லாளொடு பெருந்தகையான இறைவன் இருத்தலால், நாம் மண்ணில் வைகலும் நல்ல வண்ணம் வாழலாம்; எண்ணில் மறுமையில் நல்லகதியும் பெறலாம்; கருதினால், நல்லன வெல்லாம் குறைவறப்பெறலாம் என்று ஒரு திருப்பாட்டில் தெரிவிக்கின்றார்.”

இனி அப்பெருமான் பாம்பை மாலையாக அணிவதையும் எருதேறுவதையும் முதல் திருப்பாட்டில் எடுத்து மொழிகின்றார். பின்பு நெற்றியிற்கண்ணும் கையில் வீணையும் கொண்டு செய்வினையால் உண்டாகும் துயர் கட்கு இரையாகாமல் நம்மைப் பாதுகாக்கும் அவனத அருள் நலத்தை, “ஈட்டும் துயர் அறுக்கும் எம்மான்” என்று குறிக்கின்றார்.

இவ்வாறு துயர் அறுக்கும் வள்ளல் இன்னிசையால் அறம் பலவும் உரைக்கின்றான்; அதனை, “நன்று ஆங்கு இசை மொழிந்து” என்று குறித்துப் பின் அவன் மங்கை பங்கனாகிச் செஞ்சடை முடியில் விளங்கத் திகழ்கின்ற திறத்தைக் காந்தாரப் பண்ணில் பாடிக் காட்டுகின்றார். தாருகவனத்து நிலவிய வேதாந்தத்தைத் தெளிவித்துச் சித்தாந்த உண்மையை வெளிப்படுத்தி வரலாற்றை,

" கையில் மழுவேந்திக் காலில்
 சிலம்பணிந்து கரித்தோல் கொண்டு
 மெய்யில் முழுதணிந்த விகிர்தர்“

என்று அருளுகின்றார்.

பெண்ணொரு பாகமாகிய பெருமான் மார்பில் வெண்னூல் பூண்டு சடையில் கொன்றை சூடும் தனி நலத்தைப் பாடிய ஞானசம்பந்தர், வழக்கம் போல் முப்புரம் எரித்தது, இராவணனை மலையின் கீழ் அகப்பட நெரித்தது, மாலும் அயனும் தேட எரியுருவமானது ஆகிய வரலாறுகளை ஒவ்வொரு பாட்டில் முறையாக உரைத்து அந்நாளைய சமண ஒழுக்கத்தை இகழ்ந்து பாடுகின்றார். இறுதியில் இப்பாட்டுக்களை, “சொல் வித்தகத்தால் இறைவன் திருநணா ஏத்து பாடல்” எனக் குறிப்பிட்டு, இவற்றை, “மொழிவார் பழியிலர் இம்மண்ணின் மேலே” என்று பயன் கூறி முடிக்கின்றார்.

இங்ஙனம் திருப்பதிகம் பாடித் திருநணா மேவிய பெருமானை வணங்கிய ஞானசம்பந்தர்க்கு மறுபடியும் திருச்செங்குன்றூர்க்கே சென்று சேரும் விருப்பம் மிகுகிறது. செங்குன்றூர் வந்து அடைகின்றார். இதனைச் சேக்கிழார் அடிகள்,

 “திருநணாவினை இறைஞ்சிப்
 பைப் பாந்தன் புனைந்த வரைப்
 பரவிப் பண்டு அமர்கின்ற
 வைப்பான செங்குன்றூர்
 வந்த ணைந்து வைகினார்.”

என்று உரைக்கின்றார்.

சேக்கிழார் திருத்தொண்டர்புராணம்


செந்தமிழ் இலக்கியங்களில் இடைக் காலச் சோழ வேந்தர் காலத்தில் விளங்கிய அமைச்சர் பெருமான் சேக்கிழார் அவர் செய்த திருத்தொண்டர் புராணம் என்ற தமிழ்ப் பெருநூல் மெய்ம்மை யுரையால் மேதகவுடையது. “பிற்தாலத்தில் புராணங்களின் புனைவும் புளுகும் பொய்ம்மையும் புறத்தே வெளியாகவே அவை தமிழரிடையே மதிப்பிழந்தன: அதனால், சேக்கிழார் வழங்கிய திருத்தொண்டர் வரலாற்றைப் புராணம் என்பது பொருந்தாது: வழிவழியாக வழங்கி வருவதால் புராணம் என்ற அச்சொல் நீக்கப்படாதாயிற்று: அந்த அளவில் தமிழிற் புகுந்த புராணம் என்ற வடசொல் ஒருவகையில் தவம் செய்ததாகும்” எனத் தவத்திரு மறைமலையடிகளாரும், தமிழ் முனிவர் திரு.வி.க.அவர்களும் கூறுவது வழக்கம். வரலாற்றுச் செய்திகளையும் வழக்கியல் கருத்துக் களையும் சமய உண்மைகளையும் தெள்ளித் தெளித்துரைக்கும் சேக்கிழார், தமிழரிடையே தோன்றிய உண்மை வரலாற்றறிஞர் என உரம்படவுரைப்பர் மகா மகோபாத்தியாய பண்டிதமணி. மு.கதிரேசன் செட்டியார். “கற்பால் உமிழ்ந்த மணியும் கழுவாது விட்டல் நற்பால் அழியும்” என்று திருத்தக்கத் தேவர் தெரிவிப்பது போல, இத்தகைய பெரியவரை இன்னவிடத்தில் இவ்வாறு இச் சொல்லால் உரைப்பது ஏற்புடையதென எண்ணிப் பாடியவர் சேக்கிழார் என மகாவித்துவான் ரா.இராகவையங்கார் அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் புலவர் கூட்டத்தில் நயங்கண்டு உரைத்துரைத்து இன்புற்றார். மேலோரான வள்ளுவர் முதலியோரைக் கீழோர்க்குப் பிறந்தவ ரென்றும் உண்மை கண்டுரைத்த உயரிய கருத்துக்களைப் பிற மொழியில் மொழி பெயர்த்துப் பின்பு மொழி பெயர்க்கப்பட்ட அதுவே முதலென்றும், இவ்வாறே தமிழ்க்குரிய கருத்துக்களையும் வழக்குரைகளையும் பிறர்தந்தவை எனப் பொய் மொழிந்தும் தமிழினத்திற்குத் தனிமையும் தலைமையும் இல்லை
யென்று மறை முகமாக உரைத்துச் சமுதாயத்தில் மேடுபள்ளங்களைத் தோற்றுவித்த பொல்லாக் காலத்தில் வாழ்ந்தா ராயினும் மெய்ம்மை கண்டு வேற்றுமையை விரிவு படுத்தாது சமய வுணர்வு ஒழுக்கங்
களை அளவு கோலாகக் கொண்டு உயர்ந்தோர் உயர்வையும் தாழ்ந்தோர் தாழ்வையும் காரண காரிய முறையில் விளக்கித் தமிழரினம் சமனிலை யொருமைச் சமுதாயமாகி உள்ளத்தால் உயர்தற் பொருட்டு ஓங்கிய நூல் ஒன்றே செய்து பொன்றாப் புகழ் பெற்றவர் சேக்கிழார் பெருமான். அவரது தொண்டர் புராணம் உண்மை காண்பதில் பெரியது; பெண்மையின் நன்மை கண்டு பேணுவதில் பெரியது; பொருள் அருமையும், சொல் எளிமையும் உரையழகும் உரைய நூல்களில் பெரியது. இவ்வாற்றால் தொல் சீர் உரைக்கும் புராணம் பெரிய புராணம் என்று பிறங்குகிறது. சுருங்கக் கூறின், இலக்கியக் காட்சியிலும் சமய நுண்பொருள் மாட்சியிலும், ஒழுக்க நெறி ஆட்சியிலும் உயர்வற உயர்ந்தது, செந்தமிழ்த் தேனொழுக்கெனச் செய்யுள் செய்த சேக்கிழார் பெருமானது திருத்தொண்டர் புராணம்.

-   இது கரந்தைத் தமிழ்சங்க இருபத்தெட்டாம் ஆண்டு விழாவில் நிகழ்த்திய சொற்பொழிவாகும்.
    *அடியார் மேல் நின்றவினை பையப் பரற்றுவர் என இயையும்.
-   அந்தணர் வேள்வியும் அருமறைத் துழவியும்
    செந்தமிழ்க் கீதமும் சீரினால் வளர்தரப்
    பந்தணை மெல்விர லாளொடும் பயில்விடம்
    மந்தம்வந் துலவுசீர்மாமழ பாடியே. (திருமழபா. கொல்லி. 3)
    என்ற திருவாக்கு ஆளுடைய பிள்ளையாரின் குறிக்கோள்கள் இவை யென்பதுணர நிற்றல் காண்க.

1.  பெரியபு. கழறிற்8
2.  பெரிய பு. கழறி .13
3.  பொன். அந் .43
4.  பெரிய பு கழறி.18
5.  பொன் அந்.21
6.  பெரிய பு. கழறிற்.23 (2) பொன். அந். 13
7.  பொன். அந். 40
8.  பெரிய பு. கழற்றி 42
9.  பெரிய பு கழறி.37
10. பொன். அந் .9
11. பொன். அந். 11
12. பொன். அந் 17
13. பொன். அந்.1
14. பொன். அந்.100
15. பொன். அந். 100
16. பொன். அந். 25
17. பொன். அந். 89
18. பொன். அந். 70
19. பொன். அந்.99
20. திவ்ய பிரபந். திருமாலை 3
    3.பொன். அந் .14
21. பொன். அந்.10
22. பொன். அந் .7
23. பொன். அந். 9
    4.பொன். அந். 15
24. பொன். அந்.19
    2.  என்பார் - என்று நினைந்து வரிபடுபவர். பொன். அந்.5
25. பொன். அந்.65
26. பொன். அந். 34
27. பொன். அந்.78
28. பொன். அந்.50
29. பொன். அந்.57
30. திரு மந். 26155
31. பொன். அந்.83

32. பொன். அந் 64
33. பெரிய பு. கழறிற் 64
34. பெரிய பு கழறிற் 65
35. பெரிய பு. வெள்ளா 19
36. பெரிய பு. வெள்ளா 20
37. பெரிய பு. வெள்ளா 21
38. பெரியபு கழறிற் 69.
39. பொன். அந்.19
40. பொன். அந்.84
41. பொன் அந்2
42. பொன் அந்49
43. பொன் அந். 54
44. திருமுகம் 3
45. திருமுகம் 21
46. திருமுகம்.24
47. திருமுகம் 13
    3.குறுந்.85
48. திருமுகம். 16
49. அகம் 131,
50. நற் 110
51. பொன். அந் .37
52. கழறிற்.87
53. கழறிற்.94
54. கழறிற்.137
55. கழறிற் 155
56. கழறிற். 159

57. இது மாக்கோதைப் பட்டினம் என இருந்து மகோதையென மருவிற்று. சேரநாட்டுக் கல்வெட்டுக்கள் இதனை மகோதையார் பட்டினம் என்றும் நூல்கள் மகாதேவர் பட்டினமெனத்திரித்தும் கூறுகின்றன. இந்நூலாசிரியர் எழுதிய பண்டை நாளைச் சேர மன்னர் என்ற நூலைக் காண்க
58. சுந். தேவர். 100:1,
59. பெரியபு. வெள்ளா .48
    2.பெரிய பு. வெள்ளா.49
60. பொன்.19
61. சீவக.

-   12.8.50 நெல்லையில் ஆற்றிய விரிவுரை. வித்துவான் அ.நவநீத கிருட்டின பிள்ளையவர்கள்கேட்டெழுதியது.

1.  The Nature of the Physical World P.3
2.  Le Bon. 7,12, & 14.
3.  Soviet Man in space - p. 22
4.  Will Durant’s ‘Pleasures of Philosophy’. p. 34
5.  Pleasure of Philosophy - p. 40
6.  The Meanning of Truth - p. 59
7.  Span P. 38 Sept. 1961
8.  The World in the Making - p. 265

The Unity of Philosophical Experience by E. Gilson p. III pp.223 - 95
1. The Mysterious Universe p. 11 - 22
2. காஞ்சி புராணம் - காப்பு
3. ibid p. 182
1. பௌஷ் 1 : 43
* மிருகேந்திரம், பாசப்பிரகரணம் 1..
1. M.E.A.R. for 1899 Para. 53.
1. M.E.A.R. for 1916 Para. 16.
Madras Epigraphy Annual Report for 1923. para. 43.

-   திரு ஜே. எம். நல்லசாமிப்பிள்ளை B.A. B.l., அவர்கள் மொழி பெயர்ப்பு.

1.  செய்கை, தொழில் என்பவைகளை வினையென்று வழங்குவது தமிழ் நூல் வழக்கு.

-   திருவீழிமிழலை : முதல் திருமுறை, பண் - நட்டபாடை - 2
-   திருவிடைமருதூர் மும்மணிக்கோவை - 13.
-   உண்மை விளக்கம். 42.
-   பதியம் : பதியாகிய ஊரைப் பொருளாகக் கொண்டது தமிழ்ச் சொல்; பதிகம், பத்துப் பாட்டுக்களை உடையது என்று பொருள்படும் வடசொற்றிரிபு.
-   திரிசிராப்பள்ளியில் சமாஜ 36 - ம் ஆண்டு விழாவில் ஸ்ரீ ல ஸ்ரீ ஞானியார் சுவாமிகள் தலைமையில் நிகழ்த்திய சொற்பொழிவு.
    இம்மலைபடுகடாம், “நல்லிசைக்கடாம புனைநன்னன் வெற்பில்” பல்லவ வேந்தர்தம் “வாகையும் குரங்கும் விசையமும்” தீட்டினர் எனவரும் திருவண்ணாமலைக் கல்வெட்டொன் (A.R.No. 480 of 1902. No. 69 of S.I.I.Vol VIII) றால் குளிக்கப் பெறுகின்றது.